Showing posts with label தென்னாபிரிக்கா. Show all posts
Showing posts with label தென்னாபிரிக்கா. Show all posts

அதிரடி ஆர்ஜென்டீனா, ஆக்ரோச பிரேசில், உலக கோப்பை யாருக்கு?

ரோமுக்குப் போனால் ரோமானியனாக மாறு என்ற பழமொழிக்கு அமைய நானும் கிரிக்கெட்டை மறந்து செல்சீ, மஞ்சஸ்டர் யூனைட்டட், ஆர்சனல், கிறிஸ்டல் பலஸ், வெஸ்ட்காம்( மிகவும் அழகான மைதானம்) என உதைபந்தாட்ட ரசிகனாக மாறிவிட்டேன். ஆனாலும் ஏன் ஒரு பந்துக்கு 22 பேர் அடித்துக்கொள்கின்றார்கள் என்பது புரியவில்லை.

இந்த மாற்றத்தினால் தென்னாபிரிக்காவில் நடக்கும் உலகக்கோப்பைப்போட்டிகளை பார்க்கும் பாய்க்கியம்(தொலைக்காட்சியில் தான்)கிடைத்தது. வீரர்களைவிட வக்கா வக்கா என அக்கா ஷகிரா (34 வயதாம் அப்போ அக்காதானே) ரொம்பவே கவர்ந்துவிட்டார்).

நேற்றுடன் முதல் சுற்றுப்போட்டிகள் நிறைவடைந்துவிட்டன. நடப்புச் சம்பியன் இத்தாலி, முன்னாள் சம்பியன் பிரான்ஸ், போட்டிகளை நடத்தும் தென்னாபிரிக்கா போன்ற நாடுகள் வெறும் கையுடன் வெளியேறிவிட்டன. இங்கிலாந்து மயிரிழையில் அடுத்த சுற்றுக்குச் சென்றாலும் பலம் வாய்ந்த ஜேர்மனியுடன் மோதவேண்டும்.



குழு A யில் முதன்முறை சாம்பியனான உருகுவே, முன்னால் சாம்பியன் பிரான்ஸ், போட்டியை நடத்தும் தென்னாபிரிக்கா மற்றும் மெக்ஸிகோ கலந்துகொண்டன. முதலாவது போட்டியில் மெக்சிகோவை 1 க்கு 1 என சமநிலைப் படுத்தி தென்னாபிரிக்கா தன்னுடைய திறமையை உலகிற்க்கு காட்டியது. பிரான்சுடனான போட்டியில் இலகுவாக வெற்றி பெற்றாலும் உருகுவேயுடனான போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் குழுவில் மூன்றாவது இடத்தை பிடித்தது. அதே நேரம் உருகுவே மெக்சிகோவையும் தென்னாபிரிக்கைவையும் வீழ்த்தி குழுவில் முதல் இடத்தைப் பிடித்தது.

குழு B யில் முன்னாள் சாம்பியன் ஆர்ஜென்டீனா, தென்கொரியா, கிறீஸ், நைஜீரியா ஆகிய அணிகள் விளையாடின. ஆர்ஜென்டீனா விளையாடிய மூன்று போட்டிகளையும் வென்று முதல் இடத்தையும் தென்கொரியா கிறீசுடனான போட்டியில் வெற்றி பெற்றது அத்துடன் நைஜீரியாவை சமப்படுத்தி இரண்டாம் இடத்தில் பி பிரிவில் இடம் பெற்றது.

இங்கிலாந்து, அமெரிக்கா, அல்ஜீரியா, சுலவேனியா ஆகிய அணிகள் பிரிவு C யில் இடம் பெற்றன. இங்கிலாந்து இலகுவாக இந்தப் பிரிவில் முதலிடம் பெறும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. நட்சத்திர வீரர்கள் பலர் இருந்தும் முதலாவது போட்டியில் இங்கிலாந்து அமெரிக்காவைச் சமநிலைப்படுத்தியது, அடுத்த போட்டியில் அல்ஜீராவை கோல் எதுவும் அடிக்காமல் சமநிலைப்படுத்தி வாழ்வா சாவா என்ற சுலவேனியாவுடனான போட்டியில் டெஃபோவின் அபார கோலினால் வெற்றி பெற்று இரண்டாம் இடத்தைத் தக்கவைத்துவிட்டது. ஆனால் நாளைய போட்டியில் ஜேர்மனியுடன் மோத இருப்பதால் இங்கிலாந்தும் நடையைக்கட்டும் சந்தர்ப்பம் அதிகமாகவே இருக்கின்றது. அமெரிக்கா அல்ஜீரியாவுடனான போட்டியில் வெற்றி பெற்று கோல் அடிப்படையில் பிரிவில் முதல் இடத்தைப் பிடித்தது.

