புதிய வேலை கிடைத்த பதிவர்கள்.

அண்மைக்காலமாக நான் உட்பட சில இலங்கைப் பதிவர்கள் அடிக்கடி பதிவு எழுதாமல் ஓய்வில் இருக்கின்றார்கள். இதற்கான காரணம் என்ன என அறிய அவர்களை ரகசியமாக கண்காணித்ததில் அனைவரும் புதிய கால்பந்தாட்ட அணி ஒன்றிற்கு பயிற்சியாளராகச் செல்ல விண்ணப்பித்திருக்கின்றார்களாம்.

கால்ப்பந்தில் எத்தனை சிக்ஸ் அடிப்பார்கள் எத்தனை விக்கெட் என கால்பந்தை அக்குவேறு ஆணி வேறாக அறிந்த கனககோபி சில நாட்களாக கூரே பார்க்கில் உடற்பயிற்சியுடன் ஓட்டப் பயிற்சியும் செய்வதால் அந்தப் பகுதியே அதிர்வதாக செய்திகள் கசிகின்றன.

அதே நேரம் இந்தப் பயிற்சியாளருக்கான சகல தகுதிகளும் தனக்குத் தான் இருக்கின்றது என சுபாங்கன் தொடை தட்டி சுகததாச ஸ்டேடியத்தில் அதிதீவிர பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார். ஸ்டேடியம் தனக்குப் பக்கத்தில் இருப்பதால் தனக்குத் தான் வாய்ப்புகள் அதிகம் என சுபாங்கன் நினைத்துவிட்டார்.

பாடசாலைக் காலங்களில் பாடசாலை அணிக்காக விளையாடிய ஆதிரை ரூபியுடன் பிசியாக இருப்பதால் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கமுடியாமல் வருந்தினாலும் தன் பங்குக்கு ஒரு நீலக் கலர் விண்ணப்பத்தை அனுப்பியிருப்பதாகவும் தனக்கு உதவியாளராக புல்லட்டை இணைக்கும் படி வேண்டுகோள் விடுத்ததாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இத்தனைக்கும் புல்லட்டிற்க்கு எந்த விளையாட்டும் தெரியாது என கெளபாய் தன் பாணியில் அறிக்கை விட்டுள்ளார்.

கண்டியில் உள்ள மலைகளில் நன்கு ஓடி ஆடிப் பயிற்சி செய்த யோகா இந்த வேலைக்காக தான் எந்த நாட்டிற்கும் செல்லத் தயார் என்றும் அத்துடன் இந்தப் பயிற்சிகளுக்காக தான் பல காலம் நூடுல்ஸ் சாப்பிடவில்லை என்றும் கூறியிருப்பதுடன் இந்தப் பதவிற்காக தான் எத்தனை காலமும் இருக்கிறதற்க்கு தயார் என அறிவித்துள்ளார்.

வரும் 18ந்திகதி இளைய தளபதியின் வேட்டைக்காரன் வெளிவருவதால் தன்னால் இந்தப் பதவிற்க்கு விண்ணப்பிக்கமுடியாது என்றும் தனக்காக தன்னுடைய ரசிகர் மருதமூரானை தான் சிபாரிசு செய்வதாக சதீஷ் அறிக்கைவிட்டிருந்தாலும் இந்த அணியில் சில தமிழ்ப் பெண்கள் இருப்பது தனக்கு ஒத்துவராது என்பதால் மருதமூரான் விண்ணப்பிக்க மறுத்துவிட்டார்.

இதே நேரம் கலாச்சார ஆடைகளுடன் இவர்கள் பயிற்சி எடுக்க தயார் என்றால் தான் பயிற்சி கொடுக்கத் தயார் என சந்ரு அறிவித்திருந்தாலும் சந்ருவின் முடிவு அவரின் ரசிகர்களின் கைகளில் தான் உள்ளது.

இதே நேரம் இந்த விடயத்தைக் கேள்விப்பட்ட லோஷன் இதற்கெல்லாம் நான் தான் பொருத்தமானவர் என நினைத்தபடி கனககோபியுடன் கூரே பார்க்கில் ஓடுகின்றாராம். ஒரே நேரத்தில் இரண்டு பூகம்பம் என வெள்ளவத்தைவாசிகள் தெரிவிக்கின்றார்கள்.

இவர்களை விட இன்னும் பலர் விண்ணப்பிக்க‌ முயன்றுகொண்டிருந்தாலும் வந்திக்கே அதிக வாய்ப்புகள் இருப்பதால் போட்டியில் இருந்து விலகிவிட்டதாக கடுகதிச் செய்திகள் தெரிவித்தாலும் வந்தி விசாப் பிள்ளையாருக்கு விசேட பூசை செய்யப்போகின்றாராம்.

இவர்கள் எல்லாம் போட்டி போட்டு விண்ணப்பிக்கும் பதவி எதற்க்குத் தெரியுமா? கீழே உள்ள படத்தில் இருக்கும் பெண்கள் கால்பந்தாட்ட அணிக்கு பயிற்சியாளர் தேவையாம். விரும்பினால் நீங்களும் விண்ணப்பிக்கலாம்.டிஸ்கி: அண்மைக் காலமாக எங்கள் பதிவுலகம் அமைதியாக இருப்பதால் அவர்களை உசாராக்கவே இந்தப் பதிவு. எவரையும் புண்படுத்தவல்லை.இந்தப் பதிவு நகைச்சுவைக்காகவே ஒழிய வேறில்லை. 18+ பின்னூட்டங்கள் வந்தால் நான் பொறுப்பில்லை.

