Showing posts with label விருதுகள். Show all posts
Showing posts with label விருதுகள். Show all posts

தமிழ்மணம் விருதுகள் - நன்றிகள்

2009 ஆண்டுக்கான தமிழ்மணம் விருதுகளில் எனது பதிவான "பத்மஸ்ரீகளும் புவனேஸ்வரிகளும் நடுநிலை தவறும் ஊடகங்களும்" செய்திகள்/நிகழ்வுகளின் அலசல்கள் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்ற மகிழ்ச்சியான செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். இதே பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்றவர் அருமை அண்ணன் உண்மைத்தமிழன் அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.



அத்துடன் பல நண்பர்களுக்கும் இந்த விருதுகள் கிடைத்திருக்கின்றன அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

எனது பதிவைத் தேர்ந்தெடுத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இதயம் கனிந்த நன்றிகள்.

தமிழ்மணம் வெற்றி பெற்றவர்கள்

பின் குறிப்பு :இந்தப் பதிவை தமிழ்மணத்தில் இணைக்க முடியாமல் உள்ளது

சாகித்திய விருது - மேமன்கவி, லோஷன்

மேல்மாகாண சாகித்திய விழா கொழும்பு எல்பின்ஸ்டன் அரங்கில் நாளை(24.11.209) மாலை 3 மணிக்கு நடைபெறவிருக்கின்றது. இவ்விழாவில் பல‌ ஊடகவியலாளர்கள், கலை, இலக்கியவாதிகள் மற்றும் சமூக சேவகர்கள் விருது பெறுகின்றார்கள்.

அந்த வகையில் வலையுலகில் அறியப்பட்ட கவிஞரும் எழுத்தாளருமான மேமன்கவியும் ஒலி/ஒளிபரப்பாளரான பா.வாமலோஷனனும் விருது பெறுகின்றார்கள்.

மேமன்கவி

மேமன்கவி (அப்துல் கரீம் அப்துல் ரஸாக், ஏப்ரல் 29, 1957) வட இந்திய குஜராத் மாநிலத்தைச் சார்ந்த மேமன் சமூகத்தில் பிறந்து ஈழத்துத் தமிழ்க் கலை இலக்கிய உலகில் தன்னை படைப்பாளியாக அடையாளப்படுத்திக் கொண்டவர்.



லோஷன்

ஒலிபரப்பாளன் என்பது எனது தொழில்.. வலைப்பதிவன் என்பது எனது முழுநேரப் பொழுதுபோக்கு எனக் கூறிக்கொள்ளும் வாமலோஷனன்(ஜீன் 5 ) என்ற ஏஆர்வி லோஷன் பிரபலமான அறிவிப்பாளர் மட்டுமல்ல பிரபலமான வலைப்பதிவரும் ஆவார். அறிவிப்புத் துறையில் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.



இவர்கள் இருவருடன் விருது பெறும் ஏனைய கலை, இலக்கிய ஊடகவியலாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.

ஹாட் அண்ட் சவர் சூப் 30-09-09

அண்ணா நூற்றாண்டு

சில நாட்களுக்கு முன்னர் அண்ணா நூற்றாண்டு கவியரங்கம் கலைஞரில் நேரலை செய்தார்கள். தமிழக முதல்வர் சுற்றம் சூழ கலந்துகொண்டார். கவிதை பாடிய கவிஞர்கள் அனைவரும் கவிதைக்கு பொய் அழகு என்பதை அப்பட்டமாக நிரூபித்தார்கள். கவிதைப் பித்தன், ஆண்டாள் பிரியதர்சினி, யுகபாரதி, வைரமுத்து என அனைவரும் அண்ணாவை மறந்து தம்பி புகழ் பாடினார்கள்.

ஆண்டாள் பிரியதர்சினி நாஸ்திகரான முதல்வரை தமிழ்க் கடவுள் முருகனுடன் ஒப்பிட்டது அபத்தம் என்றால், கவிப்பேரரசு அண்ணாப் போற்றுகின்றேன் என மகாத்மா காந்தியை கீழிறக்கிவிட்டார். காந்தி படம் உள்ள நோட்டு கிழியும் ஆனால் அண்ணா படம் உள்ள நாணயம் கிழியாது என்றார். ஒருவரை ஏற்றுவதற்காக இன்னொருவரை கீழே இறக்ககூடாது என்பது கவிப்பேரரசுவுக்குத் தெரியவில்லை.

இவர்களின் புகழ்களை முதல்வர் ரசிக்கவில்லை என்பது அவரின் முகபாவனைகளில் தெரிந்தது. அத்துடன் சபையில் பலரும் கேட்டுத்தான் கை தட்டுவாங்கினார்கள்.

தமிழக அரசு விருதுகள்

வழக்கம் போல் தமிழக அரசு விருதுகள் பலரைத் திருப்திப் படுத்த கொடுத்திருக்கின்றார்கள். இப்போ தான் தெரிகிறது கமல் படம் வெளியாகும் ஆண்டில் ரஜனி படம் வெளியாகாது, ரஜனி படம் வெளியாகும் ஆண்டில் கமல் படம் வெளியாகாது, ஏனென்றால் அப்படி வந்தால் யாருக்கு சிறந்த நடிகர் விருது கொடுப்பது என தமிழக அரசின் விருதுக் குழு குழம்பிப்போகும்.

தசாவதாரம் , சிவாஜியைவிட மொழி, சுப்பிரமணியபுரம், பூ, காஞ்சிவரம் எல்லாம் மிகவும் சிறந்த படங்கள் ஏனோ விருது கிடைக்கவில்லை. காஞ்சிவரத்திற்கு தேசிய விருது கிடைத்தது ஆனால் தமிழக அரசு விருது கிடைக்கவில்லை.

