Showing posts with label அவுஸ்திரேலியா. Show all posts
Showing posts with label அவுஸ்திரேலியா. Show all posts

செஞ்சூரியன் - பரபரப்பான இறுதி நிமிடங்கள்

நேற்று செஞ்சூரியனில் நடந்த ஆஸியின் பாகிஸ்தானுக்கு எதிரான வாழ்வா சாவா? போட்டியில் ஆஸி இறுதிப் பந்தில் 2 விக்கெட்டுகளால் வெற்றி ஈட்டி அரையிறுதிக்கு தெரிவானது. இதுவரை நடைபெற்ற போட்டிகளில் மிகவும் விறுவிறுப்பான இறுதி நிமிடங்கள் நீண்ட நாளைக்குப் பின்னர் பார்க்ககூடியதாக இருந்தது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்ரேலியா பாகிஸ்தானைத் துடுப்பெடுத்தாடப் பணித்தது. நீண்ட நாட்களின் பின்னர் அவ்ரிடி கம்ரன் அக்மலுடன் ஆரம்பவீரராக களமிறங்கினார், ஆனால் 15 ஓட்டங்களுடன் தன் அதிரடியைக் காட்டமுடியாமல் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் மிகமிக மந்தமாகவே ஆடியது.


முகமட் யூசுப்பும் மிஷ்பா உல் ஹக்கும் இணைந்து 5ஆவது விக்கெட்டுக்காக 63 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றதனால் பாகிஸ்தான் 50 ஓவர்கள் முடிவில் 205 ஓட்டங்களைப் பெற்றது.

206 என்ற இலக்கை இலகுவாக பெற்றிடும் என எதிர்பார்த்த ஆஸி ஓரளவு வேகத்துடனே ஆடியது முதல் விக்கெட்டுக்காக வட்சனும் பெயினும் 44 ஓட்டங்களை எடுத்தார்கள். ஆரம்ப வீரர்கள் ஆட்டமிழந்த பின்னர் பொண்டிங்கும் மைக் ஹசியும் 3ஆவது விக்கெட்டுக்காக 81 ஓட்டங்களைப் பகிர்ந்துகொண்டார்கள்.



பொண்டிங் 32 ஆட்டமிழக்கும் போது ஆஸியின் மொத்த எண்ணிக்கை 3 விக்கெட் இழப்புக்கு 140 ஓட்டங்கள் வெற்றிக்கு இன்னும் 66 ஓட்டங்களே தேவைப்பட்டன போதுமான ஓவர்கள் இருந்தபடியால் ஆஸி பெற்றி பெற்றுவிடும் எனவே அனைவரும் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் மைக் ஹசி ஆட்டமிழந்தபின்னர் ஹோப்ஸ், வைட் என வீரர்கள் வேகமாக வந்த வழியே திரும்பிப் போக ஆட்டம் பாகிஸ்தான் பக்கம் திரும்பியது.

42 ஆவது ஓவரில் பிரட் லீயும் மிச்சல் ஜோன்சனும் களத்தில் நின்றார்கள். அந்த நேரம் 48 பந்துகளில் ஆஸி 28 ஓட்டங்களை எடுக்கவேண்டும். ராணா நவீட் பந்து வீச வந்தார் ஒரு ஓட்டம் மட்டும் அந்த ஓவரைப் பரபரப்பாக்கினார்.

அடுத்த ஓவர் முகமட் ஆஸிப் பந்து வீச வந்து 4 ஓட்டங்களைக் கொடுத்தார். அந்த ஓவர் முடிவில் 36 பந்துகளில் 23 ஓட்டங்கள் பெற வேண்டும். மீண்டும் ராணா வந்தார் 2 ஜோக்கர் பந்துகள் உட்பட 6 பந்துகளினாலும் துடுப்பாடிய லீயை மிரட்டினார். அந்த ஓவர் ஓட்டம் எதுவும் இல்லாத மேடின் ஓவராக மாறியது.

30 பந்துகளில் 23 ஓட்டங்கள் முகமட் ஆசிப்புக்கு பதில் சஜிட் அஜ்மல் பந்துவீச வந்தார். ஆஸி பவர்பிளேயை பயன்படுத்தியது. இதனால் அஜ்மலின் 4ஆவது பந்தில் ஜோன்சன் நான்கு ஓட்டங்களை அடித்து ஆஸியின் டென்சனைக் குறைத்தார். ஆனால் பரிதாபமாக அடுத்த பந்தில் போல்ட்டாகி ஆட்டமிழந்தார். 25 பந்துகளில் 19 ஓட்டங்கள் வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் நேதன் ஹாரிட்ஸ் லீயுடன் இணைந்தார். தன் சந்தித்த அஜ்மலின் முதல் பந்தில் ஒரு ஓட்டம் எடுத்தார் ஹாரிட்ஸ் அத்துடன் அஜ்மலில் அந்த ஓவர் முடிவடைந்தது.

