நாள் தோறும் மாறும் கமல் - பத்து

உலக நாயகன் பத்மஸ்ரீ கமலஹாசனின் படங்களில் எனக்கு மிகவும் பிடித்த பத்து கதாபாத்திரங்கள் பற்றிய அலசலே இந்த இடுகை. கடல் நீரை டம்ளரில் அடக்கும் முயற்சி இது. ஏனென்றால் கமல் நடித்த படங்களில் சகல கதாபாத்திரங்களும் எனக்கு பிடிக்கும் அதில் பத்தை தெரிவு செய்வது என்பது கடினமான செயல் ஆனாலும் நெஞ்சுக்கு மிகமிக அருகில் இருக்கும் பாத்திரங்கள் சில.

வேலுநாயக்கர் - நாயகன்

கமல் என்றால் உடனே நினைவுக்கு வரும் பாத்திரம் இதுதான். மும்பாயில் கோலோச்சிய ஒரு நல்லவரின் கதாபாத்திரம். இளையராஜா, மணிரத்னம் கூட்டணியில் கமலின் நடிப்பைப் புடம் போட்ட ஒரு படம் இது என்பது மிகையாகாது. கமலுக்கு மூன்றாம் முறை தேசியவிருதை வாங்கிகொடுத்த பாத்திரம். ஆரம்பத்தில் வரும் இளைஞர் வேலுவைவிட முதுமையான வேலுநாயக்கர் நடிப்பின் உச்சத்தை தொட்டிருப்பார். ஒரு சில விஷமிகள் கமலின் நடிப்பு காட்ஃபாதர் மார்லன் ப்ராண்டோவின் நடிப்புப்போல் என பிரச்சாரம் செய்துகொண்டுதிரிகின்றார்கள். ஐயா உங்களிடம் ஒரு கேள்வி மார்லன் ப்ராண்டோ வெத்திலையை வாயிற்குள் வைத்துக்கொண்டு நடித்தாரா? ஒரு தமிழன் சாதிக்கிறான் என பெருமை கொள்ளாமல் முட்டையில் மயிர் பிடிங்கிக்கொண்டு திரியாதீர்கள்.

"தென்பாண்டிச் சீமையிலே "என்றைக்கு கேட்டாலும் கண்ணில் கண்ணீர் வரவைக்கும் பாடல். கமலின் குரலும் ஞானியின் இசையும் என்றைக்கும் இனிமை.வேலுநாயக்கர் - நடிப்பின் சிகரம்

அப்பு - அபூர்வ சகோதரர்கள்

கிராபிக்ஸ் இல்லாத காலத்திலை உடம்பை வருத்தி குள்ளனாக கலைஞானி ஏற்று நடித்த அப்பு இன்றைக்கும் பலராலும் பாராட்டப்படும் ஒரு கதாபாத்திரம். ரூபிணியால் தன் காதல் ஏற்றுக்கொள்ளப்படாத வேளையில் அவர் காட்டும் நடிப்புகள் குறிப்பாக முக அசைவுகளை பாராட்ட வார்த்தைகளே இல்லை. பின்னர் மனம் உடைந்து தற்கொலை செய்ய முயற்சிப்பதும். ஸ்ரீவித்தியாவினால் தன் சொந்தக் கதையைக்கேட்டு கோபம் கொண்டு பழிவாங்க தொடங்குவதும் அப்புவின் இன்னொரு விஸ்வரூபம்.

இதுவரை எப்படி அந்த பாத்திரத்தை நடித்தவர் என்பதை ஏனோ கமல் இன்னமும் வெளியிடவில்லை.

இளையராஜா, எஸ்பிபி , வாலி, கமல் என வாழும் வரலாறுகளின் "உன்னை நெனைச்சேன் பாட்டுப் படிச்சேன்" என்றைக்கும் காதலர்களின் சோகப்பாடல் வரிசையில் ஒன்றாகும்.


