இன்றைய ஐசிசி மினி உலககிண்ணப்போட்டியில் நியூசிலாந்தை எதிர்த்து ஆடிய அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளால் 4.4 ஓவர்கள் மீதமிருக்க வெற்றிக்கிண்ணத்தை இரண்டாவது தடவையாக சுவீகரித்தது. மீண்டும் தாங்கள் தான் ஒருநாள் போட்டிகளில் முதல் தர அணி என்பதை அவுஸ்திரேலியா நிரூபித்தது.
பலரின் பலத்த எதிர்பார்ப்புகளையும் ஹாசியங்களையும் தவிடுபொடியாக்கி இன்று செஞ்சூரியனில் நியூசிலாந்தும் அவுஸ்திரேலியாவும் ஐசிசி மினி உலகக் கிண்ணப் போட்டியில் மோதின.
போட்டி தொடங்கமுன்னரே நியூசிலாந்துக்கு முதல் அடியாக அணித்தலைவரும் அந்த அணியில் சிறந்த ஃபோர்மில் இருந்தவருமான டானியல் வெட்டோரி காயம் காரணமாக நீக்கப்பட்டு அணித்தலைமைப் பொறுப்பு பிரண்டன் மக்கலத்திடம் கொடுக்கப்பட்டது. வொட்டோரிக்கு பதிலாக ஜீத்தன் பட்டேல் அணியில் சேர்க்கப்பட்டார்.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணித்தலைவர் மக்கலம் முதலில் தாங்கள் துடுப்பாடப்போவதாக அறிவித்தார்.
ப்ரட் லீ, பீட்டர் சீடில் ஆகியோரின் வேகத்துக்கு ஈடுகொடுக்கமுடியாமல் ஆரம்பம் முதலே நியூசிலாந்து தடுமாறியது. சீடிலின் நான்காவது ஓவரின் 2 ஆவது பந்துவீச்சில் அணித்தலைவர் மக்கலம் விக்கெட் காப்பாளர் பெயினிடம் பிடிகொடுத்து ஓட்டம் எதுவும் எடுக்காமல் "டக்" அவுட் ஆனார்.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஏரோன் ரெட்மெண்டுடன் இணைந்த மார்ட்டின் குப்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஓட்டங்களை 61 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பெற்றிருந்த வேளை ரெட்மெண்ட் ஹோரிட்ஸின் பந்துவீச்சில் பெயினிடம் பிடிகொடுத்து 26 ஆட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த குப்தில் ஹோரிட்ஸின் பந்துவீச்சில் அவரிடமே பிடிகொடுத்து 40 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரோஸ் டைலரும் மிச்சல் ஜோன்சனின் பந்துவீச்சில் ஹசியிடம் பிடிகொடுத்து 6 ஓட்டங்களுடன் ஓட்டமிழந்தார். எலியொட் பிரட் லீயின் பந்துவீச்சில் எல்பிடவுள்யூ முறையில் 9 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க நியூசிலாந்து அணி 94 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகள் என்ற இக்கெட்டான நிலையில் இருந்தது.
பின்னர் இணை சேர்ந்த நீல் புரோமும் சகலதுறை வீரர் ஜேம்ஸ் பிராங்கிளிங்கும் 40 ஓவர் வரை சிறப்பாக 6ஆவது விக்கெட்டுக்காக 65 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று ஓரளவு அணியைத் தூக்கிவிட்டனர்.
புரோம் ரன் அவுட் முறையில் 37 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அடுத்த சில பந்துகளிலையே பிராங்கிளினும் 33 ஓட்டங்களுக்கு லீயின் பந்துவீச்சில் போல்ட்டாகி ஆட்டமிழந்தார். அணியின் மொத்த எண்ணிக்கை 41.6 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 166.
அதன் பின்னர் கைல் மில்ஸ் 12 ஓட்டங்களுடன் ரன் அவுட்டாக, பட்லர் ஹோரிட்சின் பந்துவீச்சில் 6 ஓட்டங்களுக்கு எல்பிடவுள்யூ முறையில் ஆட்டமிழக்க. இறுதிஜோடியான ஜீத்தன் பட்டேலும் ஷேன் பொண்டும் இணைந்து அணியின் எண்ணிக்கையை கஸ்டப்பட்டு 200 ஓட்டங்களுக்கு உயர்த்தினர். பட்டேல் ஆட்டமிழக்காமல் 16 ஓட்டங்கள் பொண்ட் ஆட்டமிழக்காமல் 3 ஓட்டங்கள். ஆக மொத்த 50 ஓவர் முடிவில் நியூசிலாந்து பெற்ற ஓட்ட எண்ணிக்கை 200.