24 பந்துகளில் 18 ஓட்டங்கள் மீண்டும் ராணா வந்தார். மறுமுனையில் ஆடுவது ஹாரிட்ஸ் ராணாவின் பந்துகளில் திணறியபடியால் ராணாவின் அந்த ஓவரும் மேடின் ஓவராக மாறியது. இந்த நேரத்தில் பவிலியனில் அணித் தலைவர் பொண்டிங் தன் நகத்தை மிகவும் டென்சனாக கடித்துக் கொண்டிருந்தார்.

18 பந்துகளில் 18 ஓட்டங்கள் போட்டி மிகவும் சூடுபிடிக்கத் தொடங்கியது. சஜிட் அஜ்மல் தன் இறுதி ஓவரை வீச வந்திருந்தார். அவரின் முதல் பந்தையே எல்லைக்கோட்டுக்கு அனுப்பி லீ நான்கு ஓட்டங்களை எடுத்தார். ஆஸியின் பக்கம் வெற்றி எட்டிப் பார்க்க தொடங்கியது. அந்த ஓவரில் ஒரு பந்தைத் தவிர ஏனைய பந்துகளை அடித்து ஒவ்வொரு ஓட்டமாக லீயும் ஹாரிட்ஸும் பெற்றனர். அந்த ஓவரில் மொத்தமாக 8 ஓட்டங்களை எடுத்து டென்சனைக் குறைத்தார்கள்.

மீண்டும் ராணா 12 பந்துகளில் 10 ஓட்டங்கள் முதல் 2 பந்துகளிலும் ஹாரிட்ஸ் ஓட்டம் எடுக்கவில்லை. 10 பந்துகள் 10 ஓட்டங்கள். மூன்றாவது பந்தை நான்கு ஓட்டமாக மாற்றினார் ஹாரிட்ஸ். 9 பந்துகளில் 6 ஓட்டங்கள் வெற்றி ஆஸியை நோக்கி. ராணாவின் கடைசி 2 பந்துகளிலும் ஒவ்வொரு ஓட்டம் பெற்றார்கள்.



இறுதி ஓவர் 6 பந்துகள் 4 ஓட்டங்கள், ஒரு நாலு ஓட்டம் வெற்றியைத் தேடித்தரும் பந்து வீச வருகின்றார் உமர் குல் மறுமுனையில் அடிக்கத் தயாராக லீ. இந்த ஓவர் வீச முன்னர் குல், அணித்தலைவர் யூனிஸ் கான் இருவரும் கிட்டத்தட்ட 2 நிமிடங்களுக்கு மேல் வியூகம் அமைக்க எடுத்துக்கொண்டார்கள், இது கிளைமாக்ஸ் காட்சியில் குத்துப் பாட்டு வைத்து ரசிகர்களை நோகடிக்கும் இயக்குனர்களின் செயல் போல் பார்வையாளர்களுக்கு எரிச்சல் கொடுத்தது. ஏனென்றால் போட்டி அவ்வளவு டென்சன்.

முதல் பந்து ஓட்டம் எதுவும் எடுக்கவில்லை. 5 பந்தில் 4 ஓட்டங்கள்.

அடுத்த பந்து யோர்க்கர் ஆனால் அதனை அடித்து லீ ஒரு ஓட்டம் எடுக்கின்றார். 4 பந்தில் 3 ஓட்டங்கள்.

அடுத்த பந்து ஹாரிட்சை நோக்கி குல் ஓட்டமில்லை. 3 பந்துகள் 3 ஓட்டங்கள். போட்டியில் எதுவும் நடக்கலாம் என்ற நிலை

நான்காவது பந்து மிட்விக்கெட் திசையில் ஹாரிட்ஸ் அடித்தார் மிஸ்பா அதனைத் தடுத்துவிட்டார் ஆனால் அவரால் சரியான நேரத்திற்க்கு விக்கெட்டை நோக்கி வீச முடியாமல் போனதால் ரன் அவுட் வாய்ப்பு பறிபோகின்றது ஆஸிக்கு ஒரு ரன். 2 பந்துகள் 2 ஓட்டங்கள்.

ஐந்தாவது பந்து எதிர்முனையில் லீ மிட் ஓன் திசையில் அடித்து ஒரு ஓட்டத்தை எடுத்துவிடுகிறார். போட்டி சமநிலை ஆகவே இந்தியாவின் அரையிறுதிக் கனவு கலைந்தது.

கடைசிப் பந்து குல் ஹாரிட்சை நோக்கி பந்து நேராக விக்கெட் கீப்பர் கம்ரன் அக்மலின் கைகளிற்க்கு போகின்றது ஆனால் ஹாரிட்சும் லீயும் உதிரியாக ஒரு ஓட்டத்தை ஓடிவிட்டார்கள். இன்னொரு ரன் அவுட் வாய்ப்பு பறிபோகின்றது.ஆஸி போராடி 2 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று அரையிறுதிக்கும் தெரிவானது.