இந்த விருதுகளை விட நம்ம வலையுலக விருதுகள் எவ்வளவோ மேல் போல் தெரிகின்றது. விருதுகளும் சன் டீவி டொப் 10 நிகழ்ச்சிபோல் மாறிவருவது கண்டனத்துக்குரியது.

அப்பாவிக் கோவிந்தனின் கேள்வி: கலைஞருக்கு உளியின் ஓசைக்காக கிடைத்த சிற‌ந்த வசனகர்த்தா விருதை யார் அவருக்கு கொடுபார்கள்?.

கிரிக்கெட்

தென்னாபிரிக்காவில் நடைபெறும் ஐசிசி மினி உலகக் கிண்ணப் போட்டிகளில் எதிர்பாராத அதிர்ச்சிகரமான பல முடிவுகள் கிடைத்திருக்கின்றன. பலமான தென்னாபிரிக்கா, இலங்கை, அணிகள் அரையிறுதிக்கு செல்லமுடியவில்லை. இந்தியாவில் தலைவிதி சில மணித்தியாலங்களில் நிர்ணயிக்கப்படும்.

ஸ்மித், ஸ்ரோஸ் விவகாரமும் பூதாகாரமாக வெடித்துள்ளது. இந்திய அணி தற்சமயம் தோற்றால் ரசிகர்கள் மீண்டும் கல்லெறிவார்களா? வீடு உடைப்பார்களா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

தற்போதைய நிலவரத்தை நம்ம தொலைக்காட்சி நடுவர்கள் பாணியில் சொன்னால்
New Zealand Selected, South Africa Eliminated and India Waiting List.

கலைஞர், கமல், ரஜனிக்கு தமிழக‌அரசு விருதுகள்

2007 மற்றும் 2008ற்கான தமிழக அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன.

2007
சிறந்த நடிகர் : ரஜனிகாந்த (சிவாஜி)
சிறந்த நடிகை : ஜோதிகா (மொழி)
சிறந்த நடிகர் சிறப்பு விருது : சத்தியராஜ்
சிறந்த நடிகை சிறப்பு விருது : பத்மப்ரியா

சிறந்த படம்
முதலாவது : சிவாஜி
இரண்டாவது : மொழி
மூன்றாவது : பள்ளிக்கூடம்

சிறந்த படம் சிறப்பு விருது : பெரியார்

வில்லன் : சுமன்
குணசித்திர நடிகர் : எம்.எஸ்.பாஸ்கர்
குணசித்திர நடிகை : அர்ச்சனா
இயக்குனர் : தங்கர்பச்சான்
இசையமைப்பாளர் : வித்தியாசாகர்
பாடலாசிரியர் : வைரமுத்து
பாடகர் : ஸ்ரீநிவாஸ்
பாடகி : சின்மயி
ஒளிப்பதிவாளர்: நீரவ் ஷா
நகைச்சுவை நடிகர் : விவேக்
நகைச்சுவை நடிகை : கோவை சரளா

2008
சிறந்த நடிகர் : கமலஹாசன் (தசாவதாரம்)
சிறந்த நடிகை : சினேகா (பிரிவோம் சந்திப்போம்)
சிறந்த நடிகர் சிறப்பு விருது : சூரியா
சிறந்த நடிகை சிறப்பு விருது : திரிஷா

சிறந்த படம்
முதலாவது : தசாவதாரம்
இரண்டாவது : அபியும் நானும்
மூன்றாவது : சந்தோஷ் சுப்பிரமணியம்

சிறந்த படம் சிறப்பு விருது : மெய்ப்பொருள்

வில்லன் : ராஜேந்திரன்
குணசித்திர நடிகர் : பிரகாஸ்ராஜ்
குணசித்திர நடிகை : பூஜா
இயக்குனர் : ராதாமோகன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர் : வாலி
பாடகர் : பெள்ளிராஜ்
பாடகி : மஹதி
ஒளிப்பதிவாளர்: ஆர்தர் ஏ வில்சன்
நகைச்சுவை நடிகர் : வடிவேல்
நகைச்சுவை நடிகை : கோவை சரளா
உரையாடல் : மு.கருணாநிதி

செய்தி ஆதாரம் : சன் நியூஸ்

தமிழக விருதுகள் பற்றிக் கடந்த வருடம் நான் எழுதிய சின்னதொரு எதிர்வு கூறல் அதில் சில சரிவந்துள்ளன.

2008 தமிழக அரசு விருதுகள்


பின்குறிப்பு : சிலரின் விருதுகள் என்ன படம் என சன் செய்திகளில் அறிவிக்கப்படவில்லை, நீரவ் ஷா பில்லா, விவேக் குருவி என நினைக்கின்றேன்.

ஹாட் அண்ட் சவர் சூப் 09-09-09

கான்களைப் பின்தள்ளிய செல்லம்

கடந்த திங்கட்கிழமை 2007ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. தமிழில் வெளியான காஞ்சிவரம் படம் சிறந்த படத்திற்கான விருதைத் தட்டிச்சென்ற அதே வேளை அந்தப் படத்தின் நாயகனாக நடித்த பிரகாஷ்ராஜ் சிறந்த நடிகருக்கான விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

செல்லம் தேசியவிருது பெறுவது இது மூன்றாவது முறை இருவருக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும், தயா படத்தில் சிறந்த ஜூரி விருதும் பெற்றார். இவருடன் போட்டியாக "சக் தே இந்தியா" ஷாருக் கானும், "ரே ஜமீன் பர்" படத்துக்காக அமீர் கானும் போட்டியிட்டார்கள்.



இதில் சிறப்பு என்னவென்றால் காஞ்சிவரம் வர்த்தகரீதியிலான வெற்றியைப் பெறவில்லை. அண்மையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள். இதனை தமிழ்த் தொலைக்காட்சிகளின் தாதாக்கள் கூட வாங்கவில்லை என்பது வேதனை.

