அரசியல்
இலங்கை அரசியல் ஐநாவின் அறிக்கையுடன் ஒருபக்கம் போக இன்னொரு பக்கமோ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சா கெளத புத்தரின் வம்சாவழி என பிரபல சிங்களக் கலைஞர் ஜெக்சன் அண்டனி தெரிவித்த கருத்துக்கு சில சிங்கள ஆங்கில இணைய தளங்களில் பலத்த கண்டனம் எழுந்திருக்கின்றது.
ஜெக்சன் அண்டனியின் கருத்தின் பின்னால் பலமான அரசியல்தலைகள் இருப்பதுடன் இது ஏதோ ஒருவகையான பிரச்சார உத்தியோ என்ற சந்தேகமும் ஏனோ ஏற்படுகின்றது. பெரிய இடத்து விவகாரம் நமக்கு வேண்டாமே.
இந்தியாவில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மீண்டும் ஜெ தன் சுயரூபத்தைக் காட்டத் தொடங்கிவிட்டார். பேயாட்சி முடிந்து இப்போ பிசாசு ஆட்சி தொடங்கியுள்ளது தமிழக மக்கள் தான் பாவம். எந்தக் குற்றமும் செய்யாத அப்பாவி கனிமொழி என்ற ஒரு குழந்தையின் தாய் மேல் சிபிஐ பொய் வழக்குப்போட்டு திகாரில் தள்ளிவிட்டது. கடந்தவருடம் செம்மொழியான தமிழ்மொழியாம் என கருணாநிதியின் புகழ்பரப்பிய மாநாட்டின் சுவடுகள் மறையும் முன்னர் கம்பிக்கு பின்னால் கனிமொழியாம் என சாதாரண பொதுமக்கள் பாடத்தொடங்கிவிட்டார்கள்.
கருணாநிதி வினைத்த வினைகளை அறுவடை செய்யத்தொடங்கிவிட்டார். வடிவேலுக்கு வடை மட்டுமல்ல வாய்ப்பும் போச்சே. சன் தொலைக்காட்சி ஜெயாபுகழைக் கொஞ்சம் கொஞ்சமாக பாடத்தொடங்குகின்றது. இனிமேல் கண்களும் பணிக்காது இதயமும் இனிக்காது.
விளையாட்டு
ஐபிஎல் திருவிழா முடிவடைந்துவிட்டது. சென்னை சூப்பர் சிங்கங்கள் மீண்டும் கோப்பையை வென்றுவிட்டார்கள். தோணிக்கு இனி வெல்லுவதற்க்கு எந்தக் கோப்பைகளும் இல்லை, ராசிக்கார கப்டன்.
நேற்று முந்தினம் வேல்ஸ் தலைநகர் கார்டிவ்வில் நடந்த இங்கிலாந்து இலங்கை அணிகளுக்கிடையான டெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகனாக மழை தெரிவாகும் எனப் பார்த்தால், தில்ஷானின் புதிய வீரர்களோ இரண்டாவது இனிங்கிஸில் போனமச்சான் திரும்பிவந்தான் என்றதுபோல அணி நடை பயின்றார்கள். இங்கிலாந்துப் பத்திரிகைகளே இந்த வெற்றியை எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் இங்கிலாந்துப் பத்திரிகைகள் பெரும்பாலும் தங்கள் அணியை மிக உயரத்தில் வைத்து அல்லது மிகவும் கீழே வைத்தே எழுதுவார்கள் ஒரு நாளும் நடுநிலையாக(மன்னிக்கவும் நடுநிலை என்பது பதிவுலகத்தில் கெட்டவார்த்தை)எழுதுவதில்லை.
அடுத்த போட்டி கிரிக்கெட்டின் மெக்காவான லோர்ட்ஸில் நடக்கவிருக்கின்றது. காலம் நேரம் கைகூடினால் மெக்காவைத் தரிசிக்கின்ற எண்ணமிருக்கின்றது,
சினிமா
அண்மைக்காலத்தில் பெரிதாக எந்தப் படமும் பார்க்கவில்லை, கோ மட்டும் ஓரளவு பிடித்திருக்கின்றது ஆனாலும் அயனில் இருந்த பரபரப்பான திரைக்கதை கோ ல் மிஸ்சிங். அஜ்மல் பாத்திரம் மூலம் படித்த இளைஞர் தலைவராக அரசியலுக்கு வந்தால் நக்சல்போல் தான் இருப்பார் என்ற நச்சுக் கருத்தை ஏன் கே,வி.ஆனந்த் விதைத்தார் என்ற மர்மம் புரியவில்லை. சாதாரணமாக பார்த்தால் நல்ல படம் வினவுக் கண்ணுடன் பார்த்தால் பல இடங்களில் முதலாளித்துவம் மின்னுகின்றது. பியா போல் ஒரு பெண் எதாவது ஊடகத்தில் வேலை செய்தால் நான் அங்கே ஆணி பிடுங்க தயார் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.
சின்னத்திரை
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் இம்முறை உலகளவில் என கனடா, சிங்கப்பூர், நோர்வே என சில நாடுகளில் இருந்து பங்குபெறும் சில வெளிநாட்டவர்களுடன் நடக்கின்றது. இலங்கை, இங்கிலாந்து, ஜேர்மனி, பிரான்ஸ், ஆஸீ எல்லாம் உலகத்தில் தமிழர்கள் வாழாத நாடுகளா? திவ்யா என்ற ஒரே ஒரு பாடல் பாடிய பிரபல பாடகி தமிழைக் கொல்வதுடம் மலையாளிகள் உன்னியுடனும் சுஜாதாவுடனும் மலையாளத்தில் கொஞ்சுவது ஏதோ கேரளா சேனல்கள் பார்ப்பது போல் இருக்கின்றது. சிவகார்த்திகேயன் சில நேரங்களில் தொகுத்து வழங்குவது அருமையாக இருக்கின்றது. அதிலும் சுஜாதா பேசும் தமிழுக்கு ஒரு எபிசோட் தேவை, எத்தனை நல்ல தமிழ்ப் பாடகர்கள் பாடகிகள் இருக்கும் போது தமிழ் ஒழுங்காக கதைக்கத் தெரியாத சுஜாதாவை வைத்திருப்பதன் மர்மம் என்னவோ?
இந்தவாரம் விஜய் தொலைக்காட்சியின் ஆஸ்தான் அறிவிப்பாளர் நீயா நானா புகழ் கோபிநாத் நிகழ்ச்சி தொகுத்து வழங்குகின்றார், வழக்கம் போல கோபி கலக்கல். நடுவராக நித்யஸ்ரீ கலந்துகொள்கின்றார் நித்யஸ்ரீயின் தமிழ் கேட்கும் போது இன்பத்தேன் பாய்கின்றது.
வலையுலகம்
சில காலமாக வலையுலகத்தில் விகடன், குமுதம் மலர்களில் வரும் கட்டுரைகளைச் சிலர் அப்படியே எடுத்து ஏதோ தாங்கள் எழுதியதுபோல் எழுதுவது வலைப்பதிவர்களுக்கு ஏற்படும் அவமானமாகவே நான் கருதுகின்றேன். உண்மைத் தமிழன் போல் சிலர் மட்டும் அடைப்புக்குள் அந்தப் பத்திரிகைகளுக்கு நன்றி சொல்கின்றார்கள். இதைவிட கேலிக்குரியது என்னவென்றால் அந்தப் பதிவை கொப்பி பேஸ்ட் செய்த பதிவரின் அபிமானிகள் அந்தக் கட்டுரையே அவரே எழுதியதுபோல் அவரைப் புகழச் செய்வதைப் பார்க்கும் போது பதிவை வாசிக்காமல் டெம்ளேட் புகழுரைபோல் தெரிகின்றது. ஆரோக்கியமாகச் செல்லும் வலையுலகத்தில் வேண்டாமே இந்த ஈயடிச்சான் காப்பி பதிவுகள். சிலவேளை இவைதான் கிரியேட்டிவ்வான பதிவுகளோ தெரியவில்லை.
என் உளறல்
மீண்டும் நீண்ட நாட்களின் பின்னர் வலையுலகம், ஆனாலும் இந்த நிலை தொடருமா என்பது சந்தேகமே. ஆனாலும் இடைக்கிடை வலையுலகத்தை எட்டிப் பார்பேன். அதாவது இம்சை தொடரும். எத்தனையோ விடயங்கள் எழுதமுயற்சித்து இடைவெளியில் நிற்கின்றது.
படித்ததில் சிரித்தது
திமுகவுடன் கூட்டணி இல்லையென்றால் காங்கிரஸ் 234 தொகுதிகளிலும் வென்றிருக்கும் யுவராசா தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர்.
படித்ததில் ரசித்தது.
கடவுள் மனிதர்களை படைத்தான், மனிதன் இசையைப் படைத்தான், இசை இளையராஜாவைப் படித்தது (யூடுயூப்பில் யாரோ ஒரு இசைஞானி பக்தன்)
பார்த்ததில் ரசித்தது
இதுவும் இசைஞானியின் பாடல் தான். ரஜனியின் ஸ்டைலும் பூர்ணிமா ஜெயராம் அலைஸ் பாக்கியராஜின் நடனமும் கலக்கல். பூர்ணிமா தனது மகள் சரண்யாவை விட அழகாகவே இருக்கின்றார். அதேபோல் தான் ராதாவின் மகள் கார்த்திகாவும்.
ஹாட் அண்ட் சவர் சூப் 01-06-2011
எழுதியது வந்தியத்தேவன் at 12 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் அரசியல், சினிமா, சூப், விளையாட்டு
ஹாட் அண்ட் சவர் சூப் 16-02-2011
அரசியல்
உலகம்
சில நாட்களாக எகிப்தில் நடைபெற்ற மக்கள் புரட்சியின் விளைவாக ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் பதவியில் இருந்து விலகி எகிப்தில் இன்னொரு இடத்தில் தலைமறைவாக இருக்கின்றார். துனிஷியா, சூடான் வரிசையில் எகிப்தும் சர்வாதிகார ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றுள்ளது.
முபராக் தனது அதிகாரங்களை எல்லாம் இராணுவ கவுன்ச்லிடம் கொடுத்துவிட்டு பதவி விலகியுள்ள நிலையில் தற்போது இராணுவத்தில் உள்ள இரண்டு அதிகாரிகளிடம் பதவிக்கான இழுபறி நடைபெறுவதாகவும் செய்திகள் கூறுகின்றன. அதே நேரம் இராணுவ கவுன்சில் விரைவில் அரசின் யாப்பை மாற்றவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
சமூக வலைத்தளங்களான ட்விட்டர், பேஸ்புக் ஆகியமூலம் எகிப்திய இளைஞர்கள் இந்தப் புரட்சியை உலகம் எங்கும் பரப்பியமை குறிப்பிடத்தக்கது. இதேபோல் புரட்சிகள் நமது தென்னாசிய நாடுகளில் எப்ப வெடிக்குமோ? அல்லது அதற்கான சாத்தியம் இருக்கின்றதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
இந்தியா
இன்று இலங்கைத் தூதரகத்தின் முன்னால் திமுகவினர் மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்யப்போகின்றார்களாம். மத்தியிலும் மாநிலத்திலும் இவர்களினது ஆட்சிதான் நடக்கின்றது, இந்த நிலையில் இவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவது தேர்தலுக்கான கண்துடைப்பே ஒழிய வேறு ஒன்றும் இல்லை. தனது குடும்ப உறுப்பினர்களின் அமைச்சு பதவிகளுக்காகவும் தேர்தல் கூட்டணிக்காகவும் டெல்லிக்கு பறக்கும் தாத்தா, வழக்கம் போல் பதவி விலகல், உண்ணாவிரதம் போன்ற ஓரங்க நாடகங்களை நிகழ்த்தியிருக்கலாமே? ஓஓஓ அப்படிச் செய்தால் ஆ.ராசாவுடன் அவரும் சிறைக்குள் போகவேண்டுமே. ஸ்பெக்ட்ரம் என்ற மூக்கணாங்கயிறு இப்போ சோனியாவின் கையில் இருப்பதால் தாத்தாவும் அவரது இளவரசியும் டெல்லி சொல்ப்படிதான் நடக்கவேண்டும்.
எகிப்துபோல் தமிழ்நாட்டு இளைஞர்களும் சில நாட்களாக இணையத்தளங்களில் அரசுக்கு எதிராக குரல் எழுப்பத் தொடங்கியுள்ளார்கள். இந்த நிலை தேர்தல் வரை நீடித்து அரசைக் கவிழ்க்குமா? இல்லை வழக்கம்போல் திமுக பணபலத்தால் மீண்டும் ஆட்சியைப் பிடிக்குமா?
பயணமும் யுத்தம் செய்யும்
பயணம் பிரகாஷ்ராஜின் தயாரிப்பில் ராதாமோகனின் இயக்கத்தில் வெளியான ஒரு த்ரில்லர். விமானக் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். பணயக் கைதிகளாக இருக்கும் பொதுமக்களை எப்படி சிறப்பு அதிரடிப்படையினர் அரசியல்வாதிகளின் சுயநல சிந்தனைகள், மீடியாக்களின் டீஆர்பி ரேட்டிங்குகள் போன்ற இடர்களில் இருந்து மீட்பதை இரண்டரை மணி நேர கடுகதி வேக திரைக்கதையில் ராதாமோகன் சிறப்பாகாவே சொல்லியிருக்கின்றார். எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்பு படத்தின் சிறப்பு. அதேபோல் நீண்ட நாட்களுக்குப் பின்னர் நாகர்ஜீனா தமிழ்ப்படத்தில், இதயத்தை திருடாதேயில் பார்த்ததுபோலவே இப்பவும் இளமையாகவே இருக்கின்றார். விமானப் பணிப்பெண்ணாக வரும் நடிகையும் இன்னொரு நடிகையும் அழகாகத் தான் இருக்கின்றார்கள்.
பாலம் என்றொரு படம் முரளி நடித்து பல காலத்துக்கு முன்னர் வெளியானது, அந்தப் படத்திற்க்குப் பின்னர் வெளி வரும் கடத்தல் சம்பந்தப்பட்ட படம் இதுவாகத்தான் இருக்கவேண்டும். படத்தின் சிறப்பம்சம் பாடல்களே இல்லை.
யுத்தம் செய் சேரன் கதை நாயகனாக நடித்து மிஷ்கினின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இன்னொரு த்ரில்லர். படத்தின் வேகம் தான் பலவீனமே, மிகவும் ஆமை வேகத்தில் மெஹா சீரியல் பார்த்ததுபோல் போவது சினத்தை தருகின்றது. எடிட்டர் சில இடங்களில் கத்தரி போட்டு படத்தை அஞ்சாதே போல வேகமாக ஆக்கி இருந்தால் நிச்சயம் இந்தப் படம் இன்னமும் பேசப்பட்டிருக்கும்.
அந்தக் குத்துப்பாடல் இடைச் செருகலாக இருந்தாலும் அமீரின் நடனமும் சாரு நிவேதிதாவின் ஆர்மோனியா இசைப்பும் பார்ப்பவர்களைப் புல்லரிக்க வைக்கும். இனிமேல் சாரு இளையராஜாவைப் பற்றி தப்பாக எழுதினாலும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் ஏனென்றால் அவரின் விரல்கள் ஒரு தேர்ந்த இசைமேதையின் விரல்கள் போல அந்த ஆர்மோனியத்தில் உலாவருவது அவரின் இசைத் திறனை நிருபீக்கின்றது.
பொன்னியின் செல்வன்
கல்கியின் காலத்தால் அழிக்கமுடியாத வரலாற்றுச் சரித்திரம் இது. அந்தநாளில் இருந்து பலர் பொன்னியின் செல்வனை திரைப்படமாக்க முயன்றாலும் ஏனோ அந்த முயற்சிகள் கைகூடவில்லை. சிவாஜியின் ராஜராஜசோழன் படம் மட்டும் கொஞ்சம் பொன்னியின் செல்வனைச் சார்ந்து வெளியானது.லட்சுமி குந்தவையாக நடித்தது பொருத்தமேயில்லை.
தற்போது மணிரத்தினம் இதனைத் திரைப்படமாக்க முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகுகின்றன. ஏற்கனவே மணிரத்தினம் இருவர், கன்னத்தில் முத்தமிட்டால், தற்போது இராவணா என சில உண்மைச் சம்பவங்களை நன்றாக திரித்து சொதப்பியது உலகறிந்தது. அதேபோல் கல்கியினால் அழியா வரம் பெற்ற அருண்மொழிவர்மன், வந்திய்த்தேவன், குந்தவை, வானதி,நந்தினி, பழுவேட்டரையர்களை மணிரத்தினம் நிச்சயம் கேவலப்படுத்திவிடுவார். அதன் ஒருகட்டமாகத் தான் வந்தியத்தேவன் பாத்திரத்தில் விஜய் நடிக்கப்போவதாக வதந்தி அடிபடுகின்றது.
மணிரத்தினம் இயக்கம் என்றவுடனே வசனம் சுஹாசினி எழுதப்போவதை நினைக்க இப்பவே கண்ணைக் கட்டுது. கல்கியின் குடுப்பத்தவர்களோ அல்லது தமிழக முதல்வரோ பொன்னியின் செல்வனை மணிரத்தினம் படமாக்ககூடாது என தடை உத்தரவு பிறப்பிக்கவேண்டும்.
பொன்னியின் செல்வனைத் திரைப்படமாக்கினால் ரஜனி அல்லது கமல் வந்தியத்தேவனாகவும் அருண்மொழிவர்மனாகவும் நடிப்பதே பொருத்தம். பழுவேட்டரையர்களாக நாசர், பிரகாஷ்ராஜும் பொருத்தமாக இருக்கும். குந்தவை ,வானதி, பூங்குழலி, நந்தினி பாத்திரங்களுக்கு தற்போதைய எந்த நடிகையும் பொருத்தமில்லை.
