Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

நீதானே எந்தன் பொன்வசந்தம் உங்களின் காதல் கதை


இளையராஜா இசை கெளதம் இயக்கம் அழகுப் பதுமை சமந்தா என எதிர்பார்ப்பை எகிறவைத்த நீதானே எந்தன் பொன்வசந்தம் நீண்ட நாட்களின் பின்னர் முதல்நாள் இல்லை முதல்நாளுக்கு முதல்நாள் முதல்காட்சி படம் பார்க்கமுடிந்தது. தீடீரென வெளியிட்டபடியாலோ என்னவோ பெரிதாககூட்டம் இல்லை ஆனால் சில பெண்களை தியேட்டரில் பார்க்ககூடியதாக இருந்தது.

கதை
பாடசாலை நாட்களில் ஏற்படும் பப்பிக் காதல் கதை. அந்தந்த வயதில் காதலர்களுக்கிடையே ஏற்படும் ஈகோச் சண்டைகள். விட்டுக்கொடுப்புகள் பிடிவாதங்கள் இறுதியில் என்ன நடக்கின்றது என்பதுதான் கதை.

திரைக்கதை
முதல் பாதியில் பாடசாலை கல்லூரிக் காதல்களை வேகமாகவும் யதார்த்தமாகவும் அமைத்த கெளதம் இரண்டாம் பாதியை கிளைமாக்ஸ் வரை இழுவையாக அமைத்திருக்கின்றார். அதிலும் கிளைமாக்ஸ் மட்டும் பார்ப்பவர்களுக்கு இது கெளதமின் படமா என்ற சந்தேகம் ஏற்படும். அடுத்தது இதுதான் என ஊகிக்கவைக்கும் திரைக்கதை படத்தின் பலவீனங்களில் ஒன்று. 

வசனம்
படத்தின் மிகப்பெரிய பலமே இயல்பான வசனங்கள் தான் வழக்கமான கெளதம் படங்களில் வரும் ஆங்கிலத் திணிப்பு அவ்வளவாக இல்லை. சந்தானத்தின் நகைச்சுவையான சில பஞ்ச் வசனங்கள் பேஸ்புக் ஸ்டேடசுக்கு பொருத்தமானவை. 

இயக்கம்
விண்ணைத்தாண்டி வருவாயா என்ற காதல் ஹிட் அடித்த கெளதம் அலிஸ்டர் குக் போல அசரமால் இதிலும் அதிரடியாக சதமடித்திருக்கின்றார். இதற்கான முழுக்காரணம் இந்தக் கதையின் ஏதாவது ஒரு காட்சியாவது உங்கள் வாழ்க்கையில்(நீங்கள் காதலித்தவர், காதலித்துக்கொண்டிருப்பவர் என்றால்) நடந்திருக்கும். பல இடங்களில் திரைக்கதையுடன் உங்களை ஒன்ற வைத்திருப்பது கெளதத்தின் வெற்றியே. 

வருண்
வருண் என்ற பாத்திரத்தில் வரும் ஜீவாவை நீங்கள் எப்படியும் உங்கள் வாழ்க்கையில் சந்தித்திருப்பீர்கள், உங்கள் நண்பனாகவோ உறவினனாகவோ ஏன் சில வேளை நீங்களாகவோ கூட இருக்கலாம். ஒரு சாதாரண வாலிபனாக படம் முழுவதும் ஜீவா ஆக்கிரமித்திருக்கின்றார். கல்லூரியில் நீண்ட நாட்களின் பின்னர் சமந்தாவை கண்டதும் மேடையில் ஜீவா பாடும் பாடலில் நண்பன் குறும்பு கொப்பளிக்கின்றது. சந்தானத்துடன் அடிக்கும் லூட்டிகளில் தியேட்டரே அதிருகின்றது. சமந்தாவுக்கு கொடுக்கும் முத்தகாட்சிகளில் மட்டுமே ஜீவாவிடம் கெமிஸ்ரி மிஸ்சிங்.(புன்னகை மன்னன் படத்தை நாலு தடவை பார்த்திருந்தால் கெமிஸ்ரி பிசிக்ஸ் எல்லாம் தானாகவே வந்திருக்கும்).  

நித்யா
நினைவெல்லாம் நித்யா, நினைவெல்லாம் சமந்தா என படம் பார்த்துக்க்கொண்டிருக்கும் போதே ட்விட்டர் பேஸ்புக்கில் ஸ்டேடஸ் போட முனைந்தேன் ஆனால் அது சில பல சொசெசூ ஆகிவிடும் என்றதாலே கைவிட்டுவிட்டேன். அழகாக இருக்கின்றார், அழகாக சிரிக்கின்றார் அழகாக நடிக்கின்றார் அழகாக அழுகின்றார்(சமந்தாவை அழவைத்த கெளதமுக்கு பக்கத்தில் இருந்த ஜது கண்டனம் தெரிவித்தான்). விண்ணைத்தாண்டி வருவாயா ஜெசியை விட எனக்கு நீஎபொவ நித்யாவை பிடித்திருக்கின்றது. ஈகோ பிடித்த அழுத்தமான கொஞ்சம் சுயநலமான இக்காலப் பெண்களை சமந்தா பிரதிபலிக்கின்றார். 

சந்தானம்
படத்தின் இன்னொரு பலம் சந்தானம். ஜீவாவின் நண்பனாக இவர் அடிக்கும் லூட்டிகள் கலக்கல். லாரிக்கு கீழ போனவனைக் கூட காப்பாத்தலாம் ஆனால் லவ்விலை விழுந்தவனை காப்பாத்தவே முடியாது. சல்வார் மங்கிப்போனதும் ஜீன்ஸ் பேண்டிடம் வருவியள் கரண்டைக்கூட சொல்லிப்போட்டுத்தான் கட் பண்ணுவான் ஆனால் காதலை என இவர் அடிக்கும் பஞ்ச் வசனங்கள் அக்மார்க் சந்தானம் குறும்பு. அந்தக் குண்டுப் பெண்ணின் மேல் இவருக்கு வரும் காதலும் அதன் பின்னர் ஒரு இடத்தில் இவர் அடிக்கும் ஒரு கொமெண்ட் 18+ ஆக இருந்தாலும் தியேட்டரில் பலருக்கு புரியவேயில்லை. கொஞ்சம் கொஞ்சமாக கவுண்டர்மணி பாணியில் இருந்து சந்தானம் விடுபடுகின்றார்.

ஆண்டனியின் எடிட்டிங் மட்டும் இல்லையென்றால் படம் பப்படமாகி இருக்கும். எங்கே எங்கே தேவையோ அங்கை எல்லாம் அழகாவும் அளவாகவும் கத்தரி வைத்திருக்கின்றார். எம் எஸ் பிரபு ஓம்பிர்காஷின் ஒளிப்பதிவில் இராமேஸ்வரம் காட்சிகள் இயற்கை. பாடல் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் கத்தரி வைத்திருக்கலாம். கால ஓட்டத்தினை மொபைல் போனை வைத்து வேறுபடுத்தியிருப்பது அசல் கெளதம் வாசுதேவ் மேனன் டச். 

ஒரு அழகான காதல்கதையை இயல்பாக சொன்ன கெளதமுக்கும் அந்தக் கதாபாத்திரங்களில் வாழ்ந்த ஜீவா சமந்தாவுக்கும் பூங்கொத்து அல்ல பூந்தோட்டத்தையே பரிசளித்திருக்கலாம்.

ஓஓஓ மிகவும் ரசித்த ஒரு விடயத்தை மறந்துவிட்டேன் நினைவெல்லாம் நித்யா படத்தின் சூப்பர் டூப்பர் ஹிட் பாடலான நீதானே எந்தன் பொன் வசந்தம் பாடலை கெளதம் பாடும் போது மட்டுமே இசை இசைஞானி இளையராஜா மனதை வருடுகின்றார். 


ஆறாவடு எம் மண்ணின் கதை

சிலகாலமாக இணையத்திலும் தமிழ் வாசகர்கள் மத்தியிலும் அதிகமாகப் பேசப்பட்ட புத்தகம் ஆறாவடு. நண்பர் சயந்தனின் முதல் நாவல். அண்மையில் லண்டனில் நடந்த ஆறாவடு வெளியீட்டுவிழாவின் போது சயந்தனின் கையால் இந்த நாவலை வாங்கியது மறக்கமுடியாத அனுபவம். வெளியீட்டு விழாவில் வாசிக்கத் தொடங்கி இடையில் இன்னொரு நண்பருடன் நிலக்கீழ் புகையிரத்ததில் பயணித்ததால் மீண்டும் பஸ்ஸில் வாசிப்பைத் தொடர்ந்து வீடு வருமுன்னர் வாசித்துமுடித்துவிட்டேன்.

1987ல் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் (ஜெயமோகனின் வரிகளில் சொன்னால் பாலியல் வல்லுறவே தெரியாத அல்லது செய்யாத இராணுவம்) காலத்தில் தொடங்கி 2003ல் ஜீஎல் பீரிஸும் பாலா அண்ணையும் தாய்லாந்து புக்கட் நகரில் மரக்கன்று நடும் வரை அமுதன் என்ற முன்னாள் போராளியின் கதைதான் இந்த ஆறாவடு.

இந்த நாவலானது நீர்கொழும்பில் தொடங்கி எரித்திரியாவில் முடிவடைகின்றது. 21 அத்தியாயங்கள் நீளும் இந்த நாவலில் பெரும்பாலும் ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சிறுகதையாகவும் கருதலாம். இதைப் பலர் பல இடங்களில் விமர்சித்திருந்தாலும் என்னைப் பொறுத்தவரை சயந்தன் பல கிளைக்கதைகளை ஒன்றாகச் சேர்த்து எம் வரலாற்றை நாவலாகத் தந்திருக்கின்றார்.

அமுதன் என்ற பெயருடைய ஒரு இளைஞன் தான் கதையின் நாயகன். 2002 ரணில் விக்கிரமசிங்க காலத்தில் இயக்கத்தை விட்டு வெளிநாட்டுக்குப் போக முனையும் இளைஞன். அவனது காதலியின் பெயர் அகிலா. இவரின் உதவியுடன் தான் அமுதன் வெளிநாட்டுக்கு நீர்கொழும்பிலிருந்து களவாக இயந்திரப் படகில் செல்லவிளைகின்றான்.;

அமுதன் என்பது அவனின் இயக்கப்பெயர். இந்த தமிழ்ப் பெயர் பம்பலை எல்லாம் சயந்தன் தனக்கே உரிய நக்கல் பாணியில் எழுதியிருக்கின்றார். சைக்கிள் கடைக்கு ஒட்டகம் எனப் பெயர் மாத்தியது எல்லாம் கதை ஓட்டத்தினூடு வருகின்றது. ஒட்டகம் எனத்தான் ஞாபகம் வருது கோப்பாயிலோ இருபாலையிலோ ஒரு சைக்கிள் கடைக்கு ப்ரியா ஒட்டகம் எனப் பெயிரிட்டுவிட்டு ஒட்டகத்தின் படமும் வரைந்திருந்தார்கள்.

தானும் தன்ரை பாடும் என இருந்த அமுதனை இந்திய இராணுவத்தினர் ஒரு தலையாட்டி தன் சொந்தப் பிரச்சனைக்காக தலையாட்டிவிட கைது செய்கின்றார்கள். பின்னர் அவர்களுடன் சேர்ந்து இயங்கிய ஈபிஆர்எல்எவ் முன்னாள் வடகிழக்கு மாகாண முதலைமைச்சர் வரதராஜப் பெருமாளின்(வரலாறு முக்கியம்) அணியினர் தம்முடன் வலுக்கட்டாயமாகச் சேர்க்கின்றார்கள்.

ஆனாலும் ஏனைய ஈபி தலைவர்களையோ தொண்டர்களையோ போலில்லாமல் அமுதன் அப்பாவியாக இருந்த படியால் இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்தின் பின்னர் புலிகளுடன் இணைகின்றான். அங்கே பரந்தாமன் என்ற அவனி இயற்பெயர் அமுதனாக மாறுகின்றது.

நல்ல சண்டைப்போராளியான அமுதன் ஒரு காலத்தில் ஒரு யுத்தத்தில் தன் ஒரு காலை இழக்கின்றான். இதன் பின்னர் அவன் பொய்க்காலுடன் அரசியல் பணிகளில் ஈடுபடுகின்றான். இலங்கையின் முன்னாள் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்காவுக்கும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் இடையில் 2002ல் கைச்சாத்திடப்பட்ட சமாதான உடன்படிக்கையின் பின்னர் அமுதன் வன்னியில் இருந்து அமுதன் அரசியல் பணிகளுக்காக யாழ்ப்பாணம் செல்கின்றான். அங்கே அகிலா மேல் காதல் கொண்டு பின்னர் அந்தக் காதலுக்காக இயக்கத்தை விட்டு விலகி ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு களவாகச் செல்லமுயல்கின்றான். அமுதன் ஐரோப்பியநாட்டுக்குச் சென்றானா? அவனது கடல்ப் பயண திகில் அனுபவங்கள் என்ன? என்பதை ஆறாவடு நாவலை வாசித்து அறிந்துகொள்ளுங்கள்.

அமுதனின் இந்தக் கதையினூடாக எம் மண்ணில் ஒரு காலத்தில் நடந்த பல நிகழ்வுகளை சயந்தன் கண்முன்னே கொண்டுவருகின்றார். சில சம்பவங்களை அழகாக பதிவு செய்த சயந்தன் சில சம்பவங்களை ஏனோ ஒரு வரியில் முடித்துக்கொண்டார் உதாரணமாக யாழ்ப்பாணம் இலங்கை இராணுவத்தால் கைப்பற்றப்பட்டது பாரிய இடப்பெயர்வு நந்திக்கொடி ஏற்றப்பட்ட நிகழ்வுகளை வரிசைப்படுத்திய சயந்தன் அந்த அத்தியாய முடிவில் "நந்திக் கொடி ஏத்திய இராமலிங்கத்தை இயக்கம் சுட்டது அதற்கு ஒரு மாதம் பிந்தி செம்மணி செக்பொயிண்டில் கிருஷாந்தியின் சைக்கிளை இராணுவம் மறிந்தது." என மொட்டையாக முடிக்கின்றார்.

கிருஷாந்தி யார்? அவருக்கு என்ன நடந்தது? என்பது அடுத்த அத்தியாயத்தில் எழுதியிருப்பார் என நினைத்துப் பக்கத்தைப் புரட்டினால் ஏமாற்றம் தான் கிடைத்தது. நிச்சயமாக கிருஷாந்தியின் அவலத்தை சயந்தன் பதிவு செய்திருக்கவேண்டும். இல்லையென்றால் அதை ஒரு வரியில் எழுதி இருக்ககூடாது. ஈழப்பிரச்சனை நன்கு தெரிந்தவாசகர்களால் இவற்றை ஊகிக்கமுடியும் ஆனால் பிரச்சனை தெரியாதவர்கள் என்ன விடயம் இது என தலையைப் பிடுங்கவேண்டி இருக்கும்.

இந்திய இராணுவத்துக்கு சிம்மசொப்பனமாக இருந்த வெற்றி என்ற போராளியை நான் என் வாழ்க்கையின் கண்டிருக்கின்றேன். அதேபோல இந்திய இராணுவம் இருக்கும் போது பரமசிவன் கழுத்துப் பாம்பாக இருந்த ஈபிஆர்எல்எவ் குழுவினரும் இந்திய இராணுவம் வெளியேறியபின்னர் என்னசெய்வது எனத் தெரியாமல் அமுதன் போல இயக்கத்துடன் இணைந்தவர்களும் அப்பாவி மக்களுக்குத் தொல்லை கொடுத்தது பல புலி உறுப்பினர்களின் மரணத்துக்கு காரணம் என‌ மின்கம்பத்தில் மரணத்தை தழுவியவர்கள். ஓடித்தப்பியவர்கள் எனப் பலரும் இந்தக் கதையில் உலாவும் நிஜமான பாத்திரங்களே.

சயந்தனின் நக்கல் எழுத்து நடை ஏற்கனவே இணைய வாசகர் அறிந்ததே. அதை நடையுடன் இந்த நாவலையும் எழுதியிருப்பதால் பல இடங்களில் வாய்விட்டே சிரித்தேன். பஸ்சில் பக்கத்தில் இருந்த ஜமேக்கன் பெண் அடிக்கடி நான் சிரிப்பதைப் பார்த்து இன்னொரு இருக்கையில் போய் அமர்ந்த கொடுமையும் சயந்தனால் எனக்கு ஏற்பட்டது.

டில்ஷான் தேநீர்ச் சாலைப் சும்மா தேநீர்ச் சாலையாக மாறிய‌ பகிடி உங்கடை எங்கடை நம்பர் பிளேட் பகிடி, இரத்தத்தில் காதல் கடிதம் எழுதிய கூத்து எனப் பல இடங்களில் சயந்தன் சிரிக்க வைப்பதுடன் இவை எல்லாம் ஒரு காலத்தில் நடந்தவையே என மீண்டும் நினைக்கவும் வைக்கின்றார்.

அந்தக் காலத்தில் அந்த மரணம் மலிந்த மண்ணில் வாழ்ந்த ஜீவராசிகளில் நானும் ஒருவன் என்பதால் கதையின் ஓட்டத்துடன் மிக இலகுவாக கலப்பதுடன் பல சம்பவங்கள் எங்கள் ஊரில் அல்லது பகுதியில் நடந்த சம்பவங்களுடன் ஒத்துப்ப்போவதாகவும் உள்ளது. இதுதான் சயந்தனுக்கு கிடைத்த வெற்றி.

பின்குறிப்பு : இது ஒரு விமர்சனம் அல்ல நுனிப்புல் மேய்ச்சலே

விளையாடு மங்காத்தா

எந்திரனுக்கு பிறகு எழுதும் திரைவிமர்சனம் கடைசியாக திரையில் பார்த்த படம் கோ அதன் பின்னர் நேற்று மங்காத்தா.

கதை
கிரிக்கெட் சூதாட்டத்தை மையமாக வைத்து வந்த முதல் தமிழ்ப் படம். 500 கோடி ரூபாய் பணத்தைக் கொள்ளையடிக்க முயலும் கொள்ளையர்களின் கதை.