பிரிவு Dயில் முன்னால் சாம்பியன் ஜேர்மனி, அவுஸ்திரேலியா, கானா, சேர்பியா ஆகிய அணிகள் மோதின. ஆசியுடனான போட்டியில் 4 கோல்கள் அடித்த ஜேர்மன், சேர்பியாவுடனான அடுத்த போட்டியில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது. கானாவுடனான இறுதிப்போட்டியில் மீண்டும் தன்னுடைய அதிரடியைக் காட்டி பிரிவில் முதலிடத்தை ஜேர்மனி பிடித்தது. சேர்பியாவுடனான போட்டியில் வெற்றி பெற்றதுடன் ஆசியுடனான போட்டியில் சம்நிலையையும் பெற்று கானா இரண்டாம் இடத்தைப் பிடித்து அடுத்த சுற்றுக்குத் தெரிவானது.

பிரிவு Eயில் நெதர்லாந்து, ஜப்பான், கமரூன், டென்மார்க் ஆகிய நாடுகள் போட்டியிட்டன. நெதர்லாந்து எதிர்த்து விளையாடிய மூன்று அணிகளையும் வென்று இலகுவாக முதலிடத்தை அடைந்தது. ஜப்பான் கமரூனையும் டென்மார்க்கையும் வீழ்த்தி பிரிவில் இரண்டாம் இடத்தை பிடித்தது. அதே நேரம் பலராலும் எதிர்பார்க்கபபட்ட கமரூன் சகல போட்டிகளிலும் தோல்வி அடைந்தது. நெதர்லாந்தும் ஆர்ஜென்டீனாவும் மாத்திரமே விளையாடிய அனைத்து முதல் சுற்றுப்போட்டிகளிலும் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த பிரிவான Fவில் நடப்புச் சாம்பியன் இத்தாலி, பரகுவே, சொலவாக்கியா, நீயூசிலாந்து ஆகிய அணிகள் ஆடின. பரகுவே சொலவாக்கியாவுடனான போட்டியில் வெற்றி பெற்று மற்ற இரு போட்டிகளையும் சமநிலைப்படுத்தியது. சொலவாக்கியா பலம் வாய்ந்த இத்தாலியை வென்ற்றதுடன் நீயூசிலாந்துடனான போட்டியை சமநிலைப்படுத்தி இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியது. நான்கு தடவைகள் சாம்பியனான நடப்புச் சாம்பியன் இத்தாலி ஒரு போட்டியைத் தானும் வெல்லாமல் கோப்பையை தென்னாபிரிக்காவில் பறிகொடுத்துவிட்டு வெறும் கையுடன் இத்தாலிக்குத் திரும்பினார்கள்.

ஐந்து தடவைகள் சாம்பியனான பிரேசில், இம்முறை உலகக்கிண்ணம் வெல்லக்கூடிய வாய்ப்புள்ள போர்த்துக்கல், ஜவரி கோஸ்ட், வட கொரியா ஆகிய நாடுகள் பிரிவு G யில் இடம் பெற்றன. பிரேசில் வடகொரியா, கோஸ்ட்ரோரிக்கா இரண்டையும் வெற்றி பெற்றாலும் போர்த்துக்கல்லுடனான போட்டியை மிகவும் கடினமாக ஆடி சமநிலைப்படுத்தி பிரிவில் முதலிடம் எடுத்தது. போர்த்துக்கல் வடகொரியாவை ஏழுக்கு பூச்சியம் என்ற கணக்கில் இலகுவாக வென்றாலும் பிரேசிலையும் ஜவரி கோஸ்ட்யும் கோல் எதுவும் அடிக்காமல் சமநிலைப்படுத்தி இரண்டாம் இடத்தைப் பிடித்தது. முதல் சுற்றில் போர்த்துக்கல்லும் உருகுவேயும் தான் எந்தக் கோலையும் எதிரணியினர் அடிக்கவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


