ஹாட் அண்ட் சவர் சூப் 28-10-2010

அரசியல்
இலங்கை
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு 20 மாதச் சிறைத் தண்டனையை இலங்கை நீதிமன்றம் வழங்கியிருக்கின்றது. 30 வருட உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தவர்களில் முதன்மையானவர்களில் சரத்தும் ஒருவர், ரணில் என்ற மண்குதிரையை நம்பி பலம்வாய்ந்த மஹிந்த ராஜபக்சாவை எதிர்த்து ஜனாதிபதித் தேர்தலில் நின்றதன் பயனை இப்போ சரத் சிறையில் நன்றாகவே அனுபவிக்கின்றார். எத்தனையோ அப்பாவித் தமிழர்களின் காணமல் போனமை கொலைக்கு காரணமானவர்களின் சரத்தும் ஒருவர் என பலர் கூறுகின்றார்கள். சரத்தின் மனைவி அனோமாவோ தன்னுடைய கணவன் ஒரு புண்ணிய ஆத்மா என்பதுபோல் கோயில் கோயிலாகப் போகின்றார். பாவம் அவருக்கு தமிழில் உள்ள முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற பழமொழி தெரியாது. இவருக்கு நியூட்டனின் 3ஆவது விதி தெரிந்திருந்தால் சரத் தமிழர்களின் மேல் காட்டிய அடாவடிகளுக்கு இன்னமும் அனுபவிப்பார் என்ற உண்மை அவருக்கு தெரிந்திருக்கும். தலையிடியும் காச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பது அனோமாவின் விடயத்தில் உண்மையாகிவிட்டது.

இராணுவத் தளபதி என்ற சிறப்புடன் ஓய்வு பெற்றிருக்கவேண்டிய சரத் இன்றைக்கு துரோகி என்ற பட்டத்துடன் சிறையில் இருக்கின்றார். பேசாமல் மஹிந்த சகோதரர்களின் சொற்படி கேட்டிருந்தால் இந்தப் பிரச்சனைகள் வந்திருக்குமா? சேராத இடம் தன்னில் சேர்ந்து தன்னுடைய பெயரைக் கெடுத்துக்கொண்டதுதான் மிச்சம். இல்லையென்றால் முன்னால் பாகிஸ்தான் அதிபர் முஷார்ப் போல் இராணுவப் புரட்சி செய்திருக்கவேண்டும், அதைச் செய்யும் தைரியமும் அவரிடம் இல்லை. இப்போ சிறையில் இருக்கும் சரத் தான் அந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிருழுந்திருக்கலாம் தியாகி என்ற பட்டமும் கிடைத்திருக்கும் என நினைக்கலாம். எது எப்படியோ வினை விதைத்தவன் வினை தான் அறுப்பான்.

இந்தியா
கடந்த வார ஜூனியர் விகடனில் கார்த்தி சிதம்பரம்(ப.சிதம்பரம் மகன்) திருமாவளவனுக்கு தனியே சிதம்பரம் தொகுதியில் நின்று வெற்றி பெற்றுக்காட்டும் படி சவால் விட்டிருக்கின்றார். பல விகடன் வாசகர்கள் பின்னூட்டங்களில் பின்னிவிட்டார்கள். விகடனும் இனிமேல் கார்த்தி சிதம்பரம் போன்ற வாரிசு கத்துக்குட்டி அரசியல்வாதிகளிடம் பேட்டி எடுக்காது என நினைக்கின்றேன். பலர் கார்த்தியின் தந்தை ப.சிதம்பரம் எப்படிக் கடந்த தேர்தலில் வென்றார், முடிந்தால் கார்த்தி தன்னுடைய தந்தையை திமுக, அதிமுக கூட்டு இல்லாமல் தனித்து வெற்றி ஈட்டிக்காட்டட்டும் எனக் காட்டமாக எழுதி இருக்கின்றார்கள். ராஜிவ் காந்தி சிலைக்கு செருப்பு அணிவித்த சம்பவம் தொடர்பில் தன்மானத் தமிழன் வெறுமாவளவன் மன்னிக்கவும் திருமாவளவன் தனக்கும் தன் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என தன் வளர்ப்பு அன்னை சோனியாவிற்க்கு கடிதம் எழுதியிருக்கின்றாராம். இதை எல்லாம் பார்க்கும் போது எங்கள் தலைவர் கவுண்டமணி பல வருடங்களுக்கு முன்னர் சொன்ன "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா " என்ற பஞ்ச் டயலாக்கே வந்து தொலைகின்றது.