திரைக்கதை
அர்ஜீன் , அஜித் என்ற இரண்டு நாயக‌ர்களையும் திரிஷா ,லக்ஸ்மிராய், அஞ்சலி, ஆண்ட்ரியா என்ற நான்கு நாயகிகளையும் வைத்து வெங்கட் பிரபு மங்காத்தா என்ற பெயரில் ஆடுபுலி ஆட்டம் தான் ஆடியிருக்கின்றார். இடைவேளைக்குப் பின்னர் திரைக்கதையில் திருப்பங்களுக்கு மேல் திருப்பம். இந்தியன் படத்துக்குப் பின்னர் கிளைமாக்ஸ் மிகப் பெரிய எதிர்பாராத திருப்பம். வைபவ் அஞ்சலி காதல், ஆண்ட்ரியா அர்ஜூன் பாடல் கொஞ்சம் திரைக்கதையில் சறுக்கல்.

வசனம்
பிரேம்ஜியின் ட்விட்டர் கீச்சுகள் போல வசனங்கள். பல இடங்களில் ரசிக்கவைக்கின்றன. பிற்பகுதியில் ஆங்கிலப் படங்களில் வரும் வசனம் என்பதாலோ சென்சார் கையை நிறையவே வைத்துவிட்டது.

இயக்கம்
சென்னை 28, சரோஜா என இரண்டு சதமடித்த வெங்கட் பிரபு கோவாவில் சறுக்கினாலும் மீண்டும் மங்காத்தாவில் இரட்டைச் சதமடித்திருக்கின்றார். அதுவும் தலையை வைத்து இரட்டைச் சதமடித்தமை சாதனை தான். ஆனால் பிரேம்ஜி, பைவப், அரவிந்த் என தன் பழைய டீமையே வைத்து விளையாடுவதுதான் கொஞ்சம் நெருடுகின்றது, இந்திய அணிக்கே ரெய்கேனா, பர்தீப் பட்டேல் போன்றவர்கள் களம் இறங்கும் போது வெங்கட் பிரபுவும் வேறை டீமை வைச்சு அடுத்த இனிங்கசைத் தொடரலாம். விறுவிறுப்பான ஒரு சிறந்த பொழுதுபோக்குப் படத்தைக் கொடுத்தமைக்கு வெங்கட் பிரபுவுக்கு ஒரு சலூட்.

லக்ஸ்மி ராய்
என்னடா தலை ஆக்சன் கிங் என நாயகர்கள் இருக்கும் போது கதாநாயகிகளில் ஒருவரைப் பற்றி எழுதுகின்றேன் என யோசிக்கின்றீர்களா? எல்லாம் அவரின் திறமைதான். ஏற்கனவே சில படங்களில் வந்துபோனாலும் இந்தப் படத்தில் மொத்தமாக அனைவரையும் கவருகின்றார். அதுவும் பல்லேலக்கா பாடலுக்கு அம்மணி லண்டன் சமர் போல ரொம்ப கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கின்றார். ஆனாலும் சென்சாரின் புண்ணியத்தில் அம்மணியை ரொம்பப் பார்க்கமுடியவில்லை என்பது பல ரசிகர்களின் கவலை. முதல் காட்சியில் தலை வீட்டில் செய்யும் லூட்டியை இன்னும் கொஞ்சம் நீட்டியிருக்கலாம். ஓவர் ஜொள்ளு உடம்புக்கு ஆகாதாம், எனிவே டோணிக்கு நன்றிகள்.


அஜித்
வாலி படத்திற்க்கு பின்னர் தலையை ரசித்துப் பார்த்தது மங்காத்தாவில் தான். நீண்ட நாட்களின் பின்னர் அலட்டலில்லாமல் அட்டகாச நடிப்பு. அதுவும் பிரேம்ஜியுடன் குடித்துவிட்டுச் செய்யும் அலும்புகளும், செஸ் போர்ட்டுக்கு முன்னால் இருந்து தன் சகாக்களை கொலை செய்ய பிளான் பண்ணும் காட்சியும் அல்டிமேட் ரகம். லக்ஸ்மிராயுடன் பொருந்திப்போகும் காதல் கெமிஸ்ரி ஏனோ திரிஷாவுடன் அவ்வளவாக ஒட்டவில்லை. 50 வயது தாண்டியவர்களே சின்னப் பெண்களுடன் டூயட் பாடும் போது தலை மட்டும் தலை முடியை வெள்ளையாக்கி தன் வயதை எல்லாம் சொல்லுவது நிஜத்தில் நல்லா இருந்தாலும் படத்தில் அவரின் கெட்டப் கொஞ்சம் நெருடல் தான்.

அர்ஜீன்
அர்ஜீனின் 1001ஆவது போலீஸ் வேடம், கொஞ்சம் வயதான போல் தெரிந்தாலும் சண்டைக் காட்சிகளில் அதே வேகமும் ஆக்ரோசமும் இருக்கின்றது. ஒரு பிட்டில் ஆண்ட்ரியாவுடன் டூயட்டும் பாடுகின்றார்.

த்ரிஷா
தமன்னாவுக்கு கிடைக்கவேண்டிய லூஸுப் பொண்ணு கேரக்டர் த்ரிஷாவுக்கு, பெரிதாக நடிக்க சான்ஸ் கிடைக்கவில்லை, கிடைத்த வாய்ப்புகளிலும் லக்ஸ்மி ராய் சிக்சர் அடித்தபடியால் அம்மணி வாட்டர் பாய் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார். த்ரிஷாவுக்கே இந்த நிலை என்றால் அஞ்சலி ஆண்ட்ரியா எல்லாம் காயமடைகின்ற இந்திய வீரர்களுக்கு ரிப்பிளேஸ்மெண்டில் வரும் ஏனைய வீரர்கள் போல் வந்துபோகின்றார்கள். அஞ்சலி பைவப்வுடன் ஒரு டூயட்டை அரைகுறையாக(ஆடை இல்லை பாடல்) ஆடி வைக்கின்றார்.

பிரேம்ஜீ

சில இடங்களில் சபாஷ் போட வைத்தாலும் பல இடங்களில் அதே பழைய இம்சை. லக்ஸ்மிராயை முதன்முறை பார்க்கும் காட்சியில் பின்னணீ இசையும் பிரேம்ஜீயின் நடிப்பும் கலக்கல். (இசைஞானியின் பழைய பாடல் ஒன்று பாடலின் பெயர் ஞாபகம் வரவில்லை).

இசை
இசை வழக்கம்போல் தம்பியுடையான் இசைக்கஞ்சான் போல் வெங்கட் பிரபுவுக்கு ஸ்பெசலகா யுவனின் பாடல்கள் சூப்பர் டூப்பர் விளையாடு மங்காத்தா பாடலும் தீம் மியூசிக்கும் ஏற்கனவே பட்டி தொட்டிகளில் ஒலிக்கத் தொடங்கிவிட்டது. ஏனைய பாடல்களும் கேட்க இதமாக இருந்தாலும் படத்தில் இடைச் செருகல் போலத்தான் இருந்தது. பின்னணி இசைக்கு கார்த்திக் ராஜா, பவதாரணி, பிரேம்ஜி மூவரும் யுவனுக்கு உதவி செய்திருக்கின்றார்கள்.

நீண்ட நாட்களின் பின்னர் தலைக்கு மட்டுமல்ல தலை ரசிகர்களுக்கு மட்டுமல்ல நல்ல பொழுதுபோக்கு படங்களின் ரசிகர்களுக்கும் மங்காத்தா மகிழ்ச்சியைத் தந்திருக்கின்றது.

பின்குறிப்பு 1: லண்டனில் சன் பிக்சர்ஸ் லோகோ எதுவும் வரவில்லை என்பது மிக மகிழ்ச்சியான விடயம். சன் செய்திகளில் லோகோவைக் கண்டதும் ரசிகர்கள் ஆராவராம் செய்கின்றார்கள் என மாசிலாமணி காலத்தில் இருந்து காட்டும் அதே டெக்னிக்கை மங்காத்தாவுக்கும் காட்டினார்கள் (திகார் ஜெயிலில் இன்னும் இடம் இருக்கின்றதாம்). அத்துடன் முதன்மை நிர்வாகி என ஷக்சேனாவின் பெயரும் மிஸ்சிங் (ஆள் எஸ்கேப்போ தெரியாது ).

பின்குறிப்பு 2: அஜித்தின் ஆரம்பக்காட்சிக்கு மட்டும் விசில் முழுங்கியது பின்னர் ரசிகர்கள் படத்துடன் ஒன்றிவிட்டார்கள்.

வந்தியத்தேவனும் நான்கு அழகிகளும்

பொன்னியின் செல்வன் கல்கியின் காலத்தால் அழியாத வரலாற்று நவீனம். அருள்மொழிவர்மன், வந்தியத்தேவன், பழுவேட்டரையர்கள், கந்தன்மாறன், பார்த்திபேந்திரன், இலங்கை தண்டநாயக்கர்கள் என பலவீரர்களையும் நந்தினி, குந்தவை, வானதி, பூங்குழ‌லி, மணிமேகலை போன்ற அழகிகளையும் அரசிலாற்றங்கரை, கடம்பூர், பழையாறை என வரலாற்றுப் புகழ்பெற்ற இடங்களையும் மறக்கமுடியுமா?

சங்க இலக்கியங்கள் பெண்களை பத்தினி, சித்தினி, சங்கினி, அத்தினி என நான்கு வகையாகப் பிரித்துள்ளது. அதேபோல் கல்கியும் தன்னுடைய கதைநாயகிகளையும் பெண்களின் குணங்களுக்கு ஏற்றதுபோல் பாத்திரப்படுத்தியுள்ளார். அதில் முக்கியமான நான்கு பெண்களைப் பற்றியதே இந்தப் பதிவு.

குந்தவை

"சரித்திரத்தில் ராஜராஜன் என்று புகழ் பெற்ற அருள்மொழிவர்மனின் சகோதரி. அரசிளங் குமரி என்றும் இளைய பிராட்டி என்றும் மக்களால் போற்றப்பட்ட மாதரசி. சோழ ராஜ்யத்தின் மகோன்னதத்திற்கு அடிகோலிய தமிழ்ப் பெரும் செல்வி. ராஜராஜனுடைய புதல்வன் ராஜேந்திரனை எடுத்து வளர்த்து வீராதி வீரனாயும் மன்னாதி மன்னனாயும் ஆக்கிய தீரப் பெண்மணி."

என குந்தவையை கல்கி அறிமுகம் செய்கின்றார் அவளின் அழகை

"ஏழுலகத்துக்கும் ராணி எனத் தகும் கம்பீரத் தோற்றமுடைய பெண்மணி. செந்தாமரை மலரின் கம்பீர சௌந்தரியம் உடையவள். பூரண சந்திரன்;ஆடும் மயில்; இந்திராணி; வேகவாஹினியான கங்காநதி;"

என வர்ணிக்கும் கல்கி இளையபிராட்டியின் அழகை வர்ணிப்பதைவிட அவரை ஒரு அரசியல் சாணக்கியம் மிகுந்தவராகவும், வீராங்கனையாகவுமே வாசகர்களிடம் உலாவவிடுகின்றார்.

இதனால் தான் என்னவோ வீராதிவீரனான வந்தியத்தேவனுக்கு ஆதித்த கரிகாலன் தன்னுடைய சகோதரியைப் பற்றி அவனுக்கு காஞ்சியில் கூறியபோதே ஒரு மெல்லிய மையல் ஏற்பட்டதும் அது பின்னர் அரிசிலாற்றங்கரையில் சந்தித்த முதல் சந்திப்பில் காதலாக மாறவும் காரணமாக இருந்திருக்கலாம். அதே நேரம் வந்தியத்தேவன் எப்போதும் கடமையே கண்ணானவன், குந்தவைக்கோ, தனது குடும்ப மற்றும் நாட்டு அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவே நேரம் போதவில்லை ஆகவே இவர்கள் இருவருக்கும் காதலிக்க நேரம் கிடைக்கவில்லை.

புத்திசாதுரியமான, தனது சகோதரனின் வெற்றிக்கு பாடுபட்ட , தலைமைத்துவத்துக்குரிய பெண்ணுக்கு சிறந்த உதாரணமாக குந்தவையை கூறலாம்.

வானதி

"கொடும்பாளூர் இளவரசியின் அழகை வர்ணிக்கும்படி கவிஞர்களைக் கேட்டால் அவர்கள் அந்த மங்கை நல்லாளின் அழகை அந்தி மாலையின் சௌந்தரியத்துக்கு ஒப்பிடுவார்கள் வீணைத் தந்திகளில் விரல்களை ஓட்டி இன்னிசை எழுப்பிய நங்கை, குமுத மலரின் இனிய அழகை உடையவள், காலைப் பிறை, பாடும் குயில், மன்மதனின் காதலி, குழைந்து நெளிந்து செல்லும் காவேரி."

என வானதியைப் பற்றி வர்ணிக்கும் கல்கி இவரை ஒரு இளவரசி என்பதை விட சாதாரண பெண்ணாகவே பல இடங்களில் காட்டியிருக்கின்றார். எல்லாவற்றிற்கும் பயந்த, தானாகவே எந்த முடிவும் எடுக்கமுடியாத காதலில் விழுந்த ஒரு பேதையாகவே வானதி உலாவருகின்றாள். இப்போதைய நடிகைகளில் சிறுத்தை தமன்னா போல அல்லது லைலா போல் வானதி இருந்திருப்பாள்.

அதே நேரம் வாழ்ந்தாள் அருள்மொழிவர்மனுடன் தான் வாழுவேன் என காதல் பைத்தியம் பிடித்ததும் இவருக்குத் தான்.

அதே நேரம் சிற்றரசின் இளவரசி சோழப்பேரரசின் பட்டத்து ராஜாவை காதலித்து திருமணம் செய்ததன் மூலம் தகுதி, அந்தஸ்து போன்றவை அந்தக்காலத்தில் இல்லையோ என்ற ஐயமும் வாசிப்பவர்களுக்கு வரும். வந்தியத்தேவன் குந்தவை காதலும் இதேபோல் ஒரு சிற்றரசன் பேரரசி காதல் தான்.

நந்தினி

பொறாமை, கோபம், சுயநலம் என பல கெட்டகுணங்களை உடையவள், ஆனானப்பட்ட பழுவேட்டரையரையே கவிழ்த்ததுடன் ஆதித்தகரிகாலன், வந்தியதேவன், கந்தன்மாறன், பார்த்திபேந்திரன் போன்ற வீரர்களையும் ஒரு கணமேனும் தன் அழகில் மயக்கிய பெண் வடிவில் வந்த மாயப்பிசாசுதான் நந்தினி. நாகபாம்பின் நஞ்சும் பாயும் புலியும் ஆக்ரோசமும் பழுவூர் இளையராணியான நந்தினியிடம் இயல்பாகவே ஒட்டிக்கொண்ட குணங்கள்.

தன்னுடைய சுயநலத்திற்காக ஒரு இனத்தையே(சோழர்கள்) பழிவாங்க முயன்று தோற்ற இராட்சசி. (இந்தவரிகள் பிரபல அரசியல்வாதியை இனம் காட்டினால் அதற்க்கு நான் பொறுப்பல்ல).

நந்தினியின் அழகை வந்தியதேவன் வாயிலாக நம்பிக்கும் வாசகர்களுக்கும் கல்கி இவ்வாறு சொல்கின்றார்.

"அவ்வளவு ஸ்திரீகளிலும் பழுவேட்டரையரின் இளைய ராணி தான் பிரமாத அழகுடன் விளங்கினாள்! மற்ற கருநிறத்து மங்கையர்க்கு நடுவில் அந்த ராணியின் முகம் பூரண சந்திரனைப் போல் பொலிந்தது. அரம்பை, ஊர்வசி, திலோத்தமை, இந்திராணி, சந்திராணி எல்லோரும் அவளுக்கு அப்புறந்தான்!"

அதே நேரம் கல்கி நந்தினியின் அழகை வர்ணித்ததுபோல் குந்தவையையோ வானதியையோ வர்ணிக்கவில்லை.

"குந்தவை யானையிலிருந்தும் நந்தினி பல்லக்கிலிருந்தும் இறங்கினார்கள். நந்தினி விரைந்து முன்னால் சென்று குந்தவைக்கு முகமன் கூறி வரவேற்றாள். அந்த வரவேற்பைக் குந்தவை புன்னகை புரிந்து அங்கீகரித்தாள். சோழநாட்டின் அந்த இரு பேரழகிகளையும் அங்கு ஒருங்கே கண்ட ஜனத்திரளின் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. நந்தினி பொன் வர்ணமேனியாள்; குந்தவை செந்தாமரை நிறத்தினாள். நந்தினியின் பொன்முகம் பூரணசந்திரனைப்போல் வட்ட வடிவமாயிருந்தது; குந்தவையின் திருமுகம் கைதேர்ந்த சிற்பிகள் வார்த்த சிலை வடிவத்தைப் போல் சிறிது நீள வாட்டமாயிருந்தது. நந்தினியின் செவ்வரியோடிய கருநிறக் கண்கள் இறகு விரித்த தேன் வண்டுகளைப்போல் அகன்று இருந்தன; குந்தவையின் கருநீல வர்ணக் கண்கள் நீலோத் பலத்தின் இதழைப்போல் காதளவு நீண்டு பொலிந்தன. நந்தினியின் மூக்கு தட்டையாக வழுவழுவென்று தந்தத்தினால் செய்ததுபோல் திகழ்ந்தது. குந்தவையின் மூக்கு சிறிது நீண்டு பன்னீர்ப்பூவின் மொட்டைப்போல் இருந்தது. நந்தினியின் சிறிது தடித்த இதழ்கள் அமுதம் ததும்பும் பவழச் செப்பைப் போல் தோன்றியது. குந்தவையின் மெல்லிய இதழ்களோ தேன் பிலிற்றும் மாதுளை மொட்டெனத் திகழ்ந்தது. நந்தினி தன் கூந்தலைக் கொண்டை போட்டு மலர்ச்செண்டுகளைப் போல் அலங்கரித்து இருந்தாள். குந்தவையின் கூந்தலோ "இவள் அழகின் அரசி" என்பதற்கு அடையாளமாகச் சூட்டிய மணி மகுடத்தைப்போல் அமைந்திருந்தது."