இலங்கைப் பதிவர் சந்திப்பு

முதலாவது சந்திப்பின் தித்திப்பான அனுபவங்கள் மறையும் முன்னர் இதோ இன்னொரு இனிமையான பதிவர் சந்திப்பு. முதலாவது சந்திப்பில் அறிமுகத்துடன் சில விடயங்கள் மட்டுமே எம்மால் கலந்துரையாடப் பட்டதனால் இரண்டாவது சந்திப்பில் பல காத்திரமான விடயங்கள் கலந்துரையாடப்படுவிருக்கின்றன. முதல் சந்திப்பை தவறவிட்ட நண்பர்களையும் ஏனைய நண்பர்களையும் சந்திக்க நல்லதொரு வாய்ப்பு.இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு

இடம் : கைலாசபதி கேட்போர் கூடம்
தேசிய கலை இலக்கியப் பேரவை,
தலைமைப் பணிமனை
571/15, காலி வீதி,
வெள்ளவத்தை,
கொழும்பு-06

காலம் : மார்கழி பதின்மூன்று, மாலை இரண்டு மணி, ஞாயிற்றுக் கிழமை ( 13-12-2009 )

நிகழ்ச்சி நிரல்

  • அறிமுகவுரை
  • புதிய பதிவர்கள் அறிமுகம்
  • கலந்துரையாடல் 1 : பயனுறப் பதிவெழுதல்
  • கலந்துரையாடல் 2 : பின்னூட்டங்கள் குறித்தான பார்வை
  • சிற்றுண்டியும் சில பாடல்களும்
  • கலந்துரையாடல் 3 : இலங்கைத் தமிழ்ப் பதிவர் குழுமம்
  • கலந்துரையாடல் 4 : பெண்களும் பதிவுலகமும்
  • பதிவர்களுக்கிடையான குழுப் போட்டி
  • உங்களுக்குள் உரையாடுங்கள்

உங்களின் வருகையை முற்கூட்டியே ஏற்பட்டுக்குழுவினர்களிடம் தெரிவிக்கவும். இம்முறை ஏற்பாட்டுக்குழுவில் கனககோபி, சம்யுக்தா, மன்னார் அமுதன், மதுவர்மன், மதுவதனன், சுபாங்கன், மு மயூரன் ஆகிய நண்பர்கள் கலக்கவிருக்கின்றார்கள்.

ஹாட் அண்ட் சவர் சூப் 25-11-2009

பதிவர் சந்திப்பு

மீண்டும் இன்னொரு இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு. கடந்த ஆகஸ்ட்டில் சந்தித்த நாம் மீண்டும் எதிர்வரும் டிசம்பர் 13 ல் சந்திக்கவிருக்கின்றோம். முதலாவது சந்திப்பில் அறிமுகங்களும் சில கலந்துரையாடல்களும் மட்டும் இடம் பெற்றதால் இந்தமுறை மேலும் பல கலந்துரையாடல்களை ஏற்பாட்டுக் குழுவினர் ஏற்பாடு செய்துள்ளார்கள்.

அடிக்கடி சந்தித்தால் சுவாரசியம் குறைந்துவிடும் என்பதால் தான் 4 மாதத்திற்க்குப் பின்னர் ஏற்பாடு செய்திருக்கின்றார்கள் என்பது பதிவுலகில் நீண்டகாலம் இருக்கும் பதிவர்களுக்கு புரியும்.

இடம் : தேசிய கலை இலக்கியப் பேரவை, வெள்ளவத்தை (ரொக்சி திரையரங்கு முன்னால்)
காலம் : மார்கழி பதின்மூன்று, மாலை இரண்டு மணி, ஞாயிற்றுக் கிழமை ( 13-12-2009 )

ஏற்கனவே அறிமுகமான நண்பர்களை மீண்டும் சந்திக்கபோகின்றோம் என்பதனால் அந்த நாள் உடனே வராதா? என ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். சந்திப்புத் தொடர்பான மேலதிக விபரங்கள் அடுத்த பதிவில் நாளை வரும்.

மழையோ மழை

கடந்த சில நாட்களாக பெரும்பாலும் இலங்கை முழுவதும் மழை கொட்டோ கொட்டென்று கொட்டித்தீர்த்துள்ளது. இதனால் தலைநகர் கொழும்பில் சில இடங்களில் வெள்ளம் வழமைபோல் தேங்கி நின்றது. டெங்கு, சிக்குன் குனியா போன்றவற்றின் உரிமையாளர்களான நுளம்புகளுக்கு வாடகையற்ற குடியிருப்பாக இந்தப் பகுதிகள் மாறிவிட்டன.

குறிப்பாக கொட்டாஞ்சேனையில் புளுமென்டல் வீதி, தொடர்மாடிகள், ஹெட்டியாவத்தை சந்தியும் அதனை அண்டியபகுதியும், ஜெம்பட்டா வீதி, மோதரையில் பல வீதிகள், வெள்ளவத்தையில் சில வீதிகள் நீரினுள் மூழ்கின. ஒவ்வொரு முறை பெரு மழை பெய்யும் போது இந்த நிலமை ஏற்படுவது வழக்கம் ஆனாலும் ஒவ்வொரு தரமும் இந்தப் பகுதிகளுக்கான மாகாணசபை, மாநகர சபை அங்கத்தவர்கள் இதனைச் சீர் செய்து தருவோம் என உறுதியளிப்பார்கள் ஆனால் பின்னர் மறந்துவிடுவார்கள் (மக்களும் தான்). இம்முறை ஜெம்பட்டா வீதி மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் கூடச் செய்தார்கள். தேர்தல் நேரத்தில் தட்டிகள், சுவரொட்டிகள், வண்ணத் தோரணங்கள் அமைக்கும் பணத்தில் ஒரு தொகைப் பணத்தை வெள்ளத்தைத் தடுக்கப் பயன்படுத்தினால் மக்களுக்கு பேருதவியாக இருக்கும், செய்வார்களா?

ஈரம்

எத்தனையோ நாட்களாக பார்க்க முனைந்தும் பார்க்கமுடியாமல் போன ஈரம் திரைப்படம் ஒருமாதிரி நேற்று சிடியில் பார்த்துமுடித்துவிட்டேன். நீண்ட நாட்களின் பின்னர் நல்லதொரு திரில்லர் படம். ஆனாலும் இடையில் அமானுஷ்யத்தைப் புகுத்தி கொஞ்சம் குழப்பிவிட்டார்கள். ஆவிக்குப் பதிலாக கதாநாயகியின் சகோதரியோ அல்லது தந்தையோ கொலை செய்திருந்தால் நம்பகத் தன்மை அதிகரித்திருக்கும்.

இப்படியான நல்ல சில திரைப்படங்களை ஏன் எங்கள் தியேட்டர்களில் வெளிவிடுவதில்லை.

