சூர்யா
ஆரம்பம் முதல் முடிவு வரை சூர்யாவின் ராட்சியம் தான். முதல்பாதியில் வடிவேலுடன் சேர்ந்து கலகலக்க வைக்கின்றார். பல இடங்களில் மெய் மறந்து சிரிக்கச் செய்கின்றார்கள். சண்டைக்காட்சிகளில் அயன் பாதிப்பில் இருந்து சூர்யா மாறவில்லைபோல் தெரிகின்றது.
நயனுடன் பாடல் காட்சிகளில் நல்ல கெமிஸ்ரி இருக்கிறது. ஆனாலும் படத்தில் சூர்யாவிற்க்கும் நயனுக்குமிடையில் சொல்லிக்கொள்ளும்படி காதல் காட்சிகள் இல்லை. இரண்டாம் பாதியில் கொஞ்சம் முரட்டுத் தனமான சூர்யாவைக் காணக்கூடியதாக இருக்கிறது. வாரணம் ஆயிரம், காக்க காக்க, சில்லென்று ஒரு காதல் போன்ற படங்களில் காட்டிய நடிப்பை விட குறைச்சலாக சூர்யா நடிச்சாலும் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பு என்ற படியால் இந்த வருடத்தின் சிறந்த நடிகருக்கான தமிழக விருது கிடைக்கும் சாத்தியங்கள் அதிகம். 
படம் தொடங்கும் போது சூரியாவின் சிறுவயதுப்படங்கள் தொடங்கி ஜோதிகா மற்றும் அவரின் குழந்தையுடன் நிற்க்கும் குடும்பப் படம் வரை காட்டிவிட்டு டைட்டிலில் சூர்யா எனக் காட்டுகின்றார்கள். சூர்யாவும் மாயவலைக்குள் விழுகின்றாரோ போன்ற எண்ணம் ஏற்படுகின்றது.
சூர்யாவைப் படத்தில் 10 வயதுத் தோற்றத்தில் காட்டுவது எரிச்சலைத் தான் தெருகின்றது. அவருக்குப் பொருந்தவேயில்லை.
நயன்தாரா
முதல் காட்சியிலையே ஜிம் உடையுடன் தோன்றினாலும் எண்ணை அப்பிய முகமாக அந்தக் காட்சியிலும் அதனைத் தொடர்ந்து வருகின்ற பாடலிலும் முகத்தை ஒப்பனை செய்து முகம் சுழிக்கவைக்கின்றார். எனக்குப் பக்கத்தில் இருந்த நயன் ரசிகர்கள் இருவரும் நயனின் அழகு குறைந்துகொண்டே வருகின்றது எனக் கவலைப்பட்டார்கள்.
வில்லுப் படத்தைப்போல் பாடல்களில் வந்துபோனாலும் ஏனோ அவ்வளவு கவர்ச்சி காட்டவில்லை. மற்றும்படி வழக்கமான தமிழ்சினிமா கதாநாயகிதான். தியேட்டரில் இருந்த பச்சிளம் பாலகர்கள் கூட நயன் வர விசில் அடிக்கின்றார்கள்.
வடிவேல்
படத்தின் அச்சாணியே இவர்தான். நீண்ட நாட்களுக்குப் பின்னர் வின்னர் கைப்புள்ள போல் நினைவில் நிற்க்கும் பனர்ஜி என்ற பாத்திரத்தில் நடித்திருக்கின்றார். சூர்யாவுடன் செய்யும் அலும்புகள் அதிலும் அவ்ரா பாலத்தில் இவர் செய்யும் கூத்துகள் சிரிப்பொலியிலும் ஆதியாவிலும் இனி அடிக்கடி ஒளிபரப்பாகும். துணைக்கு வேறு ஒருவரையும் வைத்திருக்காமல் நீண்ட நாட்களுக்குப் பின்னர் கதையுடனும் கதாநாயகனுடன் சேர்ந்து கலக்கி எடுத்திருக்கிறார்.
கதை
நொய்டாவில் நடந்த குற்றங்களை கண்டுபிடிக்க வருகின்ற நீதிபதியைக் கொல்லும் கும்பலின் கதை. நீதிபதியைக் கொல்ல்வேண்டியதற்கான காரணத்தை இன்னும் கொஞ்சம் காத்திரமாகச் சொல்லியிருக்கலாம். நடிகர் ரமேஸ்கண்ணாவின் கதை.
திரைக்கதை, வசனம்
கேஎஸ்.ரவிகுமார் திரைக்கதையுடன் வசனத்தையும் எழுதியிருக்கின்றார். ஏற்கனவே பார்த்த சில படங்களின் திரைக்கதை போல் இருந்ததாலும் அதிலும் சில காட்சிகள் வாரணம் ஆயிரம், அயன் போன்ற படங்களில் சூர்யாவே செய்தவை. அடுத்து வரும் வசனத்தையும் காட்சியையும் முன் சீட் சின்னப் பொடியனே சொல்லுகின்ற அளவுக்கு காத்திரமில்லை. அடுத்து இதுதான் நடக்கபோகின்றது என இலகுவாக ஊகிக்கூடிய காட்சிகள். போரடிக்காமல் திரைக்கதையை ரவிகுமார் அமைத்திருந்தாலும் இறுதிக் காட்சியில் தடுமாறி சொதப்போ சொதப்பு எனச் சொதப்பிவிட்டார். தசாவதாரம் இறுதிக்காட்சி அமைத்தவரா? (ஓஓ தசாவதாரம் திரைக்கதை வசனம் கமல்)எனக்கேட்க வைக்கின்றார். சிலவேளைகளில் தீபாவளிக்கு வெளியிடவேண்டும் என்ற அவசரத்தில் தடுமாறிவிட்டாரோ தெரியவில்லை. 
