தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக ஒரு வித்தியாசமான நடன நிகழ்ச்சி நாயாட நரியாட. இந்த நிகழ்ச்சி ஒரு தொலைக் காட்சியில் விரைவில் ஆரம்பமாக இருக்கின்றது. இந்த நிகழ்ச்சியில் நடுவராக ( நடனம் ஆடுபவர் அல்ல நடுநிலையான நடுவர்) கலந்துகொள்ள புதியவர்கள் அந்த தொலைகாட்சிக்கே தேவைப்படுகின்றது. அந்த நிகழ்சிக்கு விண்ணப்பிக்கும் நடுவர்களுக்கு இருக்கும் தகைமைகள் எவை என அவர்கள் வெளியிட்ட இணைய விளம்பரம் தான் இது. உங்களுக்குத் அந்த தகைமை இருப்பின் அவர்களைத் தொடர்புகொள்ளுங்கள்.
நாயாட நரியா நடுவர்கள் தேவை விளம்பரம்
தேவையான தகைமைகள்:
1. நடனம் பற்றிய எந்த அறிவும் தேவையில்லை.
2.ஆண்களாயின் தலைமுடி நன்கு வளர்ந்திருந்தால் தேர்வு செய்யப்படும் சாத்தியம் அதிகம். பெண்களாயின் கட்டையாகவெட்டிய முடி அந்த முடிக்கு கலர் அடித்திருந்தால் கூடுதல் தகைமை.
3. இடையிடையே நடிக்கத் தெரிந்திருக்கவேண்டும், அழுதால் ரசிகர்களிடம் பெயர் கிடைக்கும்.
4. நடனமாடும் ஆண்களை விட பெண்களிற்க்கு அதிகம் மார்க் போடுதல் வேண்டும் அட்டு பிகர் என்றாலும் அவரை ஜோதிகா, சிம்ரன் ரேஞ்சுக்கு புகழவேண்டும்.
5. இடையிடையே மேடையில் சென்று சூப்பராக ஆடினீர்கள் என ஆண்களைக் கட்டிப்பிடித்து வாழ்த்தவேண்டும், பெண்களையும் கட்டிப்பிடிக்கலாம் ஆனால் பின் விளைவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது.
தெரிந்திருக்கவேண்டிய சொற்கள் :
கீழ் வரும் சொற்களில் சிலவற்றை மட்டும் பாவித்து நீங்கள் ஜல்லி அடிக்கலாம். இந்த சொற்களில் 3 க்கு மேற்பட்ட சொற்கள் உங்களுக்குத் தெரிந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.
1. கெமிஸ்ரி : ஒரு நடன நிகழ்ச்சியில் முக்கியமான சொல் இதுவாகும். நடனமாடிய பெண்ணுக்கும் ஆணுக்கும் இந்தக் கெமிஸ்ரி இல்லையென்றால் நடனம் அம்பேல். எனக்குத் தெரிந்த கெமிஸ்ரியில் பென்சீன் ரிங், ஓர்கானிக் கெமிஸ்ரி, போன்றவை மட்டும்தான் தெரியும். இந்த நிக்ழ்ச்சிகள் பார்த்தபின்னர் தான் நடனம் ஆடவும் கெமிஸ்ரி தெரிந்திருக்கவேண்டும் என புரிந்தது.
2. சூப்பர் : இந்த வார்த்தையை பல விதமான ஸ்டைல்களில் சொல்லத் தெரிந்திருக்கவேண்டும்
3. ஃபன்டாஸ்டிக் : ஒருவர் சொதப்பலாக ஆடினாலும், சூப்பராக ஆடினாலும் இந்த வார்த்தையைச் சொல்லவேண்டும், நீங்கள் சொதப்பலாக ஆடியவருக்கு ஏன் ஃபன்டாஸ்டிக்கு என்று சொன்னீர்கள் என்று பார்ப்பவர்கள் முடியைப் பிய்க்கவேண்டும்.
