ஐ மிஸ் யூடா!

வணக்கம் என் பெயர் கிரீஷ். என்னை உங்கள் பலருக்குத் தெரிந்திருக்கும். பல்கலைக் கழகம் ஒன்றில் பொறியியல் படிக்கும் ஒரு சாமனியன். பின்னேரங்களில் வெள்ளவத்தைச் சந்தியிலும், இராமகிருஷ்ண வீதி கடற்கரையிலும் நண்பர்களுடன் அரட்டை அடிப்பவன். இரவில் வலைகளில் மேய்வதும் ட்விட்டரில் ட்விட்டுவதும் பேஸ்புக்கில் உலாவுவதும் எனக்கு பிடித்தவை.

என் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் போல் இருக்கின்றது அதுதான் என் சின்ன பிளாஷ்பேக்கை உங்களுக்குச் சொல்லபோகின்றேன். இந்தக் கதை நடந்து சில மாதங்களாகிவிட்டன ஆனாலும் இப்போதுதான் சொல்ல நேரம் வந்தது இல்லை இல்லை இப்போதுதான் என் பழைய பரணில் இருந்து தட்டி எடுத்தேன். முன்னுரை போதும் கதைக்கு வருகின்றேன்.

"ஹாய் ஆர் யூ இன் கொழும்பு?"

பேஸ்புக்கில் என் தேவதையிடம் இருந்து எனக்கு மெசேஜ் நடுநிசியில் வந்திருந்தது ஏனோ அந்த நேரம் என்னால் பதிலளிக்கமுடியாமல் "யா" என அடுத்த நாள் காலையில் பதிலளித்தேன்.

காலையில் அம்மாவின் சுப்ரபாதத்திற்க்கு முன்னம் என் போன் "நான் தேடும் செவ்வந்திப்பூ" ரிங்ரோனியது. புது நம்பர் இந்த நேரத்தில் யாராக இருக்கும் என நினைத்தபடி "ஹலோ" என்றால். "அடேய் இராட்சதன் எப்படி இருக்கின்றாய்" என அதே ஸ்வீட் குரல்.

"ஏய் நீ எப்படி லோக்கல் நம்பரில்" ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியுடன் நான்.

"ஹாஹா" என தன் ரேட்மார்க் சிரிப்புடன் தான் உறவினர் ஒருவரின் திருமணத்திற்க்கு கொழும்பு வந்திருப்பதாகவும் ஒரு சில நாட்கள் நாட்டில் நிற்பேன் எனவும் கூறினாள். பின்னேரம் நேரமிருந்தால் தான் தங்கியிருக்கும் உறவினர் வீட்டில் என்னைச் சந்திக்கச் சொல்லி விலாசத்தையும் சொல்லி பாய் சொல்லிவிட்டாள்.

கிட்டத்தட்ட 5 வருடங்களின் பின்னர் அவளைச் சந்திக்கும் ஆவலில் நான் நேரத்திற்க்கே பஸ் ஏறிவிட்டேன். பஸ்சினுள் அவளைச் சந்தித்த நாட்களை மீண்டும் நினைத்தேன்.



அவள் பெயர் ஜெசி. எங்கள் பாடசாலை மாணவர் ஒன்றுகூடலில் பக்கத்து பாடசாலையிலிருந்து வந்த தேவதை. அவளுக்கு அருகில் அமர்வதற்க்கு எங்கள் மாணவர்களிடையே பலத்த போட்டி. அதிர்ஷ்டம் எனக்கு ஏனோ அன்றைக்கு அடித்துவிட்டது. கோவில் திருவிழா காலத்தில் ஒன்றுகூடல் நடந்தபடியால் நான் விரதம் அதனால் மாமிசம் சாப்பிடாமல் சைவ உணவுப் பக்கம் சென்றுவிட்டேன். அங்கே அவளும் சைவ உணவு. அன்றைக்கு அவள் என்னருகில் சாப்பிடும்போது இளையராஜாவின் வயலின் ஆயிரம் தாமரை மொட்டுகளை பின்னணி இசைத்தது.

"ஹாய் நான் ஜெசி நீங்கள்"?

"நான் கிரிஷ் சுருக்கமாக கிரிதரன்"

அப்புறம் நான் எங்கே சாப்பிட்டது அவளின் பேச்சும் சிரிப்பும் என்னைச் சாப்பிடவிடவில்லை.

இப்படி ஆரம்பமான எங்கள் சந்திப்பு உறவினர் ஒருவரின் திருமண வைபத்தில் கொஞ்சம் கொஞ்சம் என்னுள் காதலாக மலர்ந்தது. ஏஎல் நேரம் காதல் கத்தரிக்காய் என விழுந்தால் படிப்புக்கு ஆபத்து என நினைத்து நான் என் காதலைச் சொல்லவில்லை.

