மீண்டும் துளிர்க்கும் விஷச் செடி - பகிடிவதை.

ராக்கிங் எனப்படும் பகிடிவதையால் இலங்கையிலும் இந்தியாவிலும் வரப்பிரகாஷ், நாவரசு என்ற இரண்டு இளம் உயிர்கள் காவுகொள்ளப்பட்டதை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். வரப்பிரகாசின் மரணத்தின் பின்னர் இலங்கைப் பல்கலைக் கழக‌ங்களில் குறைந்திருந்த பகிடி வதை மீண்டும் துளிர்க்க ஆரம்பித்திருக்கிறது.

இரண்டு நாட்கள் முன்னர் ஒரு நண்பரைச் சந்தித்தேன், அவர் இலங்கையின் பிரபல பல்கலைக் கழகம் ஒன்றிற்குத் தெரிவாகியுள்ளார். அவர் அங்கே தற்போது நடக்கும் கொடுமைகளை கூறும் போது பகிடி வதை இன்னும் நிறுத்தப்படவில்லையோ என எண்ணத் தோன்றுகின்றது.

இதில் கொடுமை என்னவென்றால் பெரும்பான்மை சிங்கள மாணவர்கள் பகிடிவதை செய்வதில்லை, எங்கடையாட்கள் தான் பட்ட கஷ்டம் துயரங்கள் போதாது என்று மீண்டும் இந்த காட்டுமிராண்டித் தனத்தில் ஈடுபட்டிருக்கின்றார்கள்.

முதலாம் ஆண்டு மாணவர்களின் கூச்சத்தையும், புதிய சூழலிற்க்கு பழக்கப்படுவதையும் போக்கவே இந்தப் பகிடி வதையை ஆரம்பித்தார்கள், ஆனால் இன்று மாணவர்களை அடிப்பதும், தூசணங்களால் ஏசுவதும், மாணவிகளுடன் தரம் குறைந்து நடப்பதும் பகிடி வதை என்ற பெயரில் அரங்கேறுகின்றது.

மண் நிலத்தில் அமர்ந்து ஒரு பார்சல் உணவை அப்படியே உண்ணச் சொல்கின்றார்கள், சைவ உணவு சாப்பிடும் மாணவர்களுக்கு அசைவம் திணிக்கிறார்கள். நவீன தொழில்நுட்பம் காரணமாக விடுமுறையில் தங்கள் சொந்தப் பிரதேசத்தில் நிற்கும் மூத்த மாணவர்கள் தொலைபேசியில் தொல்லை கொடுக்கின்றார்கள். இப்படிப் பல பிரச்சனைகள் மீண்டும் தொடர்கின்றது.

இதிலும் இன்னொரு கொடுமை மூத்த ஆண் மாணவர்கள் ஆண், பெண் என இருபாலரையும் பகிடி வதைக்கு உற்படுத்தலாம், ஆனால் மூத்த பெண் மாணவிகள், புதிய பெண்களை மட்டும் தான் பகிடி வதை செய்யமுடியும். ஏனென்றால் மூத்த பெண்கள் இளைய ஆண்களைப் பகிடி வதை செய்தால் அது பெண்ணாதிக்கமாம். செய்வதோ காட்டுமிராண்டித் தனம் இதில் ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம்.

இன்றைய காலத்தில் பல பல்கலைக் கழகங்களில் நிறுத்தப்பட்ட பகிடி வதையை இவர்கள் மட்டும் தான் இப்போ தொடங்கியுள்ளார்கள். அதிலும் குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள் தான் இதில் மும்முரமாக நிற்கின்றார்களாம். எத்தனையோ துன்பங்களையும் மனக் கஸ்டங்களையும் பட்டவர்க‌ள் இன்று அதனைத் தங்கள் சகோதரர்கள் மேல் காட்டுகின்றார்கள் போலத் தெரிகின்றது.

நானும் ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் பட்டப்படிப்புப் படித்தவன். எங்கள் மூத்த மாணவர்கள் எங்களுக்கு வரவேற்பு விழா(Welcome Party) கொடுத்த போது கூச்சம், அச்சம் போன்றவை தெளிய, சிறிய பத்திரிகை ஒன்றில் ஆடுதல், ஒரே குளிர்பானப்போத்தலில் இரண்டு குழல்கள் போட்டு ஒரு ஆணும் பெண்ணும் குடித்தல்( அந்த குழல்கள் மெழுகால் அடைக்கப்பட்டிருக்கும்), பலூன் ஒன்றை இரண்டு பேர் நெஞ்சுக்கிடையில் வைத்து நெஞ்சினால் அதனை உடைத்தல், போன்ற சில முஸ்பாத்தியான விளையாட்டுகளை விளையாடவிட்டு எம்மிடையே பிணைப்பை ஏற்படுத்தினார்கள்.

மேற்குலகில் இல்லாத இந்தக் கொடுகை தெற்காசிய நாடுகளில் குறிப்பாக இலங்கையிலும் இந்தியாவிலும் வேர் விட்டுப் படர்ந்துள்ளது. இலங்கையில் சில காலம் இல்லாமல் இருந்தது. மீண்டும் துளிர்விட ஆரம்பித்துள்ளது முளையிலே கிள்ளி எறியாவிட்டால் இன்னொரு வரப்பிரகாஸ் உருவாகக்கூடும்.

பதிவு எழுத வந்த கதை - ‍ தொடர் விளையாட்டு

முன்கதை:

இலங்கைத் தமிழ் வலைப்பதிவர் குழுமத்தில் உரையாடப்பட்டதற்கு அமைவாக இந்த விளையாட்டினை மு.மயூரன் தொடக்கிவைத்தார். அவரின் அழைப்புக்கு நன்றிகள்.வெறும் விளையாட்டு என்றில்லாமல் இந்த விளையாட்டுக்கு ஓர் ஆழமான நோக்கம் இருக்கிறது. ஒவ்வொருவரும் வலைபதிய வந்தகதையைச் சொல்வதன் ஊடாக வெவ்வேறு கோணத்தில் தமிழ் இணையத்தின் வரலாற்றுத்தகவல்களோடு அதற்கும் தமக்குமான உறவையும் சொல்லத்தொடங்குவார்கள். அடுத்தடுத்த தலைமுறையினருக்கு இந்தக்கதைகள் தகவல்களாக ஆவணமாகப் போய்ச்சேரும்.

விதிமுறை:

1. ஒவ்வொருவரும் தாம் வலைபதிய வந்த கதையை, இன்று வரையான தமது அனுபவங்களைச் சொல்ல வேண்டும்.

2. கதை சொல்லி முடிந்ததும் விளையாட்டுக்கு 4 பேரை அழைக்க வேண்டும். அழைப்பதோடு அழைக்கப்படும் மூவருக்கும் அழைப்பினைத் தெரியப்படுத்தவும் வேண்டும்.

3. கதை சொல்லுபவர்கள், தாம் தமிழை எழுதப் பயன்படுத்திய கருவிகள் தொழிநுட்பங்கள், சந்தித்த சிக்கல்களைச் சொல்லவேண்டும்.

மேலும் விதிமுறைகள் ஆலோசனைகளின் பேரில் சேர்க்கப்படலாம்.

இனி என் கதை :

2005களில் எனக்கு வலைப்பதிவுகள் அறிமுகமாயின. மு.மயூரன், கானாபிரபா, சினேகிதி, சந்திரவதனா அக்கா, போன்றவர்களின் வலைகளைப் படித்திருக்கின்றேன் ஆனால் பின்னூட்டம் இட்டத்தில்லை. காரணம் அப்போ எனக்கு பின்னூட்டம், பதிவு, அனானி போன்ற எந்த விடயமும் தெரியாது. அவர்கள் சொந்த டொமைனில் எழுதுகின்றார்களோ என்ற எண்ணம்.

2006ல் சும்மா இணையங்களை அலசி ஆராய்ந்ததில் தமிழ்நாடுடோல்க் என்ற விவாதக் களத்தின் அறிமுகம் கிடைத்தது. அங்கே என் கருத்துகளைச் சொல்லும் போது நண்பர் லக்கிலுக் (யுவகிருஷ்ணா). நீங்கள் அழகாக எழுதுகின்றீர்கள் ஏன் ஒரு வலைப்பதிவை ஆரம்பிக்ககூடாது என என்னைக் கேட்டார்.

நானும் ஒரு ஆர்வக்கோளாற்றில் சரி நானும் எழுதிப்பார்ப்போம் என துணிந்தேன்.பாடசாலை நாட்களில் கட்டுரை எழுதிய அனுபவம் நிறைய இருக்கின்றது. அத்துடன் தகவல் தொழில்நுட்ப மாணவனாக இருந்தபோது பத்திரிகைகளில் அது சம்பந்தப்பட்ட கட்டுரைகள் எழுதியிருக்கின்றேன்(என் வலையில் இதுவரை எந்த தொழில்நுட்ப பதிவும் எழுதவில்லை என்பது தனிக்கதை). ஆகவே தைரியத்துடன் களத்தில் குதித்தேன்.

வலைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்றிருந்தபோது நான் எப்போதும் திறந்த மனதுடன் கதைப்பதால் பலர் என்னை உளறி என்பார்கள். எதையும் மறைத்துவைக்கும் பழக்கம் என்னிடம் இருந்ததில்லை. ஆகவே என்னுடைய உளறல்களாக இந்த வலையை உருவாக்குவோம் என்ற நினைப்பில் என் உளறல்கள் எனப் பெயரிட்டேன்.

எனது சொந்தப்பெயரில் எழுதலாம் என்றால் ஏற்கனவே மு.மயூரன், மயூரேசன், மாயா என்ற மயூரன் எனப் பல மயூரன்கள் வலையுலகில் இருப்பதால் கல்கியின் அழியாப் புகழ் கொண்ட பாத்திரமான வந்தியத்தேவன் என்ற பெயரை எனக்கு புனை பெயராகச் சூட்டினேன். வலையுலகில் என் சொந்தப் பெயரை விட வந்தி என்ற பெயரே நிலைத்து நின்றுவிட்டது.