"இப்படியெல்லாம் அந்த இருவனிதா மணிகளின் அழகையும் அலங்காரத்தையும் தனித்தனியே பிரித்து ஒப்பிட்டுப் பார்த்து எல்லோரும் மகிழ்ந்தார்கள் என்று சொல்ல முடியாது தான். ஆயினும் பொதுப்படையாக இருவரும் நிகரில்லாச் சௌந்தரியவதிகள் என்பதையும், அங்க அமைப்பிலும் அலங்காரத்திலும் மாறுபட்டவர்கள் என்பதையும் அனைவருமே எளிதில் உணர்ந்தார்கள்."

ஒருவரின் பொறாமை கோபம் பழிவாங்கும் உணர்ச்சி அவருக்கு எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்க்கு சிறந்த உதாரணம் நந்தினி. குந்தவையிடம் அரசியல் சாணக்கியம் இருந்தது என்றால் நந்தினியிடம் அரசியல் சூழ்ச்சி இருந்தது.


பூங்குழலி

அருள்மொழிவர்மனையும் வந்தியத்தேவனையும் சமுத்திரராஜனிடம் இருந்து காப்பாற்றிய ஓடக்காரி. சேந்தன் அமுதனின் மைத்துணி. அருள்மொழிவர்மனுடன் தான் பட்டத்துராணியாக இருப்பதுபோல் கனவு கண்ட ஒருதலைக்காதல்காரி. பொன்னியின் செல்வனில் இன்னொரு சராசரிப் பெண். ஓடக்காரியாக இருந்தபடியாலோ என்னவோ இவளின் காதல் நிறைவேறவேயில்லை.

இவளின் அழகை சேந்தன் அமுதன் வந்தியதேவனுக்கு கூறும்போது "மானும் மயிலும் அவளிடம் அழகுக்குப் பிச்சை கேட்க வேண்டும். ரதியும் இந்திராணியும் அவளைப் போல் அழகியாவதற்குப் பல ஜன்மங்கள் தவம் செய்ய வேண்டும்." என்கின்றான்.

ஒருதலைக் காதலுக்கு சிறந்த உதாரணம் என்றால் பூங்குழலி அருள்மொழிவர்மன் மேல் வைத்திருந்த காதலையும் சேந்தன் அமுதன் பூங்குழலி மேல் வைத்திருந்த காதலையும் கூறலாம்.

இந்த நான்கு பெண்கள் மூலம் கல்கி பெண்களின் குணாதிசயங்களை பெரிதும் எடுத்தியம்பியிருக்கின்றார்.

எனக்கு குந்தவையை விட வானதியைத் தான் அதிகம் பிடித்திருக்கின்றது. குந்தவை பேரழகியாக இருந்தாலும் வானதியைப்போல் அடக்கம், அமைதி, விட்டுக்கொடுத்தல் போன்ற சில குணங்கள் அவரிடம் இல்லை. உங்களுக்கு பிடித்த அழகி யார்? பின்னூட்டத்தில் சொல்லிவிட்டுபோங்கள்.

பின்குறிப்பு :
தலைப்பைப் பார்த்து எனது வழக்கமான சொசெசூ கதை என நினைத்து வந்திருந்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல. இந்த நான்கு பெண்களில் வானதியைத் தவிர்த்து ஏனைய மூவர் மேலும் வந்தியதேவனுக்கு ஈர்ப்பு வந்தது மட்டும் உண்மை.

2010ல் ரசித்த பதிவுகள் - பகுதி 1

வணக்கம் நண்பர்களே

சென்ற ஆண்டில் நான் படித்து ரசித்த பதிவுகளின் பட்டியலை இட்டிருந்தேன். அதனைப்போலவே இந்த முறையும் டிசம்பர் கடைசியில் இடலாம் என நினைத்திருந்தால் வேலை, படிப்பு, குளிர், ஸ்னோ, சோம்பேறித்தனம், எனப் பல காரணங்களினால் தள்ளிப்போனது. இன்றைக்கு கிடைத்திருக்கும் நேரத்தில் முதல் பகுதியை எழுதினால் எப்படியும் அடுத்தபகுதி நாளையோ அல்லது சில நாட்களிலோ எழுதப்படும் என நினைத்து எழுதியதுதான் இந்தப் பதிவு,



இவை நான் ரசித்துப் படித்தவையே தவிர அந்தப் பதிவரின் முத்திரைப் பதிவோ அல்லது சிறப்புப் பதிவோ அல்ல. நான் குறிப்பிடுகின்ற பதிவைவிட அவர்கள் மிகவும் சிறந்தவற்றை எழுதியிருக்கலாம் ஆனால் எனக்கு அந்தப் பதிவர்களின் பெயர் நினைவில் வந்தால் இந்தவருடம் அவர்க:ள் எழுதிய இந்தப் பதிவுதான் ஏனோ ஞாபகத்தில் வருகின்றது.

இவ்வளவு முன்னுரை போதும் இனி நான் ரசித்தவை உங்களுக்காகவும்....

அசோக்பரன்

அண்மையில் இலங்கைத் தேசியகீதம் தமிழ்மொழியில் இசைக்ககூடாது என அரசாங்கம் கொண்டுவந்த சட்டமூலத்திற்கு எதிராக தனது உள்ளக்குமறல்களை அசோக் இதில் கொட்டித் தீர்த்துள்ளார். அசோக்கின் பதிவுகள் பெரும்பாலும் அரசியல் சார்ந்ததாகவே இருக்கின்றன. இளம் கன்று பயமறியாது என்பதுபோல் அசோக்கின் இந்தப்பதிவும் சில அரசியல்வாதிகளை சாடுகின்றது.

நீக்கப்படவிருக்கும் இலங்கையின் தமிழ்த்தேசிய கீதமும், அமைச்சரவையின் அப்பட்டமான பொய்களும்.


அச்சுதன்

செல்லமாக பங்குச் சந்தை என எம்மால் அழைக்கப்படும் அச்சுவால் சென்ற வருடம் எழுதப்பட்ட கட்டுரைகளில் பங்குச் சந்தையுடன் பொதுவான நாணயம் பற்றிய விடயங்களும் வந்தமை, என்னைப்போன்ற சாதாரண வாசகனைக் கூட ஈர்த்துவிட்டது. உலகில் சீனாவின் வல்லாதிக்கத்தையும் இந்தக் கட்டுரை மூலம் தெரிந்துகொள்ளகூடியதாக இருந்தது.

உலக வல்லரசுகளின் நாணயப் போர்


ஆதிரை

செம்மொழி மாநாட்டின் மறுபக்கத்தை அலசிய இந்தப் பதிவில் ஆதிரை சொன்ன பாட்டி பற்றிய உருவக கதை பலருக்கு புரிந்திருக்கும். கருணாநிதியின் புகழ் பாட நடத்திய இந்தமாநாட்டைப் பற்றியும் பேராசிரியர் சிவத்தம்பியின் பல்டி பற்றியும் பாட்டியின் கதையூடாக ஆதிரை கொண்டு சென்ற பாங்கு சிறப்பானது.

செம்மொழி மாநாடும் சில அலட்டல்களும்


பாலவாசகன்

நகைச்சுவை, கிரிக்கெட் போன்றவை அதிகம் பிடித்த எனக்கு இவர் கிரிக்கெட்டை நகைச்சுவையாக்கி எழுதியது மட்டும் பிடிக்காமலா போகும். அதிலும் காதல் கவிதைகளை கிரிக்கெட் பாசையில் சொன்ன பாணியில் இவரது திறமையைப் பார்த்து நான் கிளீன்போல்ட் ஆகிவிட்டேன். மருத்துவரின் இந்தக் கவிதையைப் பார்த்து யார் யார் கிளீன்போல்ட்டானார்களோ சுபாங்கனுக்குத் தான் வெளிச்சம்.

கிரிக்கெட் பதிவு இப்படியும் எழுதலாம் !!


பவன்

மொக்கை என்றால் பவன் தான். எத்தனையோ மொக்கைகள் போட்டிருந்தாலும் சிலவற்றை நினைச்சு நினைச்சு சிரிக்கலாம். அதிலும் மன்மதன் அம்பு பாடலையும் தற்போதைய ஆஸி அணியின் நிலையையும் வைத்து பவன் செய்த சித்து விளையாட்டு அதிலும் திருகோணமலை வேகாத வெயிலில் உஷா ஃபேனுக்கடியில் இருந்து எழுதிய இந்தக் கவிதை பவனுக்கு ஒரு மைல் கல்தான்.

பொன்டிங்கின் சொம்பு..:P


புல்லட்

ஓய்வுபெற்ற அல்லது ஓய்வுக்கு வற்புறுத்தப்பட்ட முன்னாள் பதிவர் புல்லட்டின் பெண்கள் பற்றிய பதிவுகள் எனக்கு எப்பவும் பிடித்தவை.(சிலவேளைகளில் இருவரும் ஒரே அலைவரிசையில் இருப்பதோ தெரியவில்லை). இந்தப் பதிவும் சில பெண்களுக்கு கடுப்பை கிளப்பி புல்லட்டினை அடக்கியதோ யாம் அறியோம். புல்லட்டின் மீள் வருகையை அவரின் கோடிக்கணக்கான(?) வாசகர்கள் சார்பில் நானும் எதிர்பார்க்கின்றேன்.

கடுப்பைக்கிளப்பும் பெண்கள்- பார்ட் 3


கேபிள் சங்கர்

வலையுலக சூப்பர் ஸ்டார் கேபிளாரின் சினிமா விமர்சனத்தை பார்த்துவிட்டு படம் பார்க்கும் ரசிகர்களில் நானும் ஒருவன். (எந்த மொக்கைப் படத்தையும் முதல் நாள் பார்க்கும் தைரியம் இவருக்கு மட்டும் தான் உண்டு). சினிமாவில் இருப்பதாலோ என்னவோ பல பதிவுகள் சினிமாவைச் சார்ந்தவைதான். இடைக்கிடை எண்டர் கவிதை எழுதி அசரவைக்கின்றார். சன் டிவி விஜய் டிவி போட்டி பற்றியும் சூப்பர் சிங்கர் பற்றியும் எழுதிய இந்தப் பதிவில் நடுநிலையாக எழுதிய பதிவு இது.

சூப்பர் சிங்கர் ஜுனியர்2 V/S சன் டி.ஆர்.பி


சேரன் கிரிஷ்

காத்திரமான எழுத்துக்கு சொந்தக்காரர். இடைக்கிடையே எழுதினாலும் அந்த எழுத்துக்களில் ஒரு அனல் அடிக்கும். சேரனிடம் இருந்து இன்னும் பல பதிவுகளை எதிர்பார்க்கும் வாசகர்களில் நானும் ஒருவன். இலங்கையின் பொற்சிறையில் வாடும் பிராமணர்களைப் பற்றிய ஒரு பதிவு தான் இது.

பிராமணன்

சித்ரா

அமெரிக்காவில் இருந்து எழுதும் பெண் பதிவர். வெட்டி பேச்சு என வலை இருந்தாலும் சிரிப்பினூடாக பல சிந்தனைகளையும் எழுதுகின்றவர். பெண் பார்க்கும் படலத்தை தனக்கே உரிய படங்கள் போடும் பாணி நகைச்சுவை என அழகாக எழுதியிருக்கின்றார். இந்த வடைபோச்சே பலருக்கு பலவிதமாக ஏற்பட்ட அனுபவமாக இருக்கும்.

ஒரு வினாடியில் "வடை" போச்சே!


கெளபாய் மது

மதுயிசம் என்ற புதுவிடயத்தை என்னைப்போன்ற பச்சிளன் பாலகன்களுக்கு பரப்பியவர் நம்ம கெளபாய். இடையிடையே எழுதும் வேலைப்பளு கூடிய பதிவர். இவரின் பெரும்பாலான கதைகள் ரியலாகவே இருக்கும் அல்லது உண்மைக்கதைகளுக்கு கொஞ்சம் கற்பனை சாயம் பூசியிருப்பார். இந்தக் கதையும் பலரின் வாழ்க்கையில் நிச்சயம் நடந்திருக்கும்.

நீ ஒரு ரிச்சு கேள், நான் ஒரு பிச்சை போய்


டயானா

தன்னுடைய பாடசாலை அனுபவங்களை துறு துறு திருதிரு என எழுதியவர் ஏ.ஆர்.ரகுமானின் கொள்கைபரப்பாளராக (சும்மா தான் எந்த உள்குத்தும் இல்லை) ட்விட்டர் பேஸ்புக்கில் மாறியபின்னர் தன் வலைப்பக்கம் எட்டிக்கூடப் பார்க்கின்றாரில்லை. அவரின் பாடசாலை அனுபவங்கள் போல் பல்கலைக்கழக வானொலி அனுபவங்களை எழுதினால் நன்றாக இருக்கும்.

துறு துறு டயானா... திரு திரு முழியுடன்!


ஈழத்துமுற்றம்

ஈழத்துமுற்றம் நான் புகுந்த வீடுகளில் ஒன்று. எத்தனையோ ஈழத்து வட்டார வழக்கு பதிவுகள் வந்தாலும், ஒரு காலத்தில் நாம் அனுபவித்த விடியோ படம் போடுகின்ற நிகழ்வை தம்பி வடலியூரான் அழகாக வர்ணித்திருப்பார். இதனை வாசித்தபோது அட இது நான் அனுபவித்த விடயம் என்ற எண்ணமே வந்தது.

இண்டைக்கு எங்கன்ரை வீட்டை படம் போடுறம்


ஜாக்கி சேகர்

இவரின் சாண்ட்விஜ் நாண்ட்வெஜ் எப்படி காரமோ அதுபோல் இடையிடயே எழுதும் சில பதிவுகளிலும் அனலடிக்கும். தமிழக அரசைச் சாடி எழுதிய இந்தப் பதிவு அவரின் சமூக அக்கறைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

அடுத்தமாதம் எப்படியும் சிங்கள ராணுவத்தால் சாக போகும் இந்திய(தமிழக) மீனவனுக்கு ஒரு கடிதம்...


ஜனா

காத்திரமான பதிவுகள், மொழிபெயர்ப்புக் கதைகள், இந்தவாரப் பதிவர் அறிமுகம் என எழுதியவர், பதிவர்களை வைத்து நடக்கும் மொக்கைகளில் பெரும்பாலும் சிக்குபவர்களில் நானும் கங்கோனும் சதமடிக்கும் நிலையில் இருக்கும் போது மன்மதன் அம்பு கமல் கவிதையில் ஈர்க்கப்பட்டு நம்ம மருத்துவர் பாலவாசகனை பாட்டுடைத் தலைவனாக்கி எழுதிய மெஹா மொக்கைக் கவிதை இது. அந்தக் கவிதையின் மெட்டில் ஜனாவின் வார்த்தைகள் அமர்ந்தமை ஜனாவிற்க்கே கைவந்த வார்த்தை ஜாலம்.

வாசகன் வம்பு!!


கானா பிரபா

என் பதிவுலக அண்ணா. எந்த விடயத்தையும் அநாயசமாக எழுதுவது இவருக்கு கைவந்த கலை. நாம் எல்லாம் ஒரு வலையை வைத்துக்கொண்டே கஸ்டப்படும்போது பலவிதமான வலைகளை வைத்திருக்கும் வலைஞன். உலகம் சுற்றும் வாலிபன் இவர். அண்மையில் யாழ் சென்றுவந்தபோது அங்கேயுள்ள தியேட்டரில் படம் பார்த்த கதையை தனக்கே உரியபாணியில் எழுதியிருந்தார். ஆனாலும் சூப்பர் பல்கனியில் எவருடனோ இருந்துபார்த்ததை மட்டும் என்னைப்போன்ற பாலகர்கள் மனம் நோகக்கூடாது என மறைத்தமை அவரின் நல்ல மனசுக்கு எடுத்துக்காட்டு.

யாழ்ப்பாணம் ராஜா தியேட்டரில் படம் பார்க்கப் போன கதை


கரவைக்குரல்

லண்டனில் நான் சந்தித்த முதல்ப் பதிவர். நம்ம மண் மணம் கமிழ எழுதும் இன்னொரு ஊடகவியளாளர். விரைவில் ஒரு குறும்படத்திலும் கதாநாயகனாக வலம்வரவிருக்கின்றார். பலரின் நன்மை கருதி இவர் வெளிநாட்டு வாழ்க்கையை எழுதவில்லை என அண்மையில் சந்தித்தபோது சொன்னார். ஆனாலும் இந்த பதிவில் அவர் எழுதியிருக்கும் அனுபவம் கொஞ்சம் வித்தியாசமானது.

பட்ட பாடு பெரும்பாடு


கங்கோன்

என்னைக் குரு எனச் சொல்லி என்னைக் கலாய்க்கும் பெரிய்ய மனதுக்காரர். நித்திரையால் எழுப்பி 1986ல் மெல்பேர்ன் டெஸ்ட்டில் ஆஸி சார்பில் யார் சதமடித்தது என்றால் உடனே சரியான பதில் கொடுக்கும் கிரிக்கெட் அகராதி. இவரின் தேடுதல் பாராட்டுக்கு அப்பால்பட்டது. கிரிக்கெட் மட்டுமல்ல நல்லசமூக, மொக்கை, கதை கூட எழுதும் ஆற்றல் கொண்டவர் ஆனாலும் சில நாட்களாக முகனூலிலும் ட்விட்டரிலும் பொழுதைப்போக்குகின்றார். இந்தப் பதிவு விளையாட்டுப் பதிவு ஒன்று எப்படி இருக்கவேண்டும் என்பதற்க்கு ஒரு சான்று.

பேர்த் போட்டி பற்றிய ஆய்வு.


கீர்த்தி

தன் கவிதைகளால் பலரைக் கவர்ந்தவர். அதனால் தானோ என்னவோ இந்தவருடம் பெரும்பாலும் கவிதைகளாகவே எழுதி இருக்கின்றார். எனக்கு கவிதை என்றால் கொஞ்சம் அலர்ஜி. அதனால் கீர்த்தி தன் மொக்கைத் திறமையைக் காட்டிய இந்தப் பதிவு ஏனோ பிடித்துவிட்டது. ஸ்ரேயா என்ற மாட்டை வைத்து நம்ம பதிவர்கள் சிலர் மாட்டுப்பொங்கல் செய்கின்றார்கள் என தன் கற்பனையில் சிறப்பாகவே எழுதியிருந்தார்.

