ஹாட் அண்ட் சவர் சூப் 30-12-2009

ஜனாதிபதித் தேர்தல்

நாளொரு குற்றச் சாட்டும் பொழுதொரு கட்சித் தாவலுமாக ஜனாதிபதித் தேர்தல் நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. கொழும்பு மாநகரை அலங்கரித்த கட் அவுட்டுகள் யாவையும் அகற்றப்பட்டுவிட்டன. சில நாட்களுக்கு முன்னர் கதாநாயகர்களாக இருந்தவர்கள் இன்றைக்கு வில்லனாகி மாறிவிட்டார்கள். நண்பர்களாக இருந்தவர்கள் எதிரிகளாக மாறிவிட்டார்கள். நாட்டுமக்களின் ஞாபக மறதி வாழ்க.

அரச தரப்பினால் பாரிய அளவில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகின்ற அதே வேளை எதிர்த் தரப்பு ஏனோ அடக்கிவாசிக்கின்றது. மதில் மேல் பூனையாக தமிழ்க் கூட்டமைப்பும் என்ன செய்வது என முடிவெடுக்க முடியாமல் திணறுகின்றது. புது வருடத்தின் பின்னர் தேர்தல் இன்னமும் சூடு பிடிக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.

தெலுங்கானா

தனி தெலுங்கானா மாநிலக் கோரிக்கை வலுவடைந்துள்ள நிலையில் ஒரு கிழமைக்கு முன்னர் இந்தப் பிரச்சனைக்கு இரு நாட்களில் தீர்வு காணப்படும் என மன்மோகன் சிங் அறிவித்திருந்தார் (ஆதாரம் : சன் செய்திகள்). ஆனாலும் இன்னமும் ஒன்றும் முடிந்தபாடில்லை. இதனால் மீண்டும் ஆந்திராவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தெலுங்கானா தனிமாநிலமாக அறிவிக்கப்பட்டால் மேற்குவங்கத்தைப் பிரித்து கூர்க்காலாந்து அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டுள்ள அதே நேரம் ஏனைய மாநிலங்கள் சிலவும் தனி மாநிலக் கோரிக்கைகளை விடுக்கின்றதாக செய்திகள் வருகின்றன.

2009ல் பதிவுலகம்

இன்னும் ஒரு நாளுடன் 2009க்கு விடைகொடுக்கவேண்டியதுதான், நாட்கள் மிகவும் வேகமாக ஓடுகின்றன. 2009ல் பதிவுலகத்திலும் பல நிகழ்ச்சிகள் நடந்தேறியுள்ளன. பல புதியவர்கள் புதுவிதமான கருத்துக்கள், எண்ணங்களுடன் தங்கள் வலைகளை விரித்திருக்கின்றார்கள்.

அரசியலைப் பொறுத்தவரை வருட ஆரம்பத்தில் முத்துக்குமாரில் ஆரம்பித்து பின்னர் இந்திய நாடாளமன்றத் தேர்தல், ஒபாமா, உண்ணாவிரதங்கள், மனிதச் சங்கிலிகள், முள்ளிவாய்க்கால் என கொஞ்ச நாட்கள் சூடுபிடித்து பின்னர் கொடநாடு, இலங்கை ஜனாதிபதித் தேர்தல், தெலுங்கானா என வருட இறுதிவரை சூடு குறையாமல் எழுதியிருக்கின்றார்கள்.

வருடத்தின் ஆரம்பத்தில் வில்லு படத்தைக் காய்ச்சியவர்கள் இறுதியில் வேட்டைக்காரனைக் காய்ச்சுகின்றார்கள். இடையில் உன்னைப் போல் ஒருவன், கந்தசாமி, ஆதவன் என்பன பதிவர்களுக்கு செமையான தீனி போட்ட படங்கள் இவர்களின் சினிமாப் பதிவுகளுக்கு கரு கொடுத்தன. ஆஸ்கார் நாயகன் ரகுமான், இளையராஜா எனப் பதிவுகள் இன்னமும் நீள்கின்றன.

இலக்கிய ரசிகர்களுக்கு சாருவும், ஜெயமோகனும், ஞாநியும் பூச்செண்டு கொடுத்து மகிழ்ந்தார்கள். இவர்களின் சர்ச்சை என்றைக்கும் முடியாதது.

மூத்த ப‌திவர் சிந்தாநதியின் மறைவு பதிவுலகத்திற்க்கு பேரிழப்பாகும். அத்துடன் ஒரு சில வேண்டத்தகாத நிகழ்வுகளும் நடந்தாலும், இலங்கைப் பதிவர் சந்திப்புகள், சென்னைப் பதிவர் சந்திப்புகள், சிங்கைப் பதிவர்கள் சந்திப்புகள், ஈரோடு பதிவர் சந்திப்பு என பல சந்திப்புகள் நடந்தாலும் அமீரகப் பதிவர்களின் சந்திப்பும் சுற்றுலாவும் அதனைத் தொடர்ந்து "அண்ணாசி அழைக்கின்றார்" என அவர்கள் வெளியிட்ட நகைச்சுவைக் குறும்படமும் தான் இந்த வருட பதிவர்களின் மைல் கல் எனலாம்.

கிரிக்கெட்

இந்திய இலங்கை அணிகள் மோதிய தொடர் இறுதிப்போட்டி நடைபெறாமலே முடிந்துவிட்டது. டெல்லி மைதானம் வீரர்களுக்கு பாதகமாக அமைந்தபடியால் போட்டி இடை நிறுத்திவிட்டார்கள். இனிமேலும் இப்படியான மைதானங்களை இந்திய கிரிக்கெட் வாரியம் தயார் செய்யுமா? காரணம் இம்முறை உலகக் கிண்ணத்தை நடத்தும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

அவுஸ்திரேலியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியின் இறுதிநாள் இன்று எப்படியும் போட்டியில் ஒரு முடிவு கிடைக்கும் போல் தெரிகின்றது. அண்மைக் காலமாக சதமடிக்க தடுமாறிய வாட்சன் ஒருமாதிரி சதமடித்துவிட்டார். முகமட் யூசுப்பும் மத்திய தர வீரர்களும் பொறுப்பாக ஆடினால் பாகிஸ்தான் வெற்றி பெறலாம்.

தென்னாபிரிக்கா இங்கிலாந்து போட்டியில் இங்கிலாந்தின் ஆதிக்கம் அதிகமாக காணப்படுகின்றது. இங்கிலாந்தின் வெற்றிக்கு இன்னும் 4 விக்கெட்டுகளே தேவை. பெளச்சரும் மோர்னே மோர்கலும் பொறுப்பாகவும் நிதானமாகவும் விளையாடினால் இங்கிலாந்திடம் இருந்து வெற்றியைத் தட்டிப் பறிக்கலாம். விளையாடுவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம். இந்த 2 போட்டிகளுடனும் இந்த வருடத்திற்கான கிரிக்கெட் போட்டிகள் நிறைவு பெறுகின்றன. இந்த வருடம் ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்களை இந்திய அணித்தலைவர் மகேந்திர சிங் டோணியும் விக்கெட்டுகளை ஆஸியின் வேகப் பந்துவீச்சாளர் மிச்சல் ஜோன்சனும் எடுத்திருக்கின்றார்கள்.

சின்னத் திரை

விசாரணை

கலைஞர் தொலைக்காட்சியில் க்ரைம் கதை மன்னன் ராஜேஸ்குமாரின் கதைகளை திங்கள் தொடக்கம் வியாழன் வரை நான்கு நாட்களுக்கு ஒரு கதை என விசாரணை என்ற பெயரில் தொடராக்கி வெற்றியும் கண்டிருக்கின்றார்கள். மிகவும் வேகமாகச் செல்லும் கதை பார்ப்பவர்களை நிச்சயம் கவரும். க்ரைம் பிராஞ்ச் காவல்துறை அலுவலகர் விவேக்காக சாக்சி சிவா அருமையாக பொருந்தியிருக்கின்றார். அவரது உதவியாளர் விஷ்ணுவாக ஷ்யாம் நடிக்கின்றார். விஷ்ணு பாத்திரம் சுஜாதாவின் வசந்தை நினைவூட்டுகின்றது. ஆனாலும் இதுவரை விவேக்கின் மனைவி ரூபலா வரவேயில்லை. ஏற்கனவே சுஜாதாவின் கதைகள் சில க்ரைம் தொடராக வந்தாலும் இந்த தொடர் கவர்ந்தது போல் அது கவரவில்லை, ஆண்டுக் கணக்காக மெஹா இழுவையாக இழுக்கும் சீரியல்களுக்கு மத்தியில் விசாரணை பாராட்டத்தக்கது.

சித்ராவும் மதுமிதாவும்

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியரில் நேற்று முந்தினம் பாடகர்கள் பாடிய முதல் பாடல் சுற்று நடந்தது. அதில் பாடகி மதுமிதா கலந்துகொண்டார். அவரது பாடலைப் பாட வந்த குழந்தையிடம் தன்னுடைய பாடலைக் கெடுக்கவேண்டாம் என அறிவுறுத்தினார். அதே நேரம் சித்ரா அவர்களோ தன்னுடைய பாடலைப் பாட வந்த குழந்தையிடம் தன்னை விட அழகாகப் பாடும் படியும் கேட்டுக்கொண்டார். சில காலமாகப் பாடும் மதுமிதாவிற்க்கும் சித்ராவிற்க்கும் எவ்வளவு வித்தியாசம். இதைத்தான் நிறைகுடம் தளம்பாது என்பார்களோ.

சிட்டிபாபுக்கு கண்டனங்கள்.

கிறிஸ்துமஸ் தினத்தில் சன்னில் நம்ம விஜய டி.ராஜேந்தரினை சிட்டிபாபுவும் அம்மும் பேட்டி கண்டார்கள். பல்துறைவித்தகர் ஒருவரை சிட்டிபாபு மிகவும் கேவலமாக நடத்தினார். ராஜேந்தரின் பொறுமை இடைக்கிடை குழம்பி சிட்டிபாபுவை கொஞ்சம் கண்டித்தார். யாரிடம் என்ன கேள்விகள் கேட்பது என்பது ஒரு காமெடி ஜாம்பவானுக்குத்( எத்தனை படங்களில் காமெடி செய்தார் மதுரை முத்துவைத் தான் கேட்கவேண்டும்)தெரியாதோ. சன் தொலைக்காட்சியினர் இன்னமும் ஏன் இப்படியான அரைகுறைகளை வைத்திருக்கின்றார்களோ. வரும் விருந்தினர்களுக்கு மரியாதை கொடுக்கத் தெரியாதவர்கள் எல்லாம் பேட்டி காண்கின்றார்கள், நடுவராக இருக்கின்றார்கள்.

இந்த ஆண்டின் கலக்கல் நாயகி தமன்னாவுடன் இந்த வருடத்தின் சூப் இனிதே நிறைவுறுகின்றது.அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்.