கோலங்கள்

நேற்றுடன் எத்தனையோ குடும்பப் பெண்கள் நீண்ட பெருமூச்சு விட்டிருப்பார்கள். காரணம் கோலங்கள் மெஹாஹாஹா தொடரின் வில்லன் ஆதியை காவல்துறை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்துவிட்டார்கள். ஆனாலும் தொடரை இன்னும் நீட்டிப்பதற்காகவோ என்னவோ ஆதி நீதிபதியை துப்பாக்கி முனையில் எத்தனையோ காவலர்கள் மத்தியில் கடத்திக்கொண்டுபோய்விட்டார்.

நீதிமன்றக் காட்சியில் அவர் அமைதியாக நிற்கவே அம்மாவிடம் சொன்னேன் "பாருங்கள் ஆதி சிலரைச் சுட்டுவிட்டு எப்படியும் தப்பிப்பான்" என, நான் சொன்னபடியே நடந்துவிட்டது. அனைவராலும் அடுத்து இதுதான் நடக்கபோகின்றது என்ற திரைக்கதை தொல்காப்பியனின் 6 வருடகால கோலங்கள் தொடரின் அனுபவத்தைக் கேள்விக்குறியாக்குகின்றது. எது எப்படியோ இன்னும் சில நாட்களில் இந்த தொடர் முடிந்துவிடும் என நினைக்கின்றேன்.

பின்குறிப்பு : சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் பார்க்கின்ற நாம் முந்தநாள் விளம்பர இடைவேளையின் போது தட்டிக்கொண்டிருக்க சன்னில் கோலங்கள் உச்ச கட்டம் நடந்தது அதனால் தான் கோலங்கள் கொடுமையை பல வருடங்களுக்குப் பின்னர் பார்த்தது.

கிரிக்கெட்

அஹமதபாத் டெஸ்ட் போட்டி சில சர்ச்சைகளுடன் வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்துவிட்டது. அதே நேரம் கான்பூரில் நேற்றுத் தொடங்கிய இரண்டாவது டெஸ்ட்டில் இலங்கை அணியை இந்திய அணி புரட்டி எடுத்துவிட்டது என்றே சொல்லவேண்டும். குறிப்பாக சுழல் பந்து வீச்சாளர்களை இந்திய வீரர்கள் நோகடித்துவிட்டார்கள். மிகவும் குறைந்த ஓட்டவீதத்தை கொடுத்த அஞ்சலோ மத்யூசை ஏனோ சங்ககாரா அடிக்கடி பயன்படுத்தவில்லை. மூன்று சுழல் பந்து வீச்சாளர்களுக்குப் பதிலாக 2 பேரை எடுத்திருக்கலாம். ஆனாலும் முரளில் தன் சுழல் மூலம் 2 விக்கெட்டுகளை எடுத்து இனியும் முரளி அணியில் தேவையா? என எழுதும் ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு பதிலடி கொடுத்திருக்கின்றார்.

நியூசிலாந்தில் நடைபெறும் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து அணித் தலைவர் டேனியல் வெட்டோரி 8 இலக்க வீரராக களம் இறங்கி அதிக ஓட்டம் பெற்ற வீரர் என்ற சாதனையை இன்று புரிந்துள்ளார். ஏற்கனவே ஷேர் வோர்னிடம் இருந்த 2005 என்ற ஓட்டங்களை இன்று தனது 95 ஆவது போட்டியில் வொட்டோரி கடந்தார். அத்துடன் வொட்டோரிக்கு இந்த மைல் கல்லைக் கடக்க வெறும் 57 இனிங்ஸ் மாத்திரமே தேவைப்பட்டது.

எட்டாம் இலக்க துடுப்பாட்டத்தில் பிரகாசித்தவர்களில் முன்வரிசையில் இருப்பவர்கள் அனைவரும் கிரிக்கெட் ஜாம்பவான்களாகும். வொட்டோரி, வோர்ன், சமிந்த வாஸ், ஷோன் போலக், கபில் தேவ், மல்கம் மார்ஷல், வாசிம் அக்ரம், அனில் கும்ளே,சேர் ரிச்சர்ட் ஹட்லி, மார்க் பவுச்சர்.பின் குறிப்பு : கடந்த 10 நாட்களாக என்னிடம் இருந்து எந்தப் பதிவும் வராததையிட்டு மின்னஞ்சல் மூலமும், தொலைபேசி மூலமும் என்னைத் தேடிய நண்பர்களுக்கு நன்றிகள். பல ஆணிகள், அலவாங்குகள் இருந்தபடியால் வரமுடியவில்லை. அத்துடன் ஒரு கொழும்பிலிருந்து இன்னொரு பிரதேசத்தில் சில நாட்கள் நின்றபடியால் எதுவும் எழுதமுடியவில்லை. அந்த அனுபவங்கள் விரைவில்.

சாகித்திய விருது - மேமன்கவி, லோஷன்

மேல்மாகாண சாகித்திய விழா கொழும்பு எல்பின்ஸ்டன் அரங்கில் நாளை(24.11.209) மாலை 3 மணிக்கு நடைபெறவிருக்கின்றது. இவ்விழாவில் பல‌ ஊடகவியலாளர்கள், கலை, இலக்கியவாதிகள் மற்றும் சமூக சேவகர்கள் விருது பெறுகின்றார்கள்.

அந்த வகையில் வலையுலகில் அறியப்பட்ட கவிஞரும் எழுத்தாளருமான மேமன்கவியும் ஒலி/ஒளிபரப்பாளரான பா.வாமலோஷனனும் விருது பெறுகின்றார்கள்.

மேமன்கவி

மேமன்கவி (அப்துல் கரீம் அப்துல் ரஸாக், ஏப்ரல் 29, 1957) வட இந்திய குஜராத் மாநிலத்தைச் சார்ந்த மேமன் சமூகத்தில் பிறந்து ஈழத்துத் தமிழ்க் கலை இலக்கிய உலகில் தன்னை படைப்பாளியாக அடையாளப்படுத்திக் கொண்டவர்.லோஷன்

ஒலிபரப்பாளன் என்பது எனது தொழில்.. வலைப்பதிவன் என்பது எனது முழுநேரப் பொழுதுபோக்கு எனக் கூறிக்கொள்ளும் வாமலோஷனன்(ஜீன் 5 ) என்ற ஏஆர்வி லோஷன் பிரபலமான அறிவிப்பாளர் மட்டுமல்ல பிரபலமான வலைப்பதிவரும் ஆவார். அறிவிப்புத் துறையில் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.இவர்கள் இருவருடன் விருது பெறும் ஏனைய கலை, இலக்கிய ஊடகவியலாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.

