2012 திரும்பிப்பார்க்கின்றேன்


2012ல் இந்தப் பதிவுடன் வெறும் ஐந்தே ஐந்து பதிவு எழுதிய பெருமை என்னையே சாரும். 2011 டிசம்பரில் இருந்து மேற்கு வேல்ஸில் வசித்தபடியால் வேலைப்பளு காரணமாக பெரிதாக எழுதவில்லை. வாழ்க்கையில் சில படிப்பினைகள் பல அனுபவங்கள் எல்லாம் கற்றபெற்ற இடமாக வேல்ஸ் என்னை மாத்தியது. அன்பான மனிதர்கள் அமைதியான கடல் குட்டிக்குட்டி மலைகள் நிறைந்த அழகான நகரம் வேல்ஸ்.


2012ல் மறக்கமுடியாத பல சம்பவங்கள் என் வாழ்க்கையில் இடம்பெற்றாலும் குறிப்பிடுச் சொல்லும்படியான வரலாற்று நிகழ்வு லண்டன் 2012 ஒலிம்பிக்கில் மரதன் ஓட்டமும் வேக நடையும் நேரடியாக பல்லின மக்களுடன் பார்த்து ரசித்ததுதான். ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் நடந்த நிகழ்வுகளுக்கு டிக்கெட் கிடைக்காதபடியால் போகமுடியவில்லை, ஆனாலும் ஒலிம்பிக் ஆரம்பமாவதற்க்கு முன்னர் பெரியப்பு கானாபிரபா, மாயா இருவருடனும் ஒலிம்பிக் கிராமத்தை சுத்திபார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.(லண்டனில் எம்மைச் சந்தித்த சரித்திர நிகழ்வை ஏனோ பெரியப்பு கானா இன்னும் எழுதவில்லை).  


என் வாழ்க்கையின் நீண்ட நாள் ஆசை ஒன்று இந்தவருடம் நிறைவேறியது, கிரிக்கெட்டின் மெக்கா எனப்படும் லோர்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து எதிர் தென்னாபிரிக்க டெஸ்டின் கடைசி நாள் ஆட்டம் நேரடியாக பார்த்தேன். ஒரு புனித தலத்திற்க்கு சென்ற பீலிங் எனக்கு ஏற்பட்டது.


சென்ற ஆண்டில் நான் ரசித்த சில விடயங்கள்

கங்கம் ஸ்டைல்
தென்கொரிய பாடகர் Psy யினால் கடந்த ஜூலையில் பரபரப்பரப்பாக பாடப்பட்டு யூடூயூப்பில் பல மில்லியன் ஹிட் அடித்த பாடல். தென்கொரியர்களின் மேற்கத்திய மோகத்தை நக்கலடித்த பாடல். இதனை இன்னும் பிரபலமாக்கியது மேற்கிந்திய வீரர் கிறீஸ் கெய்ல். வழக்கம் போல இதனையும் ஹாரீஸ் ஜெயராஜ் விட்டுவைக்கவில்லை, துப்பாக்கி கூகுள் கூகுள் பாடலில் கொஞ்சம் சுட்டுவைத்திருக்கின்றார்.

Fifty Shades of Grey
E.L.James இனால் 2011ல் எழுதப்பட்டு 2012ல் சக்கைபோடு போட்ட நாவல், பெரியதொழிலதிபர் கிறே மீது பல்கலைக்கழக மாணவி அனஸ்தீசியா ஸ்டீலுக்கு ஏற்படும் காதல் மிகவும் அழகாக எழுதியிருக்கின்றார். காதலும் அதனூடு சேர்ந்திருக்கும் காமத்தையும் ஆபாசமின்றி எழுதியிருப்பதனாலோ எனவோ பெரும்பாலான பெண்களைக் கவர்ந்திழுத்திருக்கின்றது. பிரித்தானியாவில் ரயில்கள் பஸ்கள் என சகல போக்குவரத்துகளிலும் பிரயாணிக்கும் பெரும்பாலன பெண்களின் கைகளில் இந்தப் புத்தகம் சிலகாலம் தஞ்சமடைந்திருந்ததை அவதானித்தேன். 