2009ல் ரசித்த பதிவுகள் - பகுதி 2

2009ல் ரசித்த பதிவுகள் - பகுதி1

முதலாம் பகுதியில் ரசித்த பதிவுகளின் தொடர்ச்சியே இந்தப் பதிவாகும். ஒரு நாளைக்கு பல நூறு பதிவுகளில் மனம் கவர்ந்த பதிவுகளை ஓரளவுக்கேனும் ஞாபகம் வைத்து அவற்றில் சிறந்தவையாக நான் கருதியவையை மட்டுமே இங்கே தந்துள்ளேன்.

நிர்ஷன்
ஊடகவியலாளர் சக கமேராக் கலைஞரான நிர்ஷனின் பதிவுகளில் ஒரு சமூக அக்கறை எப்போதும் இருக்கும். சில நாட்களாக தன்னுடைய வேலைப் பளுவின் காரணமாக எழுதுவதில்லை என நேரில் கண்டபோது கூறினார்.

இலங்கை ஊடகங்களில் செய்தித் தவறுகள்…!

நிலா
உறுபசி என்ற வலையில் காத்திரமான பல கவிதைகளை எழுதுபவர். இவரின் கவிதைகளுக்கும் கட்டுரைகளுக்கும் என்னைப் போன்ற சிறியவர்களுக்கு மூஞ்சிப்புத்தகத்தில் விளக்கம் தருகின்றவர். சமீபகாலமாக ஏனோ எழுதுவதில்லை. எழுத்து மட்டுமல்ல பேச்சும் இவருக்கு சரளமாக வருகின்றது.

புத்தம்....

நர்சிம்
கோப்பரேட் கம்பர் என செல்லமாக அழைக்கப்படும் நர்சிமின் தமிழ் நடை அசத்தலாக இருக்கும். அவரின் பதிவுகள் பல இவரின் உரை நடைக்காவே அனைவராலும் வியக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ராகுல் திராவிட்: நிராகரிப்பை நிராகரித்தவன்..

பரிசல்காரன்
கிருஷ்ணகுமார்(இந்தப் பெயர் உள்ளவர் கலக்கல் எழுத்தாளர்கள்)என்ற இயற்பெயரை உடைய பரிசல் இன்னொரு பல்சுவை கலக்கல் எழுத்தாளர். பரிசலின் சினிமா விமர்சனத்தைப் வாசித்துப் படம் பார்க்கும் ரசிகர்களில் நானும் ஒருவன்.

நடிகர் விஜய்க்கு...

பனையூரான்
இன்னுமொரு என்னுடைய பாடசாலை மாணவன். கவிதைகளுடன் தன்னுடைய சமூக அனுபவங்களையும் அழகாக எழுதுகின்ற இளைஞர். இலங்கையின் கற்பகதருவான பனையைப் பற்றி இவர் எழுதிய பதிவு பல கதைகளைச் சொல்கின்றது.

அழகான அந்தப் பனை மரம்

பால்குடி
உயரத்தில் மட்டுமல்ல உள்ளத்திலும் உயர்ந்த பால்குடியின் பதிவுகளில் வடமராட்சி மண் மணக்கும். இவரின் கணிதப் புதிர்களுக்கு சிலவேளைகளில் தலையைப் பிய்த்தாலும் எப்படியோ விடை கண்டுபிடித்துவிடுவேன்.

நினைத்துப் பார்க்கத்தான் முடிகிறது.

கே.ரவிஷங்கர்
சினிமா, இசை, கதைகள் எனப் பல்சுவையாக எழுதும் ரவிசங்கரின் இசைப் பதிவுகள் பல எனக்குப் பிடித்தமானவைக்கு காரணம் இளையராஜா தான். பெரும்பாலான இசைப் பதிவுகளை அனுபவித்து எழுதும் ரவிஷங்கரின் எழுத்தை வாசிக்கும் போது அதே சுகம் கிடைக்கும்.

இளையராஜாவின் வயலின் ரங்கோலி

சினேகிதி
காத்திரமான பதிவுகளை எழுதும் சினேகிதி அண்மைக் காலமாக எழுதுவதைக் குறைத்துள்ளார். புலம்பெயர் மக்களின் பிரச்சனைகளுடன் சில மனோதத்துவ விடயங்களையும் சினேகிதி எழுதியுள்ளார்.

உங்களுக்கும் எனக்குமாய் சில குறிப்புகள் , கேள்விகள்

சர்வேசன்
அழிப்பவன் அல்ல அளப்பவன் எனச் சொல்லிக்கொண்டு பல கருத்துக் கணிப்புகளையும் சினிமா, இலக்கியம் என பல்சுவைகளிலும் எழுதும் சர்வேசனின் பொன்னியின் செல்வன் in a nut shell. பொன்னியின் செல்வன் ரசிகர்களினால் அதிகம் பாராட்டுப் பெற்றதுடன் சில விவாதங்களும் நடந்தன.

பொன்னியின் செல்வன் in a nut shell.

சதீஸ்
என்றும் ப்ரியமுடன் உங்கள் பிரியமானவனாக வலை எழுதும் ஒலிபரப்பாளரான சதீஸ் பெரும்பாலும் சினிமா, கிரிக்கெட் இடையிடையே ச்மூகம் சார்ந்த கருத்துக்களை எழுதுகின்றார். நயந்தாராவின் அந்தரங்கத்தை எட்டிப் பார்த்த சன் டிவியைச் சாடி எழுதியது இந்தப் பதிவு

நயன்தாராவை சங்கடப்படுத்திய சன் டி.வி

சந்ரு
பெரும்பாலும் தன்னுடைய கருத்துக்களை எந்தவிதமான பயமுமின்றி எழுதும் சந்ரு. அரசியல், சமூகம் இடையிடையே சினிமா, கவிதை, நகைச்சுவை என பலசுவைகளில் எழுதுகின்றவர். அண்மைக்காலத்தில் சர்ச்சைகளும் இவருடன் கூட வருகின்றன. எப்போதும் சீரியசாக எழுதும் சந்ருவின் இந்த நகைச்சுவைப் பதிவு தான் ஏனோ என்னைப் பெரிதும் கவர்ந்தது.

காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள்...

சுபாங்கன்
ஐந்தறைப் பெட்டியில் ஆரம்பத்தில் தொழில்நுட்ப சக சமூக அக்கறைப் பதிவுகளாக எழுதிய சுபாங்கன் தற்போது பெரும்பாலும் நகைச்சுவைப் பதிவுகளும் எழுதுகின்றார். அத்துடன் சுபாங்கனின் அனுபவப் பதிவுகள் மிகவும் சுவாரசியமானவை. அந்த வகையில் இந்தப் பதிவில் சுபாங்கன் பெண்களைப் பற்றி நல்லதொரு ஆராய்ச்சியே செய்திருக்கின்றார்.

பஸ்சில் பயணிக்கும் நாகரீக நங்கையர்

சுபானு
ஊஞ்சலாடும் சுபானு தொழில்நுட்பம் கவிதை விஞ்ஞானக் கதை என பல்சுவையாக எழுதுபவர். அவரின் 3A எடுத்துப்பார் கவிதை யதார்த்ததிற்க்கு அருகில் இருக்கின்றது.

3A எடுத்துப்பார்

தர்ஷன்
அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் சமூகம் சார்ந்த பதிவுகளை எழுதுகின்றார் தர்ஷன். சில காலமாக ஒன்றிரண்டு பதிவுகளே எழுதிய தர்ஷன் அண்மைக் காலமாக நிறையவே நிறைவாக எழுதுகின்றார்.

ஜனாதிபதித் தேர்தலில் என்ன செய்யலாம்

தூயா
என்னுடைய அன்புக்குரிய பங்கு. புலத்தில் தமிழ் படித்து அழகாக எழுதும் பெண். தூயாவின் சமையல்கட்டில் பல இளைஞர்களுக்குப் பயனுள்ள சமையல் குறிப்புகளை வழங்கி அவர்களின் வாழ்க்கையில் சுவையான உணவுகளை உண்ணவைத்தவர். தன்னுடைய இன்னொரு வலையில் அரசியல், சமூகம் சில மொக்கைகள் என எழுதியவர் துரதிஷ்டவசமாக அண்மையில் அந்த வலையை வைரஸ் தாக்கிவிட்டது. அந்த வலையில் அவர் எழுதிய பேஸ்புக் பதிவு மிகவும் கவர்ந்தது, அதன் சுட்டியைத் தரமுடியாமல் இருப்பதால் சமையல் குறிப்பில் ஒரு சுவையான சமையல்.

வெண்டிக்காய் பால்கறி
வரோ
வான்மீகி என்ற பெயரில் எழுத ஆரம்பித்து இன்று வரோ என்ற பெயரில் தன்னுடைய பதிவுகளை எழுதுகின்றார். அரசியல், சினிமா, விளையாட்டு, சிறுகதைகள், ஒரு தொடர்கதை என தன்னுடைய பதிவுகளில் எழுதும் வரோ ஒரு ஊடகவியலாளரும் கூட.

குடாநாட்டு நடப்பு

உண்மைத்தமிழன்

எந்தவொரு விடயத்தையும் அழககாவும் சிறப்பாகவும் எழுதும் உண்மைத்தமிழன். அரசியல், சினிமா, பலசுவை என எழுதிக்குவிக்கும் இவரின் வலை அண்மையில் வைரசினால் பாதிக்கப்பட்டது. இவரின் இந்தப் பதிவில் ஒரு நிகழ்வை நேரடியாகப் பார்த்த அனுபவம் கிடைக்கும்.

கலைஞர் கருணாநிதிக்கு கலை உலகப் படைப்பாளி விருது - பாராட்டு விழா நிகழ்ச்சிகள்..!

யோகா
சமூகம், சினிமா, விளையாட்டு, நகைச்சுவை எனப் பல தடங்களில் பயணித்த யோகா சமீப காலமாக ஏனோ எழுதுவதைக் குறைத்துவிட்டார். ட்விட்டரில் கூட அவரைக் காண்பது அரிது. 2010ல் தன்னுடைய பழைய ஃபோர்முக்கு வருவார் என நினைக்கின்றேன்.

ஹர்பஜன் சிங் - சுய அறிக்கை

யுவகிருஷ்ணா
லக்கிலுக்காக அறியப்பட்டு இன்றைக்கு யுவகிருஷ்ணாவாக இருக்கும் நண்பர் லக்கியின் பதிவுகள் பலராலும் வியந்து பாராட்டப்படுபவை. ஒரு காலத்தில் தினமும் 3 அல்லது 4 பதிவுகளை இட்ட லக்கி இப்போது இடையிடையே எழுதினாலும் வீச்சு மட்டும் குறையவில்லை. அரசியல், சினிமா, கதை, பின்நவீனத்துவம் என பலதையும் கட்டி ஆளும் வல்லமை படைத்தவர். இவரது பதிவுகளில் காணப்படும் எள்ளல் சிறப்பாகும்.