பம்பலான பண்பலைப் பெயர்கள்

இன்று காலை விடியலில் லோஷன் வருங்காலத்தில் வானொலிகளின் பெயர்கள் எப்படி இருக்கும் என ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி செய்தார். அவரின் எண்ணக்கருவில் இருந்து உதித்த மொக்கைப் பதிவுதான் இது. எந்த வானொலிகளையும் கிண்டல் செய்யாமல் சும்மா பம்பலுக்கு கற்பனையைத் தட்டிவிட்டதில் வந்த பதிவு தான் இது.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள பல பெயர்கள் ட்விட்டரில் நடந்த கும்மியில் இருந்து தெரிவுசெய்யப்பட்டுள்ளது. அந்தக் கும்மியில் கும்மிய‌ லோஷன், கனககோபி, யோகா, சுபாங்கன், ஆதிரை மற்றும் பவன் ஆகியோருக்கும் நன்றிகள்.

தவறணை FM :

குடிமகன்களுக்கு மட்டும் சொந்தமான வானொலி. "தண்ணித் தொட்டி தேடிவந்த", "ஒரு ஜீவன் தான் (சோகம்)", "ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்" போன்ற போதை தரும் பாடல்கள் மட்டும் ஒலிபரப்பாகும்.

இதுவே தமிழ்நாட்டில் ஆரம்பித்தால் "டாஸ்மார்க்" FM.

அனானி FM :

நிகழ்ச்சி செய்பவரின் பெயர் தெரியக்கூடாது. நேயர்களின் பெயர் தெரியக்கூடாது. யாரும் யாரையும் பாராட்டலாம்/திட்டலாம் ஒருவர் பல பெயரில் வந்து கருத்துச் சொல்லமுடியும். முக்கியமாக இன்னொருவரின் நம்பரில் இருந்து அல்லது ஐபியில் இருந்து கருத்துச் சொல்லி அறிவுப்புச் செய்பவர்களை குழப்பவேண்டும்.

கும்மி FM:

இங்கே கும்மி மட்டுமே அடிக்கலாம். சகலவிதமான கும்மிகளும் பேசப்படும். பாடல்கள் கூட கும்மிப் பாடல்களாக இருந்தால் சிறப்பு.

குத்து FM:

தனியே குத்துப்பாடல்கள் மட்டும் ஒலிபரப்பப்ப‌டும். நிகழ்ச்சிகளில் வித்தியாசம் காட்டுவதற்க்கு ஸ்ரீகாந்த் தேவா குத்து, விஜய் ஆண்டனி குத்து, தேவா குத்து எனப் பல வகைப்பட்ட குத்துப் பாடல்கள் ஒலிபரப்பலாம். நேயர்கள் உணர்ச்சிவசப்பட்டு குத்தினால் அதற்க்கு நான் பொறுப்பல்ல. பாடல்களுக்கு பஞ்சமில்லை என்பதால் 24 மணி நேர வானொலியாக இயங்கலாம்.

பக்தி FM:

பக்த கோடிகளுக்கான வானொலி. சகல மதங்களின் பக்திப் பாடல்கள் மட்டும் ஒலிபரப்படும், ஆடியில் நேயர்களுக்கு இலவசமாக கூழ் ஊத்தப்படும். மார்கழியில் சிறப்பு பஜனை செய்யப்படும். ஆத்திகர்களுக்கும் மட்டுமே அனுமதி.

தேவதாஸ் FM:

காதல் தோல்வி பாடல்கள் மட்டுமே ஒலிபரப்பபடும். காதலில் தோல்வியுற்றவர்கள் தங்கள் கவலைகளை மறக்கச் செய்யும் வகையில் நிகழ்ச்சிகள் அமையவேண்டும். சிலவேளைகளில் தவறணை FM க்கும் இதற்க்கும் இடையில் ஒப்பந்தம் செய்து அங்கு ஒலிக்கும் சில பாடல்களை இங்கேயும் ஒலிக்கச் செய்யலாம்.

தவறணை FM ம் தேவதாஸ் FM ம் பெரும்பாலும் ஆண்களாம் மட்டுமே கேட்கப்படும்.

பபா FM: (பச்சிளம் பாலகர் FM)

பச்சிளம் பாலகர்களுக்கான வானொலி. 10வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கான பாடல்கள் ஒலிபரப்படும். பாடசாலையில் நடந்த சண்டைகள் சச்சரவுகள் பற்றி உரையாடலாம். இடையில் குழப்படியான பபா FM அறிவிப்பாளர்களால் ஒலிபரப்பு தடங்கல் ஏற்படலாம் காரணம் அவர்கள் ஓடிவிளையாடி வயர்களை அறுத்துபோடுவார்கள்..

DM FM : (Double Meaning FM)

வயது வந்தவர்களுக்கான வானொலி. தற்போதைய காலத்தில் பெரும்பாலான பாடல்கள் இரட்டை அர்த்த வசனத்தில் வருவதால் 24 மணி நேர சேவையாக நடத்தலாம். வெண்ணிற ஆடை மூர்த்தி, எஸ்.எஸ்.சந்திரன், எஸ்.ஜே. சூர்யா போன்றவர்கள் சிறப்பு அறிவிப்பாளர்கள்.

பல்டி FM :

ஹிஹிஹி பெயரிலையே யாருக்கு என்பது புரிந்திருக்கும். மருத்துவர் இராமதாஸ் சிறப்பு அறிவிப்பாளர்.

சொசெசூ FM:

சொந்த செலவில் சூனியம் . சொந்த செலவில் சூனியம் வைக்கும் என்னைப் போன்றவர்களுக்கான வானொலி. நீங்கள் சூனியம் வைத்து மாட்டிக்கொண்ட சமபவங்களை கலகலப்பாக பேசலாம்.

காதல் FM:

காதலிப்பவர்களுக்கு மட்டுமே அனுமதியுள்ள வானொலி. காதல் பாடல்கள் மட்டுமே ஒலிபரப்படும்.

சனி FM:

காதல் FM ற்க்கும் இதற்க்கு இடையில் ஒரு சின்னத் தொடர்புண்டு. காதல் FM கேட்பவர்களுக்கு கட்டாயம் இந்த FM பிடிக்கும்.