ஆஸியின் வெற்றியால் இந்தியா அரையிறுதியில் இருந்து இலங்கை தென்னாபிரிக்கா போன்ற முன்னணி நாடுகளுடன் வெறும் கையுடன் வெளியேறியது. பாகிஸ்தானின் வெற்றிக்காக பிரார்த்தித்த இந்திய அணி ரசிகர்களின் பிரார்த்தனைகள் பலிக்கவில்லை.

அரையிறுதியில் பாகிஸ்தான் எதிர் நியூசிலாந்தும் ஆஸி எதிர் இங்கிலாந்தும் மோதவுள்ளன. இங்கிலாந்தில் வைத்து இங்கிலாந்தை சுருட்டிய ஆஸியை தென்னாபிரிக்காவில் இங்கிலாந்து பழிவாங்குமா? பாகிஸ்தான் நியூசிலாந்தைச் சுருட்டுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த சென்சூரியன் பரபரப்பில் இருந்த எம்மை(இலங்கை மக்களை) ஒரு செய்தி பரபரப்பாக்கியது லோஷனின் வலையில் அதுபற்றி எழுதியிருக்கின்றார்.

சரித்திரம் படைத்தது இங்கிலாந்து

இங்கிலாந்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆஷஸ் தொடரில் இரண்டாவது போட்டியில் கடைசிநாளான இன்று அவுஸ்திரேலியாவை 115 ஓட்டங்களால் தோற்கடித்தது இங்கிலாந்து.

லண்டன் லோட்ர்ஸ் மைதானத்தில் 1934 ஆம் ஆண்டிற்க்குப் பின்னர் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து பெற்ற முதல் வெற்றி இதுவாகும். 75 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத இந்த சாதனையை இன்று அன்றூ ஸ்ரோஸின் இங்கிலாந்து அணி முறியடித்து சரித்திரம் படைத்துள்ளது.



522 என்ற கடின இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆஸி அணி ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களை சொறப ஓட்டங்களில் இழந்திருந்தாலும் பின்னர் வந்த கிளார்க்கின் அபார சதத்தினாலும் பிராட் ஹடினுடான சிறந்த இணைப்பாட்டத்தினாலும் தங்கள் தோல்வியை சற்று நேரம் பிற்ப்போட்டது என்றே கூறலாம். இதற்கு மிச்சல் ஜோன்சனும் தன் பங்குக்கு கொஞ்சம் உதவினார்.

அன்றூ பிளின்டோவ் இரண்டாவது இனிங்சில் 92 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை எடுத்து தன் லோர்ட்ஸ் மைதான இறுதிப்போட்டியிலிருந்து இனிமையான நினைவுகளுடன் விடைபெற்றார். போட்டியின் நாயகன் விருதும் இவருக்கே வழங்கப்பட்டது.

ரிக்கி பொண்டிங் வழக்கம்போல் நடுவர்கள் செயல்ப்பாடுகள் சரியில்லை என்ற குற்றச்சாட்டைக் கூறினார். ஒரு போட்டியில் தோற்றால் நடுவர்களையும் எதிரணியையும் ஆடுகளத்தையும் குற்றம் சாட்டும் ஒரே அணி ஆஸி தான்.

2009ஆம் ஆண்டுக்கான ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து 1 க்கு 0 என்ற நிலையில் முன்னணி வகிக்கின்றது. இன்னும் 3 போட்டிகள் மீதமிருக்கின்ற நிலையில் அவுஸ்திரேலியா தன் திறமையைக்காட்டுமா? இல்லை இங்கிலாந்து இதே உத்வேகத்துடன் எதிர்வரும்போட்டிகளை வென்று கிண்ணத்தை சுவீகரிக்குமா?

*** இந்தியா ஆஸ்திரேலியா பலப்பரீட்சை ***

நடக்குமா நடக்காதா என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 4 டெஸ்ட் தொடர்கள் வரும் மாதம் 9ந்திகதி பெங்களூரில் ஆரம்பிக்க் இருக்கின்றது. கடந்த திங்கட்கிழமை ரிக்கி பொண்டிங் தலைமையிலான ஆஸி அணி இந்தியா வந்தடைந்தது. கடந்த முறை இந்தியா சென்ற அணியைவிட மிகவும் பலம் குன்றியதாகவே இம்முறை ஆஸி அணி காணப்படுகின்றது. இந்திய மண்ணில் டெஸ்ட் விளையாடிய அனுபவம் குறைந்த பல வீரர்கள் இருக்கிறார்கள். அனுபவம் குறைந்தாலும் எந்த நேரமும் விஸ்வரூபம் எடுக்ககூடிய அணிவீரகளான மைக்கல் கிளார்க், சைமன் கட்டிச், ஷேன் வாட்சன்(ஐபிஎலில் கலக்கியவர்) ஹசி, ஸ்டுவேர்ட் கிளார்க், பிரட் ஹாடின் என இளைஞர்கள் பாண்டிங்குக்கும் ஹைடனுக்கும் கைகொடுப்பார்கள். பந்துவீச்சில் பிரட் லீ, மிக்சல் ஜோன்சன் என்ற வேகங்களுடன் புதிதாக சில வீரர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். சைமண்ட்ஸ் தனிப்பட்ட பிரச்சனை காரணமாக(மீன் பிடிக்க சென்ற பிரச்சனை) அணியில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை இது ஆஸியைப் பொறுத்தவரை இழப்புதான். ரசிகளுக்கும் ஹர்பஜன் சைமண்ட்ஸ் தர்க்கம்களையும் தகராறுகளையும் பார்க்கமுடியாது .


