எனக்குள் ஒரு ரசிகன் - பகுதி 2

1987ல் கமலின் இன்னொரு பரிமாணத்தை வெளிக்கொணர்ந்த படமாக நாயகனைச் சொல்லலாம். காக்கிச்சட்டை, பேர் சொல்லும் பிள்ளை, தூங்காதே தம்பி தூங்காதே,காதல் பரிசு போன்ற படங்களில் காதல் இளவரசனாக கோலோச்சிய கமலை உலக நாயகனாக மாற்றிய பெருமை இந்தப் படத்திற்க்கே சேரும். இதுவும் இதுவரை திரையில் என்னால் பார்க்கமுடியாமல் போன படம். டெக்கில் பலமுறை பார்த்தது. அந்த நாளில் பெரும்பாலும் வீடுகளில் டெக்கில் படம் போடும் போது என்ன படம் போடுகின்றார்கள் என்ற தகவல் எமக்கு கிடைத்துவிடும் நாயகன் படம் போடுகின்றார்கள் என்றால் பக்கத்து ஊருக்குப் போய் கூடப் பார்த்தோம்.முதன்முறை பார்த்தபோதே நண்பர்களுக்கு சொன்னேன் இந்தப் படத்தில் நிச்சயம் கமலுக்கு விருது கிடைக்கும் என்று சொன்னபடியே அவருக்கு தேசிய விருதை வாங்கிக்கொடுத்த இரண்டாவது படம்(முதல் படம் மூன்றாம் பிறை, குழந்தை நட்சத்திரமாக களத்தூர்கண்ணம்மா).

கமலைவிட வேலு நாயக்கரே மனதிற்குள் இன்றும் நிற்கிறார். ஒரே படத்தில் இரண்டுவிதமான தோற்றத்தில் கமல் வருவார் பலருக்கும் இளைஞர் வேலுவை விட முதியவர் வேலு நாயக்கரையே பிடித்திருக்கும். காரணம் அந்த பாத்திரம் காட்டிய வெவ்வேறுவிதமான உடல் அசைவுகள். மணிரத்னத்தையும் வெளிச்சத்திற்க்கு கொண்டுவந்த படமாக இதனைச் சொன்னால் மிகையாகாது.

பின்னர் பேசும் படத்தில் பேசாமல் நடித்த கமலும் சத்யாவில் அமலாவுடன் காதல் செய்த கமலும் பழைய காதல் இளவரசனை நினைவூட்டினாலும் சத்யாவில் வரும் கோபக்கார இளைஞனின் கோபம் சரியாகவே எனக்குப் பட்டது.

விக்ரம், காக்கிச் சட்டைக்குப் பின்னால் வந்த சூரசங்காரம் கமலிடம் ஆக்சன் எதிர்பார்த்த ரசிகர்களின் பசியை ஆற்றியதே என்றே கூறலாம். போதை மருந்துக்கு எதிரான ஒரு கதையில் மீண்டும் ஒரு போலீஸ் வேடத்தில் கமல் தன்னை மாற்றியிருப்பார். அதிலும் அதில் அவரது மீசையும் நிரோஷாவுடன் செய்யும் காதலும் கலக்கல். அம்பிகா, ராதா, ராதிகா, நிரோஷா போன்ற சகோதரிகளுடன் இணைந்து நடித்த நடிகர் கமலாகத் தான் இருக்கும். ரஜனி அம்பிகா, ராதா, ராதிகாவுடன் இணைந்து நடித்திருந்தாலும் நிரோஷாவுடன் நடிக்கவில்லை.

டாக்டர்.எம்.எஸ்.உதயமூர்த்தியின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு பாலசந்தருடன் கமல் கடைசியாக இணைந்து உதயமூர்த்தி என்ற சமுதாயக்கோபம் கொண்ட இளைஞன் வேடத்தில் நடித்த படம் உன்னால் முடியும் தம்பி. "புஞ்சை உண்டு நஞ்சை உண்டு" பாடல் சில நாட்கள் என் தேசியகீதமாகவே இருந்தது.

அப்புவுக்காக பலமுறை பார்த்த படம் அபூர்வசகோதரர்கள். சில ஆண்டுகள் கழித்து கொழும்பிலும் ஒரு தியேட்டரில் (நவா என நினைக்கின்றேன்) ரிப்பீட் பண்ணிய நேரம் பார்த்தேன்.

