Showing posts with label யுவன். Show all posts
Showing posts with label யுவன். Show all posts

விளையாடு மங்காத்தா

எந்திரனுக்கு பிறகு எழுதும் திரைவிமர்சனம் கடைசியாக திரையில் பார்த்த படம் கோ அதன் பின்னர் நேற்று மங்காத்தா.

கதை
கிரிக்கெட் சூதாட்டத்தை மையமாக வைத்து வந்த முதல் தமிழ்ப் படம். 500 கோடி ரூபாய் பணத்தைக் கொள்ளையடிக்க முயலும் கொள்ளையர்களின் கதை.

திரைக்கதை
அர்ஜீன் , அஜித் என்ற இரண்டு நாயக‌ர்களையும் திரிஷா ,லக்ஸ்மிராய், அஞ்சலி, ஆண்ட்ரியா என்ற நான்கு நாயகிகளையும் வைத்து வெங்கட் பிரபு மங்காத்தா என்ற பெயரில் ஆடுபுலி ஆட்டம் தான் ஆடியிருக்கின்றார். இடைவேளைக்குப் பின்னர் திரைக்கதையில் திருப்பங்களுக்கு மேல் திருப்பம். இந்தியன் படத்துக்குப் பின்னர் கிளைமாக்ஸ் மிகப் பெரிய எதிர்பாராத திருப்பம். வைபவ் அஞ்சலி காதல், ஆண்ட்ரியா அர்ஜூன் பாடல் கொஞ்சம் திரைக்கதையில் சறுக்கல்.

வசனம்
பிரேம்ஜியின் ட்விட்டர் கீச்சுகள் போல வசனங்கள். பல இடங்களில் ரசிக்கவைக்கின்றன. பிற்பகுதியில் ஆங்கிலப் படங்களில் வரும் வசனம் என்பதாலோ சென்சார் கையை நிறையவே வைத்துவிட்டது.

இயக்கம்
சென்னை 28, சரோஜா என இரண்டு சதமடித்த வெங்கட் பிரபு கோவாவில் சறுக்கினாலும் மீண்டும் மங்காத்தாவில் இரட்டைச் சதமடித்திருக்கின்றார். அதுவும் தலையை வைத்து இரட்டைச் சதமடித்தமை சாதனை தான். ஆனால் பிரேம்ஜி, பைவப், அரவிந்த் என தன் பழைய டீமையே வைத்து விளையாடுவதுதான் கொஞ்சம் நெருடுகின்றது, இந்திய அணிக்கே ரெய்கேனா, பர்தீப் பட்டேல் போன்றவர்கள் களம் இறங்கும் போது வெங்கட் பிரபுவும் வேறை டீமை வைச்சு அடுத்த இனிங்கசைத் தொடரலாம். விறுவிறுப்பான ஒரு சிறந்த பொழுதுபோக்குப் படத்தைக் கொடுத்தமைக்கு வெங்கட் பிரபுவுக்கு ஒரு சலூட்.

லக்ஸ்மி ராய்
என்னடா தலை ஆக்சன் கிங் என நாயகர்கள் இருக்கும் போது கதாநாயகிகளில் ஒருவரைப் பற்றி எழுதுகின்றேன் என யோசிக்கின்றீர்களா? எல்லாம் அவரின் திறமைதான். ஏற்கனவே சில படங்களில் வந்துபோனாலும் இந்தப் படத்தில் மொத்தமாக அனைவரையும் கவருகின்றார். அதுவும் பல்லேலக்கா பாடலுக்கு அம்மணி லண்டன் சமர் போல ரொம்ப கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கின்றார். ஆனாலும் சென்சாரின் புண்ணியத்தில் அம்மணியை ரொம்பப் பார்க்கமுடியவில்லை என்பது பல ரசிகர்களின் கவலை. முதல் காட்சியில் தலை வீட்டில் செய்யும் லூட்டியை இன்னும் கொஞ்சம் நீட்டியிருக்கலாம். ஓவர் ஜொள்ளு உடம்புக்கு ஆகாதாம், எனிவே டோணிக்கு நன்றிகள்.


அஜித்
வாலி படத்திற்க்கு பின்னர் தலையை ரசித்துப் பார்த்தது மங்காத்தாவில் தான். நீண்ட நாட்களின் பின்னர் அலட்டலில்லாமல் அட்டகாச நடிப்பு. அதுவும் பிரேம்ஜியுடன் குடித்துவிட்டுச் செய்யும் அலும்புகளும், செஸ் போர்ட்டுக்கு முன்னால் இருந்து தன் சகாக்களை கொலை செய்ய பிளான் பண்ணும் காட்சியும் அல்டிமேட் ரகம். லக்ஸ்மிராயுடன் பொருந்திப்போகும் காதல் கெமிஸ்ரி ஏனோ திரிஷாவுடன் அவ்வளவாக ஒட்டவில்லை. 50 வயது தாண்டியவர்களே சின்னப் பெண்களுடன் டூயட் பாடும் போது தலை மட்டும் தலை முடியை வெள்ளையாக்கி தன் வயதை எல்லாம் சொல்லுவது நிஜத்தில் நல்லா இருந்தாலும் படத்தில் அவரின் கெட்டப் கொஞ்சம் நெருடல் தான்.