200 ஓட்டம் என்ற மிகவும் இலகுவான இலக்கை துரத்திய ஆஸிக்கு இரண்டாவது ஓவரிலையே முதல் பழியாக பெயின் பொண்டின் பந்துவீச்சில் டைலரிடம் பிடிகொடுத்து 1 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க அதனைத் தொடர்ந்து ஆட வந்த அணித்தலைவர் பொண்டிங்கும் அடுத்த ஓவரில் மில்ஸின் பந்தில் எல்பிடவுள்யூ மூலம் 1 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். 
பின்னர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஷேன் வட்சனுடன் இணை சேர்ந்தார் கம்ரூன் வைட். ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் ஷேன் பொண்ட், மில்ஸ் இருவரின் வேகங்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் தடுமாறினாலும் பின்னர் சிறுகச் சிறுக ஓட்டங்களைச் சேர்த்து அதன் பின்னர் பந்துவீசிய பட்லர், பிராங்கிளின், பட்டேல் ஆகியோரின் பந்துகளை அடிக்கத் தொடங்கினர்.
மூன்றாவது விக்கெட்டுக்காக வைட்டும் வட்சனும் இணைந்து 128 ஓட்டங்களை எடுத்தனர். இந்த வேளையில் மீண்டும் மில்ஸை பந்துவீச அழைத்தார் மக்கலம். அதற்குப் பலனாக மில்ஸின் பந்தில் 7 நான்கு ஓட்டங்கள் 1 ஆறு ஓட்டம் அடங்கலாக 62 ஓட்டங்களுடன் போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார் வைட்.
மைக் ஹசியும் மில்ஸின் பந்தில் பட்டேலிடம் பிடிகொடுத்து 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். போட்டி நியூசிலாந்தின் பக்கம் திரும்பினாலும் ஒரு பக்கம் வட்சன் சிறப்பாக ஆடி ஒருநாள் போட்டிகளில் 2000 ஓட்டங்களையும் கடந்தார்.
அதிரடி வட்சன
வட்சனுடன் பின்னர் இணைந்த ஜேம்ஸ் ஹோப்ஸும் தன் பங்கிற்க்கு அதிரடி காட்ட இருவரும் பிரிக்கமுடியாத இணைப்பாட்டமாக 41 பந்துகளில் 50 ஓட்டங்களை எடுத்து ஆஸியின் வெற்றிக்கு வழிகோலினர். வட்சன் அதிரடியாக இந்த தொடரின் தன்னுடைய இரண்டாவது சதத்தையும் எடுத்தார். இரண்டும் இதே செஞ்சூரியன் மைதானத்தில் எடுத்தவை. 129 பந்துகளில் 10 நான்குகள் 4 ஆறுகள் என வட்சன் ஆட்டமிழக்காமல் 105 ஓட்டங்களைப் பெற்றார். இறுதி ஓவரில் 7 ஓட்டங்கள் எடுக்கவேண்டிய நிலையில் வட்சன் 93 ஓட்டங்களில் இருந்தார். பட்டேலின் இரண்டு பந்துகளையும் ஆறு ஓட்டங்களாக மாற்றி ஆஸியின் வெற்றியை இலகுவாக்கினார் வட்சன்.
விருதுகள் :
போட்டியின் ஆட்ட நாயகன் : ஷேன் வட்சன்
தொடர்நாயகன் : ரிக்கி பொண்டிங்
முதல்முதலாக தங்க துடுப்பும் தங்கப் பந்தும் தொடரில் அதிக ஓட்டங்கள் அதிக விக்கெட்டுகள் பெற்ற வீரர்களுக்கு வழங்கப்பட்டது.