சிறந்த மாநில மொழி படங்கள் பிரிவில், தமிழ்ப் பிரிவில் பெரியார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இனிமே நாங்க தான் என்ற அனிமேசன் படம் சிறந்த அனிமேசன் படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சிவாஜி படத்திற்கு சிறந்த ஸ்பெஷல் எஃபெக்டுக்கான விருதுக்கு தெரிவானது.

செல்லம் இனிமேல் வில்லு போன்ற மசாலாக்களில் கதாநாயகனிடம் அடிவாங்காமல் உங்கள் நடிப்புத் திறமைக்கு தீனி போடும் படங்களில் நடியுங்கள். விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

பொன்விழா நாயகன் கமல்.

தற்போது பொன்விழா ஆண்டைக்கொண்டாடும் பத்மஸ்ரீ கமலின் மேல் சிலர் ஒரு குற்றச் சாட்டைத் தெரிவிக்கின்றார்கள். அதவாது அவர் களத்தூர் கண்ணம்மாவில் அறிமுகமாகி இன்று உன்னைப்போல் ஒருவன் வரை நடித்திருந்தாலும், இடையில் ஒரு சில வருடங்கள் நடிக்காமல் இருந்தார் என.

உண்மைதான் கமல் சில வருடங்கள் நடிக்காமல் இருந்தார் ஆனால் சினிமாத் துறையை விட்டு விலகவில்லை. அந்தக் காலத்தில் தங்கப்பன் மாஸ்டரிடம் உதவி நடன இயக்குனராகவும், சில படங்களில் ஒப்பனைக் கலைஞராகவும், பின்னர் தங்கப்பன் மாஸ்டர் இயக்கிய படம் ஒன்றில் உதவி இயக்குனராகவும் வேலை பார்த்திருந்தார்.


ஆகவே கமல் சினிமாவிற்க்கு வந்து 50 வருடங்கள் ஆகிவிட்டதை அவரின் ரசிகர்கள் தான் கொண்டாடுகின்றார்களே ஒழியே அவருக்கும் இந்தக் கொண்டாட்டத்திற்க்கும், எந்தத் தொடர்புமும் இல்லை. கமலின் ஆர்குட் குழுமத்தில் அங்கத்தவனாக இருப்பதால் இந்த தகவல்கள் கமலின் உயிரான ரசிகர்கள் சிலரின் மூலம் எனக்கும் தெரியவந்தது.

ஒரு தமிழனாக நல்ல நடிகனாக மனித நேயமிக்கவராக கமல் பொன்விழா கொண்டாடுவது சிலருக்கு காண்டாக்கிவிட்டது என்பது மறுக்கமுடியாத உண்மை.

கலக்கிய சமரவீரவும் சொதப்பிய ஜெயசூரியாவும்

இலங்கை அணியில் பலகாலமாக தேர்வாளர்களால் டெஸ்டில் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒருநாள் போட்டிகளில் புறக்கணிக்கப்பட்ட திலான் சமரவீர நேற்றைய முதல் முக்கோண ஒருநாள் போட்டியில் நியூசிலாந்திற்க்கு எதிராக இக்கட்டான சூழ்நிலையில் களம் இறங்கி தன் கன்னி அரைச் சதத்தைக் கடந்து பின்னர் அதனை தன் கன்னிச் சதமாக்கி தேர்வாளர்களின் முகத்தில் கரியைப் பூசியுள்ளார்.



அதே நேரம் இலங்கை அணியின் நட்சத்திர அதிரடித் துடுப்பாட்ட வீரர் சனத் ஜெயசூரியாவின் அண்மைக்கால துடுப்பாட்டம் ரசிகர்களிடம் வெறுப்பைக் கொடுக்கிறது. 40 வயதைக் கடந்தும் இன்னும் புத்துணர்ச்சியுடன் காணப்படும் சனத் சில நாட்களாக ஒருநாள் போட்டிகளில் மிகவும் மோசமான நிலையிலே காணப்படுகின்றார். இவரின் இந்த வருட ஒருநாள் போட்டிகளின் சராசரி 28.26 ஆகும். இந்த வருடம் 15 போட்டிகளில் விளையாடி 424 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தார். ஓட்டவிகிதம் 90.59 மட்டுமே இதில் ஒரு சதம் ஒரு அரைச் சதம் அடங்கும் அதே நேரம் இரண்டு தடவை ஓட்டம் எதுவும் எடுக்கவில்லை.

சனத்தின் சகாப்தம் முடிந்துவிட்டதா?

ஊக்கப்படுத்தல் விருதுகள்

சில நாட்களுக்கு முன்னர் ஊக்கப்படுத்தல் விருதை எனக்கு என் சக பள்ளி மாணவன் கீத் எனப்படும் கிருத்திகன், வழங்கியிருந்தார், அடுத்த நாள் அதே விருதை இனிய நண்பர் யோகா(யோ வாய்ஸ் வழங்கியிருந்தார்), நேற்று நண்பர் சந்ரு வழங்கியிருந்தார். மூவருக்கும் என் நன்றிகள்.



அதே நேரம் இந்த விருதை நான் புதியவர்கள் மூவரை ஊக்கப்படுத்த வழங்குகின்றேன். அண்மைக்காலமாக பலரின் எழுத்துக்கள் ஆச்சரியமளிக்கின்றன. அந்தவகையில் மூவரை மட்டும் தேர்ந்தெடுத்திருக்கின்றேன். பலர் இருந்தாலும் ஏனையவர்கள் ஏற்கனவே பலரிடம் இருந்து விருது பெற்றபடியால் இந்த மூவர்களுக்கும் ஊக்கப்படுத்தல் விருது கொடுப்பதில் மகிழ்ச்சி.