கொமன்வெல்த் போட்டிகள் ஒருமாதிரி நிறைவு பெற்றுவிட்டன, தன்னுடைய இசை சரியில்லை என இசைப்புயல் மன்னிப்பும் கேட்டிருக்கின்றார். ஹிந்தியர்களினால் ரசிக்கப்படவில்லை என மன்னிப்புக் கேட்ட ரகுமான் ஏனோ செம்மொழி மாநாட்டுப் பாடல் தமிழ்மொழிக் கலாச்சாரம் சாரவில்லை என மன்னிப்புக் கேட்கவில்லை.அதே நேரம் இந்தியா பதக்கப்பட்டியலில் 2ஆவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. ஊழல்களால் நிகழ்ந்த இந்த நிகழ்வில் இந்தியாவின் பங்களிப்பு நிறையவே இருந்தாலும் வரும் ஒலிம்பிக்கிலும் பதக்கம் வெல்வார்களா? எனப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இடையில் கல்மாடி போன்றவர்கள் குறுக்கிட்டால் இந்தியா பேக்கப் தான்.

விளையாட்டு

கிரிக்கெட் என்றாலே இப்போ சூதாட்டம் தான் நினைவுக்கு வருகின்றது. பாகிஸ்தான் அணிக்குள் நடந்த குத்துக்கள் வெட்டுகள் ஆறமுன்னர் ரெய்னா மேல் பூதம் பாய்ந்திரருக்கின்றது. ரெய்ணா நல்ல துடிப்பான இளைஞர் வேகமாக ஓட்டங்கள் எடுக்ககூடிய்வர். அவரிடம் இருந்து இப்படியான முடிவு மாற்றும் செய்ல்களை நான் எதிர்பார்க்கவில்லை. அதேபோல் ஈஎஸ்பிஎன்னின் உலகின் தலை சிறந்த வீரர்கள் பட்டியலும் ஐசிசியால் வெளியிடப்பட்டிருகின்றது, சச்சின் மட்டும் தான் இந்தியா சார்பில் அணியில் இருக்கினறார் வழக்கம் போல் ஐசிசியும் ஆசிய வீரர்களை விட அவுஸ்திரேலிய வீரர்களுக்கு முன்னுரிமை அளித்திருக்கின்றது. சூதாட்டம் பல்கிப்பெருகிப்போனால் விரைவில் நடக்க விருக்கும் உலக் கிண்ணப்போட்டிகளும் முடிவே ஏற்கனவே நிரூபிக்கப்பட்டது போல் நடக்கும்.

சின்னத் திரை
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மானாட நிகழ்ச்சி இறுதிப்போட்டியில் நடனத்திற்குப் பதில் நெஞ்சில் கல்லுடைப்படு நெருப்புக்குள் பாய்வது போன்ற சாகசம் செய்தவர்களுக்குத் தான் பரிசு என நினைத்து கலா மாஸ்டர் பாலா, ஸ்வேதாவிற்க்கே அந்த வீட்டை கொடுத்துவிட்டார். யாராவது ஒருவருக்கு பலத்த காயம் அல்லது இழப்பு வந்தால் தான் இந்த சாகசங்கள் பநிறுத்தப்படும். இவர்களின் நிகழ்ச்சி தமிழ்நாட்டில் வைக்க இடம் போதாமல் அபுதாபியில் இடம் பெற்றது. இதில் உச்சக் கட்டக் காமெடி பிரபுதேவாவும் அவரது கள்ளக் காதலி நயந்தாராவும் வந்திருந்ததுதான்.

சில நாட்களுக்கு முன்னர் விகடனில் ஒரு பாடகர் தன்னை ஒரு பாடுப்ப்போட்டி நிகழ்ச்சிக்கு தயாரிப்பாளர்கள் நடுவராகப் பணியாற்றச் சொல்லிக் கேட்டதுடன் தாம் கொடுக்கும் கொமென்ட்ஸைத் தான் சொல்லவேண்டும் என வற்புறுத்தினார்களாம். அவரோ அந்த நிகழ்ச்சியில் பங்கேற்காமல் தன்பாட்டுக்குச் சென்றுவிட்டார். ரியாலிட்டி ஷோக்களும் மெஹா சீரியல்கள் போல் மக்களை பேக்காட்டவே பயன்படுகின்றது.