4. எனர்ஜி : கெமிஸ்ரிக்கு அடுத்த இடத்தை இந்த சொல் பிடிக்கவேண்டும். ஆடுபவர் சோம்பலாக ஆடினாலும் உங்கள் எனர்ஜி, எனர்ஜி லெவல் ஆச்சரியமளிக்கிறது என ஆடியவரையே ஆச்சரியப்பட வைக்கவேண்டும்.
5. எக்ஸ்பிரசன்ஸ் : முகத்தில் எந்தவித முகபாவனை செய்யாதவரைப் பார்த்து உங்கள் எக்ஸ்பிரசன்ஸ் அட்டகாசம் என நீங்கள் முகத்தில் எந்தவிதமான உணர்ச்சியும் இல்லாமல் சொல்லவேண்டும்.
6. பாடி லாங்குவேஜ் : இதனையும் இடைக்கிடை சொல்லவேண்டும். இல்லையென்றால் உங்களுக்கு ரசனை இல்லையென்று மற்றவர்கள் நினைத்துவிடுவார்கள்.
7. ஹெவி : நீங்கள் கொஞ்சம் ஹெவியாக ஆடியிருக்கலாம், அல்லது ஹெவியாக ஆடிவிட்டீர்கள் என நடனமாடியவர்களை வெறுப்பேத்தவேண்டும். அப்படி ஹெவியாக ஆடாமல் விட்டவர்கள் அடுத்த முறை ஒரு 10 அல்லது 20 கிலோ எடைகொண்ட எடைக்கற்களை கையில் வைத்துக்கொண்டு ஆடினால் ஹெவிப் பிரச்சனை தீர்ந்துவிடும்.
8. சான்ஸே இல்லை : இது பொசிட்டிவான வார்த்தையா? இல்லை நெகட்டிவான வார்த்தையா என புரியாமல் இருக்கும். நன்றாக ஒருவர் ஆடினால் சான்ஸே இல்லை நீங்கள் வழக்கம் போல கலக்கிட்டீர்கள் எனவும், கொஞ்சம் சொதப்பலாக மாறினால் உங்களுக்கு அடுத்த சுற்றுக்கு செல்ல சான்சே இல்லை என கொஞ்சம் குரலில் மென்மையை அல்லது அழுகையைக் கூட்டிச் சொல்லவேண்டும்.
9. ஆங்கிலம் : முக்கியமாக நீங்கள் பச்சைத் தமிழன் அல்லது தமிழச்சியாக இருந்தாலும் ஆங்கிலத்தில் பிரபலமான சில வார்த்தைகள் தெரிந்திருக்கவேண்டும் அவை ஜோஷ், ஜிவ், கலக்கல்ஸ்( கலக்கல் தமிழ், ஒரு ஸ் கூடச் சேர்த்து அதனை ஆங்கிலமாக்கிவிடவும்), ஆங்கிலம் தெரியாதவர்கள் கூட இந்த வார்த்தைகளை வைத்து வீடே கட்டலாம். Jive, Performance, Cool, Understanding, Awesome, Mind blowing, etc.
இது ஒரு மீள்பதிவின் திருத்திய வடிவம். அதாவது வேர்ஷன் 1.1
நாயாட நரியாட V 1.1
எழுதியது வந்தியத்தேவன் at 48 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் தொலைக்காட்சி, நகைச்சுவை, மானாட மயிலாட
சித்திரைப் புத்தாண்டு - இன்னொரு சாதாரண நாள்
நேற்று சித்திரைப்புத்தாண்டு 13ந்திகதி வாக்கிய பஞ்சாங்கப்படி 11மணி 7 நிமிடத்திற்க்குப் பிறந்தது அந்த நேரம் முதலே எஸ் எம் எஸ்சில் வாழ்த்துக்கள் வந்தவண்ணம் இருந்தன பெரும்பாலான வாழ்த்துக்களில் துன்பங்களை அனுபவிக்கும் மக்களுக்காக பிரார்த்திக்கவும் என்ற வாசகவே அதிகமாக காணப்பட்டது. புலம் பெயர் தேசங்களில் இருந்து வந்த குறும்செய்திகள் ஒரு இணையத்தளத்தில் ஓட்டளிக்குமாறு கேட்டுக்கொண்டது.
