Showing posts with label ஊடகம். Show all posts
Showing posts with label ஊடகம். Show all posts

பத்மஸ்ரீகளும் புவனேஸ்வரிகளும் நடுநிலை தவறும் ஊடகங்களும்

புவனேஸ்வரி அண்மைக் காலமாக தமிழக ஊடகங்களில் பிரபலமான பெயர். சின்னத்திரையில் பெரிய வேடங்களிலும், பெரிய திரையில் சிறிய வேடங்களிலும் நடித்து பிரபலமான நடிகை. சில நாட்களுக்கு முன்னர் விபச்சார வழக்கில் தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டவர். விசாரணைகளில் சில பிரபல நடிகைகளின் பெயர்களை விபச்சாரம் செய்கின்ற ஏனையவர்கள் என இவர் காவல் துறையிடம் கூறியதாக நடிகைகளின் பெயர்களுடன் தினமலர் பத்திரிகை வெளியிட்டது.

புவனேஸ்வரியின் வாக்குமூலத்தை வெளியிட்ட தினமலரைக் கண்டித்து நடிக, நடிகைகள் நடத்திய எதிர்ப்புக் கூட்டத்தில் பெரும்பாலன நடிகர்கள் ஆற்றிய உரைகள் ஆபாசத்தின் உச்சத்தைத் தொட்டதுடன் மிகவும் கீழ்த்தரனமானவையாகவும் இருந்தன. இதனைத் தொடர்ந்து அவர்கள் முதல்வர் கருணாநிதியிடம் தெரிவித்த முறைப்பாட்டை அடுத்து தினமலர் செய்தி ஆசிரியர் லெனின் தமிழக காவல்த்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர் லெனின் கைதுக்கு பத்திரிகையாளர்கள் சிலர் ஆர்ப்பாட்டம் நடித்தினார்கள்.



புவனேஸ்வரி விடயத்தில் பெரும்பாலான ஊடகங்கள் தங்கள் நடுநிலமையைத் தவறவிட்டுவிட்டார்கள். தினமலரில் புவனேஸ்வரி கொடுத்த விபரங்கள் சரியோ பிழையோ. ஆனால், அதன் பின்னர் நடிக, நடிகைகள் பேசிய தரங்குறைந்த உரைகளைக் கூட இவர்கள் வெளியிடவில்லை.

சன், கலைஞர், ஜெயா தொலைக்காட்சிச் செய்திகளின் நம்பகத் தன்மை என்பது செத்து பல காலமாகிவிட்டது. உலகில் எத்தனையோ பிரச்சனைகள் இடம் பெற்றபோது சன்னின் தலைப்புச் செய்தி "காதலில் விழுந்தேன் வெற்றி" என்பதே. வழக்கமாக விபச்சார குற்றச்சாட்டில் சாமானியர்களை காவல்த்துறை கைது செய்தால் அதனை செய்தியாக்கி அந்தப் பெண்களை தொலைக்காட்சியில் காட்டும் சன், கலைஞர், ஜெயா தொலைக்காட்சிகள் புவனேஸ்வரி விவகாரத்தில் ஏனோ அடக்கிவாசித்தது, தங்களது சகபாடியான இன்னொரு ஊடகமான தினமலரையும் ஊடகவியளாளர்கள் அனைவரையும் நடிகர்கள் திட்டியபோதும் இவர்கள் சார்ந்த எந்த ஊடகமும் கண்டுகொள்ளவேயில்லை.

நடிகர்களைப் பகைத்தால் இவர்களின் பிழைப்புக்கு என்ன செய்வது? இதனால் வழக்கம்போல் ‘நினைத்தாலே இனிக்கும்’ வெற்றியும், மைனாரிட்டி தி.மு.கவைத் திட்டுவதும், தமக்குத் தாமே பாராட்டுத் தெரிவிப்பதும் மட்டும் தமிழக தொலைக்காட்சிகளில் அதிகம் செய்திகளாகின.