இந்திய அணியைப் பொறுத்துவரை இறுதியாக விளையாடிய டெஸ்ட் தொடரில் இலங்கைஅணியிடம் வாங்கிக்கட்டினார்கள். முரளி, அஜந்தா மெண்டிஸ் சுழலில் கும்ளேயின் அணி பரிதாபமாகத் தோற்றது. ஆனால் இம்முறை சொந்தமண் என்ற பலமும் விக்கெட் காப்பாளர் டோணி மீண்டும் அணிக்கு வந்துள்ள பலமும் (இலங்கையில் தினேஷ் கார்த்திக்கும் பட்டேலும் சொதப்பினார்கள்)ஹர்பஜனின் சுழலும் கைகொடுக்கலாம்.

மும்மூர்த்திகளில் கங்குலிக்கு இடம் கொடுக்காதது இந்திய அணிக்கு சிலவேளைகளில் பாதகமாகமுடியலாம். இதேவேளை சச்சின், ராவிட் இந்த தொடரிலும் சோபிக்காவிட்டால் ஓய்வெடுப்பதைப் பற்றிச் சிந்திக்கலாம். இலங்கையில் லாராவின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சச்சின் சொந்த மண்ணிலாவது அந்த சாதனையை முறியடிப்பாரா? பொறுத்திருந்துபார்ப்போம்.

ஆஸி அணிக்கு இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சாப்பல் உதவி செய்ய இருக்கிறார். இவர் ஏற்கனவே இந்திய அணிக்கு பயிற்சி கொடுத்தவர் என்பதால் வீரர்களின் பலம்,பலவீனம் நன்கு தெரிந்திருக்கும். இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் கேர்ஸ்டனும் தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளார்.

அடுத்தமாதம் தொடக்க‌ம் ரசிகர்களுக்கு நல்ல விருந்து காத்திருக்கின்றது. வெல்லப்போவது இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? .


டவுசர் கிழிந்தது

கிழிந்தவ‌ர்


கிழித்தவர்

மும்முனைத் தாக்குதல்

ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு சிபி(கொமன்வெல்த் பாங்க்) தொடர் நாளை பிரிஸ்பேனில் இந்தியா ஆஸ்திரேலியா இடையே ஆரம்பமாகின்றது. உலகச் சாம்பியன் ஆஸ்திரேலியா, உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் விளையாடிய இலங்கை, 20க்கு20 சாம்பியன் இந்தியா என மூன்று பலம் வாய்ந்த அணிகள் மோதுவதால் கிரிக்கெட் ரசிகர்களின் ஆரவாரத்துக்கு குறைவில்லாமல் இருக்கும்.

1979 களில் ஆரம்பமான இத்தொடர் (காலத்துக்கு காலம் பெயர் மட்டும் மாறியிருக்கின்றது) முதற்தொடரில் அக்காலத்தில் பலம் வாய்ந்த மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து, மற்றும் ஆஸி அணிகள் மோதின. மேற்கிந்திய சாம்பியன் ஆனது. இதுவரை 6 தடவைகள் மேற்கிந்தியத் தீவுகள் சாம்பியன் ஆனது.

ஆஸி அணி இரண்டாவது தொடரில்(1980 1981) முதன் முறை சாம்பியனானது. இதுவரை 18 தடவை சாம்பியாகி இத்தொடரில் தங்களது ஆதிக்கத்தை என்றும் நிலைனாட்டிவருகின்றார்கள். 5 தடவை இத்தொடரில் விளையாடிய இந்தியாவும் 7 தடவை விளையாடிய இலங்கையும் ஒரு தடவை கூட சாம்பியன் ஆகவில்லை. 1996 97களில் விளையாடிய பாகிஸ்தான் அந்த வருடம் சாம்பியனாகிய ஒரே ஒரு ஆசிய அணியாகும். தவிர தென்ஆபிரிக்கா ஒரு தடவையும் கடந்தவருடம் நடந்தபோட்டியுடன் சேர்த்து இங்கிலாந்து இரண்டு தடவையும் சாம்பியனானது.

மூன்று அணிகளின் பலம் பலவீனத்தைப் பார்ப்போம்.