என் படிப்பு பாழாகிவிடக்கூடாது என்ற சுயநலத்தில் நான் அன்றைக்கு என் காதலைச் சொல்லவில்லை. சில நாட்களின் அவளும் உயர்கல்விக்காக கனடாவிற்க்குச் சென்றுவிட்டாள் இடையில் சிலகாலம் ஈமெயில்கள் மூலம் எங்கள் தொடர்பு இருந்தாலும் பின்னர் காலமும் நேரமும் அவளை தற்காலிகமாக மறக்கச் செய்துவிட்டன. சில மாதங்களில் அவளின் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்தபோது பேஸ்புக்கில் அவளைக் கண்டுபிடித்து பிரண்டாக்கினாலும் காதல் கத்தரிக்காயைப் பற்றிக் கதைக்க என் ஈகோ விடவில்லை.

இம்முறை எப்படியும் அவளிடம் என் காதலைச் சொல்லவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தேன் இறங்கவேண்டிய இடம் பழைய நினைவுகளை உதறவிட்டு அவளின் உறவினர் வீட்டுக்குச் சென்றேன்.

அழைப்பு மணியை அடிக்க திறந்தது என் தேவதை தான். முன்னர் பார்த்ததை விட அழகாக கொஞ்சம் குண்டாக அதே சிரிப்புடன் "வாங்கோ" என்ற படி கதவைத் திறந்தவள் உள்ளே அமரும் படி சொல்லிவிட்டு தன்னுடைய மடிக் கணணியில் ஏதோ பிரச்சனை சரி செய்யச் சொன்னாள்.

கணணியைச் சரி செய்தபடி சுற்றும் முற்றும் பார்த்தால் வீட்டில் ஏனையவர்களைக் காணவில்லை. எங்கே எனக்கேட்டாள் அனைவரும் சொப்பிங் சென்றுவிட்டார்கள் எனக் கூறினாள்,

டேய் கிரிஷ் இதுதான்டா நல்ல தருணம் உன் காதலைச் சொல்லிவிடு என என் மனம் சொன்னாலும் மூளையோ இப்போ வேண்டாம் எனத் தடுத்து வெற்றியும் அடைந்தது.

தனிமை முன்னாள் இருப்பதோ என் தேவதை ஆனாலும் என் காதலை கட்டுப்படுத்திக்கொண்டு நான் அவளைப் பார்க்க அவளோ நிலம் நோக்கி நான் நோக்காக் கால் என்னை நோக்கி நகுந்தாள்.

"நாளைக்கு நீங்கள் ப்ரியோ?"

அடிப்பாவி மவளே நீ கேட்டால் நான் எப்பவும் ப்ரீ என நினைத்துக்கொண்டே " இல்லை நாளைக்கு எனக்கு லெக்சர்ஸ் இருக்கு ஆனால் கட் பண்ணலாம்"

"அப்போ தன்னை எம்சிக்கும் ஹவுஸ் ஓவ் பாஷனுக்கும் கூட்டிக்கொண்டூ போவியளோ"

"சரி"

அடுத்தநாள் ஷொப்பிங் என அவளுடன் நான் அலைந்ததில் நாள் போனதே தெரியவில்லை. சில நேரம் தெரிந்தோ தெரியாமலோ என் கையைப் பிடித்தவள் எனக்கு பிடித்த ஐஸ்கிறீம் ஃபிளேவர் தான் தனக்கு பிடிக்கும் என என் ஐஸ்கிறீமை வாங்கிச் சுவைத்தாள்.

"படிப்பு முடிய என்ன பிளான் ஜெசி"

"வேறை என்ன நல்ல வேலை எடுக்கவேண்டும்"

"அதற்க்குப் பிறகு என்ன?" விடக்கண்டனாக நான்.

"ம்ம்ம் என்ன ஒன்றுமில்லையே" மெல்லிய நக்கல் சிரிப்புடன் "அக்கா அண்ணா சொல்கின்றவருக்கு கழுத்தை நீட்டவேண்டும்"

"ஏன் உனக்கென ஒரு விருப்பமும் இல்லையோ"

"ஹாஹா நான் நல்ல பிள்ளை எனக்கு எந்த விருப்பமும் இல்லை, நீங்கள் என்ன கேட்க வாறியள் என்பது புரிகிறது ஆனால் இப்ப என்னால் ஒன்றும் சொல்லமுடியாது, சரி சரி நேரம் போய்விட்டது இனிப்போவமோ" என நழுவிட்டாள்.

இதன் பின்னர் அவள் மீண்டும் கனடாவிற்க்கு திரும்பச் செல்லும் வரை அவளுடன் சுற்றித் திரிந்தாலும் நான் வாயே திறக்கவில்லை.