வேட்டைக்காரன்

2009ல் ரசித்த பதிவுகள் - பகுதி 1

2009ல் உலகம் எப்படி இருந்தது நாட்டு நடப்புகள் எப்படியிருந்தது என ஒரு தொகுப்பு இடலாம் என நினைத்தேன் ஆனாலும் சில விடயங்களை விட்டுவிட்டும் போக முடியாது. சில விடயங்களை வெளிப்படையாக சொல்லவும் முடியாது. காரணம் உலகமே கண்ணை மூடிக்கொண்டிருந்த ஆண்டு இந்த ஆண்டு ஆகவே நானும் வழக்கம் போல் கண்ணை மூடிவிட்டேன். சொந்தச் செலவில் சூனியத்தை வைக்க விரும்பவில்லை. அதனால் இந்த ஆண்டில் என்னை அதிகம் கவர்ந்த சில பதிவுகளை பதிவர்களுடன் தருகின்றேன்.

திரட்டிகளூடாகவும் நான் பிந்தொடர்பவர்களினதும் பதிவுகளில் பலவற்றை ரசித்து வாசித்திருந்தாலும் அவற்றில் மனதில் நிற்பவற்றின் சுட்டிகள் மட்டும் தருகின்றேன்.

அச்சுதன்
பங்குச்சந்தை பற்றி தினமும் பதிவு எழுதுகின்றவர். தன்னுடைய துறையின் மேல் இவர் வைத்திருக்கும் ஈடுபாடு பாராட்டுக்குரியது. பங்குகளின் வீழ்ச்சி வளர்ச்சி என பலரும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் சிறப்பாக எழுதுகின்றார்.

பங்கு வர்த்தகம் சூதாட்டமா?

அசோக்பரன்
அதிகமாக அரசியல் பதிவுகளை எழுதுகின்றவர், இவரின் மொழி ஆளுமை பலரால் சிலாகித்துப் பேசப்படுவது. இலங்கை ஜனாதிபதித் தேர்தல் பற்றி ஒரு தொடர் எழுதுகின்றார்.

இலங்கையில் தமிழ் சினிமா இல்லாதது கவலைக்குரியது

ஆதிரை
காட்டிக் கொடுத்த 'விசா'ப்பிள்ளையார் என்ற இவரின் பதிவில் வெள்ளவத்தையில் பிரபலமான விசாப் பிள்ளையார் பற்றிய சிறிய குறிப்புகளை தனக்கே உரிய பாணியில் எழுதியிருந்தார். காத்திரமான பதிவுகளை எழுதும் இவர் இடையிடையே சீரியசான மொக்கைப் பதிவும் ரசிக்கும் படி எழுதுகின்றார்.

காட்டிக் கொடுத்த 'விசா'ப்பிள்ளையார்

ஆயில்யன்

"நண்பனுக்கும் சகோதரனுக்கும் இடைப்பட்ட ஒர் உறவுக்கு, பெயர் இருந்தால் அதை நான் கானா பிரபா என்றே அழைப்பேன்" என நட்புக்கு புது இலக்கணம் வகுத்த ஆயில்ஸின் அனுபவப்பகிர்வுகள் அனைத்தும் ரசிக்கும் படி இருக்கும்.

பாலிடெக்னிக் - வரைந்தும் வரையாமலும்..!

பாலவாசகன்
ஆறாவது அறிவைப் பற்றி இவர் எழுதிய தொழில்நுட்பப் பதிவு, அடிக்கடி கவிதை சினிமா விமர்சனம் சமூகம் பற்றிய பார்வைகள் என பல விடயங்களை யாழ்ப்பாணத்தில் இருந்து எழுதும் மருத்துவபீட மாணவன் இவர்.

ஆறாவது புலன்…தகவல் தொழில் நுட்ப உலகில் ஒரு புதிய புரட்சி…!

பவன்
நன்றாக மொக்கை போடும் இவரின் போட்டோ கொமெண்ட்ஸ் பதிவுகள் மிகவும் சுவாரசியமானவை. கிரிக்கெட் வீரர்களின் படம் கிடைத்தால் போதும் சிங்கம் கொமெண்ட் அடித்தே அவர்களைக் கிண்டல் அடிக்கும்.

என்ன பேசி இருப்பாங்க ???

புல்லட்
அதிரடியாக நகைச்சுவைப் பதிவுகளை எழுதுபவர். இவரின் பதிவுகள் பலவற்றை வாசிக்கும் போதே வாய்விட்டுச் சிரிக்கவைக்கும் வல்லமை இவருக்கு கை வந்த கலை. அண்மையில் ஒரு அரசியல்வாதி பற்றி தன்னுடைய ஒரு பதிவில் எழுதி அந்த விடயத்தை நினைத்து நினைத்து சிரிக்கவைத்தார். ஆனாலும் பாமன் கடை அனுபத்தினால் பல இளைஞர்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கின்றார் என்றால் அது மிகையாகாது.

பாமன்கடை பயணிகளுக்கு எச்சரிக்கை. ..

கேபிள்சங்கர்
இவரின் சினிமா விமர்சனங்களினால் எத்தனையோ பேர் மொக்கைப் படங்களைப் பார்க்காமல் தங்கள் பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்தியிருக்கின்றார்கள். இவரின் கொத்துப் பரோட்டாவில் வரும் ஜோக்கும் குறும்படமும் கலக்கலாக இருக்கும்.

இசையெனும் ”ராஜ” வெள்ளம்

சேரன் கிரிஷ்
எண்ணிக்கையில் குறைந்தளவு பதிவுகள் எழுதினாலும் அவை அனைத்தும் காத்திரமாக எழுதும் சேரன் தன்னுடைய அனுபவங்களை மிகவும் சுவை பட எழுதுபவர். இவரின் கேலாங் பற்றிய பதிவு, வெள்ளவத்தைக் காதலர்கள் மற்றும் அண்மையில் யாழ் பயணத்தின் ஒரு அவலம் என்பன முக்கியமானவை.

வெள்ளவத்தை கடற்கரையும் அவசரப்பட்ட காதலர்களும்

டொன் லீ
சிங்கையில் பதுங்கு குழியில் இருக்கும் டொன்லீ இப்போது பதிவுலகை விட ட்விட்டரில் குடித்தனம் நடத்தவே அதிகம் விரும்புகின்றார். தன்னுடைய ஐரோப்பிய விஜயத்தை சுவாரசியமாக எழுதியிருக்கின்றார்.

ஐரோப்பிய திக்விஜயம் I

டயனா
அறிந்ததும் அனுபவமும் என தன்னுடைய பதிவுகளை இடைக்கிடையே எழுதும் டயனா ஒரு ஒலிபரப்பாளரும் கூட. தன்னுடைய ஒலிபரப்பு அனுபவங்களை விட சினிமா ஏனைய விடயங்களை இடையிடையே எழுதுகின்றார்.

Titanic சாதனையை தகர்க்கவரும் சினிமாவின் புது அவதாரம் - AVATAR

கீர்த்தி
சிந்தனைச் சிறகில் சிறகடிக்கும் இந்த கவிதாயணி அண்மையில் ஒரு மொக்கைக் கவிதைகூட எழுதிப் பரபரப்பானர். அடிக்கடி கவிதையும் இடையிடயே ஏனைய விடயங்களையும் எழுதுகின்றார்.

பாரதி கண்ட பெண்கள்

ஜாக்கி சேகர்
உலக சினிமாவில் பல நல்ல படங்களைப் பற்றி விமர்சிக்கும் ஜாக்கியின் பதிவுகளில் அவரது சாண்ட்வெஜ் அன்டு நான்வெஜுல் விஷுவல் டேஸ்ட்டில் தன் கமேரா ரசனையும் ஏனைய விடயங்களையும் அழகாகவே எழுதுவார். தன்னுடைய மனைவி வெளிநாடு சென்றதை இட்டு தன்னுடைய தனிமையையும் அவரது சில நாள் பிரிவையும் அழகாக எழுதிய இந்தப் பதிவு பலருக்கும் பிடித்தது.

என் இல்லாளின் முதல் வெளிநாட்டு பயணம்

கனககோபி
கங்கோன் என செல்லமாக அழைக்கப்படும் கோபி மொக்கைப் பதிவுகளை விட சில நல்ல மொழிபெயர்ப்புப் பதிவுகளை சமூக நலன் சார்ந்த பதிவுகளையும் எழுதியிருக்கின்றார், அண்மைக்காலமாக இவர் பதிவு எழுதுவதை விட டிவிட்டரில் குடியிருப்பதையே விரும்புகின்றார்.

2009 இல் வாழ்வதை அறிவது எப்படி...

கரவைக்குரல்
அமீரகத்தில் இருந்து சில காலம் எழுதிய கரவைக்குரல் என்கின்ற தினேஷ் தற்போது இங்கிலாந்தில் இருப்பதால் அதிகமாக எழுதுவதில்லை. இவரது எழுத்துக்களில் ஈழத்து மண்வாசனை அதிகம் மணக்கும்.

வல்லிபுரத்தில் கடல் தீர்த்தம்

கானாபிரபா
தன்னுடைய அனுபவங்களையும் ரசனையையும் அழகாக எழுதும் பிரபா, ஒரு சினிமா கலைக்களஞ்சியம் கூட சினிமா சம்பந்தமான எந்த சந்தேகங்களையும் உடனடியாக தீர்க்கும் பிரபா அண்ணை உலாத்துவதிலும் மன்னன். இப்போது தன்னுடைய காதல் கதையை மன்னிக்கவும் நண்பர்களின் காதல் கதையை அழகாக ஆரம்பித்து வைத்திருக்கின்றார்.

"16 வருஷங்களுக்கு முந்திய காதல் கதை"

கிருத்திகன்
கீத் என செல்லமாக அழைக்கப்படும் கிருத்திகனின் மெய் சொல்லப் போறேனில் அவரின் துணிச்சலான பல கருத்துகளும் கிரிக்கெட் பதிவுகளும் மிகவும் பிடித்தாலும் அவரின் பாடசாலை நாட்கள் பற்றிய இந்தப் பதிவுதான் என்னை மிகவும் கவர்ந்தது.

துள்ளித் திரிந்த காலம்

கெளபாய் மது
பேசாப் பொருள்களை அதிகம் பேசும் மது, சில நாட்களாக கொஞ்சமாகவே எழுதுகின்றார். இறுதியாக இவர் எழுதிய ஒரு நகைச்சுவைப் பதிவு ஒன்று பலராலும் பாராட்டப்பட்டது காரணம் நகைச்சுவையிலும் மது பாவித்த வசனங்கள். இவரின் பாலியல் வல்லுறவும் ஆண்களும் பலரால் படிக்கப்பட்ட பதிவு என் நண்பர் ஒருவர் இந்தப் பதிவின் ரசிகர்.