ஆஸ்திரேலியா

ஆஸியைப் பொறுத்தவரை பொண்டிங் தலைமையில் அனுபவவீரர்கள் பலருடன் சில இளம் வீரர்களையும் கொண்டிருக்கிறது. துடுப்பாட்டத்தில் ஹைடன், கிளார்க், பாண்டிங், அதிரடி கில்கிறிஸ்ட்(இவரது இறுதித் தொடர்),சைமண்ட்ஸ், மைக் ஹசே என அதிக பலத்துடன் காணப்படுகின்றது. பந்துவீச்சில் வேகங்கள் பிரட் லீ, ஜோன்சன்,பிராக்கனுடன் சுழலில் பிரட் ஹக்கும் பகுதி நேரத்தில் சைமண்ட்ஸ்,ஸ்ருவர்ட் கிளார்க், ஹோப்ஸ் என பலத்துடனே காணப்படுகின்றது.

பலம்:
1. சொந்த மண், பழகிய காலநிலை.
2. துடுப்பாட்டம், பந்துவீச்சு, சகலதுறை என சகலதிலும் திறமையான வீரர்கள்.
3. உல‌க‌ச் சாம்பிய‌ன்.

ப‌ல‌வீன‌ம் :

1. வீர‌ர்க‌ளின் வாய்ப்பேச்சுக‌ளும், மைதான‌த்தில் ஒழுங்கீனமாக‌ ந‌ட‌த்த‌ல்.

இந்தியா:


முதன் முறையாக டோணி தலைமையில் இளம் இரத்தங்கள் பங்குகொள்ளும் போட்டி. சச்சின், சேவாக், யுவராஜ், ஹர்பஜன் தவிர்ந்த அனைவரும் 100 போட்டிகளுக்கு குறைவாக விளையாடியவர்கள். துடுப்பாட்டத்தில் சேவாக், சச்சின், கம்பீர், யுவராஜ், உத்தப்பா, டோணி எனப் பலர். சகல துறையில் பதான். பந்துவீச்சில் வேகங்கள் பதான். ஸ்ரீ சாந், முனாப் பட்டேல், இசாந் சர்மா, பிரவீன் குமார் என நீளும் வரிசை. சுழலில் ஹர்பஜன், பியூஸ் சாவ்லா, மனோஜ் திவாரி ஆகியோருடன் பகுதி நேரமாக சேவாக், சச்சின், யுவராஜ் ரெய்னா போன்றோரும் மிரட்டத் தயாராக உள்ளனர்.

பலம்:
1. இளம் கன்று பயமறியாது இளம் வீரர்கள். இதுவே முக்கிய பலவீனமாகும்.
2. சச்சின், சச்சின், சச்சின்.

பலவீன‌ம்:
1. இள‌ம்வீர‌ர்க‌ள் என்பதால் போதிய‌ அனுப‌வ‌ம் இல்லாமை.
2. த‌டுமாறும் ம‌த்திய‌ வ‌ரிசைத் துடுப்பாட்ட‌ வீர‌ர்க‌ள்.


இலங்கை:


அடுத்து மஹேல ஜெயவர்த்தனவின் தலைமையிலான இலங்கை அணியை எடுத்துக்கொண்டால். இறுதியாக இங்கிலாந்துடனான ஒரு நாள்போட்டியில் சொந்த மண்ணில் தொடரை பறிகொடுத்த கவலையுடன் இருக்கும் அணி. ஜெயசூரியா, தரங்கா, சங்ககாரா, தில்ஷான், ஜெயவர்த்தன, ம‌ஹுரூப் என அதிரடியாக மிரட்டும் வீரர்கள். பந்துவீச்சில் வாஸ், மாலிங்கா போன்ற வேகங்களுடன் சுழல் மாயவித்தை மன்னன் முரளி.

பலம்:

1. போராட்டகுணம்.
2. பலமான மத்திய தரவரிசை.

பலவீனம்:
1. அண்மைக்காலமாக சமிந்த வாஸின் பந்துவீச்சு எடுபடாமை,
2. ஜெயவர்த்தனவின் துடுப்பாட்டம் சமீபகாலமாக சோபிக்காமை.

பொறுத்திருந்துபார்ப்போம் வெல்லப்போவது மீண்டும் ஆஸியா? அல்லது முதன் முறையாக இந்தியா அல்லது இலங்கையா?

வீழ்ந்தது இந்தியா

இன்று மெல்பேர்னில் நடைபெற்ற 20க்கு 20 போட்டியில் உலக சாம்பியன் இந்தியாவை மிக இலகுவாக வீழ்த்தியது ஆஸ்திரேலியா.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ள முத்தரப்பு ஒரு நாள் போட்டிக்கு கால்கோளாக இன்றைய 20க்கு 20 போட்டி அமைந்துள்ளது.