கனடா சென்றபின்னர் அவளிடம் இருந்து எனக்கு வந்த எஸ் எம் எஸ்
" ஐ மிஸ் யூ டா".


பின்குறிப்பு : யாவும் கற்பனை பெயர்களும் இடமும் எவரையும் சுட்டுவன அல்ல.

பீட்ஷா, பேர்கர், சிப்ஸ்

ஐக்கிய இராச்சியத் தேர்தல்.

தேர்தல் மிகவும் அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்தாலும் பலரும் எதிர்பார்த்தபடி தொங்கு பாரளமன்றம் தான் அமைந்துள்ளது. தொழிற்கட்சி தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த பெரிதாக அக்கறை கொள்ளவில்லை என குற்றம் சாட்டிய லிபரல் கட்சி பழமைவாதிகளுடன் சேர்ந்து 13 வருட தொழிற்கட்சியின் ஆட்சிக்கு முடிவுகட்டிவிட்டார்கள்.

பழமைவாதக் கட்சிக்கும் லிபரலுக்கும் சிலவிடயங்களில் ஒத்துப்போனாலும் பாரளமன்றத்தின் ஆயுள் இருவரும் நடத்தும் குடித்தனத்தில் தான் இருக்கின்றது. பக்கிங்காம் அரண்மனையில் மகாராணியின் அனுமதி பெற்று டேவிட் கமரூன் பிரித்தானியாவின் இளைய வயது பிரதமராக தன்னுடைய மனைவியுடன் செவ்வாய் இரவு இலக்கம் 10 டவுணிங் வீதியிலுள்ள பிரதமர் இல்லத்தில் குடியமர்ந்துவிட்டார்.

இவர்களின் ஆட்சியில் பிரித்தானிய மற்றும் ஐரோப்பிய குடியுரிமையுள்ளவர்களுக்கே தொழில் மற்றும் கல்வி வாய்ப்ப்புகளில் முதலுரிமை மற்றும் பணக்காரர்களுக்கு தான் அதிக சலுகை கிடைக்கும் என எதிர்பார்க்கபடுகின்றது. இவர்களின் முதலாவது பட்ஜெட் வந்தபின்னர் தான் யாருக்கு என்ன கிடைக்கப்போகின்றது யாருக்கு ஆப்பு அடிக்கப்போகின்றார்கள் என்பது தெரியவரும்.


ஜெசியும் சாருவும்

சில நாட்களுக்கு முன்னர் தான் விண்ணைத் தாண்டி வருவாயாவும் பையாவும் பார்க்க கிடைத்தது. இங்கே விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்போகின்றார்கள் என விளம்பரம் செய்கின்றார்கள். விதாவ நீண்ட நாட்களின் பின்னர் அழகான ஒரு காதல் கதை. சிம்பு முதல்முறையாக நடித்திருக்கின்றார். எனக்கு பிடிக்காத நடிகை திரிஷா அழகாகவும் அந்தப் பாத்திரத்திற்க்கு பொருத்தமாகவும் இருக்கின்றார். திரிஷாவை மறந்து ஜெசியாகவே மனதில் பதிந்துவிட்டார். காதல் வயப்படுகின்ற அல்லது வயப்படப்போகின்ற இளைஞர்களின் மனதில் பெரும்பாலும் ஜெசி போன்ற தேவதைகள் தான் இருக்கின்றார்கள்.

பையா லிங்குசாமியின் பழையபடங்களின் ஒரு கலவை யுவன் இல்லையென்றால் படம் பப்படமாகியிருக்கும். தமன்னா சாருவுடன் ஒட்டவில்லையென்றே சொல்லவேண்டும்.

இரண்டு படங்களிலும் காதலன்கள் தங்கள் காதலியைக் கண்டதும் காதல் வயப்படுகின்றார்கள். ஜெசி ஒரு புறத்தில் கார்த்திக்கை காதலித்தாலும் குடும்பத்திற்க்காக தன் காதலைத் துறக்கின்றாள் அதே நேரம் சாருவுக்கோ சிவாமேல் கடைசியில் தான் காதல் வருகின்றது.

ஜெசி தேவதை என்றால் சாரு சாதாரண வீதியில் போகின்ற பெண் தான். ஜெசியை கனவிலும் காணலாம் கால நேரம் கிடைத்தால் கையும் பிடிக்கலாம் ஆனால் சாரு வீதியில் பார்ப்பதோடு சரி..