ஒரு பெண் - நான் - ஒரு காலியான இருக்கை

லோஷன்
நாடறிந்த ஒலி/ஒளிபரப்பாளர் பல்சுவை எழுத்தாலும் பலரைக் கவர்ந்தவர். ஆனாலும் அதிகமாக கிரிக்கெட் பற்றி எழுதி கிரிக்கெட் பதிவர் என்ற முத்திரையையும் குத்திக்கொண்டார். இவரின் கிரிக்கெட் பதிவகளை ஏனைய பதிவுகளில் இருக்கும் எள்ளல் பலராலும் பாராட்டப்படுகின்றது.

விஜய் நடிச்சா தாங்க மாட்டோம்?????

மருதமூரான்
காத்திரமான பதிவுகளை எழுதுபவர். அத்துடன் சிறப்பாக சினிமா விமர்சனங்களையும் நடுநிலையாக எழுதுகின்றவர். கிருத்திகன் போல் இவருடைய எழுத்துகளும் என்னை பல சமயங்களில் பிரமிக்கவைத்தன. காரணம் இருவருடைய வயதும் தான். சிறிய வயதில் விஸ்தீரமான சிந்தனை உடையவர்கள் இவர்கள் இருவரும்.

‘கமல்ஹாசன்’ என்கிற திரைத்துறை ஆளுமை.

டொக்டர் முருகானந்தன்
நாடறிந்த எழுத்தாளர், மருத்துவர். இவரது சினிமா விமர்சனங்களைப் வாசித்து பல படங்களைப் பார்த்து ரசித்தவன் நான். இவரது மருத்துவக் கட்டுரைகளில் இருக்கும் நகைச்சுவையுடன் கூடிய விடயங்கள் வாசகர்களை கவர்வதில் வியப்பில்லை.

மணமுறிவுகள் ஏன்? எந்தப் பொருத்தம் முக்கியமானது?

மு.ம‌யூரன்
நீண்ட நாட்களாக வலையுலகில் கலக்கிக்கொண்டிருக்கும் மயூரனின் பதிவுகள் பெரும்பாலும் தொழில்நுட்பம் சமூக சிந்தனை உடையவைகளே. அண்மையில் இவர் எழுதிய இணையக் கனிமை பலராலும் பாராட்டுப் பெற்றது.

Cloud Computing: மழை பெய்யுதா பிழை செய்யுதா?

மயூரேசன்
இலகு தமிழில் பெரும்பாலும் தொழில்நுட்ப பதிவுகள் எழுதுபவர். சிலவேளைகளில் சினிமா விமர்சனத்துடன் தன்னுடைய சில அனுபவங்களையும் பதிவாக இட்டிருக்கின்றார். இவரின் கூகுல் வேவ் பதிவினால் அலையடிப்பவர்களில் நானும் ஒருவன்.

Google Wave ஒரு அறிமுகம்

முரளிகண்ணன்
பலதரப்பட்ட விடயங்களை எழுதும் முரளிகண்ணணும் ஒரு சினிமாக் கலைக் களஞ்சியம். சினிமா சம்பந்தப்பட்ட பல விடயங்களை தன்னுடைய வலையில் அழகாக தருபவர்.

திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை - மனதிற்க்கு தோன்றிய சில காரணங்கள்.

நிமல்
கமேராக் கலைஞரான நிமல் பல்சுவையாக எழுதுபவர். அதிக வேலைகாரணமாக சில நாட்கள் ஓய்வெடுக்கபோகின்றேன் என பதிவே இட்டவர். ஆனாலும் பதிவர் சந்திப்புகளில் பலகோணங்களில் படம் எடுப்பவர்.

நேர்முகத் தேர்வு - சில குறிப்புக்கள்


பின்குறிப்பு : எங்கே என்னுடைய பெயர் என இதில் பெயரில்லாத நண்பர்கள் தேடாதீர்கள். இது முதலாம் பகுதி தான் அனைவரின் பதிவுகளையும் எழுதினால் பதிவு நீண்டுவிடும் என்ற நல்ல எண்ணத்தில் இரண்டாம் பகுதியில் ஏனைய நண்பர்களின் ரசித்த பதிவுகள் வரும்.

கந்தகோட்டை - திரை விமர்சனம்

ஒருவர் ஊராரின் காதல்களைப் பிரிப்பவர் இன்னொருவரே ஊராரின் காதல்களை ஊட்டி வளர்ப்பவர் இவர்கள் இருவருக்கும் காதல் பத்தினால் என்னவாகும் என்பதை கலகலப்பாகவும் விறுவிறுப்பாகவும் சொன்ன படம் கந்தகோட்டை.

கதை :

நகுலன் ஊராரின் காதல்களை பிரிப்பவர் இதற்க்கு இவர் சொல்லும் காரணம் தனது பெற்றோர்கள் காதல் திருமணம் செய்தும் சின்னச் சின்ன விடயங்களுக்கு சண்டை பிடிக்கின்றார்கள் இதனால் இவருக்கு காதலின் மேல் வெறுப்பு. பூர்ணா ஊரார் காதல்களைச் சேர்த்து வைக்கும் ஷாஜகான் விஜயின் பாத்திரம் போன்றவர். நகுலனின் காலணியான கந்தகோட்டைக்கு ஒரு காதலைச் சேர்த்து வைக்க வரும் பூர்ணா அங்கே நகுலனைச் சந்திக்கின்றார். இன்னொரு காதலர்களின் காதலைப் பிரிக்க ஏற்படும் சந்தர்ப்பத்தில் அந்த காதல் உண்மையான காதல் என்பதை அறிந்த நகுலன் காதலையும் பூர்ணாவையும் ஒரே நேரத்தில் விரும்புகின்றார். இடைவேளையின் பின்னர் காதலுக்கு ஒரு புதிய வில்லன் அந்த வில்லனக்கு எப்படி நகுலன் திட்டமிட்டு ஆப்படிக்கின்றார் என்பதுதான் கதை.


திரைக்கதை :

முதல் பாதி சந்தானத்தினால் கலகலப்பாகவும் இரண்டாவது பாதி நகுலன் சம்பத் மோதல்களில் விறுப்பாகவும் போகும் திரைக்கதை. சில காட்சிகள் சில படங்களில் பார்த்த ஞாபகம் வந்தாலும் கொஞ்சம் விறுப்பான திரைக்கதை என்பதால் உடனே மறைந்துவிடுகின்றது. அத்துடன் அடுத்து என்ன நடக்கும் என்பதை பல இடங்களில் ஊகிக்க முடிகின்றது. அதிலும் இந்தக் காட்சி முடியப் பாடல் என்பதை திரையரங்கில் இருப்பவர்கள் சத்தம் போட்டே உணர்த்துகின்றார்கள். நல்ல காலம் கடைசிக் காட்சிக்கு முன்னால் பாடல் வைக்கவில்லை.

வசனம் :

முதல் பாதியில் சந்தானம் அடிக்கும் லூட்டிகளில் வசனங்கள் கலக்கல் நகைச்சுவை. காதலித்த பெற்றோர்கள் சின்னச் சின்ன விடயங்களுக்குச் சண்டை போடுவது குற்றமில்லை எனச் சொல்லும் இடங்களிலும் வசனங்களில் சக்திவேல் விளையாடியிருக்கின்றார்.

இயக்கம் :

ஏற்கனவே அறிந்ததிரைக்கதையாக இருந்தாலும் இயக்குனர் சக்திவேல் இதனைச் சொன்னவிதம் ரசிக்கும் வண்ணம் இருக்கின்றது. இயக்குனர்கள் ராதாமோகன், ப்ரியா.வி போன்றவர்களிடம் உதவி இயக்குனராக இருந்த சக்திவேலுக்கு முதல் படம் எனச் சொல்லமுடியாதபடி நேர்த்தியான இயக்கம்.

சந்தானம் :

படத்தின் உண்மையான கதாநாயகன் சந்தானம் தான். சின்னக் கவுண்டர் அடிக்கும் லூட்டிகள் நிலை மறந்து ரசித்துச் சிரிக்கும் படி இருக்கின்றது. அதிலும் இவர் ஒவ்வொரு பெண்ணாக காதலிக்கும் போது "அசிலி பிசிலி", கண்கள் இரண்டால் என பின்னணியில் ஒலிக்கும் பாடல்களால் தியேட்டரே அதிர்கின்றது. இவரது கனவுக் காதலும் கலக்கல். வழக்கமாக இரட்டை அர்த்தம் மூன்று அர்த்தம் பேசுபவர் இந்தப் படத்தில் அவற்றை குறைத்தே இருக்கின்றார் அல்லது இல்லை.


நகுலன் :

நகுலன் இன்னமும் நடிக்கத் தொடங்கவில்லை என்றே சொல்லலாம். மாசிலாமணியில் நடித்த அதே நடிப்புத்தான். நடனக் காட்சிகளில் நன்றாக ஆடுகின்றார். சண்டைக்காட்சிகளில் ஆக்ரோசமாக அடித்தாலும் முகத்தில் புன்னகை இருப்பது போல் தெரிகின்றது. வில்லனுடன் மல்லுக் கட்டும் இடங்களில் ரசிக்கவைக்கின்றார்.

பூர்ணா :

முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டில் நடித்தவராம். மலிவு விலை ஸ்ரேயா போல் இடைக்கிடை தெரிந்தாலும் தன் பங்கு நடித்திருக்கின்றார். பாடல் காட்சிகளில் கூட கவர்ச்சி இல்லாமல் கொஞ்சம் குத்துவிளக்காகவே வந்து போயுள்ளார். இவரை விட சுனைனாவையே இந்தப் படத்திலும் கதாநாயகி ஆக்கியிருக்கலாம் என்பது என் கருத்து.

சம்பத் :

வில்லனாக வரும் சரோஜா புகழ் சம்பத் தன் மகனுக்காக வேதனைப் படும் காட்சிகளில் நன்றாகவே நடித்திருக்கின்றார். ஆனால் வயது போன தோற்றம் அவருக்குப் பொருத்தமாகவே இல்லை. பாலாசிங் கூட அதே அரசியல்வாதி பச்சைத் துண்டுடன் வந்துபோகின்றார். வில்லனை இன்னும் கொஞ்சம் வில்லத்தனமாக காட்டியிருக்கலாம்.

இசை :

நீண்ட நாட்களின் பின்னர் தினா. மனிசன் இன்னமும் மன்மதராசாவில் இருந்து விடுபடவில்லைப் போல் தெரிகின்றது. அதே பாணியில் அதே போன்ற ஆடைகளுடன் ஒரு பாடல். "காதல் பாம்பும்",எப்படி என்னுள் காதல் வந்ததுதும்" ரசிக்கவைக்கின்றது. ஆனால் ஏனைய பாடல்கள் இம்சை. பின்னணி இசை அதிலும் சண்டைக்காட்சிகளில் இரட்டிப்பு இம்சை. படத்தின் பெரிய பலவீனமே இசைதான்.

ஒளிப்பதிவு :

இ.கிருஷ்ணமூர்த்தியின் ஒளிப்பதிவு பாடல் காட்சிகளில் வெளிநாடுகளின் அழகை அழகாக படம் பிடித்திருக்கின்றது. ஆனால் சென்னை நாகர்கோவில் காட்சிகளில் ஏதோ ஒன்று குறைந்தது போல் தெரிகின்றது.

