கமல் 60 தேடியதும் கிடைத்ததும்.


 கமல் தனது 30 வயதை 30 ஆவது தடவை கொண்டாடுவதை சிறப்பிக்க  குமுதம் சிறப்பிதழாக வெளியிட்ட கமல் 60 சிறப்பிதழானது வாசிக்கப்பெற்றேன் அதன் நுனிப்புல் மேய்ந்த விமர்சனம் தான் இது. கெளதமி, ஸ்ருதி, சாருஹாசன் என அவரின் சொந்தங்களில் கைவண்ணத்தில் வந்த கட்டுரைகள் வழக்கமான பாராட்டுக்கள்தான். அதனைத் தொடந்து வரும் தேசாபிமானி மலையாள நாளிதழில் வந்த கமலின் நீண்ட பேட்டியில் கமல் எப்படி இந்திய சினிமாவின் ஒரு மறக்கமுடியாத ஆளுமை என நிரூபிக்கின்றது அதுமட்டுமல்ல கூடவே சுகுமாரனின் கட்டுரையில் கமல் மலையாள் சினிமாவை சிலகாலம் தன்னுடைய நடிப்பாதிக்கத்தில் வைத்திருந்ததையும் அறியமுடிந்தது.(தமிழ் சினிமாவில் மலையாள நடிகைகளின் ஆதிக்கம் அதிகம் காரணம் தமிழர்கள் என்றைக்கும் அழகை ரசிப்பவர்கள்).கமலின் இன்னொரு நண்பர் ஆர்.சி.சக்தி தனக்கு பிடித்த கமலின் 10 படங்களைப் பற்றி சில வரிகள் சிலாகித்திருக்கின்றார். இரா.முருகனின் கட்டுரை இன்னொரு விருமாண்டி படம் பார்த்தது போல இருந்தது. தொ.பரமசிவன், நா.மம்ம்து, வண்ணநிலவன் போன்ற இலக்கியவாதிகளின் கட்டுரைகள் மலருக்கு மேலும் காத்திரம் சேர்க்கின்றன. ஜெயமோகனின் கட்டுரை மட்டும் எனக்கு புரியவில்லை(ஜெமோவை வாசிக்க நான் இன்னும் வளரணுமா மம்மி).

அத்துடன் உலகநாயகனின் கவிதைகள் இரண்டும் சில கட்டுரைகளும் குறிப்பாக எழுத்தாளர் ஜெயகாந்தனைப் பற்றிய கட்டுரைகள் அக்மார்க் கமல் ஸ்டைல்.

விஜய் தொலைக்காட்சியின் கமல் 50ல் ரஜனிகாந்த், மம்முட்டி, மோகன்லால், பிரகாஸ்ராஜ் ஆகியோர் ஆற்றிய உரையினை அப்படியே போட்டிருப்பதை தவிர்த்திருக்கலாம்அத்துடன் கே.பாலசந்தர், பாரதிராஜா, எஸ்.பி,முத்துராமன் ஆகிய கமலின் விருப்புக்குரிய இயக்குனர்களின் கட்டுரைகள்  நடிகர் சத்யராஜ் கட்டுரை ஆகியன ரிமேக் கட்டுரைகளாக இருக்கின்றன(முன்னைய குமுதங்களில் வந்தகட்டுரைகளின் தொகுப்பு).


சந்தோஷ்ராஜ்.ஜீ.வெங்கட்ராம் ஸ்டில்ஸ் ரவி ஆகிய புகைப்படப்காரர்கள் எடுத்தபடங்கள் மலருக்கு அழகூட்டினால் ஓவியர் ஸ்ரீதரின் கைவண்ணத்தில் கலைஞானியின் ஓவியங்கள் அழியா அழகாக இருக்கின்றன.

கமலின் நண்பர்கள் கிரேசி மோகன், நிகில் முருகன், பேராசிரிய்ர் ஞானசம்பந்தன், விருமாண்டி புகழ் சண்முகராஜன் ஆகியோரின் கட்டுரைகள் கமலை நேசிப்பவர்களுக்கு அறிந்தவர்களுக்கு எந்தவிதமான புதிய செய்தியையும் கொடுக்கவில்லை.

நடிகர்கள் சார்லி, ரமேஸ்கண்ணா, மனோபாலாவின் கட்டுரைகள் ஏனைய கட்டுரைகளுடன் ஒப்பிடும்போது மிகவும் சிறப்பானவை.

உலகநாயகனின் இன்னும் மூன்று நண்பர்களின் கட்டுரைகள் இருந்திருந்தால் மலர் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும். இருவரிடம் கட்டுரை வாங்க அரங்கனிடம் தான் செல்லவேண்டும் இரண்டு ரங்கராஜன்களும்(கவிஞர் வாலி. எழுத்தாளர் சுஜாதா), இன்னொருவர் இசைஞானி இளையராஜா.


மொத்தத்தில் கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல ஏனையோருக்கும் பிடிக்கும் இந்த உலகநாயகன் 60.

புத்தகம் வாங்கிய கதை :

குமுதம் வெளியிட்ட கமல் 60 பற்றி ஏற்கனவே இணையங்களில் சிலாகிக்கப்பட்டாலும் நேற்று நண்பர் கானா பிரபா அந்தப் புத்தகத்தை ஆஸியில் வாங்கிவிட்டு ரேடியோஸ்பதியில் விமர்சித்தார் கூடவே என்னையும் இன்னொரு கமல் ரசிகரான நண்பர் லோஷனையும் டக்கியிருந்தார்அந்த போஸ்ட்டில் லோஷன் தன் பங்குக்கு தானும் புத்தகத்தை வாங்கிவிட்டேன் என தன்பங்கிற்க்கு என்னை இன்னமும் சூடேத்தினார்.