கிரிக்கெட்

ஐசிசியின் இருபதுக்கு இருபது உலகக்கோப்பை இறுதிக்கட்டத்திற்க்கு வந்துவிட்டது. இன்றைய முதல் அரையிறுதியில் கிரிக்கெட் விமர்சகர்கள் பலரால் கேலி செய்யப்பட்ட அல்லது குறைத்துமதிப்பிடப்பட்ட இங்கிலாந்து அணி இலங்கையை மண் கவ்வச் செய்துவிட்டது. இந்தியாவுடனான போட்டியில் இலங்கை வீரர்கள் ஆக்கோரசமாக போராடி வென்றதற்கான பலனை இன்று அறுவடை செய்யமுடியவில்லை. முக்கியமான இந்தப்போட்டியிலும் அண்மைக்க்காலமாக சோபிக்காத பாரளமன்ற உறுப்பினர் கெளரவ சனத் ஜெயசூரியாவை ஏன் இணைத்தார்கள் என்பது மிகவும் ஆச்சரியமான விடயம். பெரும்பாலும் இலங்கை அணித் தெரிவில் அரசியல் தலையீடுகள் இருப்பதில்லை ஆனால் ஜெயசூரியாவை மீண்டும் மீண்டும் சேர்க்கும் போது ஏதோ ஒரு இரகசியம் இருப்பதுபோல் தெரிகின்றது. சாதனை வீரன் சனத் தற்போது பலராலும் காரசாரமாக சிலாகிக்கபடுவது கவலைக்குரியது. எப்படியிருந்த சனத் இப்படியாகிவிட்டார்.

நாளைய போட்டியில் பலமான அவுஸ்திரேலியாவை குருட்டு அதிர்ஷ்டத்தில் அல்லது தென்னாபிரிக்காவும் பலவீனத்தால் தெரிவான பாகிஸ்தானை எதிர்த்து ஆடுகின்றது. இதில் வெற்றி பெறும் அணிதான் இங்கிலாந்தின் இறுதிப்போட்டி ராசியினால் கிண்ணத்தை வெல்லும் சாத்தியம். நடப்புச் சாம்பியன் பாகிஸ்தான் கோப்பையைத் தக்கவைக்குமா? இல்லை ஆஸியிடமோ இங்கிலாந்திடமோ பறிகொடுக்குமா? ஞாயிற்றுக்கிழமை விடைகிடைக்கும்.

WWW

மேற்கத்திய நாடுகளில் மூன்று Wகளை நம்பக்கூடாது என்பார்கள். அதாவது Weather, Work and Women (சிலர் மூன்றாவது W, Women இல்லை Wife என்கின்றார்கள் ) . முதல் இரண்டு Wகளும் என்னை ரொம்பச் சோதித்துவிட்டன. மூன்று கிழமைக்கு முன்னர் வெப்பநிலை 20டிகிரிக்குச் சென்று சமர் வந்துவிட்டதுபோல் இருந்தது. ஆனால் கடந்த வாரம் மீண்டும் குளிர்காலம் வந்துவிட்டதுபோல் சரியான குளிர் மதியம் நல்ல வெயில் என சாதாரண உடுப்புடன் சென்று இரவு வீடு திரும்பும்போது ரொம்ப நொந்துபோய்விட்டேன். மீண்டும் இன்றுமுதல் ஓரளவு நல்ல வெப்பநிலை ஆனாலும் நான் ஜாக்கெட்டுடன் தான் திரிகின்றேன் ஹிஹிஹி.

வேலையப் பொறுத்தவரை இவர்கள் இன்னும் பொருளாதார பிரச்சனைகளில் இருந்து விடுபடவில்லையென்பதால் நல்ல வேலை எடுப்பது என்பது குதிரைக்கொம்பாக இருக்கின்றது. அப்படிக் கிடைத்தாலும் சில நாட்கள் தான் வேலை செய்யமுடியும். எந்தவொரு வேலையும் நிரந்தரமில்லை என்பது மேற்கத்தைய நாடுகளில் எழுதப்படாத சட்டமோ தெரியவில்லை. அடுத்த W பற்றி அனுபவமில்லை என்பதால் ஒன்றும் சொல்லமுடியாது.

கானா பிரபா

கானா நான் வியந்துபார்க்கின்ற நண்பன். என்னை வலை எழுத வைத்தவர்களில் முதன்மையானவர். ஆரம்பகாலங்களில் வலைப்பதிவு செய்யப் பல உதவிகள் செய்தவர். இன்றைக்கு ட்விட்டர் ஜீடோல்க் பேஸ்புக் என எங்கள் நட்பு தொடர்ந்தாலும் ஒரு மாம்பழமே எங்கள் நட்பை ஆரம்பித்தது என்றால் மிகையில்லை. இவரை ஒரு சினிமாப் பாடல்களின் களஞ்சியம் என்றே சொல்லலாம். உலாத்தல் என்றாலே பொடியனுக்கு கொண்டாட்டம். என்னுடைய வயதை ஒத்தவர் என்றாலும் நான் செல்லமாக அண்ணை என அழைத்தால் ஓம் என்பார். காலத்துக்கு காலம் இவருக்கு வயது ஏறுதோ இல்லையோ அந்தக் காலத்தில் கலக்கும் நடிகைகளின் தீவிர ரசிகன் இவர் ஸ்ரீதேவியில் தொடங்கி இன்றைக்கு தமன்னாவரை இவரின் கனவுக் கன்னிகள்.