இயக்கம்
தசவாதாரத்தில் சதமடித்த கே.எஸ்.ரவிகுமார் இதில் ரன் அவுட்டாகிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். அதேயளவு பிரமாண்டம் படத்தில் இல்லாவிட்டாலும் பல இடங்களில் லொஜிக் மீறி குருவியில் விஜய் ஒரு கட்டடத்தில் இருந்து இன்னொரு கட்டடத்திற்க்குப் பாய்வது போல் சூர்யாவையும் பாயவிடுகின்றார். இறுதிக்காட்சியில் சொதப்பியது மிகப்பெரிய பலவீனம். முன்பாதிவரை ரவிகுமார் படம் என நினைக்கவைத்தவர் பின்பாதியில் லொஜிக் இல்லாமல் மாஜிக் காட்டியிருக்கின்றார்.
ஒளிப்பதிவு
கணேசின் நேர்த்தியான ஒளிப்பதிவு படத்தின் பலம். பாடல் காட்சிகளில் அவ்வளவு அழகு. கொல்கத்தாவை அழகாகப் படம் பிடித்திருக்கின்றார். அவ்ரா பாலமும் அதனைச் சூழந்த நீர்நிலைக் காட்சிகளும் குளிர்மை.
இசை
ஹாரிஸ் ஜெயராஜ் ஏற்கனவே பாடல்களை ஹிட்டாகியதை எவ் எம் வானொலிகள் மூலம் கேட்டாலும் பின்னணி இசையில் அவ்வளவாக சோபிக்கவில்லை. முதல் சண்டையில் தகரக் கடைக்குள் யானைகள் புகுந்தது போல் அவ்வளவு சத்தம். நல்ல இனிமையான பின்னணி கொடுக்க காதல் காட்சிகள் இல்லையென்பதும் இன்னொரு குறை.
சண்டைப் பயிற்சி
கனல் கண்ணன், தென்னாபிரிக்காவின் பிரான்ஸ் ஸ்பில்ஹாஸ் இருவரும் சண்டைக் காட்சிகள் இயக்கியிருக்கின்றார்கள். முதலாவது சண்டை அச்சு அசல் அயன் கொங்கோ சண்டைபோல் இருக்கின்றது.
படத் தொகுப்பு
டான் மேக்ஸின் படத் தொகுப்பு படத்தின் பலம். சில பார்த்த காட்சிகள் தான் என்றாலும் போராடிக்காமல் தொகுத்திருக்கின்றார். படத் தொகுப்பின் வேகம் படத்தின் இன்னொரு பலம்.
தயாரிப்பு
உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு என்பதால் அவரும் ஒரு காட்சியில் தோன்றுகின்றார். இன்னும் அவர் குருவியில் இருந்து மீளவில்லை என்பது சில காட்சிகளில் தெரிகின்றது.
சரோஜாதேவி, மறைந்த நடிகர் முரளி, ஷயாயி ஷிண்டே, அனுஹாசன், ரமேஸ்கண்ணா, பெப்சி விஜயன், ரியாஸ்கான் உட்பட பெரிய பட்டாளமே நடித்திருக்கின்றது.
அபிநய சரஸ்வதி சரோஜாதேவியை அதீத ஒப்பனையுடன் வழக்கமான அவரின் எம்ஜிஆர் புராணங்களுடன் உலாவவிட்டிருக்கின்றார்கள்.
முஸ்லீம்களை கூலிக்கு கொலைசெய்பவர்களாகவும் கொல்கத்தா பிராமணர்கள் மீன் சாப்பிடுவதையும் காட்டியிருக்கின்றார்கள். ( படத்தில் பிரச்சனைகள் கிழப்பவேண்டும் என்றால் இவைதான் பிரச்சனையானவை).
மொத்தத்தில் ஆபாச இரட்டை அர்த்த வசனங்கள், காட்சிகள் அற்ற குடும்பத்துடன் நகைச்சுவைக்காக ஒரு தடவை பார்க்ககூடிய சிறந்த பொழுதுபோக்குப் படம்.
ஆதவன் - அதீத எதிர்பார்ப்பு குறைந்த பலன்
டிஸ்கி : வேட்டைக்காரனை ஆதவனுடன் மோதவிட்டிருக்கலாம்.
ஆதவன் - திரை விமர்சனம்
எழுதியது வந்தியத்தேவன் at 38 கருத்துக் கூறியவர்கள்
மாற்றான் மனை கவர்தல் - தகாமுறைத் துணைகவரல்
நயந்தாராவைக் கண்ட இடத்தில் அடிப்பேன், பிரபுதேவா மனைவி, என் சகோதரிக்கு பிரகாஷ்ராஜ் துரோகம் இழைத்துவிட்டார், நடிகை டிஸ்கோ சாந்தி. அண்மையில் இணையங்களிலும் பத்திரிகைகள், சஞ்சிகைகளிலும் வெளியான செய்திகள் இவை. 
ஏன் சில பெண்கள் அல்லது ஆண்கள் திருமணமான ஆணை அல்லது பெண்ணை விரும்புகின்றார்கள். இப்படியான விடயத்தை ஆங்கிலத்தில் Mate Poaching ('தகாமுறைத் துணைகவரல்') என்கின்றார்கள். அதாவது இன்னொருவரின் துணையை விரும்புவது.