கனககோபி :

மிகவும் நகைச்சுவையாக எழுதுகின்றார். அண்மையில் டைட்டானிக் பற்றிய இவர் எழுதிய பதிவு பலரால் பாராட்டப்பட்டது. அடிக்கடி விழுந்து விழுந்து சிரிக்க வைக்கின்றார். சீரியசான விடயங்களைக்கூட எழுதும் ஆற்றல் உள்ளவர் என அவரின் நண்பர் ஒருவர் தெரிவித்தார். விரைவில் சீரியஸ் பதிவுடன் வருவார் என்ற நம்பிக்கையுடன் கோபிக்கு இந்த விருது.

தர்ஷாயணி

உறுபசி என்ற பெயரில் வலை வைத்திருக்கும் இளைஞி. காத்திரமான கவிதைகள் எழுதுகின்றார். பின்நவீனத்துவக் கதைகள் கூட எழுதியிருக்கின்றார். சில நாட்களுக்கு முன்னர் தான் எழுத ஆரம்பித்துள்ளார். இவரின் ஆக்கங்களில் தெரியும் சமூக கோபத்திற்காக இந்த விருது த்ர்ஷாயணிக்கு.

சம்யுக்தா கீர்த்தி

சிந்தனைச் சிறகினிலே என்னும் வலையில் கவிதைகள் எழுதும் தன்னைத் தமிழச்சி எனக் கூறிக்கொள்ளும் சம்யுக்தா கீர்த்தி. அண்மையில் தான் எழுதினாலும் பல ஆக்கங்களை எழுதியுள்ளார். கீர்த்தியின் கவிதைகளுக்கு இந்த விருது.

இன்றைய நாள்

இன்றைக்கு 09.09.09 என்ற சிறப்பான நாள். மீண்டும் இதேபோன்ற ஒரு நாள் 100 வருடங்களுக்குப் பின்னர் தான் வரும்.

வலையுலக‌ விருதுகளும் சில எண்ணங்களும்

அண்மைக் காலமாக வலையுலகத்தில் விருதுகள் வழங்கும் வைபவம் அமோகமாக நடந்துகொண்டிருக்கின்றது. நல்லதொரு பாராட்டக்கூடிய முயற்சி, அதே நேரம் இந்த விருதுகளின் போக்கு கொஞ்சம் கவலைக்கிடமாகவே இருக்கின்றது.

விருது என்பது முத்தம் போன்றது (தகவல் உதவி ரா.பார்த்திபன்) கொடுப்பவரையும் வாங்குபவரையும் மகிழ்விக்கும். அதேபோல் தான் நான் விருது வாங்கும் போது இருந்த சந்தோசம் என்னிடம் இருந்து விருது பெற்றவகளுக்கு கொடுக்கும் போது இருந்தது.



2007 களில் தேன்கூடு, தமிழ்மணம் போன்றவை வலைப் பதிவர்களை ஊக்குவித்து சில விருதுகள் கொடுத்தன. அவை எத்தகைய விருதுகள் என்பன மறந்துபோய்விட்டது, மூத்த பதிவர்கள் தெரிந்தால் சொல்லவும். அந்த விருதுகளை பெறுவது மிகவும் கஸ்டம்.

இன்று பட்டர் பிளை, சுவாரஸ்ய விருது, ஊக்குவிப்பு விருது எனப் பல விருதுகள் பெரும்பாலும் அனைத்துப் பதிவர்களையும் சென்றுவிடுகின்றன. நிச்சயமாக விருது பெற்றவர்கள் சந்தோசமடைவார்கள். அதே நேரம் விருது பெறாத இலை மறை காயாக இருக்கும் பதிவர்களின் நிலை என்ன?

காரணம் இந்த விருதுகள் பெரும்பாலும் தெரிந்த நட்புகளிற்கிடையே சிலர் பகிர்ந்துகொள்கிறார்கள். ஒருவரை நேரடியாகத் தெரியாவிட்டாலும் அவரின் பதிவுகள் மூலமு பின்னூட்டங்கள் மூலமும் நண்பர்களாகிவிடுகிறார்கள். இதனால் இந்த விருதுகள் நாங்கள் சிறிய வயதில் தீபாவளிக்கு வாழ்த்து அட்டை அனுப்புவது போல் வந்துவிட்டது.

அதாவது தீபாவளிக்கு நானும் நண்பனும் வாழ்த்து அட்டை விற்க்கும் கடைக்கு போறது, அவன் கேட்பான் உனக்கு சுவாமிப் படமா? நடிகர் படமா? நானே எனக்குரிய வாழ்த்து அட்டையாக பெரும்பாலும் கமலின் படம் தெரிவு செய்வேன், அவன் தனக்குரிய ரஜனி படத்தைத் தெரிவு செய்வான், பின்னர் இருவரும் அதில் எங்கள் வாழ்த்துகளை "இரும்புச் சங்கிலி அறுந்தாலும் எங்கள் அன்புச் சங்கிலி அறுவதில்லை" போன்ற பல தத்துவங்களுடன் எழுதி போஸ்ட் செய்வோம்.



எனக்குத் தெரியும், எனக்கு என்ன வாழ்த்து அட்டை வரும் என்று அவனுக்குத் தெரியும் அவனுக்கு என்ன அட்டை வரும் என்று. இதே போல் தான் இன்றைய விருதுகள் மாறிவிட்டன. எனக்கு ஒருவர் சுவாரஸ்ய விருதைக் கொடுத்தால் நான் அவருக்கு பட்டர் பிளை விருதைக் கொடுக்கவேண்டும்.

