"துளித் துளி மழையாய் வந்தாளே" என ஹரீஷின் செல்போன் தமன்னாபோலவே சிணுங்கியது.
"ஞாயிறு காலேலையும் நித்திரை கொள்ளவிடாமாட்டங்கள்" என நினைத்தபடி தூக்க கலக்கத்தில் "ஹலோ" என்றான்.
"டேய் மச்சான் நாங்கள் எல்லோரும் கிரவுண்டுக்கு வந்துட்டம் உடனே வா" எஸ் எம் எஸ் போல் சொன்னான் நண்பன் வருண்.
"குளிச்சிட்டு வாறன்டா" என்றபடி பாத்ரூமில் நுழைந்தான் ஹரீஷ்.
ஹரீஷ் கணணிப் பொறியியளாலனாக ஒரு தனியார் கம்பனியில் நல்ல சம்பளம் வாங்கிக்கொண்டு கொழும்பில் வசிக்கும் இளைஞன். வாரத்தில் ஐந்துநாளும் ஜாவாவுடன் குடும்பம் நடத்திவிட்டு சனி ஞாயிறு என்றால் நண்பர்களுடனும் கிரிக்கெட்டுடனும் குடும்பம் நடத்துபவன். ஆறடி உயர ஜிம்பாடி பார்ப்பவர்களை அவனை ஒரு விளையாட்டுவீரனாகவே எண்ணவைக்கும். பாடசாலைக் காலத்தில் பாடசாலை அணிக்கும், பல்கலைக் கழக வாழ்க்கையில் பல்கலைக் கழக அணிக்கும் கிரிக்கெட் விளையாடிய சகலதுறை வீரன். நல்ல படிப்பு, நல்ல வேலை என சகல செளபாக்கியங்களும் இருந்தும் இன்னும் திருமணம் செய்யவில்லை.
"அம்மா டீ" உடலைத் துடைத்தபடி ஹரீஷ் குசினிக்குள் குரல் கொடுத்தான்.
டீயுடன் வந்த அவனின் தாய்,
"தம்பி உனக்கு அடுத்த பட்சில் படிச்ச ஒரு பெட்டையின் சாதகம் வந்திருக்கு, இனியாவது ஓம் என்று சொல்லடா?"
"காலமையே உங்கடை ஆக்கினியைத் தொடங்கிவிட்டியளே, நான் சிசிஎன்ஏ செய்யவேண்டும், இன்னும் நல்ல பொசிசனுக்கு வரவேண்டும் அதன் பிறகு பார்ப்பாம்" சலித்தபடி சொன்னான்.
"நீ இன்னும் அவளை மறக்கவில்லை போலிருக்கின்றது, துலைவாள் என்ரை பிள்ளைக்கு என்ன மருந்துபோட்டு மயக்கினாளோ"
"சும்மா அவளைத் திட்டாதை, எனக்கு டீயும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம்" கோபத்துடன் பைக்கை உதைத்தான் ஹரீஷ்.
காலி வீதியில் போகும் போது பழைய ஏ எல் கால நினைவுகள் மெல்ல தாலாட்டத் தொடங்கின.
யாழில் பிரபலமான அந்தப் பாடசாலைகளின் வருடாந்த கிரிக்கெட் போர் நடந்துகொண்டிருந்தது. தன் கல்லூரிக்காக ஆரம்ப வீரனாக இறங்கிய ஹரீஷ் நான்குகள் ஆறுகள் என அடித்து நொருக்கிக்கொண்டிருந்தான். போட்டியைப் பார்க்கும் மாணவர்களினதும் ஏனைய பார்வையாளர்களினதும் சத்தம் வானைப் பிளந்தது. ஸ்கோர்போர்ட் பக்கம் இருந்த பக்கத்து பாடசாலை மாணவிகளின் கூட்டத்தில் ஒருத்திமட்டும் ஹரீஷின் ஒவ்வொரு ஓட்டத்தையும் கைத்தட்டியும் துள்ளியும் ரசித்தாள்.