அப்பு - இன்னொரு வாமனன்

ராகவன் - வேட்டையாடு விளையாடு

காக்கிச் சட்டை, வெற்றிவிழா, குருதிப்புனல், சூரசங்காரம் என பல படங்களில் காவல்துறை அதிகாரியாக கமல் நடித்திருந்தாலும், வேட்டையாடு விளையாடு ராகவன் காவல்துறைக்கே மிடுக்கு கொடுக்கின்ற வேடம். கமலைத் தெரியாதவர்கள் இந்தப் படத்தைப் பார்த்தால் நிச்சயமாக அவரை நிஜமான போலீஸ் என்றே நினைப்பார்கள். அதற்கேற்றாப்போல் உடலை வைத்திருப்பார். நியூயோர்க்கில் துப்பறியும் இடங்களில் அவர்காட்டும் முகபாவங்கள் எல்லாம் உண்மையான துப்பறிவாளனைப்போலவே இருக்கும். அந்த மிடுக்கும் கம்பீரமும் கமலுக்கு அப்படியே பொருந்துகிறது. திரைப்படத்தில் போலீஸ் என்றால் தங்கப்பதக்கம் எஸ்.பி.செளதிரிக்குப் பின்னர் நினைவுக்கு வருவது வேட்டையாடு விளையாடு ராகவன் என்றால் மிகையாகாது.

படத்தின் டைட்டில் கார்ட்டில் வரும் கற்க கற்க பாடலிலையே கமல் பல பரிமாணங்களில் வந்துபோவார்.


ராகவன் - ராயல் சல்யூட்

குணா - குணா

அபிராமி அபிராமி என்ற பெயரை அபிராமிப் பட்டரிற்கு பின்னர் அதிகம் அழைத்தது குணா கமல் தான். மனநோயாளியான கமலிற்க்கு தன் கனவுதேவதை அபிராமியை எந்த நேரமும் நினைத்துக்கொண்டிருப்பார். ஒருநாள் ஒரு பெண்ணைக் கோயிலில் காண்கின்றார். அவரைத் தன் அபிராமி என நினைத்துக் கடத்திச் செல்கிறார். குணா கமலின் மனநிலை குன்றிய நடிப்பை நான் விபரிப்பதிலும் பார்க்க இந்த வீடீயோவைப் பாருங்கள். அபிராமியைப் பார்க்கும் போது கமல் முகத்தில் காட்டும் பாவங்கள் அவரை ஒரு சித்தர்போல் காட்டும். இதனால் தான் அவர் கலைஞானி(ஞானி என்றால் முற்றும் அறிந்தவர்). அந்தக் கைகாட்டி அபிராமியைக் காட்டுவதும் பத்மஸ்ரீ கே.ஜே. ஜேசுதாசின் குரலில் "பார்த்தவிழி பார்த்தபடி பூத்துஇருக்க" எனப் பாடல் தொடங்கும் போது கலைஞானியின் முகபாவங்களைப் பாருங்கள். நிஜமான நடிப்பு இதுதான்.
குணா - சித்தன்


சக்தி - தேவர் மகன்

லண்டனில் இருந்து காதலியுடன் வரும் நவநாகரீக இளைஞராக முதல் பாதியில் கமல் வித்தியாசம் காட்டியிருப்பார். பின்னர் சிவாஜியின் மறைவிற்க்குப் பின்னர் இன்னொரு கெட்டப்பில் கலக்கியிருப்பார். அந்தக்கிருதா மீசை எல்லாம் கமலின் அழகுக்கு அழகூட்டின. இந்தப் படத்தில் நடித்ததோடு மட்டுமல்லாமல் கதையையும் கமலே எழுதியிருப்பார். அத்துடன் எஸ்.ஜானகியுடன் சேர்ந்து "இஞ்சி இடுப்பழகி" என்ற சூப்பர் டூப்பர் ஹிட் பாடலையும் பாடியிருப்பார். கமல் சிவாஜி என்ற இரண்டு நடிப்புச் சிகரங்களின் நடிப்பில் இந்தப் படத்திற்க்கு தேசிய விருதும் கிடைத்தது. கமல் சிவாஜி சம்பந்தப்பட்ட காட்சிகள் நடிப்பிற்க்கு வரைவிலக்கணம் வகுக்கும் காட்சிகள்.