எட்டாவது பிரிவான Hசில் ஸ்பெயின், சிலி, சுவிஸ்ர்லாந்து மற்றும் கொன்டூரஸ் ஆகிய நாடுகள் விளையாடியன. முதலாவது போட்டியில் ஸ்பெயின் சுவிசிடம் அடிவாங்கிச் சறுக்கினாலும் அடுத்த போட்டிகளில் சுதாகரித்து வெற்றி பெற்று பிரிவில் முதலிடத்தைப் பெற்றுவிட்டார்கள். ஸ்பெயினிடம் தோல்வியடைந்த சிலி ஏனைய இரண்டு போட்டிகளையும் வெற்றிபெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

இன்று இரண்டாவது சுற்றான லாஸ்ட் 16 ஆரம்பமாகியது. (கிரிக்கெட் போல் சூப்பர் சிக்ஸ்டீன், சூப்பர் சிக்ஸ் எனப் பெயரிட மோடி போல் பீபாவில் எவரும் இல்லையோ) முதல் போட்டியில் உருகுவே தென்கொரியாவும் மோதிய விறுவிறுப்பான போட்டியில் உருகுவே 2 க்கு 1 என்ற கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி காலிறுதிக்குத் தெரிவானது.

சில குறிப்புகள் :
1. இங்கிலாந்து அணி கிரிக்கெட்டில் இந்திய அணிபோல் காணப்படுகின்றது. நட்சத்திர வீரர்கள் பலர் இருந்தும் வெற்றி அரிதாக இருக்கின்றது. ஜெராட், ரூனி, ரெறி, லம்பார்ட், குறூச் எனப் பெரிய பட்டாளமே இருக்கின்றது. பயிற்சியாளருடனான சண்டைகளும், வீரர்களுக்குள் ஒற்றுமை இல்லையும் இவர்களைப் பின்னடையச் செய்கின்றது.

போட்டிகள் ஆரம்பமாகும் முன்னர் பலரது வீடுகளிலும் வாகனங்களிலும் இங்கிலாந்து கொடிகள் பறக்கவிடப்பட்டன இரண்டாவது போட்டியையும் சமநிலைப்படுத்தியதும் பலர் அவற்றை அகற்றிவிட்டனர். மீண்டும் சொலவேனியாவை வென்று அடுத்த சுற்றுக்கு சென்றதனால் கொடிகள் மீண்டும் தென்படுகின்றன.

2. 1986ல் ஆர்ஜென்டீனாவிற்க்கு இரண்டாம் தடவை உலககிண்ணத்தை பெற்றுக்கொடுத்த டிக்கோ மரடோனாவின் பயிற்சியால் ஆர்ஜென்டீனா இம்முறை கிண்ணம் வென்றாலும் ஆச்சரியமில்லை. கோல் அடித்த வீரர்களைக் கட்டிப்பிடித்து முத்தமிடுவதும், கோல் அடித்த வேளைகளில் ஏனையவர்களை பாய்ந்து பாய்ந்து கட்டிப்பிடிப்பதும் என மனிதர் கலக்குகின்றார். சில பயிற்சிவிப்பாளர்கள் ஏனோ தானோ என இருக்கும் போது இவரின் நடைமுறைகள் வீரர்களுக்கு மட்டுமல்ல பார்க்கின்ற அனைவருக்கும் சந்தோசம் தருகின்றது.

3. ரூனி எத்தனை கோல் அடிப்பார்? இன்றைய போட்டியில் வெல்வது யார்? இங்கிலாந்து ஜேர்மனியை 3க்கு 2 என்ற எண்ணிக்கையில் வீழ்த்தும் என பந்தய நிறுவனங்களின் கல்லா களைகட்டுகின்றது. பல முக்கிய போட்டிகளில் எதிர்பார்க்கப்பட்ட அணிகள் தோல்வி அடைந்தபடியால் இவர்களுக்கு வருமானம் கூடுகின்றது. ஒரு நிறுவனம் போட்டிக்காலத்தில் வாங்குகின்ற தொலைக்காட்சி, மடிக்கணணி போன்றவற்றிற்கு இங்கிலாந்து கிண்ணம் சுவீகரித்தால் பணத்தை திரும்ப தருவதாக விளம்பரம் செய்திருக்கின்றார்கள்.