பின்நவீனத்துவ FM :

இதில் பின்நவீனத்துவ கருத்துகள் அடங்கிய பாடல்கள் நிகழ்ச்சிகள் நடைபெறும். இடையிடையே சாரு, ஞாநி, போன்றவர்களின் கருத்துக்கள் இடம் பெறும்.

கடுகதி FM :

மானாட மயிலாட சஞ்சீவ் போல் யாருக்கும் விளங்காமல் மிக வேகமாக பேசவேண்டும், பாடல்கள் கூட வேகமாக ரீமிக்ஸ் செய்து ஒலிபரப்பபடும்.

Zoo FM :

இந்த FM ல் மிருகங்கள் சம்பந்தப்பட்ட பாடல்கள் மட்டும் ஒலிபரப்பாகும். உதாரணமாக சிங்கம் ஒன்று புறப்பட்டதே, புலி வருது. அறிவிப்பு செய்பவர்களும் தங்கள் பெயர்களுக்கு முன்னால் ஒரு மிருகத்தின் அல்லது பறவையின் பெயரைச் சேர்க்க வேண்டும். காகா கிருஷ்ணன், கவரிமான் ரகுமான், எதிர்வீரசிங்கம்,

உங்களுக்குத் தெரிந்த ஏனைய நையாண்டியான பெயர்களைப் பின்னூட்டி விடுங்கள்.

அ முதல் ஃ வரை

தொடர்பதிவுகள் காதலிக்கு கொடுக்கும் முத்தம் போன்றது அடிக்கடி கொடுத்தால் கசந்துவிடும் என அனுபவஸ்தர்கள் சொன்னார்கள் ஆனாலும் இதில் ஏதோ கிக் இருப்பதால் அடிக்கடி பலர் எழுதுகின்றார்கள் என்னையும் மாட்டிவிடுகிறார்கள்.

மீண்டும் இன்னொரு தொடர்பதிவு. அழைத்த அன்புத் தம்பி சுபாங்கனுக்கு நன்றிகள்.

1. A – Available/Single? : சிங்கிளாக Available

2. B – Best friend? : ஒன்றா இரண்டா பலர் இருக்கின்றார்கள்

3. C – Cake or Pie?: இரண்டும் பிடிக்காது

4. D – Drink of choice? : பச்சைத் தண்ணி

5. E – Essential item you use every day? : செல்லிடப்பேசி

6. F – Favorite color? : நான் சிவப்பு மனிதன்

7. G – Gummy Bears Or Worms?: இரண்டும் இல்லை

8. H – Hometown? : கரவெட்டி

9. I – Indulgence? : இசை

10. J – January or February? February 14 : ஜனவரி தான் புதுவருடம், பொங்கல்

11. K – Kids & their names? : நானே ஒரு பச்சிளம் பாலகன்

12. L – Life is incomplete without? : Wife (Lol)

13. M – Marriage date? : ஆயுள் தண்டனை திகதி இன்னும் முடிவு செய்யவில்லை

14. N – Number of siblings? : யாதும் ஊரே யாவரும் கேளீர்

15. O – Oranges or Apples? : A for Apple

16. P – Phobias/Fears? : பாம்பு

17. Q – Quote for today? : Do it Now

18. R – Reason to smile? : சிரிப்பதனால் ஆயுள் அதிகரிக்கும்

19. S – Season? : மழைக்கால மேகம் ஒன்று மணி ஊஞ்சலாடியது

20. T – Tag 4 People?
ஆதிரை (ஆதிரை ரூபியுடன் குடும்பம் நடத்துவதால் அவருக்குப் பதிலாக அவரின் சகா மருதமூரான் இந்த தொடரைகொண்டு நடத்துவார்)
கீர்த்தி
நிர்ஷன்
கார்த்தி

21. U – Unknown fact about me? : அப்படி ஒன்றும் இல்லை

22. V – Vegetable you don't like? : கரட்டும் பீட்ரூட்டும்

23. W – Worst habit? : நகம் கடித்தல்

24. X – X-rays you've had? : என் இதயத்தை எக்ஸ்ரே பிடித்தால் அசின் இருப்பார்

25. Y – Your favorite food? : Naan with Panner Butter Masala

26. Z – Zodiac sign? : Capricorn

அன்புக்குரியவர்கள்: குடும்பத்தவர்கள்

ஆசைக்குரியவர்: என் தேவதைகளின் தேவதை

இலவசமாய் கிடைப்பது: அன்பும் நல்ல நட்பும்

ஈதலில் சிறந்தது: இரத்ததானம், கண்தானம்

உலகத்தில் பயப்படுவது: மனசாட்சிக்கு மட்டுமே

ஊமை கண்ட கனவு: உலக சமாதானம்

எப்போதும் உடனிருப்பது: தன்னம்பிக்கை ( சிலவேளைகளில் மிகவும் அதிகம்)

ஏன் இந்த பதிவு: அன்புத் தம்பி சுபாங்கனுக்காக‌

ஐஸ்வர்யத்தில் சிறந்தது:
கல்வி

ஒரு ரகசியம்: அதிரடிப் பதிவருக்கு விரைவில் டுமீல்டுமீல்டுமீல் மன்னிக்கவும் டும் டும் டும்

ஓசையில் பிடித்தது: இயற்கையான பறவைகளின் ஒலிகள்

ஔவை மொழி ஒன்று: இளமையில் கல்

(அ)ஃறிணையில் பிடித்தது: யானை

ஹாட் அண்ட் சவர் சூப் 11-11-09

ஜனாதிபதித் தேர்தல்

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட முன்னரே இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் முஸ்தீபுகள் தொடங்கிவிட்டன. தற்போதைய ஜனாதிபதியை எதிர்த்து தேர்தலில் போட்டி இடுபவர் யார் என்ற சர்ச்சை இன்னமும் தீர்ந்தபாடில்லை.

ஜக்கிய தேசிய கட்சியின் தலைவரோ வழக்கம் போல் அமைதியாக இருக்கின்றார். நிச்சயம் அந்தக் கட்சியின் சார்பில் அவர் போட்டியிடமாட்டார். காரணம் அவர் தோல்விகளின் நாயகன் என அறியப்பட்டவர். ஆகவே கட்சியின் சார்பில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவோ அல்லது முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவோ போட்டியிடக்கூடும்.