இதே நேரம் இப்படியான விருதுகளை வளார்ந்து வரும் பதிவர்களை ஊக்கப்படுத்த கொடுக்கலாம், தப்பில்லை காரணம் இந்த விருதுகளினால் அவர்களின் எழுத்துக்கள் மேலும் வளரும். அத்துடன் அவர்களைத் தட்டிக்கொடுப்பதுபோலும் தெரியும். எனக்கு இந்த விருது கிடைத்து விட்டது நான் நன்றாக எழுதவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு வரும்.

என் வலையுலக வாழ்க்கையில் கூட தமிழ்மணத்தினதும் சில நண்பர்களினதும் ஊக்கப்படுத்தலினால் முன்னைய காலங்களைப் போல் அல்லாது ஏதோ இப்போ கொஞ்சம் சிறப்பாக எழுதுகின்றேன். என்னை எப்படி அவர்கள் ஊக்கப்படுத்தினார்களோ, அதேபோல் நாமும் (நான் கொஞ்சம் மூத்த பதிவர் எனச் சொல்கின்றார்கள்)இளையவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். மீண்டும் மீண்டும் ஒருவருக்கு பலர் கொடுக்கும் விருதுகளால் அவர் சலிப்படைகின்றார். பல நண்பர்கள் எனக்கு ஒரு விருது கிடைத்தால் உடனே செய்வது என்னைப் பாராட்டுவது அல்ல அந்த விருதைத் தமக்கு திரும்ப அளிக்கவேண்டாம் என மிரட்டுவது.



ஏனென்றால் அவர்களுக்கு தெரியும் நான் அந்த விருதை அவர்களுக்கும் ஏனைய சில நண்பர்களுக்கும் கொடுக்க அதில் என்னிடம் விருது வாங்கியவர் நான் முதலில் கொடுத்த நண்பருக்கு தானும் கொடுக்க, திரும்ப திரும்ப விருதுகள் சுப்பற்றை கொல்லைக்கைதான் நிற்கபோகின்றது.

அத்துடன் எங்கடை நாட்டிலை பல்கலைக் கழகம் சாரா அமைப்புகள் கொடுக்கும் டொக்டர் பட்டங்கள், கலாசூரிகள் போல் வலையுலக விருதுகளும் மலினப்பட்டுவிடும்.

இதனை மாற்றவேண்டும் என்றால் விருதுகளை ஒரு அமைப்புச் சார்ந்து( தமிழ்மணம், தமிழிஸ், கிடுகு, யாழ்தேவி, உலவு போன்ற திரட்டிகள்)செய்யவேண்டும். அப்போதுதான் அந்த விருதுகளுக்கு பெறுமதி கிடைக்கும். இந்த திரட்டிகள் நட்சத்திர வாரம், கிரீடம் கொடுப்பது இன்னொருவகையான ஊக்குவிப்புகள்.

ஆகவே இந்த விருதுகளை ஆக்கபூர்வமான வழிகளில் செய்து இளையவர்களை ஊக்குவித்தும் மூத்தவர்களின் திறன் சார் எழுத்துகளுக்கு கொடுத்தும் பெருமை சேர்க்கவேண்டியது அனைவரின் கடமை.

ஹாட் அண்ட் சவர் சூப் 29-07-2009

மீண்டும் சர்ச்சையில் திரிஷா

சென்னை நட்சத்திர ஹோட்டலில் நடந்த விருந்தொன்றில் குடித்துவிட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹேமந்த் பதானியுடன் ரகளையில் திரிஷா ஈடுபட்டதாக ஒரு செய்தி அடிபட்டது. பத்திரிகைகளில் வெளிவந்த இந்தச் செய்திக்கு ஏனோ இணையங்களில் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. சிலவேளை சர்ச்சையும் நைட் கிளப்பும் திரிஷா வாழ்க்கையில் சகஜமான நிகழ்வென நினைத்தார்களோ தெரியாது. வழக்கம் போல் திரிஷாவின் தாய்க்குலம் இந்தச் செய்தியை மறுத்துள்ளார். அத்துடன் திரிஷாவும் பதானி என்பவரைத் தனக்குத் தெரியாது எனக் கூறியுள்ளார். அதேவேளை தன்னைக் குறிவைத்து வதந்திகளைப் பரப்புபவர்கள் மேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் திரிஷா கூறியுள்ளார். கவனமாக இருங்கள் மக்காள்.



அரசியல்

டி.எஸ். காயத்ரி ஸ்ரீனிவாஸ் என்ற திமுகவின் மாநில தொண்டரணி இணைச் செயலாளர் ஜூனியர் விகடனினால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டுள்ளார். இவர் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் பெயரில் புரோக்கராகச் செயல்ப்பட்டு மத்திய மாநில அமைச்சர்கள் ஊடக பல ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக ஜூவி செய்திவெளியிட்டுள்ளது. சில நாட்களுக்கு எப்படியும் தமிழக நாளிதழ்களுக்கும் இணையங்களுக்கும் நல்லதொரு தீனி கிடைத்துள்ளது. ஏற்கனவே ஜீவியில் தன் பெயர் வரக்கூடாது என ஆ.ராசா கோர்ட்டில் தடைவாங்கியிருந்தார். அந்த வழக்கின் தீர்ப்பு விகடன் குழுமத்திற்க்கு சார்பாக தீர்ப்பானபின்னர் இந்த மோசடியை ஜீவி அம்பலப்படுத்தியுள்ளது. தமிழக அரசு இவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கிறது எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழிசை விருதுகள்