2006 ஜீலை 08ல் என் அறிமுகம் தொடங்கியது. லக்கி ஜீமெயில் சாட் மூலம் எனக்கு துரோணராக வலைவித்தை பயிற்றுவித்தார். அவருடன் லெனின் என்ற பூக்குட்டியும் (நல்ல நகைச்சுவையாளர் ஏனோ இப்போ எழுதுவதில்லை)எனக்கு உறுதுணை புரிந்தார்கள்.

அறிமுகப்பதிவில் எனக்கு ஏற்கனவே அறிமுகமான கானாபிரபா என்னைத் தமிழ்மணத்துடன் இணைக்கும் படி பின்னூட்டம் இட்டிருந்தார். முதல்ப் பின்னூட்டம் பூக்குட்டியின் பின்னூட்டம் இரண்டாவது பின்னூட்டம் கானாவின் பின்னூட்டம்.

அறிமுகம் முடிந்தபின்னர் என்ன எழுதுவது ஏது எழுதுவது என எண்ணியிருக்கும் போது எல்லோருக்கும் பிடித்த காதல் பற்றிய என் முதல்ப் பதிவை இட்டேன். அதன் பின்னர் இரண்டு மூன்று சமூகக் கருத்துகள் உள்ள பதிவுகளை இட்டேன்( ஏனோ வரவேற்புக் கிடைக்கவில்லை). ஆகவே 2006ல் என்னால் வெறும் 6 பதிவுகள் மாத்திரம் எழுதக்கூடியதாக முடிந்தது.

2007ல் ஒருமாதிரி வலையுலக அரசியல்களைப் புரிந்துகொள்ளமுடிந்தது. இதனால் ஜொள்ளு, லொள்ளு, கிரிக்கெட், சினிமா, பம்பல் என பதிவுகளை தொடர்ந்தேன். இடையிடையே சமூகத்துக்கு கருத்து கந்தசாமியாக கருத்துகள் சொன்னாலும் ஏனோ அவை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 2007ல் மொத்தமாக 28 பதிவுகள்.

இதே நேரத்தில் இலங்கையில் இருந்து பதிவு எழுதிய மாயா, இறக்குவானை நிர்ஷன், ஆரவாரம் தாசன் போன்றவர்களது அறிமுகங்களும் ஏனைய நம்மவர்களது பதிவுகளும் படிக்கவும் பின்னூட்டவும் தொடங்கினேன்.

2008ன் ஆரம்பமே எனக்கு அமர்க்களமாக இருந்தது தினக்குரல் பத்திரிகையில் தாசன் எழுதிவந்த வலைப்பதிவுகள் பற்றிய பத்தியில் 2008 ஜனவரி 27ந்திகதி என்னுடைய உளறல்கள் பற்றி எழுதியிருந்தார்.

அதற்கு முதல் மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் ஜனவரி 23ந்திகதி என்னுடைய உளறல்கள் பற்றிய சிறுகுறிப்பு வெளிவந்தது. ஆகவே அந்த நாட்களில் வெறும் 50 பதிவுகளுக்குள் எழுதிய எனக்கு இன்னும் எழுதவேண்டும் என்ற ஆர்வம் தானாகவே ஏற்பட்டது.

இதன் விளைவாக கொஞ்சம் காத்திரமாகவும் ( என் நினைப்பு மற்றவர்கள் எப்படி நினைக்கின்றார்களோ தெரியவில்லை) எனக்கு ஓரளவு கைகொடுக்கின்ற கிண்டல், நகைச்சுவை கலந்தும் எழுதினேன். அதனால் தான் என்னவோ 100 பதிவுகளையே கடக்காத என்னை தமிழ்மணம் 2008 செப்டம்பர் 22ந்திகதி தொடக்கம் 28ந்திகதி வரை நட்சத்திரமாக அழகுபார்த்தது. இலங்கையில் இருந்து எழுதும் பதிவர்களில் முதல் நட்சத்திரமாக இலங்கையின் முதல் தமிழ் வலைப்பதிவர் மு.மயூரன் தமிழ்மண நட்சத்திரமாக இருந்தார். அவரைத் தொடர்ந்து இலங்கை நட்சத்திரமாக நான் அறிமுகமானேன் என நினைக்கின்றேன்.

ஆகவே 2008ல் எனக்கு கிடைத்த ஊக்குவிப்புகளால், அந்த ஆண்டு மொத்தமாக 52 பதிவுகளை இடக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது.

2009ல் வலையுலகம் மேலும் வளர்ந்தது, கூடவே நானும் இதுவரை இந்த ஆண்டில் மட்டும் 74 பதிவுகள் நிறைய நட்புகள், இலங்கைப் பதிவர் சந்திப்பு எனப் பல விடயங்கள் நடந்தேறிவிட்டன. இதுதான் நான் பதிவு எழுத வந்த கதை.

இனி சில அனுபவங்கள் :

பயன் படுத்திய கருவிகள் :
ஆரம்பத்தில் எனக்கும் பலரைப்போல் பாமினியின் நட்புத்தான் கிடைத்தது. ஆகையால் பாமினியில் தட்டச்சு செய்வது மிகவும் இலகுவாக இருந்தது, ஆனால் பாமினியை வைத்து வலையேற்ற முடியாது என்பதால் அதனை சுரதாவின் பொங்குதமிழ் மாற்றி மூலம் யுனிகோட்டிற்க்கு மாற்றி வலையேற்றினேன். அதே நேரம் சில நாட்கள் கலப்பையினால் உழுவவும் சந்தர்ப்பம் கிடைத்தது.

பின்னர் தமிழ் எழுதியின் அறிமுகம் கிடைத்தபின்னர் அதனால் தான் தட்டச்சு செய்கின்றேன். இது எனக்கு வேகமானதாக தெரிகிறது. ஆனாலும் இந்த முறை தப்பென இப்போது அறியக்கூடியதாக இருக்கின்றது. சில நாட்களில் ரங்கநாதனுக்கோ அல்லது தமிழ்99க்கோ மாறும் எண்ணம் இருக்கின்றது.

பின்னூட்டம் :

ஆரம்பத்தில் நான் அனானி அதர் ஒப்சன் பகுதிகளைத் திறந்தே வைத்திருந்தேன், ஆனால் சில நாட்களில் இந்தியாவின் மிகப்பிரபலமான பகுதி ஒன்றில் இருந்து வந்த ஒரே ஒரு அனானியின் ஆபாச பின்னூட்டங்களும் மிரட்டல்களும் என்னைக் கொஞ்சம் பயம்கொள்ளவே வைத்தன. பெரும்பாலும் வெள்ளிக்கிழமை நடுநிசிக்குப் பின்னர் தான் அவரின் ஆட்டம் தொடரும், இந்தப்பின்னூட்டங்களால் நான் மட்டுமல்ல ஏனைய சில பிரபல மூத்த வலைப்பதிவர்களும் பாதிக்கப்பட்டிருந்தனர். இத்தனைக்கும் நான் அரசியல் எழுதுவதேயில்லை. இதனைப் பற்றி மாயா, நிர்ஷன் போன்றோருடன் கதைத்தபோது சில நாட்கள் அனானி, அதர் ஒப்சன்களை மூடச் சொன்னார்கள். ஆனால் அதன் பின்னர் அனானி கூகுளின் உதவியால் புதிய புதிய கணக்குகள் உருவாக்கி தன் வக்கிரத்தைத் தொடர்ந்தார்.

என் வலையில் அரசியல் கருத்துக்களோ இல்லை எந்த தனிநபர் தாக்குதல்களோ இல்லாதபோது நான் ஏன் பயப்படவேண்டும் என எண்ணி மீண்டும் அனானி, அதர் ஒப்சன்களை திறந்துவிட்டேன். பின்னர் சில தமிழக நண்பர்கள் அந்த அனானி ஒரு சைகோ எனத் தெரிவித்தார்கள். அதன்பின்னர் அவரையோ அவரது பின்னூட்டங்களையோ பொருட்படுத்துவதில்லை.

நட்சத்திரவாரத்தில் இலங்கைப் பதிவர்கள் பற்றிய பதிவு ஒன்றிற்கு இலங்கையைச் சேர்ந்த ஒருவரே எம்மைத் திட்டிப் பின்னூட்டம் இட்டிருந்தார். மற்றும் படி பின்னூட்டங்களில் ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெற்றிருக்கின்றன்.

மொத்ததில் வலையுலகில் சில கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டாலும், நிறைய நட்புகளை உலகம் பூராவும் எனக்குத் தந்திருக்கிறது. அதே நேரம் கமல் ரசிகனான நான் சகலகலாவல்லவன் வலைப்பூவிலும், கானாவினால் ஆரம்பிக்கப்பட்ட ஈழத்துமுற்றம் வலைப்பூவிலும் ஒரு சொந்தக்காரனாக இருக்கின்றேன்.

ஈழத்துமுற்றத்தில் படிப்பவை/ எழுதுபவை ஏதோ என் சொந்த ஊரில் இருக்கும் எண்ணத்தை ஞாபகப்படுத்துகின்றது. அத்துடன் இலங்கையின் ஏனைய இடத்து பிரதேச வட்டார சொற்களையும், கலை கலாச்சாரங்களையும் அறியக்கூடியதாகவும் உள்ளது.

என்னை இந்த விளையாட்டுக்கு அழைத்த நண்பன் மு.மயூரனுக்கு நன்றிகள்.

நான் அழைக்கவிருப்பவர்கள் :

நான்கு பேரை நாலு வேறு வேறு இடங்களில் இருந்து அழைக்கவிரும்புகின்றேன்.