சக்தி - வாரிசு

விருமாண்டி - விருமாண்டி

கிராமப்படம் என்றால் உலக நாயகனுக்கு அல்வா சாப்பிடுவதுமாதிரி. பதினாறு வயதினிலே சப்பாணியாகட்டும், தேவர் மகன் சக்தியாகட்டும் எல்லாம் கமலின் கிராமிய மணம் கமிழ்ந்த பாத்திரங்கள். அந்த வகையில் விருமாண்டியில் கமல் ஏற்றிருக்கும் பாத்திரமும் மண் மணம் கமிழ்ந்த பாத்திரம் தான். தண்ணீர்ப் பிரச்சனை, தூக்குத் தண்டனை பற்றிய விழிப்புணர்வு போன்றவற்றை தொட்டுச் சென்ற இந்தப் படத்தில் கமல் விருமாண்டியாகவே வாழ்ந்திருப்பார். இந்தப் படத்தை இயக்கிய பெருமையும் கலைஞானிக்கே சாரும். முதல் பாதியில் அபிராமியுடன் கமல் அடித்த குசும்புகளும் பின் பாதியில் பசுபதியுடன் மல்லுக்கட்டியது அசத்தல். பசுபதி என்ற வில்லனை நடினாக்கிய பெருமை கமலுக்கே சேரும்.

இத்திரைப்படம் கிழக்கு கொரியாவில் நடைபெற்ற உலக திரைப்பட விழாவில் 2004 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆசிய திரைப்படம் என்ற விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.


விருமாண்டி - மனிதநேயன்

நல்லசிவம் - அன்பே சிவம்

நல்லசிவம் என்ற இடதுசாரியின் கதாபாத்திரத்தில் கமல் திரைக்கதை எழுதி நடித்த படம். அழகான துடிப்பான இளைஞரான நல்லசிவம் ஒரு விபத்தில் தன் காலில் ஒரு பகுதியை இழந்தும் முகத்தில் கோரமாக தளும்புகளையும் பெற்றும் வித்தியாசமான மேக்கப்பினால் பயமுறுத்தினாலும் நேர்த்தியான நடிப்பினால் ரசிகர்களினதும் விமர்சனங்களினதும் பாராட்டைப் பெற்றிருந்தார்.

ஒரு உண்மையான இடதுசாரிக்குரிய குணங்களும் அன்புதான் உலகின் கடவுள் என்பதையும் கமல் உணர்த்தியிருந்தாலும் ஏனோ வர்த்தக ரீதியாக இந்தப் படம் பெற்றியடையவில்லை. பல உலக சினிமாக்களில் திரையிடப்பட்ட படம்.

தசாவதாரம் வின்சன்ட் பூவராகனின் பாத்திரத்தின் அண்ணனாக நல்லசிவத்தை பார்க்கமுடியும்.


நல்லசிவம் - சர்வம் கமல்மயம்


சண்முகி மாமி - அவ்வை சண்முகி

கமல் பெண் வேடமிட்ட பாத்திரம். தன் தாயாரான ராஜலக்ஸ்மி அம்மையார் போலவே கமலின் தோற்றம் இருந்தது. சண்முகி மாமியாக உடல் அசைவில் மட்டுமல்ல குரலிலும் கமல் அசத்தியிருப்பார். நகைச்சுவைப் படமாக இருந்தாலும் கமலின் இன்னொரு பரிமாணத்தை நடிப்பில் வெளிப்படுத்திய படம். தசாவதாரம் கிருஷ்ணவேணிப் பாட்டியின் சகோதரியாக சண்முகி மாமியைச் சொல்லமுடியும். மிஸஸ் டவுட்பயரைத் ஓரளவு தளுவி வெளிவந்தாலும் சண்முகி மாமியின் நடிப்பு மட்டும் தூய கலப்படமற்ற நடிப்பு.