4. வழக்கமாக கால்ப்பந்துப் போட்டிகள் என்றால் அழகான காட்சிகளையும் பெண்களையும் காட்டும் கமேராமேன்கள் இம்முறை இனியவை நாற்பதுவில் ஊர்வலத்தைத் தவிர்த்து கருணாநிதி குடும்பத்தைக் காட்டியதுபோல் போட்டியை மட்டும் காட்டுகின்றார்கள்.



எதிர்வரும் 11ந்திகதி உலக சனத்தொகையில் 30%மான மக்கள் ரசிக்கும் போட்டியின் சாம்பியன் யார் என்பது தெரிந்துவிடும். அதுவரை என்ன என்ன அதிர்ச்சிகள் காத்திருக்கின்றனவோ பொறுத்திருந்துபார்ப்போம்.

சந்தேகம் : லட்சக்கணக்கான சனத்தொகை உள்ள நாடுகள் உலகக் கோப்பையில் பங்குபெறும் போது கோடிகணக்கான மக்கள் உள்ள இந்தியா ஏன் பங்குபற்றுவதில்லை.

மினி உலகப் கிண்ணப் போர் - 2009

1998ல் மினி உலகக் கிண்ணம் என்ற பெயரில் வங்கதேசததில் ஆரம்பமான இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை நடைபெறும் ஒரு நாள் தொடர்போட்டிகள் இம்முறை தென்னாபிரிக்காவில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகின்றது.



எட்டு நாடுகள் பங்குபெறும் இந்தப் போட்டிகள் ஒக்டோபர் 5ந்திகதி வரை நடைபெறவுள்ளது. 20-20 போட்டிகளால் ஒருநாள் போட்டிகளின் சூடு குறைந்திருந்தாலும், எட்டு முன்னணி நாடுகள் பங்கு பெறும் போட்டிகள் என்பதால் விறுவிறுப்புக்குப் பஞ்சமிருக்காது. அணிகளின் பலம் பலவீனம் போன்றவற்றை அலசுவதே இந்தப் பதிவின் நோக்கம்.

அவுஸ்திரேலியா

நடப்பு உலகக் கிண்ண, சாம்பியன் கிண்ண சாம்பியனான ஆஸ்திரேலியா இங்கிலாந்தில் இங்கிலாந்தை 6 க்கு 1 என்ற கணக்கில் புரட்டிப்போட்ட வேகத்தில் போட்டிகளில் கலந்துகொள்ளப்போகின்றது. அத்துடன் தென்னாபிரிக்கா இந்தியா என இரண்டு அணிகளிடம் இருந்து ஒரு நாள் தொடருக்கான முதலிடத்தை மீண்டும் பறித்துக்கொண்டது. ஆகவே இந்த உசாருடன் ஆஸி அணியானது தன்னுடைய குழுவிலுள்ள இந்தியா, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் போன்ற அணிகளை எதிர்த்தாடப் போகின்றது. ஆஸிக்கு பலத்த போட்டியாக இந்தியாவும் பாகிஸ்தானும் விளங்கும்.

பலம் :

  • இங்கிலாந்து ஒரு நாள் தொடரை வென்றமை.
  • பேர்குசன், பெயின், வட்சன், ஹசி, கிளார்க், பொண்டிங், என நீண்ட பலமா துடுப்பாட்ட வரிசை.
  • பிரட் லீ, ஜோன்சன், வட்சன், ஹொரிட்ஸ், பிராக்கன் என மிரட்டும் வேகங்கள் .
பலவீனம் :
  • பொண்டிங், ஹசி போன்றவர்கள் சிறந்த ஃபார்மில் இல்லை.
  • சில நாட்களாக இவர்களின் களத்தடுப்பு சிறப்பாக இல்லை.
மீண்டும் ஆஸி அணி பலமாக விளையாடினால் அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன.

தென்னாபிரிக்கா

1998ல் ஹன்சி குரேஞ்சே தலைமையிலான தென்னாபிரிக்கா அணி முதன் முறை டக்காவில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை எதிர்த்து மோதி கிண்ணத்தைச் சுவீகரித்தது. இம்முறை கிரேம் ஸ்மித் தலைமையில் இலங்கை, நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற அணிகள் உள்ள குழுவில் பலம் வாய்ந்த அணியாக இருக்கின்றது. ஆஸியுடன் ஒரு புள்ளிகளுடன் தரவரிசையைப் பகிர்ந்தாலும் இரண்டாம் இடத்தில் இருக்கும் அணி.