முகனூலர் (பொது)
மைந்தன் சிவா 
மைந்தனின் பேஸ்புக் ஸ்டேடஸ்கள் பெரும்பாலும் அரசியல், விளையாட்டு, மொக்கை, சினிமா என பலதையும் பேசும் சில நேரங்களில் காரசாரமான விவாதங்களும் நடைபெறும். பெண்கள் பற்றிய கருத்துக்களை எந்தவிதமான பயமின்றி தெரிவிக்கும் மர்மம் இன்னும் பிடிபடவில்லை.

முகனூலர் (காதல்)
தங்கமயில் புருஷோத்தமன்
காதலாகிக் கசிந்து இவர் இடும் பேஸ்புக் ஸ்டேடஸ்கள் கெளதம் வாசுதேவ மேனன் படங்கள் போலவே இருக்கும். காதல் அனுபவம் இல்லாமல் இவரால் இப்படி எழுதமுடியாது என்பது வெளிப்படை உண்மை, ஆனாலும் சிங்கம் இன்னும் சிங்கிளாக இருப்பதாகவே அடிக்கடி அறிக்கை விடுகின்றார்.

கீச்சர்
திருக்குமார்
திருக்குமார் அண்ணாவின் கீச்சுக்களில் பெரும்பாலும் ஒரு மெல்லிய நகைச்சுவை இழையோடும். இடையிடையே ராஜா ரகுமான் என சீரியசாக கீச்சினாலும் அண்மைக்காலமாக அவரின் கீச்சுகள் குறைந்துவிட்டன, அவரின் இந்தக் கீச்சின் பின்னர் நிலைமை மாறியிருக்கலாம்
Thirukkumar ‏@Thirukkumar
நேற்று எங்கள் திருமண நாள் இன்று தான் ஞாபகம் வந்தது #பூகம்பம்

பெரும்பாலும் பிடித்தமான வலைகளையும் காத்திரமான வலைகளையும் வாசித்தாலும் அவற்றிற்கு பின்னூட்டம் இடுவது என்பது மிகவும் குறைவு, பேஸ்புக்கில் அவர்கள் அதனை பகிர்ந்திருந்தால் ஒரு லைக்குடன் விட்டுவிடுவேன். அதனால் இந்தம்முறை எனக்குப் பிடித்தவலை என எதையும் குறிப்பிடமுடியாமல் உள்ளது. இதேவேளை படித்த பதிவு என்றால் கங்கோன் தனது லப்டொப் காணமல் போனது பற்றி தனது மொபைலில் இருந்து இட்ட ஆங்கிலப் பதிவு.

Being careless doesn’t help

படம்  : நண்பன்

பாடல் : அஸ்கு லஸ்கா : படம் :  நண்பன்

சிறந்த நடிகர் : விஜய் சேதுபதி(பீட்ஷா)

சிறந்த நடிகை : சமந்தா ( நீதானே என் பொன்வசந்தம்)

சிறந்த இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ் (நண்பன்)

சிறந்த இயக்குனர் : ஏ,ஆர், முருகதாஸ்(துப்பாக்கி)

சிறந்த கவிஞர் : மதன் கார்க்கி(நண்பன்)

தொலைக்காட்சித் தொகுப்பாளர்  : இந்த வருடம்எவரும் பெரிதாக என்னைக் கவரவில்லை, கோபிநாத் அழகாகப் பேசினாலும் எதிரில் இருப்பவர்களின் பெயரைக்கூட ஒருநாளும் கேட்பதில்லை மஞ்சள் சட்டை போட்டவர் சொல்லுங்கள், கட்டம் போட்ட சட்டை போட்டவருக்கு இன்றைய பரிசு என்பார், இது என்ன நாகரீகமோ கோபிக்குத் தான் வெளிச்சம். ஹாலிவூட் கிங் தொகுத்துவழங்கும் வெங்கட் பிரபு ஓரளவு நல்லாச் செய்தாலும் தங்கள் குடும்ப விடயங்களையும் தலை பற்றியும் ரொம்ப ஓவராகப் பேசுகின்றார். 

சென்ற ஆண்டின் சொந்த செலவில் சூனியம் 
வேறை யாருமல்ல வழக்கு பாயுதே புகழ் பாடகிதான்.