அர்ஜீன்
அர்ஜீனின் 1001ஆவது போலீஸ் வேடம், கொஞ்சம் வயதான போல் தெரிந்தாலும் சண்டைக் காட்சிகளில் அதே வேகமும் ஆக்ரோசமும் இருக்கின்றது. ஒரு பிட்டில் ஆண்ட்ரியாவுடன் டூயட்டும் பாடுகின்றார்.

த்ரிஷா
தமன்னாவுக்கு கிடைக்கவேண்டிய லூஸுப் பொண்ணு கேரக்டர் த்ரிஷாவுக்கு, பெரிதாக நடிக்க சான்ஸ் கிடைக்கவில்லை, கிடைத்த வாய்ப்புகளிலும் லக்ஸ்மி ராய் சிக்சர் அடித்தபடியால் அம்மணி வாட்டர் பாய் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார். த்ரிஷாவுக்கே இந்த நிலை என்றால் அஞ்சலி ஆண்ட்ரியா எல்லாம் காயமடைகின்ற இந்திய வீரர்களுக்கு ரிப்பிளேஸ்மெண்டில் வரும் ஏனைய வீரர்கள் போல் வந்துபோகின்றார்கள். அஞ்சலி பைவப்வுடன் ஒரு டூயட்டை அரைகுறையாக(ஆடை இல்லை பாடல்) ஆடி வைக்கின்றார்.

பிரேம்ஜீ

சில இடங்களில் சபாஷ் போட வைத்தாலும் பல இடங்களில் அதே பழைய இம்சை. லக்ஸ்மிராயை முதன்முறை பார்க்கும் காட்சியில் பின்னணீ இசையும் பிரேம்ஜீயின் நடிப்பும் கலக்கல். (இசைஞானியின் பழைய பாடல் ஒன்று பாடலின் பெயர் ஞாபகம் வரவில்லை).

இசை
இசை வழக்கம்போல் தம்பியுடையான் இசைக்கஞ்சான் போல் வெங்கட் பிரபுவுக்கு ஸ்பெசலகா யுவனின் பாடல்கள் சூப்பர் டூப்பர் விளையாடு மங்காத்தா பாடலும் தீம் மியூசிக்கும் ஏற்கனவே பட்டி தொட்டிகளில் ஒலிக்கத் தொடங்கிவிட்டது. ஏனைய பாடல்களும் கேட்க இதமாக இருந்தாலும் படத்தில் இடைச் செருகல் போலத்தான் இருந்தது. பின்னணி இசைக்கு கார்த்திக் ராஜா, பவதாரணி, பிரேம்ஜி மூவரும் யுவனுக்கு உதவி செய்திருக்கின்றார்கள்.

நீண்ட நாட்களின் பின்னர் தலைக்கு மட்டுமல்ல தலை ரசிகர்களுக்கு மட்டுமல்ல நல்ல பொழுதுபோக்கு படங்களின் ரசிகர்களுக்கும் மங்காத்தா மகிழ்ச்சியைத் தந்திருக்கின்றது.

பின்குறிப்பு 1: லண்டனில் சன் பிக்சர்ஸ் லோகோ எதுவும் வரவில்லை என்பது மிக மகிழ்ச்சியான விடயம். சன் செய்திகளில் லோகோவைக் கண்டதும் ரசிகர்கள் ஆராவராம் செய்கின்றார்கள் என மாசிலாமணி காலத்தில் இருந்து காட்டும் அதே டெக்னிக்கை மங்காத்தாவுக்கும் காட்டினார்கள் (திகார் ஜெயிலில் இன்னும் இடம் இருக்கின்றதாம்). அத்துடன் முதன்மை நிர்வாகி என ஷக்சேனாவின் பெயரும் மிஸ்சிங் (ஆள் எஸ்கேப்போ தெரியாது ).

பின்குறிப்பு 2: அஜித்தின் ஆரம்பக்காட்சிக்கு மட்டும் விசில் முழுங்கியது பின்னர் ரசிகர்கள் படத்துடன் ஒன்றிவிட்டார்கள்.