திருக்கணித பஞ்சாங்கத்தை கடைப்பிடிக்கும் அன்பர்கள் நள்ளிரவு 12 மணி 47 நிமிடத்தில் இருந்து தங்கள் செய்திகளை(வாழ்த்துக்கள் என்பதை விட செய்தி என்பதே பொருத்தமான சொல் காரணம் வாழ்த்தைவிட ஒரு இனத்தின் அவலத்தைத் தான் பெரும்பாலான செய்திகள் தாங்கிவந்தன) அனுப்பினார்கள். ஒரு சில முன் ஜாக்கிரதை முத்தண்ணாக்கள் செய்திகள் அனுப்பியபின்னர் போன் பண்ணி தாங்கள் அனுப்பிய செய்தி கிடைத்ததா என விசாரித்தார்கள்.
காலையில் தொலைக்காட்சியை திறந்தால் சன்னில் மஹதி பாடிக்கொண்டிருந்தார், கலைஞரில் காங்கிரஸ் கட்சியின் கொள்கை பரப்பும் திருமாவளவனின் பேட்டி ஒளிபரப்பாகியது. இன்னொரு சானலில் யாரோ ஒருவர் பாடினார், இசையருவியில் ராஜாவின் ராஜகீதங்களை ஒருவர் சாக்ஸ்சபோனில் உருகிஉருகி வாசித்தார். காலையில் பாடியவர்கள் அனைவரும் தெலுங்கில் பாடாமல் தமிழில் பாடினார்கள் என்பது சிறப்பாக இருந்தது.
கோவிலுக்கு கட்டாயம் போகவேண்டும் என்ற அம்மாவின் கட்டளையைத் தட்டாமல் கப்பித்தாவத்தை கயிலைநாதரைத் தரிசிக்க சென்றேன். பெரிதாக கூட்டம் இல்லை. வீதிகளில் கூட முன்னைய கலகலப்பு இல்லை. மக்கள் மனதில் ஏதோ ஒரு இனம்புரியாத கவலை.
சன்னில் இடம்பெற்ற ரகுமானின் பேட்டி, விஜய் டீவியில் அனுவுடன் காபி குடித்த தயாநிதி மாறனின் பேட்டி என்பன இதனால் தவறிவிட்டது. விஜய் டிவி நிகழ்ச்சிகள் அடிக்கடி மறுஒளிபரப்புவார்கள் அதனால் மீண்டும் பார்க்க சந்தப்பம் கிடைக்கும்.
விஜய் டிவியில் மாத்தியோசி என்ற நிகழ்ச்சியில் சூப்பர் சிங்கர்களும் அடுத்த பிரபுதேவாக்களும் ஆடிப்பாடினார்கள், அதிலும் ரவி வெட்கப்படாமல் ஜெயலக்ஸ்மியுடன் ஆடினார். சாய்பல்லவி அழகாகப்பாடினார். எல்லாவற்றிற்கும் மகுடம் சூட்டியதுபோல் பிரேம்கோபால் ஆடியபாடலும் பின்னர் அந்தப்பாடலுக்கு அவர்கொடுத்த விளக்கமும் அருமையாக இருந்தது. அனைவரும் எழுந்து பிரேம்கோபாலுக்கு மரியாதை செய்தார்கள்.
அடுத்து நீயா, நானா புகழ் கோபிநாத்தின் நெறியாள்கையில் பேராசிரியர் பெரியார் தாசனின் தலைமையில் சின்னத்திரைத் தொகுப்பாளர்கள் நடிக நடிகைகள் பங்குபற்றிய ஆய்த எழுத்து என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகியது. சிறிது நேரமே பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது.