சண்முகி மாமி - பெண் அல்ல தெய்வம்

திலீப் - சிகப்பு ரோஜாக்கள்

கதாநாயக வில்லனாக நடித்த படம். பெண்களைக் கொலை செய்யும் பாத்திரத்தில் ஸ்ரீதேவியை மட்டுமல்ல பார்ப்பவர்களையும் மிரட்டியிருப்பார். காதல் நாயகனாக வலம் வந்த கமலை வில்லனாக்கிய பெருமை பாரதிராஜாவைச் சேரும். அப்பாவிச் சப்பாணியாக பதினாறு வயதிலே நடித்த கமல் இதில் பணக்கார இளைஞனாகவும் பாலியல் பலாத்காரம் செய்து பெண்களைக் கொல்லும் கொலைகாரனாகவும் நடித்திருப்பார். மன்மதனின் அண்ணாவாக திலீப்பைச் சொல்லமுடியும்.


திலீப் - கொடூர வில்லன்.

ரங்கராஜன் நம்பி - தசாவதாரம்

தசாவதாரம் படத்தில் 15 நிமிடங்கள் மட்டும் வந்தாலும் பலராலும் பாராட்டுப் பெற்ற பாத்திரம் ரங்கராஜன் நம்பி. வைஷ்ணவரான இவரைக் அனந்த சயனத்தில் இருக்கும் பெருமாளுடன் கட்டி கடலோடு போடுவார் குலோத்துங்க சோழன். சில நிமிடங்களில் பலவிதமான நடிப்புகளை வெளிப்படுத்தியிருப்பார் கமல். கலைந்த குடும்பியை கோபத்துடன் கட்டி முடிந்துவிட்டு மணியை ஒரு அடியடிப்பார் கோபத்தை இதனைவிட ஆக்ரோசமாக யாராலும் காட்டமுடியாது. "சுங்கம் தவிர்த்த சோழனிடம் கர்வம் தவிர்க்கச் சொல்" என்று விட்டு வாளைக் காவலாளி நோக்கி எறிந்துவிட்டு "அதைச் சொன்னவன் இந்த ரங்கராஜன் நம்பி என்று சொல் " என்பார். நடிப்பில் மட்டுமல்ல வசனத்திலும் தான் ஒரு சகலகலாவல்லவன் என்பதை கமல் நிரூபித்திருப்பார்.


ரங்கராஜன் நம்பி - சரித்திரம்

13 கருத்துக் கூறியவர்கள்:

மணிஜி சொல்வது:

ஆப்பிரிக்க காடுகளில் ஒரு வித காட்டெருமையை பிடிக்க ரசாயன பொடியை தூவி விடுவார்களாம்.பொடி மேல் பட்டதும் அவை (எர்மைன் ரகம்)
அலறும் ஓலி விநோதமாக இருக்குமுமாம்.அந்த ஒலிதான் சூர்யாவின் உடலை பார்த்து வேலு நாயக்கர் எழுப்பியது என்று படித்திருக்கிறேன்

புல்லட் சொல்வது:

ம்ம்! நல்லாத்தானிருக்கு.. பயங்கர கமல் ரசிகரோ?

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

எனக்கு கமலிடம் பிடித்த படங்கள் அன்பே சிவம், குருதி புனல் கரணம் மிகையை ஒரு அங்குலம் கூட தாண்டாத நடிப்பு, அப்புறம் எப்பவுமே எனக்கு கமல்னா மூன்றாம் பிறை மற்றும் வாழ்வே மாயம் மறக்கவே முடியாது, நான் அந்த படங்களை பார்த்த வயதில் அது ஏன் பிடிக்கும் என தெரியாமல் பிடித்த படங்கள், முக்கியமா மூன்றாம் பிறை பார்த்துட்டு 2 நாள் தூங்காம இருந்தேன், ஸ்ரீ தேவி மேல அப்படி ஒரு கோவம் வந்துச்சி, கடைசி ரயில்வே ஸ்டேஷன் காட்சிகளில் இன்னும் அழ வைக்க கூடிய நடிப்பு. ஆனால் தசாவதாரம் முதல் 15 நிமிடம் மட்டுமே கமலின் நடிப்பு பிடித்தது, ஏனென்று தெரிய வில்லை, அதிகமான மேக் அப் காரணமாக இருக்கும்..