பதிவுலகம்
நீண்ட நாட்களாகச் சந்திக்காத இலங்கைப் பதிவர்கள் எதிர்வரும் சனிக்கிழமை விஹாரமகாதேவிப் பூங்காவில் அல்லது காலிமுகத்திடலில் சந்திக்கப்போவதாக பதிவர் ஆதிரை தெரிவித்திருன்ந்தார். இதைப் பற்றிய மேலதிக விபரங்களை இந்தச் சந்திப்பின் இணைப்பாளர்களாகிய அனுதினன். வதீஸ், மற்றும் கங்கோனிடம் கேட்கும் படியும் ஆதிரை கூறினார். அத்துடன் இந்தச் சந்திப்பில் சில ஓய்வுபெற்ற பதிவர்கள் கலந்துகொள்ளப்போவதாகவும் கூறினார். சந்திப்பில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் இணைப்பாளர்களில் எவரையாவது தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களைப் பெறவும்.

சுய புலம்பல்
அண்மையில் நண்பர் ஒருவர் சும்மா வெட்டியாக இருப்பவர்கள் தான் பதிவு எழுதுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டை நக்கலாகச் சொன்னார். பாவம் அவருக்குத் தெரியாது பெரும்பாலும் பதிவுலகில் வேலைகளுடன் அதிலும் ஐடியுடன் தொடர்புள்ளவர்கள் மட்டும் தான் எழுதுகின்றார்கள். சுவாரசியமாக எழுதினாலே பலர் உங்களை உற்றுக்கவனிப்பார்கள் என்ற உண்மை அந்த நண்பனுக்குத் தெரியாது. நான் கூட நீண்ட நாட்களின் பின்னர் எழுதக் காரணம் கல்வி சக வேலைப் பளுதான். எழுதுவதற்க்கு சில நிமிடங்கள் ஒதுக்கமுடியவில்லை. ஒரு சிலர் பதிவுகள் அதிலும் கமல் இசைஞானி சுஜாதா என்றால் அக்குவேறு ஆணிவேறாக வாசித்துவிட்டுச் சென்றுவிடுவேன் இதனால் பெரும்பாலான பதிவுகளில் என் பின்னூட்டம் இருக்காது வாக்கு மட்டும் இருக்கும். என் நேரப் பிரச்சனைகளால் என்னுடைய பதிவுகளுக்கே நான் பின்னூட்டம் இடுவதில்லை.

குட்டிக் கதை

அண்ணேன்டா
என் நண்பன் ஒருவன் தன்னுடன் கூடப்படித்த பெண் ஒருத்தி மேல் கொஞ்சம் காதல். இறுதிநாள் ஏஎல் சோதனை முடிந்தபின்னர் அவளுடன் கதைக்கவேண்டும் என ஆசைப்பட்டு காலிவீதியில் அவளுடன் சோதனை எப்படி? போன்ற சமூகப் பிரக்ஞ்சை உள்ள கேள்விகளைக் கேட்டு அவளையும் கூட நின்ற எம்மையும் கடுப்படித்தான், எல்லாவற்றிற்க்கும் அமைதியாகப் பதில் சொன்ன அந்தப் பெண் கடைசியாக போயிட்டுவாறன் அண்ணா எனப் பதில் அளித்து என் நண்பனுக்கு அங்கேயே மோஷன் போற நிலைக்கு கொண்டுவந்துவிட்டாள்.

பாஸ் என்கின்ற பாஸ்கரனில் எப்படி சந்தானம் ஆர்யாவை நண்பேண்டா என்பாரோ அதைப் பார்க்கும் போதெல்லாம் எங்கள் அண்ணனின் ஞாபகம் ஏனோ வந்து தொலைக்கின்றது. இது வெறும் புனைவுதான்.

படித்தது :

விரைவில் இத்தாலியில் மினிஸ்கேர்ட் அணிவதைத் தடை செய்யப்போகின்றார்களாம். அத்துடன் ஆண்கள் மேலாடை இல்லாமல் பொது இடங்களில் நிற்கவும் தடையாம்.