முதல் நாள் ஆட்டம் முடிந்தது ஹரீஷ் சதமடித்து ஆட்டமிழக்காமல் இருந்தான். தன் சக மாணவர்கள் ஏனைய மாணவர்கள் என பலரும் கட்டிப்பிடித்தும் கைகொடுத்தும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டிருந்தார்கள்.
"வாழ்த்துக்கள் நீங்கள் கலக்கிவிட்டீர்கள்" ஒரு தேன்குரல் தன்னுடைய மெல்லிய கைகளை கொடுத்து மின்னல் போல் வாழ்த்திவிட்டுச் சென்றது.
அவளின் உருவம் ஹரீஷின் மனதில் மெல்லிய விம்பமாக பதிந்துவிட்டது. சில நிமிடங்களில் அவளை மறந்துவிட்டு அடுத்தநாள் போட்டியில் எப்படி எதிரணியை விழுத்துவது என அணித்தலைவருடன் ஆலோசித்துவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டான்.
அடுத்தநாள் ஹரீஷ் தன் வேகத்தில் எதிரணியை மிரட்டிக்கொண்டிருந்தான். ஜோர்க்கர்களும் பெளன்சர்களும் எகிறிப்பறந்தன. அத்துடன் அவன் கல்லூரி வெற்றியையும் ஈட்டிவிட்டது. ஹரீஷ் பாராட்டு மழையில் நனைந்துகொண்டிருக்கும் போது மீண்டும் தூறலாக அதே தேன் குரலில் "வாழ்த்துக்கள் நீங்கள் கலக்கிவிட்டீர்கள்" இம்முறை கைகொடுக்காமல் மெல்லிய புன்னகை மட்டும். அவனும் ஒரு சிரிப்புடன் நன்றி எனச் சொல்லிவிட்டு அவளின் முகத்தையும் ரையையும் பார்த்தான்.
மறுநாள் மாலை ரியூசனில் ஹரீஷ் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தான்.
"இந்த முறை அவங்கடை ஆட்டத்துக்கு ஆப்படித்துவிட்டோம் மச்சான்."
"நீ ஆப்படிச்சாலும் அந்தக் கல்லூரி கோச்சின் மகள் நீ அடித்த ஓவ்வொரு அடிக்கும் கை தட்டினாளே"
"அட அவள் தேவா மாஸ்டரின் மகளோ, ரண்டு நாளும் என்னைப் பாராட்டினாள் அவளின் ரையைப் பார்த்தே நினைச்சேன். சூப்பர் பிகரடா"
"மச்சான் நீ நினைச்சால் அவளை மடக்கலாம்" நண்பர்கள் உசுப்பேத்தினார்கள்.
"இல்லையடா என்ரை லட்சியம் தேசிய அணியில் ஆடி மெக்ராத்தின் பந்துக்கு சிக்ஸ் அடிக்கவேண்டும்"
"அடப்பாவி நல்ல கனவு எனிவே உன் கனவு பலிக்க வாழ்த்துக்கள்"
கெமிஸ்ரி மாஸ்டர் உள்ளே வரவும் இவர்களின் கதையும் நின்றுவிட்டது.
வகுப்பு முடிந்ததும் "சொறி மச்சான் அம்மா நல்லூரானுக்கு ஒரு சலூட் அடித்துவிட்டு வரச்சொன்னார், நான் மற்றப்பக்கத்தாலை போறன் என்றபடி " சைக்கிளை எதிர்த்திசைக்கு திருப்பினான் ஹரீஷ்.
"ஹலோ ஹலோ" தன் பின்னால் ஒரு பெண் குரல் கூப்பிடுவதைக் கேட்டதும் சைக்கிளை ஸ்லோவாக்கி திரும்பிப் பார்த்தால் அந்த கோச்சின் மகள்.
