நாம் யார் ? (Who We Are?)

நாம் யார் ? (Who We Are?)

வளமையான 
வாழ்விற்காக 
இளமைகளை 
தொலைத்த 
துர்பாக்கியசாலிகள்
 ! 

வறுமை என்ற 
சுனாமியால் 
கடலோரம்

கரை ஒதுங்கிய 
அடையாளம் தெரிந்த
நடை பிணங்கள் ! 

சுதந்திரமாக 
சுற்றி திரிந்தபோது 
வறுமை எனும் 
சூறாவளியில் சிக்கிய 
திசை மாறிய பறவைகள் !

நிஜத்தை தொலைத்துவிட்டு
நிழற்படத்திற்கு 
முத்தம் கொடுக்கும் 
அபாக்கிய சாலிகள் ! 

தொலைதூரத்தில்
இருந்து கொண்டே
தொலைபேசியிலே
குடும்பம் நடத்தும் 
தொடர் கதைகள் ! 

கடிதத்தை பிரித்தவுடன் 
கண்ணீர் துளிகளால் 
கானல் நீராகிப் போகும் 
மனைவி எழுதிய
எழுத்துக்கள் ! 

ஈமெயிலிலும் 
இண்டர்நெட்டிலும் 
இல்லறம் நடத்தும் 
கம்ப்யூட்டர் வாதிகள் 

நலம் நலமறிய
ஆவல் என்றால் 
பணம் பணமறிய 
ஆவல் என கேட்கும் 
 . டி எம் . மெஷின்கள் ! 

பகட்டான
வாழ்க்கை வாழ
பணத்திற்காக 
வாழக்கையை 
பறி கொடுத்த 
பரிதாபத்துக்குரியவர்கள் ! 

 சி காற்றில் 
இருந்துக் கொண்டே 
மனைவியின்
மூச்சுக்காற்றை
முற்றும் துறந்தவர்கள் !

வளரும் பருவத்திலே 
வாரிசுகளை
வாரியணைத்து 
கொஞ்சமுடியாத 
கல் நெஞ்சக்காரர்கள் ! 

தனிமையிலே 
உறங்கும் முன் 
தன்னையறியாமலே 
தாரை தாரையாக
வழிந்தோடும்
கண்ணீர் துளிகள் ! 

அபஷி என்ற அரபி 
வார்த்தைக்கு 
அனுபவத்தின் மூலம் 
அர்த்தமானவர்கள் !

உழைப்பு என்ற
உள்ளார்ந்த அர்த்தத்தை 
உணர்வுபூர்வமாக
உணர்ந்தவர்கள்!

முடியும் வரை
உழைத்து விட்டு
முடிந்தவுடன்
ஊர் செல்லும் 
நோயாளிகள் 

கொளுத்தும் வெயிலிலும் 
குத்தும் குளிரிலும் 
பறக்கும் தூசிகளுக்கும் 
இடையில் பழகிப்போன 
ஜந்துகள் ! 

பெற்ற தாய்க்கும் 
வளர்த்த தந்தைக்கும் 
கட்டிய மனைவிக்கும் 
பெற்றெடுத்த குழந்தைக்கும் 
உற்ற குடும்பத்திற்கும்

உண்மை நண்பர்களுக்காகவும்
இடைவிடாது உழைக்கும் 
தியாகிகள்


நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் அனுப்பிய கவிதை. எழுதியவர் யார் எனத் தெரியவில்லை.

நானும் சினிமாவும்

திரைப்படம் என்பது ஒரு பொழுதுபோக்கு அம்சம் என்பதையும் தாண்டி என்னை ஆட்கொண்டுவிட்டது. இதனை நீங்கள் என் பதிவுகளில் இருந்தே கண்டுகொள்ளலாம். சிலவேளைகளில் இந்தியாவில் பிறந்திருந்தால் யாரோ ஒரு நடிகருக்கு பாலாபிசேகம் செய்கின்ற ரசிகனாக மாறியிருந்திருப்பேன். நல்ல காலம் ஈழத்தில் பிறந்தபடியால் சும்மா படம் பார்த்து நண்பர்களுடன் சேர்ந்து விமர்சிப்பதுடன் நிறுத்திவிட்டேன்.   நான் விடலையாக இருக்கும்போது தமிழ்சினிமாவை கமல்,ரஜனி என்ற இருவரின் ஆட்சி(இப்போதும் இளையவர்களுடன் போட்டிபோடும் வல்லமை இவர்களை விட்டால் வேறு யாருக்கும் இல்லை). இவர்களைத் தவிர்த்து சண்டைக்காக விஜயகாந்தையும், காதல் நகைச்சுவைக்காக கார்த்திக்கையும் பிடிக்கும். இப்பவும் மூத்த ந‌டிகர்களின் விசிறியாக இருந்தாலும் ஏனோ நடிகைகள் மட்டும் அடிக்கடி மாறுகிறார்கள். ஆரம்பத்தில் ஸ்ரீ தேவி, குஷ்பு, கெளதமி,ரம்பா,மீனா, ஜோதிகா, சிம்ரன், அசின், பாவனா, மீரா ஜாஸ்மின் என நீண்ட பட்டியல் தற்போது சரண்யா மோகனில் வந்து நிற்கிறது. என் சினிமா அனுபவங்களை அதிலும் முதல் முதல் தியேட்டரில் பார்த்த கதை சந்தர்ப்பம் கிடைக்கும்போது சொல்கின்றேன்.   என்னை இந்த சங்கிலித் தொடரில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்த அண்ணன்(?) கானாப் பிரபாவிற்க்கு நன்றிகள்.

எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

முதன் முதலில் பார்த்த சினிமா ஞாபகம் இல்லை. ஆனால் எண்பதுகளின் ஆரம்பத்தில் நெல்லியடி மஹாத்மா தியேட்டரில் கர்ணன் படம் பார்த்தேன். மஹாபாரதக் கதையும் கர்ணனாக நடித்த செவாலியே சிவாஜியின் அற்புத நடிப்பும் உள்ளத்தின் நல்ல உள்ளம் பாடலும் இன்னும் நினைவில் நிற்கின்றது. அந்தக்காலத்தில் உள்ளூர் சனசமூக நிலையங்களில் நிதி சேகரிக்க தொலைக்காட்சிப்பெட்டியில் பெரும்பாலும் யாழ்ப்பாணத்தில் இருந்து டிவி, டெக் போன்றன காரில் வரும் கார் வந்தவுடன் எம்மைப்போன்ற சிறுசுகள் டிவி டெக் பார்க்க ஓடிப்போறதும் பின்னர் தொலைக்காட்சிப்பெட்டிக்கு முன்னால் இருந்து சிறிது நேரம் படம் பார்த்துவிட்டு அந்த வெறும் நிலத்தில் நித்திரையாகி பொழுதுவிடிந்தபின்னர் வீட்டுக்கு வந்து பாடசாலையில் நித்திரை கொள்வதும் ஆசிரியர்கள் என்ன இரவும் படம் பார்த்தியா எனக்கேட்டுவிட்டு மாணவர்களை அடிப்பதும் ஞாபகம் இருக்கின்றது. சனசமூகப் படங்களில் கமலின் "எத்துகேயே லி", "சனம் தெரி ஹசம்" போன்ற படங்கள், ரஜனியின் முரட்டுக்காளை, போன்ற படங்கள் அடிக்கடி திரையிட்டார்கள். சிவராத்திரி போன்ற சமய சம்பந்தப்பட்ட நாட்களின் திருவிளையாடல், சரஸ்வதி சபதம் போன்ற பக்திப்படங்கள் போடுவார்கள்.   காலம் ஓடி திரையரங்குகள் யுத்ததில் அழிந்தபின்னர் மினிசினிமா என்கின்ற தொலைக்காட்சிப் பெட்டியை வைத்து படம் காட்டுகின்ற இடங்களில் பெரும்பாலான ராமராஜன் படங்களும் அந்தக்காலத்தில் வந்த ஏனைய படங்களும் பார்த்த ஞாபகம்.  முன்னர் நடிகர்களுக்காக படம் பார்த்த நான் பின்னர் இளையராஜாவின் இசை உள்ள படங்களைப் பார்க்க ஆரம்பித்தேன். இந்த மினிசினிமா கலாச்சாரமும் யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தடைப்பட்டவுடன் நிறுத்தப்பட்டுவிட்டது.   அதன் பின்னர் ஜெனரேட்டடில் படம் காட்டத்தொடங்கினார்கள். இந்தக்காலத்தில் நான் ஏஎல் மாணவன் அதனால் பெரும்பாலும் படம் பார்க்க போவதில்லை வீட்டில் படிக்கவேண்டும் என்று விடமாட்டார்கள். ஆனாலும் அயல் வீடுகளில் என்ன படம் போடுகின்றார்கள் என அறிந்தால் ரஜனி,கமல், கார்த்திக் படங்கள் என்றால் அதனை மட்டும் பார்த்துவிட்டு வருவேன். நீண்டகாலம் எந்தப் படங்களும் பாராமல் முதன்முதலில் ஜெனரேட்டர் காலத்தில் பார்த்த படம் சின்னத்தம்பி. இடையிடையே கட்டுப்பாடுகளை மீறி அடுத்த கிராமங்களில் கூட படம் பார்க்க நண்பர்களுடன் சென்ற அனுபவம் இருக்கின்றது.   மீண்டும் மினிசினிமா ஆரம்பமாகியது. டிக்கெட் விலை 5 ரூபா. இல்லையென்றால் ஜெனரேட்டருக்கு கால்ப்போத்தல் மண்ணென்னெய் கொடுக்கவேண்டும். பெரும்பாலும் பின்னேரங்களில் மினிசினிமாவில் படம் போடுவார்கள். ஒரு முறை நாம் படம் பார்த்துக்கொண்டிருந்த மினிசினிமாவில் கிட்டத்தட்ட 50 பேரை இராணுவம் சுற்றிவளைத்து கைது செய்தார்கள். பின்னர் அனைவரையும் விட்டுவிட்டார்கள். அன்றைக்குப் பார்த்த படம் "அண்ணாமலை". அடுத்த நாள் மிகுதிப்படம் பார்த்தோம்.  