1. கெளபாய் மது :
இலங்கையிலிருந்து எழுதும் ஒரு பதிவர். பதிவர் சந்திப்பின் மூலம் பலரையும் கவர்ந்தவர்.

2.மணிமேகலா
அட்சயபாத்திரம் வைத்திருப்பவர் அவுஸ்திரேலியாவிலிருந்து எழுதுபவர். ஈழத்துமுற்றத்தில் செல்லமாக மணியாச்சி.

3. கீத் கிருத்திகன் குமாரசாமி
மெய் சொல்லப்போகின்றேன் என பல மெய்களைச் சொல்பவர். எனது பாடசாலையில் படித்தவர், பக்கத்து ஊர்க்காரர், இப்போது கனடாவில் வசிக்கின்றார்.

4. சினேகிதி
தத்தக்க‌ பித்தக்க என தாளம் போடும் சினேகிதி, அண்மையில் தான் தெரியவந்தது இவரும் நம்ம ஊர்க்காரர் என்ற தகவல்.

இரண்டு ஆண்கள் இரண்டு பெண்கள் என சமத்துவம் பேணியிருக்கின்றேன்.

புட்டு,புட்சால், புல்லட் சில ஞாபகங்கள் - பகுதி 2

முதல் பகுதி : புட்டு,புட்சால், புல்லட் சில ஞாபகங்கள் பகுதி 1

அடுத்த நாள் காலை லோஷனிடம் இருந்து வந்த மின்னஞ்சலில் சனிக்கிழமை(08.08.2009) தன்னை புட்சால் விளையாட்டு நடைபெறும் சிட்டி லீக் மைதானத்தில் சந்திக்குமாறு கேட்டிருந்தார்.

உடனே ஆதிரையையும் புல்லட்டையும் தொடர்பு கொண்டு புட்சால் மைதானத்திற்க்கு சனிக்கிழமை சிட்டி லீக் மைதானத்திற்க்கு வருமாறு கேட்டுக்கொண்டேன் அதற்க்கு புல்லட் ஓம் என்று விட்டு அந்த மைதானம் எவடத்தில் இருக்கெனக்கேட்டார். நவா, ரியோ தியேட்டர்களுக்கு அருகில் இருக்கென்றேன். ஆனால் புல்லட்டிற்க்கு அந்த இரு தியேட்டர்களும் எங்கே எனத் தெரியவில்லை. பின்னர் அந்த இரண்டு தியேட்டர்களின் சிறப்பைச்(ஒன்றில் ஷகீலா படமும் இன்னொன்றில் வயதுவந்தவர்களுக்கான ஆங்கிலப்படமும் போடுவார்கள்) சொல்ல உடனே புல்லட் ஓ அந்த தியேட்டர்களா தெரியும் தெரியும் என்றார்.

சனிக்கிழமை காலை புல்லட்டிற்க்கு கோல் பண்ணினால் சரியாக 9.30க்கு அங்கே நிற்பதாக சொன்னார். நானும் ஆடி அலைந்து எப்படியோ 9.45க்கு போனால் எனது சக ரியூசன் நண்பன் லோஷன் இருந்தார் நீண்ட நாட்களின் பின்னர் லோசனை நேரில் சந்திக்கும் போது எப்படியிருந்த லோஷன் இப்படியாகிவிட்டார் என்ற ஜோக் நினைவிற்க்கு வந்தது,

சின்னவயதில் லோஷன் அவ்வளவு மொத்தமல்ல, ஆனால் இப்போ நமீதாவின் அண்ணன் போல் காட்சியளித்தார்.

பிறகென்ன கொஞ்ச நேரம் எங்கள் பழைய அந்த நாள் நினைவுகளை மீட்டு மறந்திருந்த சிலரின் பெயர்களையும் ஞாபகப்படித்தினோம். புல்லட்டிற்க்கும் ஆதிரைக்கும் எங்கள் பேச்சுவார்த்தை போரடிக்கவே நாம் பதிவர் சந்திப்புப் பற்றி பேசத் தொடங்கினோம்.

நான் போகும்போதே 23ந்திகதியை யோசித்துக்கொண்டுதான் போனேன் ஏனென்றால் மாதக் கடைசியில் நிறைய வேலைகள் இருப்பதால் 30ந்திகதி சரிப்பட்டு வராது என்பது தெரியும், அதனை அவர்களுக்குச் சொல்ல ஏகமனதாக 23ந்திகதி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதன் பின்னர் என்ன என்ன விடயங்கள் சம்பந்தமாக பேச வேண்டும் என்பதும் யார் யாரை பேச அழைப்பது என்ற விடயங்களும் கலந்தாலோசிக்கபப்ட்டது. அந்த நேரம் எங்கள் நான்கு பேரைத்தவிர வேறு யாரும் இணையவில்லை.

அதன் பின்னர் லோஷனின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க அனைவரும் குளிர்பானம் அருந்திக்கொண்டிருக்கும் போது லோசன் ஒருவருக்கு கோல் பண்ணினார், கொஞ்ச நேரத்தில் ஒரு சின்னப் பொடியன் எங்களை நோக்கி கலியாண வீடுகளுக்கு செல்வது போன்ற உடையுடன் வந்துகொண்டிருந்தான்.

அவர் தான் நம்ம அனானிகளின் நண்பன் சதீஸ் என்பதை லோஷன் எமக்கு அறிமுகப்படுத்தி வைக்க நாமு சதீசுக்கு நாம் யார் என்பதைச் சொன்னோம். அன்றைக்குத் தான் சதீஸ் பிறந்த நாள் அதுதான் சிங்கன் மைனர் கெட்டப்பில் இருந்தார்.

சிறிது நேரத்தில் இன்னொரு குட்டிப் பையன் மீசை அரும்பும் வயதில் வந்தான், யார் என்று பார்த்தால் அவர் தான் நம்ம ஹிஷாம். அவருடனும் கொஞ்ச நேரம் பேசி விட்டு மீண்டும் புட்சால் மைதானத்திற்க்கு வர நம்ம புல்லட் சுத்தி சுத்தி ஒரு விடயத்தை படம் எடுத்தார். அது என்னெவன்றால் ஆண்களின் உள்ளாடைகள், அந்த நிறுவனம் தான் புட்சாலுக்கு அனுசரணை, ஆகையால் தங்கள் தயாரிப்புகளை காட்சிக்கு வைத்திருந்தார்கள். புல்லட் ஏன் அவற்றைப் படம் எடுத்தார் என்பதன் ரகசியம் இன்னும் புரியவில்லை.

அதே நேரம் நாங்கள் பலதும் பத்தும் கதைத்துக்கொண்டிருந்தபோது எனக்கு கந்தசாமி மீனாகுமாரி பாடலில் ஒரு சிறிய சந்தேகம் வந்தது, அந்தப்பாடலில் வரும் காமசூத்திராவில் முதல் வரி என்ற வரிக்கு அர்த்தம் என்னவென்று கேட்டேன் உடனே ராக்கெட் வேகத்தில் புல்லட்டிடம் இருந்து பதில் "காமசூத்திராவின் முதல் வரி உ சிவமயம் அண்ணை" என்றார். நாம் சிரித்து விழுந்ததில் மைதானமே உண்மையில் அதிர்ந்தது. புல்லட்டின் டைமிங் சென்ஸ்சும் நகைச்சுவை உணர்வும் எம்மை எந்த வேலைகள் செய்யும் போது களைப்ப‌டையாமல் உற்சாகமாக வைத்திருக்க உதவியதற்க்கு இந்தக் கதை ஒரு சின்ன உதாரணம்.

அன்றிலிருந்து எம் பயணம் தொடங்கியது அனைவருக்கும் மீண்டும் திகதியுடன் அழைப்பிதழ்களை அனுப்பினோம். எமக்கு வந்த பதில்கள் எம்மைத் திக்குமுக்காடச் செய்தது.

இதற்கிடையில் எனது மின்னஞ்சலுக்கு ஒரு தொலைபேசி எண்ணுடன் கூடிய பதில் வந்தது. என்ன பதில் யார் அந்தப் பதிவர் நாளை...

உங்களுக்கு வாசிக்க போரடிக்ககூடாது என்பதற்காகத் தான் பகுதிகளாகப் பிரசுரிக்கின்றேன்.

பின்னூட்டங்களால் ஒரு பதிவு

இலங்கை வலைப்பதிவர் சந்திப்பைப் பற்றி எழுதிய நாம் சாதித்துவிட்டோம் பதிவிற்க்கு வந்த பின்னூட்டங்களுக்கு என்னால் உடனடியாக பதில் அளிக்கமுடியவில்லை. காரணம் அன்றைய தினமே நிகழ்வில் கலந்துகொண்டவர்களின் விபரங்கள் தட்டச்சு செய்து வலையேற்ற வேண்டிய கடமை. அதன் பின்னர் சில ஆணி பிடுங்கள் வேலைகள் என என் நேரம் தேவைப்பட்டது. அந்தப் பதிவிற்க்கு இனித் தனித் தனியாக பின்னூட்டம் இடுவது என்பது பெரியதொரு வேலை ஆகவே பதிவில் இருக்கும் பின்னூட்ட இட்டவர்களின் பெயருடன் அவர்களுக்கான பதில்கள்.



கானாபிரபா, கனககோபி, வர்மா, தங்கமுகுந்தன், சந்ரு, தேவதாசன், சந்தன‌முல்லை, கீத், துபாய் ராஜா, தமிழன்‍ கறுப்பி, மருதமூரான், அனானி, மயூரேசன், யெஸ்.பாலபாரதி, தமிழ்ப்பிரியன், டொன்லீ, தவேஷ், வேந்தன், வசந்தன், ஈழவன், மகேஸ், சுபானு, உதயதாரகை, ஊர் சுற்றி, அத்திவெட்டி ஜோதிபாரதி,ஜாக்கி சேகர், லோஷன், கனக்ஸ், யோ வாய்ஸ், வி.ஜெ. சந்திரன்

மேலே பெயர் குறிப்பிடப்பட்ட அனைத்து நண்பர்களும் எமக்கு வாழ்த்துக்களும் சில தங்களுது கருத்துகளும் சொன்னவர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள். நிச்சயமாக உங்களது மனம் திறந்த பாராட்டுகளும், ஆலோசனைகளும் எம்மை அடுத்த சந்திப்புகளை மேலும் திறமையாக வழி நடத்த உதவும்.