ரசித்தது
உலக சனத்தொகை
1. சீனா, 2. இந்தியா 3. பேஸ்புக்

எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி பிறந்த நாள் கொண்டாடும் அழகின் மறுபெயர் ஐஸ்வர்யா ஆண்டிக்கும், நவம்பர் 7ஆம்திகதி பிறந்தநாள் கொண்டாடும் எங்கள் உலகநாயகன் பத்மஸ்ரீ கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

ஷங்கரின் எந்திரன்

சன் பிக்சர்ஸின் விளம்பரம், ரஜனி, ஐஸ்வர்யா ராய், ஷங்கர், ரகுமான், அமரர் சுஜாதா என பல பெரிய தலைகளின் கூட்டணியில் உருவான எந்திரன் படத்தை இரண்டாம் நாளான நேற்றுப் பார்க்கும் சந்தரப்பம் கிடைத்தது.

கதை :
இராம நாரயணனின் கதை போன்ற ஒரு ஃபன்டாசி கலந்த சயன்ஸ் பிக்சன் கதை. கதையின் நாயகன் சுஜாதா என்பதால் சில இடங்களில் மீண்டும் ஜீனோ, என் இனிய இயந்திரா சாயல் காணப்படுகின்றது. இயந்திர மனிதன் உருவானால் என்ன நடக்கும் என்ற ஹொலிவூட் பாணிக் கதை. AI (Artificial intelligence) வைத்து உருவான கதை. அதனால் கொஞ்சம் ஹைடெக் சமாச்சாரங்களான ஐபி எண், கொன்ரோல், ஆல்டர் டிலிட், சிலிக்கன் சிப், பைட் என பல விடயங்கள் வந்துபோகின்றது. விக்ரம் படத்தில் கொஞ்சம் விஞ்ஞானத்தை அக்னிபுத்திரன் வடிவில் செலுத்திய அமரர் சுஜாதா இதில் சிட்டியை பிரதானமாக்கி இருக்கின்றார்.திரைக்கதை :
ஷங்கரின் வழக்கமான பிரமாண்டமான திரைக்கதை படத்தை தூக்கி நிறுத்துகின்றது என்றால் மிகையில்லை. பல இடங்களில் சுஜாதா கைகொடுத்திருக்கின்றார். அவர் உயிருடன் இருந்திருந்தால் இன்னமும் வேகமான திரைக்கதை கிடைத்திருக்கும். முற்பாதி கலகலப்பாக இருந்தாலும் பின் பாதியில் சில இடங்களில் இழுவை. ஷங்கரின் படங்களில் ஜீன்ஸுக்குப் பின்னர் கொஞ்சம் சறுக்கலான திரைக்கதையை இந்தப் படத்தில் தான் பார்க்கின்றேன்.

வசனம் :
சுஜாதா, ஷங்கர், கார்க்கி என மூவர் வசனம் எழுதியிருக்கின்றார்கள். விஞ்ஞான விடய வசனங்களில் சுஜாதா தெரிகின்றார். பல இடங்களில் ரஜனியின் பட பஞ்ச் டயலாக்குகளை இலகுவாக வசனமாக்கி இருக்கின்றார்கள். முன்னாடி கண்ணாடி என பஞ்சதந்திர கிரேசிமோகன் சாயலும் சில இடங்களில் ஏற்படுகின்றது தவிர்த்திருக்கலாம். விஞ்ஞான வசனங்கள் வருவதால் கிராமத்து மக்களுக்கு புரியுமா என்பது கேள்விக்குறி. ஆனால் கெளதம் வாசுதேவ மேனனின் படங்களுடன் ஒப்பிடும் போது தமிழில் வசனங்கள் பாராட்டத் தக்கது. மெல்லிய நகைச்சுவை கலந்த வசனங்கள் பல இடங்களில் சிரிக்கவும் சில இடங்களில் சிந்திக்கவும் வைக்கின்றது. குறிப்பாக யுத்தம் ஆயுதம் கணணி சம்பந்தப்பட்ட வசனங்கள் கலக்கல். அதிலும் ரோபோ சொல்லும் நா.முத்துக்குமாரின் கவிதை சூப்பரோ சூப்பர்.