பல வருட பாரம்பரியம் மிக்க விகடனோ சில காலத்திற்கு முன்னர் ஜூனியர் விகடனில் “இவர் தான் உங்க ஹீரோ” என ராமராஜன் முதல் பரத் வரை அனைத்து நடிகர்களினதும் உல்லாசக் கதைகளை எழுதி வியாபாரம் செய்தவர்கள் தினமலருக்கும் தங்கள் ஆதரவைத் தெரிவிக்கவில்லை. சினிமா நடிகர்களுக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை. மொத்தத்தில் இந்த செய்திகளை அப்படியே இருட்டடிப்புச் செய்தார்கள். இவர்களின் விபச்சாரத்திற்கு மன்னிக்கவும், வியாபாரத்திற்கு இலங்கைச் செய்திகள் இருக்கவே இருக்கின்றது. பத்திக்கிச்சு என்ற பெயரில் நடிக நடிகைகளின் கிசுகிசுக்களையும் “ஒரு நடிகையின் கதை” என ஒரு நடிகையின் உண்மைக் கதையை எழுதிய குமுதமும் தன் பங்கிற்க்கு அடக்கியே வாசித்தது.

பல விடயங்களில் நம்பகத்தன்மையையும் நடுநிலைமையையும் கைவிட்ட பெரும்பாலான ஊடகங்கள் இந்த விடயத்திலும் தங்கள் இருப்பைத் தக்கவைத்துக்கொண்டன.

படங்களில் அரைகுறை ஆடைகளுடனும் இரட்டை அர்த்த வசனங்களுடனும் உலாவரும் நடிகர்கள் தினமலர் செய்திக்குப் பின்னர் கண்ணகிகளாகவும், சீதைகளாகவும் மாறியதுதான் மிகவும் நகைச்சுவையான விடயம். சில காலங்களுக்கு முன்னர் விபச்சாரத்தில் ஈடுபட்டார்கள் என்று கன்னடப் பிரசாத் பல நடிகைகள், நடிகர்கள் (ஆண் விபச்சாரர்கள்) பற்றிய விபரங்களை வெளியிட்டபோது ஆத்திரம் கொள்ளாத சூப்பர் ஸ்டார்களும், சுப்ரீம் ஸ்டார்களும், புரட்சித் தமிழர்களும் புவனேஸ்வரி கொடுத்த வாக்குமூலத்தால் கோபப்பட்டது புதுமைதான்.

சில காலங்களுக்கு முன்னர் திரையுலகம் சம்பந்தப்பட்ட சிலரை தமிழக அரசு கைது செய்தபோதும், அவர்களின் சொத்துக்களை குண்டர்கள் நாசமாக்கிய போதும் இவர்களின் ஒற்றுமை எங்கே போனது? பத்மஸ்ரீ விருது பெற்ற விவேக்கின் கண்ணியமற்ற பேச்சு அவருக்கு வழங்கப்பட்ட விருதுக்கு அவமானமே. பத்மசிறியை திரும்ப பெறலாம் என்றால் மத்திய அரசு அவரிடம் இருந்து அந்த விருதைத் திரும்ப பெறவேண்டும்.

இத்தனைக்கும், தன்னைப் பத்திரிகையாளர் எனவும் திரைப்படத்துறை சேர்ந்தவர் எனவும் சொல்லிக்கொள்ளும் தமிழக முதல்வர் கருணாநிதி திரைப்படத்துறையினருக்கே தன்னுடைய ஆதரவை அதிகம் கொடுக்கின்றார். நடிகர்களை சந்திக்க எடுக்கும் சிரத்தையை இவர் ஏனையவர்களைச் சந்திக்க எடுப்பதில்லை. இவரின் செயல்பாடுகளைப் பார்க்கும் போது இவர் தமிழக மக்களின் முதல்வரா? இல்லை தமிழக நடிகர்களின் முதல்வரா? என்ற சந்தேகம் பகுத்தறிவுடன் சிந்திப்பவர்களுக்கு வருகின்றது.

அதே நேரம் ஊடகங்களும் எத்தனையோ விவாதிக்க வேண்டிய சமூக கலாச்சார விடயங்கள் இருக்க அவற்றிற்கு முன்னுரிமை கொடுக்காமல் திரைப்பட நடிகர்களை வைத்து விற்பனையைப் பெருக்குவதற்காக அவர்களின் பேட்டிகள், செய்திகளுக்கு அதிகம் முன்னுரிமை கொடுக்கின்றது. சிலவேளைகளில் அத்துமீறி அவர்களின் அந்தரங்கங்களிலும் தன் கைவரிசையைக் காட்டிவிடுகின்றது. திரைப்பட நடிகர்களாக இருந்தாலும் அவர்கள் தனி நபர்கள் என்ற விடயத்தை ஏனோ இவர்கள் மறந்துபோகின்றார்கள்.