பதிவர்களின் திறமையும் பொங்கல் கொண்டாட்டமும்


கீத்

கிருத்திகனின் பதிவுகள் அண்மைக்காலமாக பெரும்பாலும் சமூகம் சார்ந்தே காணப்படுகின்றது. சில இடங்களில் பேசாப் பொருளைக்கூட துணிச்சலாக பேசியிருந்தார். அண்மையில் இவர் எழுதிய ஒரு பதிவு இன்னொரு இணையத்தில் கூட உசாத்துணையாகச் சேர்த்திருந்தார்கள். இந்தப் பதிவில் சமூகவலைப்பின்னல்களின் பிரச்சனைகளையும் வெளிநாட்டு மோகத் திருமணங்கள் பற்றியும் அலசியிருக்கின்றார்.

சில சமபவங்கள், வருத்தங்கள்


லோஷன்

அதிகார மையத்தின் முன்னாள்த் தலைவர். சகலவிதமான பதிவுகளையும் தனக்கே உரிய பாணியில் எழுதுகின்றவர். நண்பர்களைக் கிண்டலடித்து பதிவு எழுதுவது என்பது இவருக்கு தனி இன்பம். யாழ் சென்றுவந்தபோது அந்த பயணத்தை படங்களுடன் இட்டிருந்தார். இவரின் எழுத்துக்கள் சொல்லாத பல விடயங்களை இவரின் கமேரா சொன்னது.

A 9 வழியாக யாழ்ப்பாணம் - ஒரு படப் பதிவு


மருதமூரான்

இவரின் பதிவுகள் மட்டும் தான் சீரியசானவை,ஆனால் இவரோ பழகுவதற்க்கு இனிமையானவர். தனக்குப் பட்டதை எந்தவித பூசிமொழுகலும் இல்லாமல் சொல்லும் தைரியம் தான் இவரிடம் எனக்கு பிடித்தது. இந்தப்பதிவிலும் சொந்த ஊருக்கு சென்ற வலிகளைச் சொல்கின்றார்.

இடம்பெயர்வது மட்டுமல்ல, சிதைந்த தேசத்தில் மீண்டும் கால் வைப்பதும் வேதனையானது.


மு.மயூரன்

கட்டற்ற கணணிக்காதலன் இவர், சர்ச்சைகளில் சிக்கும் பதிவுகள் எழுதுவது இவருக்கு மட்டுமே கைவந்த கலை. இவரின் சில வரிகளே பல கதைகளைச் சொல்லும். இந்தப் பதிவின் தலைப்பே பல விடயங்களைப் பற்றிக் கதைக்கின்றது. அதையே மு,மயூரனும் முதல் வரியில் குறிப்பிடுகின்றார். "ஏ ஆர் ரஹ்மான் இந்த சிகப்பழகு முகப்பூச்சு இசையின் அங்கீகரிக்கப்பட்ட வியாபாரியானார்". இந்த வரிகளை இப்போதைய காலநிலையில் சிந்தித்தால் பலவிடயங்கள் புரியும்.

செம்மொழி மாநாட்டுப் பாடல் எல்லாவற்றைப்பற்றியும் கதைக்கிறது


மயூரேசன்

இன்னொரு கணணிக் காதலன். கணணி தொழில்நுட்ப பதிவுகள், இடையிடையே சினிமா விமர்சனம் என எழுதுகின்றவர் எழுதிய வித்தியாசமான ஒரு வரலாற்றுப் பதிவு இது. இரண்டாம் உலகயுத்தம் பற்றிய இந்தப் பதிவு மயூரேசனின் தேடலை பறைசாற்றுகின்றது.

இலங்கையில் ஜப்பானியத் தாக்குதல்


மதிசுதா

குறுகிய காலத்தில் பதிவுலகம் முழுவது பிரபலமடைந்த பெருமை நம்ம சுடு சோற்றுப் புகழ் மதி சுதாவிற்கே சாரும். பதிவு எழுதி பிரசுரித்த கையுடன் இவரின் முதல் பின்னூட்டம் வந்துவிடும். பிரபல இயக்குனர் ஒருவரின் கதைத் திருட்டை அம்பலப்படுத்திய பதிவு இது.

இலங்கை கதை திருடிய பிரபல இயக்குனர்..


டொக்டர் எம்,கே.முருகானந்தன்

மருத்துவக் குறிப்புகளுடன் நல்ல நகைச்சுவைகள் சினிமா நூல் விமர்சனம் எனச் எழுதும் எங்கள் மருத்துவர். அண்மைக்காலமாக தன்னுடைய கமேராவினால் சுட்ட சில விடயங்களையும் பதிவாக்கியிருக்கின்றார். யாழ் மண்ணுக்கே உரிய தோட்டக்காணிகளை அழகாக படம் பிடித்ததுடன் மட்டுமல்லாமல் சின்னச் சின்ன குறிப்புகளுடன் அவற்றைத் தந்திருப்பது ரசனை.

யாழ்ப்பாணத் தோட்டங்கள்


பின்குறிப்பு : எங்கே என்னுடைய பெயர் என இதில் பெயரில்லாத நண்பர்கள் தேடாதீர்கள். இது முதலாம் பகுதி தான் அனைவரின் பதிவுகளையும் எழுதினால் பதிவு நீண்டுவிடும் என்ற நல்ல எண்ணத்தில் இரண்டாம் பகுதியில் ஏனைய நண்பர்களின் ரசித்த பதிவுகள் வரும். அப்படி அதிலும் இல்லையென்றால் நான் உங்கள் பதிவுகளை ரசிக்கவில்லை என்று அர்த்தமில்லை. சிலவேளைகளில் என் ஞாபகத்துக்கு உங்கள் பதிவுகள் வரவில்லை என்பதுதான் நிஜம்.

ஷங்கரின் எந்திரன்

சன் பிக்சர்ஸின் விளம்பரம், ரஜனி, ஐஸ்வர்யா ராய், ஷங்கர், ரகுமான், அமரர் சுஜாதா என பல பெரிய தலைகளின் கூட்டணியில் உருவான எந்திரன் படத்தை இரண்டாம் நாளான நேற்றுப் பார்க்கும் சந்தரப்பம் கிடைத்தது.

கதை :
இராம நாரயணனின் கதை போன்ற ஒரு ஃபன்டாசி கலந்த சயன்ஸ் பிக்சன் கதை. கதையின் நாயகன் சுஜாதா என்பதால் சில இடங்களில் மீண்டும் ஜீனோ, என் இனிய இயந்திரா சாயல் காணப்படுகின்றது. இயந்திர மனிதன் உருவானால் என்ன நடக்கும் என்ற ஹொலிவூட் பாணிக் கதை. AI (Artificial intelligence) வைத்து உருவான கதை. அதனால் கொஞ்சம் ஹைடெக் சமாச்சாரங்களான ஐபி எண், கொன்ரோல், ஆல்டர் டிலிட், சிலிக்கன் சிப், பைட் என பல விடயங்கள் வந்துபோகின்றது. விக்ரம் படத்தில் கொஞ்சம் விஞ்ஞானத்தை அக்னிபுத்திரன் வடிவில் செலுத்திய அமரர் சுஜாதா இதில் சிட்டியை பிரதானமாக்கி இருக்கின்றார்.



திரைக்கதை :
ஷங்கரின் வழக்கமான பிரமாண்டமான திரைக்கதை படத்தை தூக்கி நிறுத்துகின்றது என்றால் மிகையில்லை. பல இடங்களில் சுஜாதா கைகொடுத்திருக்கின்றார். அவர் உயிருடன் இருந்திருந்தால் இன்னமும் வேகமான திரைக்கதை கிடைத்திருக்கும். முற்பாதி கலகலப்பாக இருந்தாலும் பின் பாதியில் சில இடங்களில் இழுவை. ஷங்கரின் படங்களில் ஜீன்ஸுக்குப் பின்னர் கொஞ்சம் சறுக்கலான திரைக்கதையை இந்தப் படத்தில் தான் பார்க்கின்றேன்.

வசனம் :
சுஜாதா, ஷங்கர், கார்க்கி என மூவர் வசனம் எழுதியிருக்கின்றார்கள். விஞ்ஞான விடய வசனங்களில் சுஜாதா தெரிகின்றார். பல இடங்களில் ரஜனியின் பட பஞ்ச் டயலாக்குகளை இலகுவாக வசனமாக்கி இருக்கின்றார்கள். முன்னாடி கண்ணாடி என பஞ்சதந்திர கிரேசிமோகன் சாயலும் சில இடங்களில் ஏற்படுகின்றது தவிர்த்திருக்கலாம். விஞ்ஞான வசனங்கள் வருவதால் கிராமத்து மக்களுக்கு புரியுமா என்பது கேள்விக்குறி. ஆனால் கெளதம் வாசுதேவ மேனனின் படங்களுடன் ஒப்பிடும் போது தமிழில் வசனங்கள் பாராட்டத் தக்கது. மெல்லிய நகைச்சுவை கலந்த வசனங்கள் பல இடங்களில் சிரிக்கவும் சில இடங்களில் சிந்திக்கவும் வைக்கின்றது. குறிப்பாக யுத்தம் ஆயுதம் கணணி சம்பந்தப்பட்ட வசனங்கள் கலக்கல். அதிலும் ரோபோ சொல்லும் நா.முத்துக்குமாரின் கவிதை சூப்பரோ சூப்பர்.

இயக்கம் :
சிவாஜிக்கும் பின்னர் மீண்டும் ரஜனியுடன் இணையும் ஷங்கரின் அடுத்த படம் இது. ஆங்கிலப் படங்களுக்கு சவால் விடும் அளவிற்க்கு பிரமாண்டத்திலும் இயக்கத்திலும் ஷங்கருக்கு நிகர் அவர் தான். ஷங்கரின் ரசிகனாக அவர் ஒரு ஹொலிவூட் படம் இயக்க வேண்டும் என்பது என் ஆசை. ரஜனியை தனது தேவைக்கு ஏற்றபடி இந்தப் படத்தில் இயக்கி இருக்கின்றார், ஏனென்றால் அதிரடி ஆரம்பம், பஞ்ச் டயலாக், அறிமுகப் பாடல் என ரஜனியின் வழக்கமான படங்கள் போல் இதில் இல்லை. ஷங்கரின் முன்னைய படங்களுடன் ஒப்பிடும் போது சிவாஜியில் உள்ள விறுவிறுப்பு இதில் சில இடங்களில் குறைவு என்று தான் சொல்லவேண்டும்.



ரஜனிகாந்த்:
ரஜனி என்ற மந்திரச் சொல்லினால் தான் இந்தப் படம் இவ்வளவு பரபரப்பாக பேசப்பட்டது, படுகின்றது. சிவாஜிக்குப் பின்னர் நடித்த படம்,விஞ்ஞானியாக ஒரு வேடம் இன்னொரு பரிமாணத்தில் ரோபோவாக ஒரு வேடம். ரோபோ மூன்றுமுகம் அலெக்ஸ் பாண்டியனை நினைவூட்டுகின்றது. இன்னமும் விஜய், அஜித் போன்றோருக்கு ரஜனி போட்டியாகத் தான் இருப்பார் என்பது போல் இளமையாகவே இருக்கின்றார். ஆனாலும் அந்த உருவத்துடன் ஒட்டாத தாடிக் காட்சிகளில் முதுமை அப்பட்டமாகத் தெரிகின்றது. வில்லனாக வரும் காட்சிகளில் ஷங்கர் ரஜனியிடம் நீண்ட நாட்களுக்குப் பின்னர் நடிப்பையும் கறந்திருக்கின்றார். (ஒரு சில விமர்சர்கள் எழுதியதுபோல் விருது கொடுக்கும் அளவிற்க்கு எந்திரனில் ரஜனி நடிக்கவில்லை), தளபதிற்க்குப் பின்னர் ரஜனியின் ஸ்டைல் தான் நடிக்கின்றது ஒழிய அவரிடம் எவரும் நடிப்பை அவ்வளவாக வாங்கிக்கொள்ளவில்லை. ரஜனியிம் இனி ஷங்கர் போன்றவர்களின் படங்களில் நடித்தால் மீண்டும் அந்தக் கால ரஜனி கிடைப்பார்.

தன்னுடைய ரசிர்களின் எதிர்பார்ப்புகளை மீறி எந்தவிதமான பஞ்ச்கள், சண்டைகள் இல்லாமல் நடித்திருப்பது பாராட்டத் தக்கது. ரஜனிக்கே உரிய நகைச்சுவையுடன் ரோபோவை உலாவ விட்டதும் பாராட்டுக்குரியது. வில்லன் ரஜனி தற்போதைய வில்லன்களுக்கு போட்டியாக உருவாகிவிட்டார். சாதாரண ரசிகர்களுக்கு இந்த ரஜனியைப் பிடிக்கும் ஆனால் அவரின் ரசிகர்கள் சூப்பர் ஸ்டாரை இந்தப் படத்தில் தேடத்தான் வேண்டும்.

சிட்டி :
யார் இந்த நடிகர் என நினைக்கின்றீர்களா? வேறை யாருமல்ல ரோபோ ரஜனி தான். எப்படி சில நடிகர்கள் பாத்திரங்களுடன் ஒன்றுகின்றார்களோ அதுபோல் ரஜனியும் சிட்டியுடன் ஒன்றிவிட்டார். முதல்பாதியில் சிரிக்க வைக்கும் சிட்டி இரண்டாம் பாதியில் கிராபிக்ஸ் உதவியுடன் மிரட்டுகின்றார். ஐசுக்கு காதல் சொல்லும் இடங்கள் கலக்கல்.

ஐஸ்வர்யா ராய் :


உலகின் நிரந்தர அழகி அல்லது இந்த நூற்றாண்டின் அழகி வெள்ளித் திரையிலும் இன்னும் இளமையாகவே இருந்து மற்ற நடிகைகளின் வயிற்றெரிச்சலைக் கிளப்புகின்றார். இருவரில் பார்த்த மாதிரியே அதே அழகுடன் இருக்கின்றார். ஜீன்ஸில் 50 கேஜி தாஜ்மஹாலாக இருந்தவர் இதில் 40 கேஜியாக குறைந்தது போல் இருக்கின்றது. குறிப்பாக கிளிமஞ்சதாரோ பாடலில் ஐஸின் உடைகள் அபாரம், எந்த இடங்களிலும் அவரை ஆபாசமாகவோ கண்றாவியாக தோன்றவில்லை.

பல இடங்களில் நடிக்கவும் செய்கின்றார். அபிசேக் பச்சான் உங்கள் மனைவிக்கு திருஷ்டி சுற்றிப் போடுங்கள். ஐஸ்வர்யாவிற்கு மாற்றீடாக இன்னொரு நடிகையை சனாவின் இடத்தில் யோசித்தால் ஸ்ரீதேவி மட்டும் தான் ரஜனிக்குப் பொருத்தமாக இருப்பார்.

இசை :
ஏற்கனவே பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஹிட் என்கின்றார்கள். என்னுடைய பிளேயரில் கிளிமஞ்சதாரோ மெஹா ஹிட். புதிய மனிதா பாடல் ஆரம்பக் காட்சிகளுடன் ஒட்டவில்லை. ஏனைய பாடல்களில் வழக்கம் போல் ஷங்கர் வித்தியாசமாகவே எடுத்திருக்கின்றார். இதனை எப்போது மாற்றுவாரோ தெரியவில்லை. பின்னணி இசை ரசிக்கலாம் குறிப்பாக தீம் மியூசிக் கலக்கல்.

ஒளிப்பதிவு :
பாலாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவின் ஒளிப்பதிவு உலகத் தரம். பாடல்காட்சிகளிலும் சண்டைக் காட்சிகளிலும் அவரின் கடின உழைப்புத் தெரிகின்றது.

கலை :
சாபு சிரிலின் கை வண்ணத்தில் எது நிஜம் எது செட் எனத் தெரியவில்லை. அந்த ஆய்வுகூடமும் அதன் கலரும் பிரமிக்க வைக்கின்றது.



எடிட்டிங் :
ஆண்டனியின் கத்தரி தேவையான இடங்களில் அழகாகவே கத்தரித்துள்ளது. பிற்பாதியில் சில இடத்திலும் கத்தரி வைத்திருந்தார் படம் தொய்வில்லாமல் போயிருக்கும்.

சந்தானம் :
பாஸ் எ பாஸ்கரனில் சதமடித்தவர் இதில் டக் அவுட்டாகிவிட்டார்.

கருணாஸ்
திண்டுக்கல் சாரதிக்காக நன்றிக்கடனோ தெரியவில்லை.

ஜஸ்ட் 150 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் பின்னணியில் பலர் உழைத்திருக்கின்றார்கள் என்பது படம் முடிந்தபின்னர் காட்டும் பட்டியலில் தெரிகின்றது. ஐஸ்வர்யா ராயுக்கு குரல் கொடுத்தவர் தான் யார் என்பதைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. பின்னணியில் உழைத்தவர்கள் பலர் வெளிநாட்டினர். நிச்சயமாக தமிழ் வர்த்தக சினிமாவில் எந்திரன் ஒரு மைல் கல்லாகத் தான் இருக்கும்.

மொத்தத்தில் எந்திரன்
ரஜனி ரசிகர்களுக்கு - மினித் தீபாவளி
ஐஸ்வர்யா ரசிகர்களுக்கு - ஜொள்ளு மழை
ஷ்ங்கர் ரசிகர்களுக்கு - ஹொலிவூட் தரம்
சாதாரண ரசிகர்களுக்கு - பொழுது போக்குப் படம்

டிஸ்கி :
நான் பார்த்த தியேட்டரில் வெறும் 50 பேர் மட்டும் தான். காரணம் அந்த தியேட்டரில் முதன் முதலாக தமிழ்ப் படம் என்பதால் பலருக்குத் தெரியவில்லை. மற்றும் படி லண்டனில் பல இடங்களில் ஒரு நாளைக்கு எட்டுக் காட்சிகளுக்கு மேல் நடக்கின்றது.

படம் தொடங்குமுன்னர் ஒரு சில ஆங்கில அனிமேசன் படங்களின் ட்ரைலர் போட்டார்கள்.