கனக‌கோபி, யோ வாய்ஸ் போன்றவர்கள் தங்களின் புகைப்படம் எனது பதிவில் இல்லையென்று ஆதங்கப்பட்டிருக்கிறார்கள், அவர்களின் புகைப்படம் வேறு சில பதிவுகளில் இருக்கின்றன. இன்னும் சில நாட்களில்(ஏற்கனவே புல்லட், சந்ரு தொகுத்ததுபோல்) நானும் அனைவரும் எழுதிய இடுகைகளைத் தொகுத்து தருவேன்.

தங்கமுகுந்தன், தேவதாசன் மருதமூரான் போன்றவர்கள் முழுமையாகத் தொகுத்துத் தரும்படி கேட்டிருந்தார்கள். ஒவ்வொருவரினதும் உரையும் விவாதங்களின் ஒலிவடிவம் மதுவின் இந்தப் பதிவில் இலங்கைப் பதிவர் சந்திப்பு - ஒலி வடிவவில் முழுதும்
இருக்கின்றது. அதில் உங்களுக்கும் கேட்கும் வசதி இருந்தால் கேட்டுப்பாருங்கள். முழுமையான நிகழ்வையும் தொகுப்பது என்பது முதுகுவலிக்கும் வேலை. சில உரைகளின் சாராம்சத்தை முடிந்தால் தொகுத்து வழங்குகின்றேன். அதே நேரம் கலந்துகொண்ட ஒவ்வொரு பதிவரும் தங்கள் தங்கள் பாணியில் நிறைவாகவே எழுதியிருக்கிறார்கள். அதனையும் சென்று படியுங்கள்.

அத்துடன் நேரடி ஒளிபரப்பைப் பார்த்து சில வெளிநாட்டுப்பதிவர்கள் கூட பதிவுகள் இட்டிருக்கின்றார்கள், அவர்களுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் சார்பில் நன்றிகள்.

இதன் சில ஒளிப்படங்கள் விரைவில் வலையேற்றப்படும்.

//சஜிதரன் said...

அதுசரி, கேட்போர் மத்தியில் (படங்களில்) பெண் பங்கேற்பாளர்களைக் காண முடிகிறது.. மைக் பிடித்து பேசுபவர்களில் யாரையும் காணோமே..? எதிர்காலத்தில் பெண்களது குரலையும் ஒலிக்கச் செய்வது ஆரோக்கியமான 'சொலிடாரிட்டி'யை உறுதி செய்யும்... இது ஒரு முன்மொழிவு மாத்திரமே.. விமர்சனம் அல்ல!! :) //

வாழ்த்துக்களுக்கு நன்றிகள் சஜி. ஒரே ஒரு பெண் மாத்திரம் தன் கருத்தைச் சொன்னார், அதேவேளை சில பெண் பதிவர்கள் வகுப்புகள், வேலைகள் காரணமாக சமூகமளிக்கவில்லை. அவர்கள் ஒருவரும் எம்முடன் முதலில் தொடர்பு வைக்காதபடியால் அவர்களை தனி உரையாற்ற அழைக்கமுடியவில்லை. அடுத்த தடவை இந்த பிரச்சனைகள் நிவர்த்தி செய்யப்படும்.

நீங்கள் அவர்களின் குரல் ஒலிக்கச் செய்வது ஆரோக்கியம் என்கிறீர்கள் ஆனால் கீழ் வரும் பின்னூட்டத்தில் ஒருவர் அவர்களைக் கொச்சைப் படுத்துவதுபோல் இட்டிருக்கின்றார். இதற்க்கு என்ன செய்யலாம்.

//பெண்கள் சார்பாக said...
பதிவர் சந்திப்புக்கு எத்தனை இளம்பெண்கள் வந்திருந்தார்கள்? அவர்கள் தொடர்பு கிடைக்குமா? அவர்களை தனித்தனியாக காட்டவில்லையே.. Zoom camera வசதி இருந்திருக்க வேண்டும்.. 7 பெண்கள் தான் வந்திருந்தார்களா? எக்ஸ்சட்ரா.. எக்ஸ்சட்ரா..

இதெல்லாம் எதனைக் காட்டுகிறது? பெண்கள் வருவதை எந்தத் தேவைக்காக ஊக்கப்படுத்துகிறீர்கள் என்பதை தெளிவாக உணர்த்தி நிற்கின்றன இத்தகைய கேள்விகள்.. & எதிர்காலத்தில் வர நினைப்பவர்களையும் வராமலே இருந்து விட வைப்பன என்று புரியவில்லையா??...

80 பேரில் 7 அல்லது 9 தான் பெண்கள் வந்திருந்தது எதனால்?? எழுதுபவர்களும் குறைவு என்பது ஒருபுறமிருக்க இது போன்றவற்றை எதிர்பார்த்ததால் தான் என்பது புரியவில்லை???//

எங்களது பதிவுகளில் எத்தனை பெண்கள் வந்திருந்தார்கள் என்பதை மட்டும் தான் இட்டிருந்தோம். ஆனால் இணைய வழி ஒளிபரப்பில் அவர்களைக் கிண்டல் செய்த ஒரு கிறுக்கன் தான் இந்தப் பின்னூட்டத்தையும் இட்டவர். அவர் யார்? என்பது முதலான சகல விடயங்களும் எமக்குத் தெரியும்.

ஆண்களும் பெண்களும் ஆரோக்கியமாக விவாதங்களிலும் வெளியிலும் பேசும் கதைக்கும் காலத்தில் பெண்களை வரவிடாமல் செய்யும் விதமாகவே இவரின் இந்த விஷமப் பின்னூட்டம் இருக்கின்றது. அவரின் முட்டாள் தனத்திற்க்கு பதிலடியாக அடுத்த சந்திப்பில் நிச்சயம் பல பெண்கள் கலந்துகொள்வார்கள்.

//மதுவதனன் மௌ. / cowboymathu said...
வந்தி,
சுருக்கமா சந்திப்பு முழுதையும் நல்லாச் சொல்லியிருக்கிறீங்கள். வந்த பதிவர்கள் அனைவரும் இதைப்பற்றி பதிவிடுவார்கள் ஆதலால் முழுமையான விபரம் வாசகர்களை எப்படியும் சேர்ந்துவிடும். நானும் ஒரு பதிவிடுகிறேன்.

நன்றியுடன்
கௌபாய்மது.//


மது நன்றி என்ற வார்த்தை உங்கள் சேவைக்கு எம்மால் சொல்லமுடியாது. அதனைவிட பெரிய வார்த்தை எந்த மொழியில் இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் எம் ஒருங்கிணைப்பாளர் குழுவில் ஒருவராக இருந்தாலும் நிகழ்வில் பங்குபற்றி ஒவ்வொருவரும், நேரடி நிகழ்வைப் பார்த்தவர்களும் உங்களுக்கு நன்றிகள் சொல்லியவண்ணமே இருக்கின்றார்கள்.

சில தொழில்நுட்பக்கோளாறுகள் காரணமாக எம்மால் தெளிவான ஒளிபரப்பை மேற்கொள்ளமுடியாவிட்டாலும் ஒலிவடிவம் சிறப்பாகவே வந்திருக்கு.

// மாயா said...

(இந்நிகழ்வை புல்லட் தன் வீடியோகமராவினால் எடுத்துக்கொண்டிருந்ததார் அதனை நாம் எவ்வாறு பெறுவது எனக் கூறுவீர்களா ?)//


புல்லட் எடுத்த வீடியோ இன்னும் இறுவட்டாக வரவில்லை. வந்தபின்னர் உங்களுடன் தொடர்புகொண்டு எப்படி அனுப்புவது எனச் சொல்கின்றேன். எதாவ்து மெஹா அப்லோட்டிலோ அல்லது ரபிட்ஷேர் போன்றவற்றிலோ அப்லோட் செய்து லிங்க் தேவைப்படுபவர்களுக்கு அனுப்பி வைக்கும் எண்ணமும் எமக்கிருக்கிறது.

// [பி]-[த்]-[த]-[ன்] said...
வந்தியத்தேவன் என்ற பெயரில். ஒரு பொடியன் எழுதுகிறான் என்று இதுநாள்வரை எண்ணினேன்.... ‍:)//

ஐயா பித்தரே உங்களுக்குத் தனியாக பதில் போடுவதன் காரணம் ஏதோ என்னை பொடியன் இல்லை என்று என் இமேஜை கவிழ்ததற்க்கு கண்டனம் தெரிவிக்கத்தான். நான் இன்றைக்கும் யூத்தான். சந்திப்பில் ஒரு கட்டத்தில் புல்லட் வாய் தடுமாறி என்னையும் லோசனுடன் மணமுடித்தவர் என்ற கருத்தை விதைத்துவிட்டார். அதற்கான பதிலை அங்கே எனோ என்னால் சொல்லமுடியவில்லை. அதனை உங்களுக்கு அளிக்கும் பதில் மூலம் சொல்லிக்கொள்கின்றேன்.

நான் இன்றைக்கும் பொடியன் தான், என்ன கொஞ்சம் பெரிய பொடியன்.