பெரும்பாலான ஜோடிகளை பொதுவாக "எப்படி நீங்கள் சந்தித்தீர்கள்" எனக் கேட்டால் அவர்கள் அதீத ஆவலினாலும் தங்கள் ஆசைகளைக் கிளறியதாலும் ஒருவர் மேல் ஒருவர் காதல் கொண்டோம் என்பார்கள். அவர்களது முதல் சந்திப்பு பெரும்பாலும் அதீத , வழக்கத்துக்கு மாறான, தற்செயலான, அதிகம் கவர்ச்சியூட்டும் சந்திப்பாகத் தான் இருந்ததாக கூறுகின்றார்கள். முன்பின் அறிந்திருதாவர்களின் வசீகரமும், மயக்கும் ஆற்றலும் அவர்கள் மேல் காதல் கொள்ளவைத்துவிடும்.
இதனை டொக்டர் டேவி ஷிமிட் (Dr. David Schmitt, a psychology professor and researcher at Bradley University in Peoria) 'தகாமுறைத் துணைகவரல்'(Mate Poaching ) எனக் கூறுகின்றார். அதாவது வசீகரத்தன்மையால் இன்னொருவரின் துணை மீது ஏற்படு ஈர்ப்பு.
அண்மையில் அவர் 53 நாடுகளில் இருந்து 16000 நபர்களிடம் எடுத்த தகவல்களின் படி 18% மான திருமணமான ஆண்களும் 11% மான திருமணமான பெண்களும் தங்கள் துணைகளை விட்டுவிட்டு இன்னொரு துணையைத் தேடுகின்றார்கள்.
உளவியல் ரீதியாக சில நபர்கள் தாங்கள் தனிமையாகவும் பாதுகாப்பற்றிருப்பதாகவும் உணர்வதால் வஞ்சகமாகவும் நேர்மையற்ற முறையிலும் இன்னொரு துணையைத் தேடுகின்றார்கள் எனவும் கருதலாம்.
எது எப்படியிருப்பினும் அவரின் ஆராய்ச்சி இன்னொரு துணையை தகாதமுறையில் கவருதல் அவர்களின் பிரத்தியேக, தனக்கு அப்பாற்பட்ட விடயங்களின் நாட்டமுள்ள, மனதிற்கு ஒவ்வாத, மனசாட்சியற்ற, நேர்மையற்ற" விடயமாகும் என உறுதியாகக் கூறுகின்றார். அவர்கள் தங்களுக்குள் திறந்தமனதுடனும் இலகுவாகவும் பாலியல் சம்பந்தமான விடயங்களை கலந்துரையாட முடிவதாகவும் கூறுகின்றார். இது இரு பாலினத்திற்க்கும் பொருந்தும்.
இந்த ஆராய்ச்சியில் மதிப்புகள் அல்லது கோட்பாடுகளின் வீழ்ச்சி, குறைபாடான கட்டுப்பாடுகள், குறைந்தளவு இரக்க உணர்ச்சிகள் மற்றும் தன்னிலைப் படுத்தாமை(self-centered) போன்றவற்றால் 'தகாமுறைத் துணைகவரல்' தோன்றுவது அவதானிக்கப்பட்டது.
சட்டத்துக்கு மாறாக இருக்கும் இந்த உறவுகளால் " உன் அயலவனையும் உன்னைப்போல் " நேசி என்ற கோட்பாடு அற்றுப்போகின்றது. சமூகத்தின் அவர்கள் மேலான பார்வையும் நேர்மையற்றதாகிவிடுகிறது.
சிலர் இதனை சரியென விவாதிக்கலாம் ஏனென்றால், ஒருவரின் துணை அறிமுகம் இல்லாதவராக அல்லது பழகிய அனுபவமற்றவராக இருப்பதும் இருவரிற்கிடையில் மனஒற்றுமை இல்லாதிருப்பதும் மற்றவரை இன்னொரு துணையைச் தேடச் செய்யும் நிலைக்கு மாற்றிவிடும். ஆனாலும் சமூக, மத நல் ஒழுக்கங்களினால் பெரும்பாலோர் இந்த நிலைக்குச் செல்லாமல் சகிப்புத் தன்மையுடன் தங்கள் வாழ்க்கையை நடத்திக்கொண்டுதான் இருக்கின்றார்கள். 'தகாமுறைத் துணைகவரல்' ஈடுபடுபவர்கள் இந்த ஒழுக்கங்கள், கோட்பாடுகளை மதிக்காமல் தங்கள் இஸ்டத்திற்க்கு இருக்கின்றார்கள்.
கண்ணுக்குத் தெரியாத கட்டுப்பாடுகள் உளவியல் ரீதியாக ஒரு செயற்களத்தில் இருந்தே செயற்படுகின்றது. அதாவது இந்தக் கட்டுப்பாடுகள் "உங்கள் உடல், எண்ணங்கள், உணர்ச்சிகள், செயற்பாடுகள்" போன்ற செயற்களங்களில் செயல்படுகிறது. இது உங்களை உங்கள் சமூகத்தில் இருந்து உங்களைப் புறக்கணிக்கவும் காரணமாகின்றது. யாரும் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடமுடியாவிட்டாலும் சில பாதிப்புகள் ஏற்படத்தான் செய்யும்.
அத்துடன் இன்னொரு துணையை நாடுகின்றவர்கள் தங்கள் பாதுகாப்பு, நிரந்தரத் தன்மை போன்ற காரணிகளிலும் கவனம் செலுத்தவேண்டும். இல்லையென்றால் உங்கள் புதிய துணையின் பொறுப்புகளும் எதிர்காலத் திட்டங்களும் நிச்சயமற்றுப் போய்விடும். 'தகாமுறைத் துணைகவரல்' என்பது நிலையற்றது.