எமக்குப் பின்னால் இருந்த சில பெண்களும் ஆண்களும் கடுப்பைக் கிளப்பினார்கள். பொது இடத்தில் எப்படி என்ன கதைக்கவேண்டும் என அவர்களுக்குத் தெரியவில்லை. வெள்ளைக்காரன் ஸ்டைல் ஆனால் வாய் திறந்தால் கூவம் தான். இவர்களின் பெற்றோர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

நீண்ட நாட்களின் பின்னர் நேற்றுத் தான் ஓய்வு கிடைத்தது, அதனால் தான் நீண்ட நாட்களின் பின்னர் ஒரு சினிமா விமர்சனம். இனி மன்மதன் அம்பு தான் திரையில்.

சமுத்திர சங்கீதம் - புதுமை , காதல் , அர்ப்பணிப்பு

சில புத்தகங்களை வாசிக்கத் ஆரம்பித்தால் அதன் கடைசிப் பக்கத்தில் முற்றும் வாசிக்கும் வரை நிறுத்தமுடியாது. என் வாசிப்பு அனுபவத்தில் பெரும்பாலான சுஜாதா கதைகள், பொன்னியின் செல்வன், செங்கைஆழியானின் நாவல்கள் இந்த அனுபவத்தை தந்தவை. அந்த வகையில் அண்மையில் சமுத்திர சங்கீதம் என்ற ஒரு புதுவகையான நாவலை அனுபவித்து வாசித்திருந்தேன்.

சமுத்திர சங்கீதம் திரு.புதுயுகன் என்ற எழுத்தாளரால் எழுதப்பட்ட ஃபாண்டசி அல்லது மெஜிக்கல் ரியலிசம் (தமிழ்ப் பெயர் தெரியவில்லை) எனப்படும் வகைக்குள் அடங்கும் நாவலாகும். ஒரு அம்புலிமாமா கருவினை பல தத்துவங்களுடனும் சிந்தனைகளுடனும் புதுயுகன் விறுவிறுப்பாகக் கொடுத்திருக்கின்றார்.

ஏட்ரியல் எட்மண்ட் என்ற இங்கிலாந்து நாட்டு எழுத்தாளர் இந்தியாவைப் பற்றி எழுதுவதற்கு தன் நண்பன் தாமஸின் ஊரான கன்னியாகுமரிக்கு வருகின்றார். அந்த அழகிய கடற்கரையில் அவர் ஒரு அழகிய மச்சக் கன்னியை சந்தித்து அவளின் மேல் அல்லது அதன் மேல் மையல் கொள்கின்றார். அதே நேரம் அவரது நண்பரான தாமஸின் சகோதரி கிறிஸ்டி ஏட்ரியலின் மேல் காதல் கொள்கின்றார். இடையில் வேதாச்சலம் என்ற பெரிய மனிதர் அந்த மச்சக் கன்னியை வைத்து பணம் சம்பாதிக்க நினைத்து வில்லனாக மாறுகின்றார். ஏட்ரியல் மச்சக் கன்னியுடன் சேர்ந்தாரா? கிறிஸ்டியின் காதல் நிறைவேறியதா? வேதாச்சலம் வெற்றி கண்டாரா? போன்ற விடயங்களை சுவாரசியமாக தனது கன்னி நாவலில் புதுயுகன் படைத்திருக்கின்றார். நாவலின் முடிவு எவராலும் எதிர்பார்க்க முடியாத‌து தான் இந்த நாவலின் வெற்றிக்கு காரணம் என நான் நினைக்கின்றேன்.

புதுயுகனின் கதை சொல்லும் பாணி வித்தியாசமானது ஒவ்வொரு அத்தியாய ஆரம்பங்களிலும் முதல் அத்தியாய முடிவுடன் ஒட்டியதான ஒரு தத்துவத்தை பாத்திரத்தினூடாக விளக்கி கதையைத் தொடர்கின்றார். வசனங்கள் யாதர்த்தமானவை மட்டுமல்ல ஆழமானதும் கூட. சில இடங்களில் ஆசிரியர் தன்னுடைய மெய்ஞான அறிவைக் காட்டியிருக்கின்றார். உதாரணமாக மரணத்தினை இலகுவாக விளக்கும் இடத்தைக் குறிப்பிடலாம்.

ஏட்ரியலும் தாமசும் மீனவக் குப்பம் ஒன்றில் எதிர்பாரத விதமாக சென்றபோது அவர்களின் விருந்தோம்பலை தவிர்க்கமுடியாமல் இருந்த இடத்தில் நடந்த உரையாடல் இது ;

"ஏட்ரியல் இவர்கள் அயல்நாட்டவரின் நட்புக் கிடைத்ததில் ரொம்ப பெருமை . அதனால் தான் உன்னை விடமாட்டேன் என்கின்றார்கள். எப்படி எங்கள் இந்தியர்களின் விருந்தோம்பல்?

உங்கள் விருந்தோம்பலைப் பற்றிச் சொல்ல வேண்டுமா? இருநூறு ஆண்டுகளாக நாங்கள் இங்கு விருந்தாளிகளாக இருந்தோமே! அதிலிருந்து தெரியவில்லையா?

தாமஸ் என்னை முறைத்தான்"

இதில் 200 ஆண்டுகளாக ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்தமையை ஏட்ரியல் விருந்தோம்பல் என்ற ரீதியில் கிண்டலாகச் சொல்ல தாமஸ் முறைத்தான் என்பது இன்றைக்கும் இந்தியர்கள் அதனை மறக்கவில்லை என்பதையே உணர்த்துகின்றது.

இப்படிப் பல இடங்களில் புதுயுகன் சிந்திக்க வைக்கின்ற வரிகளை எழுதியிருக்கின்றார். அத்துடன் பல பாத்திரங்கள் இல்லாமல் ஒரு சில பாத்திரங்களூடு கதையைக் கொண்டு சென்றதும் அவரின் ஆற்றலுக்கு சான்று. சாமுத்திரிகாதேவி என்ற பாத்திரம் சாமுத்திரிகா லட்சணம் என்ற எண்ணக் கருவில் உருவானது போல காட்டியிருப்பது சிறப்பானது.

தத்துவமசி என்கின்ற உபநிடத தத்துவத்தை அதாவது நீ எதுவாக எண்ணுகின்றாயோ அதுவாகவே ஆகின்றாய்" என்ற எண்ணக்கருவை இந்தக் கதையின் நாயகன் ஏட்ரியலின் பாத்திரம் உணர்த்துகின்றது. அத்துடன் இன்பம் போலியானது, இயற்கையுடன் கூடவே மனிதன் வாழவேண்டும் என்பது போன்ற தத்துவங்கள் அல்லது சிந்தனைகள் மிகவும் இலகுவாகவும் எளிதாகவும் விளக்கப்பட்டிருக்கின்றது.

"தன் இயல்பான மொழியில் பாசங்கில்லாத வெளிப்பாட்டில் ஒரு நாட்குறிப்பின் தொனியில் இந்த நாவல் நடையைப் புதுயுகன் அமைத்திருக்கின்றார். அதனால் வாசிப்பவர் மனதுக்குள் சோர்வைத் தராது சுகமாய் இடம் பிடித்து விடுகின்றது இவரின் நடை.

இவர் தெறிப்பான சிந்தனைகளுக்குச் சொந்தக்காரர் என்பதனை இந்தப் படைப்பின் வழி அறியமுடிகின்றது "

என கவிப்பேரரசு வைரமுத்து தனது வாழ்த்துரையில் குறிப்பிட்டுள்ளார்.

"காதலுக்குரிய கண்ணியம், கெளரவம் ஆகியவற்றை அமரர் கல்கி போலவே இவரும் தருகின்றார். அத்தியாயங்களின் எண்ணிக்கை மட்டும் கூடவில்லை கதையின் போக்கில் எதிர்பார்ப்பும் கூடுகின்றது."

என கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலத்தின் நிர்வாக அறங்காவலர் திரு.அ.வேதரத்னம் தன்னுடைய அணிந்துரையில் குறிப்பிடுகின்றார்.

லண்டன் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.அசோகன் த‌ன் அணிந்துரையில் நாவலைப் பற்றி மிகவும் சுருக்கமாக குறிப்பிட்டு இந்தக் கதை காதல் கதை நிறைந்த அனுபவத்துடன் புதுமையாக எழுதப்பட்டுள்ளது எனக் குறிப்பிடுகின்றார்.

பிரபல ஓவியர் ஜெ... என அறியப்பட்ட திரு.ஜெயராஜ் தன்னுடைய அணிந்துரையில் புதுயுகன் நம்மை ஒரு புதிய உலகத்திற்கே அழைத்துச் செல்கின்றார். அவருடைய எழுத்து நடை கடலலையின் அடுக்குத் தன்மையை மென்மையை நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றது என்கிறார்.

அவருக்கும் என்னைப்போல் முடிவு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றது. அவரின் ஓவியங்களும் நாவலுக்கு வலு சேர்க்கின்றது என்றால் மிகையில்லை.

ஒரு வித்தியமாசமான களத்தில் எதிர்பாரத முடிவுடன் நிறைவடைந்துள்ள இந்த நாவல் வாசித்தமை எனக்கும் ஒரு வித்தியாசமான அனுபவம் தான். இந்த நாவலை வாசித்தபின்னர் இன்னமும் மனதில் கன்னியாகுமரிக் கடற்கரையும், ஜென்னியும் ஏட்ரியலும் நிற்கின்றது.

புதுயுகன் :
திரு.டி.கே.ராமனுஜம்(ராம்) என்கின்ற புதுயுகன் "காந்தி காவியம்" புகழ் கவிராஜர் ராமானுஜனார் அவர்களின் பேரனாவார். தற்போது லண்டனிலுள்ள கல்லூரி ஒன்றில் துணை முதல்வராக‌ பணியாற்றுகின்றார். அண்மையில் நடந்த உலகத் தமிழ்ச் சொம்மொழி மாநாட்டில் ஆய்வுக்கட்டுரை வழங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவர் எனது விரிவுரையாளரும் கூட.

ஒருநாள் கல்லூரி உணவு அறையில் சும்மா பேசிக்கொண்டிருக்கும் போது என்னைத் தமிழர் என அறிந்தபின்னர் இலக்கியங்கள் பற்றி எம் பேச்சு திரும்பியபோது தான் திரு.ராம் அவர்கள் எனக்கு தன்னுடைய புத்தகத்தைப் பற்றியும் தன்னைப் பற்றியும் சின்ன அறிமுகம் செய்தார். இதுவரை அவரை ஒரு தொழில்சார் நிபுணராக பார்த்தேன் இனிமேல் அவரை ஒரு இலக்கியவாதியாகவும் பார்க்கவேண்டும்.

ஆங்கிலத்திலும் நிறையப் பாண்டித்தியம் பெற்றவர் என்பதால் இதனை பலர் கோரியதுபோல் ஆங்கிலத்திலும் விரைவில் மொழிபெயர்ப்பார் என நினைக்கின்றேன்.

சமுத்திர சங்கீதம் - புதுமை காதல் அர்ப்பணிப்பு

இளையதளபதி விஜயிடம் 32 கேள்விகள்

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
அம்மா அப்பா வைத்த இயற்பெயரான ஜோசப் விஜயை விட எனக்கு நானே ரசிக‌ர்கள் சார்பில் வைத்த இளையதளபதி பிடிக்கும், புதிய பெயரான டாக்டர் ரொம்ப ரொம்ப பிடிக்கும் வருங்காலத்தில் கிடைக்கும் முதல்வர் பெயரைக் கேட்கவே காது குளிருது.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
வில்லு ப்ரிவியூ ஷோவில்

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
புதிய பட கான்ராக்ட்டில் கையெழுத்துப்பிடிக்கும், ஆட்டோகிராப்பில் பிடிக்காது.

4.பிடித்த மதிய உணவு என்ன?
தயிர் சாதமும் வடு மாங்காவும்

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
கூட நடிக்கும் நடிகைகளுடன் மட்டும்

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
குளிப்பதை விட எனக்கு சோப்பு போடவே பிடிக்கும்

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
குஷி படத்திலிருந்து இடுப்பைப் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச விஷயம்: அது (ங்ணா பஞ்ச் டயலாக்ணோ)
பிடிக்காத விஷயம் : பத்திரிகையாளர் சந்திப்பு

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
எத்தனை கிசுகிசு வந்தாலும் பொறுமையாக இருப்பது

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
வேண்டாம்ணா சொன்னால் பிரபுதேவா வருந்துவார்

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
பச்சை மஞ்சள் நீலம் என மல்ரிகலர்

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
இணையத்தில் வெளியான வேட்டைக்காரன் பாடல்கள்

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
நம்ம ரேஞ்சுக்கு பேனாவாக ஆக முடியாது

14.பிடித்த மணம்?
ஜாஸ்மின்

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
அஜித். பிடித்த விடயம் எனக்கு போட்டியாக மொக்கை போடுவது, அவர் நன்னாப் பேஸ்வார்

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
வடிவேல். விஜயகாந்திற்க்கு எதிராக அவர் செய்த தேர்தல் பிரச்சாரப் பதிவுகள்.

17. பிடித்த விளையாட்டு?
கில்லி தாண்டு

18.கண்ணாடி அணிபவரா?
சிலவேளைகளில் கண்ணாடி அணிந்தால் அறிவாளிபோல் லுக் வருமாம்.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
சகல தெலுங்குப் படங்களும்

20.கடைசியாகப் பார்த்த படம்?
எம்ஜீஆரின் வேட்டைக்காரன்

21.பிடித்த பருவ காலம் எது?
ஸ்விட்சர்லாந்தின் குளிர்காலம்

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?
எம் எஸ் உதயமூர்த்தியின் தோல்விகளைக் கண்டு துவழாதே

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
மனைவி பார்க்கும் வரை மாற்றுவதேயில்லை

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ?
ஜிங்க் சக்

பிடிக்காத சத்தம்?
சைலண்ட்

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
இன்னும் நிலவிற்ககுத் தான் போகவில்லை

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
இதென்ன சின்னப்பிள்ளைத் தனமான கேள்வி, தனித் திறமை இருப்பதால் தானே நடிக்கிறேன்.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
ரீமேக் படங்கள் தோற்பது

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
போக்கிரி

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
ஈசிஆர் ரோட்டிலுள்ள பப்புகள்

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
பிரதம மந்திரியாக‌

31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
அதைத்தான் தினமும் செய்திட்டு இருக்கேனே ஜூவியில் கூட எழுதிட்டாங்கள்

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
வாழ்க்கை ஒரு வட்டம்

http://enularalkal.blogspot.com/2009/06/32.html

பின்குறிப்பு : இது ஏற்கனவே எழுதிய ஒரு பதிவின் மறுபதிப்பு. சுறாவின் பிரமாண்ட வெற்றியைப் பார்க்கும் போது இன்னும் இளைய தளபதி விஜய் மாறவில்லை என்பது தெளிவாகின்றது. கடந்த ஜூனில் அவர் அளித்த(கற்பனையில் தான்) பதில்கள் இன்றைக்கும் பொருந்துவதால் இந்த மீள்பதிவு.

கொலையுதிர் காலம்

நீண்ட நாட்களின் பின்னர் மீண்டும் அமரர் சுஜாதாவின் கொலையுதிர் காலம் வாசிக்க முடிந்தது. ஏற்கனவே இந்த நாவல் குமுதத்தில் தொடராக வந்தபோது அரைகுறையாக வாசித்த பின்னர் முழுநாவலாக நேற்றுத்தான் வாசித்து முடித்தேன்.

அறிவியலுக்கும் அமானுஷ்யத்துக்கும் இடையில் நிகழும் இந்த நாவலின் முடிவை சுஜாதா வாசகர்களிடமே விட்டுவிட்டார். அத்துடன் அவர் முன்னுரையில் இந்த அறிவியல் அமானுஷ்யம் போன்றவற்றுக்கு அடுத்த நூற்றாண்டிலும் பதில் கிடைக்காது என எழுதியிருந்தார்.

கதை இதுதான் கணேஷ், வசந்த் இருவரும் ஒரு சொத்துப் பிரச்சனை சம்பந்தமாக குமாரவியாசன் என்றவரையும் அந்த சொத்துக்குச் சொந்தக்காரியான 18 வயதே நிறைந்த எந்தக் குறையும் சொல்லமுடியாத அழகியான லீனாவையும் சந்திக்கின்றார்கள். லீனாவின் சொத்துக்கள் அவரின் 18 வயதின் பின்னரே அவரிடம் ஒப்படைக்கவேண்டும் என அவரது தந்தையின் உயிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவரை அந்தச் சொத்துக்களுக்கு பாதுகாவலராக அவரது சித்தப்பா குமாரவியாசனே இருந்துவந்தார்.



அவர்களின் பங்களாவையும் அதன் பின்பக்கமுள்ள‌ அரசமரம், சுனை போன்ற சிறிய காட்டுப் பக்கம் ஏற்படும் சில அமானுஷ்யங்கள் அந்த சொத்தில் ஏதோ பிரச்சனை இருப்பதையும் பங்களாவின் பின்பக்கம் அடுத்தடுத்து இருவர் கொலை செய்யப்படுவதும் இவையனைத்தும் கார்த்திகை மாதத்தில் மட்டுமே நடக்கும் என ஒரு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதும் அத்துடன் கணேஷ் வசந்துடன் காவல்துறையினரும் நேரடியாகப் பார்த்த புகைபோன்ற அந்த ஆவியின் உருவமும் அதனது பேச்சு அழுகையும் நடப்பை ஏதோ அமானுஷ்யம் என்ற முடிவுக்கு வந்தாலும் கணேஷ் அதனை நம்பாமல் இதில் விஞ்ஞானம் கலந்திருக்கின்றது என்ற முடிவில் விஞ்ஞான ரீதியாக ஆராய வசந்தோ அமானுஷ்ய ரீதியில் ஆராய இறுதியில் யாருமே எதிர்பார்க்கத ஒருவர் குற்றவாளியாக அறியப்படுகின்றார்.

முதல் அத்தியாம் தொடக்கம் கணேஷ், வசந்த் தங்கள் பாணியில் சிறப்பாக துப்பறிகின்றார்கள். வசந்தின் சில ஜோக்குகளை வழக்கம்போல் சுஜாதா இடையில் நிறுத்திவிடுகின்றார். மெக்சிகன் சலவைக்காரி ஜோக் போல் ஒரு ஜோக் இடையில் நிற்கின்றது.