வடபோச்சே
மாயன் கலண்டரின் படி உலகம் அழியப்போவதாக நினைத்த சிலரை ஏமாத்திய மாயன் கலண்டர்.

அனைத்து நட்புகளுக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள். 2013 அனைவரின் வாழ்விலும் சந்தோஷத்தை வழங்க எல்லாம் வல்ல இயற்கையைப் பிரார்த்திக்கின்றேன். 

நீதானே எந்தன் பொன்வசந்தம் உங்களின் காதல் கதை


இளையராஜா இசை கெளதம் இயக்கம் அழகுப் பதுமை சமந்தா என எதிர்பார்ப்பை எகிறவைத்த நீதானே எந்தன் பொன்வசந்தம் நீண்ட நாட்களின் பின்னர் முதல்நாள் இல்லை முதல்நாளுக்கு முதல்நாள் முதல்காட்சி படம் பார்க்கமுடிந்தது. தீடீரென வெளியிட்டபடியாலோ என்னவோ பெரிதாககூட்டம் இல்லை ஆனால் சில பெண்களை தியேட்டரில் பார்க்ககூடியதாக இருந்தது.

கதை
பாடசாலை நாட்களில் ஏற்படும் பப்பிக் காதல் கதை. அந்தந்த வயதில் காதலர்களுக்கிடையே ஏற்படும் ஈகோச் சண்டைகள். விட்டுக்கொடுப்புகள் பிடிவாதங்கள் இறுதியில் என்ன நடக்கின்றது என்பதுதான் கதை.

திரைக்கதை
முதல் பாதியில் பாடசாலை கல்லூரிக் காதல்களை வேகமாகவும் யதார்த்தமாகவும் அமைத்த கெளதம் இரண்டாம் பாதியை கிளைமாக்ஸ் வரை இழுவையாக அமைத்திருக்கின்றார். அதிலும் கிளைமாக்ஸ் மட்டும் பார்ப்பவர்களுக்கு இது கெளதமின் படமா என்ற சந்தேகம் ஏற்படும். அடுத்தது இதுதான் என ஊகிக்கவைக்கும் திரைக்கதை படத்தின் பலவீனங்களில் ஒன்று. 

வசனம்
படத்தின் மிகப்பெரிய பலமே இயல்பான வசனங்கள் தான் வழக்கமான கெளதம் படங்களில் வரும் ஆங்கிலத் திணிப்பு அவ்வளவாக இல்லை. சந்தானத்தின் நகைச்சுவையான சில பஞ்ச் வசனங்கள் பேஸ்புக் ஸ்டேடசுக்கு பொருத்தமானவை. 

இயக்கம்
விண்ணைத்தாண்டி வருவாயா என்ற காதல் ஹிட் அடித்த கெளதம் அலிஸ்டர் குக் போல அசரமால் இதிலும் அதிரடியாக சதமடித்திருக்கின்றார். இதற்கான முழுக்காரணம் இந்தக் கதையின் ஏதாவது ஒரு காட்சியாவது உங்கள் வாழ்க்கையில்(நீங்கள் காதலித்தவர், காதலித்துக்கொண்டிருப்பவர் என்றால்) நடந்திருக்கும். பல இடங்களில் திரைக்கதையுடன் உங்களை ஒன்ற வைத்திருப்பது கெளதத்தின் வெற்றியே. 

வருண்
வருண் என்ற பாத்திரத்தில் வரும் ஜீவாவை நீங்கள் எப்படியும் உங்கள் வாழ்க்கையில் சந்தித்திருப்பீர்கள், உங்கள் நண்பனாகவோ உறவினனாகவோ ஏன் சில வேளை நீங்களாகவோ கூட இருக்கலாம். ஒரு சாதாரண வாலிபனாக படம் முழுவதும் ஜீவா ஆக்கிரமித்திருக்கின்றார். கல்லூரியில் நீண்ட நாட்களின் பின்னர் சமந்தாவை கண்டதும் மேடையில் ஜீவா பாடும் பாடலில் நண்பன் குறும்பு கொப்பளிக்கின்றது. சந்தானத்துடன் அடிக்கும் லூட்டிகளில் தியேட்டரே அதிருகின்றது. சமந்தாவுக்கு கொடுக்கும் முத்தகாட்சிகளில் மட்டுமே ஜீவாவிடம் கெமிஸ்ரி மிஸ்சிங்.(புன்னகை மன்னன் படத்தை நாலு தடவை பார்த்திருந்தால் கெமிஸ்ரி பிசிக்ஸ் எல்லாம் தானாகவே வந்திருக்கும்).  

