ஒரே மைதானத்தில் தொடர்ந்து 4 தோல்விகள், கடந்த பெப்ரவரி மாதம் இலங்கையில் முதல்முறையாக ரி20 போட்டிகள் விளையாடப்பட்டது. முதலாவது போட்டியில் இலங்கை இந்தியாவை எதிர்த்தாடியது. அந்தப்போட்டிக்கு டில்ஷான் முதன்முறையாக தலைவராக விளையாடினார்.
இலங்கை எதிர் இந்தியா
முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 171 ஓட்டங்களை எடுத்த இலங்கை பதான் சகோதரர்களின் ஆபார ஆட்டத்தினால் இந்தியாவிடம் 3 விக்கெட்டுகளினால் தோல்வி அடைந்தது.
இலங்கை எதிர் பாகிஸ்தான்
பின்னர் கடந்த மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளை வென்ற உற்சாகத்திலும், இங்கிலாந்தில் ரி20 உலகக் கிண்ணப்போட்டிகளில் கோப்பையை பாகிஸ்தானிடம் பறிகொடுத்ததை பழிவாங்கவும் இலங்கையும் பாகிஸ்தானும் மோதிக்கொண்டன. 
சங்கக்காராவின் சமயோசிதமான தலைமைப் பொறுப்பும் கவனமும் எப்படியும் இலங்கை சொந்தமண்ணில் பாகிஸ்தானை பழிவாங்கும் என ரசிகர்கள் நினைத்தார்கள் ஆனால் அப்ரிடியின் அபார ஆட்டத்தினால் இலங்கை 52 ஓட்டங்களால் பரிதாபமாகத் தோற்றது.
இலங்கை எதிர் நியூசிலாந்து
பின்னர் இந்தமாதம் 2ந்திகதி நியூசிலாந்திற்கெதிரான முதல் போட்டியில் வெற்றிக்கு அருகில் வந்து பொறுப்பற்ற துடுப்பாட்டத்தால் வெறும் 3ஓட்டங்களால் மாத்திரம் இலங்கை தோல்வியைத் தழுவியது. இந்தப்போட்டியுடன் தொடர்ந்து ஒரே மைதானத்தில் மூன்று போட்டிளில் இலங்கை அணி தோல்விய்டைந்த சாதனையை ஏற்படுத்தியது.
ஆகவே நியூசிலாந்திற்க்கு எதிரான இரண்டாவது போட்டியில் இலங்கை கட்டாயம் வெற்றி பெறவேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் நேற்றுக் களம் இறங்கியது. இந்தப்போட்டியில் வெற்றி பெற்றால் தொடரைச் சமநிலையாக்கலாம் என்ற மனநிலையில் களம் இறங்கிய இலங்கை அணி நாணயச் சுழற்சியில் வாய்ப்பை வெட்டோரியிடம் பறிகொடுத்தது. ஏற்கனவே முதல் போட்டியில் முதலில் துடுப்பாடி வெற்றிக் கனியைப் பறித்த அனுபவத்தால் வெட்டோரி மீண்டும் துடுப்பாட்டத்தையே தேர்ந்தெடுத்தார்.
நியூசிலாந்து அணியில் விக்கெட் காப்பாளர் மக்கிலேசனுக்கு பதிலாக பிரண்டன் மக்கலத்தின் அண்ணன் நேதன் மக்கலம் களம் இறங்கினார். இலங்கை அணியில் கப்புஹெதரவுக்கு பதில் உடவத்த.
மக்கலமும் ஜெஸ்சி ரைடரும் எவ்வளவு அடிக்கமுடியுமோ அவ்வளவு அடி மாலிங்கா, குலசேகர பந்துவீச்சுகளில் அடித்து நொருக்கினார்கள், அவர்கள் அடித்து ஆடியதைப் பார்த்தபோது 220 ஓட்டங்கள் எடுத்துவிடுவார்கள் என்ற எண்ணம் தோன்றியது.