சிறுவன் என்ற பராயத்தில் இருந்து இளைஞனாக மாறும் காலத்தில் வெளிவந்த காதல் ஆக்சன் படங்களை விட ஏனோ எனக்கு கமலின் நகைச்சுவைப் படங்களும் புதிய முயற்சி செய்த படங்களான குணாவும், மகாநதியும், குருதிப்புனலும் மிகவும் பிடித்தது. ஆனாலும் இன்றைக்கும் திரும்ப திரும்ப பார்க்கும் படங்களில் சதிலீலாவதி, சிங்காரவேலன், மைக்கேல் மதன காம ராஜன் முதலிடம். இந்தப் படங்கள் எத்தனை தடவை பார்த்திருப்பேன் என்ற கணக்கே கிடைக்காது.

இடையில் தேவர் மகனில் கமல் மீண்டும் தன் முத்திரையைப் பதித்திருப்பார். தன் திரையுலகத் தந்தை நடிகர் திலகம் சிவாஜிகணேசனுடன் நடித்து அப்பாவிற்க்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறார் என்பதை நிரூபித்திருப்பார்.

மீண்டும் கொழும்பிற்க்கு வாழ்க்கை திரும்பியதன் பின்னர் திரையில் பார்த்த முதல் கமல்ப் படம் இந்தியன். மனீஷா கொய்ராலா, ஊர்மிளா என்ற கவர்ச்சி சுனாமிகளின் மத்தியில் இந்தியன் தாத்தாவை பலராலும் பேசவைத்த பெருமை கமலின் ஒப்பனைக்கும் சங்கரின் இயக்கத்திற்க்குமே சேரும். ஏற்கனவே கமல் இரட்டை வேடங்கள், நாலு வேடங்கள் என பல வேடங்கள் இட்டாலும் அபூர்வ சகோதரர்களுக்குப் பின்னர் இவர் செய்த சிறந்த இரட்டை வேடங்கள் இந்தியன் தாத்தா சேனாபதியும் மகன் சந்துருவும் ஆகும்.அழகான முதியவராக கமலைப் பார்த்த என்போன்ற ரசிகர்களுக்கு கமல் வயதான( என்றைக்கும் அவர் இளைஞர் தான்) பின்னும் இப்படித்தான் இருப்பார் என்ற தோற்ற மயக்கத்தை ஏற்படுத்திய பாத்திரம்.

அடுத்த பதிவு ஹேராமில் இருந்து வேட்டையாடு விளையாடு வரை.

3 கருத்துக் கூறியவர்கள்:

maruthamooran சொல்வது:

வந்தி.......

கமல் தொடர்பான இந்த தொடர் பதிவை எப்போதோ எதிர்பார்த்திருந்தேன். காலம் தாழ்த்தி வந்திருக்கிறது. கமலஹாசன் என்ற நடிகரின் பிம்பத்தை முற்றுமுழுதாக உள்வாங்கிக்கொண்டுள்ளீர்கள் என்பது பதிவுகளில் தெரிகிறது. அது சரி....... ஏங்க உங்க பதிவுகளுக்கு பின்னூட்டமிடுபவர்களின் பெயர்கள் தெரிவதில்லை.

வந்தியத்தேவன் சொல்வது:

//மருதமூரான். said...
கமல் தொடர்பான இந்த தொடர் பதிவை எப்போதோ எதிர்பார்த்திருந்தேன். காலம் தாழ்த்தி வந்திருக்கிறது. கமலஹாசன் என்ற நடிகரின் பிம்பத்தை முற்றுமுழுதாக உள்வாங்கிக்கொண்டுள்ளீர்கள் என்பது பதிவுகளில் தெரிகிறது. //

நன்றிகள் நண்பரே, உண்மைதான் எப்பவோ எழுதவேண்டிய விடயம் என்னுடைய சோம்பேறித்தனத்தால் நிறையக் காலம் தாழ்த்தி வந்தாலும், கமலின் பொன்விழாக் கொண்டாடும் இந்த மாதத்தில் வருவது பொருத்தமாகவே இருக்கிறது.

//அது சரி....... ஏங்க உங்க பதிவுகளுக்கு பின்னூட்டமிடுபவர்களின் பெயர்கள் தெரிவதில்லை.//

அதுதான் எனக்கும் விளங்கவில்லை யாரும் தொழில்நுட்பப் பதிவர்கள் விளக்கம் கொடுக்கவும்.

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

நீங்கள் கமலுக்குள் ஒருவன் என நிரூபித்துவிட்டீர்கள் வந்தி. 3 வருட பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்