கிரிக்கெட்
உலகக்கோப்பைக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளன. பயிற்சி ஆட்டங்களில் நேற்றைய ஆட்டத்தில் அயர்லாந்து சிம்பாவேயையும் நெதர்லாந்து கென்யாவையும் வீழ்த்து கொஞ்சம் அதிர்ச்சி கொடுத்தன. ஏனைய போட்டிகளில் எதிர்பார்த்த முடிவுகளே வந்தன. ஆஸியின் ஸ்திரமில்லாத பேட்டிங் அவர்கள் கொஞ்சம் அண்டர்பிளே செய்வதுபோல் தெரிகின்றது, இந்தியா தென்னாபிரிக்கா இரண்டு அணிகளுடனும் ஆஸி 225க்கு குறைவான ஓட்டங்களே எடுத்தது. இலங்கை மேற்கிந்தியாவுடன் கொஞ்சம் கஸ்டப்பட்டு வென்றதுபோல் தெரிகின்றது, இனி வரும் நாட்களில் வேகங்களும் சுழல்களும் சிக்ஸர்களும் சின்னச் சண்டைகள் என உபகண்டம் அதிரப்போகின்றது.
ஒரு கண்டனம்
ஐரோப்பிய நாடுகளில் வெளிவரும் ஒரு தமிழ்ப் பத்திரிகை பெரும்பாலும் வலைப்பதிவர்களின் ஆக்கங்கள் அவர்களின் பெயர்களுடன் வெளிவருகின்றது, ஆனாலும் ஏனோ அவர்களின் வலைப்பக்கத்தின் உரலை இவர்கள் போடுவதில்லை. தயவு செய்து இனியாவது இப்படிச் செய்யாது அவர்களின் சுட்டிகளையும் தந்தால் வாசிப்பவர்கள் அந்த வலைகளையும் சென்றுபார்க்கலாம்.
வாழ்த்து
எங்கள் நட்பு வட்டாரத்தின் இளையவன், உள்ளூர் ஜேம்ஸ் அண்டர்சன், எம்மாவின் அன்புக் காதலன், போட்டோ கமெண்ட் புலி, என்றும் நித்தியானந்தம் காணும் எங்களின் திருமலை குஞ்சு பவன் எனப்படும் பவானந்தன் இன்று தனது 21ஆவது பிறந்தநாளை வெகுவிமரிசையாக கொண்டாடுகின்றார். இவரை அனைத்து வலையுலக நண்பர்கள் சார்பிலும் வாழ்த்துகின்றேன். 
ரசித்தது
கல்யாண நாள் அன்னைக்குதான் மாப்பிள்ளை முதன் முதலா
தன்னை சுத்தி செம சூப்பர் ஃபிகருங்களா பார்ப்பான், பார்த்து மனசுக்குள்ள கேப்பான்....
இவ்வளவு நாளா எங்கேடி போயிருந்தீங்க...
சுஜீவன் இராஜேந்திரம் (பேஸ்புக்கில்)
பவனுக்காக
எழுதியது வந்தியத்தேவன் at 13 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் அரசியல், சினிமா, சூப், வாழ்த்து, விளையாட்டு
ஹாட் அண்ட் சவர் சூப் 26-01-2011
அரசியல்
இலங்கை
இலங்கை அதிபர் மஹிந்தராஜபக்சேயின் அமெரிக்க விஜயம் பலரிடம் பலவிதமான சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது. ஒரு சாரார் அவர் தனது தனிப்பட்ட சொந்தப் பயணமாகச் சென்றிருக்கின்றார் எனவும் இன்னொரு சாராரோ அவர் யாழில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்கச் சென்றபோது அவரின் தலைப்பாகை பொங்கல் பானைக்குள் விழுந்தது அபசகுனம் என்பதால் சோதிடர்களின் ஆலோசனைப் படி சில நாட்கள் சொந்த நாட்டில் நிற்ககூடாது என்ற ஆலோசனையின் பெயரில் சில நாட்கள் அமெரிக்காவில் நிற்பதாகவும் இன்னொரு பக்கம் அமெரிக்காவின் வற்புறுத்தலுக்கு அமைய யுத்தகுற்றங்களை விசாரிக்க அவர் சென்றதாகவும் கூறுகின்றனர். எது எப்படியோ இலங்கை சுதந்திரதினமான பெப்ரவரி 4ந்திகதி அவர் இலங்கைக்கு வந்து ஆற்றும் உரையில் தான் உண்மைகள் தெரியவரலாம் அதாவது அவரின் அமெரிக்க விஜய உண்மைகள்.
இந்தியா
தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது மானாட மயிலாட போல வாரம் தோறும் நடக்கின்றது. கருணாநிதியும் தன்னுடைய டெம்லேட் கடிதத்தை வழக்கம்போல் மன்மோகனுக்கு அனுப்பிவிடுவார். தமிழக மக்களும் இதனைவிட தலையாய விடயங்களான இம்முறை எந்தக் கட்சி என்ன இலவசம் தரும், ஸ்பெக்ட்ரத்தில் அடித்த கோடிகளில் எமக்கு தேர்தல் பணமாக எவ்வளவு தருவார்கள் போன்றவற்றை மட்டும் சிந்திப்பார்கள். ஒரு சில வலைப்பதிவர்கள் மட்டும் ஆவேசமாக பதிவு எழுதுவார்கள் ஆனாலும் தேர்தல் வந்தால் கருணாநிதிக்கு ஓட்டுப்போடுவார்கள் காரணம் கேட்டால் ஜெயலலிதாவைவிட கருணாநிதி ஊழல் செய்தது குறைவு எனச் சொல்வார்கள். அரசியல்வாதிகளைச் சொல்லிக் குற்றமில்லை, மக்கள் மாக்காளக இருக்கும் வரை அவர்கள் தங்கள் குடும்ப சுயநல அரசியலை நடத்தியே தீருவார்கள்.
சினிமா
மீண்டும் ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் பெயர் 2010 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதுகள் பரிந்துரைகளில் வந்துள்ளது. 127 Hours என்ற ஆங்கிலப்படத்தின் பின்னணி இசைக்கும் பாடலுக்கும் இம்முறை ஏ.ஆர். ரகுமானின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இம்முறையும் சென்ற முறைபோல் இசைப்புயல் தன்னுடைய இரு கைகளிலும் விருதை உயர்த்திப்பிடிப்பாரா இறைவனுக்குத் தான் தெரியும்.
பாடும்நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு இந்திய அரசின் பத்மபூசண் விருது இம்முறை கிடைத்திருக்கின்றது, ஏற்கனவே அவருக்கு பத்மஸ்ரீ கொடுத்து கெளரவித்த இந்திய அரசு இம்முறை பத்மபூசணையும் அவரது மகுடத்தில் இட்டிருக்கின்றது. இவருடன் நடிகர்கள் சசி கபூர் வகீதா ரகுமான் இருவரும் திரைத்துறையில் பத்மபூசண் விருதுபெறுகின்றார்கள். கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ் லக்ஸ்மன் நடிகைகள் தபு, கஜோல், நடிகர் இர்பான்கான், பாடகி உஷா உதூப் ஆகியோர் பத்மஸ்ரீ விருதுகள் பெறுகின்றார்கள்.
சிறுத்தை
சிறுத்தை படத்தை பார்க்க நேரம் கிடைத்தது. தனிப்பட்ட எல்லாம் விமர்சனம் எழுதனேரமில்லை ஆக்வே ஒரு சின்ன விமர்சனம். படம் பார்க்கின்றவர்கள் காதுகளில் மட்டுமல்ல உடல் முழுக்க பூப்பூவாக வைக்கின்றார்கள். தனிமனிதனாக சகல தாதாக்களையும் கார்த்தி ஒருவரே நின்று அடித்துதுவைக்கின்றார். கார்த்தி சந்தாணம் நகைச்சுவைகள் படத்தின் பலம், வித்தியாசாகர் இசையில் பாடல்கள் பரவாயில்லை. போலிஸ் வேடம் கார்த்திக்கும் பொருந்துகின்றது. தமன்னாவிற்க்காக படம் பல தடவை பார்க்கலாம். ஜிந்தக்கா ஜீந்தாக்கா. இதுபோல் ஒரு கதையுடன் அல்லது சில காட்சிகளுடன் விஜயகாந்த் படமோ அர்ஜூன் படமோ வந்ததாக ஞாபகம், கமல் படங்களை மட்டும் பிறமொழிக் காப்பி என விழித்திருந்து பார்க்கும் அறிவுஜீவிகளின் கண்ணில் இந்தப் படங்கள் படவே படாது. மொத்தத்தில் சிறுத்தை நல்லதொரு பொழுதுபோக்குப் படம்.
தமிழக அரசின் 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், கோலங்கள் மற்றும் ஆனந்தம் ஆகியவை சிறந்த நெடுந்தொடராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இரண்டும் கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேல் நடந்தது என நினைக்கின்றேன். கோலங்களின் போது தேவயாணிக்கு இரண்டுதடவை குழந்தையும் பிறந்தது குறிப்பிடத்தக்கது. ராதிகாவுக்கும் ஏதோ ஒரு விருது கிடைத்திருக்கின்றது, அனைத்துவிருதுகளும் சன், கலைஞர் தொலைக்காட்சி தொடர்களுக்கும் மட்டும் கிடைத்திருக்கின்றன. தமிழ்நாட்டில் இருந்து தானே விஜய், ஜெயா, மக்கள், தமிழன், மெஹா, வசந்த், கேப்டன், பொதிகை போன்ற தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பாகின்றன. இல்லை சின்னத்திரை என்றாலே அரச குடும்பத்தினருக்கு மட்டும் சொந்தமானதா?
விளையாட்டு
தென்னாபிரிக்காவில் நடந்த ஒருநாள் தொடரை இந்தியா 3க்கு 2 என்ற கணக்கில் தோற்றுவிட்டது. உலகக்கோப்பைகளுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இந்திய கேப்டன் டோணி உட்பட யுவராஜ் சிங், ரெய்னா, போன்றவர்களின் ஃபார்ம் கேள்விக்குறியாகி நிற்கின்றது. அதிலும் அண்மைக்காலமாக டோணி சோபிக்கவேயில்லை. யூசுப் பதான் என்ற தனிமனிதனையும் சச்சின் என்ற இமயத்தையும் மட்டும் நம்பி இந்திய அணி உலகக்கோப்பையில் களமிறங்கினால் 96ல் ஈடன்கார்டனில் நிகழ்ந்த நிகழ்ச்சி ரிப்பீட்டாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மறுபக்கம் ஆஷாஸை வென்ற இங்கிலாந்து தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் ஆஸியிடம் தடுமாறுகின்றது. இன்றைய போட்டியிலும் ஆஸி வென்றால் தொடர் அவர்களுக்குத் தான்.
சந்தேகம்"நடுநிலையாளர்கள் எல்லோரும் நல்லவர்கள் என சொல்ல முடிவதில்லை..#பட்டறிவு,"
என லோஷன் தனது பேஸ்புக்கில் ஒரு மெசேஜ் இட்டிருந்தார். அதற்க்கு பலரும் பலவிதமான கருத்துக்கள் சொன்னாலும் மருதமூரான் என்கின்ற புருசோத்தமன் தங்கமயில் "உண்மை. நடுநிலையாளர்கள் நல்லவர்களாக இருக்கவேண்டிய அவசியமும் இல்லை. இதுவும் பட்டறிவு"
என ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டிருந்தார் அதற்க்கு என் பெயரை மையப்படுத்தி அண்ணன் கானாபிரபா "வந்தியைச் சொன்னாரோ இவர்? வந்தி தான் தமனாவும் அழகு அமலா பால் உம் அழகு என்று நடு நிலையாக இருக்கிறார்"
என்றார். அதற்க்கு என் பதில் "பக்கத்தில் ஐஸ்வர்யா ராய் இருந்தாலும் தமன்னாவின் இடுப்புத்தான் அழகு என்பேன் #நடுநிலை "
அது சரி உண்மையான நடுநிலை என்றால் என்ன?
ஒருமுறை மிஸ்டர் ஜீக்கு (மிஸ்டர் எக்ஸின் உரிமை ஆனந்தவிகடனுக்குத் தான்)இடுப்பு பிடித்துவிட்டது. அதனால் தன்னுடைய நண்பனை அழைத்து மருத்துவரிடம் செல்ல உதவி செய்யுமாறு கேட்டார். மிஸ்டர் ஜீயின் நண்பரோ இதற்கெல்லாம் மருத்துவர் தேவையில்லை ஹாஸ்பிட்டலில் புதிதாக இருக்கும் மிசினில் உன் சிறுநீரின் மாதிரியை செலுத்தினால் அந்த மிசின் உனக்கு ஆலோசனை சொல்லும் என்றார். உடனடியாக மிஸ்டர் ஜீயும் நண்பரும் ஹாஸ்பிட்டல் சென்று மிஸ்டர் ஜீயின் கொண்டுபோன சிறுநீரை அந்த மிசினில் அதற்குரிய குழாயினுள் செலுத்தினார்கள். ஒரு நிமிடத்தில் மிசின் தனது வாயிசில் "உனக்கு சாதாரண இடுப்பு நோ, சுடுநீர் ஒத்தடம் கொடுக்கவும்" என்றது.
அடுத்தநாள் அந்த மிசினைச் செக்பண்ண மிஸ்டர் ஜீ தன்னுடைய சிறுநீருடன் தனது வீட்டு நாயின் மலம், தனது மனைவியின் சிறுநீர், மகளின் உமிழ்நீர், மற்றும் தன்னுடைய வீட்டுக் கிணற்று நீர் என அனைத்தையும் கலந்து கொண்டுபோனார்.
கொண்டுபோன கலவையை அந்த மிசினில் செலுத்தியபோது மிசின் கூறியது "உன் வீட்டுக் கிணற்றில் சுண்ணாம்பின் அளவு கூடிவிட்டது, உன் நாய்க்கு ஒழுங்காக குளிக்கவார்க்கவும் அதற்க்கு தோல் வியாதி, உன் மகள் கஞ்சாவிற்க்கு அடிமையாகியுள்ளாள் உரிய நடவடிக்கை எடுக்கவும், உன் மனைவி கர்ப்பம் ஆனால் காரணம் நீ அல்ல, இனிமேல் என்னைப் பரிசோதிக்க முயன்றால் உன் மேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்".
பாடும்நிலா பத்மபூசண் எஸ்பிபிக்காக
சாகர சங்கமத்துக்காக இசைஞானி இளையராஜா இசையில் பத்மபூசணை எஸ்.பி.பிக்கு கிடைத்த இன்னொரு தேசிய விருதுப்பாடல். இசைஞானி, கலைஞானி, பாடுநிலா என எனக்குப் பிடித்தவர்கள் இருப்பதால் இந்தப் பாடலை பத்மபூசண் எஸ்.பி.பி க்கு சமர்ப்பிக்கின்றேன்.
எழுதியது வந்தியத்தேவன் at 12 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் அரசியல், சினிமா, சூப், விளையாட்டு
ஹாட் அண்ட் சவர் சூப் 12-01-2011
இலங்கை
கிழக்கு மாகாணம் வரலாறு காணாத மழையும் வெள்ளமுமாக கடந்த சிலநாட்களாக அல்லோல கல்லோலப்படுகின்றது. தொடர்ந்துபெய்துவரும் அடைமழையினால் வீடுகளும் வீதிகளும் வெள்ளத்தினால் மூடப்பட்டு மூன்று பேர் உயிரிழந்தும் பல லட்சம் மக்கள் தங்கள் வீடுவாசல்களை விட்டு பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்திருக்கின்றார்கள்.
அரச. அரசார்பற்ற நிறுவனங்கள் உடனடியாக நிவாரணப் பணிகளை தொடங்கியதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதே நேரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர கோரிக்கை விடுத்துள்ளார். இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன, மத, கட்சி பேதமின்றி உதவி வழங்குவது அனைவரின் தார்மீகக் கடமையாகும்.
இதேவேளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் ஆன உதவிகளை வழங்க இலங்கைப் பதிவர்கள் முன்வந்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. இதுபற்றிய அறிவித்தல் இலங்கைப் பதிவர்கள் குழுமத்தில் நிரூஜாவினால் வெளியிடப்பட்டுள்ளது. வலையுலகிற்க்கு அப்பால் பதிவர்கள் செய்யும் இந்த உதவிக்கு ஏனையவர்களினது ஒத்துழைப்பையும் நாடி நிற்கின்றார்கள்.
மேலதிக தகவல்களுக்கு நிரூசா, வதீஸ், சிதறல்கள் ரமேஸ், சந்ரு ஆகியோரையும் யாழ்ப்பாணத்தில் இருப்பவர்கள் கூல் போய் கிருத்திகன், மதிசுதா ஆகியோரையும் தொடர்புகொள்ளவும்.
இந்தியா
தமிழக அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. இதனால் ஆ,ராசாவின் ஊழல் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து மக்களும் இலவசங்களுக்காக தங்கள் உரிமையை விட்டுக்கொடுக்கவிருக்கின்றார்கள். சீமானால் ஆரம்பிக்கப்பட்ட நாம் தமிழர் இயக்கம் இம்முறையும் காங்கிரசை தோற்கடிப்பதே தமது நோக்கம் என ஆரம்பத்திலிருந்தே கூறியிருந்தாலும் சீமானின் விடுதலையும் அதன் பின்னரான சில நிகழ்வுகளுடம் சீமான் எண்ணைய் சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்த கதையாக ஜெயலலிதாவிடம் சரணடைந்துவிட்டார்.
ஈழத்தமிழர்களை அல்லது இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை இந்த தேர்தலினால் மட்டுமல்ல எந்த இந்தியத் தேர்தல்களினாலும் அவர்களுக்கு பிரயோசனமில்லை என்பது தெரிந்தவிடயம், ஆனாலுன் இந்த தேர்தலிலும் மீண்டும் ஈழம், ஈழத்தாய், 3 மணி நேர மனைவி, துணைவி சமேத உண்ணாவிரதம் போன்ற நாடகங்கள் பலரின் திரைக்கதை வசனத்தில் நடத்தப்படலாம்.
சீமான் கருணாநிதியை எதிர்க்கின்றேன் என ஜெயலலிதாவிடம் சோரம் போனது கண்டிக்கத்தக்கதே. எப்படி வைகோ தன்னைச் சிறைவைத்த ஜெயலலிதாவிடம் மண்டியிட்டாரோ அதேபோல் சீமானும் மண்டியிட்டுவிட்டார். கருணாநிதியின் ஈழவேசம் அண்மைக்காலத்தில் அம்பலத்துக்கு வந்தாலும் ஜெயலலிதாவின் ஈழஎதிர்ப்பு அவரின் கருவிலையே இருக்கின்றது(எந்தப் பார்ப்பனர் ஈழத்துக்கு ஆதரவு). தன்னைப் பெரியாரின் பேரன் என்கின்ற சீமானும் கடைசியாக கூழ்பானைக்குள் தான் போய்விழுந்துவிட்டார்.