லீனா என்ற கதை நாயகியின் குணாதிசயங்கள் பிரிவோம் சந்திப்போம் மதுவிதாவை ஒத்திருந்தாலும் மதிவிதாவை விட அழகியாகவே சுஜாதா வர்ணித்திருந்தார். "நிறைய அழகிகளை கணேஷ் பார்த்திருக்கின்றான் எல்லோரிடமும் ஏதாவது ஒரு குறை இருக்கும் மூக்கில்,உதட்டோரத்தில், பற்களில், குரலில், உடலமைப்பில் பருமனில், வாசனையில் தலைமயிரில் எங்கையோ ஒரு சின்ன தப்பிருக்கும், இவளிடம் இல்லை" என்ற வரிகளில் லீனாவை வர்ணிக்கும் சுஜாதா, ஒரு காட்சியில் லீனா சுனையில் ஆடைகள் இல்லாமல் நீந்துவதை கணேஷ் பார்க்கும் போது ஒரு உவமையைப் பாவிக்கின்றார் அதன் அர்த்தம் புரியவில்லை அந்தச் சொல் "படவரவல்குல்". அர்த்தத்தைக் கேட்க சுஜாதாவும் இன்றில்லை. லீனா குளிக்கும் காட்சியை சுஜாதா கொஞ்சம் வித்தியாசமாகவே வர்ணித்திருக்கின்றார். எப்படியென கொலையுதிர் காலம் வாசித்து அறிந்துகொள்ளுங்கள்.

ஆவிகளை அல்லது முப்பரிமாண உருவத்தை ஹோலோகிராஃபி மூலமும் அன்றையகால‌ (1981) லேசர் தொழில்நுட்பப் படியும் உருவாக்கலாம் என்பதையும் அது பற்றிய சில விஞ்ஞானக் குறிப்புகளும் கதையின் கடைசிச் சில அத்தியாயங்களில் பரவிக் கிடக்கின்றன. அந்தக் காலத்தில் புதிதாக அறிமுகமான பார்கோடுகளும் கதையில் இடம் பிடித்திருக்கின்றது. இன்றைய காலத்தில் முப்பரிமாண உருவங்கள், லேசர் போன்றவை மிகவும் இலகுவான அறியப்பட்ட விடயங்களாக இருந்தாலும் 1981லே சுஜாதா இவற்றைப் பற்றி எல்லாம் தொட்டுச் சென்றிருக்கின்றார் என நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கின்றது.

சுஜாதாவின் உவமானங்கள் பெரும்பாலும் அந்த அந்த கால கட்டங்களின் நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் சில இடங்களில் அந்த நாள் அரசியல்வாதிகள், குரானா காங்கிரஸ் சிக்கல் என சில இடங்களில் பளிச்சிட்டாலம் எனக்கு மிகவும் பிடித்த வரிகள். "கேஸ் இளையராஜாவுடைய இரண்டாவது சரணம் மாதிரிப் புதுப்பாதையில் பாய்ஞ்சுடுச்சு பாஸ்" என வசந்த் சொல்லும் வரிகளில் கேஸ் புதுப் பாதையில் பயணிக்கின்றது என்பதை அவர் அந்த கால இளையராஜா இசையுடன் ஒப்பிடுகின்றார். இதன் மூலம் இரண்டாவது சரணங்களில் புதிய பாணியை இளையராஜா கையாள்கின்றார் என்ற விடயமும் புலப்படுகின்றது.

சில அத்தியாயங்கள் இரவில் படிக்கும் போது கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. அமானுஷ்யங்கள் இருக்கோ? இல்லையோ? சுஜாதா அவற்றை விபரிக்கும் இடங்களில் இரவில் வாசிக்கும் போது துணிச்சலானவர்களுக்கே கொஞ்சம் பயம் ஏற்படும்.

நீண்ட நாட்களின் பின்னர் நல்லதொரு நாவலை வாசித்த சுகானுபவத்தை ஏற்படுத்தியது சுஜாதாவின் கொலையுதிர் காலம். வாசித்து முடித்த பின்னர் சுஜாதா அமானுஷ்யங்களை நம்புகின்றாரா? விஞ்ஞானத்தை நம்புகின்றாரா? என்ற சிக்கலான கேள்விக்கு பதில் கிடைக்கவில்ல்லை. காரணம் குற்றவாளி பிடிபட்டாலும் அவர் கொலை செய்த முறைகளோ? அந்த அமானுஷ்யங்களுக்கான குற்றவாளியின் பதில்களோ சொல்லப்படவில்லை. நீங்கள் அமானுஷ்யங்களை நம்புபவர் என்றால் அமானுஷ்ய வழிகளில் கொலைகள் நடந்தன எனவும், பகுத்தறிவுவாதி என்றால் ஹோலாகிராஃபி தொழில்நுட்பத்தால் அந்த அமானுஷ்யங்கள் இயங்கியனது எனவும் முடிவுகொள்ளலாம்.

இளைய தளபதி விஜய்க்கு ஒரு கடிதம்

வணக்கம் ங்ண்ணா

நலம் நலமறிய ஆவல், வேட்டைக்காரன் வசூல் வேட்டையாடுவதால் சந்தோஷமாக இருப்பீர்கள் என நம்புகின்றேன்.

நான் ஒரு சராசரி சினிமா ரசிகன். அதிகமாக தமிழ்ப் படங்களையும் சில தேர்ந்தெடுத்த ஹிந்தி, ஆங்கிலப் படங்களையும் பார்ப்பவன். அண்மைக்காலமாக உங்கள் படங்கள் ஒரே வகையான படங்களாக வருவது கவலையளிக்கின்றது. வருங்கால சூப்பர் ஸ்டார் நீங்கள் தான் என எதோ ஒரு அமைப்பு சில காலம் முன்னர் உங்களுக்கு விருது வழங்கியதை இந்த இடத்தில் நினைவூட்டுகின்றேன்.



ஆரம்ப காலங்களில் சங்கவிக்கு சோப்பு போட்டு மிகவும் சாதாரண நடிகனாக இருந்த உங்களை விக்ரமனின் பூவே உனக்காக படம் தான் அடுத்த கட்டத்திற்க்கு உயர்த்திச் சென்றது. அந்தப் படத்தினால் பல ரசிகர்கள் உங்களுக்கு உருவானார்கள் என்ற உண்மை உங்களுக்குத் தெரியும். அதன் பின்னர் காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும் போன்ற நல்ல படங்களில் நன்றாகவே நடித்திருந்தீர்கள்.

கமல், ரஜனி படங்களுக்குப் பின்னர் காதலுக்கு மரியாதை படம் தான் அதிகம் தடவை சிடியில் நான் பார்த்த படம். ப்ரியமானவளே, நினைத்தேன் வந்தாய், காதலுக்கு மரியாதை போன்ற ரீமேக் படங்களில் உங்கள் பங்கு சிறப்பாகவே இருந்தது.

இடையிடயே மின்சாரக் கண்ணா, நெஞ்சினிலே, உதயா போன்ற சில பப்படங்களைக் கொடுத்தாலும் ரசிகர்களின் மனதில் கில்லியாக உங்களை உயர்த்தியவர் தரணிதான். கில்லி படம் போல் விறுவிறுப்பான வேகமான திரைக்கதையுடன் அண்மைக்காலங்களில் உங்கள் எந்தப் படங்களும் வரவில்லை. சிலர் போக்கிரியை கில்லியின் வேகத்துக்கு ஒப்பிட்டாலும் கில்லிதான் என்றைக்கும் முதல்வன்.

அண்மைக்காலமாக அதிரடி மசாலாப் படங்களில் அதிகம் நடிக்கும் நீங்கள் ஏன் தற்போது பிரண்ட்ஸ், காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய், ப்ரியமானவளே போன்ற நல்ல காதல் கதைகளில் நடிப்பதில்லை. நீங்கள் குருவாக நினைக்கும் ரஜனிகாந்த் கூட நல்ல கதையம்சம் உள்ள படங்களிலும் நடித்திருக்கின்றார். அவரின் மசாலாப் படங்களில் கதையும் திரைக்கதையும் லாஜிக்குடன் பெரும்பாலும் இருக்கும். அவர் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் ஒருநாளும் லாஜிக் மீறி ஓடும் ரயிலுக்குத் தாவுவதோ, அருவில் குதித்து உயிர் தப்புவதோ இல்லை.

நீங்கள் மசாலாப் படம் நடிக்கவேண்டாம் எனச் சொல்லவில்லை, இடையிடையே நல்ல கதை அம்சமுள்ள படங்களிலும் நடிக்கலாமே இதுதான் இப்போதைய பல ரசிகர்களின் கருத்து.

நீங்கள் நடித்த ஆதி, குருவி, மதுர, வில்லு போன்ற படங்களை நீங்கள் மீண்டும் ஒரு தடவை பார்த்தீர்களா? அப்படிப் பார்க்கவில்லை என்றால் மீண்டும் ஒரு தடவை பாருங்கள்? எங்கே நீங்கள் சறுக்கியிருக்கின்றீர்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள்.

இனியாவது உங்களை சூப்பர் ஸ்டார் உயரத்திற்க்கு வைத்துக் கதை சொல்பவர்களிடம் இருந்து தப்பி பாசில், சித்திக், செல்வபாரதி போன்றோரின் நல்ல இயக்குனர்களிடம் பேரரசு போன்ற மசாலப் படங்களை சிறப்பாக இயக்கும் இயக்குனர்களிடம் கதை கேட்டு நல்ல படங்களில் நடியுங்கள். இல்லையென்றால் விஜய டி. ராஜேந்தர் போல் இணையங்களிலும் எஸ் எம் எஸ்களிலும் உங்களை பலர் வேட்டையாடுவார்கள்.

உங்களிடம் இருந்து நல்ல படங்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் மிகவும் சாதாரண ரசிகர்களை இனியும் ஏமாற்றிவிடாதீர்கள்.

மீண்டும் என்னைக் கடிதம் எழுதவைக்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் விடைபெறுகின்றேன்.

நன்றிகள்

இங்ஙனம்
உங்களின் ரசிகன்

பின்குறிப்பு : தயவு செய்து உங்கள் படங்களை சன் குழுமத்துடன் கொடுத்து வெற்றி என்ற மாயையில் விழுந்துவிடாதீர்கள்

2009ல் ரசித்த பதிவுகள் - பகுதி 2

2009ல் ரசித்த பதிவுகள் - பகுதி1

முதலாம் பகுதியில் ரசித்த பதிவுகளின் தொடர்ச்சியே இந்தப் பதிவாகும். ஒரு நாளைக்கு பல நூறு பதிவுகளில் மனம் கவர்ந்த பதிவுகளை ஓரளவுக்கேனும் ஞாபகம் வைத்து அவற்றில் சிறந்தவையாக நான் கருதியவையை மட்டுமே இங்கே தந்துள்ளேன்.

நிர்ஷன்
ஊடகவியலாளர் சக கமேராக் கலைஞரான நிர்ஷனின் பதிவுகளில் ஒரு சமூக அக்கறை எப்போதும் இருக்கும். சில நாட்களாக தன்னுடைய வேலைப் பளுவின் காரணமாக எழுதுவதில்லை என நேரில் கண்டபோது கூறினார்.

இலங்கை ஊடகங்களில் செய்தித் தவறுகள்…!

நிலா
உறுபசி என்ற வலையில் காத்திரமான பல கவிதைகளை எழுதுபவர். இவரின் கவிதைகளுக்கும் கட்டுரைகளுக்கும் என்னைப் போன்ற சிறியவர்களுக்கு மூஞ்சிப்புத்தகத்தில் விளக்கம் தருகின்றவர். சமீபகாலமாக ஏனோ எழுதுவதில்லை. எழுத்து மட்டுமல்ல பேச்சும் இவருக்கு சரளமாக வருகின்றது.

புத்தம்....

நர்சிம்
கோப்பரேட் கம்பர் என செல்லமாக அழைக்கப்படும் நர்சிமின் தமிழ் நடை அசத்தலாக இருக்கும். அவரின் பதிவுகள் பல இவரின் உரை நடைக்காவே அனைவராலும் வியக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ராகுல் திராவிட்: நிராகரிப்பை நிராகரித்தவன்..

பரிசல்காரன்
கிருஷ்ணகுமார்(இந்தப் பெயர் உள்ளவர் கலக்கல் எழுத்தாளர்கள்)என்ற இயற்பெயரை உடைய பரிசல் இன்னொரு பல்சுவை கலக்கல் எழுத்தாளர். பரிசலின் சினிமா விமர்சனத்தைப் வாசித்துப் படம் பார்க்கும் ரசிகர்களில் நானும் ஒருவன்.

நடிகர் விஜய்க்கு...

பனையூரான்
இன்னுமொரு என்னுடைய பாடசாலை மாணவன். கவிதைகளுடன் தன்னுடைய சமூக அனுபவங்களையும் அழகாக எழுதுகின்ற இளைஞர். இலங்கையின் கற்பகதருவான பனையைப் பற்றி இவர் எழுதிய பதிவு பல கதைகளைச் சொல்கின்றது.

அழகான அந்தப் பனை மரம்

பால்குடி
உயரத்தில் மட்டுமல்ல உள்ளத்திலும் உயர்ந்த பால்குடியின் பதிவுகளில் வடமராட்சி மண் மணக்கும். இவரின் கணிதப் புதிர்களுக்கு சிலவேளைகளில் தலையைப் பிய்த்தாலும் எப்படியோ விடை கண்டுபிடித்துவிடுவேன்.

நினைத்துப் பார்க்கத்தான் முடிகிறது.

கே.ரவிஷங்கர்
சினிமா, இசை, கதைகள் எனப் பல்சுவையாக எழுதும் ரவிசங்கரின் இசைப் பதிவுகள் பல எனக்குப் பிடித்தமானவைக்கு காரணம் இளையராஜா தான். பெரும்பாலான இசைப் பதிவுகளை அனுபவித்து எழுதும் ரவிஷங்கரின் எழுத்தை வாசிக்கும் போது அதே சுகம் கிடைக்கும்.

இளையராஜாவின் வயலின் ரங்கோலி

சினேகிதி
காத்திரமான பதிவுகளை எழுதும் சினேகிதி அண்மைக் காலமாக எழுதுவதைக் குறைத்துள்ளார். புலம்பெயர் மக்களின் பிரச்சனைகளுடன் சில மனோதத்துவ விடயங்களையும் சினேகிதி எழுதியுள்ளார்.

உங்களுக்கும் எனக்குமாய் சில குறிப்புகள் , கேள்விகள்

சர்வேசன்
அழிப்பவன் அல்ல அளப்பவன் எனச் சொல்லிக்கொண்டு பல கருத்துக் கணிப்புகளையும் சினிமா, இலக்கியம் என பல்சுவைகளிலும் எழுதும் சர்வேசனின் பொன்னியின் செல்வன் in a nut shell. பொன்னியின் செல்வன் ரசிகர்களினால் அதிகம் பாராட்டுப் பெற்றதுடன் சில விவாதங்களும் நடந்தன.

பொன்னியின் செல்வன் in a nut shell.

சதீஸ்
என்றும் ப்ரியமுடன் உங்கள் பிரியமானவனாக வலை எழுதும் ஒலிபரப்பாளரான சதீஸ் பெரும்பாலும் சினிமா, கிரிக்கெட் இடையிடையே ச்மூகம் சார்ந்த கருத்துக்களை எழுதுகின்றார். நயந்தாராவின் அந்தரங்கத்தை எட்டிப் பார்த்த சன் டிவியைச் சாடி எழுதியது இந்தப் பதிவு

நயன்தாராவை சங்கடப்படுத்திய சன் டி.வி

சந்ரு
பெரும்பாலும் தன்னுடைய கருத்துக்களை எந்தவிதமான பயமுமின்றி எழுதும் சந்ரு. அரசியல், சமூகம் இடையிடையே சினிமா, கவிதை, நகைச்சுவை என பலசுவைகளில் எழுதுகின்றவர். அண்மைக்காலத்தில் சர்ச்சைகளும் இவருடன் கூட வருகின்றன. எப்போதும் சீரியசாக எழுதும் சந்ருவின் இந்த நகைச்சுவைப் பதிவு தான் ஏனோ என்னைப் பெரிதும் கவர்ந்தது.

காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள்...

சுபாங்கன்
ஐந்தறைப் பெட்டியில் ஆரம்பத்தில் தொழில்நுட்ப சக சமூக அக்கறைப் பதிவுகளாக எழுதிய சுபாங்கன் தற்போது பெரும்பாலும் நகைச்சுவைப் பதிவுகளும் எழுதுகின்றார். அத்துடன் சுபாங்கனின் அனுபவப் பதிவுகள் மிகவும் சுவாரசியமானவை. அந்த வகையில் இந்தப் பதிவில் சுபாங்கன் பெண்களைப் பற்றி நல்லதொரு ஆராய்ச்சியே செய்திருக்கின்றார்.

பஸ்சில் பயணிக்கும் நாகரீக நங்கையர்

சுபானு
ஊஞ்சலாடும் சுபானு தொழில்நுட்பம் கவிதை விஞ்ஞானக் கதை என பல்சுவையாக எழுதுபவர். அவரின் 3A எடுத்துப்பார் கவிதை யதார்த்ததிற்க்கு அருகில் இருக்கின்றது.

3A எடுத்துப்பார்

தர்ஷன்
அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் சமூகம் சார்ந்த பதிவுகளை எழுதுகின்றார் தர்ஷன். சில காலமாக ஒன்றிரண்டு பதிவுகளே எழுதிய தர்ஷன் அண்மைக் காலமாக நிறையவே நிறைவாக எழுதுகின்றார்.

ஜனாதிபதித் தேர்தலில் என்ன செய்யலாம்

தூயா
என்னுடைய அன்புக்குரிய பங்கு. புலத்தில் தமிழ் படித்து அழகாக எழுதும் பெண். தூயாவின் சமையல்கட்டில் பல இளைஞர்களுக்குப் பயனுள்ள சமையல் குறிப்புகளை வழங்கி அவர்களின் வாழ்க்கையில் சுவையான உணவுகளை உண்ணவைத்தவர். தன்னுடைய இன்னொரு வலையில் அரசியல், சமூகம் சில மொக்கைகள் என எழுதியவர் துரதிஷ்டவசமாக அண்மையில் அந்த வலையை வைரஸ் தாக்கிவிட்டது. அந்த வலையில் அவர் எழுதிய பேஸ்புக் பதிவு மிகவும் கவர்ந்தது, அதன் சுட்டியைத் தரமுடியாமல் இருப்பதால் சமையல் குறிப்பில் ஒரு சுவையான சமையல்.