எது எப்படியோ புவனேஸ்வரி கிளப்பிய புயல் முதல்வரின் அதிரடி நடவடிக்கைகளாலும் ஊடகங்களின் இருட்டடிப்பினாலும் அடங்கிப்போயுள்ளது. இதே நேரம் சில அரசியல் ஆதாயங்களுக்காக புவனேஸ்வரி கைதும் அதனைத் தொடர்ந்து வந்த நிகழ்வுகளும் ஒரு சிறந்த கதாசிரியர் ஒருவரினால் கதை, வசனம் எழுதப்பட்டு இயக்கப்பட்டதாகவும் கூறுகின்றார்கள். எதிர்காலத்திலும் புவனேஸ்வரிகள் கைதுசெய்யப்படுவார்கள், விடுதலையுமாவார்கள். ஆனால், ஊடகங்கள் தங்கள் பொறுப்புணர்வையும், தொழில் தர்மத்தையும் விட்டுக்கொடுக்கலாமா.


டிஸ்கி: பிரபலமான செய்திகளை பதிவுகளாக்காமல் விட்டால் பதிவுலகச் சட்டத்தின் 525ஆம் பிரிவின் படி குற்றம் என்பதால் ஏதோ என்னால் முடிந்தளவு சுருக்கமாக எழுதியிருக்கின்றேன்.

*** உங்கள் வாழ்க்கை எங்கள் செய்தி. ***

அரசாங்கத்தின் நான்காவது தூணான ஊடகங்களைப் பற்றிய என்னுடைய ஆதங்கங்களும் கருத்துக்களுமே இந்த பதிவில். ஒரு ஊடகம் என்பது மக்களுக்கு முக்கியமான செய்திகளூடன் உண்மைச் செய்திகளையும் கொண்டு செல்லவேண்டும் ஆனால் இன்றோ பல ஊடகங்கள் பொய்யையும் மற்றவர்களின் அந்தரங்களையுமோ செய்தியாக்கி வருமானம் பார்க்கிறார்கள்.

இன்றையகாலத்தில் ஊடகங்களை எழுத்துஊடகங்கள் இலத்திரனியல் ஊடகங்கள் என இரண்டு பிரிவாக பிரிக்கலாம். இணையம் இலத்திரனியல் ஊடகங்களில் வருவது சாலப்பொருத்தமாகும்.

பெரும்பாலான பத்திரிகைகள் வார இதழ்கள் செய்திகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட இன்னொருவரின் தனிப்பட்ட விடய‌ங்களை பெரிதாக்கு அதில் குளிர்காய்கிறார்கள். சில பத்திரிகைகள் சொல்வதை வேதவாக்க எடுப்பவர்களும் இருக்கிறார்கள். இவர்களின் அரசியல்ரீதியான பாகுபாடுகளை விட்டுவிட்டு ஏனைய விடயங்களுக்கு வருவோம். இவர்கள் சினிமா நடிகர்களை வைத்துத்த்தான் சம்பாதிக்கிறார்கள். ரஜனியை அட்டைப்படத்தில் போட்டால் இவர்களின் விற்பனை அதிகரிக்கும் என்பதால் அவரை வைத்து வியாபாரம் செய்வார்கள். பின்னர் அதே ரஜனியை கிழிகிழி எனக் கிழிப்பார்கள் கேட்டால் பத்திரிகை தர்மமாம். ஐயா நடுநிலையாளர்களே சில நாட்களுக்கு நீங்கள் ரோபோ, மர்மயோகி பற்றிய செய்திகளை போடாது வளரும் கலைஞர்களான ஜெயம் ரவி, சிபிராஜ் போன்றவர்களுக்கு ஊக்கம் கொடுங்கள். இதனைவிட்டு விட்டு மூத்த நடிகர்களின் சூடான செய்திகளை போடுவீர்கள் அவர்கள் தவறு செய்திருந்தால் அவர்களை காய்ச்சி எடுப்பீர்கள். ஆனால் நடிகைகள் விடயத்தில் நீங்கள் எப்பவுமோ புத்திசாலிகள் தான் களத்தில் எந்த நடிகைக்கு மவுசோ அவரைப் பற்றித்தான் எழுதுவீர்கள். இந்தக் குற்றச்சாட்டுகள் பாரம்பரிய வார இதழான விகடனுக்கும் தான். விக‌டன் தான் நமீதாவை வைத்து "ஹாய் மச்சான்ஸ்" என ஒரு தொடர் கொடுத்தது. இதன் தாக்கம் இப்போ நமக்கு தெரியாது இன்னும் 25 வருடங்கள் கழித்து இந்தப் பத்திரிகைளைப் யாரும் ஒரு அந்தக்கால வாசகன் பார்த்தால் நமீதா ஒரு தமிழ்ப்பேராசிரியை என நினைப்பார்.