இதே நேரம் சீமான் தனித்தோ அல்லது வேறு எதாவது கட்சிகளின் கூட்டில் திமுக காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்திருந்தால் இத்தாலிக்காரியின் சொல் கேட்டு மீண்டும் கருணாநிதி அரசால் கைது செய்யப்பட்டோ அல்லது வேறு வழிகளில் பழிவாங்கப்பட்டோ அல்லது தா,.கிருஷ்ணனுக்கு நடந்தது போல சீமானுக்கும் ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருக்கும். சீமான் எவரை ஆதரித்தால் என்ன எதிர்த்தால் என்ன இலங்கை தமிழ் மக்களுக்கு இதனால் எந்த லாபமும் இல்லை. சீமானின் இந்த நடவடிக்கைகளைப் பார்க்கும் போது அவரும் தேர்ந்தெடுத்த அரசியல்வியாதி ஆகிவிட்டார். நம்ம தலை கவுண்டரின் பாசையில் சொன்னால் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா".
இந்த வருட நகைச்சுவை
வைகோவை 40 கோடி என நக்கலடிக்கும் திமுக அடிப்பொடிகள் 1.76 லட்சம் கோடி திருடிய ஆ.ராசாவை உத்தமன் என்கின்றார்கள்
வைரமுத்து
அண்மையில் வைரமுத்துவின் ஆயிரம் பாடல்கள் புத்தகவெளியீட்டுவிழா நடைபெற்றது. கருணாநிதி புத்தகத்தை வெளியிட கமலும் ரஜனியும் பெற்றுக்கொண்டார்கள். வைரமுத்துவை திரையுலகத்திற்க்கு அழைத்துவந்த பாரதிராஜா, இளையராஜா இருவருக்கும் அழைப்பில்லை. இவர்களுக்கிடையில் என்னதான் பிரச்சனை என்றாலும் தன்னை அறிமுகப்படுத்திய இருவரையும் இன்னாத செய்தாரை ஒறுத்தல் போல் செய்திருக்கவேண்டும் ஆனால் வைரமுத்து ஏனோ செய்யவில்லை. வைரமுத்து சிறந்த கவிஞர் ஆனால் சிறந்த மனிதரோ என்றால் இல்லை அவரும் மிகச் சாதாரண அற்ப மனிதர் என இந்த செயலின் மூலம் காட்டிவிட்டார். அவர் அழைத்திருந்து பாரதிராஜாவும் இளையராஜாவும் வரவில்லை என்றால் அது அவர்கள் இருவருக்கும் தான் அவமானம் என்பதை ஏனோ இந்தக் கவிபேரரசு உணர்ந்துகொள்ளவில்லை, சிலவேளை தன்னை சோழமன்னனின் கவிஞன் என்ற இறுமாப்போ தெரியவில்லை.
ஆனந்தவிகடனில் வாசகர் ஒருவர் இந்த நிகழ்வு பற்றிய கட்டுரைக்கு கொடுத்த பின்னூட்டம் "அந்த நாட்களில் சாணிக் கலர் பேப்பரில் விற்பனையாகும் படங்களின் பாட்டுப் புத்தகத்துக்கும் இந்தப் புத்தகத்துக்கும் என்ன வித்தியாசம்?"
இதுவும் வைரமுத்து சம்பந்தப்பட்ட விடயம் தான். அண்மையில் வாலி எழுதிய பாடல்கள் 1000 புத்தகவிழாவில் வைரமுத்து பேசும் போது தான் ஒருமுறை கமலைக் கேட்டாராம் நீங்கள் ஏன் அரசியலுக்கு வரமுயலவில்லை என்று அதற்க்கு கமல் சொன்னாரம் நான் ஒரு சுமாரான நடிகன் என்னால் அரசியலில் நடிக்கமுடியாது. மேடையில் நடுநாயகமாக வீற்றிருந்தவர் சாட்சாத் தமிழக முதல்வர்.
கமல்
மன்மதன் அம்பு படம் சிலநாட்களுக்கு முன்னர் பார்க்கனேர்ந்தது. ஒளியமைப்பு கொடுத்த இதத்தை ஏனோ படம் கொடுக்கவில்லை. பஞ்சதந்திரம், அவ்வை சண்முகி போல எதிர்பார்த்துப்போன எனக்கு ஏமாற்றமே கிடைத்தது. கமலின் அதிமேதாவித்தனம் எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் இந்தப் படத்திலும் வசனம் எழுதுகின்றேன் என பல இடங்களில் ஆங்கிலம். அத்துடன் தெனாலி படத்தின் பின்னர் மீண்டும் ஈழத்தமிழர்களை கேலி செய்திருக்கின்றார். அவர்களைச் சினிமா வெறியர்களாகக் காட்டியமை கண்டிக்கத்தக்கது. அதிலும் அந்தக் காட்சிகள் படத்துக்கு தேவையற்றமை என்பதும் குறிப்பிடத்தக்கது. வரலட்சுமிக்கு காமத்துப்பால் எழுதிய கமலைக் கண்டித்த இந்து அமைப்புகள் போல் ஈழத்தமிழர்களின் ஆபத்பாந்தவர்களாக தம்மைக் காட்டிக்கொள்ளூம் அரசியல் கட்சிகளோ அல்லது சினிமாக்காரர்களோ இதற்க்கு வாயும் திறக்கவில்லை. தயாரிப்பாளர் உதயநிதி என்ற காரணமோ யாம் அறியோம் அரங்கநாதன் தான் இதற்கும் பதில் கூறவேண்டும்.
பார்த்ததில் அதிர்ச்சி
கடந்த வருடம் வெளியான படங்களில் நூறு நாட்கள் ஓடிய படங்களின் பட்டியல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. பெண் சிங்கம் படமும் நூறு நாட்கள் ஓடியது எனக் கூசாமல் பொய் சொன்னார்கள். இதனை நான் என் பேஸ்புக்கில் போட்டபோது நண்பி ஒருவர் பெண் சிங்கம் ஓடிய படம் அல்ல ஓட்டிய படம் என்றார், நண்பர் ஒருவர் அப்படி ஓடியிருந்தால் அது அசிங்கம் என்றார். சன் குழுமத்தின் ஓடிய அல்லது ஓட்டிய படங்களின் பட்டியல் கலைஞரில் காண்பிக்கப்படவில்லை. வெகுவிரைவில் தமிழ் சினிமாவும் தமிழர்கள் கட்சி பேறுபாட்டால் பிரிந்து இருப்பதுபோல சன் குழுமப் படம் கலைஞர் பேரன்களின் படம் என இரண்டாகப் பிரியும் சாத்தியம் இருக்கின்றது.
விளையாட்டு
இலங்கை அனைத்து உதைபந்தாட்ட லீக்குகளுக்கிடையிலான இறுதிப்போட்டியில் சிவில் பாதுகாப்புப் படை லீக்கை எதிர்கொண்ட பருத்தித்துறை லீக் அணி 3க்கு 1 என்ற கோல் கணக்கில் வரலாற்றுச் சாதனை படைத்தது. பருத்தித்துறை லீக் சார்பில் பிறேம் குமார் இரண்டு கோல்களையும், சாரங்கன் ஒரு கோலையும் அடித்து வெற்றிக்கு வழிகோலினார்கள்.
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளத்தினால் இலங்கையிலுள்ள அனைத்து உதைபந்தாட்ட லீக்குகளுக்குமிடையில் நடத்தப்பட்ட இறுதி ஆட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு சிட்டி லீக் மைதானத்தில் நடைபெற்றது, பருத்தித்துறை லீக் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி கிண்ணத்தைத் தனாதாக்கி வரலாற்றுச் சாதனை படைத்தது. வதிரி டயமண்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த பிரேம்குமார் இலங்கைத் தேசிய அணிக்கு தெரிவான வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. என் மண்ணின் மைந்தர்களுக்கு வாழ்த்துக்கள்.
சின்ன சந்தேகம்
பேஸ்புக்கில் இருக்கும் என் நண்பர்களின் அழகான நண்பிகள் எல்லாம் திருமணமானவர்களாக இருக்கும் மர்மம் எனக்கு புரியவில்லை.
ஜொள்ளும் லொள்ளும்
உலகநாயகன் பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்களை ஏன் நான் என் மாமாவாக மாற்றக்கூடாது #ஸ்ருதி
இந்தப் படம் மூலம் தான் ஸ்ருதி என்னைக் கவர்ந்தார். பட உதவி சுபாங்கன்.
பின்குறிப்பு
நீண்ட நாட்களின் பின்னர் சூப். கடந்த ஆண்டு கவர்ந்த பதிவுகளின் அடுத்த பகுதி ஓரிரு நாட்களில் வெளியாகும்.
எழுதியது வந்தியத்தேவன் at 13 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் அரசியல், கமல், சினிமா, சூப், விளையாட்டு
ஹாட் அண்ட் சவர் சூப் 02-09-2010
அரசியல்
கடந்த சில நாட்களாக தர்மபுரி பஸ் எரிப்புப் சம்பவத்துக்கு காரணமானவர்களுக்கு தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தங்களின் தலைவி மேல் வைத்திருக்கும் அதீத அடிமைத்தனத்தில் அவர்கள் செய்த இந்த கொடுங்கோலுக்கு அரேபிய நாட்டுத் தண்டனைகள் தான் சரியானது. அப்பாவி மாணவிகளை கதறக் கதறக் தீக்கிரையாக்கிவர்களை இப்படியான கொலைச் செயலைச் செய்யத்தூண்டிய அரசியல்வாதிகளையும் கண்டிக்கவேண்டும் அல்லது தண்டனை கொடுக்கவேண்டும் ஆனாலும் எய்தவன் ஏதோ ஒரு நாட்டில் சுகமாக ஓய்வெடுக்க அம்புகள் மட்டுமே தூக்கில்.
தூக்குத் தண்டனை என்பது பெரியதொரு தண்டனைதான். அதே நேரம் இந்தக் குற்றவாளிகள் மிருகங்களை விடமிகக் கேவலமாக நடந்துகொண்டபடியால் இவர்களுக்கு தூக்கு கட்டாயம் கொடுக்கவேண்டும். அதே நேரம் மதுரை தினகரன் சம்பவ குற்றவாளிகளுக்கும் தூக்கு கொடுக்கவேண்டும். கண்கள் பனித்து இதயம் இனித்ததால் அந்த சம்பவம் விரைவில் மறக்கப்பட்டுவிடும். நம்ம உலக நாயகன் விருமாண்டியில் சொன்னது போல் மன்னிப்பவன் பெரிய மனிதன் என்ற கருத்து இந்த இரு சம்பவம் செய்தவர்களுக்கும் செய்யத் தூண்டியவர்களுக்கும் பொருந்தாது.
கிரிக்கெட்
இங்கிலாந்தில் இவ்வளவு நாளும் கால்பந்துக்கு முக்கியத்துவம் கொடுத்த பத்திரிகைகளை கடந்த ஞாயிறுமுதல் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டன. எல்லாப் புகழும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கே சேரும். இளம் வீரர்கள் முகமட் அமீரும் அசீப்பும் ஸ்பொட் சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கிகொண்ட பாகிஸ்தான் அணி இப்போ சல்மான் பட் அமீரின் கைங்கரியத்தால் இன்னமும் தவித்துக்கொண்டிருக்கின்றது. மஜீர் மஜீட் என்ற லண்டன் வாழ் தொழிலதிபரே இந்த சூதாட்டத்தின் சூத்திரதாரி என ஸ்கொலண்ட்யார்ட் போலிஸார் கண்டுபிடித்திருக்கின்றார்கள்.
அதே நேரம் அடுத்து வரும் பாகிஸ்தானுடனான இருபதுக்கு 20 போட்டிகளையும் ஒருநாள் போட்டிகளையும் ரத்துச் செய்து தங்களுக்கு பணத்தை திரும்பத் தரும்படி இங்கிலாந்து ரசிகர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள். எது எப்படியோ சில நாட்களுக்கு பாகீஸ்தான் கிரிக்கெட்டை வைத்து பத்திரிகைக கல்லா கட்டுவது நிச்சயம்.
அத்துடன் ஐபிஎல் புகழ மோடியும் சொந்தமாக விமானம் வாங்கியதாக கலைஞர் செய்திகளில் காட்டினார்கள். விளையாட்டு இப்போ வியாபாரமாக மாறிவிட்டது. நேரத்தையும் பணத்தையும் வீணாக்கும் எம்மைப் போன்ற அப்பாவி ரசிகர்கர்கள் தான் பாவம்.
ஷேன் வாட்சனுடனும் சில சூதாட்டவாதிகள் தொடர்புகொண்டதாக பத்திரிகைகள் செய்தி வெளியிடுகின்றன. இப்படியே போனால் இனி நானும் கிரிக்கெட் விளையாடலாம். காரணம் எப்படியும் போடுகின்ற போல் நோ போல் தான். எனக்கெல்லாம் 50000 பவுண்டுகள் வேண்டாம் ஒரு 5000 பவுண்டே போதும்.
சினிமா
எந்திரன் பாடல்கள் கேட்க கேட்கத் தான் பிடிக்கும் என ஒருமுறை எழுதியது ஞாபகம், அது உண்மைதான். கிளிமஞ்சதாரோபாடல் மிகவும் பிடித்துவிட்டது சின்மயின் ஐஸ்கிறீம் குரல் ஐஸ்வர்யா ராஜை அப்படியே படம் போட்டுக் காட்டுகின்றது. புதியமனிதாவில் பாடும் நிலா பாலா இளையவர்களுடன் போட்டி போடுகின்றார். இசைப்புயல் எந்திரன் பாடல்களில் இசையை இன்னொரு வடிவத்தில் கொடுத்திருக்கின்றார். இந்தப் பாடல்களில் புதியவகையான ஒரு இசை ஒலிகள் தெறிக்கின்றன. தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட படம் என்பதாலோ தெரியவில்லை இசைக் கோலங்கள் மேற்கத்தைய சாயலில் இருகின்றது. எப்போ படம் வரும் உலக அழகியும் சூப்பர் ஸ்டாரும் எப்படி இந்தப் பாடல்களுக்கு ஆடி இருக்கின்றார்கள் என்பதைப் பார்க்க ஆவலாக இருக்கின்றது.
எந்திரன் இசை வெளியீட்டு விழாவில் விவேக்கின் சில கொமெண்டுகள் மேடை நாகரிகத்துக்கு பொருத்தமில்லாமல் இருந்தது. ரஜனியின் பேச்சு மட்டும் வழக்கம் போல் கலக்கல். தமிழ்நாட்டு முதல்வர் ஏன் இந்தப் படத்துக்கு வாழ்த்துத் தெரிவித்தார்? ஏன் இந்த ஆடியோ வெளியீட்டை தமிழ்நாட்டில் செய்யவில்லை போன்ற சில சந்தேகங்கள் எழுவதை தவிர்க்கமுடியவிலை.
ஷங்கரின் பிரமாண்டமும் ரகுமானின் இசையும் ஐஸ்வர்யா ராயின் அழகும் சூப்பர் ஸ்டாரின் ஸ்டைலும் படைத்தை எப்படியும் வெற்றி ஆக்கும், அதே நேரம் சன் குழுமத்தின் படம் என்பதால் ஓவர் விளம்பரம் ஆபத்தாகவும் அமையலாம்,
சின்னத் திரை :
விஜய் தொலைக்காட்சியின் ஜோடி நம்பர் ஒன் எதோ ஒரு சீசனில் ஈழத்து மைந்தர்கள் பிரேம் கோபாலும் பிரேமினியும் முதல் பரிசைப் பெற்றார்கள். பிரேம் கோபாலின் கடின உழைப்பு அவருக்கு உங்களில் யார் அடுத்த பிரபுதேவாவி பரசைக் கொடுக்காவிட்டாலும் ஜோடி நம்பர் ஒன்னில் விட்டதைப் பிடித்துவிட்டார்.உங்களில் யார் அடுத்த பிரபுதேவாவி ஈழத்தில் நடந்த குண்டுவெடிப்பை தத்ரூபமாக நிகழ்த்தி பலரின் பாராட்டைப் பெற்றவர் இம்முறையும் ஈழத்துய்ரத்தை மீண்டும் நிகழ்த்தினார். அதன் காணொளி கீழே:
இளவரசி டயனா :
நேற்று முந்தினம் இளவரசி டயானாவின் நினைவுதினம் கென்சிங்டன் கார்டனில் நினைவு கூரப்பட்டிருந்தது, அதே நேரம் சைனாவில் உள்ள ஷென்சன் விமான நிலையத்தில் டயனாவின் அரைகுறை ஆடைகளுடனான ஒரு விளம்பரம் உள்ளாடை ஒன்றுக்கு விளம்பரப்படுத்தியிருந்தது. அத்துடன் அந்த விளம்பரத்தில் "Feel the Romance of British Royality" என்ற வாசகமும் இருந்தது. டயானா போன்ற ஒரு பிரபலத்தை இறந்தபின்னரும் வியாபாரத்துக்குப் பயன்படுத்தும் சீன உள்ளாடை தயாரிப்பு நிறுவனமான "ஜெலசி இன்டர்னெசலின் மேல் இதுவரை எவரும் கண்டனம் தெரிவிக்கவில்லை.இது பற்றி அவரது கணவர் இளவரசர் சாள்ஸ்சும் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இறந்தபின்னரும் சர்ச்சைகளின் நாயகியாகிவிட்டார் இளவரசி டயானா.
எனக்குப் பிடித்த பாடல் :
கமல் இசைஞானி கூட்டணியில் அருண்மொழி சித்ராவின் குரலில் சூரசங்காரம் படத்தில் இடம் பெற்ற மெஹா ஹிட் பாடல். பாடல் ஹிட்டுக்கு நிரோஷாவின் கவர்ச்சியான அழகும் ஒரு காரணமாகும். கறுப்பானாலும் களையான அழகி நிரோஷாவுக்கு நல்ல படங்கள் கிடைத்தும் ஏனொ கோடாம்பக்கத்தில் நிலைத்து நிற்கமுடியவில்லை. அந்த நாள் இளைஞர்களின் கனவுக் கன்னி நிரோஷாவின் பாடல். இசைஞானியின் இசையும் கலைஞானியும் நடிப்பும் இந்தப் பாடலைத் திரும்ப திரும்ப கேட்க வைக்கும்,
சின்ன சந்தேகம் :
பெரும்பாலான நாத்திகவாதிகள் இந்துமதத்தை மட்டுமே ஏன் எதிர்க்கின்றார்கள்? இவர்கள் ஏன் இஸ்லாத்தையோ கிறிஸ்தவத்தையோ கிண்டல் செய்வதில்லை? ஓ அவற்றைக் கிண்டல் செய்தால் ஓட்டுக்கள் கிடைக்காது அல்லவா? அத்துடன் ஓட்டோ வீட்டுக்கு வரும் ஹிஹிஹிஹி.