நீங்கள் இன்னொருவரின் துணையின் மேல் டேட்டிங் (இதன் தமிழ் அர்த்தம் என்ன?), ஈடுபாடு, கூடிவாழ்தல்(cohabiting or living together) அல்லது திருமணம் போன்றவற்றில் அக்கறை இருந்தால் கீழ்வரும் விடயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்.
1. இந்த அன்பு அல்லது காதல் கிடைத்தற்கரியதா எனப் பாருங்கள். சிலவேளைகளில் அவனோ/அவளோ ஆசைகாட்டினால் கூட ஒரு முறை சிந்தியுங்கள்.
2. அவருடைய தற்போதைய உறவுமுறை மனநிறைவற்ற அல்லது சீரற்றதாக இருக்கிறதா என தகுந்த காரணங்களுடன் ஆராயுங்கள்.
3. சந்தோசமற்ற துணைக்கு நீங்கள் அவரது கதைகளைக் கேட்டோ, பாராட்டியோ அல்லது துணைக்கு நின்றோ உதவி செய்யாதீர்கள்.
4. பாலியல் ரீதியான விடயங்களை அவருடன் கலந்தாலோசிக்காதீர்கள்.
5. நீங்கள் அவருக்கு துணையாக இருக்கவேண்டும் என நினைத்தால் , தனிமையான அல்லது துணையுடன் இருக்கும் ஒருவருடன் நேர்மையாகவும் , சரியான பாதையிலும் உங்கள் தொடர்புகளை வைத்திருங்கள்.
6. இந்த அனுபவமும் ஒரு பரவசமூட்டும் சிலிர்க்கச் செய்யும் குறுகியகால அனுபவமாக இருந்தாலும் இருவருக்கும் ஆபத்தானது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
'தகாமுறைத் துணைகவரல்' என்பது ஒழுக்ககேடான மற்றவர்களையும் பாதிக்கின்ற ஒரு விடயம் என்பதனைத் தெரிந்துகொண்டால் இல்லறங்கள் நல்லறங்களாக என்றைக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்.
பின்குறிப்பு : இணையத்தில் நயன் பிரபுதேவா சர்ச்சைகள் பார்த்த ஒரு இடத்தில் இந்த சொல் புதிதாக இருந்தது என்ன விடயம் எனத் தேடியதில் பல இணையங்களில் இதனைப் பற்றிக் கிடைத்த குறிப்புகளை வைத்து எழுதியதே இது. மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கவே இந்தப் பதிவு.
நன்றி : Mate Poaching என்ற ஆங்கிலப்பதத்திற்க்கு "தகாமுறைத் துணைகவரல்" என்ற தமிழ்ப் பதத்தை மொழிபெயர்த்துத் தந்த சஜிக்கு நன்றிகள்.
இந்தப் பதிவில் முதலில் இட்ட தலைப்பு ஆணாதிக்கவாதத் தலைப்பு எனப் பலர் கருதுவதால் தலைப்பை மாற்றிவிட்டேன்.
எழுதியது வந்தியத்தேவன் at 35 கருத்துக் கூறியவர்கள்
எப்படியிருந்த நயன்தாரா - சில குறிப்புகள்
2005 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் ஐயா படம் மூலம் அறிமுகமாகி அடுத்த படத்திலையே சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர்ந்து பலரின் மனதைக் கவர்ந்தவர் பின்னர் தமிழ் சினிமாவில் தாக்குப் பிடிக்க கவர்ச்சி என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்து இன்றைக்கும் இளைஞர்களின் மனதில் நீங்காமல் நிறைந்திருக்கும் நயன் பற்றிய சில குறிப்புகள். 
இயற்பெயர் : டயானா மரியம் குரியன்
பிறந்த நாள் : 18 நவம்பர் 1984.
பிறந்த இடம் : திருவல்லா, கேரளா (இன்னொரு கேரளத்து பைங்கிளி)
கல்வி : BA (ஆங்கில இலக்கியம்)
முதல் படம் : மனசின்னகரே(மலையாளம், 2003), ஐயா(தமிழ், 2005)
ஐயா படத்தில் "ஒருவார்த்தை பேச ஒரு வருடம் காத்திருந்தேன் என" சரத்குமாரை மட்டுமல்ல இளைஞர்கள் பலரையும் செல்வியாக தன் அழகாலும் புன்னகையாலும் கவர்ந்தவர். இன்னொரு மீரா ஜாஸ்மின், அசின் போல் ஹோம்லியான நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டவர். பின்னர் சந்திரமுகியில் தர்கா மன்னிக்கவும் துர்காவாகி சூப்பர் ஸ்டாருடன் பட்டம் விட்டு இளைஞர்கள் மனதிலும் பட்டமாக ஒட்டிக்கொண்டவர். 
கஜனியில் சித்ராவாக "எக்ஸ் மச்சி வை மச்சி" என கொஞ்சம் கவர்ச்சியாக ஆட்டம் போட்டவர். பின்னர் சிவகாசியில் இளைய தளபதியுடன் "கோடம்பாக்கம் ஏரியா" என ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார். 
விரல் வித்தை நடிகர் சிம்புவின் வல்லவன் போஸ்டரிலையே அவரின் உதட்டைக் கடித்து பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். சொப்னாவாக வல்லவன் படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் சிம்புவுடன் அவருக்கு "காதல் வந்துடுச்சு". பின்னர் எஸ்.ஜே.சூர்யாவுடன் கள்வனின் காதலி என்ற படத்தில் ஹரிதா என்ற மென்பொருள் பெண்ணாக வந்து பாடல்களில் கவர்ச்சி ஆட்டம்போட்டார். 