இதே வேளை அரசாங்க ஊடகங்களில் சரத் பொன்சேகாவிற்க்கு எதிரான பிரச்சாரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைமுகமாக‌ மேற்கொள்ளப்படுகின்றது. அத்துடன் மகா நாயக்க தேரர்கள் கூட சரத் பொன்சேகா தேர்தலில் போட்டியிடுவதை எதிர்க்கின்றார்கள்.

அதே நேரம் சரத் பொன்சேகாவின் ராஜினாமாவை தான் ஏற்கத் தயார் என்றும் அந்தக் கடிதத்திற்கான பதிலை அரை மணி நேரத்தில் அனுப்பிவைப்பேன் எனவும் கூறியுள்ளார். இன்னும் சில நாட்களில் இலங்கை அரசியல் வட்டாரங்களில் பல சுவாரசியங்கள் நடக்கும்.

இரண்டாவது பதிவர் சந்திப்பு

கடந்த சில நாட்களாக இரண்டாவது பதிவர் சந்திப்பின் முக்கியம் பல வலைப்பதிவர்களால் பிரேரிக்கப்பட்டுள்ளது. பதிவர் சந்திப்பானது 3 அல்லது 4 மாதத்திற்க்கு ஒருமுறை நடத்துவதுதான் சிறந்தது என எம்மால் முதலாவது சந்திப்பில் தீர்மானித்திருந்தோம். அடிக்கடி சந்தித்தால் சந்திப்பில் எந்த சுவாரசியமும் இருக்காது.

இரண்டாவது சந்திப்பை ஒழுங்குபடுத்த இன்னொரு மிகவும் துடிப்பான ஆர்வமுள்ள சிலர் முன் வந்திருக்கின்றார்கள். அவர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவிக்கும் அதேவேளை சிறந்த திட்டமிடல் இல்லையென்றால் சிறப்பாக செய்யமுடியாது என்பதையும் தெரிவிக்கின்றேன். காரணம் கடந்த முறை நாங்கள் திட்டமிடுவதற்கே பலமுறை சந்தித்திருந்ததோம். ஒரு கிழமைக்குள் திட்டுமிட்டு நடத்தினால் சந்திப்பு வெற்றியளிக்காது என்பதையும் அறிவீர்கள்.

இம்முறை பதிவர்களின் விபரங்களை பெற்றுக்கொள்ளும் கஸ்டம் உங்களுக்கு இல்லை. காரணம் ஏற்கனவே எம்மிடம் இவர்களின் விபரங்கள் எம்மிடம் இருப்பதால் அதனை வைத்து நீங்கள் அனைவரையும் தொடர்புகொள்ளமுடியும்.

வடிவேல் பாணியில் சொல்வது என்றால் "எதையும் பிளான் பண்ணிப் பண்ணனும் சரியோ".

பதிவர் சர்ச்சைகள்

சில காலங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் பரபரப்பையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்திய போலிப் பிரச்சனை தற்போது இலங்கைக்கு பரவியுள்ளது. நண்பர் சந்ருவின் வலையில் வரும் ஆக்கங்களை ஒருவர் தன்னுடைய வலையில் பதிவு செய்கின்றார். அதுமட்டுமல்ல சில நண்பர்களின் பெயர்களில் ஒருவரோ அல்லது ஒரு குழுவோ ல் வந்து போலிப் பின்னூட்டங்கள் இடுகின்றார்கள்.

ஒருவரோ ஒரு குழுவோ பல பெயர்களில் வந்து சர்ச்சையான பின்னூட்டங்களை இட்டு பதிவர்களை வம்புக்கு இழுக்கின்றார்கள். அதே நேரம் இப்படியானவர்களின் பின்னூட்டங்களையும் கருத்துகளையும் கருத்தில் எடுக்ககூடாது என்பது என் அனுபவத்தில் கண்ட உண்மை.

"துஷ்டனைக் கண்டால் தூர விலகு"

கிரிக்கெட்

அவுஸ்திரேலியா இந்திய அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டித் தொடரை ஆஸி 4க்கு 2 என்ற விதத்தில் வெற்றி பெற்றிருக்கின்றது. ஆஸி இந்தியாவிற்க்கு விஜயம் செய்தபோது சிறுவர்களின் அணி எனப் பலரால் கிண்டல் செய்யப்பட்டது காரணம் மூத்த அனுபவ வீரர்கள் காயம் காரணமாக விளையாடமுடியாத நிலையில் பல புதிய வீரர்களுடன் களமிறங்கிய ஆஸி இந்திய அணியைச் சுருட்டி எடுத்துவிட்டது.

இந்திய அணியின் சச்சின், டோணி, ரெய்னா மட்டும் சிறப்பாக ஆடுகின்றாகள். ஏனையவர்கள் ஏனோதானோ என ஆடியதால் வந்த வினை இது, அதிலும் குறிப்பாக சேவாக், கம்பீர், யுவராஜ் ஆஸியை அச்சுறுத்தவில்லை. இன்றைய இறுதிப்போட்டியை வெற்றி பெற்று ஆஸி 5 க்கும் 2 என்ற கணக்கில் தொடரை வெல்லுமா? இல்லை இந்தியாவிற்க்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா?

இந்தியாவின் அடுத்த போட்டித் தொடர் இலங்கை அணியுடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்தியாவி இந்த தோல்விகள் இந்திய அணியைப் பாதிக்குமா? இல்லை புதிய உத்வேகத்துடன் இலங்கையைச் சுருட்டுவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

பிற்குறிப்பு : இலங்கையினுடனான போட்டிக்கு ஸ்ரீசாந்த் மீள அழைக்கப்பட்டிருக்கின்றார், ஆகவே போட்டிகளில் நிச்சயமாக சர்ச்சைகள் ஏற்படும் வாய்ப்புண்டு.