"ஹலோ என்ன இந்தப் பக்கம்?" ஹரீஷ்
"நானும் உங்கடை ரீயூசன் தான் அடுத்த பேட்ச் நான் பயோ நீங்கள் மட்ஸ்தானே.."
"ஓமோம் நான் மட்ஸ்தான் அம்மாவின் விருப்பம் நான் எஞ்ஜினியராவது அப்பாவோ என்னை கிரிக்கெட் வீரனாக்கி அழகு பார்க்க விரும்புகின்றார், ஆமாம் உங்கடை பேர்?"
"ஐயோ உங்களைப் பார்த்த சந்தோஷத்தில் என் பெயரைச் சொல்ல மறந்துவிட்டேன், லாவண்யா"
"உங்களைப்போலவே உங்கடை பேரும் அழகாக இருக்கு, உங்களுக்கு கிரிக்கெட் பிடிக்குமா?"
"பிடிக்குமாவா? பைத்தியம் நான், ஊரிலை பொடியள் டெனிஸ் போலிலை விளையாடினாலும் ஒருக்கால் நிண்டு பார்த்துவிட்டுப்போற கேஸ் நான்"
"சொறி லாவண்யா நான் நல்லூர் கோயில் பூட்டமுன்னர் போகணும், அதாலை நாம் சைக்கிளில் கதைத்தபடி போவோமா?" என்றபடி இருவரும் பரலலாக கிரிக்கெட் பற்றிக் கதைத்தபடியே சென்றார்கள்.
கல்வியங்காட்டுச் சந்தியில் லாவண்யா தான் அரியாலைப் பக்கம் போகவேண்டும் என்றபடி ஹரீசுக்கு பாய் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டாள்.
அன்றைய ஹரீஷின் இரவை லாவண்யாவே ஆக்கிரமித்திருந்தாள், முரளியின் தூஷ்ராவில் இருந்து சகலதும் தெரிந்துவைத்திருக்கின்றாள். இப்படியான பெண் எனக்கு வாய்த்தால் தான் பொருத்தமாக இருக்கும்.
தினமும் ரியூசன் முடிய இருவரும் ஒன்றாக வரத்தொடங்கினார்கள். வகுப்புகளிலும் பொடியளிடை அரசல்புரசலாக இவர்கள் கதைதான். சிலர் நேரடியாகவே கேலி செய்தார்கள். எக்ஸாம் நெருங்கி வந்தபடியால் ஹரீஷின் கவனம் படிப்பிலும் போனது.
"எப்படியும் சோதினை முடிந்ததும் என்ரை லவ்வை அவளுக்குச் சொல்லவேண்டும். கார்ட்டுடன் கடிதம் எழுதிக்கொடுப்பதோ சீ அது பழைய முறை அப்போ நேரடியாக போலைப் போடவேண்டியதுதான். எப்படியும் ஓம் என்பாள்" என மனசுக்குள் நினைத்தபடி பாஸ் பேப்பரைப் புரட்டினான்.
சோதினையும் முடிஞ்சு விட்டது, வெள்ளிக்கிழமைகளில் காதலைச் சொன்னால் பலிக்கும் என எங்கேயோ வாசிச்ச நினைப்பில் ஒரு வெள்ளிக்கிழமை நல்லூரானைத் தரிசித்தபின்னர் அவளுக்காக கல்வியங்காட்டுச் சந்தியில் நின்றான் ஹரீஷ்.
"ஹாய் ஹரீஷ், எப்படி எக்ஸாம்?"
"டவுள் மேட்ஸ் ஓக்கே, கெமிஸ்ரி தான் கொஞ்சம் கஸ்டப்படுத்திவிட்டது".
"ஓ அப்படியா"
"நான் உங்களுக்காகத் தான் வெயிட் பண்ணுகின்றேன்"
"எனக்காகவா ஏன் என்ன விசயம்?"