இவர்களைப் பிரிக்க மெண்டிசை அழைத்தார் சங்ககார ஆனால் மெண்டிசின் பந்தை தடுத்து ஆடிச் சாமாளித்துவிட்டார்கள். அரைச்சதத்திற்க்கு இரு ஓட்டம் இருக்கும்போது மக்கலம் ஜெயசூரியாவின் பந்துவீச்சில் அவரிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்தபக்கம் ரைடர் மெதுவாகவும் நிதானமாகவும் தொடங்கிய தன் ஆட்டத்தை 37 பந்துகளில் 3 ஆறு ஓட்டங்கள் உட்பட 52 ஓட்டங்களுக்கு மெண்டிசின் சுழலில் இலகுவான பிடியெடுப்பு மூலம் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த குப்டில் தன் பங்குக்கு அடித்து ஆடி அணியின் மொத்த எண்ணிக்கையை 170 ஆக மாற்றினார்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் ஜெயசூரியாவையும் மெண்டிசையும் தவிர ஏனையவர்கள் சோபிக்கவில்லை. அஞ்சலோ மெத்தியூசை ஏன் பந்துவீச சங்கக்கார அழைக்கவில்லை என்பது புரியாத புதிர். 
மீண்டும் கன்டபேரி எக்ஸ்பிரஸ்
அடுத்து துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் போட்டியில் விளாசிய டில்சானை தனது முதலாவது ஓவர் ஐந்தாவது பந்துவீச்சில் வீழ்த்தினார் ஷேன் பொண்ட். அடுத்து வந்த உடவததையும் ஓட்டம் எதுவும் எடுக்காமல் மில்லில் பந்துவீச்சில் வெளியேறினார். ஜெயசூரியாவும் சில நாட்களாக ரி20 போட்டிகளில் துடுப்பாட்டத்தில் தடுமாறுகின்றார், அந்த தடுமாற்றம் இன்றும் தெரிந்தது மில்லின் பந்துவீச்சில் தட்டுத் தடுமாறி அடித்து டையிலரிடம் பிடிகொடுத்து 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
வந்தார் நேதன் மக்கலம்
பின்னர் வந்த மஹல ஜெவர்த்தனாவும் சங்ககாராவும் நன்றாக ஆடினார்கள் ஆனாலும் நேதன் மக்கலத்தின் முதலாவது ஓவரிலையே ரைடரிடம் பிடிகொடுத்து 41 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார், அஞ்சலோ மத்தியூசும் நேதன் மக்கலத்தின் பந்தில் டைலரிடம் பிடிகொடுத்து 1 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். அந்த ஆட்டமிழப்புடன் இலங்கை அணியின் வெற்றி கொஞ்சம் கொஞ்சமாக பறிபோய்க் கொண்டிருந்தது. பின்னர் சங்ககாரா அடித்து விளையாடினாலும் ஏனையவர்கள் அவருக்கு துணை நிற்கமுடியாமல் போனதால் வெற்றிக் கனியைப் பறிக்கமுடியவில்லை.
இறுதியாக இலங்கை அணி 148 ஓட்டங்களை எடுத்து 22 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. இந்தத் தோல்வியின் மூலம் தொடர்ந்து நான்கு தடவை ஒரே மைதானத்தில் தோல்வியடைந்த புதிய சாதனையை இலங்கை தன் வசப் படுத்தியது. ஆர்.பிரேமதாச மைதானம் ராசி இல்லாத படியால் இலங்கை அணி தன் அடுத்த ரி20 போட்டியை வேறு ஒரு மைதானத்தில் நாடத்தினால் நல்லது.
மீண்டும் அணிக்குத் திரும்பிய ஷேன் பொண்ட் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், நேதன் மக்கலம் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் மில்ஸ் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். சமீபகாலமாக சோபிக்காத ஓரம் 27 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார். முதல் போட்டியில் 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட அணித்தலைவர் வெட்டோரிக்கு எந்த விக்கெட்டும் கிடைக்கவில்லை.
ஆட்டநாயகன், தொடர் நாயகன் இரண்டு விருதும் ஜெஸ்சி ரைடருக்கு வழங்கப்பட்டது. 
எதிர்வரும் 8ந்திகதி ஆரம்பமாகும் இலங்கை, இந்தியா மற்றும் நியூசிலாந்து பங்கேற்கும் முத்தரப்புத் தொடரில் பலத்த சவால்கள் மூன்று அணிகளுக்கும் காத்திருக்கின்றது.