அந்த நாளில் சினிமா ஒரு பொழுதுபோக்கு சாதனமாக மட்டும் அறிந்திருந்தேன். நடிகர்கள் நிஜமாக சண்டைபோடுகிறார்கள். நம்பியார் என்றவர் மிகவும் கெட்டவர். எம்ஜிஆர் தான் நல்லவர் என்ற விம்பங்கள் மனதில் உண்டாகின.   பின்னர் சில காலங்களில் இயக்குனர்களுக்காக படம் பார்க்கின்ற தகுதி வந்துவிட்டது. பாரதிராஜா, பாலசந்தர், ஷங்கர், மணிரத்தினம், சுந்தர்.சி என சிலரின் படங்கள் தவறவிடுவதே இல்லை. 

கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

"ச‌ரோஜா" வெங்கட் பிரபுவின் சென்னை 28 தந்த அனுபவத்தில் பார்க்கச் சென்ற படம். வெங்கட் பிரபு ஏமாற்றவில்லை. யுவனின் இசையும் பிரேம்ஜியின் நகைச்சுவையும் ஒரு திரில்லரையு விழுந்துவிழுந்து சிரிக்க வைத்தது. 

கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

தினமும் ஏதாவது ஒரு படம் முழுமையாகவோ அல்லது அரைகுறையாகவோ (சில படங்கள் ஒரு கிழமையாக விட்டுவிட்டு பார்த்திருக்கின்றேன் உதாரணம் குருவி, சத்யம்) டிவிடியில் பார்ப்பது உண்டு. தற்போது தாம்தூம் ஓடிக்கொண்டிருக்கின்றது இன்னும் பார்த்துமுடியவில்லை. தியேட்டரில் படம் பார்ப்பதை விட வீட்டில் பார்ப்பது வசதி பாடல்களை ஓடவிடலாம், தேவையான நேரத்தில் நிறுத்திவைக்கமுடியும் போன்ற வசதிகளால் டிவிடி தான் தற்போது சிறந்த தெரிவு.

மிகவும் தாக்கிய தமிழ் சினிமா? 

இதுவரை பெரிதாக எந்த சினிமாவும் என்னைப் பாதிக்கவில்லை. குணா மகாநதி போன்ற படங்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியவை. சில காதல் படங்கள் என்னைப் பாதிக்காவிட்டாலும் என் நண்பர்களை பாதித்ததை நேரில் கண்டேன் உதாரணம் காதலுக்கு மரியாதை.

உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்? 
தசாவதாரம் படத்திற்க்கு சில மதவெறியர்கள் காட்டிய வீண் எதிர்ப்பும், குசேலன் படத்தையும் ரஜனி என்ற தனிமனிதனையும் ஊடகங்கள் கிழித்துக்காயப்போட்டதும். 

தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
நிறைய வாசிப்பதுண்டு. அதற்காக அந்த நடிகையின் நாய்க்குட்டி விபரம் இந்த நடிகரின் ஆட்டுக்குட்டி விபரங்களை எல்லாம் வாசிப்பதில்லை. கிசுகிசுக்கள் வாசித்து அந்த நபர் யார் எனக் கண்டுபிடிப்பதில் அலாதிப் பிரியம். சில தேர்ந்தெடுத்த விமர்சகர்களின் சினிமா சம்பந்தமான புத்தகங்கள் ஆக்கங்கள் படிப்பதுண்டு, கே.எஸ்.சிவகுமாரனின் ஆக்கங்கள். டொக்டர்.முருகானந்தனின் கட்டுரைகள் ரொம்ப பிடிக்கும். டொக்டர் பல நாட்களாக உங்கள் சுவைத்த சினிமாவில் ஆக்கங்களைக் காணவில்லை. இவர்களின் விமர்சனங்களின் பின்னர் பார்த்த பிறமொழிப்படங்கள் அதிகம். 