//யுவகிருஷ்ணா said...
ஒரு நிகழ்வை ஆர்கனைஸ் செய்வது அவ்வளவு சுலபமான வேலையல்ல. சாதித்துக் காட்டியதற்கு வாழ்த்துகள் வந்தி //


ஆமாம் லக்கி ஒரு நிகழ்வை ஒழுங்கு செய்வது மிகவும் கடினமான வேலை இது எனக்கு பாடசாலை காலத்திலிருந்து கிடைத்த அனுபவங்கள். அந்த அனுபவங்களின் தொடராக கிடைத்த வெற்றியாகவே இந்தச் சந்திப்பினை என்னால் சொல்லமுடியும். காரணம் பலதரப்பட்ட கருத்துக்கள் உடையவர்கள் பலரை ஒன்றுகூட்டி ஒரு நிகழ்வை நடத்துவது என்பது மிகவும் கஸ்டமான வேலை.

ஒருங்கிணைப்பாளர் குழுவில் இருந்த அனைவரது கருத்துக்களும் குணாம்சங்களும் ஒரே அலைவரிசையில் இருந்ததும் இதற்கான ஒரு காரணமாகும்.

எங்கள் ஒன்றுகூடலுக்கு முன்னரான பதிவுகள் சில இப்போதுதான் வெளிவருகின்றது அவற்றைப் படித்துப்பாருங்கள் நாம் பட்ட அனுபவங்கள் புரியும்.

அப்பாடா ஒரு மாதிரி பல நாட்களாக தட்டச்சு செய்ததை இன்று ஒரு மாதிரி வலையேற்றிவிட்டாச்சு.

புட்டு,புட்சால், புல்லட் சில ஞாபகங்கள் - பகுதி 1

ஆகஸ்ட் 1 புல்லட்டின் இலங்கைப் பதிவர் சந்திப்பு 2009 ஐ வாசித்தேன், வாசித்ததும் கோபம் புல்லட் தலைமையில் தமிழ்ச் சங்கத்தில் நடந்த பதிவர் சந்திப்பைப் பற்றி எழுதியிருந்தார். பிறகுதான் பார்த்தால் அது அவரின் கனவாம்.

சரி புல்லட்டின் கனவை நனவாக்குவோம் என நினைத்து அவருக்கு ஒரு உடனேயே ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன்.

"அன்பின் புல்லட்
இலங்கைப் பதிவர் சந்திப்பை ஒழுங்குபடுத்துங்கள் வேண்டிய உதவிகள் செய்கிறேன். பல காலமாக ஒத்திவைத்த பதிவர் சந்திப்பு இம்முறையாவது நடக்கட்டும்."

உடனேயே அவரும் பதில் போட்டார் இந்த மின்னஞ்சலுடன் ஆரம்பமாகியது எங்கள் கலகலப்பான பயணம்.

பின்னர் புல்லட்டின் தொலைபேசி இலக்கம் கிடைத்தது. என்னை 3ந்திகதி திங்கட்கிழமை வெள்ளவத்தை நளபாகம் சாப்பாட்டுக்கடைக்கு மாலை 6.30 மணியளவில் வருமாறு கேட்டிருந்தார்.

ஏற்கனவே வெள்ளவத்தையில் நிற்கும் என் நண்பனைச் சந்தித்திவிட்டு நானும் என் நண்பனும் அதே கடையில் புல்லட் வரும் வரை பால் அப்பம் சாப்பிட்டபடி காத்திருந்தோம். அப்போது ஒரு இளைஞர்கள் பட்டாளம் கடைக்குள் நுழைந்தது. அவர்களில் யார் புல்லட் என அறிய நான் தொலைபேசியில் புல்லட்டை அழைத்தேன். அதே நேரம் அந்தக்கூட்டத்தில் இருந்த ஒரு தடித்த பொடியனின் தொலைபேசி அடித்தது உடனே நான் எழும்பிச் சென்று அவரை "நீங்கள் தான் புல்லட்டா" எனக் கேட்க அவர் முழுசியபடி "புல்லட்டா நான் புல்லட் இல்லை நீங்கள் பிழையாக நினைத்துவிட்டீர்கள்" என என்னை அசடு வழியச்செய்தார்.

அப்போது மீண்டும் என்னை புல்லட் தொலைபேசியில் அழைத்தார் தான் நளபாகத்திற்க்கு வெளியில் நிற்பதாக கூறினார். உடனே நான் வெளியே சென்றுபார்த்தால் ஒரு சிரித்த முகம் வாங்கோ வந்தி என அழைத்தது, கூடவே இன்னொரு சிரித்த ஆனா முகத்தில் ஒரு அறிவுக்களை நிரம்பிய இன்னொருவர். இவர்கள் இருவருடன் அவர்களீன் நண்பர்கள் இரண்டு பேர்.

முதலில் என்னை அழைத்தவர் தன்னை புல்லட் என அறிமுகப்படுத்திக் கொண்டார். மற்றவர் ஆதிரை. நான் புல்லட் என்றால் ஜிம் பாடியுடன் ஒரு கரடுமுரடான உருவம் இருக்கும் என நம்பியிருந்தேன். எல்லாவற்றையும் சிதறடித்து நல்ல நகைச்சுவை உணர்வுள்ள ஒருவரைக் கண்டேன்.

ஆதிரை என்னை முதலில் கேட்ட கேள்வி நீங்கள் ஹாட்லிக் கல்லூரியா? நானும் ஓம் எப்படித் தெரியும் என்றேன். உடனே ஒரு வாரத்திற்க்கு முன்னர் நடந்த எங்கள் பழைய மாணவர் சந்திப்பில் என்னைக் கண்டதாகக் கூறினார். அப்போதான் புரிந்தது அவரது முகத்தில் எப்படி அறிவுக்களை வந்தது என்று( ஹிஹி சும்மா).

நான் கதைத்தது எதுவும் விளங்காமல் அந்த இரு நண்பர்களும் ஹோட்டலினுல் சென்றுவிட்டார்கள். பல விடயங்களையும் சந்திப்பு பற்றிய விடயங்களையும் பேசிக்கோண்டிருந்தோம். அப்போதுதான் புல்லட் நான் எத்தனையாம் ஆண்டு ஏஎல் எடுத்தது எனக்கேட்டார், எங்கடை நாட்டிலை எப்போ ஏஎல் எடுத்தீர்கள் எனக்கெட்டால் அவரின் வயதை இலகுவாக அறியமுடியும். நானும் உண்மையான வருடத்தைச் சொல்ல வந்தி என்றவர் வந்தி அண்ணா எனத் தொடங்கினார்.

ஆதிரையை நான் கேட்டேன் எப்போ ஹாட்லியில் அடிவைத்தீர்கள் என அவர் சொன்ன வருடத்தில் நான் பாடசாலை வாழ்க்கையை முடித்து விலகிவிட்டேன்.

சிறிது நேரத்தில் புல்லட் சொன்னார் அண்ணா கொஞ்ச நேரம் நில்லுங்கள் ஒரு பார்சல் புட்டுக் கட்டிக்கொண்டு வாறன் எண்டார். அப்போதான் எனக்கு புல்லட்டின் உடம்பின் ரகசியம் புரிந்தது. புட்டும் குழம்பும் சாப்பிட்டு உடம்பைத் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்.

பின்னர் அப்படியே புல்லடின் வீதிவரை சென்று அவரை வழி அனுப்பிவிட்டு நான் இனிமையான நினைவுகளுடன் வீடு திரும்பி லோஷனுக்கு மெயில் அனுப்பினேன். இரண்டு சிங்கம்கள் தானாகவே வலையில் வந்து மாட்டிவிட்டார்கள். இவர்களின் உதவியுடன் நாம் இம்முறை பதிவர் சந்திப்பை முன்னின்று நடத்துவோம் என்றேன். அதற்கு லோஷன் தன் பழைய கால சில கசப்பான நிகழ்ச்சிகள் ஒழுங்குபடுத்தும் அனுபவங்களால் நீங்கள் முன்னின்று செய்யுங்கள் நான் பின்னாலிருந்து உதவி செய்கின்றேன் என்றார்.

5ந்திகதி அனைவரின் கருத்துக்கும் அமைய என்னால் நண்பர்களுக்கு மின்னஞ்சல் மூலமும், மின்னஞ்சல் முகவரிகள் தெரியாதவர்களுக்கு அவர்களின் வலைகளில் பின்னூட்டம் மூலமும் எம்மைத் தொடர்புகொள்ளச் சொல்லி பின்னூட்டம் அனுப்பினேன்.

அடுத்த நாள் லோஷனிடம் இருந்து ஒரு மெயில்.

அது என்ன அடுத்த பதிவில் அடுத்த பதிவை எப்படியும் இன்றிரவிற்க்குள் எழுதிவிடுகின்றேன்.

ஹாட் அண்ட் சவர் சூப் 26-08-2009

இலங்கைப் பதிவர் ஒன்றுகூடல்

சந்திப்பு ஒருமாதிரி வெற்றிகரமாக முடிந்தது. நிறையப் புதியவர்கள், சில பழையவர்கள், பதிவில் வியக்கவைத்து தோற்றத்தில் அட இந்தச் சின்னப்பொடியனா இவ்வளவும் எழுதுகிறான் என அதிர்ச்சி தந்தவர்கள் எனப் பலரையும் அறிமுகப்படுத்திக்கொண்டோம்.

இன்னும் பதிவுகள் எழுதிக்கொண்டேயிருக்கிறார்கள். ஒரு சில விடயங்கள் ஆழமாக ஆராயப்பட்டது. மொத்தத்தில் பலராலும் பாராட்டப்பட்ட எமக்கு திருப்திகரமான சந்திப்பாக முடிந்தது. சந்திப்பு ஏற்பாடுகளில் முன்னைய நாட்களைச் செலவிட்டதால் இப்போது சில நாட்களாக நிறைய வேலைகள் அதனால் தான் என்னுடைய பதிவுகளுக்கு பின்னூட்டம் இட்ட அன்பர்களுக்கு பதில் போடவில்லை, நிச்சயம் விரைவில் பதில் அளிக்கின்றேன்.