அடுத்தது இவர்கள் சினிமா தவிர்ந்த ஏனைய விடயங்களுக்கு பெரிதாக மதிப்பளிப்பதில்லை. யாருக்காவது குற்றாலீஸ்வரன் என்ற சாதனை நீச்சல் வீரனை இன்றைக்கு ஞாபகம் இருக்கா? சிறந்த வீரனாக வரவேண்டியவர் சில காரணங்களால் அதனை செய்துமுடிக்கமுடியவில்லை, எந்தப் பத்திரிகையும் அவரைக் கண்டுகொள்ளவே இல்லை. இப்படிப் பல உதாரணங்களைச் சொல்லலாம்.

திரைப்படத்துக்கு விமர்சனம் செய்கின்றேன் என இவர்கள் செய்யும் அலும்புகள் தாங்கமுடியாது. ஒடாத படத்தை நல்ல படம் என்பார்கள். ஓடிய படத்தை தோல்விப் படம் என்பார்கள். நல்ல படத்தை போரடிக்கின்றது என கூச்சமின்றி எழுதுவார்கள். சமீபகாலமாக இவர்களின் விமர்சனங்களை பெரிதாக யாரும் எடுப்பதில்லை. வலைப்பதிவாளர்கள் பெரும்பாலானோர் நடுநிலையாகவே விமர்சிக்கிறார்கள். தங்களுக்கு வேண்டப்பட்டவர்களின் படத்துக்கு நல்ல புள்ளிகள் கொடுப்பார்கள் ஏனையவை மட்டம் என்பார்கள். பொதுவாக இவர்களிடம் இருக்கும் ஒரு நல்ல குணம் பெரும்பாலான வார இதழ்களின் விமர்சனங்கள் ஒரே மாதிரியே இருக்கும், வாசிக்கும் வாசகன் குழப்பம் அடையத்தேவையில்லை. ஆனால் தொலைக்காட்சி படவரிசை பத்துகளில் சன்னில் சத்யம் முதலாவது, கலைஞரில் உளியின் ஓசையும் தசாவதாரமும் முதலாவது, ஜெயாவில் இன்னொரு படம் முதலாவது என மக்களைத் தெளிவாக குழப்புவார்கள். அதே நேரம் இவர்கள் வசூல் ரீதியாகவா அல்லது தரரீதியாகவா தரப்படுத்துகின்றார்கள் என்பது புரியவில்லை. புரிந்தவர்கள் தெளிவுபடுத்துங்கள். நல்ல படம் எனப் பெயரெடுத்த படங்களுக்கு தரவரிசையில் இடமிருக்காது அதே நேரம் ஓடவில்லை என பலரும் சொன்ன படம் முதலாவது சமீபத்திய உதாரணம் சத்யம்.

இலத்திரனியல் ஊடகங்களில் இன்னொரு பெரிய பிரச்சனை ஏனைய வானொலி தொலைகாட்சிகளை கிண்டல் செய்வதும் அவருர்களுடன் மல்லுக்கட்டுவதும். எங்களூரில் சில வானொலிகள் முதல்தரம் நம்பர் ஒன் என தம்மைத் தாமே சொல்லிக்கொள்வார்கள். எனக்கு ஒரு சந்தேகம் முதல் தரம் என்றால் அது ஒன்றாகத் தானே இருக்கவேண்டும் ஆனால் இங்கே இரண்டு வானொலிகள் முதல் தரத்தில் இருக்கின்றன என்ன கணிப்போ? நல்ல காலம் சமீபத்தில் ஆரம்பித்த வானொலி இன்னும் அந்தச் சண்டையில் இறங்கவில்லை. இறங்காது என நினைக்கின்றேன். அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் சூரிய சக்தி தென்றலாக வீசி வெற்றியைத் தரும்.