எழுதியது வந்தியத்தேவன் at 23 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் அரசியல், சினிமா, சூப், விளையாட்டு
ஹாட் அண்ட் சவர் சூப் 19-08-2010
அரசியல்
பெரிதாக எந்த அரசியல் நிகழ்வுகளும் நிகழவில்லை என்பதால் அரசியல் இன்றைய சூப்பில் இல்லை.
நீண்ட நாள் சந்தேகம் : இந்திய பிரதமர் ஏன் சுதந்திர தின உரையை குண்டு துளைக்காத கூண்டுக்குள் நின்று ஆற்றுகின்றார். அப்படியென்றால் அவருக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லையா?
கிரிக்கெட்
இலங்கையில் நடைபெறும் முக்கோணத்தொடரின் கடைசியாக இந்தியா இலங்கை விளையாடியபோட்டியால் ஆசிய கிரிக்கெட் அதிர்ந்துபோய் ரணகளமாகி இருக்கின்றது. ரந்தீவ் செய்தது தவறுதான் அதற்க்கு அவர் மன்னிப்பு கேட்டுவிட்டார், இப்போ பழைய குப்பைகளை இந்திய முன்னாள் வீரர்கள் கிளறுகின்றார்கள். இவர்கள் செய்யாத குழப்படிகளையா ரந்தீவ் செய்துவிட்டார்? ஆனாலும் வழக்கம்போல் பெரிய அண்ணனுக்கு பயந்து இலங்கை கிரிக்கெட் சபை மன்னிப்பு கேட்டுவிட்டது. இந்தியாவை உசுப்பேத்தி உசுப்பேத்தி தான் உடம்பை ரணகளமாக்குகின்றார்கள். இத்தனைக்கும் அணித்தலைவர் டோணி அமைதியாக இருக்கின்றார்.
எத்தனையோ தேவையான விடயங்கள் இருக்க ஹிந்திய ஊடகங்கள் இதனை தூக்கிபிடிப்பது வேறு ஏதோ அரசியல் அல்லது உள்குத்து இருப்பது போல் தெரிகின்றது. இது பற்றி பிரபல கிரிக்கெட் அனாலிஸ்டுகள் கங்கோனும் லோசனும் அதிகம் எழுதியபடியால் நான் பெரிதாக அலட்ட விரும்பவில்லை.
யார் கண்டது அடுத்த ஐபிஎல்லில் ரந்தீவ் டெல்லிக்கு விளையாடவும் கூடும்.
இங்கிலாந்தில் கிரிக்கெட் மோகம் இன்னமும் குறையவில்லை என்பதற்க்கு நேற்று கெனிங்டன் ஓவலில் தொடங்கிய இங்கிலாந்து எதிர் பாகிஸ்தான் போட்டி சாட்சி. மைதானத்தில் நல்ல கூட்டம், மைதானத்தில் அருகால் தான் தினமும் நான் பயனிக்கின்றனான். அதனால் தான் சனக்கூட்டத்தைக் காணமுடிந்தது. ஆனாலும் வழக்கம் போல் இங்கிலாந்து பத்திரிகைகளில் ஒரு ஓரத்தில் தான் கிரிக்கெட் செய்தி காணக்கிடைத்தது. அவர்கள் கால்பந்துக்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள்.
சினிமா :
அண்மையில் தில்லாலங்கடியும் களவாணியும் பார்க்க கிடைத்தது. மிகச் சிறந்த பொழுதுபோக்குப் படங்கள் இரண்டும். தில்லாலங்கடி ரீமேக், களவாணி அக்மார்க் ஒரிஜினல், இரண்டும் நகைச்சுவை நிறைந்த படங்கள். ஜெயம் ரவிக்கு நகைச்சுவையும் நன்றாகவே வருகின்றது. தமன்னா அழகாக இருக்கின்றார். பசங்களில் அறிமுகமான விமல் களவாணியில் அசத்துகின்றார். கதாநாயகியும் ஓக்கே ரகம் தான். வழக்கம்போல் சரண்யா மனசுக்குள் மத்தாப்புதான்.
நாளைக்கு நான் மகான் அல்ல வெளியாகின்றது. கார்த்தி இதில் எப்படி நடித்திருக்கின்றார் எனப் பார்க்கவேண்டும், நான் மகான் அல்ல பாடல்களில் வழக்கம் போல் யுவன் ராஜாவாகி இருக்கின்றார். காதல் சொல்ல வந்தேன் படத்தின் சந்தியா பாடல் யுவனுக்கு இன்னொரு காதல் வளர்த்தேன், காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன் பாடல் போல் மெஹா ஹிட். அருமையான மெலடி. ஆனால் படம் தான் பப்படம் என்கின்றார்கள்.
பதிவுலகம்
இலங்கைப் பதிவர்களின் முதலாவது சந்திப்பு நடந்து வரும் 23ந்திகதியுடன் ஒரு வருடமாகப்போகின்றது. சந்திப்பின் மூலம் கிடைத்த நன்மைகள் அல்லது விளைவுகள் என்னவென்றால் மதுவினால் இலங்கைப் பதிவர் குழுமம் ஆரம்பிக்கப்பட்டதும், பல நல்ல நண்பர்கள் கிடைத்து இன்றைக்கு அவர்கள் மாமன், மச்சான், சித்தப்பூ பெரியப்பூ என உறவு முறை கொண்டாடும் வரை நல்ல உறவுகளானதும் தான். எத்தனையோ விடயங்கள் நடைமுறப்படுத்த பலரும் முயன்றும் ஏனோ பலரின் ஒத்துழைப்பு இல்லாமையால் கைவிடப்பட்டுவிட்டது அல்லது மறக்கப்பட்டுவிட்டது.
இரண்டாவது சந்திப்பும் சென்ற வருடம் டிசம்பரில் நடந்தது அதன் பின்னர் கடந்த 8 மாதங்களாக நண்பர்களாக சந்திக்கின்றார்களே ஒழிய இன்னொரு பதிவர் சந்திப்புக்கு சாத்தியம் ஏனோ ஏற்படவில்லை. இடையில் இலங்கையின் ஏனைய பாகங்களில் ஒரு இடத்தில் சந்திப்போம் என முடிவெடுத்தும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. எத்தனையோ ஆற்றல்மிக்க துடிப்பான இளைஞர்கள் இப்போது பதிவு எழுதுகின்றார்கள், அவர்கள் நினைத்தால் விரைவில் இன்னொரு சந்திப்பை நடத்தலாம். இதன் மூலம் தூங்கிக்கொண்டிருக்கின்ற அல்லது ஓய்வெடுக்கின்ற பதிவர்களை மீண்டும் எழுத வைக்கலாம்.
சிறு விளக்கம் :
அண்மைக்காலத்தில் பெரும்பாலும் என்னுடைய பதிவுகளுக்கு நான் பதில் பின்னூட்டங்கள் இடுவது மிகவும் குறைந்துவிட்டது, இதனைச் சில நண்பர்கள் எனக்கு பல்வேறு வழிகளில் அறியத் தந்தார்கள். இதற்க்கான முக்கியமான காரணம் நேரம் மட்டுமே. பல தடவை பதில் அளிக்கமுயற்சி செய்வேன் ஆனாலும் ஏனோ முடிவதில்லை. ஆனாலும் பெரும்பாலும் நான் ரசித்த பதிவுகளுக்கு தேவைப்பட்டால் வாக்கும் பின்னூட்டமும் அளித்துவருகின்றேன். பகலில் பெரும்பாலும் நேரம் இருப்பதில்லை. இரவிலும் அரைவாசி இரவில் நேரமில்லாதபடியால் இந்தப் பதிவு நள்ளிரவின் பின்னர் எழுதுகின்றேன். எத்தனையோ விடயங்கள் எழுத யோசித்தாலும் வேலைப்பளு, கல்விப்பளு எழுத விடுகின்றதில்லை. ஈட் கிரிக்கெட், ட்ரிங் கிரிக்கெட் என இருந்த நான் இப்போ கிரிக்கெட்டை கிரிகின்போவில் மட்டும் ஸ்கோர் பார்ப்பதுடன் விட்டுவிடுகின்றேன், ரந்தீவ் விவகாரம் கூட கங்கோனின் பதிவில் தான் அறிந்தேன். இனிமேல் எப்படியும் நேரம் ஒதுக்கி பதில் பின்னூட்டம் இட முயற்சிக்கின்றேன்.
இன்று பிறந்த நாள் கொண்டாடும் எனது அம்மாவுக்காக இந்தப் பாடல்.
எழுதியது வந்தியத்தேவன் at 28 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் கிரிக்கெட், சினிமா, சூப், பதிவர் வட்டம், விளையாட்டு
ஹாட் அண்ட் சவர் சூப் 12-08-2010
அரசியல்
மீண்டும் இலங்கையின் அரசியல் அரங்கு சூடு பிடித்துள்ளது. ஜனநாயக மக்கள் முன்னணியின் பாராளமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் ஆளும் கட்சியுடன் இணையப்போவதாக வந்த செய்திதான் இதற்கான காரணம். ஐக்கியதேசியக் கட்சியில் போட்டிபோடும்போதே பிரபா கணேசனுக்கு தெரிந்திருக்கும் எப்படியும் தாம் எதிர்க்கட்சிதான் என ஆனாலும் வெற்றி பெற்று சில நாட்களின் பின்னர் என்ன காரணத்துக்காகவோ அவர் ஆளும் கட்சியில் இணைய முனைகின்றார். ஏற்கனவே இவரின் அண்ணன் மனோ கணேசனுக்கு ஐக்கிய தேசிய முன்னணியின் தேசியப்பட்டியலில் ரணில் இடம் கொடுக்கவில்லை என பிரச்சனைப் பட்டார்கள். இந்த கட்சி தாவும் நபர்களுக்கு எந்த தண்டனையும் இல்லையா? ஆகக்குறைந்தது மக்களுக்கு திருப்பி அழைக்கும் அதிகாரம் தேவை? மக்கள் பிரபா கணேசனை ஆளும் கட்சி எம்மியாக பாராளமன்றத்துக்கு அனுப்பவில்லை? ஆளும் கட்சியில் கொழும்பைப் பிரதிநிதித்துவப்படுத்த தமிழர் ஒருவர் வேண்டுமென்றால் இராதகிருஷ்ணனையே அனுப்பியிருக்கலாம். ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து இன்னும் பலர் ஆளும் கட்சிக்கு தாவ இருக்கின்றார்களால். ரணில் பேசாமல் கட்சியைக் கலைத்துவிட்டு துறவியாகலாம்.
அரசியல் சண்டியன் மேர்வின் சில்வாவை கட்சியிலிருந்து நீக்கியிருப்பதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. காலம் பிந்திய முடிவு தான் ஆனாலும் பாராட்டவேண்டிய முடிவு. சென்ற வியாழக்கிழமை மேர்வின் சில்வாவின் புகழ் லண்டன் புகையிரதங்களிலும் நீளத்துக்கீழ் புகையிரதங்களிலும் மேலும் பரவி இலங்கைக்கு மேலும் புகழ் சேர்த்தது. இங்கே புகையிரத நிலையங்கள், பேருந்து நிலையங்களில் மெற்ரோ எனப்படும் பத்திரிகை இலவசமாக கிடைக்கும். அந்தப் பத்திரிகையில் மேர்வினின் படத்துடன் அவர் சமுர்த்தி உத்தியோகத்தரைக் கட்டிப்போட்ட செய்தி வெளியாகியது. இந்த ஜோக்கரை பாராளமன்றத்தில் தேசியப் பட்டியலில் உறுப்பினராக்கி அழகு பார்த்தவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தான். சந்திரிக்கா செய்த எத்தனையோ பிழைகளில் இந்தப் பிழையும் ஒன்று, கடைசியில் சந்திரிக்காவையே திட்டி அரசியல் நடத்தில் லட்சக்கணக்கான வாக்குகள் பெற்றவர் மேர்வின் சில்வா. இவரை சில நாள் ஊடக அமைச்சராக்கி அழகு பார்த்த ஜனாதிபதி இப்போ அவரின் சண்டித்தனம் கூடக்கூட இடை நிறுத்தியிருக்கின்றார். இந்த நாடகம் இன்னும் எத்தனை நாளைக்குத் தான் என பொறுத்திருந்து பார்ப்போம்.
எங்கள் நாடுகளில்
கோன்கள் உயர்கின்றார்கள்
வரப்புகள் மட்டும்
அப்படியே இருக்கின்றன.
சினிமா
எந்திரன் இசை வெளியீடு பிரமாண்டமாக மலேசியாவில் நடைபெற்று பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கின்றன. வழக்கம்போல் ரகுமானின் பாடல்கள் முதன்முறை கேட்கும் போது அவ்வளவு இதமாக இருக்கவில்லை. விண்ணைத்தாண்டி வருவாய், இராவணன் பாடல்கள் சில உடனடியாக பிடித்தது போல் எந்திரனில் எந்தப் பாடலும் முதலில் கவரவில்லை. கொஞ்சம் கொஞ்சம் கேட்டபின்னர் புதிய மனிதாவும் பூம்பூம் ரோபோடாவும் நல்லாயிருக்கு. எப்படியும் ஷங்கர் பாடல்களை அழகாக படமாக்கி ஹிட்டாக்கிவிடுவார். போதாக்குறைக்கு உழக அழகியும் இருக்கின்றார் சொல்லவா வேண்டும். எந்திரனின் வெற்றிக்கு காரணம் ஷங்கரா? சூப்பர் ஸ்டாரா? இல்லை சன் குழுமத்தின் ஓவர் டோஸ் விளம்பரமா? என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். மொக்கைப்படங்களான காதலில் விழுந்தேன், மாசிலாமணி, அம்பா சமுத்திரம் அப்பானிக்கே படம் வெளியாகி அடுத்த நாளே வெற்றிப்படம் என விளம்பரம் கொடுத்தவர்கள். ரோபோவுக்கு சும்மாவா இருப்பார்கள் அதிலும் சொந்தப்படம் வேறை பாவம் சன் நெட்வேர்க் இணைப்புகள் இருப்பவர்கள்.
நீண்ட நாள் சந்தேகம் ஒன்று படம் வெளியான அடுத்த நாளே மிகப் பெரிய வெற்றி என எப்படி விளம்பரம் கொடுக்கின்றார்கள்.
கிரிக்கெட்
இலங்கையில் நடக்கும் முத்தரப்பு தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி கொஞ்சம் பலம் குறைந்த நியூசிலாந்திடம் 200 ஓட்டங்களால் அவமானத் தோல்வியைத் தழுவியது. நியூசியின் புதிய தலைவர் ரோஸ் டைலரின் 95 ஓட்டங்களும் ஸ்டைரிசின் 89 ஓட்டங்களும் நியூசிக்கு 288 என்ற நல்ல ஓட்ட எண்ணிக்கையை கொடுக்க இந்திய அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர்கள் சேவாக், யுவராஜ் சிங், டோணி, ரைனா இலகுவாக இந்த எண்ணிக்கையை கடப்பார்கள் என நினைத்தால் 88 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்து தோற்றுவிட்டார்கள்.
இங்கிலாந்து பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் எட்பக்ஸ்டனில் நடந்த இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானின் இரண்டாவது இனிங்கிசில் இங்கிலாந்து வீரர் ஸ்டுவர்ட் புரோட் பந்துவீசும் போது பாகிஸ்தானிய வீரர் ஹைடரை நோக்கீ பந்தால் எறிந்தவிடயத்தில் ஐசிசி இங்கிலாந்துக்கு சார்பாக நிற்பதுபோல் தோன்றுகின்றது. கனவான்கள் ஆட்டம் என்ற நிலையில் இருந்த கிரிக்கெட்டில் புரோட் செய்தது பாரிய தவறாகும் இன்னொரு வீரரை காயப்பட்டுத்தும் நோக்கில் எறிந்த பந்துக்கு வெறும் அபராதத்துடன் புரோட் தப்பிவிட்டார். ஆகக்குறைந்தது அவரை இந்த தொடரில் இருந்து நீக்கி இருக்கவேண்டும் ஆனால் ஏனோ ஐசிசி செய்யவில்லை. சில இங்கிலாந்து வீரர்களும் பத்திரிகைகளும் புரோட்டுக்கு ஆதரவாக அவர் மன அழுத்தத்தால் அப்படிச் செய்தார் என்றும் பின்னர் மன்னிப்புக் கேட்டதால் பிரச்சனை சுலபமாக முடிந்துவிட்டதாகவும் சொல்கின்றனர். இங்கிலாந்தின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்த நேரத்தில் புரோட்டுக்கு மன அழுத்தம் வர வாய்ப்பே இல்லை என்பது புதிதாக கிரிக்கெட் பற்றி எழுத முயற்சிக்கும் ஆதிரைக்கே தெரியும் போது ஐசிசிக்கு மட்டும் தெரியவில்லை. வெள்ளைத் தோலுக்கு என்றைக்கும் மதிப்பு அதிகம் தான்.
பேஸ்புக்கின் அசுர வளர்ச்சிக்கு கீழே உள்ள இந்தப் படமே சான்று. பட உதவி செய்த இளைப்பாறிக்கொண்டிருக்கும் புல்லட்டிற்க்கு நன்றிகள்.
எழுதியது வந்தியத்தேவன் at 20 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் அரசியல், சினிமா, சூப், விளையாட்டு
ஹாட் அண்ட் சவர் சூப் 17-06-2010
அரசியல்
இந்தியாவின் போபால் நச்சுப்புகை சோகத்திற்க்கு இருபது வருடங்களுக்குப் பின்னர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கின்றது. குற்றவாளி நிறுவனத்திற்க்கு கிடைத்த தண்டனையோ வெறும் 2 ஆண்டுகள் தான். இருபதினாயிரம் மக்கள் கொல்லப்பட்ட சோகத்திற்க்கு 20 வருடத்தின் பின்னர் வெறும் 2 ஆண்டுகள் தான் தண்டனை என்றால் மனுநீதி சோழனும் இராஜராஜனும் அசோகனும் இன்னும் பலரும் நீதி தவறாமல் ஆட்சி செய்த பாரத தேசத்தின் நிலையை நினைக்க வருத்தமாக இருக்கின்றது. இனிமேல் பாரதத்தை புண்ணியபூமி என அழைப்பது தவறாகும் போல் இருக்கின்றது.