பின்னர் நடிகர் சிவகுமாரின் கம்பன் என் காதலன் என்ற நீண்ட( இரண்டரை மணி நேரம்) இராமாயணச் சொற்பொழிவு நிகழ்ந்தது. மனிதர் என்ன அருமையாக பாடல்களைச் சொல்லி விளங்கப்படுத்தினார். கிட்டத்தட்ட 3000 பேர்கள் அந்த மண்டபத்தில் அமர்ந்திருந்தார்கள் பெரும்பான்மையானவர்கள் கல்லூரி மாணாவிகள், சில பிரபல கம்பன கழகத் தலைகளும் முன்னால் இருந்தார்கள் குப்புசாமி முதலியார், வழக்கறிஞர் முருகேசன் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
100 பாடல்களை மட்டும் எடுத்துக்கொண்டு இராமாயணத்தை மிகவும் சுவையாக நின்ற நிலையில் சொற்பொழிவாற்றினார். இராவணனைப் பற்றி விளக்கியபோது மாணவிகளிடம் பழத்த கரகோஷம். சீதையைக் கடத்தியதைத் தவிர வேறு எந்தக் கெட்டபழக்கமும் அவரிடம் இல்லை. சூர்ப்பனகை பற்றிய பாடல் விளக்கத்திற்க்கும் கரகோஷம் அதிகம்.
பாமரர்களுக்கும் புரியும் படி இவர் உரையாற்றியதுதான் சிறப்பாக இருந்தது. சிலவேளைகளில் கம்பன் விழா மேடைகளில் இவரைக் இனிக் காணமுடியும்.
இரவு சன்னில் அயன் சிறப்புக் கண்ணோட்டம் நடந்தது. தமன்னா கொஞ்சும் தமிழில் பேசினார். சூரியா, கே.வி.ஆனந்தை விட நண்டு ஜெகனே அதிகம் பேசினார். சன் பிக்சர்ஸ் பற்றி அதிகம் அலட்டிக்காமல் அனைவரும் ஏவிஎம்முக்கே நன்றி கூறினார்கள்.
யுவனின் குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் மற்றும் வாமனன் படங்களின் இசைபற்றியும் சில தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பினார்கள். குங்கப்பூவும் பாடல்கள் கேட்கும் ரகம் வாமனனில் சில பாடல்கள் கேட்கும் ரகம். ஒரு விடயம் தெளிவாக புரிகின்றது யுவன் இளவரசனிலிருந்து ராஜாவாக முன்னேறிக்கொண்டிருக்கின்றார்.
நேத்ரா தொலைக்காட்சியில் உலகத் தமிழ்த் திரையுலகில் முதன்முறையாக சிலம்பாட்டம் ஒளிபரப்பினார்கள். (இவர்களுக்கு மட்டும் எப்படி இந்தப் படம் இவ்வளவு சீக்கிரம் ஒளிபரப்பக் கிடைத்தது என்பது கேள்விக்குறி). சொந்தச் செலவில் சூணியம் வைக்கவில்லை.
மொத்ததில் நேற்றைய நாள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுடன் சென்ற மற்றுமொரு சாதாரண நாளே.
எழுதியது வந்தியத்தேவன் at 2 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் அனுபவம், சிவகுமார், தொலைக்காட்சி, புது வருடம்
*** உங்கள் வாழ்க்கை எங்கள் செய்தி. ***
அரசாங்கத்தின் நான்காவது தூணான ஊடகங்களைப் பற்றிய என்னுடைய ஆதங்கங்களும் கருத்துக்களுமே இந்த பதிவில். ஒரு ஊடகம் என்பது மக்களுக்கு முக்கியமான செய்திகளூடன் உண்மைச் செய்திகளையும் கொண்டு செல்லவேண்டும் ஆனால் இன்றோ பல ஊடகங்கள் பொய்யையும் மற்றவர்களின் அந்தரங்களையுமோ செய்தியாக்கி வருமானம் பார்க்கிறார்கள்.