தொடர் தோல்விகளால் துவளும் இலங்கை
எழுதியது வந்தியத்தேவன் at 3 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் இந்தியா, இலங்கை, கிரிக்கெட், நியூசிலாந்து, பாகிஸ்தான், ரி20, விளையாட்டு
சர்ச்சையில் புச்சானன்
சர்ச்சையில் சிக்குவதோ இல்லை மற்றவர்கள் மேல் வசை பாடுவதோ அவுஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்களுக்கும் அவுஸ்திரேலியாப் பத்திரிகைகளுக்கும் புதிசல்ல. 
அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் ஜோன் புச்சானன் சமீபத்தில் எழுதியுள்ள கிரிக்கெட்டின் எதிர்காலமும் டுவென்டி 20-யின் எழுச்சியும்("The Future of Cricket: The Rise of Twenty20") என்ற நூலில் பல முன்னணி வீரர்களை மிகவும் காட்டமாகச் சாடியுள்ளார். ஏற்கனவே ஐபிஎல்லில் கல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பயிற்சியாளராக இருந்தபோது பல சர்ச்சைகள் உருவாகவும் அந்த அணி தொடரில் கடைசி இடத்தில் வரவும் வழி செய்தவர் இவரே.
இவர் தனது புத்தகத்தில் முன்னாள் வீரர்களான கவாஸ்கர் உட்பட யுவராஜ் சிங், கங்குலி, ஹர்பஜன் சிங் போன்ற இந்திய வீரர்களையும், மார்க் ராம் பிரகாஷ், ஹெவின் பீட்டர்சன், சோயப் அக்தர் போன்ற ஏனைய வீரர்களையும் இந்தியத் தொழிலதிபர் விஜய் மல்லையாவையும் விமர்சனம் செய்துள்ளார்.
விஜய் மல்லையாவை ஒரு சர்வாதிகாரியாகவும், கவாஸ்கர் ஒரு தலைப்பட்சமான முடிவுகளை எடுப்பவர் எனவும் எழுதியிருக்கின்ற புச்சானன் யுவராஜ் சிங் கங்குலியாக முயற்சிக்கின்றார் ஆனால் அவருக்கு அந்தத் தகுதியில்லை என்கின்றார். அத்துடன் சச்சின் டெண்டுல்கருக்கு ருவெண்டி 20யில் விளையாட தகுதியில்லை என்றும் அவரால் அதிரடியாக ஆடமுடியாது என்று நட்சத்திரவீரர் சச்சின்மேலும் தன் கடின சொற்களை வீசியுள்ளார்.
இவரின் இந்தக் கருத்துக்களுக்கு ஹர்பஜன் சிங் தன் எதிர்ப்பினை தெரிவித்துள்ளார். புச்சானன் தன் புத்தகத்தினை விற்க மலிவான விளம்பரம் தேடுகின்றார் புச்சானன் என ஹர்பஜன் தெரிவித்தார்.
இதுவரை ஏனைய வீரர்களோ அல்லது பிசிசிஐயோ இதற்க்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. புச்சானனின் கருத்து ஒரு தனிப்பட்ட மனிதரின் கருத்தாக இருந்தாலும் பிரபல நட்சத்திர வீரர்களை குறிவைத்துத் தாக்கும்போது அமைதி காப்பது புச்சானனின் கருத்துக்களை மறைமுகமாக ஒத்துக்கொள்வதுபோல் இருக்கின்றது.
எழுதியது வந்தியத்தேவன் at 2 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் கிரிக்கெட், புச்சானன், ரி20, விளையாட்டு
மகளிர் இருபதுக்கு இருபது உலகக்கிண்ணம்
முதலாவது மகளிர் இருபதுக்கு இருபது போட்டிகள் இன்று இங்கிலாந்திலுள்ள டோன்டன் மைதானத்தில் ஆரம்பமாகின்றது. முதற்சுற்றின் அனைத்துப்போட்டிகளும் இதே மைதானத்தில் தான் நடக்கவிருக்கின்றது. டோன்டன் மைதானத்தை இலங்கை இந்திய ரசிகர்கள் மறக்கமாட்டார்கள். 1999 உலகக்கிண்ணத்தின் போது இலங்கை அணியை கங்குலியும் ராவிட்டும் துவைத்து எடுத்த மைதானம். அந்த ஆட்டத்தின் பின்னர் இந்த மைதானத்தில் ஒரு நாள் போட்டிகள் நடைபெறவேயில்லை. காரணம் மைதானம் நம்ம ஊர் மைதானங்கள் போல் அளவில் சிறியது. பெண்கள் போட்டிகள் என்பதால் இந்த மைதானத்தில் முதல் சுற்றுப்போட்டிகள் நடைபெறுகின்றன. 
