Showing posts with label பல்கலைக் கழகம். Show all posts
Showing posts with label பல்கலைக் கழகம். Show all posts

மீண்டும் துளிர்க்கும் விஷச் செடி - பகிடிவதை.

ராக்கிங் எனப்படும் பகிடிவதையால் இலங்கையிலும் இந்தியாவிலும் வரப்பிரகாஷ், நாவரசு என்ற இரண்டு இளம் உயிர்கள் காவுகொள்ளப்பட்டதை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். வரப்பிரகாசின் மரணத்தின் பின்னர் இலங்கைப் பல்கலைக் கழக‌ங்களில் குறைந்திருந்த பகிடி வதை மீண்டும் துளிர்க்க ஆரம்பித்திருக்கிறது.

இரண்டு நாட்கள் முன்னர் ஒரு நண்பரைச் சந்தித்தேன், அவர் இலங்கையின் பிரபல பல்கலைக் கழகம் ஒன்றிற்குத் தெரிவாகியுள்ளார். அவர் அங்கே தற்போது நடக்கும் கொடுமைகளை கூறும் போது பகிடி வதை இன்னும் நிறுத்தப்படவில்லையோ என எண்ணத் தோன்றுகின்றது.

இதில் கொடுமை என்னவென்றால் பெரும்பான்மை சிங்கள மாணவர்கள் பகிடிவதை செய்வதில்லை, எங்கடையாட்கள் தான் பட்ட கஷ்டம் துயரங்கள் போதாது என்று மீண்டும் இந்த காட்டுமிராண்டித் தனத்தில் ஈடுபட்டிருக்கின்றார்கள்.

முதலாம் ஆண்டு மாணவர்களின் கூச்சத்தையும், புதிய சூழலிற்க்கு பழக்கப்படுவதையும் போக்கவே இந்தப் பகிடி வதையை ஆரம்பித்தார்கள், ஆனால் இன்று மாணவர்களை அடிப்பதும், தூசணங்களால் ஏசுவதும், மாணவிகளுடன் தரம் குறைந்து நடப்பதும் பகிடி வதை என்ற பெயரில் அரங்கேறுகின்றது.

மண் நிலத்தில் அமர்ந்து ஒரு பார்சல் உணவை அப்படியே உண்ணச் சொல்கின்றார்கள், சைவ உணவு சாப்பிடும் மாணவர்களுக்கு அசைவம் திணிக்கிறார்கள். நவீன தொழில்நுட்பம் காரணமாக விடுமுறையில் தங்கள் சொந்தப் பிரதேசத்தில் நிற்கும் மூத்த மாணவர்கள் தொலைபேசியில் தொல்லை கொடுக்கின்றார்கள். இப்படிப் பல பிரச்சனைகள் மீண்டும் தொடர்கின்றது.

இதிலும் இன்னொரு கொடுமை மூத்த ஆண் மாணவர்கள் ஆண், பெண் என இருபாலரையும் பகிடி வதைக்கு உற்படுத்தலாம், ஆனால் மூத்த பெண் மாணவிகள், புதிய பெண்களை மட்டும் தான் பகிடி வதை செய்யமுடியும். ஏனென்றால் மூத்த பெண்கள் இளைய ஆண்களைப் பகிடி வதை செய்தால் அது பெண்ணாதிக்கமாம். செய்வதோ காட்டுமிராண்டித் தனம் இதில் ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம்.

இன்றைய காலத்தில் பல பல்கலைக் கழகங்களில் நிறுத்தப்பட்ட பகிடி வதையை இவர்கள் மட்டும் தான் இப்போ தொடங்கியுள்ளார்கள். அதிலும் குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள் தான் இதில் மும்முரமாக நிற்கின்றார்களாம். எத்தனையோ துன்பங்களையும் மனக் கஸ்டங்களையும் பட்டவர்க‌ள் இன்று அதனைத் தங்கள் சகோதரர்கள் மேல் காட்டுகின்றார்கள் போலத் தெரிகின்றது.

நானும் ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் பட்டப்படிப்புப் படித்தவன். எங்கள் மூத்த மாணவர்கள் எங்களுக்கு வரவேற்பு விழா(Welcome Party) கொடுத்த போது கூச்சம், அச்சம் போன்றவை தெளிய, சிறிய பத்திரிகை ஒன்றில் ஆடுதல், ஒரே குளிர்பானப்போத்தலில் இரண்டு குழல்கள் போட்டு ஒரு ஆணும் பெண்ணும் குடித்தல்( அந்த குழல்கள் மெழுகால் அடைக்கப்பட்டிருக்கும்), பலூன் ஒன்றை இரண்டு பேர் நெஞ்சுக்கிடையில் வைத்து நெஞ்சினால் அதனை உடைத்தல், போன்ற சில முஸ்பாத்தியான விளையாட்டுகளை விளையாடவிட்டு எம்மிடையே பிணைப்பை ஏற்படுத்தினார்கள்.

மேற்குலகில் இல்லாத இந்தக் கொடுகை தெற்காசிய நாடுகளில் குறிப்பாக இலங்கையிலும் இந்தியாவிலும் வேர் விட்டுப் படர்ந்துள்ளது. இலங்கையில் சில காலம் இல்லாமல் இருந்தது. மீண்டும் துளிர்விட ஆரம்பித்துள்ளது முளையிலே கிள்ளி எறியாவிட்டால் இன்னொரு வரப்பிரகாஸ் உருவாகக்கூடும்.