மழைக்கால நினைவுகள்

மழைக்கால நினைவுகள்
என் நினைவுகளை 15 வருடங்களுக்கு பின்னால் பின்னோக்கிப்பார்க்கிறேன் கார்த்திகை மார்கழி மாதம் என்றாலே எங்களுக்கு கொண்டாட்டம் தான் அதற்கு இரண்டு காரணம் ஒன்று பாடசாலை விடுமுறை மார்கழியில் வரும் மற்றது மாரிமழை.

எப்படியும் எங்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வுகள் நடைபெறும்போதே மழையும் ஆரம்பித்துவிடும் அதிலும் எமது பாடசாலை அலைவந்து தாலாட்டும் கடலுக்கு அருகில் இருப்பதால் மழை நாட்களில் கடல் ஒரு பெண்னைப்போல் தோற்றமளிக்கு அதுதான் அழகான ஆபத்து. நீலக்கடல் கருமையாக இருப்பதுடன் வங்காள விரிகுடாவும் பாக்கு நீரிணையும் இணையும் கடல் எமது கடல் ஆகையாலும் கொஞ்சம் பயங்கரமாகத் தான் இருக்கும் ஆனாலும் நாங்கள் அந்த நாட்களில் தான் நீந்தப்போவது.

பரீட்சை நாள் என்றால் பாடசாலை பரீட்சை முடிந்ததும் விட்டுவிடுவார்கள் சிலவேளை காலை 8 மணிக்கு பரீட்சை என்றால் எப்படியும் 10 மணி 11 மணிக்கு விட்டுவிடும் நாம் உடனே வீடு செல்வதில்லை யாரும் படிக்கும் மாணவர்கள் வீடு சென்று அடுத்த நாள் பரிட்சைக்கு தம்மை தயார்ப் படுத்துவார்கள் நாமே கடலில் சென்று குளித்து கும்மாளவிடுவது தான் எம் தலையாய கடமை அடுத்த நாளைப் பற்றி அன்றே நாம் சிந்திப்பதில்லை. 2 மணிமட்டும் கடலில் கும்மாளமிட்டுவிட்டு ஈரகாற்சட்டைகளுடன் அப்படியே வீடு செல்வது வழியில் அந்தக் காற்சட்டை உலர்ந்துவிடும்.

ஒரு முறை யாரோ ஒரு எட்டப்பன் வீட்டில் காட்டிக்கொடுத்துவிட்டான் நான் எவ்வளவு மறுத்தும் அம்மா நம்பவில்லை இறுதியாக அவர் என் கையை நக்கிப்பார்த்தார் உப்புக்கரித்தது வேர்வை உப்பல்ல கடல் உப்பு அப்புறம் என்ன செம திருவிழா தான் . நண்பர்களுக்கு இந்த விடயத்தை சொன்னதபின் தான் அவர்கள் ஒரு ஐடியா கொடுத்தார்கள் வீட்டுக்குபோகுமுன் ஏதாவது நல்ல தண்ணி உள்ள கிணற்றில் குளித்துவிட்டு செல்லும்படி அதன் பின் வரும் வழியில் உள்ள அம்மன் கோவில் கிணற்றில் நீராடிவிட்டுத்தான் வீடு செல்வது.

கடலில் தினமும் குளித்தால் உடம்பு கறுக்கும் என்று யாரோ ஒரு புண்ணியவான் சொன்னதின் பின்னர் என்னை மாதிரி சிவலைப் பொடியள் கடலில் குளிக்க செல்வது குறைவு . கடலில்ற்குப் பதில் கோயில் கேனிகள் (தெப்பக்குளம்).

யாழ்ப்பாணத்தில் மூலைக்கு மூலை கோயில்கள் இருப்பது அந்த நாளில் எமக்கு கடவுளை வணங்கப் பயன்பட்டதோ இல்லையோ சைட் அடிக்கவும் கேணிகளில் குளித்து கும்மாளமிடவும் நன்றாகப் பயன்பட்டது. மழை நாட்களில் கோயில் குளங்கள் நிரம்பி வழியும் எப்படியும் ஒரு 15 அல்லது 20 அடிகளுக்கு தண்ணிர் நிரம்பியிருக்கும். அங்கே டைவ் அடிப்பது முதல் நீரின் அடியில் சுழியோடி மண் எடுப்பது என பல வித்தைகள் செய்வோம். சில்வேளை மதிய உணவு உண்ண வீடு செல்வது கூட இல்லை பக்கத்து காணிகளில் உள்ள மாமரங்கள் தென்னமரங்கள் எல்லாம் எம் கட்டுப்பாட்டில் மாங்காய் தேங்காய் தான் எம் உணவு. சில பெரிய பொடியள் மட்டும் கொஞ்சம் கள்ளும் சிகரெட்டும் குடிப்பார்கள் (அவர்கள் வேறை கேங்). நாம் அவர்கள் சுருள் சுருளாக புகைவிடுவதை வேடிக்கை பார்ப்போம்.

எமது பாடசாலைக்கு அருகில் உள்ள அம்மன் கோவில் கேணி, இன்னொரு வீரபத்திரர் கோவில் கேணி சிலவேளை மூன்று நான்கு மைல்களுக்கு அப்பால் உள்ள வல்லிபுர ஆழ்வார் கோயில் குளமும் கேணியும் எங்கள் மழைக்கால வாசஸ்தலங்கள். மழை நாட்களில் எந்த விளையாட்டும் விளையாடமுடியாது ஆதாலம் எமக்கு தெரிந்த ஒரே பொழுதுபோக்கு இதுதான். சில தடவைகள் வீட்டில் எச்சரித்தார்கள் பின்னர் அவர்களே தண்ணி தெளித்து போனால் போகட்டும் போடா என்று விட்டுவிட்டார்கள் .

இன்றும் இந்த நினைவுகள் மனதைவிட்டு அகலாதவை. இனி எப்ப வரும் அந்த வசந்தகாலம்.