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, மேற்கிந்தியதீவுகள், இங்கிலாந்து என எட்டு அணிகள் பங்குபெறுகின்றன. இலங்கை தவிர ஏனைய அணிகள் இருபதுக்கு இருபது போட்டிகளில் ஏலவே பங்குபற்றியுள்ளன.
இந்தவருட உலககிண்ணத்தைக் கைப்பற்றிய இங்கிலாந்து தன் சொந்த மண்ணில் நடைபெறுவதால் ஏனைய அணிகளுக்கு கடும் சவலாகவே விளங்கும் கிளையர் டைலர், கேப்டன் எட்வேர்ஸ் மற்றும் விக்கட் காப்பாளர் சாரா டைலர் அசத்துவார்கள் என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றாகள்.
அதேவேளை தன் சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை தவறவிட்ட ஆஸ்திரேலியாவும் திறமைகாட்டலாம். அணியின் கேப்டன் கரன் ரோல்டனுக்கு இதுதான் இறுதித் தொடராகும்.
முதலாவது ஆண்கள் இருபதுக்கு இருபது கிண்ணத்தை இந்தியா கைப்பற்றியதுபோல் இந்திய மகளிர் அணிக்கும் கைப்பற்றும் வாய்ப்பு பலமாக இருக்கின்றது. அஞ்சும் சோப்ரா, மிதாலி ராஜ் துடுப்பாட்டத்தில் திறமைகாட்டி கேப்டன் ஜுலான் கோஸ்வாமி பந்துவீச்சில் அசத்தினால் கிண்ணம் இந்தியாவுக்கே.
ஏனைய அணிகள் பெரிதாக எதனையும் சாதிக்காது போனாலும் மற்றய அணிகளுக்கு சவாலாகவே விளங்கும். ஆண்கள் இருபதுக்கு இருபது போட்டிகள் போல் இங்கேயும் அதிர்ச்சிகள் காத்திருக்கின்றனவோ தெரியாது.
அரையிறுதிப்போட்டிகளும் இறுதிப்போட்டியும் ஆண்கள் அரையிறுதிப்போட்டிகள் இறுதிப்போட்டி நடக்கும் அதே மைதானத்தில் அதே தினத்தில் முதல் போட்டியாக நடைபெறவிருக்கின்றது. ரசிகர்களுக்கு ஒரே ரிக்கெட்டில் இரண்டு ஆட்டங்கள்.
ஆனாலும் மகளிர் டென்னிசுக்கு இருக்கும் ரசிகர்கள் போல் மகளிர் கிரிக்கெட்டுக்கு ஏனோ இல்லை.
எழுதியது வந்தியத்தேவன் at 3 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் மகளிர், ரி20, விளையாட்டு
ஆஸிக்கு ஆப்பு
இங்கிலாந்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐசிசி இருபதுக்கு இருபது போட்டிகள் தொடங்கிய நாள் முதலே பல அதிர்ச்சிகளை ரசிகர்களுக்கு தந்துகொண்டிருக்கிறது. போட்டியின் முதல் ஆட்டத்தில் போட்டிகளை நடத்தும் இங்கிலாந்து கிரிக்கெட்டின் மக்கா எனப்படும் லோர்ட்ஸில் கத்துக்குட்டி அணியான நெதர்லாந்திடம் படுதோல்வி அடைந்தது. இதனால் இங்கிலாந்தின் சூப்பர் எட்டு கனவு தகர்ந்துவிட்டது என்றே கூறலாம். இன்று நெதர்லாந்து பாகிஸ்தானை வென்றால் இங்கிலாந்தும் நெதர்லாந்தும் தங்கள் குழுவில் சூப்பர் எட்டிற்க்கு தெரிவாகிடும். எது எப்படியோ பாகிஸ்தானினது தலைவிதி இன்றைக்கு நெதர்லாந்தால் எழுதப்படும்.