இந்த ஆண்டில் ஆஸியுடன் மட்டும் ஆஸியில் நடந்த தொடரிலும் சொந்த மண்ணில் நடந்த தொடரிலும் விளையாடி இரண்டு தொடர்களையும் சுவீகரித்தது குறிப்பிடத்தக்கது.

பலம் :
  • சொந்த மண்ணில் விளையாடுவது மிகப்பெரியபலம்.
  • ஸ்மித், கிப்ஸ், கலீஸ், பவுச்சர், டி வில்லியர்ஸ், டும்மினி, மோர்கல், அம்லா எனப் பலம் வாய்ந்த துடுப்பாட்ட வரிசையும் மத்திய தரவரிசையும்.
  • கலீஸ், மோர்கல், போத்தா, மேர்வே, டும்மினி என சகலதுறை வீரர்கள் அதிகம்.
  • நிட்னி, ஸ்ரெயின், போன்ற வேகங்கள், மேர்வே, போத்தா, பீட்டர்சன் என சுழல்கள் ஆதிக்கம் அதிகம்.
பலவீனம் :
  • இறுதிப்போட்டிவரை வந்து தோல்வியடையும் துரதிஷ்டம்.
  • கிப்ஸ் உட்பட ஒரு சில வீரர்கள் ஃபார்மில் இல்லை.
அரையிறுதிக்கு இலகுவாகச் செல்லகூடிய வாய்ப்பு, சிலவேளைகளில் இறுதிப்போட்டிக்கு கூடச் செல்லமுடியும்.

இந்தியா :

இலங்கை முத்தரப்பு போட்டியில் வெற்றி பெற்ற சாதனை, மேற்கிந்திய தீவுகளை கடந்த ஜூலையில் சொந்த மண்ணில் வைத்து தொடர் வென்ற சாதனை என டோணி தலைமையிலான அனுபவம் வாய்ந்த சச்சின், ராவிட் போன்றவர்களுடன் செல்லும் இளமைப் பட்டாள அணி. 2002ல் இலங்கையுடன் சாம்பியன் கிண்ணத்தை பங்குபோட்ட அணி.

பலம் :
  • கம்பீர், சச்சின், ராவிட், டோணி, யுவராஜ், ரெய்னா, யூசுப் பதான் என நீளும் துடுப்பாட்ட வரிசை.
  • பலமான மத்தியதர துடுப்பாட்ட வரிசை.
  • ஆர்பிசிங், நேஹ்ரா, இசாந்த சர்மா, ஹர்பயன் என மிரட்டும் பந்துவீச்சாளர்கள்.
பலவீனம் :
  • சிறந்த ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி இல்லாமை. (சேவாக் இந்தப் போட்டிகளில் கலந்துகொள்ளவில்லை).
  • ஐந்தாவது சிறந்த பந்துவீச்சாளர் இல்லாமை.
  • தினேஷ் கார்த்திக் (கிடைக்கும் வாய்ப்புகளை வீணடிப்பவர், இவருக்குப் பதிலாக இம்முறை பத்ரிநாத்திற்க்கு சந்தர்ப்பம் கொடுத்திருக்கலாம்).
  • ஹர்பஜன், நேஹ்ரா, இஷாந்த் சர்மா போன்றவர்கள் மைதானத்தில் காட்டும் கோபங்கள்.
  • சச்சின் கூட ஒரு வகையில் பலவீனம் காரணம் இலங்கையில் நடந்த போட்டியில் சதமடித்தவர் அடுத்துவரும் போட்டிகளில் சிலவேளைகளில் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழக்கின்ற துரதிஷ்டம்.
சிறந்த ஆரம்ப துடுப்பாட்டமும் பரம வைரியான( கிரிக்கெட்டில் மட்டும்)பாகிஸ்தானுடனான போட்டியில் வெல்லும் ஆற்றலும் கைகூடினால் அரையிறுதி உறுதி. இருதடவைகள் சாம்பியன் கிண்ண இறுதிப்போட்டிகளில் விளையாடிய இந்திய அணி இம்முறை இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்புகளும் ஓரளவு இருக்கின்றது.

