Showing posts with label தமிழிசை. Show all posts
Showing posts with label தமிழிசை. Show all posts

கர்னாடக சங்கீதத்தில் புறக்கணிக்கப்படும் தமிழிசை

விஜய் தொலைக்காட்சியின் "தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு சுட்டிகளில்" சிறுமி ஒருவர் கடந்தவாரம் கர்நாடக சங்கீதத்தில் தமிழ் ஏன் புறக்கணிக்கப்படுகின்றது என மிகவும் காட்டமாகவும் காத்திரமாகவும் உறையாற்றினார்.

எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்த தமிழிசையும் தமிழ்ப் பண்களும் இன்றைக்கு முன்னூறு ஆண்டுகளே ஆன கர்நாடக சங்கீதத்தால் மெல்ல மெல்ல திட்டமிட்டபடி அழிக்கப்படுகின்றது.



தமிழ்ப் பண்களான கொல்லி, புறநீர்மை, நாட்டை, குறிஞ்சி என அழகிய தமிழ்ப் பெயர்கள் இன்றைக்கோ வாயினுள் நுழையாத வடமொழிப் பெயர்களான மாயாமாளவகௌளை, ஹரிகாம்போஜி, ஷட்விதமார்க்கிணி, கரகரப்ரியா என அழைக்கின்றார்கள்.

சிலப்பதிகாரம், பரிபாடல், தேவார திருமுறைகள், பாரதியார் பாடல், பாரதிதாசன் பாடல்கள் என பல்லாயிரக்கணக்கான பாடல்கள் தமிழில் இருக்க ஏன் மொழி புரியாத தெலுங்குக் கீர்த்தனைகளை பாடுகின்றார்கள். தமிழ்ப் பாடல்களைத் துக்கடா என அழைத்து கடைசியில் ஒரு நிமிடங்கள் மட்டும் பாடுவார்கள். எம் வீட்டில் அதிகமான உணவுகளை வைத்துக்கொண்டு ஏன் பிச்சை எடுக்கவேண்டும்?

பல சங்கீதமேடைகளில் தெலுங்குகீர்த்தனைகளைத்தவிர வேறு ஏதும் பாடுவதில்லை. அப்படிப் பாடினாலும் அவை துக்கடாக்களாத்தன் இருக்குமே தவிர ஒரு முழுமையான கீர்த்தனையாய் இராது. இந்த இசை ஜாம்பவாங்கள் அனைவரும் ஏதோ கர்னாடக சங்கீதம் தெலுங்கில் இருந்து பிறந்தது என எண்ணிக்கொண்டிரிக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல தமிழில் தான் அது முதலில் உருவானது பின்னர் கால ஓட்டத்தில் அது தெலுங்கால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. சிலர் சொல்லுகிறார்கள் தமிழில் போதிய பாடல்கள் இல்லையென்று, ஐயா மேதாவிகளே நமது முண்டாசுக் கவிஞனின் பாடல்களே பல தலைமுறைக்கு போதும் அதனை விட நமது தேவாரதிருவாசகங்கள் பல நூறு தலைமுறைகளுக்கு போதும் பின் ஏன் நீங்கள் தமிழில் பாடாமல் தெரியாத மொழியில் பாடுகிறீர்கள்.

எனக்கு தெரிந்து ஒருமுறை கொழும்பில் சீர்காழி சிவசிதம்பரமும் பாரதியாரின் கொள்ளுப்பேரன் ராஜ்குமார் பாரதியும் மட்டும் முழுக்க முழுக்க தமிழில் பாடி சபையைமெய்மறக்கசெய்தார்கள்.கம்பன் விழா இசை வேள்வியில் திரு,ராஜ்குமார் பாரதி பாடினார்.

சீர்காழி சிவசிதம்பரம் வேறு ஒரு நிகழ்ச்சியில் பாடினார். இதுவரை கம்பன் கழகம்( கன்னித் தமிழ் வளர்ப்பவர்கள்) ஒரு இசை வேள்விக்கேணும் சீர்காழி சிவசிதம்பரத்தை அழைக்கவில்லை. ராஜ்குமார் பார‌தியும் ஒரே ஒரு தடவை மட்டும்தான்.

ஒரு முறை கம்பன் கழக இசைவேள்வியில் பிரபல பாடகி பம்பாய் ஜெயஸ்ரீ ஒரே இறுதியில் ஒரே ஒரு தமிழ்ப் பாடல் மட்டும் பாடி ஏனையவற்றை தெலுங்கில் பாடிச் சாதனை செய்தார்.

தமிழக இசைக் கலைஞர்கள் தான் தெலுங்கிற்க்கு மகுடம் சூட்டுகின்றார்கள் என்றால் நம்மவர்களும் தெலுங்கு மோகத்தில் மயங்கிவிட்டார்கள். அவர்களிடம் தமிழ்ப் பாடல் ஏன் பாடுவதில்லை எனக் கேட்டால் தமிழ்ப் பாடல்கள் பாடினால் தங்கள் திறமை தெரியவராதாம்!!

இசை நிகழ்ச்சிகளை நடத்தும் அமைப்புகளின் பெயர்கள் கூட தமிழில் காண்பது அரிது. இசைக்கு மொழி இல்லை தான் ஆனால் தமிழர்களிடம் தமிழ்ப் பாடல்கள் அதிலும் பல நூற்றாண்டு தொன்மையான செம்மொழித் தமிழில் எத்தனையோ பாடல்கள் இருக்கும்போது அந்நிய மொழியில் ஏன் பாடவேண்டும்?

எமது முத்தமிழை ஒழிக்க பலர் பல்வேறு வடிவங்களில் அலைகிறார்கள் என்னை பொறுத்தவரை இவர்களிடமும் இருந்து எம் மொழியை காக்கவேண்டிய அவசியம் தேவை. சும்மா சினிமா படங்களின் தலைப்பை மாத்தசொல்லி போராடும் தமிழ்குடிதாங்கிகள் இதைப்பற்றி கவலைப்பட்டதாய் தெரியவில்லை. சில வேளை இது மேல்தட்டு மேல்ஜாதி மக்களின் துறை என நினைத்து சும்மா இருக்கிறார்களா?

இது பற்றியும் சற்று சிந்திபோம்.