பின்னர் தலைமகனில் மீண்டும் சரத்குமாருடன் நடித்தார். ஈ படத்தில் ஜீவாவுடன் ஜோதி என்ற பாத்திரத்தில் நடித்தார். 
இந்த நேரத்தில் சிவாஜியில் "பல்லேலக்கா " பாடலுக்கு ரஜனியுடன் ஆட்டம் போட்டார். 
ஷாசா என்ற பெயரில் பில்லாவில் இவர் காட்டிய கவர்ச்சி, கூட நடித்த கவர்ச்சி சூறாவளி நமீதாவையே கவர்ச்சியில் மிஞ்சி, எப்படி இருந்த நயன் இப்படியாகிவிட்டார் என பலரையும் உச் கொட்டவைத்தார். 
பில்லாவின் பின்னர் வெளிவந்த யாரடி நீ மோகினியில் ஐயராத்து பெண்ணாக அடக்க ஒடுக்கமாக நடித்தார். மருமகனைத் தொடர்ந்து மீண்டும் மாமனாருடன் குசேலன் படத்தில் நயன்தாராவாகவே வந்து போனார். 
சத்யம் படத்தில் விஷாலுடன் இவர் காட்டிய நெருக்கம், கிசுகிசுவாக மாறியது. பின்னர் மீண்டும் தலையுடன் எகன் என்ற படத்தில் நடித்திருந்தார். 
தலைக்கு ஜோடியானால் தளபதி விடுவாரா வில்லுவில் தனக்கு ஜோடியாக்கினார். இந்தப் படத்தை இயக்கிய பிரபுதேவாவுடனான காதல் பத்திரிகைகளுக்கும் சஞ்சிகைகளுக்கு இணையங்களுக்கும் நல்ல தீனி போட்டது. வில்லுவில் இவர் காட்டிய கவர்ச்சி, கவர்ச்சியின் எல்லை வரை இருந்ததாக நண்பர் லோஷன் தன் வில்லு பட விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்தார். 
அடுத்து சூரியாவுடன் இணைந்து நடிக்கும் ஆதவனை இவர் ரசிகர்கள் பெரிதாக எதிர்பார்க்கின்றார்கள். திரிஷா, ஸ்ரேயா, தமன்னா என பலர் வந்தாலும், பல கிசுகிசுக்கள், சர்ச்சைகள் எனப் பல பிரச்சனைகள் இருந்தாலும் இன்னும் தமிழ் சினிமாவில் நம்பர் 1 நடிகையாக நயன்தாரா இருக்கின்றார் என்பது மிகைப் படுத்தப்பட்ட உண்மையல்ல. 
பின்குறிப்பு : என் அன்புத் தம்பி ஆதிரை நயன்தாராவின் தீவிர ரசிகன் என்பது நேற்று ஒரு பதிவினைப் பார்த்த பின்னர் தெரியவந்தது. ஆகவே நயனின் தீவிர ரசிகன் ஆதிரைக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.
போனஸ் படம் :
பிரத்தியேக குறிப்பு : நயனும் என்னைப் போல் நவம்பர் பேபிதான்.
தகவல் மற்றும் பட உதவிகள் : பல இணையத் தளங்கள்.
எழுதியது வந்தியத்தேவன் at 20 கருத்துக் கூறியவர்கள்
விதி வலியது - வில்லு

நேற்றைய ஞாயிற்றுகிழமையை வழக்கம் போல் நித்திரைகொண்டு கழிக்கலாம் என எண்ணிக்கொண்டிருந்தபோது நண்பனிடம் இருந்து தொலைபேசி அழைப்பு. வில்லு மதிய நேர காட்சிக்கு செல்லவேண்டும். கொன்கோர்ட் திரையரங்குக்கு 12.30 மணிக்கு வரவும். ஏற்கனவே பதிவுலக நண்பர்களின் வில்லு விமர்சனத்தைப் படித்து அதிர்ச்சி அடைந்திருந்தேன். சொந்த செலவில் சூனியம் வைக்கவும் வேண்டுமா என எண்ணி நண்பனிடம் வில்லு வேண்டாம் ஹிந்தி கஜனிக்கு போவோம் நம்ம அசின்( நண்பனும் அசின் ரசிகன்)கலக்குகிறாராம் எனச் சொல்ல கஜனிக்கு டிக்கெட் எடுப்பது கடினம், வில்லுத் தான் பார்க்கவேண்டும் என ஒற்றைக்காலில் நின்றான். அத்துடன் இன்னொரு நாட்டிலிருந்து மிகவும் வேண்டப்பட்ட ஒருவரும் வில்லு நல்ல படம் நிச்சயம் பார்க்கவேண்டும் என அன்பு வேண்டுகோள் விடுத்திருந்தார். சரி நடப்பது நடக்கட்டும் எதற்க்கும் ரிஸ்க் எடுப்போம் என்று வில்லுக்கு போக முடிவு செய்துவிட்டேன்.