மொத்தததில் குடும்பத்துடன் சென்று மகிழ்ச்சியாகப் பார்க்ககூடிய படம்.

கந்தகோட்டை - காதல் அதிர‌டி

ஹாட் அண்ட் சவர் சூப் 16-12-2009

தமிழ்மணம் மனுத் தாக்கல்

தமிழ்மணத்தின் இந்தவருடத்திற்கான தமிழ்மணம் விருதுகள் அறிவிக்கப்பட்டு நானும் என்னுடைய 2 இடுகைகளை பரிந்துரைத்திருக்கின்றேன். சென்ற ஆண்டு விருதுக்கு அனுப்பிய என்னுடைய இரண்டு பதிவுகளும் முதல் 10 இடங்களுக்குள் வந்தபடியால் இந்த ஆண்டும் என்னுடைய பதிவுகள் இரண்டினை அனுப்பியுள்ளேன்.

விருது கிடைக்குதோ இல்லையோ நானும் போட்டியில் பங்குபற்றினான் என்ற ஆத்ம திருப்திக்காகவே இம்முறையும் பழம் தின்று கொட்டை போட்ட பிரபல, மூத்த பதிவர்களுடன் போட்டிக்கு வந்துள்ளேன். சினிமா, விளையாட்டு, நகைச்சுவை என இந்த வருடம் பல பதிவுகள் எழுதினாலும் போட்டிக்கு அனுப்பும் தரத்தில் உள்ள இரண்டு பதிவுகளை செய்திகள்/நிகழ்வுகளின் அலசல்கள் மற்றும் அரசியல், சமூக விமர்சனங்கள் பிரிவுகளில் போட்டிக்கு அனுப்பியிருக்கின்றேன்.

செய்திகள்/நிகழ்வுகளின் அலசல்கள் பிரிவில் வெடித்து கிளம்பிய புவனேஸ்வரியும், அடக்கி வாசித்த ஊடகங்களும் என்ற பதிவையும் அரசியல், சமூக விமர்சனங்கள் பிரிவில் மாற்றான் மனை கவர்தல் - தகாமுறைத் துணைகவரல் என்ற பதிவினையும் போட்டிக்கு அனுப்பியுள்ளேன். பதிவுகள் உங்களைக் கவர்ந்தால் ஓட்டளியுங்கள். சிறப்பான படைப்புகளுக்கு ஓட்டளியுங்கள்.

தவறான விளம்பரம்

சில நாட்களுக்கு முன்னர் ஒரு பிளேட்டிற்கான விளம்பரத்தைத் தொலைக்காட்சியில் பார்த்து அதிர்ந்துபோனேன். இரண்டு அழகான இளம் பெண்கள் தமக்குள் பேசிக்கொள்கின்றார்கள். ஒருவர் சொல்கின்றார் தன்னுடைய காதலன் தாடியுடன் சவரம் செய்யாமல் வந்தால் தான் அவருடன் வெளியில் செல்லமாட்டேன் எனக்குச் செல்ல வெட்கமாக இருக்கின்றது, மற்றொருவரோ அவர் என்னுடைய வீட்டிற்க்கு வருவதாகச் சொல்லியுள்ளார் தாடி மீசையுடன் வந்தால் உள்ளே அனுமதிக்க மாட்டேன் இப்படி அந்த இரண்டு பெண்களும் தாடி, மீசையுடன் இருக்கும் ஆண்களை விரும்பவில்லை என்கின்றார்கள்.

அடுத்த காட்சியில் அவர்களின் காதலர்கள் மூன்று நாள் தாடி மீசையுடன் தங்களுக்குள் தொலைபேசியில் பேசிக்கொள்கின்றார்கள். தங்கள் காதலிகள் தங்களை இந்தக் கோலத்தில் விரும்பவில்லை எனவும் ஆகவே தாம் சவரம் செய்துகொண்டு செல்லவேண்டும் எனவும் அதற்க்குச் சிறந்த பிளேடு இதுதான் என ஒரு குறிப்பிட்ட பிளேடை விளம்பரப்படுத்துகின்றார்கள். அவர்கள் கிளீஸ் சேவ் செய்து காதலிகளைச் சந்திக்கும் போது இவர்களின் காதலிகள் மிகவும் உற்சாகம் அடைகின்றார்கள். இதுதான் அந்த விளம்பரம்.

இந்த விளம்பரத்தின் மூலம் தாடி, மீசையுடன் இருக்கும் ஆண்களை கேவலப்படுத்துவதுடன் சவரம் செய்தால் தான் காதலியுடன் உல்லாசமாக இருக்கலாம் என்ற தவறனா கருத்தையும் விளம்பரமூடு பரப்புகின்றார்கள். இந்த விளம்பரத்தை யூடூயூப்பில் தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை.

கிரிக்கெட்

நேற்றைய ராஜ்கொட் போட்டியானது ரன் மழையில் மூழ்கியது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் ஆரம்பமே அதிரடியாக இருக்க சேவாக் அன்வ‌ரின் சாதனையை முறியடித்து 200 ஓட்டங்களைக் கடப்பாரா எனப் பலரும் எதிர்பார்க்க டெஸ்ட் போட்டியில் எப்படி 300 ஓட்டங்களைக் கடக்கமுடியாமல் அவட்டாகினாரோ அப்படியே நேற்றும் நடந்தது.

அதேபோல் இரண்டாம் இனிங்கிசில் இலங்கை அணியும் அதே அதிரடியுடன் ஆடியது, சேவாக்கைப் போல் டில்ஷான் அன்வரின் சாதனையை முறியடிப்பார் என நம்பிக்கொண்டிருக்க அன்வரின் சாதனை மீண்டும் தப்பியது. இறுதியில் இந்திய அணி இலங்கைப் பின்வரிசை வீரர்களின் சொதப்பலான ஆட்டத்தினால் வென்றுவிட்டது. இரண்டு அணியின் பந்துவீச்சாளர்களும் வள்ளல்களாக மாறியிருந்தார்கள். நல்லகாலம் இந்திய அணி வெறும் 3 ஓட்டங்களினால் தான் வென்றது இல்லையென்றால் இந்தப் பிட்ச் போட்டிக்கு சரியில்லை,பிட்சை வைத்துதான் இந்திய அணி வென்றது எனப் பொருள் பட‌ விமர்சனம் பலரால் எழுப்பப்பட்டிருக்கும்.

ஒரு குட்டிக் கதை

அண்மையில் சந்தித்த என்னுடைய நண்பர் ஒருவர் கொஞ்சம் சோகமாக இருந்தார் ஏனென்று கேட்க தன் சோகக் கதையைச் சொன்னார். அண்மையில் அவரின் காதலியின் பிறந்தநாள் வந்தது. இருவரும் ஒரிடத்தில் சந்தித்தார்கள், என் நண்பன் தன் கையில் இருந்த அன்புப் பரிசை கொடுத்து வீடு சென்றுதான் பிரிக்கவேண்டும் என்ற அன்புக் கட்டளையும் இட்டான். அவனின் செல்லச் சிரிப்பில் மயங்கிய நண்பனின் காதலியும் தன்னுடைய பரிசாக ஒரு பறக்கும் முத்தத்தை நண்பனுக்கு வழங்கிவிட்டு அதே இடத்தில் பிரிக்க முயற்சிக்க நண்பனோ விடாப்பிடியாக இங்கே பிரிக்கவேண்டாம் வீட்டில் பிரிக்கவேண்டும் என மீண்டும் வற்புறுத்த அவனின் காதலியோ அவனின் அன்புக்காக வீட்டில் சென்று ஏதோ மோதிரமோ அல்லது மொபைல் போனோ உள்ளே இருக்கும் என்ற ஆவலில் பிரிக்க உள்ளே இருந்ததோ இரண்டே இரண்டே இஞ்சி பிஸ்கட் மாத்திரம் இருந்தது. அடுத்த நாளே என் நண்பனை அவள் கேட்டாளாம் "ஏன்டா பரதேசி உனக்கு இஞ்சி பிஸ்கட் தான் கிடைத்ததா? அட்லீஸ்ட் ஒரு லெமன் பப்பாவது கிடைக்கவில்லையா?". சாடிக்கு ஏற்ற மூடி ஹிஹிஹி. (உண்மைக் கதை )