இயக்கம் :
சிவாஜிக்கும் பின்னர் மீண்டும் ரஜனியுடன் இணையும் ஷங்கரின் அடுத்த படம் இது. ஆங்கிலப் படங்களுக்கு சவால் விடும் அளவிற்க்கு பிரமாண்டத்திலும் இயக்கத்திலும் ஷங்கருக்கு நிகர் அவர் தான். ஷங்கரின் ரசிகனாக அவர் ஒரு ஹொலிவூட் படம் இயக்க வேண்டும் என்பது என் ஆசை. ரஜனியை தனது தேவைக்கு ஏற்றபடி இந்தப் படத்தில் இயக்கி இருக்கின்றார், ஏனென்றால் அதிரடி ஆரம்பம், பஞ்ச் டயலாக், அறிமுகப் பாடல் என ரஜனியின் வழக்கமான படங்கள் போல் இதில் இல்லை. ஷங்கரின் முன்னைய படங்களுடன் ஒப்பிடும் போது சிவாஜியில் உள்ள விறுவிறுப்பு இதில் சில இடங்களில் குறைவு என்று தான் சொல்லவேண்டும்.ரஜனிகாந்த்:
ரஜனி என்ற மந்திரச் சொல்லினால் தான் இந்தப் படம் இவ்வளவு பரபரப்பாக பேசப்பட்டது, படுகின்றது. சிவாஜிக்குப் பின்னர் நடித்த படம்,விஞ்ஞானியாக ஒரு வேடம் இன்னொரு பரிமாணத்தில் ரோபோவாக ஒரு வேடம். ரோபோ மூன்றுமுகம் அலெக்ஸ் பாண்டியனை நினைவூட்டுகின்றது. இன்னமும் விஜய், அஜித் போன்றோருக்கு ரஜனி போட்டியாகத் தான் இருப்பார் என்பது போல் இளமையாகவே இருக்கின்றார். ஆனாலும் அந்த உருவத்துடன் ஒட்டாத தாடிக் காட்சிகளில் முதுமை அப்பட்டமாகத் தெரிகின்றது. வில்லனாக வரும் காட்சிகளில் ஷங்கர் ரஜனியிடம் நீண்ட நாட்களுக்குப் பின்னர் நடிப்பையும் கறந்திருக்கின்றார். (ஒரு சில விமர்சர்கள் எழுதியதுபோல் விருது கொடுக்கும் அளவிற்க்கு எந்திரனில் ரஜனி நடிக்கவில்லை), தளபதிற்க்குப் பின்னர் ரஜனியின் ஸ்டைல் தான் நடிக்கின்றது ஒழிய அவரிடம் எவரும் நடிப்பை அவ்வளவாக வாங்கிக்கொள்ளவில்லை. ரஜனியிம் இனி ஷங்கர் போன்றவர்களின் படங்களில் நடித்தால் மீண்டும் அந்தக் கால ரஜனி கிடைப்பார்.

தன்னுடைய ரசிர்களின் எதிர்பார்ப்புகளை மீறி எந்தவிதமான பஞ்ச்கள், சண்டைகள் இல்லாமல் நடித்திருப்பது பாராட்டத் தக்கது. ரஜனிக்கே உரிய நகைச்சுவையுடன் ரோபோவை உலாவ விட்டதும் பாராட்டுக்குரியது. வில்லன் ரஜனி தற்போதைய வில்லன்களுக்கு போட்டியாக உருவாகிவிட்டார். சாதாரண ரசிகர்களுக்கு இந்த ரஜனியைப் பிடிக்கும் ஆனால் அவரின் ரசிகர்கள் சூப்பர் ஸ்டாரை இந்தப் படத்தில் தேடத்தான் வேண்டும்.

சிட்டி :
யார் இந்த நடிகர் என நினைக்கின்றீர்களா? வேறை யாருமல்ல ரோபோ ரஜனி தான். எப்படி சில நடிகர்கள் பாத்திரங்களுடன் ஒன்றுகின்றார்களோ அதுபோல் ரஜனியும் சிட்டியுடன் ஒன்றிவிட்டார். முதல்பாதியில் சிரிக்க வைக்கும் சிட்டி இரண்டாம் பாதியில் கிராபிக்ஸ் உதவியுடன் மிரட்டுகின்றார். ஐசுக்கு காதல் சொல்லும் இடங்கள் கலக்கல்.

ஐஸ்வர்யா ராய் :


உலகின் நிரந்தர அழகி அல்லது இந்த நூற்றாண்டின் அழகி வெள்ளித் திரையிலும் இன்னும் இளமையாகவே இருந்து மற்ற நடிகைகளின் வயிற்றெரிச்சலைக் கிளப்புகின்றார். இருவரில் பார்த்த மாதிரியே அதே அழகுடன் இருக்கின்றார். ஜீன்ஸில் 50 கேஜி தாஜ்மஹாலாக இருந்தவர் இதில் 40 கேஜியாக குறைந்தது போல் இருக்கின்றது. குறிப்பாக கிளிமஞ்சதாரோ பாடலில் ஐஸின் உடைகள் அபாரம், எந்த இடங்களிலும் அவரை ஆபாசமாகவோ கண்றாவியாக தோன்றவில்லை.