கிரிக்கெட்

பொண்டிங்கின் முகத்தில் கரி பூசிய இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள். சந்திப்பு களேபரங்களில் அடிபட்டுப்போன விடயத்தில் இதுவும் ஒன்று. ஆஸி வீரர்களின் தலைக்கனத்திற்க்கு இது வேண்டும் என்றுதான் பலரும் சொல்கிறார்கள், அத்துடன் ஆஸி இப்போது தரப்படுத்தலின் 4வது இடம். பார்ப்போம் ஆஸீ மீண்டும் ஆக்ரோசத்துடன் எழுகிறார்களா? இல்லை இப்படியே இருந்துவிடுகிறார்களா என.

விவாகரத்து

அண்மையில் செல்வராகவன் சோனியா அகர்வால் விவாகரத்து பரபரப்பான செய்தியானது. அவர்கள் இருவரும் பிரபலமானவர்கள் என்பதால் வெளியே வருகிறது ஆனால் இப்படிப் பிரபலம் இல்லாதவர்கள் பலரின் விவாகரத்துகள் முடங்கியே போகின்றன.

அண்மையில் மூஞ்சிபுத்தகத்தில் என் நண்பர் ஒருவருடன் அரட்டை அடிக்கும்போது எம்முடன் படித்த பெண் ஒருவர் திருமணமாகி 3 மாதத்தில் விவாகரத்து கோரிய அதிர்ச்சியான விடயத்தைச் சொன்னார். காரணம் இருவருக்குமிடையில் புரிந்துணர்வு இல்லாமை என அந்த நண்பி சொன்னாராம். இருவரும் இணையத்தில் காதல் செய்து திருமணம் செய்தவர்கள் என்பது முக்கிய குறிப்பு. தற்போது இணையத்தில் காதல் செய்ய விரும்பும் நண்பன் புல்லட் போன்றவர்களுக்கு முன் எச்சரிக்கை இது.

இலங்கையிலும் விவாகரத்து தமிழர்களிடம் அதிகரிக்கின்றது என்பது இன்னொரு சூடான தகவல்.

ஆரம்பத்தின் முடிவு

சில நாட்களாக நண்பர்களின் தொல்லை தாங்கமுடியாமல் உள்ளது, என்னைத் திருமணம் செய் திருமணம் செய் என நச்சரிக்கிறார்கள். குறிப்பாக லோஷன், புல்லட் மற்றும் மருதமூரான். லோஷன் தான் பெற்ற துன்பத்தை என்னையும் அனுபவிக்கச் சொல்கிறார் என நினைக்கின்றேன். மற்ற இருவரும் என்னைப்போல் சிறுவர்கள் ஆதலால் என்னை "லைக்கா" போல் ஆக்கி சோதனை செய்ய முயற்சிக்கிறார்கள்.

திருமணம் செய்துள்ள வலையுலகத் தோழர்களான லக்கிலுக், ஜாக்கி அண்ணாசி, கேபிள் சங்கர் அண்ணாச்சி போன்றவர்களின் கருத்துகளை எதிர்பார்க்கின்றேன்.

என் மைத்துனர் சொன்னதுபோல திருமணம் என்பது " The beginning of an End :-)".

சினிமா

கந்தசாமி பார்த்து சேதுவாகினதால் இந்த வாரம் சினிமா சம்பந்தமான எந்த தகவல்களோ விமர்சனங்களோ இல்லை. ஆனால் வழக்கம்போல் படம் மட்டும் உண்டு. சூப்பில் தகவல்களை விட படம் பார்ப்பவர்கள் மட்டும் அதிகம் சில ரசிகர்களின் பெயரை அவர்கள் மானப்பிரச்சனையாக கருதுவதால் குறிப்பிட விரும்பவில்லை.

கந்தசாமி - சூப்பர் ஷீரோ

எத்தனையோ ஆணிபிடுங்கள்களுக்கும் மத்தியிலும் கந்தசாமி படத்தைப் பார்த்துவிட்டேன்( நாங்கள் எல்லாம் பொறுமையின் சிகரங்கள்). படத்தை விமர்சனம் பண்ணி நேரத்தை வீணடிப்பதன் பார்க்க ஏன் கந்தசாமி தோல்வியடைந்தது என ஒரு சின்ன ஆராய்ச்சி.



கதை
ஒரு படத்தில் கதை எவ்வளவு முக்கியம் என்பதை ஏனோ சுசி கணேசன் மறந்துவிட்டார், இல்லையென்றால் தாணு அவரிடம் சுசி நல்ல கதை வேண்டும் எனச் சொன்னது அவருக்கு நல்ல சதை வேண்டும் எனக்கேட்டிருக்கவேண்டும் அதனால் தான் ஸ்ரேயாவின் சகல சதைகளையும் அப்பட்டமாக காட்டியிருக்கிறார்.

அண்மையில் வெற்றிக்கொடி கட்டிய சிவாஜி, ரமணா, ஜென்டில்மேன், அந்நியன் படங்களின் கதைகளை வைத்து உப்புபுளி போட்டு நல்ல மசாலா சூப் வைத்திருக்கிறார் சுசி.

திரைக்கதை
கதை இல்லாவிட்டாலும் சிறந்த திரைக்கதை மூலம் வெற்றியடைந்த படங்கள் சில இருக்கின்றன. உதாரணம் கில்லி, சிவகாசி, திருப்பாச்சி போன்ற இளைய தளபதியின் சில படங்கள். ஆனால் கந்தசாமியில் திரைக்கதைகூட நொண்டியடிக்கிறது. அதிலும் மெக்சிக்கோ காட்சிகள் ஏன் என்பதை ஒவ்வொரு ரசிகனும் கேட்கின்றான்.

கதாநாயகி
ஸ்ரேயாவை எவ்வளவு உரிக்கமுடியுமோ அவ்வளவு உரித்திருக்கிறார் சுசி கணேசன். மியாவ் மியாவ் பூனைக்குட்டியில் ஸ்ரேயா ஆடும் ஆட்டத்திற்க்கு பக்கத்து சீட்டில் இருந்தவர் வாந்தி எடுத்துவிட்டார். அத்துடன் ஸ்ரேயாவின் தலைமுடி ஸ்டைல் கண்றாவி. சினேகிதியேயில் ஜோதிகா தன் எதிரிக்கு நித்திரையில் தலைமுடியை வெட்டியிருப்பார் அந்த வெட்டுப்பட்ட பெண் கூட அந்த ஸ்டைலில் அழகாக இருந்தார் ஆனால் ஸ்ரேயா?

இசை
சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களை எல்லாம் காட்சிஆக்கும்போது கோட்டைவிட்டிருக்கிறார்கள். அதிலும் எக்ஸ்யூஸ்மீ கந்தசாமி பாடல் டோட்டல் வேஸ்ட், மானாட மயிலாட இளம் நடன இயக்குனர்கள் இதனைத் திறம்பட இயக்கியிருப்பார்கள். அந்தப்பாட்டில் எப்படியெல்லாம் எக்ஸ்பிரசன் காட்டியிருக்கலாம் ஆனால் விக்ரம் ஸ்ரேயா இருவரும் ஏனோதானோ என ஆடினார்கள், ஸ்ரேயாவின் உதட்டசைவுகள் பாடலுடன் ஒட்டவில்லை. இருவருக்கும் கெமிஸ்ரி துப்பரவாக இல்லை. மும்மைத் கானைப்பற்றி சொல்ல ஒன்றுமேயில்லை.

பின்னணி இசை விக்ரம் சேவலாக வரும் காட்சிகளில் அந்நியன் பாதிப்பு. மற்றும்படி சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

வடிவேல்
ஏதோ இந்தப்படத்தில் நடித்திருக்கிறார். மீண்டும் மீண்டுமதே மொக்கைகள் வடிவேல் ரூட்டை மாற்றாவிட்டால் விரைவில் காணாமல் போனோர் பட்டியலில் தேடவேண்டும். படத்தின் நீளத்தைக் கருதி வடிவேல் காட்சிகளை வெட்டியிருக்கலாம்.

ஒளிப்பதிவு
ஆடித்தள்ளுபடியில் வாங்கிய கமெராவினால் படம் எடுத்திருக்கிறா ஏகாம்பரம், ஒரு இடத்திலும் ஒரு பிரேமும் ஒழுங்கில்லை. காட்சிகளில் தெளிவில்லை சில இடங்களில் மொபைல் கமெராவினால் எடுக்கப்பட்ட அப்டங்கள் போல் பிக்சல் குறைவாக இருக்கிறது. ஒளிப்பதிவு ஒழுங்காக இருந்தால் குப்பைப் படங்களைக்கூட பார்க்கலாம் நாமெல்லாம் வில்லு குருவி பார்த்த வீரர்கள் ஆனால் இந்தப்படத்தில் ஒளிப்பதிவு படுமோசம். எடிட்டிங் அதைவிட மோசம்.

விக்ரம் மட்டும் தான் படத்தின் ஒரே ஒரு பிளஸ் நன்றாக நடிக்கின்றார் ஆனால் முகத்தில் முதிர்ச்சி தெரிகிறது. இனிமேல் இப்படியான சூப்பர் ஹீரோ படங்களில் நடிக்காமல் நல்ல கதை உள்ள படங்களில் நடிப்பாராக.

படம் தோல்வி என்பதற்கான இரண்டு ஆதாரங்கள்.

1. டைட்டில் கார்ட்டில் நன்றிகள் கலாநிதி மாறன், சன் பிக்சர்ஸ் எனப்போடுகின்றார்கள் அப்பவே தியேட்டரைவிட்டு எழும்பி வந்திருக்கவேண்டும். சன் பிக்சர்ஸின் எந்தப் படம் இதுவரை வெற்றியடைந்திருக்கிறது.