வேட்டைக்காரி அனுஷ்கா

இனிமையான இரண்டாவது சந்திப்பு

கெளபாய் மதுவின் தொலைபேசி அழைப்புடன் தான் நேற்றைய‌ காலைப்பொழுது எனக்கு விடிந்தது. அத்துடன் அவர் என்னை கொஞ்சம் நேரத்திற்க்கு வருமாறு அன்புக் கட்டளை இட்டார். மதுவின் கட்டளையை மதித்து நான், லோஷன், ஆதிரை, புல்லட் நால்வரும் ஒன்றாகவே சென்றோம். தனித்து தனித்து சென்றால் ஒருவரை ஒருவர் மற்றவர்களுக்கு விற்றுவிடுவோம் என்ற லோஷனின் சிறந்த எண்ணத்திற்காக இந்த முடிவு. காரணம் சில நாட்களாக இலங்கைப் பதிவுலகில் ஒருவரை ஒருத்தர் வாரியிருந்தார்கள். ஆகவே இந்த முடிவின் படி மூவரும் ஒரே நேரத்தில் தேசிய கலை இலக்கியப் பேரவை வாசலில் நின்றோம்.திடீரென எங்கள் முன்னால் வேர்த்து விறுவிறுத்து ஒரு பாரிய உருவம் நீலக் கலர் சேர்ட்டில் சேர்ட்டில் மேல்பாகம் ஈரமாக காட்சியளித்தார். யார் அவர் எனப் பார்த்தால் நம்ம கங்கோன் கனககோபி. அவரில் மேல் இருக்கும் அன்பில் என்ன நடந்தது எனக் கேட்டால் " ஓடியாடி வேலை செய்ததில் களைத்துப்போனேன்" என்றார். பெரும்பாலும் ட்விடரிலும் பேஸ்புக்கிலும் குடியிருக்கும் அவர் முதன் முறையாக வேலை செய்திருக்கின்றார் என்ற ரகசியம் பின்னர் தெரியவந்தது.அப்படியே கோபியின் தரிசனம் முடித்து உள்ளே போனால் நம்ம கெளபோய் ஜெல் எல்லாம் பூசி திருமண விருந்துபசார கெட்டப்பில் நிற்கின்றார். அப்படியே மதுவுக்கு எங்கள் வருகையைத் தெரிவித்துக்கொண்டு இன்னொரு பக்கம் பார்த்தால் குசினிக்குள் கீர்த்தியும் இன்னொருவரும்(மேகலா) மும்முரமாக சன்குவிக் கரைத்துக்கொண்டிருக்கின்றார்கள், அவர்களுக்கு உதவியாக சுபாங்கன். அப்படியே அவர்களுக்கும் ஒரு ஹாய் சொல்லிவிட்டு நிற்க மேமன் கவி அவர்கள் வந்தார் அவருக்கும் சாகித்திய விருது பெற்றதற்கான ஒரு வாழ்த்தை தெரிவித்துவிட்டு நின்ற போது புன்னகையுடன் மயில்வாகனம் செந்தூரன் வந்தார்.இப்படி ஒவ்வொருவராக வந்து என்னை நலம் விசாரிக்க நான் அவர்களை நலம் விசாரிக்க கொஞ்ச நேரம் இப்படியே போகும் போது தீடிரென குசினிப் பக்கம் சலசலப்பு. கீர்த்திதான் சன் குவிக்கில் சீனிக்குப் பதில் உப்பைப் போட்டுவிட்டாரோ ? இல்லை அருகில் நின்ற சுபாங்கன் பயித்தம் பணியாரம் சாப்பிட்டுவிட்டு மயங்கிபோனாரோ? என்ற பதட்டத்துடன் உள்ளே சென்று பார்த்தால் நம்ம கங்கோன் தன்னுடைய அக்மார்க் சிரிப்புடன் நின்றார். என்ன விடயம் என்றால் கீர்த்தி கங்கோனிடம் பாத்திரங்கள் கழுவ சோப் வாங்கிவரச் சொன்னால் கங்கோன் டெட்டோல் சோப் வாங்கி வந்திருக்கின்றார்.இந்த சுவையான சம்பவத்துடன் சரியாக 2 மணிக்கு கீர்த்தியின் தலைமையுரையுடன் பதிவர் சந்திப்பு இனிதே ஆரம்பமானது. கீர்த்தி தனது உரையில் முதலாவது சந்திப்பில் நடந்த நிகழ்வுகளை தொட்டுவிட்டுச் சென்றார். அதனைத் தொடர்ந்து பதிவர் அறிமுகம் நடைபெற்றது, சில புதியமுகங்கள் அறிமுகமானார்கள்.இதனைத் தொடர்ந்து பயனுறப் பதிவு எழுதுவது எப்படி என்ற பொருளில் மதுவர்மன் கலந்துரையாடலை ஆரம்பித்துவைத்தார். எவரையும் இப்படித் தான் எழுதவேண்டும் என எவரும் வற்புறுத்தமுடியாது, அவரவர் தங்கள் தங்கள் பாணியில் ஏனையவர்கள் விரும்பிப் படிக்கும் படி பதிவுகளை எழுதினால் சிறப்பானது எனவும், அத்துடன் கண்ணுக்கு உறுத்தாத கலரில் வலைகளின் டெம்ளேட்டுகள் தேவையென்றும் சிலாகிக்கப்பட்டது. கலந்துரையாடல் மொக்கைப் பதிவுகளை நோக்கிச் சென்றபோது கீர்த்தி தான் ஒரு மொக்கைப் பதிவு எழுத மிகவும் கஸ்டப்பட்டதாகவும் மொக்கைப் பதிவு எழுதுவது ஏனையவர் நினைப்பது போல் இலகுவானது அல்ல எனவும் கூறி மொக்கை மன்னன் புல்லட்டின் ரசிகை தான் என்ற உண்மையையும் போட்டு உடைத்தார். அதே நேரம் காத்திரமான பதிவுகளில் கொஞ்சமேனும் நகைச்சுவை இருந்தால் பதிவுகள் வாசிக்க சுவாரசியமாக இருக்கும் என டொக்டர் முருகானந்தனின் பதிவு ஒன்றை உதாரணம் காட்டி வந்தியத்தேவன் தன்னுடைய கருத்தைத் தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து பெண்களும் பதிவுலகமும் என்ற தலைப்பில் உறுபசி வலையின் சொந்தக்காரர் நிலா தர்ஷாயணி பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை மிகவும் அழகாகவும் சரளமாகவும் எடுத்துரைத்தார். ஆண் வலைப்பதிவர்கள் தங்களுக்குள் நட்பு பாராட்டுவது போல் பெண் பதிவர்களால் நேரடியாகவோ ஏனைய சமூக இணையத் தளங்களிலோ நட்பாக இருக்கமுடியவில்லை எனவும் தன் ஆதங்கத்தைக் கொட்டினார். அவருக்கு சார்பாகவும் எதிராகவும் பெரும்பாலான கருத்துகளை ஆண்களே பதில் அளித்துக்கொண்டிருக்கும் போது மேகலா என்ற பதிவர் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு ஆணாதிக்க கருத்துக்கள் சிலவற்றைச் சொன்னபின்னர் கலந்துரையாடல் பெண்ணியம் சார்பாக சென்றது. அவர் எந்தவொரு ஆண் வலைப்பதிவர்களும் தங்கள் மனைவியை பதிவு எழுதச் சொல்லிவிட்டு பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வார்களா? என்ற கேள்வியைக்கேட்டு சபையைக் கலகலப்பாக்கினார்.அதனைத் தொடர்ந்து மது சகோதரர்களின் கைவண்ணத்தில் சுடப்பட்ட பருத்தித்துறை வடையும் கீர்த்தியின் சமையல் அனுபவத்தில் உருவாக்கப்பட்ட பயிற்றம் பணியாரமும் அனைவருக்கும் வழங்கப்பட்டது. வடையின் சுவை பலரையும் கவர்ந்தது. நளபாகத்தில் பெண்களை விட ஆண்கள் சிறந்தவர்கள் என்பதற்க்கு சான்றாக அமைந்தது. குளிர்பானமாக மு.மயூரனின் கலவையில் உருவான‌ சன்குவிக் அனைவருக்கும் பரிமாறப்பட்டது.சிற்றுண்டியைத் தொடர்ந்து கெளபோய் மது இலங்கைப் பதிவர் கூகுள் குழுமத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பதை அதன் தொழில்நுட்பத்துடன் இலகுவாக விளக்கினார். இந்தக் கலந்துரையாடல் பெரிதாக நேரம் எடுக்கவில்லை. அத்துடன் மாதம் தோறும் ஏதாவது ஒரு பொருளில் ஒரு நாள் சில மணி நேரம் குழுமத்தில் விவாதிக்கவும் முடிவு எடுக்கப்பட்டது.இறுதியாக பின்னூட்டங்கள் குறித்தான கலந்துரையாடலை மு.மயூரன் ஆரம்பித்து வைக்க கலந்துரையாடல் பின்னூட்டங்கள் போல மிகவும் சூடாகவே போனது. மு.மயூரன் தனக்கு பெயரில்லாமல் வரும் அனானிப் பின்னூட்டங்களை வரவேற்பதாகவும் இதில் எந்தப் பிரச்சனையும் இல்லை எனவும் தெரிவித்தார். அவரின் கருத்தை வழிமொழிந்த லோஷன் சில பின்னூட்டங்கள் தனிநபர் தாக்குதலாக இருப்பது கண்டிக்கத்தக்கது எனவும் மற்றும் படி எவருக்கும் தங்கள் கருத்துகளைச் சொல்லும் உரிமை இருப்பதாகவும் கூறினார். வந்தியத்தேவன், சந்ரு போன்றவர்கள் தங்கள் அனுபவங்களைச் சொன்னார்கள். மதுவர்மன் சில பின்னூட்டங்கள் கும்மிக்கு வழி வகுப்பதாகவும் இதனைத் தவிர்த்தால் சில நல்ல பதிவுகள் காப்பாற்றப்படும் எனவும் தன் ஆதங்கத்தைக் கொட்டிவிட்டார்.அதே நேரம் நிமல் பின்னூட்டங்களை இரண்டாக பிரித்தார். முதலாவது வாழ்த்துப் பின்னூட்டம் அதாவது ஒருவரின் பதிவைப் புகழ்ந்தல் குறிப்பாக கலக்கல், நல்ல பதிவு, சூப்பர் போன்ற ஒற்றை வரிப்பின்னூட்டங்கள், இப்படியான பின்னூட்டங்களை விரும்புவர்கள் அனானி அதர் ஓப்சன் பின்னூட்ட வசதியை நீக்கியே விடலாம். அடுத்ததாக பின்னூட்டங்களில் வரும் விமர்சனங்கள் இதற்க்கு அனானிப் பின்னூட்டம் அவசியம் என நிமல் தன் கருத்தைச் சொன்னார்.நிமலைப் போலவே மன்னார் அமுதனும் பின்னூட்டங்களை 2 ஆக பிரித்தார். ஒன்று விமர்சனப் பின்னூட்டம் இன்னொன்று விசமப் பின்னூட்டம். விஷமப் பின்னூட்டங்களினால் தான் பலர் பாதிக்கப்படுகின்றார்கள் எனவும், இல்லையென்றால் பின்னூட்டங்களில் ஆரோக்கியமான விமர்சனம் விவாதம் நடக்கும் எனத் தன் கருத்தைத் தெரிவித்தவர். அத்துடன் கடந்த சில நாட்களாக ஒரு சஞ்சிகையில் வந்த கருத்தால் சில ஊடகவியளாலர்கள் காண்டாகிய சம்பவ‌த்தைத் தொட்டு அதனை ஒரு சர்ச்சையாக்கிவிட்டார். மன்னார் அமுதனுக்கு ஹிசாமும் லோஷனும் பதில் அளித்தாலும் அந்த சர்ச்சை முற்றுப் பெறாமால் முடிந்துவிட்டது,அடுத்து மதுவின் ஏற்பாட்டில் பதிவர்களுக்கிடையிலான போட்டி கலகலப்பாக நடைபெற்றது. என் அணியில் லோஷன், புல்லட், அசோக்பரன் போன்ற உடல்வாகு உள்ளவர்கள் இருந்தபடியால் நாம் உருவாக்குய வட்டத்தால் முழுமையாக எம்மைச் சுற்ற முடியவில்லை என்பதால் நாம் போட்டியில் இருந்து விலகி வெற்றி பெற்ற குழுவிற்க்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தோம். இந்த விளையாட்டுகளின் பொறிமுறைகளை மது தன் பதிவில் எழுதுவார்.இப்படியே நண்பர்களுடன் மகிழ்ச்சியாக பாடசாலைக் காலத்தில் இருந்த அனுபவத்துடன் இரண்டாவது சந்திப்பு இனிதே நிறைவடைந்தது.

பட உதவி : சுபாங்கன், ஆதிரை

உலக அழகி 2009 - கயானி

நேற்று தென்னாபிரிக்காவின் ஜோகனர்ஸ்பேர்க் நகரில் நடைபெற்ற 2009 ஆம் ஆண்டிற்க்கான உலக அழகியாக கிப்ரால்டர் (Gibraltar) நாட்டைச் சேர்ந்த 23 வயதான‌ கயானி அல்டோரினோ (Kaiane Aldorino) தெரிவு செய்யப்பட்டார்.முதலாவது ரன்னர் அப்பாக மெக்சிகோவைச் சேர்ந்த பெர்லா பெர்ல்ட்ரனும் 2ஆவது ரன்னர் அப்பாக தென்னாபிரிக்காவைச் சேர்ந்த டட்டும் கேஸ்வரும் தெரிவு செய்யப்பட்டார்கள்.இந்திய அழகி பூஜா சோப்ராவுக்கு மிஸ் என்ற பட்டமே கிடைத்தது.