சீனியர்கள் (ஹர்பயன் சிங் தவிரகாயம் காரணமாக யுவராஜ் சிங் இன்றைய போட்டியில் விளையாடவில்லை)யாருமற்ற நிலையில் இளம் வீரர்களுடன் (பலர் 20க்கு 20 போட்டியில் விளையாடியவர்கள்) களம் புகுந்த இந்தியா நாணயற் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட விரும்பியது. தற்போது அவ்வளவு ஃபார்மில் இல்லாத சேவக்கும் கம்பீரும் களம் புகுந்தனர். முதலாவது ஓவரிலேயே தேவையற்ற ஓட்டம் ஒன்றை எடுப்பதற்க்காக ஓடி சேவாக் ரன் அவுட் முறையில் ஓட்டமெதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். என்ன காரணத்துக்காக இந்திய கிரிக்கெட் சபை இவரைத் திரும்ப திரும்ப ஆட்டத்தில் சேர்க்கிறார்களோ வெங்சகாருக்குத்தான் வெளிச்சம்.

அடுத்த பிராக்கனின் ஓவரில் கம்பீரும் 9 ஓட்டங்களுடன் ஹோப்ஸிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தினேஸ் கார்த்திக்கும் தன் பங்குக்கு ஒரு பவுண்டரி அடித்தார் பின்னர் மூன்றாவது ஓவரில் பிரட் லீயின் பந்தில் போல்ட்டாகி 8 ஓட்டங்களுடன் வெளியேறினார். நான்காவது ஓவரில் உத்தப்பா ஒரு ஓட்டம் போதும் என்ற மனநிலையில் பிராக்கனின் பந்துவீச்சில் டேவிட் ஹசியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 4 ஓவரில் இந்தியா எடுத்த மொத்த ஓட்ட எண்ணிக்கை 20.

பின்னர் ரோகித் சர்மாவும் அணியின் தலைவர் டோணியும் சிறிது நேரம் (3 ஓவர்கள்) விளையாடினார்கள். ஏழாவது ஓவரில் ரோகித் சர்மா 8 ஓட்டங்களுடன் ஹாப்சின் பந்துவீச்சில் போல்டாகி ஆட்டமிழந்தார். டோணியுடன் இணை சேர்ந்த பதான் கொஞ்சம் அடித்து ஆடத்தொடங்க அதுவரை டெஸ்ட் மேட் ஆடிய டோணி 9ஓட்டங்களுடன் டேவிட் ஹசியின் பந்துவீச்சில் லீயிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். டோணி இன்னமும் டெஸ்ட் மேட்ச் மனநிலையில் இருந்து திரும்பவில்லை போல் தெரிகின்றது. டோணி எதிர்கொண்ட பந்துகளின் எண்ணீக்கை 27 எடுத்த ஓட்டங்கள் வெறும் 9 தான்.

அதன் பின்னர் ஆடவந்த பிரவீன் குமார் என்ற அறிமுக வீரரும் 6 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க. சர்ச்சை நாயகன் ஹர்பஜன் களமிறங்கினார். ஒரு கட்டத்தில் ஹர்பஜனும் சைமன்ட்ஸ்சும் அருகருகில் சந்தித்தார்கள் ஆனால் எந்தவிதமான சர்ச்சைகளும் ஏற்படவில்லை. சைமண்ட்ஸ் தனது பொக்கட்டில் ரெக்கோடர் ஒன்று வைத்திருந்தார். ஹர்பயன் 1 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா அணியினருக்கு தன்னைக் கண்டாலே பயம் என அறிக்கை விட்ட ஸ்ரீ சாந் வந்தார் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து சென்றுவிட்டார். ஹர்பயன் ஸ்ரீ சாந் இருவரும் வோஜசின் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்கள்.

இறுதியாக‌ ப‌தான் மீண்டும் பிராக்க‌னின் ப‌ந்து வீச்சில் கில்கிறிஸ்டிட‌ம் பிடிகொடுத்து 26 ஓட்டங்களுடன் ஆட்ட‌மிழ‌ந்தார்.இந்திய‌ அணியில் ப‌தான் ம‌ட்டும் இரட்டை இல‌க்க‌ ஓட்ட‌ங்க‌ள் எடுத்தார். இந்திய‌ அணி மொத்த‌மாக‌ 74 ஓட்ட‌ங்க‌ளுக்கு 17.3 ஒவரில் ஆட்ட‌மிழந்த‌து. கென்யா அணி க‌ட‌ந்த‌ வ‌ருட‌ 20 க்கு 20 உல‌க‌ கிண்ண‌ப்போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிராக‌ எடுத்த‌ 73 ஓட்ட‌ங்க‌ள்தான் அதிகுறைந்த‌ மொத்த‌ ஓட்ட‌ எண்ணிக்கை. அத‌னை ஒரு ஓட்ட‌த்தால் தாண்டி இந்த‌ச் சாத‌னையை முறிய‌டிக்க‌ ப‌தானின் துடுப்பாட்ட‌ம் விட‌வில்லை. இல்லையென்றால் இச் சாத‌னை இந்தியாவிற்க்கு கிடைத்திருக்கும்