இன்றையகாலத்தில் ஊடகங்களை எழுத்துஊடகங்கள் இலத்திரனியல் ஊடகங்கள் என இரண்டு பிரிவாக பிரிக்கலாம். இணையம் இலத்திரனியல் ஊடகங்களில் வருவது சாலப்பொருத்தமாகும்.
பெரும்பாலான பத்திரிகைகள் வார இதழ்கள் செய்திகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட இன்னொருவரின் தனிப்பட்ட விடயங்களை பெரிதாக்கு அதில் குளிர்காய்கிறார்கள். சில பத்திரிகைகள் சொல்வதை வேதவாக்க எடுப்பவர்களும் இருக்கிறார்கள். இவர்களின் அரசியல்ரீதியான பாகுபாடுகளை விட்டுவிட்டு ஏனைய விடயங்களுக்கு வருவோம். இவர்கள் சினிமா நடிகர்களை வைத்துத்த்தான் சம்பாதிக்கிறார்கள். ரஜனியை அட்டைப்படத்தில் போட்டால் இவர்களின் விற்பனை அதிகரிக்கும் என்பதால் அவரை வைத்து வியாபாரம் செய்வார்கள். பின்னர் அதே ரஜனியை கிழிகிழி எனக் கிழிப்பார்கள் கேட்டால் பத்திரிகை தர்மமாம். ஐயா நடுநிலையாளர்களே சில நாட்களுக்கு நீங்கள் ரோபோ, மர்மயோகி பற்றிய செய்திகளை போடாது வளரும் கலைஞர்களான ஜெயம் ரவி, சிபிராஜ் போன்றவர்களுக்கு ஊக்கம் கொடுங்கள். இதனைவிட்டு விட்டு மூத்த நடிகர்களின் சூடான செய்திகளை போடுவீர்கள் அவர்கள் தவறு செய்திருந்தால் அவர்களை காய்ச்சி எடுப்பீர்கள். ஆனால் நடிகைகள் விடயத்தில் நீங்கள் எப்பவுமோ புத்திசாலிகள் தான் களத்தில் எந்த நடிகைக்கு மவுசோ அவரைப் பற்றித்தான் எழுதுவீர்கள். இந்தக் குற்றச்சாட்டுகள் பாரம்பரிய வார இதழான விகடனுக்கும் தான். விகடன் தான் நமீதாவை வைத்து "ஹாய் மச்சான்ஸ்" என ஒரு தொடர் கொடுத்தது. இதன் தாக்கம் இப்போ நமக்கு தெரியாது இன்னும் 25 வருடங்கள் கழித்து இந்தப் பத்திரிகைளைப் யாரும் ஒரு அந்தக்கால வாசகன் பார்த்தால் நமீதா ஒரு தமிழ்ப்பேராசிரியை என நினைப்பார்.
அடுத்தது இவர்கள் சினிமா தவிர்ந்த ஏனைய விடயங்களுக்கு பெரிதாக மதிப்பளிப்பதில்லை. யாருக்காவது குற்றாலீஸ்வரன் என்ற சாதனை நீச்சல் வீரனை இன்றைக்கு ஞாபகம் இருக்கா? சிறந்த வீரனாக வரவேண்டியவர் சில காரணங்களால் அதனை செய்துமுடிக்கமுடியவில்லை, எந்தப் பத்திரிகையும் அவரைக் கண்டுகொள்ளவே இல்லை. இப்படிப் பல உதாரணங்களைச் சொல்லலாம்.