தங்கத் துடுப்பு (Golden Bat): ரிக்கி பொண்டிங். 288 ஓட்டங்கள்
தங்க பந்து (Golden Ball): பார்னல் (தென்னாபிரிக்கா) 11 விக்கெட்டுகள்
வட்சன் அதிரடி மீண்டும் ஆஸிக்கு மினி உலகக்கிண்ணம்
எழுதியது வந்தியத்தேவன் at 4 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் உலகக் கிண்ணம், ஐசிசி, கிரிக்கெட், விளையாட்டு
ஐசிசியால் புறக்கணிக்கப்பட்ட ஆசிய ஆபிரிக்கர்கள்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) 1909ஆம் ஆண்டு ஜூன் 15ந்திகதி ஆரம்பிக்கப்பட்டது. இப்போது அதன் நூற்றாண்டு விழாக் கொண்டாடப்படுகின்றது. இதில் முன்னாள் வீரர்களைக் கெளரவிக்கும் விதமாக "ஹோல் ஒவ் பாம்" அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 55 வீரர்களை ஐசிசி தெரிவுசெய்துள்ளது. இதில் வெறும் ஆறு பேரே ஆசியாவில் இருந்து தெரிவாகியுள்ளார்கள்.
இந்தியாவின் சார்பில் கபில்தேவ், கவாஸ்கர் மற்றும் பிஷன் சிங் பேடி ஆகியோரும் பாகிஸ்தானில் இருந்து இம்ரான் கான், ஜாவேட் மியாண்டாட், ஹனீப் முகமது ஆகியோரும் தெரிவுசெய்யப்படிருக்கிறார்கள். இலங்கை அணி சார்பாக யாருமே தெரிவுசெய்யப்படவில்லை. 
1995ஆம் ஆண்டிற்க்கு முன்னர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களை மட்டுமே கணக்கில் எடுத்ததாக சொல்லும் ஐசிசி இங்கிலாந்திலிருந்து அதிக பட்சமாக 22 வீரர்களையும் ஆவுஸ்திரேலியாவில் இருந்து 13 வீரர்களையும் மேற்கிந்தியத் தீவுகளிலிருந்து 11 வீரர்களையும் தெரிவு செய்துள்ளது.
தென்னாபிரிக்காவிலிருந்து ஷோன் போலக்கின் பெரிய தந்தையார் கீரீம் போலக்கும் , பெரி ரிச்சார்ட்ஸும் மாத்திரம் தெரிவாகியுள்ளனர். நியூசிலாந்திலிருந்து சேர் ரிச்சர்ட் ஹாட்லி மாத்திரம் தெரிவாகியுள்ளார்.
கீரீம் போலக்
தென்னாபிரிக்கா, இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், சிம்பாவே, நியூசிலாந்து போன்ற நாடுகளின் பல தலைசிறந்த வீரர்களைத் தெரிவு செய்யாமல் ஐசிசி பாரபட்சம் காட்டியிருக்கிறது. இங்கிலாந்து வீரர்களில் சிலர் ஒரு சில டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமே விளையாடிய வீரர்கள் ஆவார்கள்.
இலங்கையின் துலிப் மெண்டிஸ், மாலிந்த வர்ணபுர, ரோய் டயஸ் போன்ற வீரர்கள் பல சாதனை செய்தவர்கள். இந்தியாவைப் பொறுத்தவரை லாலா அமர்நாத், குண்டப்பா விஸ்வநாத்,வெங்சகார் விஜய் ஹசாரே போன்றவர்களும் தெரிவாகவில்லை.
அதேபோல் இந்தியா சுதந்திரம் பெறுவதற்க்கு முன்னர் இங்கிலாந்து அணியில் விளையாடிய ராஞ்சி கோப்பை உருவாக காரணமாக இருந்த குமார் ஸ்ரீ ராஞ்சி அவர்களின் பெயரயும் ஐசிசி பரீசிலிக்கவில்லை.
இனி ஒவ்வொரு ஆண்டும் ஒரு வீரர் இப்பட்டியலில் இடம் பெறவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பலரின் பெயர்களை பரிசீலிக்காமல் ஐசிசி எந்தப் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது என்பது புரியாத புதிராகவே உள்ளது.