2. புதிய படங்கள் அதிலும் பில்டப் கொடுத்த படங்கள் வெளிவந்து ஒரு 3 கிழமைக்கும் பின்னரே சன் மியூசிக்கில் முழுமையான பாடல்களை ஒளிபரப்புவார்கள் ஆனால் அடுத்த நாளிலிருந்தே பாடல்கள் முழுமையாக ஒளிபரப்பாகின்றன.

மொத்தத்தில் வில்லுவை வெற்றிப்படமாக்கிய பெருமை கந்தசாமியையே சாரும்.

மாகோவில் நின்ற யாழ்தேவியும் தமிழ் விசைப்பலகையும்

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலங்கை வலைப்பதிவர் ஒன்றுகூடலில் கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்ட இரண்டு விடயங்களைப் பற்றி சில விளக்கங்கள் கொடுக்கவேண்டியது இந்த நிகழ்வை ஒழுங்குபடுத்தியவர்களின் நானும் ஒருவன் என்பதால் என்னுடைய கடப்பாடாக இந்தப் பதிவு.

கலந்துரையாடல் ஆரம்பித்ததுமே சர்வேஸ்வரன் முதலில் விசைப்பலகை பற்றிய தன் கருத்துக்களைச் சொல்லத்தொடங்கினார். அவருடன் திரு.சேது, கவிஞர் மேமன்கவி, திரு,எழில்வேந்தன், மு.மயூரன் போன்றவர்கள் தங்கள் கருத்துகளைச் சொல்லத்தொடங்கினார்கள். இதனை இணையத்தினூடாக பார்வையிட்டுக்கொண்ட வசந்தன், சயந்தன், கானாப்பிரபா போன்றவர்களும் தங்கள் கருத்துகளை இணைய அரட்டையில் கூறினார்கள் என அறிந்தேன்.

சில தொழில்நுட்ப சந்தேகங்கள், அனானிப் பின்னூட்டங்கள், வலையுலக விருதுகள் போன்றவற்றைப் கலந்தாலோசிக்க நினைத்த எமக்கு இந்த விசைப்பலகை விடயம் வலைப்பதிவர் சந்திப்பு அப்பால் பட்டதாகவே பட்டது. ஏனென்றால் பல சிக்கல்கள் நிறைந்த இந்த விடயத்தை பல புதியவர்கள் இருக்கும் ஒன்றுகூடலில் பேசியது பலரும் புருவத்தை உயர்த்தவும் நிகழ்வு முடிந்தபின்னர் எங்களிடம் இதனை ஒரு குறையாகவும் சொன்னார்கள்.

அதனால் தான் எங்களினால் இந்த விடயத்தை அரைமணி நேரம் கொடுத்தபின்னர் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடிந்தது. இதனால் தான் மயூரேசனுக்கு இதனைப் பற்றி பேச சந்தர்ப்பம் கிடைக்கவில்லை(வசந்தனில் எதிர்ப்பாட்டு பதிவில் குறைபட்டிருந்தார்). அத்துடன் வசந்தன் இதனை வாக்கெடுப்பு நடத்தும் படி அரட்டையில் கூறியதாகவும் அறிந்தேன், பலருக்கு தமிழ் விசைப்பலகைகள் பற்றிய எண்ணக்கருவோ அல்லது விடயங்களோ தெரியாத போது எப்படி அதனை வாக்கெடுக்கமுடியும்.

கானாப்பிரபா கூறியதுபோல் விரும்பியவர்கள் விரும்பியதில் தட்டச்சு செய்துவிட்டுபோகட்டும் இதனைப் பற்றி அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் மட்டும் அதற்கான இடத்தில் விவாதித்திருந்தால் பயன் கிடைத்திருக்கும். இதுபற்றி வசந்தனின் எதிர்ப்பாட்டு.

இலங்கைப் பதிவர் சந்திப்பு - ஓர் எதிர்ப்பாட்டு

அடுத்து மருதமூரானின் திரட்டிகள் பற்றிய உரையில் அவர் யாழ்தேவிக்கு விளம்பரம் தேடினார் என்ற குற்றச்சாட்டும், யாழ்தேவி பற்றிய விவாதம் எந்த முடிவுக்கும் வராமல் போனதும். திரட்டிகள் பற்றிய உரைக்கு நான் தான் மருதமூரானை ஒழுங்குபடுத்தியது. அவர் ஆரம்பத்தில் திரட்டிகளின் பயன்கள் பற்றி கொஞ்சம் தெளிவாகச் சொன்னாலும் பின்னர் யாழ்தேவி என்ற திரட்டியைப் பற்றிப் பேசவந்தபின்னர் அதிலையே நின்றுவிட்டார்.

இவர் பேசிக்கொண்டிருக்கும்போதே சிலர் கேள்விகேட்க ஆரம்பித்தார்கள், அவர்களை கலந்துரையாடலில் கேள்விகளைக் கேட்கும்படி பணித்தோம். பின்னர் கலந்துரையாடல் தொடங்கியதும் பலரும் தங்கள் கேள்விகளை அடுக்கடுக்காக மருதமூரான் மேல் வீசினார்கள். அவரும் சளைக்காமல் தன் விளக்கத்தைச் சொன்னார்.

முதலில் மு.மயூரன் தனக்கு இந்தப்பெயர் பிடிக்கவில்லை என்றும் விஜயின் பட டைட்டில் போல் Filled with dreams என்ற வாசகமும் பிடிக்கவில்லை அத்துடன் ரயிலின் படம் எதற்க்கு எனக்கேட்டார்.

முதல் நாள் இரவே நான் மருதமூரானிடம் தொலைபேசியில் பேசியபோது யாழ்தேவி பெயர் பற்றிய சர்ச்சை கட்டாயம் வரும் என்பதைக் கூறினேன். நாம் நினைத்தபடியே யாழ்தேவி சூடுபிடிக்கத் தொடங்கியது. இதுபற்றி மருதமூரான் தன் பதிவில் யாழ்தேவி பற்றிய திறந்த வாக்கெடுப்பு நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்.

யாழ்தேவியின் முக்கிய குறைபாடாக பதிவர்களின் தொலைபேசி இலக்கம் தொடக்கம் பல தனிப்பட்ட விடயங்கள் கேட்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அத்துடன் இந்த விவாதத்திற்க்கான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை, இதனை இன்னொரு பதிவர் தன் வலையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்தேவியின் பெயரை மாற்றுவதோ அல்லது அப்ப‌டியே வைத்துக்கொள்வதோ அதன் உரிமையாளர்களின் விருப்பம், விரும்பினால் அவர்கள் உத்தரா தேவி உடரட்ட மெனிக்கே என பெயரிட்டாலும் யாரும் ஒன்றும் சொல்லமாட்டார்கள்.

எது எப்படியாயினும் யாழ்தேவி மாகோ சந்தியில் இடைநடுவில் நிற்கின்றது. அதனை காங்கேசன்துறை வரை கொண்டு செல்வது எம் கையில் தான் இருக்கிறது. இன்னொரு திரட்டியான பூச்சரத்தின் உரிமையாளரும் வருகின்றேன் என உறுதியளித்திருந்தார் ஆனால் ஏனோ வரவில்லை, வந்திருந்தால் அவரது திரட்டி பற்றிய விபரங்களையும் கருத்துகளையும் அறிந்திருக்கலாம்.

சிலர் யாழ்தேவி தான் இந்த நிகழ்வை ஒழுங்கு செய்திருகிறதாக எண்ணியிருக்கிறார்கள், யாழ்தேவிக்கும் ஒன்றுகூடலுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

இந்தப் பதிவு சம்பந்தப்பட்ட சில பதிவுகள்:

இணையம் இலங்கைத் தரையில் இறங்கி மகிழ்ந்த இனிய பொழுது.

அன்புள்ள காதலுக்கு, இல்லைங்க இலங்கைப் பதிவர்களுக்க...

என்ன சந்திப்பு

இலங்கை வலைப்பதிவர் ஒன்று கூடல் - பதிவர் பட்டியல்

கடந்த ஞாயிற்றுக்கிழமை(23.08.2009) கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்ற இலங்கை வலைப்பதிவர் ஒன்றுகூடலில் கலந்துகொண்ட வலைப்பதிவர்களின் பட்டியல்.