இதைப் பற்றி அண்ணன் ஜாக்கி குமுறோ குமுறென்று குமுறியிருக்கின்றார். நீதித்துறையில் கூட பாரபட்சம் என்றால் மக்கள் என்ன செய்வார்கள். ஒரு தனிமனிதனுக்காக ஒரு இனத்தையே மாற்றம் தாய் மனப்பான்மையில் பார்ப்பவர்களிடம் நீதியை எதிர்பார்க்கலாமா? ஒருகாலத்தில் மிகப்பெரும் ஜனநாயக நாடாக இருந்த இந்தியா அண்மைக்காலமாக சர்வாதிகார நாடாக மாறுவது கவலை அளிக்கின்றது. (மனதில் ஹிட்லரை வீட முசோலினியே ஏனோ வந்துபோகின்றார்).
ஆன்மிகம்
44 நாட்கள் சிறைவாசத்தின் பின்னர் நித்தியானந்தா மீண்டும் தன் ஆசிரமத்திற்க்கு வந்திருக்கின்றார். வந்தவர் சும்மா இருக்காமல் அக்னி சூழ தியானத்தில் அமர்ந்திருக்கின்றார். துறவி என்ற பெயரில் நித்தியானந்தா செய்தவை கண்டிக்கப்படக்கூடியவையே. காரணம் துறவு என்றால் முற்றும் துறத்தல் என்பது அர்த்தமாகும் ஆனாலும் இக்கால துறவிகள் எதனையும் துறக்காமல் துறவியாகிவிடுகின்றார்கள். சீதை தீக்குளித்தது போல் நித்தியானந்தாவும் தனக்குத் தானே அக்னிப் பரீட்சை வைக்கின்றாரோ தெரியவில்லை. கடவுளை நம்பினாலும் நம்பலாமே ஒழிய இந்த கடவுளின் பெயரால் தங்களை வளர்ப்பவர்களை நம்பவே கூடாது. எத்தனை பிரேமானந்தாக்கள், கல்கிகள், பகவான்கள் வந்தாலும் நம் மக்கள் திருந்தவே மாட்டார்கள்.
நித்தியானந்தா வெளியே வந்துவிட்டார், ரஞ்சிதா எப்போ மீண்டும் வெளிஉலகிற்க்கு வருவார்?
உலகக் கோப்பை
நேற்றுடன் சகல அணிகளும் ஒவ்வொரு போட்டியில் விளையாடி முடித்துவிட்டன. இதுவரை நடைபெற்ற போட்டிகளின் படி பலம் வாய்ந்த அணிகள் மிகவும் கஸ்டப்பட்டதையும், இரண்டாம் தர அணிகள் பலமாக இருந்ததையும் பார்க்கமுடிந்தது. வழக்கம் போல் அதிர்ச்சிகள் அடுக்கடுக்காக வந்தன. இங்கிலாந்து அமெரிக்காவை சமநிலைப் படுத்தியது, பிரான்சும் கஸ்டப்பட்டு மெக்சிகோவை சமநிலைப்படுத்தியது. இம்முறை உலகச் சம்பியனாக வரும் எனப் பலரால் கணிக்கப்பட்ட ஸ்பெயின் பரிதாபமாக சுவிசிடம் தோற்றது. பிரேசில் பலத்த போராட்டத்தின் பின்னர் வடகொரியாவை வென்றது. நடப்புச் சம்பியன் இத்தாலியும் பரகுவேயை சமநிலைப் படுத்தியது.
இதுவரை நடந்த போட்டிகளை வைத்துப் பார்த்தால் ஆர்ஜென்டினாவும் ஜேர்மனியுமே பலமாக இருக்கின்றன. ஆனாலும் கால்ப்பந்தில் கடைசி நிமிடம் வரை எதையும் கூறமுடியாது என்பாதல் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
ஆசியக் கிண்ணம்
உலக கோப்பை உதைபந்தாட்டப்போட்டிகளினால் பெரிதாக அறியப்படாத போட்டிகளாக ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இருக்கின்றன. அத்துடன் தம்ம்புள்ளை மைதானத்தில் பெரிதாக ஓட்டங்களும் எடுக்கமுடியாது (ஏன் தான் இங்கே வைக்கின்றார்களோ?). இதுவரை நடந்த 2 போட்டிகளையும் வைத்து எந்த முடிவையும் எடுக்கமுடியாது ஆனாலும் சொந்த மண்ணில் நடப்பதால் இலங்கைக்கே அதிக வாய்ப்புகள் இருப்பதுபோல் தெரிகின்றது. முரளிதரனும் நம்ம பாஉ போல் கொஞ்சம் களைப்படைந்துவிட்டது நேற்றைய போட்டியில் தெரிந்தது. எரியாத சுவடிகள் பவன், வலைமனை சுகுமார் நக்கலடிக்கமுன்னர் அவர் தன்னை மறுபரீசீலனை செய்வது நல்லது.
இராவணன்
இந்தவாரம் இராவணன் படம் வெளிவருகின்றது. அண்மைக்காலமாக எனக்கு ஏனோ மணிரத்னம் படங்களில் அவ்வளவு எதிர்பார்ப்பு இல்லை. அதிகமாக வரலாறுகளைத் திரிக்கின்றார். தமிழ் மன்னன், சிறந்த சிவபக்தன் இராவணனை வில்லனாக்கி ஆரியர்களின் மாயைக்கு உதவுகின்றாரோ தெரியவில்லை. இராவணன் என்பவரை வில்லனாக்கிய பெருமை ஆரியரையே சாரும் ஆனாலும் நாங்கள் (திராடவிடர்) ஆரியக் கடவுளுக்குத் தான் விழா எடுப்போம். எங்கள் தமிழ் மன்னனை மறந்துவிடுவோம். பேராசிரியர் மெளனகுருவின் இராவணேசனில் இராவணன் தான் கதாநாயகன். இராவணன் பற்றி விரைவில்(?) தனிப்பதிவே எழுதவேண்டும். இந்தவாரம் தமிழ்மணம், தமிழிஷ் எல்லாம் இராவணன் தான் அதிகம் அடிபடும் என்பதால் கொஞ்சம் ஆறுதலாக எழுதலாம்.
திரையுலகிற்க்கு பதிவுலகம் வழங்கும் விருதுகள் இறுதிக்கட்டத்திற்க்கு வந்துவிட்டது, மறக்காமல் உங்கள் வாக்குகளை சிறந்தவர்களுக்கு அளியுங்கள். மேலதிக விபரங்களுக்கு :

நறுமுகை
என்னுடைய உடன்பிறவாச் சகோதரன் அன்புத் தம்பி லெனினால் அண்மையில் நறுமுகை என்ற பெயரில் ஒரு இணையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் செய்திகளுடன் கருத்துக்களம், திரட்டி, வலைப்பதிவர்கள், குறும்படம் என பல விடயங்கள் இருக்கின்றன. லெனினின் திறமைகளை நான் பல இடங்களில் பார்த்திருக்கின்றேன். அவரின் நறுமுகை இணையமும் தனக்கென ஒரு தனி இடம் பிடிக்கும் என நம்புகின்றேன். என்னுடைய வலையினை அழகுற அமைத்துத் தந்தவர் லெனின் தான். லெனினுடன் இன்னும் சில நண்பர்களும் இணைந்து இதனைச் செய்கின்றார்கள். அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

ஜெசி ஜெசி என உருகினவர்களுக்கு மன்மதன் அம்பு திரிஷா
பட உதவி : அன்பு நண்பன் ஆதிரை.
பின்குறிப்பு : நீண்ட நாட்களின் பின்னர் சூப் ரசித்திருப்பீர்கள் என நினைக்கின்றேன்.
எழுதியது வந்தியத்தேவன் at 15 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் அரசியல், கால்ப்பந்து, சினிமா, சூப், விளையாட்டு
ஹாட் அண்ட் சவர் சூப் 06-01-2010
ஜனாதிபதித் தேர்தல்
இலங்கை ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்கள் மிகவும் சூடுபிடித்துள்ளன. பிரதான கட்சிகள் தங்கள் இதுவரை செய்த அபிவிருத்தியை விட எதிர்க் கட்சியியைத் திட்டுவதையே பெரும்பாலும் செய்கின்றன. தொலைக்காட்சிகள் செய்திகளின் போது சிலரது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை தணிக்கை செய்தே வெளியிடுகின்றார்கள்.
இணையத் தளங்களில் வெளியிடப்படுகின்ற தேர்தல் கருத்துக் கணிப்புகளில் சரத் பொன்சேகாவிற்கு அதிகம் வாக்குகள் கிடைக்கின்றன. ஆனால் பெரும்பாலான இணையக கருத்துக் கணிப்புகளில் படித்த நகரவாசிகளே கலந்துகொள்கின்றார்கள். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சாவின் வாக்கு வங்கி கிராமங்களிலையே இருக்கின்றது. இதனால் இந்தக் கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும் தவறாகவே மாறுகின்றன. அதே நேரம் வடக்கு கிழக்கு சிறுபான்மை மக்கள்(முஸ்லீம்கள் உட்பட) சரத் பொன்சேகாவை ஆதரிப்பது போன்ற சில கருத்துக் கணிப்புகளும் வெளிவருகின்றன. இவை சிலவேளைகளில் திட்டமிட்ட செயல்பாடுகள் போல் தெரிகின்றன.
மெஹா ஜோக் :
"ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தால் அவசரகாலச் சட்டம் நடைமுறைக்கு வராதாம்" சொன்னவர் அவசரகாலச் சட்டத்திற்க்கு எதிராகவோ சார்பாகவோ வாக்களிக்க வக்கில்லாத ஐதேக எம்பி.
3 Idiots
அமீர் கான், மாதவன், ஷர்மான், போமன் இரானி மற்றும் கரினாவின் தேர்ந்த நடிப்பில் உருவான 3 இடியட்ஸ் படம் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. மீண்டும் ஹிந்தித் திரையுலகம் வித்தியாசமான ஒரு படத்தை தந்துள்ளது. முன்னாபாய் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானியின் இந்தப் படமும் நகைச்சுவையுடன் சில நல்ல கருத்துகளையும் சொல்கின்றது. படத்தின் பலமே அமீர்கானின் நடிப்பும் இளமையும் தான். சில இடங்களில் அமீர்கானை விட மாதவன் நன்றாக நடித்திருக்கின்றார்.
அண்மைக் காலமாக நல்ல படங்களைத் தந்துகொண்டிருக்கும் ஹிந்தித் திரையுலகை தமிழ்த் திரையுலகம் பார்த்து சில நல்ல படங்களை ரீமேக் செய்தாலோ அல்லது அதேபோன்ற் வித்தியாசமான கதையை எடுத்தால் தமிழ்த் திரையுலகம் கதை விடயத்தில் இன்னமும் முன்னேறலாம். இல்லையென்றால் வழக்கமான டெம்ளேட் கதைகளையும் அதீத விளம்பரத்தையும் நம்பி பத்தோடு ஒன்றாக மாறவேண்டும் தான்.
கிரிக்கெட்
சங்ககாரவின் குழந்தைகள் அணி டோணியின் இளமை அணியை நேற்று துவைத்து எடுத்துவிட்டது. இந்தியாவில் நடைபெற்ற இலங்கை இந்திய ஒருநாள் தொடரில் வெற்றியைத் தவறவிட்ட இலங்கை முதல் போட்டியில் வங்கதேசத்தையும் இரண்டாவது போட்டியில் இந்தியாவையும் இலகுவாக வெற்றி பெற்றது. இந்திய வேகப் பந்துவீச்சாளர்களில் நேஹ்ராவை இன்னும் ஏன் அணியில் வைத்திருக்கின்றார்கள் என்ற சந்தேகத்தை யாரும் தீர்ப்பீர்களா? இந்தியாவில் கூட இலங்கை வீரர்கள் அவரின் பந்துவீச்சை துவம்சன் செய்யததை மறந்துபோய் மீண்டும் நேற்று விளையாடி அடிமேல் அடிவாங்கினார்.
அத்துடன் இந்திய வீரர்களின் களத்தடுப்பு ரொபின்சிங்கின் விலகலின் பின்னர் மிகவும் பிந்தங்கிய நிலைக்கு சென்றுவிட்டது. இலங்கையைப் பொறுத்தவரை புதியவர்கள் இளம் கன்று பயமறியாதது என்பது போல் சகல துறைகளிலும் கலக்கியே வருகின்றார்கள். நேற்று டில்ஷான் விளையாடமால் போனாலும் சமரவீராவின் அதிரடியும் சங்ககாரவின் பொறுப்பான ஆட்டமும் வெலகெதரவின் சிறப்பான பந்துவீச்சும் இலங்கை அணிக்கு வெற்றி பெற்றுக் கொடுத்தது என்றால் மிகையாகாது. ஏனைய போட்டிகளிலும் இலங்கை வீரர்கள் இதே ஆக்ரோசத்துடன் விளையாடுகின்றார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். 
5ஆவது திருமணம்
தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி ஜேக்கப் ஷூமா தன்னுடைய 67 வயதில் 5ஆவது தடவையாக 37 வயதுப் தோபியா மடிமா என்ற பெண்ணைத் திருமணம் செய்துள்ளார். இவரது திருமணம் அண்மையில் தென்னாபிரிக்காவில் பாராம்பரிய முறைப்படி நடைபெற்றது. ஏற்கனவே இவர் தோபியாவுடன் தொடர்பு இருந்து 3 குழந்தைகள் இருப்பதும் நீண்ட நாள் குடும்பம் நடத்திய பின்னரே இந்தத் திருமணம் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.
ரசித்த கவிதை
அரசியல்வாதிகளில் பலர்
அரக்கர்கள் என்பதாலேயே
ராட்சஸ வடிவில்
கட் அவுட் கட்டப்படுகின்றது
எலெக்ஷன் என்றதுமே
கலெக்சன் ஆரம்பம் - அவர்கள்
கொடுப்பது வாய்க்கரிசி
பெறுவது வாக்குச் சீட்டு
சுவரொட்டி ஒட்டியவன்
வயிறு ஒட்டி வாடுகின்றான்
ஊர்வல்ம் தொண்டனுக்கு
கார்வலம் தலைவனுக்கு
தலைவனை வாழ்க என்று சொல்லி
தான் மட்டும் வீழ்பவன் - இவனைத்
தொண்டன் என்றழைப்பதா?
முண்டம் என்று சொல்வதா?
கைதியின் தவறுகளுக்கு
நீதிபதிக்கு தண்டனையா?
தலைவனின் ஊழல்களுக்கு
தொண்டனின் தீக்குளிப்பா?
கும்பகர்ணக் குடிமகனே
புரிந்து கொண்டால்
விழித்துக் கொள்வாய்
விழிக்காவிட்டால் டாஸ்மார்க்கோடு
அழிந்துபோவாய்.
எழுதியவர் பிரபல க்ரைம் கதை மன்னன் ராஜேஸ்குமார்.
அன்பு நண்பர் சுபாங்கனின் அன்புக்காக இந்த அசல் நாயகி பாவனாவின் படம் பட உதவியும் அவரே தான். நன்றி சுபாங்கன்.
எழுதியது வந்தியத்தேவன் at 18 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் அரசியல், கவிதை, கிரிக்கெட், சினிமா, சூப்
ஹாட் அண்ட் சவர் சூப் 30-12-2009
ஜனாதிபதித் தேர்தல்
நாளொரு குற்றச் சாட்டும் பொழுதொரு கட்சித் தாவலுமாக ஜனாதிபதித் தேர்தல் நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. கொழும்பு மாநகரை அலங்கரித்த கட் அவுட்டுகள் யாவையும் அகற்றப்பட்டுவிட்டன. சில நாட்களுக்கு முன்னர் கதாநாயகர்களாக இருந்தவர்கள் இன்றைக்கு வில்லனாகி மாறிவிட்டார்கள். நண்பர்களாக இருந்தவர்கள் எதிரிகளாக மாறிவிட்டார்கள். நாட்டுமக்களின் ஞாபக மறதி வாழ்க.
அரச தரப்பினால் பாரிய அளவில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகின்ற அதே வேளை எதிர்த் தரப்பு ஏனோ அடக்கிவாசிக்கின்றது. மதில் மேல் பூனையாக தமிழ்க் கூட்டமைப்பும் என்ன செய்வது என முடிவெடுக்க முடியாமல் திணறுகின்றது. புது வருடத்தின் பின்னர் தேர்தல் இன்னமும் சூடு பிடிக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.
தெலுங்கானா
தனி தெலுங்கானா மாநிலக் கோரிக்கை வலுவடைந்துள்ள நிலையில் ஒரு கிழமைக்கு முன்னர் இந்தப் பிரச்சனைக்கு இரு நாட்களில் தீர்வு காணப்படும் என மன்மோகன் சிங் அறிவித்திருந்தார் (ஆதாரம் : சன் செய்திகள்). ஆனாலும் இன்னமும் ஒன்றும் முடிந்தபாடில்லை. இதனால் மீண்டும் ஆந்திராவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தெலுங்கானா தனிமாநிலமாக அறிவிக்கப்பட்டால் மேற்குவங்கத்தைப் பிரித்து கூர்க்காலாந்து அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டுள்ள அதே நேரம் ஏனைய மாநிலங்கள் சிலவும் தனி மாநிலக் கோரிக்கைகளை விடுக்கின்றதாக செய்திகள் வருகின்றன.
2009ல் பதிவுலகம்
இன்னும் ஒரு நாளுடன் 2009க்கு விடைகொடுக்கவேண்டியதுதான், நாட்கள் மிகவும் வேகமாக ஓடுகின்றன. 2009ல் பதிவுலகத்திலும் பல நிகழ்ச்சிகள் நடந்தேறியுள்ளன. பல புதியவர்கள் புதுவிதமான கருத்துக்கள், எண்ணங்களுடன் தங்கள் வலைகளை விரித்திருக்கின்றார்கள்.