(கிரிக்கெட்டிலும் வைல்ட் கார்ட் ரவுண்ட் வைக்கவேண்டும் என்று ஐசிசிக்கு தந்தி அடிக்கப்போறேன் - பொண்டிங்)
நேற்றைய முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை அயர்லாந்து வீழ்த்தி சூப்பர் எட்டுக்குள் நுழைந்தது. டெஸ்ட் அந்தஸ்துள்ள வங்கதேசத்தை இன்னொரு கத்துக்குட்டி அணியான அயர்லாந்து வீழ்த்தியது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையளித்தது.
வங்கதேசத்திற்க்கு அயர்லாந்துகொடுத்த அதிர்ச்சியிலிருந்து மீளமுன்னர் அடுத்த ஆட்டத்தில் ஒரு நாள் போட்டிகள், டெஸ்ட் போட்டிகளில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை இலங்கை அணி புரட்டியெடுத்தது. ஏற்கனவே மேற்கிந்தியத் தீவுகளுடனான போட்டியில் கிடைத்த ரணம் ஆறமுன்னர் இலங்கையும் பொண்டிங்கின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது. 


கிறிஸ் கெய்ல் அடித்த ஆப்பை சங்ககாரா, டில்ஷான், மெண்டிஸ் போன்றோர்கள் சற்று இறுக்கி அடித்து ஆஸியின் இருபதுக்கு இருபது சம்பியன் கனவைத் தகர்த்தார்கள்.
இந்த இருபதுக்கு இருபது போட்டிகளையும் வரப்போகும் ஆஷஸ் தொடரையும் மனதில் வைத்து பல ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்குபெற்றவில்லை. அதன் பலனை இப்போது அனுபவிக்கிறார்கள்.
ஆஸ்திரேலியாவின் வெளியேற்றத்தால் நியூசிலாந்து, இலங்கை அணிகள் அரையிறுதிக்கு செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றே சொல்லலாம்.
இதுவரை அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறிய அணிகள் ஸ்கொட்லாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலியா, நான்கவது அணி பாகிஸ்தானா இல்லை நெதர்லாந்தா? இன்றிரவு விடைகிடைக்கும்.
எழுதியது வந்தியத்தேவன் at 1 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் கிரிக்கெட், ரி20, விளையாட்டு
ஜெயிக்கபோவது யாரு?
பதிவுக்கு முன்னர் ஒரு முன்குறிப்பு :
சில நாட்களாக எந்தவிதபதிவுகளும் இடவில்லை. காரணம் பலருக்கு புரிந்திருக்கும். அரசியல்பதிவுகள் எதுவும் எழுதுவதில்லை ஆனாலும் நீரோ மன்னன் பிடில் வாசித்ததுபோல் எழவு வீட்டில் கிரிக்கெட், சினிமா மொக்கை என என் பதிவுகளை இடமனம் இடம் தரமறுத்ததால் கடந்த ஒரு மாதத்திற்க்கு மேலாக வலைமனையில் புதிதாக எந்தப்பதிவும் இடவில்லை. ஆனாலும் தமிழ்மணத்தின் உதவியுடன் பெரும்பாலான வலைமனைகளுக்கு விஜயம் செய்து சிலருக்கு பின்னூட்டம் இட்டிருக்கிறேன். சில நண்பர்களின் வேண்டுகோளிற்கிணங்க மீண்டும்.
ஐபிஎல் திருவிழா கோலாகலமாக முடிந்து மீண்டும் ஐசிசி டி20 உலக கிண்ணம் இன்றிரவு ஆரம்பமாகின்றது. போட்டிகளை நடத்தும் இங்கிலாந்தும் நெதர்லாந்தும் இன்றைய முதல் போட்டியில் மோதுகின்றன. நடப்புச் சம்பியன் இந்தியா நாளை வங்கதேசத்தை எதிர்தாடுகின்றது. 
இங்கிலாந்தில் தற்போது கோடைகாலம் அதிலும் வெயில் இந்திய உபகண்டத்தைப்போல் இருப்பதால் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு காலநிலை பிரச்சனை கொடுக்காது.