அணுவளவும் பயமில்லை

அனுஹாசன் தொகுத்தளித்த அணுவளவும் பயமில்லை சீசன் 1 நிறைவு பெற்று தற்போது லஸ்மிராய் தொகுத்தளிக்க சீசன் 2 ஆரம்பமாகியுள்ளது விஜய் தொலைகாட்சியில். லஸ்மிராய்க்கு தமிழும் ஒழுங்காக வரவில்லை ஆங்கிலமும் வரவில்லை இரண்டு மொழிகளையும் கொல்கின்றார். ஒரு எபிசோட்டிற்க்கு இவரிற்க்கு பல ஆயிரம் என கழுகார் தெரிவித்திருந்தார். விஜய் தொலைக்காட்சி ஏன் ஒரு நிகழ்ச்சியை ஒழுங்காக் செய்யத் தெரியாதவர்களுக்கு பணம் செலவளிக்கின்றது என்பது புரியாத புதிர்,

அத்துடன் இதனை மிகவும் மெதுவான சலனப் படத்தின் மூலம் காட்டுவதால் பார்ப்பவர்களுக்கு வெறுக்கின்றது. புதிய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்துவதில் விஜய் தொலைக்காட்சிக்கு நிகர் அவர்களே அதே நேரம் அந்த நிகழ்ச்சியை பின்னர் சொதப்புவதும் அவர்கள் தான்.

லெனின், சுஜாதா, கமல், ஐஸ்வர்யா ராய்

நண்பர் சந்ரு என்னை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கின்றார். சந்ருவுக்கு நன்றிகள்

1 . அர‌சிய‌ல் த‌லைவ‌ர்

பிடித்தவர் : லெனின்பிடிக்காதவர் : மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள்

2 . எழுத்தாள‌ர்

பிடித்தவர் : சுஜாதாபிடிக்காதவர் : ரமணிசந்திரன்


3. க‌விஞ‌ர்

பிடித்தவர்: தபூசங்கர் (இவரின் காதல் கவிதைகள் ரொம்பவே பிடிக்கும்)பிடிக்காதவர் : மொழிக்கொலை செய்யும் கவிஞர்கள்

4. பாடகர்

பிடித்தவர் : கே.ஜே.ஜேசுதாஸ்பிடிக்காதவர் : உதித் நாராயணன் (ரகுமான் செய்த செய்கின்ற மாபெரும் தவறு இவரை அடிக்கடி பாடவைப்பது )


5. பாடகி

பிடித்தவர் : சித்ராபிடிக்காதவர் : ஸ்ரீலேகா, மாதங்கி

6. இய‌க்குன‌ர்

பிடித்தவர் : ஷங்கர்பிடிக்காதவர் : அப்படி யாரும் இல்லை


7. நடிகர்

பிடித்தவர் : கமல், கமல், கமல் (அனைவருக்கும் தெரியுமே)பிடிக்காதவர் : பெரும்பாலும் எல்லா நடிகரையும் பிடிக்கும்


8. நடிகை

பிடித்தவர் : ஐஸ்வர்யா ராய்பிடிக்காதவர் : த்ரிஷா

9. விளையாட்டு

பிடித்தது : Eat Cricket, Drink Cricket, Sleep Cricketபிடிக்காதது : WWF

10. பேச்சாளர்

பிடித்தவர் : கம்பவாரிதி இ.ஜெயராஜ்

பிடிக்காதவர்: பேச வந்த விடயத்தை விட்டுவிட்டு எதையோ பேசுபவர்கள்


ஏற்கனவே சில தொடர்விளையாட்டுகளில் சிலரை அழைத்து இன்னும் அவர்களால் அந்த விளையாட்டு விளையாடப்படாததால் நான் யாரையும் அழைக்க விரும்பவில்லை.

நட்பு

கூடிப் பழகுதலும், அடிக்கடி சந்தித்தலும், ஒருவரையொருவர் விசாரித்தலும் மட்டுமே நட்பாகிவிடாது. கூடிப் பழகாவிட்டாலும், மனதால், உணர்ச்சியால் ஒன்றுபடுவதே உண்மையான நட்பு என்கின்றார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.மனித வாழ்க்கையில் காதலைவிட சிறந்தது எதுவென்றால் அம்மாவின் அன்பிற்க்கு அடுத்ததாக சிலவேளைகளில் அம்மாவின் அன்பைவிட சிறந்தது நட்பாகும்.

பாடசாலைக் காலத்தில் கிடைக்கும் நட்பு மிகவும் அலாதியானது. வாழ்க்கையின் எந்தக் கஸ்டங்களையும் அனுபவிக்காமல் அல்லது புரியாமல் அந்த பச்சிளம் வயதில் ஒருவருடன் ஒருவர் செல்லமாக சண்டைப்படுதல், கோபித்துக்கொண்டு சில நாட்கள் இருந்தாலும் அந்திம காலம் வரை பலருக்கு பாடசாலை நட்பே நீடித்திருக்கின்றது.என் பாடசாலை நண்பர்கள் பலர் இன்றைக்கு புலம் பெயர்ந்து வெவ்வேறு நாடுகளில் வசித்தாலும் தொலைபேசி மூலமும், இணைய அரட்டைகள் மூலமும் எங்கள் நட்புத் தொடர்கின்றது. நாம் பெரும்பாலும் எங்கள் கல்லூரி வீதி இனிய வாழ்க்கையை மீட்டிப்பார்ப்போம்.

இன்னொரு நட்பு வட்டம் ஊரில் உள்ள நண்பர்கள் இவர்களின் நட்பிற்க்கு பெரும்பாலும் வயது எல்லை இல்லை. என்னுடய வயதுப் பொடியள், என்னைவிட சற்று வயது கூடியவர்கள், குறைந்தவர்கள் என இந்த வட்டம் கொஞ்சம் பெரிதாகவே இருக்கும். ஊரில் நடக்கும் நல்லது, கெட்டதுகள், திருவிழாக்கள், கிரிக்கெட், காற்பந்து என இந்த வட்டத்துடன் அடித்த லூட்டிகள் பசுமையானவை. ஊரை விட்டு வெளியேறிய பின்னர் இவர்களின் தொடர்புகள் பெரிதாக இல்லாவிட்டாலும் மீண்டும் ஊரிற்குச் செல்லும் காலங்களில் பழையபடி சில நாட்கள் கும்மாளம் தான்.அண்மைக் காலமாக இணையத்தினூடான நட்புகள் அதிகரித்துவந்துள்ளன. இதில் சிலரின் நட்புகள் நேரடியாகவும் சிலரின் நட்புகள் முகமறியாமலும் இருந்தாலும் நட்பு பாராட்டுவதில் எந்தக் குறைகளும் இல்லை.