இசையருவி நடத்திய தமிழிசை விருதுகள் கடந்த சனி ஞாயிறுதினங்களில் இசையருவியில் ஒளிபரப்பினார்கள். கடந்த வருடம் வெளிவந்த தமிழ்த் திரைப்பட இசை சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு வ்ழங்கினார்கள். பெயரில் தான் தமிழிசை விருதுகள் ஆனால் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய விஜய் ஆதிராஜும் சின்மயியும் ஆங்கிலத்திலேயே நிகழ்ச்சியை நடாத்தினார்கள். விருதுவாங்கியவர்களும் ஆங்கிலத்திலேயே பதிலளித்தார்கள். கலைஞர் குழுமத் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் தான் தமிழில் பெயர். அடுத்தமுறை தமிழில் பேசினால் பேசுபவர்களுக்கு இலவச ஒட்டியாணம் வழங்கப்படும் என்ற அறிவிப்பைத் தமிழக அரசு அறிவித்தால் அனைவரும் ஏதோ முயற்சி செய்வார்கள். எப்படியும் கலைஞர் காலத்தில் தமிழைச் சாகடிக்கவென்றே பேரன்களும் அமிர்தம் இராம நாராயணன்களும் முயல்கிறார்கள். ஞானி சாருவும் இதெற்கெல்லாம் குட்டு வைக்கமாட்டார்கள்.

கிரிக்கெட்

மேற்கிந்தியத் தீவுகளுடனான டெஸ்ட் தொடரை வென்ற வங்கதேச அணி நேற்று ஒருநாள் தொடரையும் வென்றுவிட்டது. நேற்றைய போட்டி வங்கதேசம் விளையாடிய 200ஆவது ஒருநாள் போட்டியாகும். இரண்டாம் தர மேற்கிந்தியத்தீவுகளுடன் விளையாடினாலும் போட்டி பலமாகவே இருந்தது. இந்த வெற்றியின் மூலம் வங்கதேசம் ஒரு டெஸ்ட் விளையாடும் நாட்டுடன் முதல் முறையாக தொடர் வெற்றி பெற்றுள்ளது. வங்கதேச புதிய அணித்தலைவர் ஷகீப் அல் ஹசன் சகலதுறைகளிலும் பரிணமிக்கின்றார். மூன்றாவதும் இறுதியுமான போட்டிக்கு மேற்கிந்தியத்தீவுகளின் கிறீஸ் ஹெயில் தலைமையிலான பலமிக்க அணி களமிறங்குமென்கிறார்கள்.

ஸ்ருதி பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்

சுவாரஸ்யமான அறுவர்

நண்பர் செந்தழல் ரவி சுவாரஸ்யமான ஆறு வலைப்பதிவுகளுக்கு விருதுகொடுக்கும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரது மனம் நோகக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் எனக்கு சுவாரஸ்யமாகத் தெரிகின்ற ஆறு நண்பர்களுக்கு இந்த விருதுகளை அளிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.



கானா பிரபா
அவன் அவன் ஒரு வலையையே கட்டிமேய்க்க கஸ்டப்படும்போது மடத்துவாசல் பிள்ளையாரடி, உலாத்தல், ரேடியோஸ்பதி, வீடீயோஸ்பதி என தன்னுடைய சொந்த வலைகளுடன் பல குழும வலைகளிலும் இளமையாக கலக்குபவர் வலையுலக இளம்புயல் அண்ணன் கானாப் பிரபா.

ஜாக்கி சேகர்
பிருந்தாவனத்தில் நொந்தகுமாரனாக இருக்கும் இவரின் எழுத்துக்கள் மிகமிக சுவாரஸ்யமானவை. சும்மா ஜாலிக்காக இவர் போடும் படங்கள் சுவராஸ்யத்துக்கும் மேலானவை. உலகப் படங்களைப் பற்றி தற்போது எழுதி அந்தப் படங்களை எப்படியும் தேடிப்பார்க்கவேண்டும் என்ற ஆவலைத் தூண்டியவர். பிரபஞ்ச அழகி சுஸ்மிதா சென்னின் தீண்டலால் ஏனைய வலைப்பதிவாளர்களைப் பொறாமைப் பட வைத்தவர். இப்போது தன் இரண்டாம் இனிங்சில் சில காலத்துக்கு முந்திய படங்களுக்கு விமர்சனம் எழுதி ஹிட் அடிக்கும் வலையுலகின் ... (உங்களுக்கு பிடித்த ஏதாவது பட்டம் போட்டுக்கொள்ளுங்கள். இவரது சாண்ட்விச் அண்டு நான்வெஜ்யுக்கு டிமாண்ட் அதிகம்.

முரளி கண்ணன்
சினிமாவையும் நடிகர்களையும் பலவித கோணங்களில் ஆராய்ந்து எழுதும் அற்புதமான எழுத்தாளர். தன் எழுத்தில் மெல்லிய நகைச்சுவையைக் கொண்டிருந்தாலும் சிலவேளைகளில் நகைச்சுவையாகவே பதிவுபோடுபவர். அண்மைய உதாரணம் மோகன் லால் பிரியதர்ஷன் ஐபிஎல் ஆலோசனையைக் குறிப்பிடலாம். இன்னொரு பிலிம் நியூஸ் ஆனந்தனாக பரிமாணம் எடுக்கின்றார். பத்மஸ்ரீ கமலஹாசனின் ரசிகர் என்பதால் எனக்கு அதிகம் பிடிக்கும்.

ஹீத் குமாரசாமி
மெய் சொல்லப்போகின்றேன் என பலதரப்பட்ட விடயங்களில் பதிவுகள் எழுதி பலரின் கவனத்தை தற்போது ஈர்த்திருக்கின்றார். சுவாரஸ்யமாகவும் எழுதுகின்றார். என்னுடைய பாடசாலையில் படித்தவர் என்பது இன்னொரு கூடுதல் தகவல். இன்னும் நிறைய எழுதவேண்டும் என்பது என் ஆசை.