வெண்டிக்காய் பால்கறி
வரோ
வான்மீகி என்ற பெயரில் எழுத ஆரம்பித்து இன்று வரோ என்ற பெயரில் தன்னுடைய பதிவுகளை எழுதுகின்றார். அரசியல், சினிமா, விளையாட்டு, சிறுகதைகள், ஒரு தொடர்கதை என தன்னுடைய பதிவுகளில் எழுதும் வரோ ஒரு ஊடகவியலாளரும் கூட.

குடாநாட்டு நடப்பு

உண்மைத்தமிழன்

எந்தவொரு விடயத்தையும் அழககாவும் சிறப்பாகவும் எழுதும் உண்மைத்தமிழன். அரசியல், சினிமா, பலசுவை என எழுதிக்குவிக்கும் இவரின் வலை அண்மையில் வைரசினால் பாதிக்கப்பட்டது. இவரின் இந்தப் பதிவில் ஒரு நிகழ்வை நேரடியாகப் பார்த்த அனுபவம் கிடைக்கும்.

கலைஞர் கருணாநிதிக்கு கலை உலகப் படைப்பாளி விருது - பாராட்டு விழா நிகழ்ச்சிகள்..!

யோகா
சமூகம், சினிமா, விளையாட்டு, நகைச்சுவை எனப் பல தடங்களில் பயணித்த யோகா சமீப காலமாக ஏனோ எழுதுவதைக் குறைத்துவிட்டார். ட்விட்டரில் கூட அவரைக் காண்பது அரிது. 2010ல் தன்னுடைய பழைய ஃபோர்முக்கு வருவார் என நினைக்கின்றேன்.

ஹர்பஜன் சிங் - சுய அறிக்கை

யுவகிருஷ்ணா
லக்கிலுக்காக அறியப்பட்டு இன்றைக்கு யுவகிருஷ்ணாவாக இருக்கும் நண்பர் லக்கியின் பதிவுகள் பலராலும் வியந்து பாராட்டப்படுபவை. ஒரு காலத்தில் தினமும் 3 அல்லது 4 பதிவுகளை இட்ட லக்கி இப்போது இடையிடையே எழுதினாலும் வீச்சு மட்டும் குறையவில்லை. அரசியல், சினிமா, கதை, பின்நவீனத்துவம் என பலதையும் கட்டி ஆளும் வல்லமை படைத்தவர். இவரது பதிவுகளில் காணப்படும் எள்ளல் சிறப்பாகும்.

வேட்டைக்காரன்

2009ல் ரசித்த பதிவுகள் - பகுதி 1

2009ல் உலகம் எப்படி இருந்தது நாட்டு நடப்புகள் எப்படியிருந்தது என ஒரு தொகுப்பு இடலாம் என நினைத்தேன் ஆனாலும் சில விடயங்களை விட்டுவிட்டும் போக முடியாது. சில விடயங்களை வெளிப்படையாக சொல்லவும் முடியாது. காரணம் உலகமே கண்ணை மூடிக்கொண்டிருந்த ஆண்டு இந்த ஆண்டு ஆகவே நானும் வழக்கம் போல் கண்ணை மூடிவிட்டேன். சொந்தச் செலவில் சூனியத்தை வைக்க விரும்பவில்லை. அதனால் இந்த ஆண்டில் என்னை அதிகம் கவர்ந்த சில பதிவுகளை பதிவர்களுடன் தருகின்றேன்.

திரட்டிகளூடாகவும் நான் பிந்தொடர்பவர்களினதும் பதிவுகளில் பலவற்றை ரசித்து வாசித்திருந்தாலும் அவற்றில் மனதில் நிற்பவற்றின் சுட்டிகள் மட்டும் தருகின்றேன்.

அச்சுதன்
பங்குச்சந்தை பற்றி தினமும் பதிவு எழுதுகின்றவர். தன்னுடைய துறையின் மேல் இவர் வைத்திருக்கும் ஈடுபாடு பாராட்டுக்குரியது. பங்குகளின் வீழ்ச்சி வளர்ச்சி என பலரும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் சிறப்பாக எழுதுகின்றார்.

பங்கு வர்த்தகம் சூதாட்டமா?

அசோக்பரன்
அதிகமாக அரசியல் பதிவுகளை எழுதுகின்றவர், இவரின் மொழி ஆளுமை பலரால் சிலாகித்துப் பேசப்படுவது. இலங்கை ஜனாதிபதித் தேர்தல் பற்றி ஒரு தொடர் எழுதுகின்றார்.

இலங்கையில் தமிழ் சினிமா இல்லாதது கவலைக்குரியது

ஆதிரை
காட்டிக் கொடுத்த 'விசா'ப்பிள்ளையார் என்ற இவரின் பதிவில் வெள்ளவத்தையில் பிரபலமான விசாப் பிள்ளையார் பற்றிய சிறிய குறிப்புகளை தனக்கே உரிய பாணியில் எழுதியிருந்தார். காத்திரமான பதிவுகளை எழுதும் இவர் இடையிடையே சீரியசான மொக்கைப் பதிவும் ரசிக்கும் படி எழுதுகின்றார்.

காட்டிக் கொடுத்த 'விசா'ப்பிள்ளையார்

ஆயில்யன்

"நண்பனுக்கும் சகோதரனுக்கும் இடைப்பட்ட ஒர் உறவுக்கு, பெயர் இருந்தால் அதை நான் கானா பிரபா என்றே அழைப்பேன்" என நட்புக்கு புது இலக்கணம் வகுத்த ஆயில்ஸின் அனுபவப்பகிர்வுகள் அனைத்தும் ரசிக்கும் படி இருக்கும்.

பாலிடெக்னிக் - வரைந்தும் வரையாமலும்..!

பாலவாசகன்
ஆறாவது அறிவைப் பற்றி இவர் எழுதிய தொழில்நுட்பப் பதிவு, அடிக்கடி கவிதை சினிமா விமர்சனம் சமூகம் பற்றிய பார்வைகள் என பல விடயங்களை யாழ்ப்பாணத்தில் இருந்து எழுதும் மருத்துவபீட மாணவன் இவர்.

ஆறாவது புலன்…தகவல் தொழில் நுட்ப உலகில் ஒரு புதிய புரட்சி…!

பவன்
நன்றாக மொக்கை போடும் இவரின் போட்டோ கொமெண்ட்ஸ் பதிவுகள் மிகவும் சுவாரசியமானவை. கிரிக்கெட் வீரர்களின் படம் கிடைத்தால் போதும் சிங்கம் கொமெண்ட் அடித்தே அவர்களைக் கிண்டல் அடிக்கும்.

என்ன பேசி இருப்பாங்க ???

புல்லட்
அதிரடியாக நகைச்சுவைப் பதிவுகளை எழுதுபவர். இவரின் பதிவுகள் பலவற்றை வாசிக்கும் போதே வாய்விட்டுச் சிரிக்கவைக்கும் வல்லமை இவருக்கு கை வந்த கலை. அண்மையில் ஒரு அரசியல்வாதி பற்றி தன்னுடைய ஒரு பதிவில் எழுதி அந்த விடயத்தை நினைத்து நினைத்து சிரிக்கவைத்தார். ஆனாலும் பாமன் கடை அனுபத்தினால் பல இளைஞர்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கின்றார் என்றால் அது மிகையாகாது.

பாமன்கடை பயணிகளுக்கு எச்சரிக்கை. ..

கேபிள்சங்கர்
இவரின் சினிமா விமர்சனங்களினால் எத்தனையோ பேர் மொக்கைப் படங்களைப் பார்க்காமல் தங்கள் பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்தியிருக்கின்றார்கள். இவரின் கொத்துப் பரோட்டாவில் வரும் ஜோக்கும் குறும்படமும் கலக்கலாக இருக்கும்.

இசையெனும் ”ராஜ” வெள்ளம்

சேரன் கிரிஷ்
எண்ணிக்கையில் குறைந்தளவு பதிவுகள் எழுதினாலும் அவை அனைத்தும் காத்திரமாக எழுதும் சேரன் தன்னுடைய அனுபவங்களை மிகவும் சுவை பட எழுதுபவர். இவரின் கேலாங் பற்றிய பதிவு, வெள்ளவத்தைக் காதலர்கள் மற்றும் அண்மையில் யாழ் பயணத்தின் ஒரு அவலம் என்பன முக்கியமானவை.

வெள்ளவத்தை கடற்கரையும் அவசரப்பட்ட காதலர்களும்

டொன் லீ
சிங்கையில் பதுங்கு குழியில் இருக்கும் டொன்லீ இப்போது பதிவுலகை விட ட்விட்டரில் குடித்தனம் நடத்தவே அதிகம் விரும்புகின்றார். தன்னுடைய ஐரோப்பிய விஜயத்தை சுவாரசியமாக எழுதியிருக்கின்றார்.

ஐரோப்பிய திக்விஜயம் I

டயனா
அறிந்ததும் அனுபவமும் என தன்னுடைய பதிவுகளை இடைக்கிடையே எழுதும் டயனா ஒரு ஒலிபரப்பாளரும் கூட. தன்னுடைய ஒலிபரப்பு அனுபவங்களை விட சினிமா ஏனைய விடயங்களை இடையிடையே எழுதுகின்றார்.

Titanic சாதனையை தகர்க்கவரும் சினிமாவின் புது அவதாரம் - AVATAR

கீர்த்தி
சிந்தனைச் சிறகில் சிறகடிக்கும் இந்த கவிதாயணி அண்மையில் ஒரு மொக்கைக் கவிதைகூட எழுதிப் பரபரப்பானர். அடிக்கடி கவிதையும் இடையிடயே ஏனைய விடயங்களையும் எழுதுகின்றார்.

பாரதி கண்ட பெண்கள்

ஜாக்கி சேகர்
உலக சினிமாவில் பல நல்ல படங்களைப் பற்றி விமர்சிக்கும் ஜாக்கியின் பதிவுகளில் அவரது சாண்ட்வெஜ் அன்டு நான்வெஜுல் விஷுவல் டேஸ்ட்டில் தன் கமேரா ரசனையும் ஏனைய விடயங்களையும் அழகாகவே எழுதுவார். தன்னுடைய மனைவி வெளிநாடு சென்றதை இட்டு தன்னுடைய தனிமையையும் அவரது சில நாள் பிரிவையும் அழகாக எழுதிய இந்தப் பதிவு பலருக்கும் பிடித்தது.

என் இல்லாளின் முதல் வெளிநாட்டு பயணம்

கனககோபி
கங்கோன் என செல்லமாக அழைக்கப்படும் கோபி மொக்கைப் பதிவுகளை விட சில நல்ல மொழிபெயர்ப்புப் பதிவுகளை சமூக நலன் சார்ந்த பதிவுகளையும் எழுதியிருக்கின்றார், அண்மைக்காலமாக இவர் பதிவு எழுதுவதை விட டிவிட்டரில் குடியிருப்பதையே விரும்புகின்றார்.

2009 இல் வாழ்வதை அறிவது எப்படி...

கரவைக்குரல்
அமீரகத்தில் இருந்து சில காலம் எழுதிய கரவைக்குரல் என்கின்ற தினேஷ் தற்போது இங்கிலாந்தில் இருப்பதால் அதிகமாக எழுதுவதில்லை. இவரது எழுத்துக்களில் ஈழத்து மண்வாசனை அதிகம் மணக்கும்.

வல்லிபுரத்தில் கடல் தீர்த்தம்

கானாபிரபா
தன்னுடைய அனுபவங்களையும் ரசனையையும் அழகாக எழுதும் பிரபா, ஒரு சினிமா கலைக்களஞ்சியம் கூட சினிமா சம்பந்தமான எந்த சந்தேகங்களையும் உடனடியாக தீர்க்கும் பிரபா அண்ணை உலாத்துவதிலும் மன்னன். இப்போது தன்னுடைய காதல் கதையை மன்னிக்கவும் நண்பர்களின் காதல் கதையை அழகாக ஆரம்பித்து வைத்திருக்கின்றார்.

"16 வருஷங்களுக்கு முந்திய காதல் கதை"

கிருத்திகன்
கீத் என செல்லமாக அழைக்கப்படும் கிருத்திகனின் மெய் சொல்லப் போறேனில் அவரின் துணிச்சலான பல கருத்துகளும் கிரிக்கெட் பதிவுகளும் மிகவும் பிடித்தாலும் அவரின் பாடசாலை நாட்கள் பற்றிய இந்தப் பதிவுதான் என்னை மிகவும் கவர்ந்தது.

துள்ளித் திரிந்த காலம்

கெளபாய் மது
பேசாப் பொருள்களை அதிகம் பேசும் மது, சில நாட்களாக கொஞ்சமாகவே எழுதுகின்றார். இறுதியாக இவர் எழுதிய ஒரு நகைச்சுவைப் பதிவு ஒன்று பலராலும் பாராட்டப்பட்டது காரணம் நகைச்சுவையிலும் மது பாவித்த வசனங்கள். இவரின் பாலியல் வல்லுறவும் ஆண்களும் பலரால் படிக்கப்பட்ட பதிவு என் நண்பர் ஒருவர் இந்தப் பதிவின் ரசிகர்.

ஒரு பெண் - நான் - ஒரு காலியான இருக்கை

லோஷன்
நாடறிந்த ஒலி/ஒளிபரப்பாளர் பல்சுவை எழுத்தாலும் பலரைக் கவர்ந்தவர். ஆனாலும் அதிகமாக கிரிக்கெட் பற்றி எழுதி கிரிக்கெட் பதிவர் என்ற முத்திரையையும் குத்திக்கொண்டார். இவரின் கிரிக்கெட் பதிவகளை ஏனைய பதிவுகளில் இருக்கும் எள்ளல் பலராலும் பாராட்டப்படுகின்றது.

விஜய் நடிச்சா தாங்க மாட்டோம்?????

மருதமூரான்
காத்திரமான பதிவுகளை எழுதுபவர். அத்துடன் சிறப்பாக சினிமா விமர்சனங்களையும் நடுநிலையாக எழுதுகின்றவர். கிருத்திகன் போல் இவருடைய எழுத்துகளும் என்னை பல சமயங்களில் பிரமிக்கவைத்தன. காரணம் இருவருடைய வயதும் தான். சிறிய வயதில் விஸ்தீரமான சிந்தனை உடையவர்கள் இவர்கள் இருவரும்.

‘கமல்ஹாசன்’ என்கிற திரைத்துறை ஆளுமை.

டொக்டர் முருகானந்தன்
நாடறிந்த எழுத்தாளர், மருத்துவர். இவரது சினிமா விமர்சனங்களைப் வாசித்து பல படங்களைப் பார்த்து ரசித்தவன் நான். இவரது மருத்துவக் கட்டுரைகளில் இருக்கும் நகைச்சுவையுடன் கூடிய விடயங்கள் வாசகர்களை கவர்வதில் வியப்பில்லை.

மணமுறிவுகள் ஏன்? எந்தப் பொருத்தம் முக்கியமானது?

மு.ம‌யூரன்
நீண்ட நாட்களாக வலையுலகில் கலக்கிக்கொண்டிருக்கும் மயூரனின் பதிவுகள் பெரும்பாலும் தொழில்நுட்பம் சமூக சிந்தனை உடையவைகளே. அண்மையில் இவர் எழுதிய இணையக் கனிமை பலராலும் பாராட்டுப் பெற்றது.

Cloud Computing: மழை பெய்யுதா பிழை செய்யுதா?

மயூரேசன்
இலகு தமிழில் பெரும்பாலும் தொழில்நுட்ப பதிவுகள் எழுதுபவர். சிலவேளைகளில் சினிமா விமர்சனத்துடன் தன்னுடைய சில அனுபவங்களையும் பதிவாக இட்டிருக்கின்றார். இவரின் கூகுல் வேவ் பதிவினால் அலையடிப்பவர்களில் நானும் ஒருவன்.

Google Wave ஒரு அறிமுகம்

முரளிகண்ணன்
பலதரப்பட்ட விடயங்களை எழுதும் முரளிகண்ணணும் ஒரு சினிமாக் கலைக் களஞ்சியம். சினிமா சம்பந்தப்பட்ட பல விடயங்களை தன்னுடைய வலையில் அழகாக தருபவர்.

திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை - மனதிற்க்கு தோன்றிய சில காரணங்கள்.

நிமல்
கமேராக் கலைஞரான நிமல் பல்சுவையாக எழுதுபவர். அதிக வேலைகாரணமாக சில நாட்கள் ஓய்வெடுக்கபோகின்றேன் என பதிவே இட்டவர். ஆனாலும் பதிவர் சந்திப்புகளில் பலகோணங்களில் படம் எடுப்பவர்.

நேர்முகத் தேர்வு - சில குறிப்புக்கள்


பின்குறிப்பு : எங்கே என்னுடைய பெயர் என இதில் பெயரில்லாத நண்பர்கள் தேடாதீர்கள். இது முதலாம் பகுதி தான் அனைவரின் பதிவுகளையும் எழுதினால் பதிவு நீண்டுவிடும் என்ற நல்ல எண்ணத்தில் இரண்டாம் பகுதியில் ஏனைய நண்பர்களின் ரசித்த பதிவுகள் வரும்.

"பா" - திரை விமர்சனம்

தந்தை மகனாகவும் மகன் தந்தையாகவும் நடித்திருக்கும் இல்லை இல்லை வாழ்ந்திருக்கும் படம் தான் பா. அமிதாப், அபிஷேக் வித்யா பாலன் என ஒரு சில குறிப்பிட்ட பாத்திரங்களுடன் சிறந்த கதையினாலும் இசையினாலும் மனதைக் கொள்ளையடித்துவிட்டது.