இதேபோல் சண்டை சன் தொலைகாட்சியின் அசத்தப்போவது யாரில் அடிக்கடி நடக்கும் மதுரைமுத்து என்பவர் சன்னைப் புகழோ புகழ் என்று புகழ்வார். தங்களை ஏத்திவிட்ட விஜய தொலைக்காட்சியை ஏனோ மறந்துவிட்டார்.முன்னைய தொலைகாட்சிகளுடன் பிரச்சனை இருக்கலாம் அதற்காக அவர்களை நக்கலடிப்பது நல்லதல்ல. சன்னுக்கு கலைஞர் தொலைக்காட்சியை நக்கலடிக்கமுடியாத சூழ்நிலையில் ஜெயாவை அடிக்கடி செய்திகளில் காட்டி தங்கள் தாத்தாமீதான பாசத்தைக் காட்டுகிறார்கள்.

பொதுவாக ஊடகம் என்பது மக்களுக்கு நல்ல விடயங்களைத் தான் போதிக்கவேண்டும் ஆனால் இப்போ எதிர்மாறாகத் தான் நடக்கின்றது, சிறந்த உதாரணமாக மெஹா சீரியல்களைச் சொல்லமுடியும். இரண்டு கணவன், இரண்டு மனைவி, கள்ள உறவு இல்லாத சீரியல் எது? இதுவா நம்ம கலாச்சாரம்? தொலைக்காட்சித் தொடர்களுக்கும் தணிக்கை தேவை.

இங்கே தொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும் தமிழ் மொழியைக் கடித்து துப்பவர்களைப் பற்றிச் சொல்ல அவசியமில்லை. அதனை யாரும் முளையிலே கிள்ளவில்லை. மக்கள் தொலைக்காட்சி மட்டும் விதிவிலக்கு,

இதனைவிட சகல வானொலிகளிலும் தொலைக்காட்சிகளும் ஏனோ இங்கிலாந்து ராணியின் வாரிசுகள் போல் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். இதில் விஜய் தொலைகாட்சி முதலிடம் பெறும். இந்த தொற்றுநோய் இப்போ நம்ம நாட்டிலும் தொற்றியிருக்கின்றது என்பதுதான் கவலைக்குரிய விடயம். ஒரு முறை இந்த ஆங்கிலமோகத்தைப் பற்றி நண்பர் லக்கிலுக்கிடம் பேசியபோது தமிழகத்தின் நகரத்தில் தான் இந்த மோகம் என்று கிராமங்களில் இன்னமும் பரவவில்லை என்றும் சொல்லியிருந்தார்.

ஒருமுறை நடிகர் கமலஹாசன் குறிப்பிட்ட ஒரு விடயம் ஞாபகத்திற்க்கு வருகின்றது. "பத்திரிகையாளர்களே என் படுக்கையறைக்குள் எட்டிப்பார்க்காதீர்கள்" என்றார். டயானா முதல் இன்றைய நயந்தாரா சிம்பு காதல் வரை பெரிதுபடுத்தியவர்கள் சில பத்திரிகையாளர்கள்தான்.

சில இணையத்தளங்களும் செய்திகொடுக்கின்றேன் என மிகவும்தப்புத்தப்பான தகவல்களைக் கொடுக்கிறார்கள். அண்மையில் இலங்கையில் உள்ள பிரபல தொலைக்காட்சி ஒரு சம்பவத்திற்க்கு இன்னொரு சம்பவத்தின் ஒளிவடிவத்தை ஒளிபரப்பி பரபரப்பை ஏற்படுத்தினார்கள். பின்னர் இரண்டு நாட்கள் கழித்து வருத்தம் தெரிவித்தார்கள்.

ஒருகுடம் பாலுக்கு ஒரு துளி விஷம் என்பதுபோல் சில பத்திரிகை, தொலைகாட்சி,வானொலிகளால் அனைத்து ஊடக‌ங்களுக்கும் கெட்டபெயர். தற்போது வலையிலும் நிறைய ஊடகவியளாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கவேண்டும்.

பின்குறிப்பு : உங்கள் வாழ்க்கை எங்கள் செய்தி என்ற தலைப்பு ஏன் எனக்கேட்கிறீர்களா? நம்ம ஊரில் உள்ள தொலைக்காட்சி ஒன்று தங்கள் செய்திக்கு அவர்கள் செய்தி எனத் தமிழில் சொல்வதில்லை கொடுக்கும் விளம்பரம். இவர்களை இதுவரை யாரும் எங்கள் வாழ்க்கையை எப்படி நீங்கள் செய்தி ஆக்குவீர்கள் எனக் கேட்டதே இல்லை.