சரியாக திரையரங்கு 12.30 மணிக்கே சென்றுவிட்டேன் ஆனால் நண்பனைக் காணவில்லை. சனக்கூட்டத்தைப் பார்க்க பயமாக இருந்தது. அவனைப் பார்த்துக்கொண்டிருந்தால் டிக்கெட் கிடைக்காது என்றபடியால் நான் போய் வரிசையில் நின்றேன். சிறிது நேரத்தில் முதல் காட்சி முடிந்தவர்கள் வைத்தியசாலையில் இருந்து வருபவர்கள் போல் முகத்தைச் சோகத்துடன் வைத்துக்கொண்டு வரும்போதே நம்ம டாக்டர் விஜய் நன்றாக அறுவைச் சிகிச்சை செய்து அனுப்பியிருக்கிறார் எனப் புரிந்துவிட்டது. அத்துடன் வரிசையில் நின்றவர்களைப் அவர்கள் பார்த்த பார்வை கோவில் வேள்விக்கு நேர்ந்துவிட்ட ஆட்டைப் பார்க்கும் பரிதாபப் பார்வையாக இருந்தது. நேரம் ஓடிக்கொண்டிருந்தது நண்பன் இல்லை மயூரேசனுக்கு ஏற்பட்டதுபோல் இல்லாமல் பார்க்கூடிய தோரணையில் சிலர் இருந்தபடியால் ஏதோ பொழுது போனது.
டிக்கெட் கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள். நண்பனைக் காணவில்லை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது 10 நிமிடத்தில் வருவேன் மொத்தமாக 4 டிக்கெட் எடு என்றான். நாலா? வேறை யார் வருகிறார்கள் எனக்கேட்க நீ எடு வந்துசொல்கின்றேன் என்றான். சரி என்று நானும் டிக்கெட் எடுத்து சிறிது நேரம் காத்திருக்க ஒரு ஓட்டோவில் இரண்டு பெண்களுடன் வந்து இறங்குகின்றான். அடப்பாவி இதற்காகவே என்னையும் பலிக்கடா ஆக்கினான். ஒரு பெண் அவனது மச்சாள் இன்னொரு பெண் மச்சாளின் நண்பி என்று அறிமுகம் செய்தான். நேரம் போய்விட்டது படம் போடப்போகின்றார்கள் வா என அவனை இழுக்காத குறையாக மேலே ஏத்திக்கொண்டுபோய்விட்டேன். அங்கே போனால் நாலே நாலே சீட் மட்டும் இருக்கின்றது. ஏனைய அனைத்தும் நிரம்பிவிட்டது. தியேட்டர் பையன் ஒருவர் டோர்ச் லைட் அடித்து ஒவ்வொருவரையும் ஒவ்வொரு இடத்தில் இருத்திவிட்டார். நான் முன் வரிசை நண்பன் மூன்றாவது வரிசை அவந்து மச்சாள் கடைசிக்கு முதல் வரிசை அவரது நண்பி கடைசி வரிசை.
பெரும் விசில் சத்ததுடன் படம் ஆரம்பமாகியது. முதலில் காணமல் போயிருந்த தாமு உங்களுக்குப் பிடித்த நடிகர் யார் என பேட்டி எடுக்கின்றார். சூப்பர் ஸ்டார், உலக நாயகன் பின்னர் எம்ஜீஆர் என பலரும் சொல்லுகிறார்கள் ஒரு கிழவி மட்டும் இவர்களை விட இன்னொருவரும் இருக்கின்றார் என் பேர்த்தியை காப்பற்றியவர் அவர் எனச் சொல்ல நம்ம இளையதளபதி புடைவைகளுக்கிடையே தோன்றி அடியாட்களை அடித்து நொருக்குகின்றார். எனக்குப் பக்கத்தில் இருந்த சிறுமி ஒருத்தி இந்தச் சண்டைக் காட்சிக்கு விழுந்து விழுந்து சிரித்தார். குழந்தைகள் பொய் சொல்வதில்லை.
அடுத்தது வழக்கம் போல் நாயகன் அறிமுகப்பாடல். ராமரிடம் வில்லையும் பீமனிடம் கதையையும் கேட்ட விஜய் இயக்குனரிடம் படத்தின் "கதை"யையும் கேட்டிருக்கலாம். மானாட மயிலாட புகழ் குஷ்பு இடையிடையே திரையை ஆக்கிரமித்து குத்தோ குத்து என்று குத்தினார். அவரின் ஆட்டத்தில் எனர்ஜி இருந்தது ஆனால் கிரேஸ் இருக்கவில்லை. 8 மார்க் தான் போடலாம். ரம்பா 10 போட்டிருப்பார்.
அடுத்து வடிவேல் அறிமுகமாகின்றார் பரவாயில்லை சிரிக்கவைக்கின்றார். ஆனாலும் எத்தனை நாளைக்குத்தான் வாயைக் குவித்து அழப்போகின்றாரோ தெரியவில்லை. நாயகி வழக்கம் போல் கிராமத்தில் நவநாகரீகப் பெண்மணியாக அறிமுகமாகின்றார். பிறகென்ன வழக்கமான பார்முலாக் கதைதான். அதிலும் அந்தக் காலத்தில் அரதப்பழசான கதை. ஏற்கனவே பலர் அலசி துவைத்து அடித்துக் காயப்போட்ட விமர்சனத்தை நானும் செய்யவிரும்பவில்லை.
ஏனைய விஜய் படங்களில் இல்லாத சிறப்புகள் சில இந்தப் படத்தில் கண்ணில் பட்டது.
1. நாயகன் பஞ்ச் டயலாக் பேசவில்லை.
2. தெலுங்கிலோ அல்லது இன்னொரு தென்னிந்திய மொழியிலோ வில்லன்கள் இல்லை நாயகனும் அந்த மொழி பேசவில்லை.
3. வடிவேலுவுடன் சிங்கமுத்து குழு வந்து இம்சை செய்யவில்லை.
4. கிளைமாக்ஸ் காட்சியில் பக்கம் பக்கமாக வசனம் பேசவில்லை.
இப்படிச் சில காட்சிகள் இருந்தாலும் சில கேள்விகள் மனதில் எழுகின்றன.