"பா" - திரை விமர்சனம்

தந்தை மகனாகவும் மகன் தந்தையாகவும் நடித்திருக்கும் இல்லை இல்லை வாழ்ந்திருக்கும் படம் தான் பா. அமிதாப், அபிஷேக் வித்யா பாலன் என ஒரு சில குறிப்பிட்ட பாத்திரங்களுடன் சிறந்த கதையினாலும் இசையினாலும் மனதைக் கொள்ளையடித்துவிட்டது.கதை

ஆரோ(அமிதாப்) progeria என்ற நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன். அதாவது இந்த நோய் வந்தவர்கள் தங்கள் வயதை விட அதிகம் வயதுடைய தோற்றம் உடையவர்களாகக் காணப்படுவார்கள். ஆரோவின் பாடசாலைப் பரிசளிப்பு வைபத்துக்கு பிரதம விருந்தினராக வரும் அமோல்(அபிஷேக்)சிறுவன் ஆரோவின் வெள்ளையடிக்கப்பட்ட பூமிப் பந்தைப் பார்த்துக் கவர்ந்து அந்தச் சிறுவனுக்கு சிறந்த மாணவன் விருதை வழங்குகின்றார். அத்துடன் அந்தச் சிறுவனின் நிலையைப் பற்றி ஊடகங்களுக்கும் அறிவித்தும் விடுகின்றார். இதனால் ஆரோவைத் தேடி அவனது பாடசாலைக்கு ஊடகங்கள் முற்றுகை இட இதனால் ஆத்திரமடைந்த ஆரோ இதற்க்கு காரணமான அமோலுக்கு தன்னுடைய எதிர்ப்பை மின்னஞ்சல் செய்கின்றான். இதிலிருந்து ஆரோவுக்கும் அமோலுக்குமான உறவு ஆரம்பிக்கின்றது.

அமோல் யார் என்றால் ஆரோவின் தந்தை என்பதையும் அவருக்கும் வித்யாவிற்க்கு(வித்யா பாலன்)இடையிலான காதலில் கருத்தரித்தவன் தான் ஆரோ என்பதை ஒரு பாடலில் சொல்லிவிடுகின்றார் இயக்குனர். இந்த வேண்டாத கர்ப்பத்தால் வித்யா அமோலை விட்டுப் பிரிந்துவிடுகின்றார்.

ஆரோ தன் தந்தை அமோல் தான் என்பதை அறிந்தாரா? வித்யாவும் அமோலும் சேர்கின்றார்களா? என்பதை 2 மணித்தியாலம் 15 நிமிடங்களில் சொல்லும் கதை தான் ஹிந்தியில் வெளியான பா(Paa).

ஆரோ :நெடிதுயர்ந்த கம்பீரமான குரலில் பார்த்துப் பழக்கப்பட்ட அமிதாப் பச்சனை வயது போன தோற்றத்தில் வித்தியாசமான குரலில் ( ஒரு பாடல் கூடப் பாடியிருக்கின்றார்)பார்ப்பது புதுமை. எந்தவொரு இடத்திலும் அமிதாப்பை தெரியவில்லை ஆரோ தான் தெரிந்தான்(ர்). தன்னுடை கண்களாலே சில இடங்களில் குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் நடித்திருப்பார். எத்தனையோ கான்கள் வந்தாலும் எப்படி அமிதாப்பால் இன்றைக்கும் ஹிந்தி சினிமாவில் நின்று நிலைக்க முடிகின்றது என்ற கேள்விக்கு தன் நடிப்பாலே பதில் சொல்லியிருக்கின்றார். தான் ஒரு நோயாளி என்பதைத் வெளிக்காட்டாமல் மற்றவர்களுடன் சேர்ந்து விளையாடுவதும் நக்கல் நையாண்டிகள் செய்வதும் ஆரோவின் வயது 12 தான் என்பதை உணர்த்துகின்றது. சில படங்களில் மாற்று ஆற்றல் உள்ளவர்களை ஏனைய நண்பர்கள் கிண்டலடிப்பார்கள், ஆனால் பாவில் கிளைமாக்ஸ் காட்சிக்கு உதவிய சிறுமியைத் தவிர ஒருவர் கூட ஆரோவின் இயலாமையை கிண்டல் செய்யவில்லை. அமிதாப்பின் குரலும் ஒப்பனையும் நேர்த்தி.

திரைக்கதை :

ஒரு சோகமான செண்டிமென்டான கதையை நகைச்சுவை, காதல், அரசியல் பழிவாங்கல்கள், பாசம் என்ற பல கலவைகளினூடாக கொண்டு சென்றிருக்கின்றார் இயக்குனர் பால்கி. ப்ப்ப்பா என ஜெயாப் பச்சான் திரைப்படத்தின் கலைஞர்கள் ஒவ்வொருவராக தன் குரலினூடக அறிமுகப்படுத்துவதுடன் அறிமுகம் அமிதாப் பச்சான் என்பதிலிருந்து ஆரம்பித்த திரைக்கதை, தொய்வில்லாமல் இடைவேளை வரை செல்கின்றது. இடைவேளையில் அதிர்ச்சியான ஒரு விடயத்தை எந்தவித ஆர்ப்பாடமும் இன்றிச் சொல்வதில் நிறுத்தி மீண்டும் அடுத்த பாதியில் சில இடங்களில் சுவாரசியத்தைக் குறைத்தாலும் குறையில்லாத திரைக்கதையாகவே இருக்கின்றது.

வசனம் :

படத்தின் பலமே வசனங்கள் தான்( ஹிந்தி தெரியாவிட்டாலும் ஆங்கில சப் டைட்டில் காப்பாத்திவிட்டது). அமோலும் ஆரோவும் பேசுமிடங்கள் அதிலும் அரசியல்வாதிகள் ஏன் வெள்ளை உடை அணிந்திருக்கின்றார்கள் என்பதற்க்கு ஆரோ கொடுக்கும் விளக்கத்தில் தியேட்டரே கலகலத்தது. வித்யா பாலனும் அவரது அம்மாவும் ஒரே வசனத்தில் கர்ப்பத்தை என்ன செய்வது எனப் பேசுவது எனப் பல இடங்களில் வசனங்கள் கூர்மையாக இருக்கின்றன.

இயக்கம் :

ஏற்கனவே "சீனி கம்" என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிய பால்கியின் இரண்டாவது படம் இது. ஆரம்ப காட்சிகளில் இருந்து இறுதிக்காட்சிவரை நேர்த்தியான இயக்கம். அதிலும் ஒரு சோகமான கதையை சுவாரசியமாக கொண்டு சென்றது பாராட்டத்தக்கது. அத்துடன் ஒருவித்தியாசமான கதைக் களத்தில் ( சில வேளைகளில் கதையின் சாயல் அஞ்சலியை நினைவுபடுத்தினாலும் அது வேறை இது வேறை)ஒரு சில பாத்திரங்களை மட்டும் வைத்துக்கொண்டு திறம்பட இயக்கியிருக்கின்றார்.

இசை அல்லது இளையராஜா :

ஞானியின் இசைகளில் பாடல்கள் ஏற்கனவே கேட்ட மெட்டுகளாக இருந்தாலும் அந்த அந்த இடங்களுக்கு பொருந்துவது சிறப்பு. பின்னணி இசையிலும் படத்தின் தீம் இசையிலும் ராஜா சக்கரவர்த்தியாக நிற்கின்றார். ஆரம்ப காட்சிகளில் வரும் வயலினும் தன்னுடைய பாடல்களை தானே மெருகேற்றித் தருவதிலும் இசைஞானியாக இருக்கின்றார். இந்தப் படத்திற்க்கு ராஜாவின் இசைக்கு விருது வழங்காவிட்டால் அந்த விருதுகளுக்குத் தான் இனி அவமானம்.

ஒளிப்பதிவு :

இன்னொரு நம்மவர் பி.சி.ஸ்ரீராமின் ஒவ்வொரு காட்சிகளும் கண்ணில் நிற்கின்றன. சில கமேராக் கோணங்களும் குளோசப் காட்சிகளும் வர்ணிக்க வார்த்தைகள் அற்றவை. ஒரு காட்சியில் வித்யா பாலனினதும் அமிதாப்பினதும் முகம் மட்டும் திரையை இருவரின் கண்ணீருடன் நிறைக்கும் சிம்ப்ளி சூப்பர்.அபிஷேக் :

அப்பாவுடன் போட்டி போட்டு நடிக்கவேண்டிய பாத்திரம், தன்னால் முடிந்ததைச் செய்திருக்கின்றார். சில இடங்களில் குருவில் பார்த்த நடிப்பு. குறைசொல்லமுடியாத அளவிற்க்கு நடித்திருக்கின்றார்.

வித்யா பாலன் :

ரேவதி, சுஹாசினி இருவருக்கும் பின்னர் சிறந்த நடிப்பை இந்தப் படத்தில் காட்டியுள்ளார். முகத்தினாலையே பல இடங்களில் அழுகின்றார், கேள்வி கேட்கின்றார் காதல் வயப்படுகின்றார். தமிழில் நல்ல படங்கள் கிடைத்தால் நடிக்கலாம்.

ஆரோவின் தந்தை, வித்யாவின் தாய், ஆரோவின் நண்பன் விஷ்ணுவாக வரும் அந்தச் சிறுவன், ஆரோவின் ந‌ண்பியாக வரும் அந்தச் சிறுமி( கோல்ட் வின்னர் விளம்பரச் சிறுமி)போன்ற பாத்திரங்களும் தங்கள் பங்கை திறம்படச் செய்திருக்கின்றார்கள்.

நேர்த்தியான கதை, திரைக்கதை, நடிப்பு, இயக்கதால் பா எல்லோர் மனதையும் நிச்சயம் கவரும். படம் பார்த்துவிட்டு வெளியே வரும் போது எழுந்த கேள்வி தமிழில் ஏன் எப்படி வித்தியாசமான கோணங்களில் கதைகள் வருவதில்லை?

"பா" ர்த்தேன் ரசித்தேன்

பின் குறிப்பு : தியேட்டரில் ஜேம்ஸ் கமரூனின் அவதார் படத்தின் ட்ரையிலர் போட்டார்கள், மிரட்டியிருக்கின்றார்கள். வேட்டைக்காரன் வெளியாகும் 18 ந்திகதி உலகமெங்கும் வெளியாகின்றது அவதார்.