அரசியலைப் பொறுத்தவரை வருட ஆரம்பத்தில் முத்துக்குமாரில் ஆரம்பித்து பின்னர் இந்திய நாடாளமன்றத் தேர்தல், ஒபாமா, உண்ணாவிரதங்கள், மனிதச் சங்கிலிகள், முள்ளிவாய்க்கால் என கொஞ்ச நாட்கள் சூடுபிடித்து பின்னர் கொடநாடு, இலங்கை ஜனாதிபதித் தேர்தல், தெலுங்கானா என வருட இறுதிவரை சூடு குறையாமல் எழுதியிருக்கின்றார்கள்.
வருடத்தின் ஆரம்பத்தில் வில்லு படத்தைக் காய்ச்சியவர்கள் இறுதியில் வேட்டைக்காரனைக் காய்ச்சுகின்றார்கள். இடையில் உன்னைப் போல் ஒருவன், கந்தசாமி, ஆதவன் என்பன பதிவர்களுக்கு செமையான தீனி போட்ட படங்கள் இவர்களின் சினிமாப் பதிவுகளுக்கு கரு கொடுத்தன. ஆஸ்கார் நாயகன் ரகுமான், இளையராஜா எனப் பதிவுகள் இன்னமும் நீள்கின்றன.
இலக்கிய ரசிகர்களுக்கு சாருவும், ஜெயமோகனும், ஞாநியும் பூச்செண்டு கொடுத்து மகிழ்ந்தார்கள். இவர்களின் சர்ச்சை என்றைக்கும் முடியாதது.
மூத்த பதிவர் சிந்தாநதியின் மறைவு பதிவுலகத்திற்க்கு பேரிழப்பாகும். அத்துடன் ஒரு சில வேண்டத்தகாத நிகழ்வுகளும் நடந்தாலும், இலங்கைப் பதிவர் சந்திப்புகள், சென்னைப் பதிவர் சந்திப்புகள், சிங்கைப் பதிவர்கள் சந்திப்புகள், ஈரோடு பதிவர் சந்திப்பு என பல சந்திப்புகள் நடந்தாலும் அமீரகப் பதிவர்களின் சந்திப்பும் சுற்றுலாவும் அதனைத் தொடர்ந்து "அண்ணாசி அழைக்கின்றார்" என அவர்கள் வெளியிட்ட நகைச்சுவைக் குறும்படமும் தான் இந்த வருட பதிவர்களின் மைல் கல் எனலாம்.
கிரிக்கெட்
இந்திய இலங்கை அணிகள் மோதிய தொடர் இறுதிப்போட்டி நடைபெறாமலே முடிந்துவிட்டது. டெல்லி மைதானம் வீரர்களுக்கு பாதகமாக அமைந்தபடியால் போட்டி இடை நிறுத்திவிட்டார்கள். இனிமேலும் இப்படியான மைதானங்களை இந்திய கிரிக்கெட் வாரியம் தயார் செய்யுமா? காரணம் இம்முறை உலகக் கிண்ணத்தை நடத்தும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
அவுஸ்திரேலியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியின் இறுதிநாள் இன்று எப்படியும் போட்டியில் ஒரு முடிவு கிடைக்கும் போல் தெரிகின்றது. அண்மைக் காலமாக சதமடிக்க தடுமாறிய வாட்சன் ஒருமாதிரி சதமடித்துவிட்டார். முகமட் யூசுப்பும் மத்திய தர வீரர்களும் பொறுப்பாக ஆடினால் பாகிஸ்தான் வெற்றி பெறலாம்.
தென்னாபிரிக்கா இங்கிலாந்து போட்டியில் இங்கிலாந்தின் ஆதிக்கம் அதிகமாக காணப்படுகின்றது. இங்கிலாந்தின் வெற்றிக்கு இன்னும் 4 விக்கெட்டுகளே தேவை. பெளச்சரும் மோர்னே மோர்கலும் பொறுப்பாகவும் நிதானமாகவும் விளையாடினால் இங்கிலாந்திடம் இருந்து வெற்றியைத் தட்டிப் பறிக்கலாம். விளையாடுவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம். இந்த 2 போட்டிகளுடனும் இந்த வருடத்திற்கான கிரிக்கெட் போட்டிகள் நிறைவு பெறுகின்றன. இந்த வருடம் ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்களை இந்திய அணித்தலைவர் மகேந்திர சிங் டோணியும் விக்கெட்டுகளை ஆஸியின் வேகப் பந்துவீச்சாளர் மிச்சல் ஜோன்சனும் எடுத்திருக்கின்றார்கள்.
சின்னத் திரை
விசாரணை
கலைஞர் தொலைக்காட்சியில் க்ரைம் கதை மன்னன் ராஜேஸ்குமாரின் கதைகளை திங்கள் தொடக்கம் வியாழன் வரை நான்கு நாட்களுக்கு ஒரு கதை என விசாரணை என்ற பெயரில் தொடராக்கி வெற்றியும் கண்டிருக்கின்றார்கள். மிகவும் வேகமாகச் செல்லும் கதை பார்ப்பவர்களை நிச்சயம் கவரும். க்ரைம் பிராஞ்ச் காவல்துறை அலுவலகர் விவேக்காக சாக்சி சிவா அருமையாக பொருந்தியிருக்கின்றார். அவரது உதவியாளர் விஷ்ணுவாக ஷ்யாம் நடிக்கின்றார். விஷ்ணு பாத்திரம் சுஜாதாவின் வசந்தை நினைவூட்டுகின்றது. ஆனாலும் இதுவரை விவேக்கின் மனைவி ரூபலா வரவேயில்லை. ஏற்கனவே சுஜாதாவின் கதைகள் சில க்ரைம் தொடராக வந்தாலும் இந்த தொடர் கவர்ந்தது போல் அது கவரவில்லை, ஆண்டுக் கணக்காக மெஹா இழுவையாக இழுக்கும் சீரியல்களுக்கு மத்தியில் விசாரணை பாராட்டத்தக்கது.
சித்ராவும் மதுமிதாவும்
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியரில் நேற்று முந்தினம் பாடகர்கள் பாடிய முதல் பாடல் சுற்று நடந்தது. அதில் பாடகி மதுமிதா கலந்துகொண்டார். அவரது பாடலைப் பாட வந்த குழந்தையிடம் தன்னுடைய பாடலைக் கெடுக்கவேண்டாம் என அறிவுறுத்தினார். அதே நேரம் சித்ரா அவர்களோ தன்னுடைய பாடலைப் பாட வந்த குழந்தையிடம் தன்னை விட அழகாகப் பாடும் படியும் கேட்டுக்கொண்டார். சில காலமாகப் பாடும் மதுமிதாவிற்க்கும் சித்ராவிற்க்கும் எவ்வளவு வித்தியாசம். இதைத்தான் நிறைகுடம் தளம்பாது என்பார்களோ.
சிட்டிபாபுக்கு கண்டனங்கள்.
கிறிஸ்துமஸ் தினத்தில் சன்னில் நம்ம விஜய டி.ராஜேந்தரினை சிட்டிபாபுவும் அம்மும் பேட்டி கண்டார்கள். பல்துறைவித்தகர் ஒருவரை சிட்டிபாபு மிகவும் கேவலமாக நடத்தினார். ராஜேந்தரின் பொறுமை இடைக்கிடை குழம்பி சிட்டிபாபுவை கொஞ்சம் கண்டித்தார். யாரிடம் என்ன கேள்விகள் கேட்பது என்பது ஒரு காமெடி ஜாம்பவானுக்குத்( எத்தனை படங்களில் காமெடி செய்தார் மதுரை முத்துவைத் தான் கேட்கவேண்டும்)தெரியாதோ. சன் தொலைக்காட்சியினர் இன்னமும் ஏன் இப்படியான அரைகுறைகளை வைத்திருக்கின்றார்களோ. வரும் விருந்தினர்களுக்கு மரியாதை கொடுக்கத் தெரியாதவர்கள் எல்லாம் பேட்டி காண்கின்றார்கள், நடுவராக இருக்கின்றார்கள்.
இந்த ஆண்டின் கலக்கல் நாயகி தமன்னாவுடன் இந்த வருடத்தின் சூப் இனிதே நிறைவுறுகின்றது.
அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்.
எழுதியது வந்தியத்தேவன் at 13 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் அரசியல், கிரிக்கெட், சினிமா, சூப், பதிவர் வட்டம்
ஹாட் அண்ட் சவர் சூப் 16-12-2009
தமிழ்மணம் மனுத் தாக்கல்
தமிழ்மணத்தின் இந்தவருடத்திற்கான தமிழ்மணம் விருதுகள் அறிவிக்கப்பட்டு நானும் என்னுடைய 2 இடுகைகளை பரிந்துரைத்திருக்கின்றேன். சென்ற ஆண்டு விருதுக்கு அனுப்பிய என்னுடைய இரண்டு பதிவுகளும் முதல் 10 இடங்களுக்குள் வந்தபடியால் இந்த ஆண்டும் என்னுடைய பதிவுகள் இரண்டினை அனுப்பியுள்ளேன்.
விருது கிடைக்குதோ இல்லையோ நானும் போட்டியில் பங்குபற்றினான் என்ற ஆத்ம திருப்திக்காகவே இம்முறையும் பழம் தின்று கொட்டை போட்ட பிரபல, மூத்த பதிவர்களுடன் போட்டிக்கு வந்துள்ளேன். சினிமா, விளையாட்டு, நகைச்சுவை என இந்த வருடம் பல பதிவுகள் எழுதினாலும் போட்டிக்கு அனுப்பும் தரத்தில் உள்ள இரண்டு பதிவுகளை செய்திகள்/நிகழ்வுகளின் அலசல்கள் மற்றும் அரசியல், சமூக விமர்சனங்கள் பிரிவுகளில் போட்டிக்கு அனுப்பியிருக்கின்றேன்.
செய்திகள்/நிகழ்வுகளின் அலசல்கள் பிரிவில் வெடித்து கிளம்பிய புவனேஸ்வரியும், அடக்கி வாசித்த ஊடகங்களும் என்ற பதிவையும் அரசியல், சமூக விமர்சனங்கள் பிரிவில் மாற்றான் மனை கவர்தல் - தகாமுறைத் துணைகவரல் என்ற பதிவினையும் போட்டிக்கு அனுப்பியுள்ளேன். பதிவுகள் உங்களைக் கவர்ந்தால் ஓட்டளியுங்கள். சிறப்பான படைப்புகளுக்கு ஓட்டளியுங்கள்.
தவறான விளம்பரம்
சில நாட்களுக்கு முன்னர் ஒரு பிளேட்டிற்கான விளம்பரத்தைத் தொலைக்காட்சியில் பார்த்து அதிர்ந்துபோனேன். இரண்டு அழகான இளம் பெண்கள் தமக்குள் பேசிக்கொள்கின்றார்கள். ஒருவர் சொல்கின்றார் தன்னுடைய காதலன் தாடியுடன் சவரம் செய்யாமல் வந்தால் தான் அவருடன் வெளியில் செல்லமாட்டேன் எனக்குச் செல்ல வெட்கமாக இருக்கின்றது, மற்றொருவரோ அவர் என்னுடைய வீட்டிற்க்கு வருவதாகச் சொல்லியுள்ளார் தாடி மீசையுடன் வந்தால் உள்ளே அனுமதிக்க மாட்டேன் இப்படி அந்த இரண்டு பெண்களும் தாடி, மீசையுடன் இருக்கும் ஆண்களை விரும்பவில்லை என்கின்றார்கள்.
அடுத்த காட்சியில் அவர்களின் காதலர்கள் மூன்று நாள் தாடி மீசையுடன் தங்களுக்குள் தொலைபேசியில் பேசிக்கொள்கின்றார்கள். தங்கள் காதலிகள் தங்களை இந்தக் கோலத்தில் விரும்பவில்லை எனவும் ஆகவே தாம் சவரம் செய்துகொண்டு செல்லவேண்டும் எனவும் அதற்க்குச் சிறந்த பிளேடு இதுதான் என ஒரு குறிப்பிட்ட பிளேடை விளம்பரப்படுத்துகின்றார்கள். அவர்கள் கிளீஸ் சேவ் செய்து காதலிகளைச் சந்திக்கும் போது இவர்களின் காதலிகள் மிகவும் உற்சாகம் அடைகின்றார்கள். இதுதான் அந்த விளம்பரம்.
இந்த விளம்பரத்தின் மூலம் தாடி, மீசையுடன் இருக்கும் ஆண்களை கேவலப்படுத்துவதுடன் சவரம் செய்தால் தான் காதலியுடன் உல்லாசமாக இருக்கலாம் என்ற தவறனா கருத்தையும் விளம்பரமூடு பரப்புகின்றார்கள். இந்த விளம்பரத்தை யூடூயூப்பில் தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை.
கிரிக்கெட்
நேற்றைய ராஜ்கொட் போட்டியானது ரன் மழையில் மூழ்கியது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் ஆரம்பமே அதிரடியாக இருக்க சேவாக் அன்வரின் சாதனையை முறியடித்து 200 ஓட்டங்களைக் கடப்பாரா எனப் பலரும் எதிர்பார்க்க டெஸ்ட் போட்டியில் எப்படி 300 ஓட்டங்களைக் கடக்கமுடியாமல் அவட்டாகினாரோ அப்படியே நேற்றும் நடந்தது.
அதேபோல் இரண்டாம் இனிங்கிசில் இலங்கை அணியும் அதே அதிரடியுடன் ஆடியது, சேவாக்கைப் போல் டில்ஷான் அன்வரின் சாதனையை முறியடிப்பார் என நம்பிக்கொண்டிருக்க அன்வரின் சாதனை மீண்டும் தப்பியது. இறுதியில் இந்திய அணி இலங்கைப் பின்வரிசை வீரர்களின் சொதப்பலான ஆட்டத்தினால் வென்றுவிட்டது. இரண்டு அணியின் பந்துவீச்சாளர்களும் வள்ளல்களாக மாறியிருந்தார்கள். நல்லகாலம் இந்திய அணி வெறும் 3 ஓட்டங்களினால் தான் வென்றது இல்லையென்றால் இந்தப் பிட்ச் போட்டிக்கு சரியில்லை,பிட்சை வைத்துதான் இந்திய அணி வென்றது எனப் பொருள் பட விமர்சனம் பலரால் எழுப்பப்பட்டிருக்கும்.
ஒரு குட்டிக் கதை
அண்மையில் சந்தித்த என்னுடைய நண்பர் ஒருவர் கொஞ்சம் சோகமாக இருந்தார் ஏனென்று கேட்க தன் சோகக் கதையைச் சொன்னார். அண்மையில் அவரின் காதலியின் பிறந்தநாள் வந்தது. இருவரும் ஒரிடத்தில் சந்தித்தார்கள், என் நண்பன் தன் கையில் இருந்த அன்புப் பரிசை கொடுத்து வீடு சென்றுதான் பிரிக்கவேண்டும் என்ற அன்புக் கட்டளையும் இட்டான். அவனின் செல்லச் சிரிப்பில் மயங்கிய நண்பனின் காதலியும் தன்னுடைய பரிசாக ஒரு பறக்கும் முத்தத்தை நண்பனுக்கு வழங்கிவிட்டு அதே இடத்தில் பிரிக்க முயற்சிக்க நண்பனோ விடாப்பிடியாக இங்கே பிரிக்கவேண்டாம் வீட்டில் பிரிக்கவேண்டும் என மீண்டும் வற்புறுத்த அவனின் காதலியோ அவனின் அன்புக்காக வீட்டில் சென்று ஏதோ மோதிரமோ அல்லது மொபைல் போனோ உள்ளே இருக்கும் என்ற ஆவலில் பிரிக்க உள்ளே இருந்ததோ இரண்டே இரண்டே இஞ்சி பிஸ்கட் மாத்திரம் இருந்தது. அடுத்த நாளே என் நண்பனை அவள் கேட்டாளாம் "ஏன்டா பரதேசி உனக்கு இஞ்சி பிஸ்கட் தான் கிடைத்ததா? அட்லீஸ்ட் ஒரு லெமன் பப்பாவது கிடைக்கவில்லையா?". சாடிக்கு ஏற்ற மூடி ஹிஹிஹி. (உண்மைக் கதை ).jpg)
எழுதியது வந்தியத்தேவன் at 19 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் கிரிக்கெட், சூப், தமிழ்மணம், பதிவர் வட்டம்
ஹாட் அண்ட் சவர் சூப் 11-11-09
ஜனாதிபதித் தேர்தல்
ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட முன்னரே இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் முஸ்தீபுகள் தொடங்கிவிட்டன. தற்போதைய ஜனாதிபதியை எதிர்த்து தேர்தலில் போட்டி இடுபவர் யார் என்ற சர்ச்சை இன்னமும் தீர்ந்தபாடில்லை.
ஜக்கிய தேசிய கட்சியின் தலைவரோ வழக்கம் போல் அமைதியாக இருக்கின்றார். நிச்சயம் அந்தக் கட்சியின் சார்பில் அவர் போட்டியிடமாட்டார். காரணம் அவர் தோல்விகளின் நாயகன் என அறியப்பட்டவர். ஆகவே கட்சியின் சார்பில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவோ அல்லது முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவோ போட்டியிடக்கூடும்.
இதே வேளை அரசாங்க ஊடகங்களில் சரத் பொன்சேகாவிற்க்கு எதிரான பிரச்சாரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைமுகமாக மேற்கொள்ளப்படுகின்றது. அத்துடன் மகா நாயக்க தேரர்கள் கூட சரத் பொன்சேகா தேர்தலில் போட்டியிடுவதை எதிர்க்கின்றார்கள்.
அதே நேரம் சரத் பொன்சேகாவின் ராஜினாமாவை தான் ஏற்கத் தயார் என்றும் அந்தக் கடிதத்திற்கான பதிலை அரை மணி நேரத்தில் அனுப்பிவைப்பேன் எனவும் கூறியுள்ளார். இன்னும் சில நாட்களில் இலங்கை அரசியல் வட்டாரங்களில் பல சுவாரசியங்கள் நடக்கும்.
இரண்டாவது பதிவர் சந்திப்பு
கடந்த சில நாட்களாக இரண்டாவது பதிவர் சந்திப்பின் முக்கியம் பல வலைப்பதிவர்களால் பிரேரிக்கப்பட்டுள்ளது. பதிவர் சந்திப்பானது 3 அல்லது 4 மாதத்திற்க்கு ஒருமுறை நடத்துவதுதான் சிறந்தது என எம்மால் முதலாவது சந்திப்பில் தீர்மானித்திருந்தோம். அடிக்கடி சந்தித்தால் சந்திப்பில் எந்த சுவாரசியமும் இருக்காது.