நியூசிலாந்து

2000 ஆண்டில் ஸ்ரிபன் பிளேமிங் தலைமையிலான நியூசிலாந்து அணி இந்தியாவை கென்யாவில் தோற்கடித்தது. அதன் பின்னர் இவர்களுக்கு சொல்லும் படியான பல நாடுகள் விளையாடிய தொடர் வெற்றிகள் கிடைக்கவில்லை. இந்த வருடம் நடைபெற்ற போட்டிகளில், பெப்ரவரியில் ஆஸியுடனான சாப்பல் ஹட்லி கிண்ணத்தை 2 க்கு 2 என்ற விகிதத்தில் சமன் செய்த நியூசிலாந்து பின்னர் இந்தியாவுடனான போட்டிகளில் அடைந்த தோல்வியும், இலங்கையில் நடந்த முத்தரப்பு போட்டிகள் தோல்வியும் இலங்கை, தென்னாபிரிக்கா அணிகள் உள்ள குழுவில் இருப்பதும் பலவீனமே.

பலம் :
  • பொண்ட், மில்ஸ், ரவ்வி ஆகிய வேகங்களுடன் வெட்டோரியின் சுழல்.
  • ரைடர், ஓரம், வெட்டோரி புரூம் என சகலதுறை வீரர்கள்.
பலவீனம் :
  • மிகவும் பலவீனமான மத்தியதர துடுப்பாட்ட வரிசை.
  • ஓரம், ரோஸ் டைலர், ரைடர் போன்றோர் ஃபார்மில் இல்லை.
  • களத்தடுப்பில் அசிரத்தை.
இலங்கையையும் இங்கிலாந்தையும் வென்றால் அரையிறுதிக்கு வரும் வாய்ப்புகள் உண்டு, ஆனால் வாய்ப்புகள் மிகக் குறைவு.

பாகிஸ்தான்

ஜனவரியில் இலங்கையிடம் பாகிஸ்தானிலும் இலங்கையிலும் தொடர் தோல்விகளும் பின்னர் யூஎஈயில் வைத்து ஆஸியை வென்றமை என இரண்டும் கெட்டான் அணியாக பாகிஸ்தான் அணி இந்த வருடம் காணப்பட்டது. பாகிஸ்தான் தலைவர் யூனிஸ் கான் தொடருக்குச் செல்லமுன்னர் எப்பாடுபட்டாவது இந்தக் கிண்ணத்தை வெல்வது தங்கள் நோக்கம் என கூறிச் சென்றுள்ளார்.

பலம் :
  • ஃபாவட் ஆலம், இம்ரான் நசீர், அப்ரிடி, யூனிஸ் கான், செயிப் மாலிக், மிஸ்பா உல் ஹக், முகமட் யூசுப், கம்ரன் அக்மல் என நீண்ட துடுப்பாட்ட வரிசை.
  • மத்திய தரவரிசையில் அனுபவம் வாய்ந்த வீரர்கள்
  • ரானா நவீட், உமர் குல், முகமட் ஆசிப், முகமட் ஆமிர் என பலம் வாய்ந்த வேகங்கள்
பலவீனம்
  • களத்தடுப்பில் அசிரத்தை.
  • சில வீரர்கள் ஃபார்மில் இல்லாமை.
ஆஸியை அல்லது இந்தியாவை வென்றால் அரையிறுதி உறுதி. பின்னர் இறுதிப்போட்டிக்கு முதல் முறை செல்லும் சந்தர்ப்பம் கிடைக்கலாம். இந்தத் தொடரின் கறுப்பு குதிரையாக பாகிஸ்தான் அணியைக் குறிப்பிடலாம்.

இலங்கை :
சங்ககாரவின் தலைமையில் செல்லும் இளமை சக அனுபவ வீரர்களின் பட்டாளம். 2002ல் இலங்கையில் வைத்து கிண்ணத்தைப் பகிர்ந்துகொண்டமை. இந்த ஆண்டில் பாகிஸ்தானை பாகிஸ்தானிலும் சொந்த மண்ணிலும் வென்றிருந்தாலும் இந்தியாவிடம் சொந்த மண்ணில் தொடர் தோல்விகள் என கஸ்டமான நிலையில் தான் இலங்கை அணியும் இருக்கின்றது.