"ம்ம்ம் எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை, சொல்லாமலும் இருக்க முடியவில்லை வாங்கோவன் லிங்கத்திலை ஒரு ஐஸ் கிறீம் குடிச்சபடி பேசுவம்"
"ஐயோ ஆளை விடுங்கோ யாராவது கண்டால் பிரச்சனை, பரவாயில்லை சொல்லுங்கோ"
"ஐ லவ் யூ"
"நினைச்சேன் இப்படி ஏதாவது உளறுவியல் என்று, என்னைப் பற்றி என்ன தெரியும்"
"தேவா மாஸ்டரின் மகள், பயோ படிக்கின்ற கெட்டிக்காரி, சுஜாதாவில் இருந்து கிரிக்கெட் வரை தெரிந்துவைத்திருக்கின்ற அறிவாளி, வேறை என்ன தெரியனும்?"
" என் பெயர் தெரியுமா?"
"லாவண்யா"
"முழுப்பெயர் தெரியுமா?"
"ம்ம்முழுப்பெயர்..."
" ரெபேக்கா லாவண்யா தேவதாஸ்"..
இனிப் பவன் தொடர்வார்.
இந்த தொடர்கதையை நாம் சில நண்பர்கள் சேர்ந்து அஞ்சலோட்ட பாணியில் எழுதவுள்ளோம். எவருக்கும் கதை தெரியாது நான் எழுதியதன் தொடர்ச்சியை இன்னொருவர் எழுதுவார். இது ஒரு புதுவகையான முயற்சி. என்னைத் தொடர்ந்து நண்பர் பவன் எழுதுவான்.
பவனின் கதை நிலாக் காதல்
நிலாக் காதல் - அஞ்சலோட்டக் கதை
எழுதியது வந்தியத்தேவன் at 13 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் சிறுகதை, தொடர், பதிவர் வட்டம்.
கண்டி மழையும் கள்ளக் காதலும்
ஒரு ஞாயிற்றுக்கிழமையின் அழகிய மாலை நேரம் விவேகானந்த வீதி கடற்கரை கல்லிருக்கையில் நானு என் நண்பன் சிவாவும் இயற்கையை ரசித்துக்கொண்டிருந்தோம்.
"டேய் நம்ம குமாரின் போக்கு சரியில்லை" சிவா.
"ஏன்டா அவன் இந்த முறையும் கம்பசிலை அவன் கிளாஸ் அடித்தானே" நான்.
"இல்லையடா அவன் நல்லாப் படித்தாலும் நெட்டில் அடிக்கடி chat பண்ணுகின்றான். எனக்கென்னவோ அவன் அதிலை அடிக்ட் ஆகிவிடுவான் போல கிடக்கு" என சோகத்துடன் சொன்ன சிவா
"கூட நேரம் பெட்டையளோடுதான் Chat பண்ணுகின்றான்" என்ற பிரத்தியேக தகவலையும் சொன்னான்.
" சரி சரி கவலையை விடு அவனை சரிப்பண்ணலாம்" நான்.
******************************************************
வார நாட்களில் ஒருநாள் பேரராதனைப் பல்கலைக் கழகத்தில் உள்ள ஏதோ ஒரு பீடத்தின் கணிணி ஆய்வுகூடத்தில் கணிணித் திரைக்கு முன்னால் ஏதோ ஒரு அரட்டை இணையத்தில் பிரத்தியேக அரட்டையில் குமார்.
குமார் : "ஹாய் அஞ்சலி எப்படி சுகம்"
அஞ்சலி : "ஹாய் குமார் நான் நலம் நீங்கள்?"
குமார் : "நானும் ஓகே அப்புறம் நேற்று எங்கை ஆளைக் காணவில்லை? நான் தவித்துப்போனேன், ஐ மிஸ் யூ லொட்"
அஞ்சலி : "இதுதானப்பா இந்தப் பெடியன்களின் குணம் ஒருநாள் காணவில்லையென்றாலும் ஐ மிஸ் யூ என படம் காட்டுகிறது"
குமார் : "சரி வெள்ளவத்தையில் நீங்கள் எந்த ரோட்"
2 மணித்தியாலமாக தொடர்ந்தது இவர்களின் உரையாடல்.