பல இடங்களில் நடிக்கவும் செய்கின்றார். அபிசேக் பச்சான் உங்கள் மனைவிக்கு திருஷ்டி சுற்றிப் போடுங்கள். ஐஸ்வர்யாவிற்கு மாற்றீடாக இன்னொரு நடிகையை சனாவின் இடத்தில் யோசித்தால் ஸ்ரீதேவி மட்டும் தான் ரஜனிக்குப் பொருத்தமாக இருப்பார்.

இசை :
ஏற்கனவே பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஹிட் என்கின்றார்கள். என்னுடைய பிளேயரில் கிளிமஞ்சதாரோ மெஹா ஹிட். புதிய மனிதா பாடல் ஆரம்பக் காட்சிகளுடன் ஒட்டவில்லை. ஏனைய பாடல்களில் வழக்கம் போல் ஷங்கர் வித்தியாசமாகவே எடுத்திருக்கின்றார். இதனை எப்போது மாற்றுவாரோ தெரியவில்லை. பின்னணி இசை ரசிக்கலாம் குறிப்பாக தீம் மியூசிக் கலக்கல்.

ஒளிப்பதிவு :
பாலாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவின் ஒளிப்பதிவு உலகத் தரம். பாடல்காட்சிகளிலும் சண்டைக் காட்சிகளிலும் அவரின் கடின உழைப்புத் தெரிகின்றது.

கலை :
சாபு சிரிலின் கை வண்ணத்தில் எது நிஜம் எது செட் எனத் தெரியவில்லை. அந்த ஆய்வுகூடமும் அதன் கலரும் பிரமிக்க வைக்கின்றது.எடிட்டிங் :
ஆண்டனியின் கத்தரி தேவையான இடங்களில் அழகாகவே கத்தரித்துள்ளது. பிற்பாதியில் சில இடத்திலும் கத்தரி வைத்திருந்தார் படம் தொய்வில்லாமல் போயிருக்கும்.

சந்தானம் :
பாஸ் எ பாஸ்கரனில் சதமடித்தவர் இதில் டக் அவுட்டாகிவிட்டார்.

கருணாஸ்
திண்டுக்கல் சாரதிக்காக நன்றிக்கடனோ தெரியவில்லை.

ஜஸ்ட் 150 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் பின்னணியில் பலர் உழைத்திருக்கின்றார்கள் என்பது படம் முடிந்தபின்னர் காட்டும் பட்டியலில் தெரிகின்றது. ஐஸ்வர்யா ராயுக்கு குரல் கொடுத்தவர் தான் யார் என்பதைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. பின்னணியில் உழைத்தவர்கள் பலர் வெளிநாட்டினர். நிச்சயமாக தமிழ் வர்த்தக சினிமாவில் எந்திரன் ஒரு மைல் கல்லாகத் தான் இருக்கும்.

மொத்தத்தில் எந்திரன்
ரஜனி ரசிகர்களுக்கு - மினித் தீபாவளி
ஐஸ்வர்யா ரசிகர்களுக்கு - ஜொள்ளு மழை
ஷ்ங்கர் ரசிகர்களுக்கு - ஹொலிவூட் தரம்
சாதாரண ரசிகர்களுக்கு - பொழுது போக்குப் படம்

டிஸ்கி :
நான் பார்த்த தியேட்டரில் வெறும் 50 பேர் மட்டும் தான். காரணம் அந்த தியேட்டரில் முதன் முதலாக தமிழ்ப் படம் என்பதால் பலருக்குத் தெரியவில்லை. மற்றும் படி லண்டனில் பல இடங்களில் ஒரு நாளைக்கு எட்டுக் காட்சிகளுக்கு மேல் நடக்கின்றது.

படம் தொடங்குமுன்னர் ஒரு சில ஆங்கில அனிமேசன் படங்களின் ட்ரைலர் போட்டார்கள்.