நித்யா
நினைவெல்லாம் நித்யா, நினைவெல்லாம் சமந்தா என படம் பார்த்துக்க்கொண்டிருக்கும் போதே ட்விட்டர் பேஸ்புக்கில் ஸ்டேடஸ் போட முனைந்தேன் ஆனால் அது சில பல சொசெசூ ஆகிவிடும் என்றதாலே கைவிட்டுவிட்டேன். அழகாக இருக்கின்றார், அழகாக சிரிக்கின்றார் அழகாக நடிக்கின்றார் அழகாக அழுகின்றார்(சமந்தாவை அழவைத்த கெளதமுக்கு பக்கத்தில் இருந்த ஜது கண்டனம் தெரிவித்தான்). விண்ணைத்தாண்டி வருவாயா ஜெசியை விட எனக்கு நீஎபொவ நித்யாவை பிடித்திருக்கின்றது. ஈகோ பிடித்த அழுத்தமான கொஞ்சம் சுயநலமான இக்காலப் பெண்களை சமந்தா பிரதிபலிக்கின்றார். 

சந்தானம்
படத்தின் இன்னொரு பலம் சந்தானம். ஜீவாவின் நண்பனாக இவர் அடிக்கும் லூட்டிகள் கலக்கல். லாரிக்கு கீழ போனவனைக் கூட காப்பாத்தலாம் ஆனால் லவ்விலை விழுந்தவனை காப்பாத்தவே முடியாது. சல்வார் மங்கிப்போனதும் ஜீன்ஸ் பேண்டிடம் வருவியள் கரண்டைக்கூட சொல்லிப்போட்டுத்தான் கட் பண்ணுவான் ஆனால் காதலை என இவர் அடிக்கும் பஞ்ச் வசனங்கள் அக்மார்க் சந்தானம் குறும்பு. அந்தக் குண்டுப் பெண்ணின் மேல் இவருக்கு வரும் காதலும் அதன் பின்னர் ஒரு இடத்தில் இவர் அடிக்கும் ஒரு கொமெண்ட் 18+ ஆக இருந்தாலும் தியேட்டரில் பலருக்கு புரியவேயில்லை. கொஞ்சம் கொஞ்சமாக கவுண்டர்மணி பாணியில் இருந்து சந்தானம் விடுபடுகின்றார்.

ஆண்டனியின் எடிட்டிங் மட்டும் இல்லையென்றால் படம் பப்படமாகி இருக்கும். எங்கே எங்கே தேவையோ அங்கை எல்லாம் அழகாவும் அளவாகவும் கத்தரி வைத்திருக்கின்றார். எம் எஸ் பிரபு ஓம்பிர்காஷின் ஒளிப்பதிவில் இராமேஸ்வரம் காட்சிகள் இயற்கை. பாடல் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் கத்தரி வைத்திருக்கலாம். கால ஓட்டத்தினை மொபைல் போனை வைத்து வேறுபடுத்தியிருப்பது அசல் கெளதம் வாசுதேவ் மேனன் டச். 

ஒரு அழகான காதல்கதையை இயல்பாக சொன்ன கெளதமுக்கும் அந்தக் கதாபாத்திரங்களில் வாழ்ந்த ஜீவா சமந்தாவுக்கும் பூங்கொத்து அல்ல பூந்தோட்டத்தையே பரிசளித்திருக்கலாம்.

ஓஓஓ மிகவும் ரசித்த ஒரு விடயத்தை மறந்துவிட்டேன் நினைவெல்லாம் நித்யா படத்தின் சூப்பர் டூப்பர் ஹிட் பாடலான நீதானே எந்தன் பொன் வசந்தம் பாடலை கெளதம் பாடும் போது மட்டுமே இசை இசைஞானி இளையராஜா மனதை வருடுகின்றார்.