கதை

ஆரோ(அமிதாப்) progeria என்ற நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன். அதாவது இந்த நோய் வந்தவர்கள் தங்கள் வயதை விட அதிகம் வயதுடைய தோற்றம் உடையவர்களாகக் காணப்படுவார்கள். ஆரோவின் பாடசாலைப் பரிசளிப்பு வைபத்துக்கு பிரதம விருந்தினராக வரும் அமோல்(அபிஷேக்)சிறுவன் ஆரோவின் வெள்ளையடிக்கப்பட்ட பூமிப் பந்தைப் பார்த்துக் கவர்ந்து அந்தச் சிறுவனுக்கு சிறந்த மாணவன் விருதை வழங்குகின்றார். அத்துடன் அந்தச் சிறுவனின் நிலையைப் பற்றி ஊடகங்களுக்கும் அறிவித்தும் விடுகின்றார். இதனால் ஆரோவைத் தேடி அவனது பாடசாலைக்கு ஊடகங்கள் முற்றுகை இட இதனால் ஆத்திரமடைந்த ஆரோ இதற்க்கு காரணமான அமோலுக்கு தன்னுடைய எதிர்ப்பை மின்னஞ்சல் செய்கின்றான். இதிலிருந்து ஆரோவுக்கும் அமோலுக்குமான உறவு ஆரம்பிக்கின்றது.

அமோல் யார் என்றால் ஆரோவின் தந்தை என்பதையும் அவருக்கும் வித்யாவிற்க்கு(வித்யா பாலன்)இடையிலான காதலில் கருத்தரித்தவன் தான் ஆரோ என்பதை ஒரு பாடலில் சொல்லிவிடுகின்றார் இயக்குனர். இந்த வேண்டாத கர்ப்பத்தால் வித்யா அமோலை விட்டுப் பிரிந்துவிடுகின்றார்.

ஆரோ தன் தந்தை அமோல் தான் என்பதை அறிந்தாரா? வித்யாவும் அமோலும் சேர்கின்றார்களா? என்பதை 2 மணித்தியாலம் 15 நிமிடங்களில் சொல்லும் கதை தான் ஹிந்தியில் வெளியான பா(Paa).

ஆரோ :



நெடிதுயர்ந்த கம்பீரமான குரலில் பார்த்துப் பழக்கப்பட்ட அமிதாப் பச்சனை வயது போன தோற்றத்தில் வித்தியாசமான குரலில் ( ஒரு பாடல் கூடப் பாடியிருக்கின்றார்)பார்ப்பது புதுமை. எந்தவொரு இடத்திலும் அமிதாப்பை தெரியவில்லை ஆரோ தான் தெரிந்தான்(ர்). தன்னுடை கண்களாலே சில இடங்களில் குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் நடித்திருப்பார். எத்தனையோ கான்கள் வந்தாலும் எப்படி அமிதாப்பால் இன்றைக்கும் ஹிந்தி சினிமாவில் நின்று நிலைக்க முடிகின்றது என்ற கேள்விக்கு தன் நடிப்பாலே பதில் சொல்லியிருக்கின்றார். தான் ஒரு நோயாளி என்பதைத் வெளிக்காட்டாமல் மற்றவர்களுடன் சேர்ந்து விளையாடுவதும் நக்கல் நையாண்டிகள் செய்வதும் ஆரோவின் வயது 12 தான் என்பதை உணர்த்துகின்றது. சில படங்களில் மாற்று ஆற்றல் உள்ளவர்களை ஏனைய நண்பர்கள் கிண்டலடிப்பார்கள், ஆனால் பாவில் கிளைமாக்ஸ் காட்சிக்கு உதவிய சிறுமியைத் தவிர ஒருவர் கூட ஆரோவின் இயலாமையை கிண்டல் செய்யவில்லை. அமிதாப்பின் குரலும் ஒப்பனையும் நேர்த்தி.

திரைக்கதை :

ஒரு சோகமான செண்டிமென்டான கதையை நகைச்சுவை, காதல், அரசியல் பழிவாங்கல்கள், பாசம் என்ற பல கலவைகளினூடாக கொண்டு சென்றிருக்கின்றார் இயக்குனர் பால்கி. ப்ப்ப்பா என ஜெயாப் பச்சான் திரைப்படத்தின் கலைஞர்கள் ஒவ்வொருவராக தன் குரலினூடக அறிமுகப்படுத்துவதுடன் அறிமுகம் அமிதாப் பச்சான் என்பதிலிருந்து ஆரம்பித்த திரைக்கதை, தொய்வில்லாமல் இடைவேளை வரை செல்கின்றது. இடைவேளையில் அதிர்ச்சியான ஒரு விடயத்தை எந்தவித ஆர்ப்பாடமும் இன்றிச் சொல்வதில் நிறுத்தி மீண்டும் அடுத்த பாதியில் சில இடங்களில் சுவாரசியத்தைக் குறைத்தாலும் குறையில்லாத திரைக்கதையாகவே இருக்கின்றது.

வசனம் :

படத்தின் பலமே வசனங்கள் தான்( ஹிந்தி தெரியாவிட்டாலும் ஆங்கில சப் டைட்டில் காப்பாத்திவிட்டது). அமோலும் ஆரோவும் பேசுமிடங்கள் அதிலும் அரசியல்வாதிகள் ஏன் வெள்ளை உடை அணிந்திருக்கின்றார்கள் என்பதற்க்கு ஆரோ கொடுக்கும் விளக்கத்தில் தியேட்டரே கலகலத்தது. வித்யா பாலனும் அவரது அம்மாவும் ஒரே வசனத்தில் கர்ப்பத்தை என்ன செய்வது எனப் பேசுவது எனப் பல இடங்களில் வசனங்கள் கூர்மையாக இருக்கின்றன.

இயக்கம் :

ஏற்கனவே "சீனி கம்" என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிய பால்கியின் இரண்டாவது படம் இது. ஆரம்ப காட்சிகளில் இருந்து இறுதிக்காட்சிவரை நேர்த்தியான இயக்கம். அதிலும் ஒரு சோகமான கதையை சுவாரசியமாக கொண்டு சென்றது பாராட்டத்தக்கது. அத்துடன் ஒருவித்தியாசமான கதைக் களத்தில் ( சில வேளைகளில் கதையின் சாயல் அஞ்சலியை நினைவுபடுத்தினாலும் அது வேறை இது வேறை)ஒரு சில பாத்திரங்களை மட்டும் வைத்துக்கொண்டு திறம்பட இயக்கியிருக்கின்றார்.

இசை அல்லது இளையராஜா :

ஞானியின் இசைகளில் பாடல்கள் ஏற்கனவே கேட்ட மெட்டுகளாக இருந்தாலும் அந்த அந்த இடங்களுக்கு பொருந்துவது சிறப்பு. பின்னணி இசையிலும் படத்தின் தீம் இசையிலும் ராஜா சக்கரவர்த்தியாக நிற்கின்றார். ஆரம்ப காட்சிகளில் வரும் வயலினும் தன்னுடைய பாடல்களை தானே மெருகேற்றித் தருவதிலும் இசைஞானியாக இருக்கின்றார். இந்தப் படத்திற்க்கு ராஜாவின் இசைக்கு விருது வழங்காவிட்டால் அந்த விருதுகளுக்குத் தான் இனி அவமானம்.

ஒளிப்பதிவு :

இன்னொரு நம்மவர் பி.சி.ஸ்ரீராமின் ஒவ்வொரு காட்சிகளும் கண்ணில் நிற்கின்றன. சில கமேராக் கோணங்களும் குளோசப் காட்சிகளும் வர்ணிக்க வார்த்தைகள் அற்றவை. ஒரு காட்சியில் வித்யா பாலனினதும் அமிதாப்பினதும் முகம் மட்டும் திரையை இருவரின் கண்ணீருடன் நிறைக்கும் சிம்ப்ளி சூப்பர்.



அபிஷேக் :

அப்பாவுடன் போட்டி போட்டு நடிக்கவேண்டிய பாத்திரம், தன்னால் முடிந்ததைச் செய்திருக்கின்றார். சில இடங்களில் குருவில் பார்த்த நடிப்பு. குறைசொல்லமுடியாத அளவிற்க்கு நடித்திருக்கின்றார்.

வித்யா பாலன் :

ரேவதி, சுஹாசினி இருவருக்கும் பின்னர் சிறந்த நடிப்பை இந்தப் படத்தில் காட்டியுள்ளார். முகத்தினாலையே பல இடங்களில் அழுகின்றார், கேள்வி கேட்கின்றார் காதல் வயப்படுகின்றார். தமிழில் நல்ல படங்கள் கிடைத்தால் நடிக்கலாம்.

ஆரோவின் தந்தை, வித்யாவின் தாய், ஆரோவின் நண்பன் விஷ்ணுவாக வரும் அந்தச் சிறுவன், ஆரோவின் ந‌ண்பியாக வரும் அந்தச் சிறுமி( கோல்ட் வின்னர் விளம்பரச் சிறுமி)போன்ற பாத்திரங்களும் தங்கள் பங்கை திறம்படச் செய்திருக்கின்றார்கள்.

நேர்த்தியான கதை, திரைக்கதை, நடிப்பு, இயக்கதால் பா எல்லோர் மனதையும் நிச்சயம் கவரும். படம் பார்த்துவிட்டு வெளியே வரும் போது எழுந்த கேள்வி தமிழில் ஏன் எப்படி வித்தியாசமான கோணங்களில் கதைகள் வருவதில்லை?

"பா" ர்த்தேன் ரசித்தேன்

பின் குறிப்பு : தியேட்டரில் ஜேம்ஸ் கமரூனின் அவதார் படத்தின் ட்ரையிலர் போட்டார்கள், மிரட்டியிருக்கின்றார்கள். வேட்டைக்காரன் வெளியாகும் 18 ந்திகதி உலகமெங்கும் வெளியாகின்றது அவதார்.

பேராண்மை - திரை விமர்சனம்

நீண்ட நாட்களின் பின்னர் தமிழில் வெளிவந்த சாகசப்(Adventure) படம். இயற்கையில் அழகான கடற்கரையில் தன் ராட்சியத்தை அமைத்த இயக்குனர் ஜனநாதன் இம்முறை காட்டுக்குள் ராட்சியம் நடத்தியிருக்கின்றார்.

கதை :

ஜெயம் ரவி ஒரு பழங்குடி இனத்தைச் சேர்ந்த காட்டு இலகா அதிகாரி, அவரின் கீழ் பயிற்சி பெறும் ஐந்து அழகிய பெண்கள், ரவியின் மேலதிகாரி பொன்வண்ணன். ரவியும் அந்த 5 பெண்களும் காட்டினுள் பயிற்சிக்காகச் சென்றபோது 16 வெள்ளைக்காரத் தீவிரவாதிகளைக் காண்கின்றார்கள், அவர்கள் இந்தியா ஏவும் ராக்கெட்டை அழிக்க வருகின்றார்கள், அந்த தீவிரவாதிகள் ராக்கெட்டை அழித்தார்களா? ரவிக்கு என்ன நடந்தது? 5 பெண்களும் என்ன ஆனார்கள் என்பதை முற்பாதியில் நொண்டியடித்து பிற்பாதியில் ராக்கெட் வேகத்தில் சொல்லும் கதை.

திரைக்கதை :

முதல்பாதியில் அடங்காப்பிடாரிகளான 5 பெண்களும் ரவியைப் படுத்துப் பாடுகளையும் பொன்வண்ணன் அவரை சாதீய ரீதியில் திட்டும் காட்சிகளிலும் திரைக்கதை கொஞ்சம் இழுவையாக இருந்தாலும் இரண்டாம் பாதியில் காட்டில் நடக்கும் காட்சிகளில் கைதட்டுவைக்கின்றது. குறிப்பாக முதல் 2 தீவிரவாதிகளையும் கொல்வதற்க்கு ரவி செய்யும் உத்திகளும் அவருக்கு உறுதுணையான பெண்களின் உதவிகளும் கலக்கல். அதே நேரம் கிளைமாக்ஸ் காட்சியில் இராட்சத உருவம் கொண்ட வில்லனுடன் ரவி மோதும் காட்சிகளும் பெண்களை துர்க்கை, காளி, பராசக்தி என விழித்து இடம் பெறும் பாடலும் சாமானிய சினிமாத்தனமாக இருந்தது.



வசனம் :

ஜனநாதன் தன்னுடைய வசனங்களினால் பல இடங்களில் பொதுவுடமைக் கருத்துகளைத் தூவுகின்றார். இரட்டை அர்த்த வசனங்களை விட்டுவைத்த தணிக்கை குழு சாதீய ரீதியிலான வசனங்களை ஏன் வெட்டினார்களோ தெரியாது? இப்படியான காட்சிகள் வசனங்கள் மூலம் சாதீக் கொடுமைகளை வெளியில் கொண்டு செல்லக்கூடாது என உயர்சாதித் தணிக்கைக் குழுவினர் எண்ணியிருந்தனரோ தெரியவில்லை ( தணிக்கைக் குழுவில் இருப்பவர்கள் உயர்சாதியினர் என நண்பர் ஒருவர் தெரிவித்தார்).

இயக்கம் :

இயற்கையில் காலடி எடுத்து வைத்த ஜனநாதன் முதல்படத்தில் பலரைத் திரும்பிப் பார்க்க வைத்தவர், பின்னர் ஈயில் மருத்துவ சீர்கேடுகளை ஒரு கைபார்த்தவர் இம்முறை தீவிரவாதத்தைக் கையிலெடுத்திருக்கின்றார். ஆனால் முதல் இரண்டு படங்களிலும் முகம் சுழிக்காமல் பார்க்கச் செய்தவர் இந்தப் படத்தில் அதிகமான இரட்டை அர்த்த வசனங்களும் பெண்னொருவரின் ஜட்டியை அவரின் நண்பர்கள் கழட்டுவது, அரைகுறை ஆடைகளுடன் பெரும்பாலும் இரவு உடைகளுடன் மாணவிகளை உலாவவிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

ஜெயம் ரவி :

பெரும்பாலும் ரீமேக் படங்களில் கஸ்டப்படாமல் நடித்துவந்த ஜெயம் ரவிக்கு இந்தப் படம் நல்ல பெயரை நிச்சயம் கொடுக்கும். தன்னை கேவலப்படுத்தும் மாணவிகளிடமும் சரி, மேலதிகாரியிடமும் சரி தன் கோபத்தைக் காட்டாமல் மிகவும் சாந்தமாக இருந்தவர், காட்டில் மரங்களில் ஏறுவதிலும் மலைகளில் ஏறுவதிலும் காடுகளுடன் தனக்கு அதிகம் பரிச்சயம் இருப்பதுபோல் செய்துகாட்டியுள்ளார். அத்துடன் கதாநாயகி இல்லாமல் வளர்ந்துவரும் நடிகர் ஒருவர் நடிக்க ஒப்புக்கொண்டமையே பெரிய விடயம்.



கதாநாயகிகள் :

யாரென்றே அறிமுகம் இல்லாத‌ 5 பெண்கள் தான் படத்தின் கதாநாயகிகள். அஜிதா என்ற பாத்திரத்தில் வரும் பெண் தன்னுடைய பங்கை நன்றாகச் செய்திருக்கின்றார். ஏனையவர்கள் முதல் பாதியில் ரவியை சீண்டுவதும் இரவு ஆடைகளுடன் நடமாடுவதும் என்றிருந்தாலும் இறுதிச் சண்டைக் காட்சியில் விஜயசாந்திபோல் செய்ய முயற்சி செய்திருக்கின்றார்கள். கொஞ்சம் தெரிந்த பழகிய முகங்களைப் போட்டிருக்கலாம்.

வெள்ளைக்கார வில்லன் :

ஜிம் பாடியை விட இரண்டு மடங்கு பெரிதான உடலுடன் தோன்றும் வெள்ளைக்கார வில்லன் பெரும்பாலும் சண்டைதான் போடுகின்றாரே ஒழிய அவருக்கு நடிக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனாலும் மனிசன் அநாயாசமாக சண்டைபோடுகின்றார், சுடுகின்றார், குத்துகின்றார்.

பொன்வண்ணன் :

ரவியின் மேலதிகாரியாக அடிக்கடி ரவியை சாதீய ரீதியில் தாக்கிக்கொண்டு பின்னர் ரவி செய்த செயலைத் தான் தான் செய்தது எனச் சொல்லும் நியமான மேலதிகாரி வேடம். ஏற்கனவே அஞ்சாதேயில் பார்த்த வேடம் போல் இருந்தாலும் சிறப்பாகவே செய்திருக்கின்றார்.

ஒளிப்பதிவு :

படத்தின் இன்னொரு கதாநாயகன் ஒளிப்பதிவாளர் சதீஸ்குமார்.அடர்ந்த காடுகள், மலைகள், அருவிகள், ஆறு, பள்ளத்தாக்கு என சகல இயற்கைகளையும் நேரில் பார்ப்பதுபோன்ற தெளிவான ஒளிப்பதிவு.

இசை :

வித்தியாசகரின் இசையில் ஒரு பாடல் கேட்கும் தரமாக இருக்கின்றது. ஏனைய பாடல்கள் இடைச் செருகல்கள் தான். பின்னணி இசை சுமார்தான். இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம்.

படத்தொகுப்பு :

V.T.விஜயன் ஆரம்பக் காட்சிகள் சிலவற்றிலும் சில சண்டைக்காட்சிகளிலும் கத்திரி வைத்திருந்தால் படத்தின் வேகம் அதிகரித்திருக்கும்.

நிறைவுகள்

1. நீண்ட நாளின் பின்னர் நல்லதொரு படம்
2. ஜெயம் ரவியின் நடிப்பு
3. இயக்கம், சில இடங்களில் வசனங்கள்
4. ஒளிப்பதிவு

குறைகள்

1. ஜெயம் ரவியே அடுத்து இதுதான் நடக்கபோகின்றது என சொல்வது.
2. பல இடங்களில் லொஜிக் மீறல் அதிலும் ஜெயம் ரவி வெள்ளைக்காரர்கள் ராக்கட்டைத் தாக்கத்தான் வருகின்றார்கள் என எப்படிக் கண்டுபிடித்தார்?
3. இரட்டை அர்த்த வசனங்களும் மாணவிகள் விடுதி லூட்டிகள்
4. 5 பெண்களின் பாத்திரத்தையும் ஒரே மாதிரிக் காட்டியது.
5. பாடல்கள், இசை.

சில பல குறைகள் இருந்தாலும் பார்க்ககூடிய நல்லதொருபடம.

பேராண்மை - பெருமை

பின்குறிப்பு : நான் ஒரு பாடாவதித் தியேட்டரில் தான் படம் பார்த்தேன். (அங்கேதான் வெளியிட்டிருக்கின்றார்க்ள்), சீட் எல்லாம் கிழிந்த நிலையில் தியேட்டர் நிர்வாகம் சீட்டுகளை மாற்றாவிட்டால் நட்டத்தில் தான் ஓடவேண்டும்