கறுப்பு வரலாறும் நேற்றைய கல்லறையும்

கறுப்பு வரலாறும் நேற்றைய கல்லறையும்
வாழ்த்துக்கள் மோகன் உங்கள் இரு நாவல்களும் நேற்றிரவு ஒரே மூச்சில் வாசித்தேன். வாசித்தபின்னர் என் கருத்தை அல்லது விமர்சனத்தைக் கூறுவதுதான் உங்களைமாதிரி எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் என்பதால் என் விமர்சனத்தை தொடர்கிறேன். அதற்குமுன் நான் பாடசாலை நாட்களில் விமர்சன உரையாற்றியுள்ளேனே தவிர இதுவரை பெரிசாக விமர்சனம் எதுவும் செய்ததில்லை. இது ஒரு நுனிப்புல் மேய்ச்சலே தவிர முழுமையான விமர்சனம் அல்ல.

மோகனின் முதலாவது துப்பறியும் அல்லது மர்மக் கதையான கறுப்புவரலாறு ஆனது களப்பிறர் பற்றிய ஒரு ஆய்வுடன் ஆரம்பமாகிறது. சில சரித்திர எழுத்தாளர்களின் சில கதைகளில் களப்பிறர் என்ற இனத்தைப் பற்றி தெரிந்திருக்கிறேனே ஒழிய எனக்கு மோகனின் நாவலில்தான் அவர்கள் பற்றிய சில விடயங்கள் தெரியவந்தது. இவர்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு வரலாற்று ஆசிரியர் பழனியப்பன் அவர்களும் அவருடன் வரலாற்று மாணவர்களான ரவி, ரகு , சங்கர், சவீதா மற்றும் நீலவேணி ஆகியோர் முனைகிறார்கள். இவர்கள் சந்திக்கும் இடர்கள் ஆபத்துக்கள் என்பவற்றை கொஞ்சம் காதலுடன் கதாசிரியர் தனக்கே உரிய பாணியில் சொல்லியுள்ளார்.

பல இடங்களில் மோகன் களப்பிறர் பற்றிய தகவல்களை விரிவாக கல்கி சாண்டில்யன் வரலாற்றுப் பாத்திரங்களைப் பற்றிய தகவல்களைத் தருவதுபோல் தந்திருப்பதால் படிப்பவர்களுக்கும் களப்பிறர் பற்றி அறியும் ஆவலுடன் ஆராய்ச்சியாளர்களுக்கு என்ன நடக்கப்போகிறது என்ற திகிலுடன் சொல்லியுருப்பது சுவையாகவும் அதே நேரம் எடுத்த புத்தகத்தை சாரி மின் புத்தகத்தை வைக்க மனமில்லாமல் வாசிக்கதூண்டுகிறது. இது மோகனது எழுத்துக்கு கிடைத்த பெற்றியாகும். ஏனென்றால் ஒரு எழுத்தாளனின் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை அறிய வாசகனைத் தூண்டுவதுடன் அவரது அடுத்த படைப்புக்களையும் வாசிக்க தூண்டும்.

அத்துடன் ஒரு அத்தியாயம் முடியும்போது ஒரு திகில் வசனத்துடன் முடிப்பது தேர்ந்த எழுத்தாளருக்கே உரியது. அந்தவகையில் மோகன் தன்னை ஒரு தேர்ந்த எழுத்தாளராக நீரூபித்துள்ளார்.உதாரணமாக "கறுப்பு பட ஆரம்பித்தது அவர்கள் வாழ்வில்" என்று ஒரு அத்தியாயத்தை முடிப்பவர், அடுத்த அத்தியாயத்தில் சங்கர் "என்னுடைய கறுப்பு சட்டையைமறக்காமல் எடுத்து வையுங்க என்றான்" இப்படி அவர் கறுப்பு என்பதை பல இடங்களில் உலாவ விடுகிறார்.

ஒரு இடத்தில் மோகன் குறிப்பிடுகிறார் வரலாற்று பொக்கிசங்களை அழித்து அந்த வரலாற்றை பலர் மறைக்கப்பார்க்கிறார்கள் என அது நூற்றுக்கு நூறு உண்மையானது. இலங்கையில் தென் தமிழீழத்திலுள்ள திருகோணமலை மட்டக்களப்பு போன்றவற்றை தற்போது சிங்கள இனவாத வரலாற்றாசிரியர்கள் தமது பிரதேசமாக மாற்றுவதற்காக அங்கே புத்த கோவில்களையும் புத்தர் சிலைகளையும் வைத்து ஆக்கிரமிக்கிறார்கள். அத்துடன் தமிழர்களின் எச்சங்களை இவர்கள் அழிக்கிறார்கள். இதனை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் ரமேசும் ஜெயாவும் கதைக்கின்ற 22ஆம் அத்தியாயத்தில் ஹிட்லர் சதாம் போன்றோர் எப்படி வரலாறுகளைக் கொளுத்தினார்கள் என்பதற்கு எம் நாடும் இன்னொரு உதாரணம். இங்கேயும் வரலாற்றைத் திரிவுபடுத்துகிறார்கள்.