திரைப்படத்துக்கு விமர்சனம் செய்கின்றேன் என இவர்கள் செய்யும் அலும்புகள் தாங்கமுடியாது. ஒடாத படத்தை நல்ல படம் என்பார்கள். ஓடிய படத்தை தோல்விப் படம் என்பார்கள். நல்ல படத்தை போரடிக்கின்றது என கூச்சமின்றி எழுதுவார்கள். சமீபகாலமாக இவர்களின் விமர்சனங்களை பெரிதாக யாரும் எடுப்பதில்லை. வலைப்பதிவாளர்கள் பெரும்பாலானோர் நடுநிலையாகவே விமர்சிக்கிறார்கள். தங்களுக்கு வேண்டப்பட்டவர்களின் படத்துக்கு நல்ல புள்ளிகள் கொடுப்பார்கள் ஏனையவை மட்டம் என்பார்கள். பொதுவாக இவர்களிடம் இருக்கும் ஒரு நல்ல குணம் பெரும்பாலான வார இதழ்களின் விமர்சனங்கள் ஒரே மாதிரியே இருக்கும், வாசிக்கும் வாசகன் குழப்பம் அடையத்தேவையில்லை. ஆனால் தொலைக்காட்சி படவரிசை பத்துகளில் சன்னில் சத்யம் முதலாவது, கலைஞரில் உளியின் ஓசையும் தசாவதாரமும் முதலாவது, ஜெயாவில் இன்னொரு படம் முதலாவது என மக்களைத் தெளிவாக குழப்புவார்கள். அதே நேரம் இவர்கள் வசூல் ரீதியாகவா அல்லது தரரீதியாகவா தரப்படுத்துகின்றார்கள் என்பது புரியவில்லை. புரிந்தவர்கள் தெளிவுபடுத்துங்கள். நல்ல படம் எனப் பெயரெடுத்த படங்களுக்கு தரவரிசையில் இடமிருக்காது அதே நேரம் ஓடவில்லை என பலரும் சொன்ன படம் முதலாவது சமீபத்திய உதாரணம் சத்யம்.
இலத்திரனியல் ஊடகங்களில் இன்னொரு பெரிய பிரச்சனை ஏனைய வானொலி தொலைகாட்சிகளை கிண்டல் செய்வதும் அவருர்களுடன் மல்லுக்கட்டுவதும். எங்களூரில் சில வானொலிகள் முதல்தரம் நம்பர் ஒன் என தம்மைத் தாமே சொல்லிக்கொள்வார்கள். எனக்கு ஒரு சந்தேகம் முதல் தரம் என்றால் அது ஒன்றாகத் தானே இருக்கவேண்டும் ஆனால் இங்கே இரண்டு வானொலிகள் முதல் தரத்தில் இருக்கின்றன என்ன கணிப்போ? நல்ல காலம் சமீபத்தில் ஆரம்பித்த வானொலி இன்னும் அந்தச் சண்டையில் இறங்கவில்லை. இறங்காது என நினைக்கின்றேன். அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் சூரிய சக்தி தென்றலாக வீசி வெற்றியைத் தரும்.
இதேபோல் சண்டை சன் தொலைகாட்சியின் அசத்தப்போவது யாரில் அடிக்கடி நடக்கும் மதுரைமுத்து என்பவர் சன்னைப் புகழோ புகழ் என்று புகழ்வார். தங்களை ஏத்திவிட்ட விஜய தொலைக்காட்சியை ஏனோ மறந்துவிட்டார்.முன்னைய தொலைகாட்சிகளுடன் பிரச்சனை இருக்கலாம் அதற்காக அவர்களை நக்கலடிப்பது நல்லதல்ல. சன்னுக்கு கலைஞர் தொலைக்காட்சியை நக்கலடிக்கமுடியாத சூழ்நிலையில் ஜெயாவை அடிக்கடி செய்திகளில் காட்டி தங்கள் தாத்தாமீதான பாசத்தைக் காட்டுகிறார்கள்.