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் அன்பு அண்ணன் இனிய நண்பன் கானாப் பிரபாவிற்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். இணுவில் முருகன் எல்லா இன்பங்களையும் கொடுக்க பிரார்த்திக்கின்றேன்.


ஐசிசியில் ஐஸ்வர்யா ராய்


பார்படோசின் அழகிய கடற்கரையில் தலைக்கு முக்காடு இட்டபடி சிலர் இருந்து ஆலோசிக்கின்றார்கள். கிட்டத்தில் போய்ப் பார்த்தால் நம்ம சூப்பர்சிங்கம் டோணி தலைமையில் இந்திய அணியினர் தங்கள் தோல்விக்காண காரணங்கள் பற்றி கலந்தாலோசிக்கின்றாகள்.

தினேஷ் கார்த்திக்: (முரளி விஜயைப் பார்த்து) எல்லாம் இவனால் தான் வந்தது டீமின் முதற்பெயரே விஜய் என்றிருந்தால் எப்படி வெற்றி கிடைக்கும், இவனுக்குப் பதிலாக சேவாக் இருந்தாலும் ஏதோ இரண்டு வாணவேடிக்கை காட்டியிருப்பார்.

டோணி : டேய் டேய் நமக்குள்ளை சண்டைவேண்டாம், முரளி ஐபிஎல்லில் நல்லாத் தானே அடித்தவர் ஏதோ அவரின்டை கஸ்டகாலம் சமியும்,ரோச்சும் நான்ஸும் இப்படி பந்துபோட்டால் எப்படி அடிப்பான்.

ஹர்பஜன் : முதலில் எல்லாவற்றையும் மாற்றவேண்டும். ஐசிசிக்கும் மோடியையே தலைவராக்கவேண்டும்.

விஜய் : அடேய் மோடியையே தூக்கிவிட்டார்கள்,

யுவராஜ் : பிடிக்கல்லை எனக்கு பிடிக்கல்லை

கம்பீர் : ஆமாம் சில நாட்களாக உனக்கு பேட் பிடிக்கவே தெரியவில்லை,

யுவராஜ் : சியர்ஸ் லீடராக ஆடுபவர்களைப் பிடிக்கல்லை. எல்லாம் சப்பை பிகர்கள்.

சவ்லா : ம்ம் நல்ல பிகர்கள் ஆடினாலும் நீ ஆடிவிடுவாய், உன் ஆட்டத்தைதான் ஐபிஎல்லில் பார்த்தேனே.

டோணீ : ஹேய் ஹைய்ஸ் எங்கடை அணிக்கு இனி ப்ரீத்தியோ அல்லது ஷில்பாவோ தான் ஓனர் என மாற்றினால் கோப்பை எமக்குத் தான்.

ஜடேஜா: அண்ணே எப்படி அண்ணே உங்களால் மட்டும் இப்படி யோசிக்கமுடிகின்றது. சூப்பர் ஐடியா.

ரோகித்: அடே அகர்கார் ராசிக்காரா, இது ஒன்றும் ஐபிஎல்ல் அல்ல நம்ம நாட்டு டீம். இதற்க்கு ஓனர் மன்மோகன் சிங் தான்.

ஷாகீர் : முதலில் இவன் ஜடேஜாவை நிப்பாட்டினால் எல்லாம் சரிவரும் பேட்டிங்கும் சொதப்பல் போலிங்கும் சொதப்பல்.

ரெய்னா : பிராண்ட் அம்பாசிடர் போல் எங்கள் டீம் அம்பாசிடராக ஐஸ்வர்யா ராயையோ இல்லை லஸ்மிராயையோ சேர்த்தால் எல்லாம் சரிவரும்.

லஸ்மிராய் என்ற பெயரைக் கேட்டு ஜேர்க்கான டோணி ரெய்னாவை முறைக்கின்றார்.

ரெய்னா : சாரி பாஸ் ஒரு ப்ளொவிலை சொல்லிட்டான்.

ஹர்பஜன் : அட ஒருதரும் கிடைக்கவில்லை என்றால் நம்ம நீதா அம்பானியை அம்பாசிடராக்கினாலும் சூப்பர்.

யுவராஜ் : பஜ்ஜி ஏன் இந்தக் கொலைவெறி.

விஜய் : த்ரிஷாவை நம்ம அம்பாசிடராக்கினால் எப்படியிருக்கும்?

தினேஷ் : அடப்பாவி மக்கா அவங்க பார்த்த சென்னை மேட்ச் எல்லாம் நாம் தோத்ததை மறந்துவிட்டியா?