இரண்டாவது சந்திப்பை ஒழுங்குபடுத்த இன்னொரு மிகவும் துடிப்பான ஆர்வமுள்ள சிலர் முன் வந்திருக்கின்றார்கள். அவர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவிக்கும் அதேவேளை சிறந்த திட்டமிடல் இல்லையென்றால் சிறப்பாக செய்யமுடியாது என்பதையும் தெரிவிக்கின்றேன். காரணம் கடந்த முறை நாங்கள் திட்டமிடுவதற்கே பலமுறை சந்தித்திருந்ததோம். ஒரு கிழமைக்குள் திட்டுமிட்டு நடத்தினால் சந்திப்பு வெற்றியளிக்காது என்பதையும் அறிவீர்கள்.
இம்முறை பதிவர்களின் விபரங்களை பெற்றுக்கொள்ளும் கஸ்டம் உங்களுக்கு இல்லை. காரணம் ஏற்கனவே எம்மிடம் இவர்களின் விபரங்கள் எம்மிடம் இருப்பதால் அதனை வைத்து நீங்கள் அனைவரையும் தொடர்புகொள்ளமுடியும்.
வடிவேல் பாணியில் சொல்வது என்றால் "எதையும் பிளான் பண்ணிப் பண்ணனும் சரியோ".
பதிவர் சர்ச்சைகள்
சில காலங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் பரபரப்பையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்திய போலிப் பிரச்சனை தற்போது இலங்கைக்கு பரவியுள்ளது. நண்பர் சந்ருவின் வலையில் வரும் ஆக்கங்களை ஒருவர் தன்னுடைய வலையில் பதிவு செய்கின்றார். அதுமட்டுமல்ல சில நண்பர்களின் பெயர்களில் ஒருவரோ அல்லது ஒரு குழுவோ ல் வந்து போலிப் பின்னூட்டங்கள் இடுகின்றார்கள்.
ஒருவரோ ஒரு குழுவோ பல பெயர்களில் வந்து சர்ச்சையான பின்னூட்டங்களை இட்டு பதிவர்களை வம்புக்கு இழுக்கின்றார்கள். அதே நேரம் இப்படியானவர்களின் பின்னூட்டங்களையும் கருத்துகளையும் கருத்தில் எடுக்ககூடாது என்பது என் அனுபவத்தில் கண்ட உண்மை.
"துஷ்டனைக் கண்டால் தூர விலகு"
கிரிக்கெட்
அவுஸ்திரேலியா இந்திய அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டித் தொடரை ஆஸி 4க்கு 2 என்ற விதத்தில் வெற்றி பெற்றிருக்கின்றது. ஆஸி இந்தியாவிற்க்கு விஜயம் செய்தபோது சிறுவர்களின் அணி எனப் பலரால் கிண்டல் செய்யப்பட்டது காரணம் மூத்த அனுபவ வீரர்கள் காயம் காரணமாக விளையாடமுடியாத நிலையில் பல புதிய வீரர்களுடன் களமிறங்கிய ஆஸி இந்திய அணியைச் சுருட்டி எடுத்துவிட்டது.
இந்திய அணியின் சச்சின், டோணி, ரெய்னா மட்டும் சிறப்பாக ஆடுகின்றாகள். ஏனையவர்கள் ஏனோதானோ என ஆடியதால் வந்த வினை இது, அதிலும் குறிப்பாக சேவாக், கம்பீர், யுவராஜ் ஆஸியை அச்சுறுத்தவில்லை. இன்றைய இறுதிப்போட்டியை வெற்றி பெற்று ஆஸி 5 க்கும் 2 என்ற கணக்கில் தொடரை வெல்லுமா? இல்லை இந்தியாவிற்க்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா?
இந்தியாவின் அடுத்த போட்டித் தொடர் இலங்கை அணியுடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்தியாவி இந்த தோல்விகள் இந்திய அணியைப் பாதிக்குமா? இல்லை புதிய உத்வேகத்துடன் இலங்கையைச் சுருட்டுவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.
பிற்குறிப்பு : இலங்கையினுடனான போட்டிக்கு ஸ்ரீசாந்த் மீள அழைக்கப்பட்டிருக்கின்றார், ஆகவே போட்டிகளில் நிச்சயமாக சர்ச்சைகள் ஏற்படும் வாய்ப்புண்டு.
அணுவளவும் பயமில்லை
அனுஹாசன் தொகுத்தளித்த அணுவளவும் பயமில்லை சீசன் 1 நிறைவு பெற்று தற்போது லஸ்மிராய் தொகுத்தளிக்க சீசன் 2 ஆரம்பமாகியுள்ளது விஜய் தொலைகாட்சியில். லஸ்மிராய்க்கு தமிழும் ஒழுங்காக வரவில்லை ஆங்கிலமும் வரவில்லை இரண்டு மொழிகளையும் கொல்கின்றார். ஒரு எபிசோட்டிற்க்கு இவரிற்க்கு பல ஆயிரம் என கழுகார் தெரிவித்திருந்தார். விஜய் தொலைக்காட்சி ஏன் ஒரு நிகழ்ச்சியை ஒழுங்காக் செய்யத் தெரியாதவர்களுக்கு பணம் செலவளிக்கின்றது என்பது புரியாத புதிர்,
அத்துடன் இதனை மிகவும் மெதுவான சலனப் படத்தின் மூலம் காட்டுவதால் பார்ப்பவர்களுக்கு வெறுக்கின்றது. புதிய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்துவதில் விஜய் தொலைக்காட்சிக்கு நிகர் அவர்களே அதே நேரம் அந்த நிகழ்ச்சியை பின்னர் சொதப்புவதும் அவர்கள் தான்.
எழுதியது வந்தியத்தேவன் at 22 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் அரசியல், கிரிக்கெட், சூப், பதிவர் வட்டம்
ஹாட் அண்ட் சவர் சூப் 28-10-09
தேர்தல் திருவிழா
இலங்கையில் அடுத்த வருட ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தலையும் பாராளமன்றத்திற்கான பொதுத் தேர்தலையும் ஒரே நாளில் நடத்த அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் 2 வருடங்கள் இருக்கும் நிலையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவிருப்பது ஆச்சரியத்தை அளிக்கின்றது. இதே நேரம் நேற்று மக்கள் விடுதலை முன்னணி() நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைய நீக்கும் படி ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா காலத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி நீக்கப்படவேண்டும் என இரண்டு கட்சிகளும் ஒப்பந்தம் செய்து பொதுத் தேர்தலையும் சந்தித்து வெற்றியும் பெற்றன.
இதே வேளை ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களை எதிர்த்து ஜக்கிய தேசியக் கட்சி சார்பில் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா அல்லது முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் போட்டியிடலாம் என ஊகங்கள் எழுந்துள்ளன. கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க இதுவரை வாயே திறக்கவில்லை.
நவம்பர் 15ந்திகதி உத்தியோகபூர்வமான அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. டிசம்பர் தொடக்கம் திருவிழா ஆரம்பமாகப்போகின்றது. பேரம் பேசுதல்களும் கட்சி மாறுதல்களும் நிகழப்போகின்றன. அதே நேரம் இரு தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்துவதன் மூலம் தேர்தல் திணைக்களம் செலவீனத்தைக் குறைத்துள்ளமை பாராட்டத்தக்கது.
இருக்கிறம் ஒன்று கூடல்
இருக்கிறம் சஞ்சிகை எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கை வலைப்பதிவர்கள், அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் ஊடான ஒன்றுகூடல் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளமை தெரிந்ததே. சிலர் இந்த ஒன்றுகூடலை வலைப்பதிவர் சந்திப்பு என தவறாக புரிந்துகொண்டுள்ளனர். வலைப்பதிவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்தாலும் அவர்கள் தங்களுக்குள் கலந்துரையாடினாலும் பொதுவான விவாதங்களோ கலந்துரையாடல்களோ நடக்கும் சாத்தியங்கள் இல்லையென்றே இருக்கிறம் நிர்வாகம் தெரிவித்திருக்கின்றது.
இந்த ஒன்றுகூடலானது பாடசாலை, கல்லூரி நாட்கள் ஒன்றுகூடல் போல் சுவாரசியமாகவே இருக்கப்போகின்றது. சென்ற சந்திப்பில் பலர் எமக்குள் சந்தித்து பேசமுடியவில்லை எனக் குறைப்பட்டார்கள். ஆனால் இந்தச் சந்திப்பில் உங்கள் நண்பர்களை நீங்கள் சந்தித்து அளவளாவ முடியும். அத்துடன் சில ஆச்சரியங்களும் காத்திருக்கின்றன என இருக்கிறம் நிர்வாகிகள் அறிவித்திருக்கின்றார்கள்.
இருக்கிறம் அலுவலகத்தை வந்தடையும் பாதைகள்.
தெகிவளை,வெள்ளவத்தை, பம்பலப்பிட்டிப் பகுதிகளில் இருந்து வருபவர்கள் 154 ஆம் இலக்க பஸ்சில் ரூபவாஹினி அல்லது டொரிங்டன் என ரிக்கெட் எடுத்து ரூபவாஹினிக்கு முன்னால் இறங்கவும். கொட்டாஞ்சேனை, மோதரை, மட்டக்குளி பக்கம் இருந்து வருபவர்கள் கொட்டாஞ்சேனையில் 176 ஆம் இலக்க பஸ்சில் ஏறி பொரளையில் இறங்கவும் அங்கிருந்து 154 அல்லது 104 ஆம் இலக்க பஸ்சில் ஏறி ரூபவாஹினிக்கு முன்னால் இறங்கவும். மோதரை மட்டக்குளியைச் சேர்ந்தவர்கள் 173 ஆம் பஸ்சில் நேரடியாக வரலாம் ஆனால் விடுமுறை தினம் என்பதால் பஸ் குறைவாக இருக்கும்.
பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் கோட்டையில் இறங்கி 103 ஆம் இலக்க பஸ்சில் பொரளைக்கு வரவும், அங்கிருந்து 154 அல்லது 104 ஆம் இலக்க பஸ்சில் ஏறிவரலாம்.
வத்தளையில் இருந்து வருபவர்கள் பொறுமை இருந்தால் 104ஆம் இலக்க பஸ்சில் நேரடியாக டொரிங்டனை வந்தடையலாம்.
மிகவும் இலகுவான வழி பாதை தெரிந்தவர்களுடன் தொற்றிக்கொண்டு வருவதே.
திருமண வாழ்த்துக்கள்
சக பதிவரும் நண்பருமான ஜீவநதி வலையின் சொந்தக்காரர் டொக்டர் த,ஜீவராஜின் திருமணம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(01.11.2009) திருகோணமலையில் நடைபெறவிருக்கின்றது. அவருக்கும் சகோதரி அருணாவிற்க்கும் பதிவர்களின் சார்பிலும் என் சார்பிலும் திருமண வாழ்த்துக்கள்.
பதிவுத் திருட்டுகள்
நேற்று இணையத்தில் மேய்ந்துகொண்டிருக்கும் போது ஒரு வலையில் ஒரு கட்டுரையைப் பார்த்து எனக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. காரணம் நான் எழுதிய ஒரு பதிவை எந்த மாற்றமும் இன்றி ஒருவர் தன்னுடைய வலையில் இணைத்திருக்கின்றார்கள். ஆனால் அந்தப் பதிவை எங்கிருந்தது எடுத்தது என்ற தகவல்களைக் காணக்கிடைக்கவில்லை. ஏற்கனவே பதிவுலகத்தில் இப்படியான சில திருட்டுகள் நடப்பதாக நண்பர்கள் சொன்னார்கள். என் நண்பர்கள் சிலருடைய சில படைப்புகள் வேறு நபர்களால் சுடப்பட்டு மூஞ்சிப்புத்தகத்திலும் வேறு வலைகளில் அப்படியே இணைக்கப்படுகின்றன.
பதிவுகளை ஏனைய இடங்களில் இணைப்பவர்கள் தயவு செய்து எங்கிருந்து எடுத்தீர்கள் எனச் சொன்னால் எந்தப் பிழையும் இல்லை. பதிவுகளை எப்படி இவர்களிடம் இருந்து காப்பது என்பதையும் தொழில்நுட்பப் புலிகள் சொல்லுங்கள்.
அண்ணன் உண்மைத்தமிழனின் அபிமான நடிகை அனுஷ்கா என்பதை அவரின் மூஞ்சிப்புத்தகத்தில் தெரிந்துகொண்டேன் அவருக்காக வேட்டைக்காரி அனுஷ்காவின் அழகிய தோற்றம்
எழுதியது வந்தியத்தேவன் at 36 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் அரசியல், இலங்கை, சூப், பதிவர் சந்திப்பு, பதிவர் வட்டம்
ஹாட் அண்ட் சவர் சூப் 21-10-09
பாராளுமன்றமா விளையாட்டு மைதானமா?
நேற்று சில நாட்களின் பின்னர் இலங்கைப் பாராளமன்றம் கூடியது. வழக்கம்போல் பாராளமன்றத்தில் சில அமைச்சர்கள் தங்கள் வாய்வார்த்தையை விட அதிரடி நடவடிக்கைகளால் மன்றத்தைக் கலகலப்பாக்கினார்கள். கோட்டு சூட்டுப்போட்ட ஒரு அமைச்சர் பத்தாம் வகுப்பு பாஸாகவில்லை என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியதுடன் அவருக்கு ஆங்கிலம் தெரியவில்லை எனவும் கேலி செய்தார்கள். கோட்டு சூட்டுப் போட்டால் கட்டாயம் ஆங்கிலம் தெரியவேண்டுமா? தமிழ்சினிமாவில் வில்லனின் அடியாட்கள் பலரும் கோட்சூட்டுடன் தான் சண்டைபோடுகின்றார்கள். ஆங்கிலம் தெரியாது என எதிர்க்கட்சியினரால் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் முன்னர் அவர்களின் கட்சியில் இருந்து ஆளும் கட்சிக்கு மாறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உறுப்பினர்களின் சச்சரவினால் முக்கியமான பிரச்சனையான ருபெல்லா தடுப்புமருந்து விவகாரம் பெரிதாகப் பேசப்படவில்லை. இந்தியா இலங்கைக்கு அன்பளிப்பாக கொடுக்கும் பெரும்பாலான மருந்துகள் காலாவதியானவை என எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
தமிழ்மொழியின் சக்தி
நேற்று இலங்கையின் பிரபல தொலைக்காட்சி ஒன்று தங்கள் பிறந்ததினத்தை கொண்டாடியது. இவர்களின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் 75% வீதமான நிகழ்ச்சிகள் சன்னின் இழுவைத் தொடர்களேயாகும். ஏனைய 25%வீதமான தங்கள் சுயதயாரிப்புகள் கூட தனித்துவமானவை அல்ல. நேற்றுக்கூட சில அறிவிப்பாளினிகள் எழுவாய், பயனிலை, செயற்படுபொருள் இல்லாமல் அறுத்துக்கொண்டிருந்தார்கள். ஒரு நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும் போது நண்பர் ஒருவர் "பேயை நேரில் பார்த்திருக்கின்றீர்களா? இல்லையென்றால் குறிப்பிட்ட தொலைக்காட்சியைப் பாருங்கள்" என குறும் செய்தி அனுப்பினார். தொலைக்காட்சியைப் பார்த்தால் ஒரு அழகான பெண்ணை ஒப்பனை என்ற பெயரில் அசிங்கமாக்கியிருந்தார்கள். அவர்களின் தொலைக்காட்சி நிலையத்தில் முகம் பார்க்கும் கண்ணாடி இல்லையோ தெரியவில்லை. எத்தனையோ பத்திரிகைகளில் இவர்களின் குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் தங்கள் சர்வாதிகார போக்கினால் அவற்றைக் கவனத்தில் எடுப்பதேயில்லை. தங்கள் தான் தமிழ் மொழியை வளர்க்கின்றோம் எனச் சொல்லிக்கொண்டு நிகழ்ச்சிகளுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்கும் இவர்களின் போக்கை நினைத்தால் நெஞ்சு பொறுக்குதில்லை.
தீபாவளியும் தொலைக்காட்சிகளும்
தீபாவளியும் ஒருமாதிரி வந்து போய்விட்டது. இலங்கையில் தீபாவளி பெரிதாக கொண்டாடப்படுவதில்லை என்பதால் இது ஒரு சாதாரண நாள் போல் தான் பலருக்கு இருந்தது. என்ன சிலர் கோவிலுக்குப் போய் வருவார்கள். கோவில்களில் கூட இம்முறை மக்கள் குறைவாகவே இருந்தார்கள்.
கலைஞர் தொலைக்காட்சி உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முதலாக என தசாவதாரம் படம் மாலையில் ஒளிபரப்பினார்கள், ஆனால் இவர்களுக்கு முன்னால் இலங்கையின் வசந்தம் தொலைக்காட்சி 12.30 மணிக்கு தசாவதாரம் படத்தை ஒளிபரப்பினார்கள். கலைஞரின் உலகத் தொலைக்காட்சியில் வசந்தம் தொலைக்காட்சி இல்லையா? இல்லை உலகம் என்பது தமிழ்நாடு மட்டும்தானா?
சகல தொலைக்காட்சியிலும் ஒரு குறிப்பிட்ட சிலரின் பேட்டிகளை ஒளிபரப்பி பொறுமையைச் சோதித்தார்கள். விஜய் தொலைக்காட்சி மட்டும் வழக்கம் போல் வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஆனால் தங்களின் அதே ஆட்களை வைத்து நடத்தியது. தீபாவளிச் சிறப்பு நிகழ்ச்சியாக இவர்களின் சூப்பர் சிங்கர் ஜூனியரில் பங்கேற்ற சிறுவர்களின் குடும்பத்தினரும் தங்கள் திறமைகளைக் காட்டியது சிறப்பாக இருந்தது. பலரின் தாய், தந்தையர் அழகாக்வும் திறமையாகவும் பாடுகின்றனர்.
கமல் 50 சிறப்பு மலர் வெளியீடு
திரையுலகில் 50 ஆண்டுகளைக் கடந்த உலகநாயகன் பத்மஸ்ரீ கமலஹாசனைப் பற்றிய சிறப்பு மலர் ஒன்று எதிர்வரும் அக்டோபர் 25ந்திகதி மாலை 6 மணிக்கு சுகததாச ஸ்போர்ட்ஸ் ஹோட்டல் கேட்போர் கூடத்தில் நடைபெற இருக்கின்றது.