இக்கதையில் வரும் ரமேஸ் என்ற பாத்திரமும் அவரது ஒரு சில வரிக்காதலும் இறுதியாக அவர் யார் குற்றாவாளி என கண்டுபிடிக்கும் இடங்களும் அருமையாக இருக்கிறது. அதிலும் யாரும் எதிர்பார்க்காத முடிவை கிளைமாக்சில் சொல்லியிருப்பது பாரட்டத்தக்கது. பல நேரம் வாசகர்களால் யார் குற்றவாளி என்பதை கதையின் ஓட்டத்தை வைத்து கண்டுபிடிக்கமுடியும் ஆனால் இக்கதையில் அது கஸ்டமானது.

மோகனின் எழுத்துக்கள் சுஜாதா பாணியில் இருப்பதாக கூறுவதை என்னால் ஒத்துக்கொள்ளமுடியாது. ஆனால் சுஜாதாவின் பாதிப்பு இல்லாமல் எழுதுவது கஸ்டம். பல இடங்களில் மோகன் சுஜாதாவைவிட்டு விலகியுள்ளார். குறிப்பாக இவரின் கதைகளுக்கு பிரப்ல ஓவியர் ஜெயராஜ் ஒவியம் வரையமுடியாது காரணம் இவரின் இந்தக்கதையில் வரும் நாயகிகள் சுஜாதா ,ராஜேஸ்குமார், சுபா, பிகேபி நாயகிகள் போல் வராமல் சாதாரண பெண்களாக மோகன் காட்டியிருப்பது இயல்பாக உள்ளது. அத்துடன் அவர்கள் போல் கதாநாயகிகளின் அங்க அசைவுகளை வர்ணிக்காமல் சைவமாகவே கதையை கொண்டுசெல்கிறார். துப்பறியும் கதைகளில் பெண்களை வர்ணிப்பதற்கே சிலர் இருக்கிறார்கள். அவர்கள்போல் இல்லாமல் மோகன் வித்தியாசமான முறையில் எழுதுவது நன்றாக இருக்கிறது.

ஒரு விமர்சனத்தில் அக்கதையின் குறைபாடுகளையும் சுட்டிக்காட்டவேண்டியது விமர்சகரின் கடமை ஆனால் இக்கதையில் என் அறிவுக்கு எட்டியவரை பெரிதாக எந்தக் குறைகளும். தென்படவில்லை. ரமேசின் நடவடிக்கைகள் ஒரு சினிமாப் பாடலில் கதாநாயகன் பணக்காரன் ஆவதுபோல் பாஸ்ட்டாக இருப்பது கொஞ்சம் நெருடலாக இருக்கிறது ஆனால் இது கதை ஓட்டத்தை எந்தவிதத்திலும் பாதிக்காதபடியால் பரவாயில்லை.


அனைவராலும் படித்து ரசிக்கவேண்டிய ஒரு நாவல் கறுப்புவரலாறு.

மோகனிடம் ஒரு கேள்வி களப்பிறர் பற்றிய விபரங்களை எப்படி எடுத்தீர்கள்? அத்துடன் அவர்கள் பற்றிய மேலும் விபரங்கள் தரமுடியுமா? குறிப்பாக இறுதியாக அவர்கள் என்ன ஆனார்கள்? எந்தக்காலத்தில் வாழ்ந்தார்கள்? என்ற கேள்விகளுக்கு விடை தரமுடியுமா?

மோகனின் அடுத்த நாவலான நேற்றைய கல்லறையும் ஒரு புதையல் பற்றிய குறுநாவலாகும். இந்த நாவலின் சிறப்பு என்னவென்றால் கதாநாயகனின் பார்வையில் அல்லது அவனின் நோக்கில்(தமிழில் இதனை முன்னிலையோ படர்க்கையோ எனச் சொல்வார்கள் ஞாபகம் இல்லை) சொல்கிறார். அதனால் கதாநாயகனின் பெயர் இக்கதையில் இல்லை.

மிகமுக்கியமாக இக்கதையில் பெண் பாத்திரம் என யாரும் இல்லை. கதாநாயகன் ஒரு மெஸ் நடத்தும் ஐயங்கார் ஏசுநாயகம் என மூன்று முக்கிய பாத்திரங்களை வைத்து கதையை கொண்டுசெல்கிறார்.
இக்கதையின் முதல் அத்தியாயத்தில் என்னைப்போன்ற இளைஞர்களிம்(?) முக்கிய பிரச்சனையான கடைச்சாப்பாட்டை அனுபவித்து எழுதியுள்ளார். அதே நேரம் இதில் வரும் கதாநாயகன் ஒரு ஹைடெக் ஆசாமியாவதால் லாப்டாப் சாப்ட்வேர் போன்றவை கதையில் வருவதாலும் நாமே கதாநாயகன் என்ற எண்ணம் வருகிறது.

அதேவேளை இன்றைய நாட்களில் இடுகாட்டுக்கு பக்கத்தில் வீடுகள் கட்டி மக்கள் குடியேறும் நகரமயமாக்களையும் அப்படியே தொட்டுச்சென்றுள்ளார். மேலும் இக்கதையின் ஓட்டம் வாசகனை இடையில் எந்த வேலையும் செய்யமுடியாமல் அப்படியே கதையுடன் ஒன்றச் செய்வது பராட்டுக்குரியது.


இறுதியாக இக்கதையின் முடிவு ஒரு ஹைக்கூ கவிதை மாதிரியான யாரும் எதிர்ப்பார்க்கமுடியாத முடிவாகும்.

இக்கதைகளைப் படிக்க இத்தளத்திற்கு விஜயம் செய்யுங்கள் http://etheni.com