விஜய் : அப்போ நமீதாவைப் சேர்த்தால் நல்லாயிருக்கும் ஒரு அவசரத்துக்கு சைட் ஸ்கிறினாகவும் பாவிக்கலாம்.

யூசுப் : அடப்போடா நமீதா மச்சான் மச்சான் என்பார் அந்தக் கனவிலையே பந்தைக் கோட்டைவிட்டுவிடவேண்டியதுதான்.

டோணி : ஷாகீர் நீ என்ன சொல்கின்றாய் உன்ரை ட்விட்டர் பிரண்ட்ஸ் என்ன சொல்கின்றார்கள்.?

யுவராஜ் : இவன் எங்கே கிரிக்கெட் பற்றி ட்விட்டுகின்றான் நீச்சலடித்த கதை, படம் பார்த்த கதைதான் ட்விட்டுகின்றான்.

ஷாகீர் : ஆமாம் அங்கே மட்டும் என்ன வாழ்கிதாம் தம்பி நீயும், டிஸ்கோதே போன கதையும் பிகர் கதையும் தானே எழுதுகின்றாய்.

தம்பி என்றா வார்த்தையைக் கேட்டு காண்டான யுவி மீட்டிங்கை விட்டு எழும்பிப்போக ஹர்பயன் அவரைத் தடுக்கின்றார்.

டோணி : சும்மா விசர்க் கதையை விட்டுவிட்டு தோல்விக்கான காரணம் என்ன என ஆரோயுங்கோ. இல்லையென்றால் அவன் அவனே நெட்டில் தாளித்து தள்ளிவிடுவார்கள்.

கார்த்தீக் : ஓம் சுகுமார் வலைமனையிலும் பவன் எரியாத சுவடியிலும் போட்டுத் தாக்கிப்போடுவார்கள்,

நெஹ்ரா : முதலில் இவன் ஜடேஜாவைத் தூக்கிவிட்டு என் நண்பன் அகர்காரை டீமில் சேர்த்தால் கோப்பை நமக்குத் தான்.

யூசுப் : அண்ணாச்சி கங்குலி இதைக் கேட்டால் பிளைட் பிடித்து வந்து உங்களை உதைப்பார்.

ஹர்பஜன் : நல்ல ஐடியா நம்ம குறூப்புக்கு ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், கனடா போன்ற அணிகளைச் சேர்த்தால் வெற்றி எமக்குத் தான்.

டோணி : சரி சரி எப்படியோ பாகிஸ்தானும் இம்முறை அரையிறுதிக்கு போகல்லை அந்த சந்தோஷத்தில் நம்ம வீடுகள் தப்பிவிட்டன.

ஷாகீர் : முதல்முறை நாம் அடுத்த முறை பாக்கி இந்த முறை ஸ்ரீலங்கா கோப்பையை எடுக்குமென எதிர்பார்த்தால் அவங்களும் தோத்துப்போனார்கள்.

ரெய்னா : அடுத்த மேட்ச் எமக்கும் அவங்களுக்கும் தான். கவனம் எல்லாவற்றையும் சேர்த்து எமக்குத் தந்துவிடுவார்கள்.

ஹர்பஜன் : ச்சீச்சீ சனத் இருக்கும் வரை பயப்படத் தேவையில்லை.

நெஹ்ரா : பஜ்ஜி அவர் இப்போ எம்பி கவனமாக கதை.

டோணி : சரி சரி விட்டால் நீங்கள் இன்னும் கதைப்பியள் நாளைக்கு ஸ்ரீலங்காவை எப்படி சாமளிப்பது என விட்டத்தைப் பார்த்தபடி யோசிப்போம்.

கடற்கரை மண்ணைத் தட்டியபடி எழும்பிய இந்திய அணியினர் அடுத்த பக்கத்தில் பாகிஸ்தானும் ஸ்ரீ லங்காவும் இதே போல் ஆராய்வதைப் பார்த்து எடுத்தார்கள் ஓட்டம்.

மும்முனைப்போட்டி - இங்கிலாந்து தேர்தல்

இன்று இங்கிலாந்து பாராளமன்றத் தேர்தல் நடைபெற இருக்கின்றது. கடந்த சில நாட்களாக தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் நடைபெற்ற சூடான விவாதங்கள் முடிவடைந்துவிட்டது. ஆளும் லேபர் கட்சி இம்முறை வெல்வதற்கான அறிகுறிகள் இல்லையென கடைசி நேர கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.



ஆளும் லேபர் கட்சியின் பிரதம மந்திரி வேட்பாளரும் தற்போதைய பிரதம மந்திரியுமான கோர்டர் பிறவுணுக்கும் கொன்சவேர்ட்டி பார்ட்டி எனப்படும் பழமைவாதக் கட்சியின் டேவிட் கமரூனுக்கும் லிபரல் கட்சியின் நிக் கிளெக்கும் நடைபெறும் மும்முனைப்போட்டியில் கோர்டர் பிறவுண் பிந்தங்கி நின்கின்றார்.