******************************************************
சில நாட்கள் கழித்து அக்பர் விடுதியில் ஓரிரவு சிவாவும் குமாரும்
"மச்சான் நான் உனக்கு ஒரு விடயம் சொல்லவா?", குமார்
"சொல்லடா? என்ன ஏதாவது பிரச்சனையா? புரொப் ஏதும் கரைச்சலா?", சிவா
"சீ அப்படியொண்டும் இல்லை நெட்டிலை அஞ்சலி என்ற ஒருவர் எனக்கு பிரண்டாகியிருக்கிறா, அவ என்னை லவ் பண்ணுகின்றார் போலை இருக்கு, எனக்கும் அவவிலை நல்ல விருப்பம்", குமார்.
"அடப்பாவி நீயும் விழுந்திட்டியா?, இந்தா நீ இங்கே வந்தது படிக்கத்தான் லவ் பண்ண இல்லை, சும்மா லவ் கிவ் என்டு அலையாதே" கோபத்துடன் சொன்னா சிவா.
"இல்லையடா மச்சான் அவள் நல்ல பெட்டையாகத் தான் தெரிகிறது, மற்றது அவள் எங்கடை வந்தியின்ரை சொந்தக்காரியாம், மெதடிஸ்டிலைதானாம் படித்தது, 97 ஏஎல் பயோ செய்தவராம்"
"மவனே உன்னைத் திருத்தமுடியாது நான் வந்தியுடன் கதைச்சிட்டு சொல்லுறன், முதல்லை நாளைக்கு செய்யவேண்டிய அசைன்ட்மெண்டை முடி".
******************************************************
அடுத்த நாள் காலை என் செல்பேசி அலறியது யாரென்று பார்த்தால் சிவா.
"மச்சான் ஒரு விசயம்" சிவா
"சொல்லு என்னவும் பிரச்சனையோ" நான்
"பிரச்சனை இல்லை, நம்ம குமார் தான் இலவிலை விழுந்துவிட்டான், பெட்டை யாரோ உன்ரை சொந்தக்காரி அஞ்சலியாம்" சிவா.
நான் சிரிசிரி என சிரித்துவிட்டு சொன்ன விடயம் மற்றப் பக்கத்தில் சிவாவை அதிர்ச்சியடைய வைத்தது.
"சரியடா மச்சான் உவனை நான் இனிப் பார்த்துக்கொள்கின்றேன்" என்ற படி சிவா செல்பேசியை அணைத்துவிட்டான்.
******************************************************
சில நாட்கள் கழித்து லேக் புரொண்ட் ரெஸ்டோரண்டில் நான், சிவா, குமார் மூவரும் சாப்பிட்டபடி பேசிக்கொண்டிந்தோம்.
"டேய் வந்தி உனக்கு அஞ்சலி மேட்டர் தெரியும் தானே " குமார்.
"ஓம் தெரியும், அவள் உன்னை லவ் பண்ணுகிறாள் எனச் சொன்னவளோ" நான்.
"இல்லையடா அவள் இதுவரை அப்படிச் சொல்லவில்லை, ஏன் உனக்கு என்னைப் பற்றிச் சொன்னவளோ?" என எதிர்க் கேள்வி கேட்டான் குமார்.
"இல்லை இல்லை அவள் அப்படியொண்டும் சொல்லவில்லை, ஆனால் அவளுக்கு கலியாணம் பேசுகின்றார்கள், மாப்பிள்ளை கனடா" என அதிர்ச்சிச் செய்தியை நான் சொல்லிமுடிக்க முன்னர்
"நான் இதை நம்பமாட்டேன், நாளைக்கே அவளை என்னவென்று கேட்கின்றேன்" என உணர்ச்சிவசப்பட்டு குமார் பதிலளித்தான்.