பலம் :
  • டில்ஷான், ஜெயசூரியா, சங்ககாரா, கண்டம்பி, கப்புகெதர, ஏஞ்சலோ மத்யூஸ், சமரவீர என நீண்ட துடுப்பாட்ட வரிசை.
  • முரளி மீண்டும் அணியில் என்பதால் அவரின் சுழலும் துசாரா, நுவான் குலசேகர, லசித் மாலிங்க, போன்றவர்களின் வேகமும் கைகொடுக்கும்.
  • சிறப்பான களத்தடுப்பு.
பலவீனம்:
  • மஹெல ஜெயவர்த்தனா, சில நாட்களாக இவரின் துடுப்பாட்டம் கேள்விக்குரியதாகியுள்ளது.
  • மெண்டிசின் சுழலும் முன்னைய மாயாஜாலம் இப்போது செய்வதில்லை.
  • ஜெயசூரியாவின் துடுப்பாட்டம் பெரிதாக சிறப்பாக இல்லாவிடினும் பந்துவீச்சிலும் களத்தடுப்பிலும் சிறந்துவிளங்குவது இவருக்கு பலம்.
அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்புகள் பிரகாசமாக இருந்தாலும் நியூசிலாந்துடனான் போட்டிகள் பெரும்பாலும் முடிவை நிர்ணயிக்கும்.

மேற்கிந்தியத் தீவுகள்
2004ல் சாம்பிய்னஸ் மூன்று தடவை இறுதிப்போட்டி வரை விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, இம்முறை அணிக்குள் ஏற்பட்டிருக்கும் சர்ச்சைகளால் இரண்டாம் தரமான அணியையே அனுப்புகின்றது. இவர்களுக்குப் பதிலாக வங்கதேசத்தை அழைத்திருந்தால் அந்தக் குழுவிற்க்கு ஓரளவு எதிர்ப்புக் கொடுத்திருப்பார்கள்.

பலம்:
  • சொல்லிக்கொள்ளும் படி ஒன்றுமில்லை.
பலவீனம் :
  • அணியே பலவீனம் தான்.
முதல் சுற்றிலையே வெளியேறப் போகும் பரிதாபமான ஒரு அணி.

இங்கிலாந்து

தற்போது நடைபெற்று முடிந்த ஆஸியுடனான நட்வெஸ்ட் தொடரில் பரிதாபமான தோல்வியுட‌ன் துவண்டபடி பங்குபற்றும் அணி. ஒரே ஒரு முறை இறுதிப்போட்டியில் விளையாடி இறுதிப்போட்டிகளில் தோல்வியடையும் துரதிஷ்டத்தினால் மேற்கிந்தியத் தீவுகளுடன் தோல்வியுற்ற அணி.

பலம் :
  • ஆன்ரூ ஸ்ரோஸ், கொலிங்வூட், மத்யூ பிரையர், ஓவைஸ் ஷா, ரவி போபரா என கொஞ்சம் அனுபவ வீரர்கள்.
  • சைட் பொட்டம், அன்டர்சன், ஸ்ருவர்ட் புரோட், கிரஹம் ஒனியன்ஸ் என வேகப் பந்துவீச்சாளர்கள்.
பலவீனம் :
  • தொடர் தோல்விகள்
  • முன்னணி வீரர்களான பிளின்டோவ்ம் பீட்டர்சன் இல்லாமை.
  • சிறந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் இல்லாமை.
  • சிறந்த சுழல்ப் பந்துவீச்சாளர் இல்லாமை.
பலமான தென்னாபிரிக்கா, இலங்கை, நியூசிலாந்து குழுவில் இருப்பாதல் முதல் சுற்றிலையே வெளியேறும் வாய்ப்புள்ள அணி.

என்னுடைய பார்வையில் அரையிறுதிக்குத் தெரிவாகும் அணிகள்
குழு A யில் : இந்தியா, அவுஸ்திரேலியா
குழு B யில் : தென்னாபிரிக்கா , நியூசிலாந்து/இலங்கை (கொஞ்சம் சிக்கலான குழு)

இறுதிப்போட்டியில் யார் யார் விளையாடுவார்கள் என்பதையும் எந்த அணி வெற்றி பெறும் என்பதையும் நண்பர்கள் எதிர்வு கூறுங்கள்.

சுவாரசியமான போட்டிகள் எதிர்பாராத திருப்பங்கள் எனப் பல விடயங்கள் நடைபெறலாம் அதுவரை பொறுத்திருப்போம்.