ஆப்கான், ஈராக் பிரச்சனைகளும் பொருளாதார சிக்கல்களும் ஆளும் கட்சியை ஆட்டிப்படைத்தாலும் பழமைவாதக் கட்சியின் வெளிநாட்டுக் கொள்கைகள் முரண்பாடாக இருக்கின்றது. அதே நேரம் லிபரல் கட்சியினர் வெளிநாடுகளில் இருந்து இங்கிலாந்தில் புகழிடம் கோருகின்றவர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்போவதாகவும் அறிவித்திருக்கின்றார்கள்.



கோர்டன் பிறவுண் தங்களால் மட்டும் தான் நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டுசெல்லமுடியும் என்கிறார். அத்துடன் தங்கள் கட்சி தோல்வி அடைந்தால் அது தன்னுடைய தனிப்பட்ட தோல்வியே ஓழிய கட்சியின் தோல்வி அல்ல என ஒரு அறிக்கையும் விட்டிருக்கின்றார்.

மாற்றம் தேவை என பழமைவாதக் கட்சியினர் பிரச்சாரம் செய்கின்றார்கள். 1966 ஆம் ஆண்டு பிறந்த டேவிட் கமரூனுக்கும் அவரைவிட ஒரு வயது குறைந்த நிக் கிளெக்குக்கும் தான் தற்போது போட்டி அதிகமாக உள்ளது. தொலைக்காட்சிப் பேட்டிகளில் கோர்டன் பிறவுண் தோல்விகளைத் தழுவினாலும் ஆசிய மக்களின் வாக்குகளையும் இறுதி நேரத்தில் தீர்மானிக்கப்படும் வாக்குகளையும் பெரிதாக நம்பி இருக்கின்றார். கோர்டன் பிறவுணை மீண்டும் தெரிவு செய்தால் இங்கிலாந்து 1980களில் இருந்ததுபோல் இருக்கும் என டேவிட் கமரூன் கூறிவருகின்றார். அத்துடன் அவர் எம்ஜீஆர் பாணியில் சுப்பர்மார்க்கட்டுகளுக்கும் பாடசாலைகளுக்கும் விஜயம் செய்து மக்களுடன் மக்களாக இணைந்து தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார்.

நிறவாத கருத்துகளை உடைய கட்சி எனப் பலரால் குற்றம் சாட்டப்படுகின்ற பழமைவாதக் கட்சியில் சில ஈழத்தமிழர்களிம் இந்தியர்களும் போட்டி இடுகின்றார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

பெரும்பாலும் இங்கிலாந்துப் பத்திரிகைகள் அனைத்தும் ஆளும் கட்சிக்கு எதிராகவே இருக்கின்றன. நேற்றைய மாலை லண்டன் ஈவினிங் ஸ்டாண்டர்ட்டின் ஆசிரியர் தலையங்கம் டேவிட் கமரூன் அடுத்த பிரதமராக வேண்டும் என எழுதியிருந்ததுடன், இறுதிக் கருத்துக் கணிப்பில் பழமைவாதக் கட்சி 36%, லேபர் 31% லிபரல் 27% என தெரிவித்திருந்தார்கள்.

அதே நேரம் எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெறாது எனவும் தொங்குபாராளூமன்றம் ஏற்படலாம் எனவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள். எது எப்படியோ ஜோர்ஷ் புஷ் ஆப்கானில் இட்ட தீ இங்கிலாந்தின் ஆட்சி மாற்றத்திற்க்கு காரணமாக அமையலாம்.

இவர்களின் தேர்தல் பிரச்சாரங்களைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கின்றது. வேட்பாளர்களே வீதியில் தனித்து நின்று(அல்லக்கை நொள்ளைக்கைகள் இல்லாமல்) துண்டுப் பிரசுரம் கொடுப்பதும் வீடுவீடாக ஏறி தங்களுக்கு வாக்கு கேட்பதும் அதிரடியான தேர்தல் பிரச்சாரங்களைப் பார்த்த எமக்கு ஆச்சரியம் தான். இதே நேரம் பழமைவாதக் கட்சியினர் லேபர்க் கட்சியையும் கோர்டன் பிறவுணையும் நக்கலடித்து பல இடங்களில் பெரிய கோர்டிங்குகள் வைத்திருந்தார்கள். இதனைப் பலர் ரசிக்கவில்லை என்பதாலோ என்னவோ சில நாட்களில் அவற்றை எடுத்துவிட்டு தங்களின் வாக்குறுதிகளை வைத்திருக்கின்றார்கள்.