யாரடி நீ (நயன்தாரா) மோகினி

ஏற்க‌ன‌வே ப‌ல‌ ப‌ட‌ங்க‌ளில் பார்த்த‌ க‌தைதான். த‌ற்கால‌ மென்பொருள் இளைஞ‌ன் ஒருவ‌னுக்கு அவ‌ன‌து மேல‌திகாரிமேல் ஏற்ப‌டும் காத‌ல். அந்த‌ மேல‌திகாரி யார் என‌த் தெரிய‌வ‌ரும்போது இடைவேளை. பின்ன‌ர் கல‌க‌ல‌ப்பான‌ கூட்டுக்குடும்ப‌ம், இன்னொரு இன‌க்க‌வ‌ர்ச்சிக் காத‌ல். இறுதியில் ஒருப‌க்க‌க் க‌தைபோன்ற‌ கிளைமாக்ஸ் முடிவு.



முற்பாதியில் மென்பொருள்கார‌ர்க‌ள் ஆணிபிடுங்கும் கலகலப்பான காட்சிக‌ள். அதுவும் ஒரு இர‌வில் ஒரு தீர்வைத் த‌னுஷ் எழுதுகின்றார் என்ப‌து எல்லாம் சினிமாவில் ம‌ட்டுமே ந‌ட‌க்கும். அப்ப‌டியே அவுஸ்திரேலியாவுக்கு வேலைவிடய‌மாக‌ விசிட். அங்கே ஒரு டூய‌ட். நைட் கிள‌ப்பில் ந‌ய‌ன் குடித்துவிட்டு அடிக்கும் லூட்டிக‌ள் அங்க‌ங்கே ப‌ஞ்சதந்திர‌ம் தேவ‌யாணியை நினைவூட்டினாலும் ந‌ய‌னின் சினுங்க‌லும் த‌னுஷின் மிர‌ட்ட‌லும் புதிது. இய‌க்குன‌ர் செல்வ‌ராக‌வ‌னின் சீட‌ன் என்ப‌து இந்த‌க்காட்சிக‌ளில் தெரிகின்ற‌து.

பிற்பாதியில் கிராமம் அதிலும் ஐய‌ர் ஆத்தில் ந‌ட‌க்கும் காட்சிக‌ள். இன்ன‌மும் ஆத்தில் ஏனையவ‌ர்க‌ளை அனும‌திக்காத‌ த‌ன்மை. தனுஷ்க்காக‌வே ஒரு ச‌ண்டை. (ஒரே ஒரு ச‌ண்டைம‌ட்டும்தான்). த‌னுஷ்சின்மேல் காத‌ல் கொள்ளும் 15வ‌ய‌து ம‌ச்சினி. த‌னுஷ்சின் காத‌லைப் புரிந்துகொள்ளும் ந‌ய‌ன். அது என்ன‌வோ சினிமாவில் ம‌ட்டும்தான் இன்னொருவ‌னுக்கு நிச்ச‌ய‌ம் செய்த‌ பெண் இன்னொருவ‌ரைக் காத‌லிப்பார். நிய‌த்தில் இப்ப‌டியான‌ க‌தை இதுவ‌ரை கேள்விப்ப‌ட‌வில்லை. வ‌ழ‌க்கமான‌ முடிவு.

தனுஷ் : பல இடங்களில் நடித்திருக்கின்றார். ஆனாலும் சில இடங்களில் மாமனாரைக் கொப்பி அடிப்பது ரசிக்கமுடியவில்லை. சிலவற்றை ஒரிஜினல்கள் செய்தால்தான் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்ற சின்ன விடயம் ஏனோ இன்னமும் தனுஷ் சிம்பு வகையறாக்களுக்கு புரியவில்லை.

நயந்தாரா : இந்தப் படத்தில் தான் நயனை இவ்வளவு அழகாக காட்டியிருக்கிறார்கள். வாழ்க கமேரா சித்தார்த். பல இடங்களில் நடித்து தன் இருப்பைக் காட்டியிருக்கிறார். சில நடிகைகளினதும் ஒரு நடிகனினதும் வயிறுகள் நிச்சயம் எரியும்.

யுவன் சங்கர் ராஜா : பாடல்கள் கேட்கும் ரகம். அதிலும் அந்த ரகசியாப்பாடல் தாளம்போடவைக்கின்றது. ரீமிக்ஸ் ஏனோ ரசிக்கவில்லை. (யுவனின் என் ஆசை மைதிலியும், ஆசை நூறுவகை போல் எனைய ரீமிக்ஸ்கள் ரசிக்கமுடியவில்லை.) இதனைவிட விஜய் டிவி ஈகியூவில் கல்லூரி மாணவர்கள் நன்றாக ரீமிக்ஸ் செய்கிறார்கள். ஏனையவை மெலடி டைப். சில பாடல்களை சன் மியூசிக் இசையரவிகளில் இனி அடிக்கடி கேட்கலாம்.