ஹாட் அண்ட் சவர் சூப் 11-12-2009

யாழ்ப்பாணப் பயணம்

கடந்த சில நாட்களாக உறவினர்கள் சிலருக்காக யாழ்ப்பாணம் செல்வதற்கான பயணச் சீட்டுக்களைப் பெற கொழும்பு பிரதான பஸ் நிலையத்திற்குச் செல்லவேண்டி இருந்தது. தமிழன் என்றாலே வரிசையில் நிற்கவேண்டும் என்பதற்க்கிணங்க நீண்ட வரிசையில் அதிகாலையில் நின்றால் தான் அன்றைய இரவிற்க்கான பயணச் சீட்டுக் கிடைக்கும்.

கிட்டத்தட்ட 500க்கு மேற்பட்டவர்களுக்கு பயணச் சீட்டு வழங்க ஒருவர் மட்டுமே அந்த பஸ் நிலையத்தில் வேலைக்கமர்த்தப்பட்டிருக்கின்றார். 7 கருமபீடங்கள் இருந்தும் ஒன்றில் தான் யாழ் செல்வதற்கான பயணச் சீட்டு வழங்குகின்றார்கள். ஆகக்குறைந்தது ஒரு மூன்று அல்லது நாலு கருமபீடங்களில் சீட்டை வழங்கினார் மக்களுக்கு வசதியாக இருக்கும்.

ஆனாலும் நம்மவர்கள் இதிலும் தங்கள் கைவரிசையைக் காட்டிவிடுகின்றார்கள். உள்ளே பயணச்சீட்டுக் கொடுக்கும் நபர் தமக்குத் தெரிந்தவர் என்றால் பின்கதவு வழியாக பயணச்சீட்டைப் இலகுவாக பெற்றுக்கொள்கின்றார்கள். அத்துடன் அந்தக் கருமபீடத்தில் இருப்பவர்களுக்கு தமிழ் தெரியாததால் பலருக்கு மொழிப் பிரச்சனையால் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. இவற்றை சம்பந்தப்பட்டவர்கள் கருத்தில் கொள்வார்களா?

தமிழன் என்ற வரைவிலக்கணத்துடன் மறக்காமல் வரிசையையும் இணைக்கவேண்டும்.

ஐயப்பனும் சிறுவர்களும்

தற்போது சபரிமலைக்கு மாலை போட்டு விரதம் அனுஷ்டிக்கும் காலம். வீதிகளில் கறுத்த உடைகளுடன் பல ஐயப்பன் பக்தர்களை காணக்கிடைக்கின்றது. பெரியவர்களுடன் சில சிறுவர் சிறுமிகளும் மாலை போட்டிருப்பது ஏனோ மனதை நெருடுகின்றது. காரணம் ஒரு மனிதனின் தனித்துச் செயல்ப்படும் வயது 18 வயதின் மேல் தான் ஆரம்பமாகின்றது எனச் சொல்கின்றார்கள். அப்படியிருக்கையில் சிறுவர்களை பெற்றோர்களின் உந்துதலின் பெயரில் மாலை போட அனுமதிக்கலாமா? சிந்திக்க தெரியாத வயதில் சபரிமலை விரதம் என்பது கடினமானது. ஆன்மிகவாதிகள் கோபம் கொள்ளாது தங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள்.

சிறுவர்களாக இருக்கும் பெளத்த துறவிகளைப் பார்க்கும் போதும் இதே எண்ணம் எனக்கு ஏற்படுகின்றது. சிறுவர் துஷ்பிரயோகம், சிறுவர் போராளிகள் என பலதுக்கும் குரல் கொடுக்கும் அமைப்புகள் மதம் சம்பந்தப்பட்டதாலோ என்னவோ இதனைக் கண்டுகொள்வதில்லை.

இளையராஜா

கடந்த பல தசாப்தங்களாக தமிழ் சினிமாவை தன் இசைக்குள் வைத்திருந்த இசைஞானியைப் பற்றி இப்போ சில கற்பூரவாசனை தெரியாதவர்கள் விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்கள். ஒருவரின் இசை என்ன மொழியில் இருந்தாலும் கேட்பவரின் மனதைத் தொட்டால் அது சிறந்த இசைதான். ராஜாவின் இசைக்கோலங்கள் பல எத்தனை தடவை கேட்டாலும் இன்னமும் மறக்கமுடியாது.

ஒரு படத்தினை வைத்து இசைஞானியை எடைபோடும் கோமளிகளை என்னவென்று சொல்வது? தமிழர்களுக்கு எழுதுகின்ற இவர்கள் தங்கள் பெருமைகளை இன்னொரு மொழி பேசும் இடத்தில் கேளுங்கள் சொல்வார் என பீத்துவதும் சிறுபிள்ளைத் தனமானது. ராஜாவின் இசை தென்னிந்திய மொழிகளில் பிரபலம் என்பது அந்தப் பிரபலத்துக்குத் தெரியவில்லையோ. அண்மையில் உயிர்மையில் அவரின் இசை பற்றிய கட்டுரையில் இசைஞானியைத் தவிர ஏனைய இசையமைப்ப்பாளர்களின் இசைகள் நன்றாக இருப்பதாகவும் ஆனால் பாடல்வரிகள் மட்டும் ஆபாசமாக இருப்பதாகவும் எழுதித் இசைஞானியின் மேல் தனக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சியை அப்பட்டமாக காட்டியிருந்தார்.

இசைஞானி, கலைஞானி மேல் இவர்காட்டும் காழ்ப்புணர்ச்சி அறிந்ததுதான் ஆனாலும் இவர் அடிக்கடி தன் காழ்ப்புணர்ச்சியை இவர்கள் மேல் வைக்காமல் தன் புணர்ச்சியை எழுதட்டும் எவரும் தட்டிக் கேட்கமாட்டார்கள்.

ராஜாவின் இசைக்கு எப்படி மக்கள் மயங்குகின்றார்கள் என்பதற்க்கு இந்தக் காணொளியைப் பாருங்கள். ஒவ்வொருவரினதும் மனநிலையை தெளிவாகப் பார்க்கலாம், இளம் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத்தின் உற்சாகம், நடிகர் பிரசன்னாவின் முகத்தில் காணப்படும் பரவசம், வினுச்சக்கரவர்த்தியின் ஆனந்தக் கண்ணீர் என பலரை ராஜாவின் இந்த கானம் பரவசப்படுத்தியிருக்கின்றது.நடிகைகள் படம்

என்னுடைய ஹாட் அண்ட் சவர் சூப்பில் ஒரு கவர்ச்சிக்காக நடிகைகளின் படம் போடுவது வழக்கம். இந்தப் படம் பலரையும் கவர்ந்திருக்கின்றது. அதே நேரம் சில நண்பர்கள் என்னிடம் இது தேவையா? எனவும் குறைப்பட்டார்கள். இப்படியான பல்சுவைகளை எழுதும் சிலர் வயது வந்தவர்களுக்கான ஜோக் என எழுதும் போது வெறுமனே படம் போடுவதில் எந்த தப்பும் இல்லை என்பது என் எண்ணம் ஆனாலும் சில நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க குறிப்பாக சுபானுவின் கடந்த முறை சூப்பின் பின்னூட்டத்திற்காக இதனை நிறுத்த இருந்தேன்.

ஆனால் ஏனைய நண்பர்களின் பலரின் அன்பு மிரட்டலால் மீண்டும் சூப்பில் படம் போடுவது என முடிவுக்கு வந்துள்ளேன். சுபானு போன்ற நண்பர்கள் பொறுத்தருள்க.

இலங்கைப் பதிவர் சந்திப்பு 2

நீண்ட நாட்களின் பின்னர் அடுத்த சந்திப்பு மீண்டும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. முதலாவது சந்திப்பின் இனிமையான நினைவுகள் மறையும் முன்னர் அடுத்த சந்திப்பு நடைபெறவிருப்பதால் நண்பர்களை மீண்டும் காணும் ஆவலில் பலர் இருக்கின்றார்கள்.

வித்தியாசமான நிகழ்ச்சி நிரல், சில போட்டிகள், சில சுவாரசியங்கள் என இம்முறை ஏற்பாட்டுக்குழுவினர் தயாராகவுள்ளனர். இந்தமுறை அதிக பதிவர்களை ஏற்பாட்டுக்குழுவினர் எதிர்பார்க்கின்றார்கள்.இச்சந்திப்பின் நிகழ்ச்சி நிரல்

இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு

இடம் : கைலாசபதி அரங்கு, தேசிய கலை இலக்கியப் பேரவை, காலி வீதி, வெள்ளவத்தை (ரொக்சி திரையரங்கு முன்னால்)
காலம் : டிசம்பர் 13, 2009 (ஞாயிற்றுக்கிழமை)- பி.ப. 2.00 மணி

அறிமுகவுரை
புதிய பதிவர்கள் அறிமுகம்
கலந்துரையாடல் ஒன்று :

பயனுறப் பதிவெழுதல், பதிவுகளின் தன்மை, எவ்வாறு அது இருக்கவேண்டும், அதன் வீச்சு, தாக்கம், எவ்வாறு அதனை மேம்படுத்துவது போன்றன.

கலந்துரையாடல் இரண்டு : பின்னூட்டங்கள் குறித்தான பார்வை
காத்திரமான பின்னூட்டம், பயன்தரு பின்னூட்டம், தனிநபர் தாக்குதல் பின்னூட்டம், அநாமதேயப் பின்னூட்டம், பின்னூட்டங்களுக்கான எமது தயார்படுத்தல், பின்னூட்டக் கடமை மற்றும் கயமை போன்றன

சிற்றுண்டியும் சில பாடல்களும்

கலந்துரையாடல் மூன்று :
இலங்கைத் தமிழ்ப் பதிவர் குழுமத்தை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது?

கலந்துரையாடல் நான்கு : பெண்களும் பதிவுலகமும்
பதிவெழுதுதலில் பெண்களுக்கிருக்கக்கூடிய பிரச்சினைகளும் இருந்தால் தீர்வுகளும், குறிப்பாக இது இலங்கைத் தமிழ்ப் பெண்பதிவர்களைப் பற்றியதாக இருக்கும்

பதிவர்களுக்கிடையான குழுப் போட்டி :
கலந்துகொள்ளும் பதிவர்கள் சில குழுக்களாகப் பிரிக்கப்பட்டு சுவாரசியமான போட்டி நடாத்தப்படும். வெல்லும் குழு புகைப்படத்தினுள் அடக்கப்பட்டு முடியுமெனின் பரிசுடன் சந்திப்பின் பின்னான பதிவுகளில் சிலாகிக்கப்படும்.

உங்களுக்குள் உரையாடுங்கள்

கடந்த தடவை போன்று இச்சந்திப்பும் http://livestream.com/srilankatamilbloggers எனும் சுட்டியில் நிகழ்வு நேரடி ஒளிபரப்புச் செய்யப்படும்.

சில ஏற்பாட்டுக்களுக்காக தங்கள் வருகையை இலங்கைத் தமிழ்ப் பதிவர் வலைத் தளத்தில் உறுதிப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

இலங்கைப் பதிவர் சந்திப்பு

மீண்டும் சந்திப்போம் சிந்திப்போம்.