நான் இருக்கும் பகுதியின் வேட்பாளர் தமிழ்மொழியில் கடிதம் எழுதி ஏன் தனக்கு வாக்களிக்கவேண்டும் என விளக்கம் கொடுத்திருந்தார். எப்படியெல்லாம் சிந்திக்கின்றார்கள்.யார் வெல்கின்றார்கள் இதன் பின்னர் என்ன மாற்றங்கள் ஏற்படப்போகின்றன என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

"Only a vote for Labour will keep our society fair " - Gorden Brown



"Tactical voting could mean five more years of Gorden Brown" - David Cameron


"Vote with your hearts, vote for what you believe in" - Nick Clegg

இளையதளபதி விஜயிடம் 32 கேள்விகள்

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
அம்மா அப்பா வைத்த இயற்பெயரான ஜோசப் விஜயை விட எனக்கு நானே ரசிக‌ர்கள் சார்பில் வைத்த இளையதளபதி பிடிக்கும், புதிய பெயரான டாக்டர் ரொம்ப ரொம்ப பிடிக்கும் வருங்காலத்தில் கிடைக்கும் முதல்வர் பெயரைக் கேட்கவே காது குளிருது.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
வில்லு ப்ரிவியூ ஷோவில்

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
புதிய பட கான்ராக்ட்டில் கையெழுத்துப்பிடிக்கும், ஆட்டோகிராப்பில் பிடிக்காது.

4.பிடித்த மதிய உணவு என்ன?
தயிர் சாதமும் வடு மாங்காவும்

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
கூட நடிக்கும் நடிகைகளுடன் மட்டும்

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
குளிப்பதை விட எனக்கு சோப்பு போடவே பிடிக்கும்

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
குஷி படத்திலிருந்து இடுப்பைப் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச விஷயம்: அது (ங்ணா பஞ்ச் டயலாக்ணோ)
பிடிக்காத விஷயம் : பத்திரிகையாளர் சந்திப்பு

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
எத்தனை கிசுகிசு வந்தாலும் பொறுமையாக இருப்பது

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
வேண்டாம்ணா சொன்னால் பிரபுதேவா வருந்துவார்

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
பச்சை மஞ்சள் நீலம் என மல்ரிகலர்

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
இணையத்தில் வெளியான வேட்டைக்காரன் பாடல்கள்

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
நம்ம ரேஞ்சுக்கு பேனாவாக ஆக முடியாது

14.பிடித்த மணம்?
ஜாஸ்மின்

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
அஜித். பிடித்த விடயம் எனக்கு போட்டியாக மொக்கை போடுவது, அவர் நன்னாப் பேஸ்வார்

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
வடிவேல். விஜயகாந்திற்க்கு எதிராக அவர் செய்த தேர்தல் பிரச்சாரப் பதிவுகள்.

17. பிடித்த விளையாட்டு?
கில்லி தாண்டு

18.கண்ணாடி அணிபவரா?
சிலவேளைகளில் கண்ணாடி அணிந்தால் அறிவாளிபோல் லுக் வருமாம்.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
சகல தெலுங்குப் படங்களும்

20.கடைசியாகப் பார்த்த படம்?
எம்ஜீஆரின் வேட்டைக்காரன்

21.பிடித்த பருவ காலம் எது?
ஸ்விட்சர்லாந்தின் குளிர்காலம்

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?
எம் எஸ் உதயமூர்த்தியின் தோல்விகளைக் கண்டு துவழாதே

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
மனைவி பார்க்கும் வரை மாற்றுவதேயில்லை

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ?
ஜிங்க் சக்

பிடிக்காத சத்தம்?
சைலண்ட்

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
இன்னும் நிலவிற்ககுத் தான் போகவில்லை

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
இதென்ன சின்னப்பிள்ளைத் தனமான கேள்வி, தனித் திறமை இருப்பதால் தானே நடிக்கிறேன்.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
ரீமேக் படங்கள் தோற்பது

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
போக்கிரி

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
ஈசிஆர் ரோட்டிலுள்ள பப்புகள்

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
பிரதம மந்திரியாக‌

31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
அதைத்தான் தினமும் செய்திட்டு இருக்கேனே ஜூவியில் கூட எழுதிட்டாங்கள்

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
வாழ்க்கை ஒரு வட்டம்

http://enularalkal.blogspot.com/2009/06/32.html

பின்குறிப்பு : இது ஏற்கனவே எழுதிய ஒரு பதிவின் மறுபதிப்பு. சுறாவின் பிரமாண்ட வெற்றியைப் பார்க்கும் போது இன்னும் இளைய தளபதி விஜய் மாறவில்லை என்பது தெளிவாகின்றது. கடந்த ஜூனில் அவர் அளித்த(கற்பனையில் தான்) பதில்கள் இன்றைக்கும் பொருந்துவதால் இந்த மீள்பதிவு.