பின்னனி இசை டி.இமான் பல இடங்களில் அழகாகவும் சில இடங்களில் வெண்கலக்கடைக்குள் இமான் புகுந்ததுபோலும் இருக்கின்றது. (தியேட்டர் டிடிஎஸ்சின் தவ்றோ தெரியவில்லை).

ரகுவரன் : படம் ஆரம்பிக்கும்போதே டைட்டிலில் அஞ்சலி செலுத்துகிறார்கள் . நல்லதொரு நடிகனை திரையுலகம் இழந்துவிட்டது என மீண்டும் புரியவைத்தார். லவ் டுடே விஜயின் தந்தையைவிட மிகவும் அன்னியோன்னியமான தந்தையாக வாழ்ந்து நிஜமாகவே இறந்துவிட்டார்.

சித்தார்த் : கமேராமேன் சித்தார்த்தின் கமேரா ஆஸியின் அழகையும் பின்னர் கிராமத்தின் அழகையும் அப்படியே படம் பிடித்துக்காட்டுகின்றது. கூடுதலாக நயந்தாராவை மிக அழகாகக் காட்டுகின்றது.

செல்வராகவன் : கதை, வசனம் எழுதியுள்ளார். இயல்பான வசனங்கள். தன்னுடைய படக்கதைபோல் இல்லாமல் இருப்பது அதிர்ச்சி.

நா.முத்துக்குமார் : சில பாடல்களில் வரிகள் காதல் கவிதைகளாக இருக்கின்றது. நா.முத்துக்குமார், யுவன், செல்வராகவன் கூட்டணி இனி இல்லை என நினைக்கும்போது கவலையாக இருக்கின்றது. பாரதிராஜா, இளையராஜா வைரமுத்து கூட்டணிபோல் இருந்தவர்கள் தற்போது பிரிந்துவிட்டார்கள்.

கார்த்திக் : இத்துடன் மூன்றாவது படத்தில் தனக்கு நிச்சயம் பண்ணிய பெண்ணை இன்னொருவருக்கு விட்டுக்கொடுக்கின்றார். ஆனாலும் இன்னமும் நடிப்பில் முன்னேறவேண்டும். அழுகின்ற காட்சிகள் செயற்கைத்தனமாக இருக்கின்றது.

கருணாஸ் ஒருகட்டத்தில் சிரிக்கவைக்கின்றார் பின்னர் அரசியல் மாநாட்டில் தொலைந்த கொள்கைபோல் காணாமற்போய்விடுகின்றார். சரண்யா அழகாக இருக்கின்றார் அடுத்த சினேகாவாக மாற வாய்ப்புகள் உண்டு. தன்னைவிட இன்னொரு அழகான பையன் உனக்கு வருவான் என தனுஷ் கூறும்போது அப்படியான எனக் கேட்பது அக்மார்க் டீன் ஏஜ் பெண்.

மித்ரன் ஆர்.ஜவகர் : முதல் படம். முற்பாதியில் செல்வராகவன் படம்போலும் பிற்பாதியில் அழகம்பெருமாள், விக்ரமன் படம்போலவும் இயக்கியிருக்கிறார். சில இடங்களில் இயக்குனரின் திறமை வெளிப்படுகின்றது. குறிப்பாக சரண்யா தனுஷ் காட்சிகள் கத்திமேல் நடக்கும் இடங்கள் அழகாக கையாண்டிருக்கின்றார். படம் முழுவதும் இழையோடும் மெல்லிய நகைச்சுவை இவருக்கு நன்றாக கைகொடுத்திருக்கின்றது. முதல் படத்தில் திரும்பிப்பார்க்க வைத்துள்ளார். தனுஷ்சை வைத்துக்கொண்டு பஞ்ச் டயலாக்கோ, அதிகம் சண்டையோ வைக்காததற்க்கு பூச்செண்டு கொடுக்கலாம். படத்தின் நீளம் கொஞ்சம் அதிகம். பிற்பாதியில் சில இடங்களில் துணிந்து கத்தரி வைக்கலாம்.

மொத்தத்தில் பழைய கதைதான் என்றாலும் நயன் என்ற மோகினியாலும் தனுஷ் என்ற அப்பாவித் தோற்ற இளைஞனாலும் யுவன் என்ற குட்டி இசைராஜாவினாலும் செல்வராகவன் என்ற இளைஞர்கள் மனதைப் படித்த இயக்குனரினாலும் யாரடி நீ மோகினி மனதைக் கவரும் என்பதில் ஐயமில்லை.



டிஸ்கி :நயந்தாரா ரசிகர்களுக்காக இரண்டுபடங்கள்.