டொக்டர் எம்.கே.முருகானந்தன்
ஈழத்தின் பிரபல எழுத்தாளரும் மருத்துவரும். இவருக்கு நான் விருது கொடுப்பது விஜய் அவார்ட்ஸில் கமலுக்கு விஜய் விருது கொடுப்பதுபோல இருக்கின்றது. சினிமா, இலக்கியம், மருத்துவம் என பல் திறமைவாய்ந்தவர். இவரது சினிமா விமர்சனங்களை பத்திரிகைகளில் வாசித்து நல்ல சினிமாக்களை சுவைக்க வழிவகுத்தவர், இன்று வலையுலகிலும் தனக்கென இடம் பிடித்தவர். மருத்துவர் என்பதால் நேரம் கிடைப்பது அரிதென்பதால் அதிகம் எழுதுவதில்லை. எழுதியவை அத்தனையும் சுவாரஸ்யமானவை.

வர்மா
தமிழக அரசியல் பற்றி வீரகேசரிப் பத்திரிகையில் எழுதுபவர். அத்துடன் விளையாட்டு, சினிமா என வலையுலகிலும் எழுதுகின்றார். சில காலமாக அவரது பதிவுகளைக் காணவில்லை. அவரை மீண்டும் வலையுலகிற்க்கு இழுக்கவும் ஊக்கப்படுத்தவும் இந்த விருதை அவருக்கு கொடுப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

விருதுகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

என் நண்பர்கள் பலர் வலையுலகில் கொடிகட்டிப்பறக்கின்றார்கள். அவர்கள் நண்பர்களாக இருப்பதால் அவர்களுக்கு விருதுகொடுக்கமுடியவில்லை.

ஐசிசியால் புறக்கணிக்கப்பட்ட ஆசிய ஆபிரிக்க‌ர்கள்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) 1909ஆம் ஆண்டு ஜூன் 15ந்திகதி ஆரம்பிக்கப்பட்டது. இப்போது அதன் நூற்றாண்டு விழாக் கொண்டாடப்படுகின்றது. இதில் முன்னாள் வீரர்களைக் கெளரவிக்கும் விதமாக "ஹோல் ஒவ் பாம்" அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 55 வீரர்களை ஐசிசி தெரிவுசெய்துள்ளது. இதில் வெறும் ஆறு பேரே ஆசியாவில் இருந்து தெரிவாகியுள்ளார்கள்.

இந்தியாவின் சார்பில் கபில்தேவ், கவாஸ்கர் மற்றும் பிஷன் சிங் பேடி ஆகியோரும் பாகிஸ்தானில் இருந்து இம்ரான் கான், ஜாவேட் மியாண்டாட், ஹனீப் முகமது ஆகியோரும் தெரிவுசெய்யப்படிருக்கிறார்கள். இலங்கை அணி சார்பாக யாருமே தெரிவுசெய்யப்படவில்லை.



1995ஆம் ஆண்டிற்க்கு முன்னர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களை மட்டுமே கணக்கில் எடுத்ததாக சொல்லும் ஐசிசி இங்கிலாந்திலிருந்து அதிக பட்சமாக 22 வீரர்களையும் ஆவுஸ்திரேலியாவில் இருந்து 13 வீரர்களையும் மேற்கிந்தியத் தீவுகளிலிருந்து 11 வீரர்களையும் தெரிவு செய்துள்ளது.

தென்னாபிரிக்காவிலிருந்து ஷோன் போலக்கின் பெரிய தந்தையார் கீரீம் போலக்கும் , பெரி ரிச்சார்ட்ஸும் மாத்திரம் தெரிவாகியுள்ளனர். நியூசிலாந்திலிருந்து சேர் ரிச்சர்ட் ஹாட்லி மாத்திரம் தெரிவாகியுள்ளார்.


கீரீம் போலக்


தென்னாபிரிக்கா, இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், சிம்பாவே, நியூசிலாந்து போன்ற நாடுகளின் பல தலைசிறந்த வீரர்களைத் தெரிவு செய்யாமல் ஐசிசி பாரபட்சம் காட்டியிருக்கிறது. இங்கிலாந்து வீரர்களில் சிலர் ஒரு சில டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமே விளையாடிய வீரர்கள் ஆவார்கள்.

இலங்கையின் துலிப் மெண்டிஸ், மாலிந்த வர்ணபுர, ரோய் டயஸ் போன்ற வீரர்கள் பல சாதனை செய்தவர்கள். இந்தியாவைப் பொறுத்தவரை லாலா அமர்நாத், குண்டப்பா விஸ்வநாத்,வெங்சகார் விஜய் ஹசாரே போன்றவர்களும் தெரிவாகவில்லை.

அதேபோல் இந்தியா சுதந்திரம் பெறுவதற்க்கு முன்னர் இங்கிலாந்து அணியில் விளையாடிய ராஞ்சி கோப்பை உருவாக காரணமாக இருந்த குமார் ஸ்ரீ ராஞ்சி அவர்களின் பெயரயும் ஐசிசி பரீசிலிக்கவில்லை.

இனி ஒவ்வொரு ஆண்டும் ஒரு வீரர் இப்பட்டியலில் இடம் பெறவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பலரின் பெயர்களை பரிசீலிக்காமல் ஐசிசி எந்தப் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது என்பது புரியாத புதிராகவே உள்ளது.

உலகத் தமிழர்களின் கனவுக் கன்னி

நேற்று சன்னில் சிங்கப்பூரில் நடைபெற்ற‌ சர்வதேச தமிழ்த் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா ஒளிபரப்பினார்கள். விழாவில் கலந்துகொண்ட நட்சத்திரங்கள் அனைவருக்கும் விருதுகள் கொடுத்து மகிழ்ந்தார்கள்.