1. இந்தப் படத்தில் விஜயின் பெயர் புகழ். வில்லு என்பதற்க்கும் இந்தப் பெயருக்கும் என்ன சம்பந்தம். படத்திற்க்கு அம்பு என்று வைத்திருந்தாலாவது விஜய் அம்பாகி கொலை செய்கின்றார் என அர்த்தப் படுத்தியிருக்கலாம் வில்லுக்கு விளக்கம் கொடுப்பவரை தமிழ்மண விருதுக்கு பரிந்துரை செய்யலாம்.
2. எத்தனையோ கோடிகள் கொட்டி படம் எடுப்பவர்கள் ஏன் கதாநாயகிக்கு மட்டும் நூற்றுக்கணக்கில் செலவு செய்து ஆடை கொடுக்கின்றார்கள். பலரும் நயன் இந்தப் படத்தில் அதிக ஆடை குறைப்பு செய்திருக்கின்றார் என்கின்றார்கள் ஆனால் பில்லாவை விட இதில் அதிகம் ஆடை குறைக்கவில்லை என நினைக்கின்றேன்.
3. முதல் காட்சியில் ரஜனி கமல் எம்ஜீஆரை மக்களின் ஹீரோவாக காட்டிய விஜய ஏன் தன் போட்டியாளர் அஜித்தைக் காட்டவில்லை. ரஜனிப் படங்களில் ரஜனி கமலை நிச்சயம் காட்டுவார். சிவாஜியில் பெயர் அன்ட் லவ்லி பூசி தான் கமலஹாசனைப்போல் அழகாக வருவேன் என வசனம் கூட வைத்திருப்பார். தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜய் இப்படிச் செய்யலாமா?
4. கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் வெளிநாட்டுக்குச் செல்ல விசா கிடைப்பதுபோல் எப்படி காமடியனுக்கும் கிடைக்கின்றது.(படப்பிடிப்புக்கு அல்ல கதையில்).
5. காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக படங்கள் போல் இளைய தளபதி இனி எப்போது நடிப்பார்.
எனக்கு இன்னொரு விதி வலியது கதையும் இருக்கின்றது. இன்னொரு நாட்டில் சிலம்பாட்டம் பார்த்த கதை இன்னொரு நாள் எழுதுகின்றேன்.
எழுதியது வந்தியத்தேவன் at 6 கருத்துக் கூறியவர்கள்
யாரடி நீ (நயன்தாரா) மோகினி
ஏற்கனவே பல படங்களில் பார்த்த கதைதான். தற்கால மென்பொருள் இளைஞன் ஒருவனுக்கு அவனது மேலதிகாரிமேல் ஏற்படும் காதல். அந்த மேலதிகாரி யார் எனத் தெரியவரும்போது இடைவேளை. பின்னர் கலகலப்பான கூட்டுக்குடும்பம், இன்னொரு இனக்கவர்ச்சிக் காதல். இறுதியில் ஒருபக்கக் கதைபோன்ற கிளைமாக்ஸ் முடிவு. 
முற்பாதியில் மென்பொருள்காரர்கள் ஆணிபிடுங்கும் கலகலப்பான காட்சிகள். அதுவும் ஒரு இரவில் ஒரு தீர்வைத் தனுஷ் எழுதுகின்றார் என்பது எல்லாம் சினிமாவில் மட்டுமே நடக்கும். அப்படியே அவுஸ்திரேலியாவுக்கு வேலைவிடயமாக விசிட். அங்கே ஒரு டூயட். நைட் கிளப்பில் நயன் குடித்துவிட்டு அடிக்கும் லூட்டிகள் அங்கங்கே பஞ்சதந்திரம் தேவயாணியை நினைவூட்டினாலும் நயனின் சினுங்கலும் தனுஷின் மிரட்டலும் புதிது. இயக்குனர் செல்வராகவனின் சீடன் என்பது இந்தக்காட்சிகளில் தெரிகின்றது.
பிற்பாதியில் கிராமம் அதிலும் ஐயர் ஆத்தில் நடக்கும் காட்சிகள். இன்னமும் ஆத்தில் ஏனையவர்களை அனுமதிக்காத தன்மை. தனுஷ்க்காகவே ஒரு சண்டை. (ஒரே ஒரு சண்டைமட்டும்தான்). தனுஷ்சின்மேல் காதல் கொள்ளும் 15வயது மச்சினி. தனுஷ்சின் காதலைப் புரிந்துகொள்ளும் நயன். அது என்னவோ சினிமாவில் மட்டும்தான் இன்னொருவனுக்கு நிச்சயம் செய்த பெண் இன்னொருவரைக் காதலிப்பார். நியத்தில் இப்படியான கதை இதுவரை கேள்விப்படவில்லை. வழக்கமான முடிவு.
தனுஷ் : பல இடங்களில் நடித்திருக்கின்றார். ஆனாலும் சில இடங்களில் மாமனாரைக் கொப்பி அடிப்பது ரசிக்கமுடியவில்லை. சிலவற்றை ஒரிஜினல்கள் செய்தால்தான் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்ற சின்ன விடயம் ஏனோ இன்னமும் தனுஷ் சிம்பு வகையறாக்களுக்கு புரியவில்லை.
நயந்தாரா : இந்தப் படத்தில் தான் நயனை இவ்வளவு அழகாக காட்டியிருக்கிறார்கள். வாழ்க கமேரா சித்தார்த். பல இடங்களில் நடித்து தன் இருப்பைக் காட்டியிருக்கிறார். சில நடிகைகளினதும் ஒரு நடிகனினதும் வயிறுகள் நிச்சயம் எரியும்.