நான்கு குழுக்களாக 12 அணிகள் கலந்துகொள்கின்றன. இனவெறி காரணமாக சிம்பாவே சேர்த்துக்கொள்ளப்படவில்லை(?). ஒவ்வொரு குழுக்களிலும் முதல் இரண்டிடம் பெறும் அணிகள் சூப்பர் எட்டு போட்டிகளில் ஆடும். குழு சியில் அவுஸ்திரேலியா, இலங்கை, மேற்கிந்தியதீவுகள் உள்ளன. இந்தக்குழுவில் மட்டும்தான் எந்த அணிகள் முதல் இரண்டு இடம் பெறும் என்பதைக் கணிப்பது கஸ்டம். ஏனையவற்றில் அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்கொட்லாந்து போன்ற கத்துக்குட்டி அணிகள் இருப்பதால் ஏனைய டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகளுக்கு அவ்வளவு சிரமம் இருக்காது.
தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா இங்கிலாந்து போன்றவை மற்ற அணிகளுடன் ஒப்பிடும்போது பெரும்பலம் வாய்ந்த அணிகளாக இருக்கின்றன. பாகிஸ்தான் அணியில் உள்ள சிக்கல்களால் சென்றமுறை இறுதிக்கு வந்ததுபோல் இம்முறையும் வருமா என்பது சந்தேகமே.
பயிற்சி ஆட்டங்களில் தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா என்பன சிறப்பாக ஆடின. இந்தியாவின் நியூசிலாந்திடம் ரி20 போட்டிகளில் தோற்கும் பலன் பயிற்சி ஆட்டத்திலும் நிரூபணமாயிற்று. அதே நேரம் இந்தியா தன் விளையாட்டு எதிரியான பாகிஸ்தானை இலகுவாக வீழ்த்தியது. இங்கிலாந்தும் பயிறிப்போட்டியின் போது மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி தன் நிலையை காட்டியது. பயிற்சி ஆட்டங்களின் போது இலங்கை தடுமாறியதும் சங்கககாராவின் புதிய தலைமையும் இலங்கைக்கு வெற்றி கொடுக்குமா?
சில முக்கியமான அணிகளின் பலம் பலவீனம் :
தென்னாபிரிக்கா :
சிமித் தலைமையிலான தென்னாபிரிக்கா அணியில் ஐபிஎலில் கலக்கிய கிப்ஸ், கலீஸ், டும்மினி, டீ வில்லியர்ஸ், மோர்கல், பவுச்சர் போன்ற நீண்ட பலமான துடுப்பாட்ட வரிசை. வண்டர் மேர்வே, கலீஸ், டும்பினி, மோர்கல் என சகல துறைவீரர்கள் பலரும் போர்மில் இருப்பது. எனப்பலமான அணியாக காணப்படுகின்றது .பந்துவீச்சில் யூசுப் அப்துல்லா, டேல் ஸ்ரென் போன்ற வேகப் பந்துவீச்சாளர்கள் இருந்தாலும் அனுபவ வீரர் நிட்னி இல்லாதது கொஞ்சம் பலவீனமே. அத்துடன் உலகப்கோப்பைப்போட்டிகளில் இவர்களின் அதிர்ஷ்டமில்லாமை இன்னொரு பலவீனமாகும்.
அவுஸ்திரேலியா :
பொண்டிங் தலைமையிலான ஒருநாள் போட்டிகளின் நடப்புச் சம்பியன் ஆஸி இம்முறை எப்படியேனும் இருபது20 போட்டிகளிலும் தங்கள் பராக்கிரமத்தைக் காட்டவே செய்வார்கள். இவர்களின் அதிரடி தொடக்கவீரர்களான மத்யூ ஹெடன், கில்கிறிஸ்ட் இருவரும் ஐபிஎலில் அதிரடிவாணவேடிக்கை காட்டியவர்கள். இவர்கள் இருவரும் அணியில் இல்லாதது பெரியபலவீனமே. அத்துடன் ஷோன் மார்ஷ், சர்ச்சைகளின் நாயகன் அன்ரூ சைமண்ட்ஸ் அணியில் இல்லாதது இன்னொரு வகையில் ஆஸிக்கு ஆப்புத்தான். டேவிட் வார்னர், பொண்டிங், மைக்கள் கிளார்க், டேவிட் மற்றும் மைக்கள் ஹசி ஆகியோரில் துடுப்பாட்டம் பெரிதும் தங்கியிருக்கின்றது. பிரட் லீ, மிச்சல் ஜோன்சன், நேதன் பிராக்கன் மிரட்டல் வேகங்கள் எதிரணிகளுக்கு அச்சுறுத்தல் கொடுக்கும்.