விழாவின் உச்சக்கட்டமாக சென்ற வருடத்தின் மக்கள் மனம் கவர்ந்த கனவுக்கன்னியாக சினேகாவுக்கு விருது கொடுத்தார்கள். என்ன கொடுமை? அசின் , நயந்தாரா, திரிஷா, தமன்னா என பல அழகு தேவதைகள் இருக்கும் போது நடிக்கவந்து 10 வருடங்களுக்கு மேலாக நடித்து இப்போ ஓய்வு எடுக்கும் நிலையில் உள்ள‌ ஒரு நடிகைக்கு விருது கொடுத்தது சிரிப்பாக இருந்தது.



விருது கொடுத்த நன்றிக்கடனுக்காக சினேகாவும் ராம்ஜியுடன் நல்ல கெமிஸ்ரியுடன் ஒரு நடனம் ஆடினார்.

பின் குறிப்பு : நிமிடத்திற்க்கு ஒரு தடவை சன் பிக்சர்ஸ் புகழ் சுனைனாவை காமெரா படம் பிடித்த மர்மம் என்னவோ?

வலைமாமணி விருதுகளும் வாழ்த்துக்களும்

இந்த வாரம் ஏதோ விருதுகள் வாரம் போல் இருக்கின்றது. உலகளாவிய ரீதியில் தமிழன் ஏ ஆர் ரகுமான் ஆஸ்கார் விருது பெற்றார். பின்னர் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து தமிழ்மணத்தின் சிறந்த பதிவர்களுக்கான விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. விருது பெற்ற அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். 

நான் வாக்களித்த ப‌லருக்கு முதலாம் இடம் கிடைத்துள்ளது. சிலர் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளார்கள். 

இந்தப்போட்டியில் நானும் என் இரண்டு ஆக்கங்களை அனுப்பியிருந்தேன். பெரும்பாலான என் ஆக்கங்கள் மொக்கையாகவே இருக்கும். அப்படியிருந்தும் கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்மணம் என்னை நட்சத்திரமாக்கி அழகுபார்த்த வேளையில் ஒரு சில நல்ல பதிவுகள் எழுதியிருக்கின்றேன் என நண்பர்கள் கூறினார்கள். என் ஆக்கங்கள் இரண்டும் முதல் 10 இடத்துக்குள் வந்தபடியால் என் தன்னம்பிக்கை இன்னும்கொஞ்சம் வளர்ந்துள்ளது. என்னுடன் போட்டியிட்டவர்கள் பெரியதலைகள் அதில் சிலர் பதிவுலகில் பழம் தின்று கொட்டைபோட்டவர்கள். ஆதலால் இந்தப்போட்டியில் நானும் இருந்தேன் என்பதே மகிழ்ச்சிதான். காட்சிப் படைப்புகள் (ஓவியம், ஒளிப்படம், திரைப்படம்)என்ற பிரிவில் நான் எழுதிய தசாவதாரம் அல்லது கமல் ஒரு நுண்ணரசியல் பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.

பிரிவு: காட்சிப் படைப்புகள் (ஓவியம், ஒளிப்படம், திரைப்படம்)

  1. எனது முதல் குறும்படம் இதோ

  2. என் கண்ணுக்குள்ளும் நீதானடி கண்ணம்மா…

  3. பெங்களூரூ மலர் கண்காட்சி - படங்கள்

  4. எம்மதமும் எமக்கு…[PiT- இறுதிச் சுற்று-'கட்டமைப்பு'க்கு]

  5. தசாவதாரம் - முதல் சண்டைக்காட்சி குறித்து

  6. குட்டிப் புகைப் படங்கள் சில

  7. ‘ஆக்ஸிடெண்ட்”

  8. தமிழ் சினிமா - 2005

  9. யார் வரைந்ததைப் பார்த்து???

  10. தசாவதாரம் அல்லது கமல் ஒரு நுண்ணரசியல்

  11. பிரிட்டிஸ் காலத்து இலங்கை(CEYLON) இப்படி இருந்ததாம்-வீடியோ

  12. பென்சில் ஓவியம் - 3

இன்னொரு பிரிவான பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள் பகுதியில் எனது நட்சத்திரவாரப் பதிவான "வல்லிபுர ஆழ்வாரும் வங்காளவிரிகுடாவும்" ஒன்பதாவது இடம் பிடித்துள்ளது.

பிரிவு: பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள்

  1. * 02. கிராமப்புற மருத்துவக்கதைகள் - மருத்துவமனைக்கு சுற்று சுவர் கட்டலாம் வாங்க

  2. என் வாசிப்பு அனுபவம் : தொடக்கமும், முடிவும், சாருநிவேதிதாவும்

  3. உன்னை கரம் பிடித்தேன்… வாழ்க்கை ஒளிமயமானதடீ!!!!

  4. ஜொள்ளித் திரிந்த காலம் - 2.6

  5. சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே…

  6. மலரும் தீபத் திருநாள் நினைவுகள்

  7. எத்தனை விதங்களில் மனிதர்கள்!

  8. இரயிலோடு விளையாடி

  9. *** வல்லிபுர ஆழ்வாரும் வங்காளவிரிகுடாவும். ***

  10. என் அப்பா சொல்லித் தந்த சினிமா

  11. ஊரும் வாழ்வும்……..

  12. பூவன் கடவுளாகிப் போனான்: காட்டாறு!

  13. தங்கமணியைப் பற்றி ஒரு பதிவு

  14. காசி பயணத்தொடர்(2) - கங்கா ஆரத்தி


எனக்கு வாக்களித்த பெருமக்கள் அனைவருக்கும் நன்றிகள். இந்த நேரத்தில் என்னை வலையுலகிற்க்கு இழுத்துவந்த அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

மீண்டும் வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.