வந்தியத்தேவன் சொல்வது:

//தண்டோரா said...
ஆப்பிரிக்க காடுகளில் ஒரு வித காட்டெருமையை பிடிக்க ரசாயன பொடியை தூவி விடுவார்களாம்.பொடி மேல் பட்டதும் அவை (எர்மைன் ரகம்)
அலறும் ஓலி விநோதமாக இருக்குமுமாம்.அந்த ஒலிதான் சூர்யாவின் உடலை பார்த்து வேலு நாயக்கர் எழுப்பியது என்று படித்திருக்கிறேன்//

இருக்கலாம் கமல் எதையும் செய்யத் துணிந்தவர். எதுவும் சிறப்பாக வரவேண்டும் என விரும்புபவர் ஆனால் தெனாலியில் எங்கடை தமிழைச் சொதப்பிவிட்டார்.

வந்தியத்தேவன் சொல்வது:

//புல்லட் said...
ம்ம்! நல்லாத்தானிருக்கு.. பயங்கர கமல் ரசிகரோ?//

பயங்கர ரசிகர் இல்லை கமல் பக்தன் அதற்காக பால் அபிசேகம் செய்கின்ற ரசிகன் இல்லை. சின்னன் முதல் கமலைப் பிடிக்கும்.

வந்தியத்தேவன் சொல்வது:

//யோ (Yoga) said...
எனக்கு கமலிடம் பிடித்த படங்கள் அன்பே சிவம், குருதி புனல் கரணம் மிகையை ஒரு அங்குலம் கூட தாண்டாத நடிப்பு, //

அன்பே சிவம் நல்லசிவம் ஒரு அப்பழுக்கில்லாத மனிதர். தன் காதலியையே தம்பி மாதவனுக்காக விட்டுக்கொடுக்கும் சுயநலமற்றவர். சிலவேளை பாலசரஸ்வதியை(கிரண்) சிவம் திருமணம் செய்திருந்தால் படம் ஓடியிருக்குமோ,

குருதிப்புனல் ஆதிநாராயணனும் தைரியமான காவல்த்துறை அதிகாரி ஆனால் அவரின் பிரேக்கின் பொயிண்ட் குடும்பமாக இருந்தபடியால் தன்னையே இழந்தார். நாசரிடம் அடிவாங்கும்போது கமலின் ஒப்பனை சிறப்பாக இருக்கும்.


//அப்புறம் எப்பவுமே எனக்கு கமல்னா மூன்றாம் பிறை மற்றும் வாழ்வே மாயம் மறக்கவே முடியாது, நான் அந்த படங்களை பார்த்த வயதில் அது ஏன் பிடிக்கும் என தெரியாமல் பிடித்த படங்கள், முக்கியமா மூன்றாம் பிறை பார்த்துட்டு 2 நாள் தூங்காம இருந்தேன், ஸ்ரீ தேவி மேல அப்படி ஒரு கோவம் வந்துச்சி, கடைசி ரயில்வே ஸ்டேஷன் காட்சிகளில் இன்னும் அழ வைக்க கூடிய நடிப்பு. //

உங்களுக்கு சோகம் ரொம்ப பிடிக்குமோ, மூன்றாம் பிறை சீனுவும், வாழ்வே மாயம் ராஜாவும் சோகத்தை பிழிந்தெடுப்பார்கள்.


//ஆனால் தசாவதாரம் முதல் 15 நிமிடம் மட்டுமே கமலின் நடிப்பு பிடித்தது, ஏனென்று தெரிய வில்லை, அதிகமான மேக் அப் காரணமாக இருக்கும்..//

இருக்கலாம் ஆனால் அந்த நம்பி ஒன்றே போதும் அவர் தன்னைச் சிறந்த நடிகன் என நிரூபிக்க.