வலைப்பதிவர் பெயர்வலையின் பெயர்
எஸ்.எழில்வேந்தன்நீலாவணன்
பகீரதன்ஆகாயகங்கை
ம.கஜதீபன்மனிதனாயிரு
பா.லவன்இலங்கன்
இ.லக்சன்லக்சன்
ம.செந்தூரன்செந்துவா
எஸ்.பகீரதன்ஊரோடி
யோ.சயந்தன்TamilhackX
ப.குமணன்பனையூரான்
C.K.மயூரன்கொஞ்சம் fun கொஞ்சம் music
மேமன்கவிகொஞ்சம் யோசிக்க‌
மு.மயூரன்ம்
ஜெ.மயூரேசன்தமிழ்வலைப்பதிவு
கா.சேதுராமலிங்கம்தமிழ்+கணினி
கெ.சர்வேஸ்வரன்தமிழ்-IT
சுபானுஊஞ்சல்
கொல்வின்தமிழ் கம்பியூட்டர் உலகம்
ரமேஸ்கண்ணாரமேஸ்
ரொஷானிரொஷானி
சேரன் கிரிஷ்சேரன் கிரிஷ்
மன்னார் அமுதன்அமுதனின் பக்கங்கள்
M.பிரசாத்ஆர்வம்
மருதமூரான்மருதமூரான்
T.ஜீவராஜ்ஜீவநதி
நிருஜாசெவ்வானச் சிதறல்கள்
S.விசாகன்மின்மினித் தேசம்
N.K.அஷோக்பரன்என்.கே.அஷோக்பரன்
ஆதித்தன்காலப்பெருங்களம்
ராம் நட்ராஜ்NJRAMAL - THE FILMMAKER'S BLOG
பவாஸ்பார்வை
தர்ஷினிதர்ஷினி
ஹரன்ஹரன்
குணாநிழல்
யோயோ வாய்ஸ்
முர்ஷிட் அஹ்மட்அலப்பறை
அஹமட் சனூன்தெருவிளக்கு
சிவம்சிவம்சக்தி
கனககோபிக.கோபிகிருஷ்ணா
மதுவர்மன்தமிழ் பூங்கா
ஷாCoolPix
அஷீஸ் நிஸாருத்தீன்ஹைக்கூ
யசீர் நிஸாருத்தீன்பூங்கா சிறுவர் மடல்
ஜெனிபிரளயம்
மேகலாகுமுதம்
வந்தியத்தேவன்என் உளறல்கள்
லோஷன்லோஷன்
ஹிஷாம்என் உணர்வுகள்
உஸாமாmu - usama
சதீஷ்SShathiesh
முஹமட் சுஹைல்ராகம்
புல்லட்புல்லட்டின் டுமீல்
பவாஸ்எதிரொலி
கெளபாய்மதுநா
நிமல்TALKOUT IN TAMIL
டயனாஅறிந்ததும் அனுபவமும்
ஆதிரைகடலேறி
பால்குடிதாய்மடி
அருண் பிரசாத்அருண் பிரசாத்
விஜிபிரியமானவள்
கீர்த்தனாசிந்தனைச் சிறகினிலே
கிருஷ்ணா
சஞ்ஜீவன்
கஜீவன்
ஜெயகோபி
கதிர்காமத்தம்பி
ஜெகதீஸ்வரி
ரிஷாம்
மின்ஹாஜ்
திவாகர்
மணிவண்ணன்
அன்வர்டீன்
வரோதயன்
செல்வநாயகம்
அந்தனி ஜீவா
தர்ஷாயணி
சந்தோஷ்



ஒரு சிலரின் வலைப்பதிவு முகவரிகள் தவறாக இருப்பதால் அவர்களின் பெயர்கள் மட்டுமே இட்டிருக்கின்றேன். தயவு செய்து அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு தங்கள் வலைப்பூவின் சரியான முகவரியைத் தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

ஒரு அட்டவணை வடிவில் தயாரிக்க முயற்சி செய்தேன் ஆனால் சில தொழில்நுட்பப் பிரச்சனைகள் ஏற்பட்டதால் மேலேயுள்ள வடிவத்தில் தந்திருக்கின்றேன். அட்டவணையை வலைகளில் இணைப்பதற்கான தீர்வு தெரிந்தவர்கள் அதற்கான விளக்கத்தை அளியுங்கள்.

நாம் சாதித்துவிட்டோம்

எம் நீண்ட நாள் கனவு இன்று நனவாகிவிட்டது. இலங்கை வலைப்பதிவர்களான நாம் இன்றைய ஒன்றுகூடலை வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்டோம்.



கிட்டத்தட்ட 80 வலைப்பதிவர்கள் இன்று காலை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் கூடி, ஒவ்வொருவரையொருவர் அறிமுகம் செய்து பல்வேறுபட்ட விடயங்களை விவாதித்து, மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம்.

இதனைப் பற்றிய நீண்ட பதிவினை பின்னர் எழுதுகின்றேன். ஒன்றுகூடலில் கலந்துகொண்டவர்கள் ஒவ்வொருவரும் எழுதுவார்கள். அதற்க்கு முன்னர் ஒரு சின்ன நுனிப்புல் மேய்தல்.



காலை சரியாக 9 மணி 15 நிமிடமளவில் புல்லட்டின் அறிமுகவுரையுடன் ஆரம்பமாகியது நிகழ்வு. புல்லட் ஏன் இந்த ஒன்றுகூடல், எப்படி நாம் இதனை தொடங்கினோம் என்ற விடயங்களை தனக்கே உரிய பாணியில் சபை கலகலக்க உரையாற்றினார்.





அடுத்து வலைப்பதிவும் சட்டமும் என்ற விடயத்தினை சுபானு விளக்கினார். காப்புரிமை, போன்ற விடயங்களையும் அத்துடன் இலங்கையில் வலைப்பதிவுகள் சம்பந்தமான சட்டம் இன்னும் இயற்றப்படவில்லை என்பதையும் கூறினார்.



இன்று வலைப்பதிவின் 10ஆவது ஆண்டு நிறைவு என்பதால் ஆதிரையினால் பிறந்த நாள் கேக் வெட்டுவது என்ற விடயம் நிகழ்த்தப்பட்டது. எழுந்தமானமாக 10 வலைப்பதிவர்களைக் கொண்டு 10 மெழுகுதிரிகள் ஏற்றப்பட்டு அந்த கேக்கினை எழுத்தாளார் திரு.அந்தனி ஜீவா, கவிஞர் திரு.மேமன் கவி, ஒளிபரப்பாளரும் இன்றைய சிறப்பு விருந்தினருமான திரு.எஸ்.எழில்வேந்தன் மற்றும் வலைப்பதிவர் டொக்டர் ஜீவராஜ் ஆகியோர்கள் அந்த கேக்கினை ஒன்றாக வெட்டினார்கள்.




அடுத்ததாக பதிவர்கள் ஓவ்வொருவராக தம்மை அறிமுகம் செய்துகொண்டார்கள். வந்திருந்த 80 பதிவர்களில் மிகச்சிலரே இன்னும் பதிவு எழுதாமல் இருப்பவர்கள். ஏனையவர்கள் பதிவர்கள்(யார் எவர் அவரின் வலைப்பூ பற்றிய‌ விபரம் அடுத்த பதிவில்).

இதனைத் தொடர்ந்து மருதமூரான் திரட்டிகள் பற்றிய தன் கருத்துகளையும் யாழ்தேவி திரட்டி மற்றும் யாழ்தேவி சஞ்சிகை பற்றிய அறிமுகத்தையும் செய்தார்.



அடுத்த நிகழ்வாக சிறப்புவிருந்தினராக வந்த முன்னாள் ஒளி/ஒலிபரப்பாளரும் ஈழத்தின் மூத்த கவிஞர்களில் ஒருவரான நீலாவணன் அவர்களின் மகனுமான‌ திரு.எஸ்.எழில்வேந்தன் சிறப்புரை ஆற்றினார். இவர் தன் உரையில் தானும் சிலகாலமாக வலைப்பதிவில் ஈடுபடுவதாகவும், பலரின் வலைப்பதிவுகளை வாசித்த அனுபவங்களையும் கூறினார்.



சிறப்புரையைத் தொடர்ந்து வலைப்பதிவும் தொழில்நுட்பமும் என்ற கருத்துரையை சேரன் கிரிஷ் அவர்கள் வழங்கினார். இவர் எப்படி ஹேக்கர்ஸ் இடமிருந்து உங்கள் வலையைப் பாதுகாப்பது, RSS ஓடைகள், போன்ற விடயங்களை மிகவும் சுருக்கமாகக் கூறினார்.



சேரன் கிருஷ்சைத் தொடர்ந்து லோஷனால் வலைப்பதிவில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை சுவாரசியாமக் கூறினார். லோஷனின் உரையினூடு வலைப்பதிவர்களின் கலந்துரையாடல் இடம் பெற்றது.



முதலில் விசைப்பலகை பற்றியும் பின்னர் யாழ் தேவி திரட்டிபற்றியும் காரசாரமான விவாதங்கள் நிகழ்ந்தன. அத்துடன் இன்னொரு பதிவர் தான் பதிவெழுதி பட்ட சிக்கல் ஒன்றையும் அத்துடன் புனைபெயர்களில் எழுதுபவர்கள் பற்றியும், தொழில்நுட்பம் தொடர்பான பதிவுகள் பற்றியும் அத்துடன் வட்டாரச் சொற்களைப் பயன்படுத்தாமல் எழுதுவது பற்றியும் ஒரு கருத்து கூறப்பட்டது.



இறுதியாக வந்தியத்தேவனின் பின்னூட்டத்துடன்( நன்றியுரை) நிகழ்வு இனிதே நிறைவுற்றது. (என் பின்னூட்டம் பின்னர் தனிப்பதிவாக.).நிகழ்வின் தொகுப்புரை சதீஷ் வழங்கினார். கலந்துகொண்ட அனைத்துப் பதிவர்களுக்கும் வடை, பற்றீஸ், கேக் மற்றும் நெஸ்கபே வழங்கப்பட்டது.



இந்த நிகழ்வை நேரடியாக ஒளிபரப்பிய கெளபாய் மதுவிற்கு மிக்க நன்றிகள். இந்த நேரடியொளிபரப்பை பலர் பார்த்ததோடு மட்டுமல்ல, தங்கள் கருத்துகளையும் தெரிவித்தார்கள். கானாபிரபா, சயந்தன், சினேகிதி, வசந்தன், தயாளன்,கிருத்திகன்(கீத்), மாயா, முகுந்த், ஜெயா, கேபிள் சங்கர், மம்போ, ப்ரிய்டமுடன் வசந்த், கோசலன்,டோன்டு, மாயவரத்தான், புதுவை சிவா, விமல், சேனன், டானி, எஸ்கர், தமிழன் ‍கறுப்பி போன்றவர்கள் என்னிடம் இருக்கும் பட்டியலில் உள்ள நண்பர்கள். (ஏனையவர்களின் பெயர் மறந்திருந்தால் மன்னிக்கவும்). அத்துடன் என்னில் தொலைபேசியில் கதைத்த வர்மா, சஜிதரன், தாசன், தங்கமுகுந்தன் ஆகியோருக்கும் நன்றிகள்.

மேலதிக படங்கள் ஆதிரையின் வலையில் உள்ளது. ஒன்றுகூடல் படங்கள்

பல சுவையான விடயங்களுடன் பதிவர்களிடமிருந்து பதிவுகள் வரும் காத்திருங்கள்.