உடனே கொழும்பிலிருக்கும் அப்பாவிற்கு கோல் பண்ணிப் புத்தகம் பற்றிச் சொல்ல இப்போதான் தான் பூபாலசிங்கம் புத்தகசாலைப் பக்கமிருந்து வருவதாகவும் மீண்டும் அங்கே செல்வது மழையில் கடினமெனவும் கூறினார்.

இன்று எனக்கு வேலை ஓய்வு நாள் என்றபடியால் காலை மழை அடித்து ஓங்கி ஓய்வெடுத்த சின்ன இடைவேளையில் திருகோணமலையில் உள்ள ஒரு புத்தகக்கடைக்கு போனால் அங்கே கலைஞானி சிரித்துக்கொண்டிருந்தார்கூடவே பக்கத்தில் இசைஞானியும் தன் பங்குக்கு புன்னகைத்தார்இருவரையும் வாங்கிக்கொண்டு வந்து ஒரே மூச்சில் வாசித்துவிட்டேன்.

பிரித்தானிய அருங்காட்சியகம் British Museum

உலாத்துறது ஊர் சுத்துகின்றது சிலருக்கு மிகமிகப் பிடித்தமான விடயம். பெரும்பாலானவர்கள் தம்மை ஒரு வாஸ்கொடகாமாவாகவோ அல்லது கொலம்பஸாகவோ நினைத்தபடி ஊர் சுத்துவார்கள். அப்படி ஊர் சுத்துறதை ஒரு சிலர் மற்றவர்களுக்கும் பயன்படும் படி எழுத்துவடிவிலோ(அந்தநாளில் இதயம் பேசுகிறது மணியன் இந்த நாளில் எங்கடை உலாத்தல் மன்னன் கானா பிரபா) ஒளிவடிவிலோ சிறப்பாக தருவார்கள்.

இவ்வாறு ஊர் சுத்தலின் விளைவாக தவ.சஜிதரனினதும் குழுவினரதும் ஒரு முயற்சி தான் யாதும் ஊரே என்ற பெயரில் வெளியாகி இருக்கும் ஒளியாவணத்தொகுப்புத்தான் பிரித்தானிய அருங்காட்சியகம்.

பிரித்தானிய அருங்காட்சியகமானது பிரித்தானியா சூரியன் அஸ்தமிக்காத இராட்சியமாக விளங்கிய காலத்தில் ஏனைய காலனித்துவ நாடுகளில் கைப்பற்றிய பல அரும்பொருட்களை தன்னகத்தே வைத்திருக்கின்றது. குறிப்பாக தென்னாசிய, தென்கிழக்காசிய நாடுகளின் கலை, கலாச்சார விழுமியங்கள் சம்பந்தப்பட்ட பல பொருட்கள் இங்கே உண்டு.

இந்தப் பிரித்தானிய அருங்காட்சியக ஒளியாவணத்தில் சஜிதரன் தன்னால் முடியுமானளவு பல விடயங்களை ஆவணப்படுத்தியிருக்கின்றார். பெரும்பாலும் ஆவணப்படங்கள் என்றாலே சலிப்புத் தட்டும் என்ற எண்ணத்தை சஜிதரன் தனது மொழியாலும் ஒளிப்பதிவாலும் மாற்றியிருக்கின்றார்.

சஜிதரன், விமலாதித்தன் இருவரும் தமது பிரித்தானிய அருங்காட்சியக ஆய்வுகளை சஜிதரன் அழகு தமிழில் கவித்துவமாக உரையாட ஹதீபன் வாமதேவன் அழகாக படம் பிடித்திருக்கின்றார். ஹதீபனின் ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் நேரில் பார்த்த அனுபவத்தை தருகின்றது. 

இவ் ஒளியாவணத்துக்கு ஆங்கில உபதலைப்புகளை  நந்தினி கார்க்கி மொழிபெயர்த்திருக்கின்றார்.

காட்சிகளுக்குக் கச்சிதமாகப் பொருந்தக் கூடிய இசைக்கோர்வைகளைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

பயணம் செய்வதை விரும்புவர்கள், புதிய இடங்களை அறிய ஆர்வமுள்ளவர்களுக்கு தமிழில் இப்படியான விடயங்கள் வெளிவருவது சந்தோசத்தைக் கொடுக்கும்.

அடுத்த பகுதி எப்போ வெளிவரும் என்ற ஆவல் இதனைப் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் ஏற்படும். அதற்காக காத்திருக்கின்றோம்.


பின்குறிப்பு: 
கிட்டத்தட்ட ஒரு வருடத்தின் பின்னர் வலைப்பதிவு. இனிமேல் நேரம் கிடைக்கும் போது எழுதவேண்டும். அதிலும் இப்போது அடிக்கடி பயணங்கள் மேற்கொள்வதால் பார்த்த பல விடயங்கள் எழுதலாம் என நினைக்கின்றேன். சோம்பல் என்னை விட்டு விலகினால் மீண்டும் சூப் கிடைக்கலாம்.