யுவன் சங்கர் ராஜா : பாடல்கள் கேட்கும் ரகம். அதிலும் அந்த ரகசியாப்பாடல் தாளம்போடவைக்கின்றது. ரீமிக்ஸ் ஏனோ ரசிக்கவில்லை. (யுவனின் என் ஆசை மைதிலியும், ஆசை நூறுவகை போல் எனைய ரீமிக்ஸ்கள் ரசிக்கமுடியவில்லை.) இதனைவிட விஜய் டிவி ஈகியூவில் கல்லூரி மாணவர்கள் நன்றாக ரீமிக்ஸ் செய்கிறார்கள். ஏனையவை மெலடி டைப். சில பாடல்களை சன் மியூசிக் இசையரவிகளில் இனி அடிக்கடி கேட்கலாம்.
பின்னனி இசை டி.இமான் பல இடங்களில் அழகாகவும் சில இடங்களில் வெண்கலக்கடைக்குள் இமான் புகுந்ததுபோலும் இருக்கின்றது. (தியேட்டர் டிடிஎஸ்சின் தவ்றோ தெரியவில்லை).
ரகுவரன் : படம் ஆரம்பிக்கும்போதே டைட்டிலில் அஞ்சலி செலுத்துகிறார்கள் . நல்லதொரு நடிகனை திரையுலகம் இழந்துவிட்டது என மீண்டும் புரியவைத்தார். லவ் டுடே விஜயின் தந்தையைவிட மிகவும் அன்னியோன்னியமான தந்தையாக வாழ்ந்து நிஜமாகவே இறந்துவிட்டார்.
சித்தார்த் : கமேராமேன் சித்தார்த்தின் கமேரா ஆஸியின் அழகையும் பின்னர் கிராமத்தின் அழகையும் அப்படியே படம் பிடித்துக்காட்டுகின்றது. கூடுதலாக நயந்தாராவை மிக அழகாகக் காட்டுகின்றது.
செல்வராகவன் : கதை, வசனம் எழுதியுள்ளார். இயல்பான வசனங்கள். தன்னுடைய படக்கதைபோல் இல்லாமல் இருப்பது அதிர்ச்சி.
நா.முத்துக்குமார் : சில பாடல்களில் வரிகள் காதல் கவிதைகளாக இருக்கின்றது. நா.முத்துக்குமார், யுவன், செல்வராகவன் கூட்டணி இனி இல்லை என நினைக்கும்போது கவலையாக இருக்கின்றது. பாரதிராஜா, இளையராஜா வைரமுத்து கூட்டணிபோல் இருந்தவர்கள் தற்போது பிரிந்துவிட்டார்கள்.
கார்த்திக் : இத்துடன் மூன்றாவது படத்தில் தனக்கு நிச்சயம் பண்ணிய பெண்ணை இன்னொருவருக்கு விட்டுக்கொடுக்கின்றார். ஆனாலும் இன்னமும் நடிப்பில் முன்னேறவேண்டும். அழுகின்ற காட்சிகள் செயற்கைத்தனமாக இருக்கின்றது.
கருணாஸ் ஒருகட்டத்தில் சிரிக்கவைக்கின்றார் பின்னர் அரசியல் மாநாட்டில் தொலைந்த கொள்கைபோல் காணாமற்போய்விடுகின்றார். சரண்யா அழகாக இருக்கின்றார் அடுத்த சினேகாவாக மாற வாய்ப்புகள் உண்டு. தன்னைவிட இன்னொரு அழகான பையன் உனக்கு வருவான் என தனுஷ் கூறும்போது அப்படியான எனக் கேட்பது அக்மார்க் டீன் ஏஜ் பெண்.
மித்ரன் ஆர்.ஜவகர் : முதல் படம். முற்பாதியில் செல்வராகவன் படம்போலும் பிற்பாதியில் அழகம்பெருமாள், விக்ரமன் படம்போலவும் இயக்கியிருக்கிறார். சில இடங்களில் இயக்குனரின் திறமை வெளிப்படுகின்றது. குறிப்பாக சரண்யா தனுஷ் காட்சிகள் கத்திமேல் நடக்கும் இடங்கள் அழகாக கையாண்டிருக்கின்றார். படம் முழுவதும் இழையோடும் மெல்லிய நகைச்சுவை இவருக்கு நன்றாக கைகொடுத்திருக்கின்றது. முதல் படத்தில் திரும்பிப்பார்க்க வைத்துள்ளார். தனுஷ்சை வைத்துக்கொண்டு பஞ்ச் டயலாக்கோ, அதிகம் சண்டையோ வைக்காததற்க்கு பூச்செண்டு கொடுக்கலாம். படத்தின் நீளம் கொஞ்சம் அதிகம். பிற்பாதியில் சில இடங்களில் துணிந்து கத்தரி வைக்கலாம்.
மொத்தத்தில் பழைய கதைதான் என்றாலும் நயன் என்ற மோகினியாலும் தனுஷ் என்ற அப்பாவித் தோற்ற இளைஞனாலும் யுவன் என்ற குட்டி இசைராஜாவினாலும் செல்வராகவன் என்ற இளைஞர்கள் மனதைப் படித்த இயக்குனரினாலும் யாரடி நீ மோகினி மனதைக் கவரும் என்பதில் ஐயமில்லை. 
டிஸ்கி :நயந்தாரா ரசிகர்களுக்காக இரண்டுபடங்கள்.
எழுதியது வந்தியத்தேவன் at 6 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் சினிமா, தனுஷ், நயந்தாரா, யாரடி நீ மோகினி, யுவன், ஜவகர்