பொதுவாக ஊடகம் என்பது மக்களுக்கு நல்ல விடயங்களைத் தான் போதிக்கவேண்டும் ஆனால் இப்போ எதிர்மாறாகத் தான் நடக்கின்றது, சிறந்த உதாரணமாக மெஹா சீரியல்களைச் சொல்லமுடியும். இரண்டு கணவன், இரண்டு மனைவி, கள்ள உறவு இல்லாத சீரியல் எது? இதுவா நம்ம கலாச்சாரம்? தொலைக்காட்சித் தொடர்களுக்கும் தணிக்கை தேவை.
இங்கே தொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும் தமிழ் மொழியைக் கடித்து துப்பவர்களைப் பற்றிச் சொல்ல அவசியமில்லை. அதனை யாரும் முளையிலே கிள்ளவில்லை. மக்கள் தொலைக்காட்சி மட்டும் விதிவிலக்கு,
இதனைவிட சகல வானொலிகளிலும் தொலைக்காட்சிகளும் ஏனோ இங்கிலாந்து ராணியின் வாரிசுகள் போல் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். இதில் விஜய் தொலைகாட்சி முதலிடம் பெறும். இந்த தொற்றுநோய் இப்போ நம்ம நாட்டிலும் தொற்றியிருக்கின்றது என்பதுதான் கவலைக்குரிய விடயம். ஒரு முறை இந்த ஆங்கிலமோகத்தைப் பற்றி நண்பர் லக்கிலுக்கிடம் பேசியபோது தமிழகத்தின் நகரத்தில் தான் இந்த மோகம் என்று கிராமங்களில் இன்னமும் பரவவில்லை என்றும் சொல்லியிருந்தார்.
ஒருமுறை நடிகர் கமலஹாசன் குறிப்பிட்ட ஒரு விடயம் ஞாபகத்திற்க்கு வருகின்றது. "பத்திரிகையாளர்களே என் படுக்கையறைக்குள் எட்டிப்பார்க்காதீர்கள்" என்றார். டயானா முதல் இன்றைய நயந்தாரா சிம்பு காதல் வரை பெரிதுபடுத்தியவர்கள் சில பத்திரிகையாளர்கள்தான்.
சில இணையத்தளங்களும் செய்திகொடுக்கின்றேன் என மிகவும்தப்புத்தப்பான தகவல்களைக் கொடுக்கிறார்கள். அண்மையில் இலங்கையில் உள்ள பிரபல தொலைக்காட்சி ஒரு சம்பவத்திற்க்கு இன்னொரு சம்பவத்தின் ஒளிவடிவத்தை ஒளிபரப்பி பரபரப்பை ஏற்படுத்தினார்கள். பின்னர் இரண்டு நாட்கள் கழித்து வருத்தம் தெரிவித்தார்கள்.
ஒருகுடம் பாலுக்கு ஒரு துளி விஷம் என்பதுபோல் சில பத்திரிகை, தொலைகாட்சி,வானொலிகளால் அனைத்து ஊடகங்களுக்கும் கெட்டபெயர். தற்போது வலையிலும் நிறைய ஊடகவியளாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கவேண்டும்.
பின்குறிப்பு : உங்கள் வாழ்க்கை எங்கள் செய்தி என்ற தலைப்பு ஏன் எனக்கேட்கிறீர்களா? நம்ம ஊரில் உள்ள தொலைக்காட்சி ஒன்று தங்கள் செய்திக்கு அவர்கள் செய்தி எனத் தமிழில் சொல்வதில்லை கொடுக்கும் விளம்பரம். இவர்களை இதுவரை யாரும் எங்கள் வாழ்க்கையை எப்படி நீங்கள் செய்தி ஆக்குவீர்கள் எனக் கேட்டதே இல்லை.
எழுதியது வந்தியத்தேவன் at 4 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் ஊடகம், தொலைக்காட்சி, பத்திரிகை
கலைஞருக்கு வயது ஒன்று.
ஒரு சின்ன பிளாஷ் பேக்:
எழுதியது வந்தியத்தேவன் at 13 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் கலைஞர், சன், தொலைக்காட்சி, விஜய், ஜெயா