ஆரம்பவீரர்களான கில்கிறிஸ்டும் தலைவர் கிளார்க்கும் இந்த இலக்கை இலகுவில் எட்டிவிடுவார்கள் எனப் பலர் நினைத்தபோதும் புதுமுக வீரர் பிரவீன் குமாரின் பந்துவீச்சில் முதல் பந்தில் சிக்ஸ் அடித்த கில்லி அடுத்த பந்தில் கம்பீரிடம் பிடிகொடுத்து 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். கிளார்க் கொடுத்த இலகுவான ஒரு பிடியை ஹர்பஜனும் பதானும் தம்மிடையே எந்த பேச்சுவார்த்தையும் இன்றி ஒருவரும் ஒருவருடன் மோதித் தவறவிட்டுவிட்டார்கள். 11.2 ஓவரில் ஆஸ்திரேலியா வெற்றி இலக்கை அடைந்தது. ஆட்டநாயகன் விருது ஆட்டமிழக்காமல் 37 ஓட்டங்களையும் சேவாக்கை ரன் அவுட்டாக்கியதும் திறம் பட அணியை வழி நடத்திய கிளார்க்குக்கு கிடைத்து.

இந்தியாவின் தவறுகள்:
1. இதுவரை(இந்தப்போட்டி தவிர) 2 தடவை ஆஸியுடன் 20க்கு 20 போட்டியில் மோதி இரண்டுத்டவையும் வெற்றி பெற்றதனால் எப்படியும் வெற்றி நமக்குத்தான் என்ற தலைக்கனம்.
2. சச்சினை சும்மா வைத்திருந்தது.
3. வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டம்.
4. இளம் வீரர்களால் எதனையும்சாதிக்க முடியும் என்ற இறுமாப்பு. ஆஸியில் பல அனுபவ வீரர்கள் விளையாடினார்கள்.
5. டோணியின் சவடால் பேச்சு. இந்த ஆட்டத்திற்க்கு முன்னர் இந்தப் போட்டி ஒரு நாள் போட்டிகளுக்கு ஒரு பயிற்சிப்போட்டியாக அமையும் எனக் கூறியது.

பொறுத்திருந்துபார்ப்போம் ஒரு நாள் போட்டிகளில் டோணியின் இளமை அணி என்ன செய்யப்போகின்றது என்பதை.

இந்தியாவின் வீழ்ச்சியும் மேற்கிந்தியாவின் எழுச்சியும்.

இன்று நடைபெற்று முடிந்த இந்தியா எதிர் அவுஸ்திரேலியா மெல்பேர்ன் முதலாவது டெஸ்டில் இந்தியா மிக இலகுவாக தோற்றுவிட்டது. இந்தத் தோல்விக்கு முக்கியகாரணம் இந்தியாவின் முன்னணி சாதனை வீரர்கள் என்றால் மிகையாகாது.

343 என்ற சொற்ப ஓட்டங்களில்(அவுஸ்திரேலியாவைப் பொறுத்தவரை கடந்த காலங்களில் ஒப்பிடும்பொழுது முதலாவது இனிங்க்ஸ்சுக்கு இது குறைந்த ஓட்டம்) ஆஸியை வீழ்த்திய கும்ளேயின் அணி, ஜாபர், ராவிட், லக்ஸ்மன், டோணி, யுவராஜ் போன்றவர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தினால் வெறும் 196 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. அனுபவ சச்சினும், 100 போட்டியில் விளையாடும் கங்குலியும் மட்டும் 105(இருவரும் சச்சின் 62, கங்குலி 43) எடுத்தார்கள்.

147 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்த ஆஸி மீண்டும் தமது ஒற்றுமையான டீம் வேர்க்கினால் 351 ஓட்டங்களுக்கு ஆட்டத்தை இடை நிறுத்தி இந்தியாவிற்க்கு 499 என்ற இலக்கையும் இரண்டு நாட்களையும் கொடுத்தது.

இந்தியப் பெருஞ்சுவர் ராவிட், சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தானை இரட்டைச் சதத்தால் அசத்திய ஜாபர், சாதனை நாயகன் சச்சின், ஆக்ரோச வீரர் கங்குலி, பாகிஸ்தானை ஆட்டக்காணவைத்த யுவராஜ், அதிரடி டோணி, பொறுமையான லக்ஸ்மன் என இந்தியாவின் துடுப்பாட்ட வரிசை இரு நாட்களில் இந்த ஓட்டத்தை எடுத்து ஆஸி மண்ணில் ஒரு வெற்றியை நிலை நாட்டுவார்கள் என நினைத்தால் அனைத்திலும் ம‌ண்ணைப்போட்டுவிட்டார்கள்.