கார்த்தி சொல்வது:

சுப்பர் அலசல்....
இதிலுள்ள எல்லா பாத்திரங்களும் என்னையும் கவர்ந்தவை...
கமலின்ர படங்களிலேயே என்னால் சிரிக்காமல் இருக்கமுடியாத படம் பஞ்ச தந்திரம். அதில சிரியசான வேடம் இல்லை என்பதால் இந்த 10க்குள் வரவில்லை என்று நினைக்கிறேன் சரியா? வந்தி அண்ணை

Admin சொல்வது:

//புல்லட் said...
ம்ம்! நல்லாத்தானிருக்கு.. பயங்கர கமல் ரசிகரோ?//


நான் ஏற்கனவே இவரது இடுகைகளைப் பார்க்கும் போதே உணர்ந்து கொண்டேன் புல்லட் (ரவை)

நல்லதொரு தொகுப்பு நண்பரே.

Unknown சொல்வது:

வந்தியத்தேவன்...
காட்ஃபாதரில் கன்னங்கள் உப்பலாகத் தெரிய வேண்டும் என்று மார்லன் ப்ராண்டோ துணிப்பந்துகளை வாயில் வைத்து நடித்தாராம்... கன்னம் உப்பலாகத் தெரிய அவர் செய்த டெக்னிக்குக்கும், கமல் வெத்தலை போட்டுக் குதப்பும் யதார்த்தத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது. இந்தியாவில் இப்படியான மனிதர்கள் வெத்தலை போடுவது இயல்பு. இரண்டையும் ஒன்றென்று பலர் சொல்வது அசிங்கம். அதையும் இதையும் ஒப்பிட்க்கூடாது...

மகன் இறந்ததும் ப்ராண்டோவும் துணியை விலக்கி உடலைப் பார்ப்பார். கமலும் அதையே செய்வார். ப்ராண்டோ கண்கலங்கிவிட்டு ‘இந்த உடம்பை இவனோட அம்மா பார்க்க அனுமதிக்காதீங்க' என்று மட்டும் (ஆங்கிலத்திலதான் தல) சொல்லிவிட்டு போய்விடுவார்.. அதை விடக் கமல் எழுப்பும் அந்த ஓலம் அற்புதமானது..

அன்பே சிவம் படத்து நல்லசிவம் பற்றி எங்கோ படித்த கருத்து இது ஆனால் என்கருத்தும் இதுவே ‘படம் முடிந்து வெளியே வரும்போது கமல் நல்லா நடிச்சிருக்கிறார் என்ற எண்ணத்தை விட நல்லசிவம் ஒரு நல்ல மனிதர் என்ற எண்ணமே மேலோங்கியிருக்கிறது. அதுதான் கமலின் வெற்றி'.

அதேபோல் அன்பே சிவத்தில் மாதவன் கமலையே தூக்கிச் சாப்பிட்டிருப்பார். விருமாண்டியில் பசுபதி, நம்மவரில் கரண்,நாகேஷ். மும்பை எக்ஸ்ப்ரெஸில் கமல் தானும் வந்து போகிறார். இப்படி மற்றவர்களுக்கு பெயர் பெறும் வாய்ப்பை அள்ளிக் கொடுத்துவிட்டு அவர்களையும் தாண்டிப் புகழ் பெறுவார் கமல்... அதுதான் அவரது பலமும், பலவீனமும்.

Anonymous சொல்வது:

ALL OF US ARE FINE FRIENDS

S.Gnanasekar சொல்வது:

கமல் ரசிகர் என்று சொல்வதை விட கமலை அனுவனுவா ரசிக்கிறார் நன்பர் வந்தியத்தேவன்....

S.Gnanasekar சொல்வது:

கமல் ரசிகர் என்று சொல்வதை விட கமலை அனுவனுவா ரசிக்கிறார் நன்பர் வந்தியத்தேவன்....

Darmaraj (எ) Darma சொல்வது:

//ஐயா உங்களிடம் ஒரு கேள்வி மார்லன் ப்ராண்டோ வெத்திலையை வாயிற்குள் வைத்துக்கொண்டு நடித்தாரா? ஒரு தமிழன் சாதிக்கிறான் என பெருமை கொள்ளாமல் முட்டையில் மயிர் பிடிங்கிக்கொண்டு திரியாதீர்கள். //

வெள்ளைக்காரனுக்கு ஒரு மார்லன் ப்ராண்டோ..

நமக்கு கமல் !!