இந்தியா :
நடப்புச் சம்பியன் இந்தியா இம்முறையும் கிண்ணத்தை தக்கவைத்துக்கொள்ள எப்படியும் முயற்சி செய்யும். ஐபிஎலில் சொதப்பிய ஆரம்ப ஜோடிகளான கம்பீர், சேவாக் (இருவரும் டெல்லிக்காக ஆரம்பவீரர்களாக களமிறங்கியிருந்தாலும் பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை) இங்கிலாந்தில் பிரகாசிப்பார்களா? இல்லை பயிற்சிப்போட்டிகளின் போது கம்பீருடன் ரோகித் சர்மா களமிறக்கப்பட்டு அது வெற்றிகரமாக இருந்தபடியால் ரோகித் சர்மாவும் கம்பீரும் களமிறங்குவார்களா? சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, யூசுப் பதான், யுவராஜ் சிங், டோணி என பலமான துடுப்பாட்ட வரிசை. இதில் ஜடேஜா ரெய்னா போன்றவர்கள் ஐபிஎல்லில் தங்கள் திறமையை நிருபித்தவர்கள்.
பந்துவீச்சைப் பொறுத்தவரை ஆர்பிசிங் ஐபிஎல்லில் அதிக விக்கெட் வீழ்த்தியவர். இஷாந்த் சர்மா, இர்பான் பதான், பிரவீன் குமார் காயத்திலிருந்து மீண்டால் ஷாகீர் கான் என வேகங்கள் அச்சுறுத்தலாம். சுழலில் பிரயன் ஓஜா, ஹர்பயன் மாயம் செய்யலாம். பகுதி நேரப்பந்து வீச்சாளர்களான ரெய்னா, ரோகித் சர்மா, யுவராஜ் சிங், யூசுப் பதான்,ஜடஜா விக்கெட்டுகள் வீழ்த்தினால், இந்திய அணியின் இரண்டாம் முறை வெல்லும் கனவு நனவாகலாம்.
மிகப்பெரிய பலவீனமாக இந்திய அணியின் களத்தடுப்பு. பயிற்சி ஆட்டங்களின்போது கூட அப்பட்டமாக இவர்களின் களத்தடுப்பு பிழைகள் தெரிந்தன. ஐபிஎல்லில் சென்னையை அரையிறுதியில் தவறான வழியில் கொண்ட சென்ற டோனி அதே தவறுகளை செய்யக்கூடாது, அத்துடன் டோனி ஒருநாள் போட்டிகள் ஆடுவதுபோல் இருபது ஓவர் போட்டிகளில் ஆடுவதையும் நிறுத்தவேண்டும்.
இலங்கை :
சங்ககாரா தலைமையிலான பழைய வீரர்கள் சில புதிய வீரர்கள் என்ற கலவையான அணி. ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் ஜெயசூரியாவுடன் பெரும்பாலும் டில்ஷான் ஆடவரலாம். தொடர்ந்து ஜெயவர்த்தனா, சங்கக்கார, மகரூப் சாமர சில்வா என பலம் குன்றிய துடுப்பாட்ட வரிசை. பந்துவீச்சில் மாலிங்காவில் மட்டும் வேகப்பந்துவீச்சில் தங்கியிருப்பது. திலான் துஷாரா, இசுரு உதான இருவரும் புதிய முகங்கள். சுழலில் முரளிதரன் அஜந்தா மெண்டிஸ். மெண்டிஸ் மந்திரம் ஐபிஎல்லில் அவ்வளவாக பலிக்கவில்லை. அத்துடன் இவர்கள் இருக்கும் குறூப்பும் அட்டமத்தில் சனி உள்ள குறூப். இலகுவாக வெல்ல நெதர்லாந்தோ ஸ்கொட்லாந்தோ இல்லை. ஆஸியும் மேற்கிந்தியத்தீவுகளும் இருவரில் ஒருவரையாவது வெல்லவேண்டும். இலங்கைக்கு ரி20யில் அவ்வளவு இலகுவாக வெற்றி கிடைக்காது.