எழுதியது வந்தியத்தேவன் at 9 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் ஐசிசி, கிரிக்கெட், விருதுகள், விளையாட்டு
*** வியாபாரமாகும் விளையாட்டு. ***
கனவான்களின் விளையாட்டு என அழைக்கப்படும் கிரிக்கெட்டில் ஆரம்ப காலங்களில் பெரிதாக பணம் புழங்கவில்லை. அதுவும் ஐந்துநாள் டெஸ்ட்போட்டிகளில் கோப்பைக்குத்தான் போட்டி. பின்னர் ஒரு நாள் போட்டிகளின் ஆதிக்கமும், 83 உலகக்கோப்பைக்குப் பின்னர் இந்திய அணியின் எழுச்சியும் கிரிக்கெட்டை பணக்காரர்களின் விளையாட்டாக உருவெடுக்க வைத்தது. இந்தியாவைத் தொடர்ந்து பாகிஸ்தான், இலங்கை என ஆசிய அணிகள் உலகக்கோப்பையை வென்றதன் பின்னர் உலக கிரிக்கெட் அரங்கில் வெள்ளையர்களின் விளையாட்டு ஆசியர்களின் கைகளுக்கு வந்தது. நாட்டுக்காக விளையாடிய வீரர்கள் காசுக்காக விளையாட ஆரம்பித்தார்கள். சில வருடங்களுக்கு முன்னர் இந்திய அணி வீரர்கள் விளம்பரத்தில் காட்டுகின்ற அக்கறையை விளையாட்டில் காட்டமறுத்து அடிமேல் அடிவாங்கினார்கள். மேற்கிந்தியவீரர்கள் தங்களுக்கு தகுந்த சம்பளம் இல்லை என்று போர்க்கொடிதூக்கினார்கள். லாராகூடதன் அணித்தலைவர் பதவியை இதற்காக ராஜினாமாச் செய்தார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை உலகில் பணக்கார அமைப்பாக மாறியது. இந்தியாவில் ஏனைய விளையாட்டுக்களை விட கிரிக்கெட்டுக்கு பணம் அதிகம் செலவு செய்யப்படுகின்றது(ஆதாரம் கடந்த இரண்டுவார நீயா? நானா?). இதனால் ஹாக்கியில் படுதோல்வி அடைந்து இம்முறை ஒலிம்பிக்கில் பங்கேற்கமுடியாத நிலை வந்தது.

ஐசிஎல்லுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையும் ஐபிஎல்லும் செய்யும் சதிகளைப் பலரும் அறிந்தாலும் ஏனோ குரல்கொடுக்க தயங்கவில்லை. பல நாடுகளில் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைகள் தனித்த அமைப்பாக இயங்கும்போது ஆசிய நாடுகளில் மட்டும் அரசியல்வாதிகளின் கைப்பிடிக்குள் அடங்கியிருப்பது வேதனைக்குரியது. அதேபோல் தெரிவுக்குழுவும் தங்களிற்க்கு பிடித்தவர்களைத் தான் தெரிவுசெய்கிறார்கள். சொதப்புகின்ற வீரர்களை மீண்டும் மீண்டும் எடுப்பார்கள், சிறந்த உதாரணம் அகர்கார். அதே நேரம் திறமையுள்ள வீரர்களுக்கு ஏனோ இடம் கொடுப்பதில்லை. ஐபிஎல்லில் திறமையாக விளையாடிய ஷான் மார்ஷ் இன்றைக்கு அவுஸ்திரேலிய அணியில் ஆரம்பவீரராக பரிமாணம் எடுத்துவிட்டார். இதனால் பாதிக்கப்பட்டது என்னவோ ஹைடன் தான். ஆனால் இந்தியவீரர்களில் பிரகாசித்த பத்ரினாத், கோணீ, யுசூப் பதான், போன்ற வீரகளுக்கு ஓரிருபோட்டிகளில் மட்டும் இடம்கொடுத்து அவர்களை மீண்டும் ஒதுக்குகின்றனர் தெரிவாளர்கள். ஐசிஎல் என்றால் என்ன ஐபிஎல் என்றால் என்ன இரண்டும் திறமைக்கு இடம் கொடுக்காமல் பணத்தினால் எவரையும் வாங்கிவிடமுடியும் என நினைக்கின்றார்கள். இரண்டுபோட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு அதிக ஊதியம் கொடுக்காது திறமைக்கேற்ற ஊதியம் என்றால் எத்தனை வீரர்கள் போட்டி போட்டுகொண்டு இணைவார்கள். அத்துடன் திறமையாக விளையாடினாலும் அணியில் சில நந்திகள் இருக்கும்வரை இளம் வீரர்களுக்கு இடமில்லை என்பதே யதார்த்தம் .
எழுதியது வந்தியத்தேவன் at 6 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் ஐசிஎல், ஐசிசி, ஐபிஎல், கிரிக்கெட்