"டேய் அமைதியாக இருடா, நான் சொன்னனான் தானே இந்தப் பெட்டையளே இப்படித்தான் " என பெண்கள் சமூதாயத்தையே சீண்டினான் சிவா,
பின்னர் அவனை ஒருமாதிரி சாந்தப்படுத்தி விடுதிக்கு மூவருமாகச் சென்றோம்.
******************************************************
அடுத்த நாள் குமார் அஞ்சலிக்கு அவளின் திருமணம் பற்றி மின்னஞ்சலில் வினவியிருக்க ஓரிரு நாட்களில் அவனுக்கு அஞ்சலியிடமிருந்து பதில் வந்தது.
அன்பின் குமார்
முதலில் என்னை மன்னிக்கவும். நீங்கள் என்னைக் காதலிப்பது வந்தி சொல்லித்தான் தெரியும். முதலில் தெரிந்திருந்தால் என் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டிருக்க மாட்டேன். என்ன செய்வது அம்மா அப்பாவின் கட்டளைப் படி நடக்கவேண்டியிருக்கிறது.
ஆகவே அடுத்த பிறவி என்று ஒன்றிருந்தால் அதில் மீண்டும் ஒன்றுசேர்வோம்.
என்றும் உங்கள் மங்காத நினைவுகளுடன்
அஞ்சலி.
மடலைப் படித்த குமார் இரண்டு நாட்கள் தூக்கம் இல்லாமல் இருந்தான். பின்னர் சிவாவின் ஆலோசனைகளாலும் வழிகாட்டல்களாலும் அரட்டை அறைகள் பக்கம் போவதில்லை.
இறுதி ஆண்டுப் பரீட்சையில் நல்ல புள்ளிகள் பெற்று அவுஸ்திரேலியாவுக்கு புலமைப் பரிசில் கிடைத்துச் சென்றுவிட்டான்.
******************************************************
அவன் அஞ்சலியை மறந்துவிட்டான் Chat மறந்துவிட்டான் என்பதை அறிந்து சில நாட்களில் அதே வெள்ளவத்தை விவேகானந்தா வீதி கடற்கரையில் இன்னொரு கல்லில் நானும் சிவாவும்
"நீ கெட்டிகாரன் தான்டா. ஒருமாதிரி குமாரை சட் போதையில் இருந்து காப்பாத்தியாச்சு, கையைக் கொடடா" என என்னை கை கொடுத்து பாராட்டினான்.
"மச்சான் அவனுக்கு கடைசிவரை உண்மை தெரியக்கூடாது, தெரிந்தால் எங்களைக் கொன்றே போட்டுவிடுவான்" நான்.
"அந்த உண்மை எங்களுடன் மட்டுமே இருக்கட்டும்" சிவா.
அன்றைய ஞாயிறு ஏனோ எங்களுக்கு சந்தோசமாக இருந்தது.
******************************************************
சில நாட்களுக்கு முன்னர் ஸ்கைப்பில் என்னுடன் குமார் பேசினான்.
"மச்சான் எப்படியடா இருக்கிறாய்? " குமார்
"நான் ஓகே சிட்னி எல்லாம் எப்படி?, எப்ப ஊருக்கு வாறாய்?"
என எங்கள் கதை தொடர்ந்தது. கடைசியாக குமார் ஒரு கேள்வி கேட்டான்.
"மச்சான் அஞ்சலி எப்படி இருக்கிறாள்?"
"அவள் கனடாவிலை நல்லா இருக்கிறாள் 2 பிள்ளைகள்" என்றேன் அஞ்சலியாக அவனுடன் Chat பண்ணிய நான்.
பின்குறிப்பு: என்னுடைய பதிவுத் தலைப்புகள் கவர்ச்சியாக இல்லையென அடிக்கடி குறைபடும் நண்பர்களுக்காகவே இந்தத் தலைப்பு. இந்தக் கதை யாவும் கற்பனையல்ல.
எழுதியது வந்தியத்தேவன் at 22 கருத்துக் கூறியவர்கள்