தமிழ் சினிமா இசை?
இசை என்றால் இளையராஜா என கருதும் இசைஞானியின் தீவிர ரசிகன் நான். அதற்காக மற்றவர்களைப் பிடிக்காது என்றில்லை. தமிழ் சினிமாவில் பின்னணி இசைக்கு முக்கியம் கொடுத்தவர்களில் இசைஞானியின் பங்கு மிகப்பெரியது. மசாலாப் படமான வெற்றிவிழாவின் பின்னணி இசையை கசட் ரெக்கோடரில் ரெக்கோட் பண்ணி அடிக்கடி கேட்ட அனுபவம் உண்டு, ஜிந்தாவை மறக்கமுடியுமா? ஆனாலும் இதுவரை தமிழ் சினிமாவில் இசையை மையமாக வைத்து பெரிதாக படங்கள் வரவில்லை என்பது ஒரு சிறிய கவலை. சிந்துபைரவியில் கூட இசையுடன் காதலும் வருகின்றது. சில மலையாளப் படங்கள் இசைக்காகவே வந்தன உதாரணமாக மோகன்லாலின் "ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா".

தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
90களின் தொடக்கத்தில் மோகன்லால் மம்முட்டியின் பல மலையாளப் படங்கள் பார்த்தேன். மதிலுகள், வைசாலி, ஒரு மின்னாமினியின் நொருங்கு வட்டம், கைதியின் டயரிக்குறிப்பு( பெயர் சரியோ எனத் தெரியவில்லை) என்பவை குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவை. கொஞ்சம் ஆங்கில அறிவு வளர்ந்தபின்னர் உப தலைப்புகளுடன் வந்த ஹிந்திப்படங்கள் பார்த்தேன். தற்போது சில நல்ல ஹிந்திப்படங்கள் வருகின்றன என்பது என் தாழ்மையான விமர்சனம்.

ஆங்கிலப்படங்கள் வரிசையில் முதல் முதல் பார்த்த படம் "என்டர் த ட்ராகன் "புருஸ்லி படம். அதன் பின்னர் கெள பாய் படங்கள், ஜேம்ஸ் பாண்ட் படங்கள் குறிப்பாக அதிரடிப்படங்கள் விரும்பிப்பார்ப்பது. டைட்டானிக்கைத் தவிர எந்த ஆங்கிலக் காதல் படங்களும் பார்க்கவில்லை. அந்தளவுக்கு எனக்கு பொறுமையில்லை. சிலவேளைகளீல் நேரம் கிடைத்தால் திரைப்பட விழாக்களில் சில வாயினுள் நுழையமுடியாத வேற்றுமொழிப்படங்கள் பார்த்திருக்கின்றேன்.

தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
இதுவரை இல்லை, ஆர்குட்டில் கமல் ரசிகனாக இருக்கின்றேன் இதனால் சில கமல் ரசிகர் மன்ற உறுப்பினர்களுடன் தொடர்பு உண்டு. கிரிக்கெட் வீரர்களுடன் படம் எடுத்ததுபோல் இதுவரை எந்த சினிமா சம்பந்தப்பட்ட நபர்களுடன் படம் எடுக்கவில்லை. அவர்களை ரசிக்கமட்டுமே முடிகின்றது படம் எடுக்கவேண்டும் என்ற எண்ணம் இல்லை.

தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
தமிழ்சினிமாவை சில இயக்குனர்களிடமிருந்து காப்பாத்தினால் உருப்படும். ஸ்ரீதர், பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம், பாலு மகேந்திரா, மகேந்திரன் போன்ற இயக்குனர்கள் போல் இளையவர்களும் வர முயற்சி செய்தால் நிச்சயம் தமிழ் சினிமா உலகத்தரத்தை அடையும். அமீர், செல்வராகவன் போன்றவர்கள் முயற்சி செய்துள்ளார்கள். 

அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாசாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

எனக்கு ஒன்றுமே ஆகாது யாழில் சிலகாலம் எந்த தொடர்பும் இன்றி இருந்தனாங்கள் அதனால் இவை எல்லாம் எம்மைப் பாதிக்காது. ஆனால் இணையம் இன்றி இருப்பது என்பது கஸ்டம் உணவு உடை உறையுளுடன் இப்போது இணையமும் சேர்ந்துவிட்டது. 

இந்த சங்கிலித் தொடர் விளையாட்டுக்கு நான் அன்பாக அழைக்கும் என் இனிய நண்பர்கள்.
1. இறக்குவானை நிர்ஷன்
2. மாயா
3. தூயா
4. சிவகுமார் அண்ணா
5. லோஷன்
6. டொக்டர் முருகானந்தன்( டொக்டர் உங்கள் அனுபவத்தை எப்படிம் ஒரு தடவையாவது எழுதுங்கள்)