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்.
சின்ன சந்தேகம்
சினிமா, விளையாட்டுகள் எல்லாம் காத்திரமான விடயங்கள் இல்லையா? அண்மையில் நண்பர் ஒருவர் என்னுடன் அதிகமாக சினிமா, கிரிக்கெட் பற்றி எழுதுகின்றேன் என கோபித்தார். வலையில் எழுதுகின்ற பெரும்பாலானவர்கள் சாதாரண விடயங்களை அலசி ஆராயும் மனிதர்களே ஒழிய காத்திரமான விடயங்களை எழுதும் எழுத்தாளர்கள் அல்ல. அதே நேரம் சமூக, சிந்தனை வெளிப்பாடுடைய பதிவுகள் எழுதினால் பெரிதாக எவரும் படிப்பதில்லை என்பது என் சொந்த அனுபவம். அத்துடன் அப்படியான பதிவுகளை எழுதும்போது நிறையத் தேடல்கள் தேவை. சாதாரணமாக வலையில் எழுதுபவர்களுக்கும் இப்படியான தேடல்கள் செய்ய நேரம் போதாது. சினிமா, கிரிக்கெட் எல்லாம் மொக்கையா? என்னுடைய சந்தேகத்தை தீர்த்துவையுங்கள்.
எழுதியது வந்தியத்தேவன் at 7 கருத்துக் கூறியவர்கள்
ஹாட் அண்ட் சவர் சூப் 14-10-09
கமல் பொன்விழா
ஒருபடியாக விளம்பரங்களுக்கு மத்தியில் கமல் 50 பிரமாண்ட இறுதி நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பிமுடித்துவிட்டது. விஜய் என்றாலே வித்தியாசம் என்பது அனைவருக்கும் தெரிந்தது. இந்த நிகழ்ச்சியையும் வித்தியாசமாகவும் ஒழுங்காவும் நன்கு திட்டமிடலுடனுன் நடத்தி முடித்துள்ளார்கள். நிகழ்ச்சி பற்றி எழுத எத்தனையோ விடயங்கள் இருந்தாலும் ரஜனி கமல் நட்புத்தான் நிகழ்ச்சியின் ஹைலைட்டே. கமல் ரசிகர்கள் ரஜனி படத்தை ரசித்தாலும் ஏனோ ரஜனி ரசிகர்கள் கமலை விமர்சிப்பதுபோல் விமர்சிப்பதில்லை. ரஜனி ரசிகர்களே உங்கள் தலைவரின் பெரும்தன்மையை இனியாவது கடைப்பிடிப்பீர்களா? . நிகழ்ச்சி பற்றியும் இவர்கள் நட்பு பற்றியும் தனிப்பதிவுகள் விரைவில். (கிளம்பிட்டாங்கைய்யா கிளம்பிட்டாங்க).
சூரியாவும் மன்னிப்பும்
புவனேஸ்வரியின் விவகாரத்தால் கொதித்துப்போன நடிகர்கள் தங்கள் எதிர்ப்பை தினமலருக்கு தெரிவித்த கூட்டத்தில் சகல பத்திரிகையாளரையும் ஒரு பிடிபிடித்த நடிகர் சூரியா தான் அப்படிச் சொல்லவில்லை என பல்டி அடித்ததுடன் பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார். உடனே இவர் ஏன் மன்னிப்புக் கேட்டார் என சின்னக் குழந்தைக்கும் தெரியும் காரணம் தீபாவளிக்கு இவரின் படம் வெளியாகப்போகின்றது. பத்திரிகைகளைப் பகைத்தால் படத்திற்க்கான சரியான விமர்சனம் (?) கிடைக்காது என்ற சுயநலமே ஒழிய வேறு இல்லை. சூரியா உங்களின் நடவடிக்கைகளும் உங்கள் தந்தையின் நல்ல குணங்களும் உங்களிடமும் இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களின் எண்ணத்தில் உங்களைப் பற்றிய கறுப்புப் புள்ளி படிய வைத்துவிட்டீர்கள். ஒன்று மட்டும் நிச்சயமாக கூறமுடியும் உங்களுக்கு நல்ல அரசியல் எதிர்காலம் இருக்கிறது.
யாழ்தேவியும் தினக்குரலும்
சில நாட்களுக்கு முன்னர் யாழ்தேவி திரட்டி நிர்வாகத்திற்க்கும் தினக்குரல் பத்திரிகைக்கும் நடைபெற்ற கலந்துரையாடலில் தினக்குரல் பத்திரிகை ஞாயிறு தினக்குரலில் யாழ்தேவி திரட்டியில் இணைக்கப்பட்ட வலைகளில் வெளியாகும் காத்திரமான கட்டுரைகளை தினக்குரலில் வெளியிட சம்மதம் கொடுத்திருக்கின்றது. ஏற்கனவே இருக்கிறம் சஞ்சிகையில் வலைப்பதிவர்களின் ஆக்கங்களுக்கு அங்கீகாரம் கிடைத்தவேளையில் இந்தச் செய்தியும் அவர்களுக்கு ஊக்கத்தை அளிக்கும். இதன் மூலம் இலைமறை காயாக இருக்கின்ற வலைப்பதிவர்கள் வெளியே தெரியவரும் வாய்ப்பு வரும். திரட்டிகளில் இணைப்பதன் மூலம் பல வாசகர்களை உங்கள் கருத்துகள் சென்றடைவதுபோல் பத்திரிகைகள், சஞ்சிகைகள் மூலம் இணைய வசதி இல்லாதவர்களும் உங்கள் எண்ணங்களை அறிந்துகொள்ளமுடியும்.
மேலதிக விபரங்களுக்கு: யாழ்தேவி
கிரிக்கெட்
சாம்பியன்ஸ் லீக் இருபதுக்கு 20 இந்தியாவில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. 12 அணிகள் கலந்துகொண்டுள்ளன. ஐபில் அணிகளாக பெங்களூர், டெல்லி மற்றும் தற்போதைய சம்பியனான டெக்கான் விளையாடுகின்றன. சில போட்டிகள் விறுவிறுப்பு குறைந்தனவாக இருந்தாலும் நேற்று ஈகில்ஸுக்கும் சசெக்ஸ்சுக்கும் இடையில் நடைபெற்ற போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. போட்டி சமநிலையில் முடிந்ததனால் ரி20 போட்டி நிபந்தனைகளின் படி சூப்பர் ஓவரில் போட்டியின் முடிவு தீர்மானிக்கப்பட்டது. சூப்பரில் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஈகில்ஸ் 10 ஓட்டங்களை மட்டும் எடுத்தது. 11 ஓட்டங்களை இலக்காக கொண்டு ஆடிய சசெக்ஸ் சிஜேடி வில்லியர்ஸின் முதல் 2 பந்துகளில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஓட்டங்களை எடுக்காமல் தோல்வியடைந்தது. இன்றைய போட்டியில் டெக்கானின் தலையெழுத்து தெரிந்துவிடும். அடுத்த சுற்றுப் போட்டிகள் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும் என நினைக்கின்றேன்.
எழுதியது வந்தியத்தேவன் at 22 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் கமல், கிரிக்கெட், சினிமா, சூப், விளையாட்டு
ஹாட் அண்ட் சவர் சூப் 07-10-09
புத்தாண்டு புதுக் குழப்பம்
பொதுவாக டிசம்பர் 31 என்றாலே அனைவரின் மனதிலும் வருவது புத்தாண்டுக் கொண்டாட்டமே. கிறிஸ்துமஸ் அன்று தொடங்கும் கொண்டாட்டங்கள் புதுவருடம் வரை நீடிப்பது வழக்கம். உலகமே டிசம்பர் 31 இரவைக் குதுகலாமாக கொண்டாடும் போது இலங்கையில் மட்டும் ஒரு குழப்பம்.
என்ன குழப்பம் என்றால் டிசம்பர் 31 ந்திகதி போயா(பெளர்ணமி) தினமாகும். இங்கே போயா தினம் விடுமுறையாகவும் மதுபானங்கள், இறைச்சி போன்றவை விற்பனை செய்யமுடியாத நாளாகவும் இருக்கின்றது. ஆகவே டிசம்பர் 31 ந்திகதி எப்படி மதுபானம் இல்லாமல் கொண்டாடுவது.
டிசம்பர் 31ந்திகதி ஆட்டம் பாட்டம் எனக் கொடி கட்டிப் பறக்கும் நட்சத்திர ஹோட்டல்கள், பப்கள் எப்படி இந்த நிலையைச் சமாளிக்கப்போகின்றன. சிலர் அரசாங்கத்துக்கு நள்ளிரவு 12 மணியின் பின்னர் மதுபானங்களை விற்க அனுமதி கோரியிருக்கின்றார்கள். ஆனாலும் அதற்கெல்லாம் விசேட அனுமதி தேவைப்படும் என சட்ட வல்லுனர்கள் கூறுகின்றார்கள்.
அதே நேரம் வீடுகளில் மதுபானங்களுடன் கொண்டாடுபவர்களை எந்தச் சட்டமும் ஒன்றும் செய்யமுடியாது.
தீபாவளிக் குழப்பம்
எதிர்வரும் 17ந்திகதி தீபாவளி பண்டிகை வருகின்றது. அன்றைக்கு புரட்டாதி மாதம் என வாக்கிய பஞ்சாங்கம் கூறுகின்றது. அதனால் புரட்டாதியில் 300 வருடங்களுக்குப் பிறகு தீபாவளி வருவதாகவும் கூறுகின்றது.
திருக்கணிதப்படி ஐப்பசி முதலாம் திகதிதான் தீபாவளி. அன்று துலாத்தில் சூரியன் நுழைகிறான். வாக்கிய பஞ்சாங்கம் பிழை என்றும் அதனால் தீபாவளி ஐப்பசியில் தான் வருகின்றது இதனால் எந்த குழப்பமும் இல்லையென்றும் கூறுகின்றது.
நல்ல காலம் இந்த குழறுபடியை வைத்து புடைவை நகை வியாபாரிகள் சகோதரர்களுக்கு தோஷம், பெற்றோர்களுக்குத் தோஷம் என இந்த வியாபாரத் தந்திரங்களும் செய்யவில்லை.
எது எப்படியோ தீபாவளி என்பது ஆரியர்களின் பண்டிகைதான். இதனால் தமிழர்களுக்கு எந்தப் பிரயோசனமும் இல்லை ஒரு நாள் விடுமுறைமட்டும் அனுபவிக்கலாம்.
கிரிக்கெட்
நடந்து முடிந்த ஐசிசி மினி உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் அணித் தலைவர் யூனிஸ் கானும் பயிற்றுவிப்பாளர் இந்திகாப் அலாமும் சூதாட்டத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர்.
ஆனால் இந்தப் போட்டியை விட அவுஸ்திரேலியாவுக்கு எதிரான வெல்ல வேண்டிய போட்டியை இந்தியாவை வெளியேற்றச் செல்வதற்காக பாகிஸ்தான் வேண்டுமென்றே தோற்றதாகவும் சிலர் கூறுகின்றார்கள். பாகிஸ்தான் வெல்ல வேண்டுமென பிரார்த்தித்த இந்தியர்களின் பிரார்த்தனை வீணாகியது.
பாகிஸ்தான் சூதாட்டத்தில் இறங்கியிராவிட்டால் நல்லதொரு இறுதிப்போட்டி பார்வையாளர்களுக்கு கிடைத்திருக்கும். ஆஸியும் நியூசியும் மோதிய போட்டி ஒரு இறுதிப்போட்டி போல தோன்றவே இல்லை.
புவனேஸ்வரி
புவனேஸ்வரி சில நாட்களாக ஊடகங்களில் அடிபடும் சூடான பெயர். இரண்டாம் தடவையாக விபசாரத் தடுப்பு போலிசாரால் கைது செய்யப்பட்டு காவலில் வைத்திருக்கப்படுபவர். சில நாட்களுக்கு முன்னர் அவர் தன்னைத் தவிர ஏனைய சில கொடிகட்டிப் பறந்த பறக்கின்ற நடிகைகளும் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றனர் என கொழுத்திப்போட்ட அணுகுண்டு கோடம்பாக்கத்தில் அதிக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
புவனேஸ்வரிக்கு ஆதரவாக சில விவிஜபிகள் இருப்பதாகவும் அவர்கள் தற்போது அவரைக் கைவிட்டுவிட்டதாகவும் அரசல் புரசலாக செய்திகள் கசிகின்றது. புவனேஸ்வரியின் வாக்குமூலத்தால் கொதித்துப் போயுள்ள நடிகர் சங்கம் போலீஸ் கமிசனரிடம் தங்கள் புகாரையும் கொடுத்திருக்கின்றார்கள்.
ஒரு சில நடிகர்கள் முதல்வரையும் தங்களுக்கு சார்பாக இருக்கச் சொல்லி வற்புறுத்துகின்றார்களாம்.
எத்தனையோ கோடி ரூபாக்களை கொள்ளை அடித்த அடித்துக்கொண்டிருக்கின்ற அரசியல்வாதிகளை விட்டுவிட்டு ஏனோ வயிற்றுப் பிழைப்புக்காக விபசாரத்தில் ஈடுபட்ட நடிகைகளை கைது செய்வது காவல் துறைக்கு பிழைப்பாகிவிட்டது என புவனேஸ்வரி சார்பில் பேசவல்லவர்கள் கூறுகின்றார்கள்.
எது எப்படியோ சிறையினுள் தன் வாழ்க்கை வரலாற்றை(?) எழுதப்போவதாக புவனேஸ்வரி கூறியுள்ளார். யார் யாருடைய குட்டுகள் வெளியில் வரப்போகின்றதோ பொறுத்திருந்து பார்ப்போம். சென்சேசனல் நியூஸ் தேடும் மீடியாக்களுக்கு புவனேஸ்வரி சில நாட்களுக்கு ஹாட் டாபிக் தான்.
எழுதியது வந்தியத்தேவன் at 5 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் அரசியல், சினிமா, சூப், விளையாட்டு
ஹாட் அண்ட் சவர் சூப் 30-09-09
அண்ணா நூற்றாண்டு
சில நாட்களுக்கு முன்னர் அண்ணா நூற்றாண்டு கவியரங்கம் கலைஞரில் நேரலை செய்தார்கள். தமிழக முதல்வர் சுற்றம் சூழ கலந்துகொண்டார். கவிதை பாடிய கவிஞர்கள் அனைவரும் கவிதைக்கு பொய் அழகு என்பதை அப்பட்டமாக நிரூபித்தார்கள். கவிதைப் பித்தன், ஆண்டாள் பிரியதர்சினி, யுகபாரதி, வைரமுத்து என அனைவரும் அண்ணாவை மறந்து தம்பி புகழ் பாடினார்கள்.
ஆண்டாள் பிரியதர்சினி நாஸ்திகரான முதல்வரை தமிழ்க் கடவுள் முருகனுடன் ஒப்பிட்டது அபத்தம் என்றால், கவிப்பேரரசு அண்ணாப் போற்றுகின்றேன் என மகாத்மா காந்தியை கீழிறக்கிவிட்டார். காந்தி படம் உள்ள நோட்டு கிழியும் ஆனால் அண்ணா படம் உள்ள நாணயம் கிழியாது என்றார். ஒருவரை ஏற்றுவதற்காக இன்னொருவரை கீழே இறக்ககூடாது என்பது கவிப்பேரரசுவுக்குத் தெரியவில்லை.
இவர்களின் புகழ்களை முதல்வர் ரசிக்கவில்லை என்பது அவரின் முகபாவனைகளில் தெரிந்தது. அத்துடன் சபையில் பலரும் கேட்டுத்தான் கை தட்டுவாங்கினார்கள்.
தமிழக அரசு விருதுகள்
வழக்கம் போல் தமிழக அரசு விருதுகள் பலரைத் திருப்திப் படுத்த கொடுத்திருக்கின்றார்கள். இப்போ தான் தெரிகிறது கமல் படம் வெளியாகும் ஆண்டில் ரஜனி படம் வெளியாகாது, ரஜனி படம் வெளியாகும் ஆண்டில் கமல் படம் வெளியாகாது, ஏனென்றால் அப்படி வந்தால் யாருக்கு சிறந்த நடிகர் விருது கொடுப்பது என தமிழக அரசின் விருதுக் குழு குழம்பிப்போகும்.
தசாவதாரம் , சிவாஜியைவிட மொழி, சுப்பிரமணியபுரம், பூ, காஞ்சிவரம் எல்லாம் மிகவும் சிறந்த படங்கள் ஏனோ விருது கிடைக்கவில்லை. காஞ்சிவரத்திற்கு தேசிய விருது கிடைத்தது ஆனால் தமிழக அரசு விருது கிடைக்கவில்லை.
இந்த விருதுகளை விட நம்ம வலையுலக விருதுகள் எவ்வளவோ மேல் போல் தெரிகின்றது. விருதுகளும் சன் டீவி டொப் 10 நிகழ்ச்சிபோல் மாறிவருவது கண்டனத்துக்குரியது.
அப்பாவிக் கோவிந்தனின் கேள்வி: கலைஞருக்கு உளியின் ஓசைக்காக கிடைத்த சிறந்த வசனகர்த்தா விருதை யார் அவருக்கு கொடுபார்கள்?.
கிரிக்கெட்
தென்னாபிரிக்காவில் நடைபெறும் ஐசிசி மினி உலகக் கிண்ணப் போட்டிகளில் எதிர்பாராத அதிர்ச்சிகரமான பல முடிவுகள் கிடைத்திருக்கின்றன. பலமான தென்னாபிரிக்கா, இலங்கை, அணிகள் அரையிறுதிக்கு செல்லமுடியவில்லை. இந்தியாவில் தலைவிதி சில மணித்தியாலங்களில் நிர்ணயிக்கப்படும்.
ஸ்மித், ஸ்ரோஸ் விவகாரமும் பூதாகாரமாக வெடித்துள்ளது. இந்திய அணி தற்சமயம் தோற்றால் ரசிகர்கள் மீண்டும் கல்லெறிவார்களா? வீடு உடைப்பார்களா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
தற்போதைய நிலவரத்தை நம்ம தொலைக்காட்சி நடுவர்கள் பாணியில் சொன்னால்
New Zealand Selected, South Africa Eliminated and India Waiting List.
எழுதியது வந்தியத்தேவன் at 31 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் அரசியல், கிரிக்கெட், சூப், விருதுகள்