எமக்குப் பின்னால் இருந்த சில பெண்களும் ஆண்களும் கடுப்பைக் கிளப்பினார்கள். பொது இடத்தில் எப்படி என்ன கதைக்கவேண்டும் என அவர்களுக்குத் தெரியவில்லை. வெள்ளைக்காரன் ஸ்டைல் ஆனால் வாய் திறந்தால் கூவம் தான். இவர்களின் பெற்றோர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

நீண்ட நாட்களின் பின்னர் நேற்றுத் தான் ஓய்வு கிடைத்தது, அதனால் தான் நீண்ட நாட்களின் பின்னர் ஒரு சினிமா விமர்சனம். இனி மன்மதன் அம்பு தான் திரையில்.

சன் பிக்சர்சின் காமன் வெல்த்

கோபாலபுரத்தில் ஒரு காலைப்பொழுதில் கருணாநிதி தன் நாட்குறிப்பில் சினிமா இசை வெளியீடு, மானாடா மயிலாட சீசன் 5 இறுதிப்போட்டி, அடுத்த பாராட்டு விழா, போன்ற முக்கியமான விடயங்களை ஆராய்ந்துகொண்டிருக்கும் போது தொலைபேசி ஒலித்தது. மறுமுனையில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்.

சிங் : வணக்கம் கலைஞர்ஜி

கலைஞர் : உங்களுக்கு கடிதம் எழுத நினைத்தேன் அழைத்துவிட்டீர்கள்ஜீ, இதுவல்லவோ பண்பாடு.

சிங் :(மனதில்) சப்பா இந்த மனிசன் இனிப் பண்பாடு கலாச்சாரம் என அறுக்கபோகின்றது.
கலைஞர் : அழைத்த காரணம் என்னவோ. பாகிஸ்தான் பிரதமருக்கு கடிதம் எழுதவேண்டுமா? இல்லை எனக்கு தலைநகரில் ஏதும் பாராட்டு விழாவா?

சிங் : (அவசரமாக) இல்லை இல்லை காமன்வெல்த் போட்டிகளை சீனாவைப் பார்த்து ஏதோ ஒரு உசாரில் நடத்துவோம் என தொடங்கினால் பாபர் மசூதி பிரச்சனையை விட இது பெரிய்ய பிரச்சனையாகிவிட்டது. அதுதான் உங்களிடம் ஒரு உதவி.

கலைஞர் : உங்களுக்கு இல்லாத உதவியா சொல்லுங்கள் ஜீ.

சிங் : நம்ம அரசால் காமன்வெல்த் நடத்து அளவிற்க்கு பணம் இல்லை, இருந்த பணத்தையும் ஊழல் செய்துவிட்டார்கள், பத்திரிகைகள் எல்லாம் இது காமன் வெல்த்தா இல்லை காங்கிரஸ் வெல்த் கேமா என கிண்டல் செய்கின்றது. உங்கள் பேரன் கலாநிதியை காமன் வெல்த்தை ஸ்பொன்சர் செய்யச் சொல்லுவீர்களா?

கலைஞர் : இது சின்ன விடயம் இதனை நீங்களே செய்யலாமே? இடையில் நான் ஏன்?
சிங் : இல்லை ஜீ நீங்கள் அழைத்தால் அவர்கள் இதயம் இனிக்கும்.

இதனை மன்மோகன் சிங் கூறீயவுடன் கலைஞரின் கண்கள் உடனே பனித்தன.

கலைஞர் : உங்களுக்காக இல்லாவிடிலும் என் நண்பர் இந்திராகாந்தியின் மருமகள் சோனியாஜிக்காக நான் இதனைச் செய்கின்றேன் என்றபடி அழைப்பைத் துண்டித்துவிட்டார்.

காமன் வெல்த் கேமை தாமே நடத்தும் சந்தோஷத்தில் எந்திரன் பரபரப்புடன் சன் குழும அலுவலகம் அதகளப்பட்டத்து. கலாநிதி, தயாநிதி, ஷங்கர்,வைரமுத்து, ஷக்சேனா என பலர் எப்படி காமன் வெல்த்தை எப்படி சிறப்பாக செய்வது என தீவிர டிஸ்கசனில் இருந்தார்கள்.

தயாநிதி : எந்திரன் இசை வெளியீட்டை எப்படி மலேசியாவில் நடத்தினமோ அதேபோல் காமன் வெல்த் போட்டி தொடக்க விழாவை சந்திரனில் நடத்துவோம்.

வைரமுத்து : பூமாலையில் தொடங்கிய உங்கள் பயணம் சந்திரன் வரை செல்லும் என்பது நான் அறிவேன் ஒரு தமிழனாக எமக்கு இது பெருமை.