கங்குலியையும் லக்ஸ்மனையும் தவிர ஏனையவர்கள் அணியில் எப்படி ஆடினாலும் இடம் கிடைக்கும் என்ற மனப்பான்மையில் வந்தார்கள், திரும்பச் சென்றார்கள், இரண்டு இனிங்க்ஸிலும் ராவிட் பார்வையாளர்களை பயங்கரமாகச் சோதித்துவிட்டார். முதலாவது இனிங்ஸ்சில் 62 ஆவது பந்தில் தான் ராவிட் ஓட்ட எண்ணிக்கையை ஆரம்பித்தார் ஆனால் பரிதாபம் 66வது பந்தில் 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்துவிட்டார். இரண்டாவது இனிங்ஸிலும் அதே ஆமை வேகம் 114 பந்தில் 16 ஓட்டங்கள். சில காலமாக இந்தியப் பெருஞ்சுவர் ஆட்டம் கண்டுவிட்டது.

ராவிட் போனால் என்ன சச்சின் இருக்கிறார் என்றால் சச்சினுக்கு என்ன அவசர வேலையோ 15 ஓட்டம் போதும் என்பதுபோல் அவுட்டாகிவிட்டார். கொஞ்ச நேரம் கங்குலியும் லக்ஸ்மணும் 41 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக எடுத்து நெஞ்சில் பால் வார்த்தார்கள். இந்த இனிங்கிசில் இதுதான் கூடுதல் இணைப்பாட்டம்.

இந்தியத் தேர்வாளர்கள் செய்த தவறுகளில் ஒன்று ஆஸி மண்ணில் அனுபவம் குறைந்த யுவராஜை தேர்ந்தெடுத்தது, இவருக்கு பதிலாக சேவாக்கை எடுத்திருந்தால் சில வேளைகளில் சேவாக் சிறப்பாக ஆடியிருப்பார். இன்னொரு தவறு இர்பான் பதானைத் தெரிவுசெய்யாதது.

தோல்வியும் வெற்றியும் சகஜம் தான் ஆனால் ஆஸியின் 15ஆவது தொடர் வெற்றியை இந்திய அணியால் நிறுத்த முடியாமல் போய்விட்டது. இரண்டாவது டெஸ்டில் இந்தியா வெற்றி வெறும் என வழமைபோல் நினைப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்யமுடியாது.இந்திய அணிக்குத் தேவை கபில்தேவ் மாதிரியான ஒரு போராட்ட குணமுள்ள வீரர்.

அடுத்த இன்றைய ஆட்டம் டெஸ்ட் தரவரிசையில் 2ஆவதாக இருக்கும் தென்ஆபிரிக்காவுக்கும் வேஸ்ட்(Waste) இன்டீஸ் என செல்லமாக அழைக்கப்படும் மேற்கிந்திய தீவுகளுக்கும் இடையிலான ஆட்டம்.

2000ஆவது ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக எக்பஸ்டனின் பெற்ற வெற்றியின் பின்னர் 7 வருடங்களுக்கு பிறகு அன்னிய மண்ணில்( வங்கதேசம், சிம்பாவேயுடன் பெற்ற வெற்றிகள் நீங்கலாக) பெற்றதும் அதே நேரம் தென்ஆபிரிக்கா மண்ணில் முதல் தடவை பெற்றதுமான வெற்றியானது ஒரு சாதனைதான்.

அணித்தலைவர் கிரிஸ் கேயில் , சந்தர்போல் தவிர எனையவர்கள் பலர் அனுபவமற்ற வீரர்கள், இவர்கள் அனைவரது மொத்த ஓட்டங்களையும் கணக்கிட்டாலும் சச்சின் டெண்டுல்கரின் தனி நபர் மொத்த ஓட்டத்துக்கு சமமாகாது. ஆனாலும் இளம் கன்று பயமறியாது என்பது போல் பலம் வாய்ந்த தென் ஆபிரிக்காவை சொந்த மண்ணில் வீழ்த்தியது வெஸ்ட் இன்டீஸின் எழுச்சி எனக் கொள்ளலாம்.

இதுவரை 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வெஸ்ட் இன்டீஸ் வீரர் பிராவோவுக்கு இதுதான் முதல் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒரு டெஸ்ட் வெற்றியை வைத்துக்கொண்டு வெஸ்ட் இன்டீஸ் பழைய நிலைக்குத் திரும்பிவிட்டதெனக் கொள்ளமுடியாது.

இந்திய அணியை பொறுத்தவரை இந்த வருட முடிவு கசப்பாகிவிட்டது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு உற்சாகமான வருடம். அதே நேரம் இரு அணிகளுக்கும் அடுத்த வருடம் எப்படியிருக்கும் என சில நாட்களில் தெரிந்துவிடும். அடுத்த டெஸ்டில் ஆஸியின் 15 டெஸ்ட் தொடர் வெற்றிகளை இந்திய அணியால் நிறுத்த முடியுமா? காலம் பதில் சொல்லும்.