இங்கிலாந்து :
சொந்த மண்ணில் விளையாடுவது மிகப்பெரிய பலம், இதுவரை எவ்வித உலகக்கோப்பைகளும் கைப்பற்றவில்லையென்பது இவர்களின் பெரிய துரதிஷ்டம், போல் ஹொலிங்வூட் தலைமையிலான அணியில் பீட்டர்சன், ரவி போபரா, ஓவைஸ் ஷா என ஒருசில நட்சத்திர துடுப்பாட்ட வீரர்கள். பந்துவீச்சிலும் அன்டர்சன் நம்ம மன்னார் பொடியன் டிமிதிரி மஸ்ஹரின்ஹஸ் ( உச்சரிப்பதே கஷ்டம்) சைட்பொட்டம் போன்றவர்கள் ஓரளவு பிரகாசித்தால் வெற்றிக்கொடி நாட்டலாம்.
பாகிஸ்தான் :
யூனிஸ் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் 17வயது நிரம்பிய
அஹமட் ஷெஷாட் பயிற்சிப்போட்டிகளின் போது திறமைகாட்டினார்.யூனிஸ் கான், சல்மான் பட், மிஷ்பா உல் ஹக், அப்ரிடி, ஷோயிப் மாலிக், யசீர் அரபாத், கம்ரன் அக்மல் என பலமான நீண்ட துடுப்பாட்ட வரிசை. அண்மையில் ஆஸியை துபாயில் வெற்றி பெற்ற மனத்தைரியம் போன்றவை பாகிஸ்தானை இம்முறையும் இறுதிப்போட்டிவரை அழைத்துச் செல்லுமா? இல்லை இடையில் இவர்களின் கனவு பறிபோயிடுமா என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். பந்துவீச்சைப்பொறுத்தவை அக்தர், குல், தன்வீர் வேகங்கள் திறமைகாட்டினால் பாகிஸ்தான் கோப்பையைக்கூட வெல்லமுடியும். மிரட்டுகின்ற சுழல் பந்துவீச்சாளர் இல்லையென்பது மிகப்பெரிய பலவீனம்,
நியூசிலாந்து :
டானியல் விட்டோரி தலைமையிலான நியூசிலாந்து அணியில் கொல்கத்தா நைட் ரைடருக்கு தலைமைதாங்கிய மெக்கலம், ஜெசி ரைடர், ரோஸ் டைலர், ஸ்கொட் ஸ்ரைரிஸ், நாதன் மெக்கலம், குப்தில், ஜேக்கப் ஓரம், கப்டன் விட்டோரி என பலமான துடுப்பாட்ட வரிசை எதிரணியின் பந்துவீச்சாளர்களை சின்னாபின்னப்படுத்தலாம். ஓ பிரெய்ன், இயன் பட்லர் போன்ற ஆகிய வேகங்களுடன் விட்டோரியின் சுழலும் ஜாலம் செய்தால் நியூசிலாந்தும் ஏனைய அணிகளுக்கு பெரும் நெருக்கடி கொடுக்கும்.
மேற்கிந்திய தீவுகள் :
கிறிஸ் கெய்ல் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணியில் கெய்ல், சர்வான், சந்திரபோல், பிராவோ, போன்ற நட்சத்திர துடுப்பாட்ட வீரகள் இருந்தாலும் பலம் வாய்ந்த குறூப்பில் இருப்பதால் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது என்றால் ஆஸியை அல்லது இலங்கையை வென்றே ஆகவேண்டும் என்ற நிலை. பந்துவீச்சில் எட்வேர்ட்ஸ், ஜெரோம் டைலர், போன்றவர்கள் திறமைகாட்டினால் வெற்றிவாய்ப்புகள் கிடைக்கும். கிரிக்கெட்டில் எதுவும் நடக்கலாம் ஆகவே ஒருமுறை டாக்காவில் மினி உலகக்கிண்ணத்தை வென்றதுபோல் மேற்கிந்தியதீவுகள் முயற்சி செய்துபார்க்கலாம்.
என்னுடைய கணிப்பின் படி இங்கே எப்படி நாடுகளைப் பட்டியல் இட்டிருக்கின்றேனோ அதேபோல் தான் வெற்றுவாய்ப்புகளும். எதற்க்கு சில நாட்கள் பொறுத்திருந்துபார்ப்போம்.
டிஷ்கி 1: இங்கேயும் சியர்ஸ் லீடர்கள் ஆடுகின்றார்களா? என சியர்ஸ் லீடர்களின் பரமவிசிறிகள் கேட்கின்றார்கள்?
எழுதியது வந்தியத்தேவன் at 1 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் கிரிக்கெட், ரி20, விளையாட்டு