ஷங்கர் : ரகுமானின் தீம் பாடல் ஏற்கனவே பிரபலமானதால் அதனை நாம் நடிகர்களை வைத்து படம் எடுத்து காமன் வெல்த்தில் அடிக்கடி ஒளிபரப்பலாம்.

கலாநிதி : இல்லை ஷங்கர் இது விளையாட்டுப்போட்டி அதனாலை நடிகர்களை வைத்து எடுத்தால் மூளையுள்ளவர்கள் கேள்வி கேட்பார்கள். சோ டோணி, சச்சின், சானியா போன்றவர்களை நடிகர்களுடன் இணைத்து நடிக்க வைத்துவிடலாம்,

ஷக்சேனா : சூப்பர் ஐடியா நான் இப்பவே அனைவருக்கும் கோல் போடுகின்றேன்.
நீங்கள் கால் போடமுன்னரே நான் வந்திட்டேன் எனக் கூறியபடி நடிகர் கருணாசும் டிஸ்கசனில் நுழைகின்றார்.

கலாநிதி : ஸ்ரேடியம் முழுவதும் எந்திரன், மற்றும் சன் பிக்சர்ஸின் மெஹா சீரியல்கள் விளம்பரப் பதாதைகள் வைக்கவேண்டும்,

ஷங்கர் : ஸ்ரேடியத்தை நம்ம தோட்டாதரணி செட்டாகவே போட்டுவிடுவார் , ஸ்ரேடியம் புதிதாக கட்டுவதை விட செலவு கொஞ்சம் அதிகமாகும்.

தயாநிதி: வீரர்கள் தங்கும் விடுதிகளிலுள்ள டிவிக்களில் எல்லாம் சன் டிவி, கேடிவி, சன் மியூசிக் மட்டும் தான் தெரியவேண்டும்.

கருணாஸ் : என்னுடயை திண்டுக்கல் சாரதியை உலகத்திலுள்ள அத்தனைபேரும் அப்போ பார்ப்பார்கள்.

ஷக்சேனா : ஒவ்வொரு போட்டியின் ஆரம்பத்தின் போதும் உலகத் தொலைகாட்சிகளில் முதன் முறையாக சன் பிக்சர்ஸ் வழங்கும் 100 மீற்றர் ஓட்டம், குத்துச் சண்டை என விளம்பரப்படுத்தவேண்டும்.

ஷங்கர் :சியர் லீடர்சாக நம்ம நமீதா, அசின், திரிஷா என அனைவரையும் ஆடவிடலாம்.

கலாநிதி : உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முதலாக என்ற வரிகள் இந்த நிகழ்வில் தான் நிஜமாகும்.

கலாநிதி : மைதானத்தைச் சுற்றி உள்ள விளம்பரப் பலகைகள் அனைத்திலும் எங்கள் தயாரிப்புகளான திண்டுக்கல் சாரதி, காதலில் விழுந்தேன் போன்ற மொக்கைக்ப் படங்களின் போஸ்டர்களை வைக்கவேண்டும்.

வைரமுத்து : வாவ் இதுதான் வியாபார யுக்தி, அப்படியே அந்தப் படங்களை ஆங்கிலத்தில் டப் செய்தால் இன்னமும் விளம்பரம் பெருகும்.

ஷக்சேனா : (மனதில்) அந்த மொக்கைகளை ஓட்ட நாம் பட்ட கஸ்டம் இவருக்கு எங்கே தெரியப்போகின்றது.

தயாநிதி : அப்படியென்றால் தங்கம் எல்லாம் நமக்குத் தான்.

ஷங்கர் : எனக்குப் புரியவில்லை.

தயாநிதி : அந்தப் படங்களைப் பார்க்கும் வெளிநாட்டினர் போட்டியும் வேண்டாம் ஒரு பதக்கமும் வேண்டாம் என தங்கள் நாட்டுக்கு ஓடிவிடுவார்கள்.

அனைவரும் அவரை கொல்லுவது போல் பார்த்தார்கள்.

இந்த விடயம் இப்படியே ரெட் ஜெயின்ட், கிளவுட் நைன் போன்ற தமிழ்ப் பட நிறுவனங்களுக்குப் பரவ அவர்களும் பரபரப்பாக தமக்குத் தான் போட்டிகளை நடத்தும் உரிமை வேண்டும் என கலைஞருக்கு போன் போடுகின்றார்கள்.