பெண்களுடனான நட்பானது கொஞ்சம் வித்தியாசமானது. இது கத்தியில் நடப்பது போல் ஆபத்தானது. ஆனாலும் இலாவகமாக இந்த நட்பை நீடிப்பவர்கள் பலர் இருக்கின்றார்கள்.

வாழ்க்கையில் கஸ்டமான காலத்தில் கைகொடுப்பது பெரும்பாலும் நட்புத்தான். என்றைக்கும் நல்ல நண்பர்கள் கிடைத்தால் அதனைவிட பெரிய இன்பம் வேறில்லை.

வலைப்பதிய வந்தபின்னர் எல்லைகளற்ற நட்புகள் பல கிடைத்தன. அதிலும் என்னுடைய உளறல்களை வாசிக்க 99 நண்பர்கள் பிந்தொடர்பவர்களாக இருப்பது மிகவும் சந்தோஷமான விடயம். அந்த நண்பர்கள் உட்பட அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய நன்றிகள்.

புணர்ச்சி பழகுதல் வேண்டா வுணர்ச்சிதா
ந‌ட்பாங் கிழமை தரும்.

மனிதநேயத்திற்க்கு பிறந்தநாள்"பிரார்த்தனைக்காக முன்வரும் இரண்டு கைகளை விடவும், உதவுவதற்காக முன்வரும் ஒரு கை மிகவும் மதிப்பு வாய்ந்தது "
- கமல்ஹாசர்


இன்று பிறந்தநாள் காணும் மனிதநேயன் கமல்ஹாசன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

கமலஹாசனே கலைகளின் நேசனே
ரத்தத்தில் சிலவகை A+ve, B+ve,O+ve
உனக்கு மட்டும்தான் C+ve..Cinema +ve

எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள்
உனக்கு மட்டும் நடிகர்களும் ரசிகர்களாக,

நீ பூவாக நடித்தால் வேர்களை பார்த்தபின்தான் வாசனை காட்டுவாய்
நீ தீயாக நடித்தால் வெந்து பார்த்தபின்தான் வாழ்ந்துகாட்டுவாய்

உன் இதழ்கள் முத்த பெட்டகத்தை திறக்கும் சாவிகள்
காதல் இளவரசன,எத்தனையோ நடிகர்கள் காதலித்தார்கள்,
நீ முத்தம் கொடுத்தபோதுதான் விழித்திரை வெள்ளிதிறையானது

நீ குள்ளமாக நடித்தாய், தமிழ் சினிமா உயரமானது,

நீ கிழவனாக நடித்தாய், தமிழ் சினிமா இளமையனாது,
நீ ரூபாய் நோட்டில் கம்பி, பெண்கள் பிரிவில் M.P,

நீ ஒரு கடல், உனக்குள் முக்குளிக்கவரும் ரசிகனும்
முத்தாகவே மாறிவிடுகிறான்,
எல்லா கடலுக்கும் கரையிருக்கும், நீ கரையிலாத கடல்,
அதனால்தான் காலம் உனக்கு கொடுத்தது நரையிலாத உடல். நீ ஒரு மலை,

நாயகனில் நீ அழுதாய் அழுகைக்கு இலக்கணம் பிறந்தது.

உலகம் முழுக்க விசாரித்து பார்தேன் உடல் தானம் செய்த முதல் நடிகன் நீதான்.
இன்றும் திரையாரங்குகளில் கலக்கபோவது யாரு?வேறு யாரு, நீ தான்.

நீ வாங்கிய விருதுகளை அடுக்கினால்
இமயமலை குள்ளமாகிவிடும்,

ஆழ்வார்பேட்டை ஆண்டவா,
ஆஸ்கார் விருது வாங்கிவா.

-- நா.முத்துக்குமார்--

கர்னாடக சங்கீதத்தில் புறக்கணிக்கப்படும் தமிழிசை

விஜய் தொலைக்காட்சியின் "தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு சுட்டிகளில்" சிறுமி ஒருவர் கடந்தவாரம் கர்நாடக சங்கீதத்தில் தமிழ் ஏன் புறக்கணிக்கப்படுகின்றது என மிகவும் காட்டமாகவும் காத்திரமாகவும் உறையாற்றினார்.

எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்த தமிழிசையும் தமிழ்ப் பண்களும் இன்றைக்கு முன்னூறு ஆண்டுகளே ஆன கர்நாடக சங்கீதத்தால் மெல்ல மெல்ல திட்டமிட்டபடி அழிக்கப்படுகின்றது.தமிழ்ப் பண்களான கொல்லி, புறநீர்மை, நாட்டை, குறிஞ்சி என அழகிய தமிழ்ப் பெயர்கள் இன்றைக்கோ வாயினுள் நுழையாத வடமொழிப் பெயர்களான மாயாமாளவகௌளை, ஹரிகாம்போஜி, ஷட்விதமார்க்கிணி, கரகரப்ரியா என அழைக்கின்றார்கள்.

சிலப்பதிகாரம், பரிபாடல், தேவார திருமுறைகள், பாரதியார் பாடல், பாரதிதாசன் பாடல்கள் என பல்லாயிரக்கணக்கான பாடல்கள் தமிழில் இருக்க ஏன் மொழி புரியாத தெலுங்குக் கீர்த்தனைகளை பாடுகின்றார்கள். தமிழ்ப் பாடல்களைத் துக்கடா என அழைத்து கடைசியில் ஒரு நிமிடங்கள் மட்டும் பாடுவார்கள். எம் வீட்டில் அதிகமான உணவுகளை வைத்துக்கொண்டு ஏன் பிச்சை எடுக்கவேண்டும்?

பல சங்கீதமேடைகளில் தெலுங்குகீர்த்தனைகளைத்தவிர வேறு ஏதும் பாடுவதில்லை. அப்படிப் பாடினாலும் அவை துக்கடாக்களாத்தன் இருக்குமே தவிர ஒரு முழுமையான கீர்த்தனையாய் இராது. இந்த இசை ஜாம்பவாங்கள் அனைவரும் ஏதோ கர்னாடக சங்கீதம் தெலுங்கில் இருந்து பிறந்தது என எண்ணிக்கொண்டிரிக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல தமிழில் தான் அது முதலில் உருவானது பின்னர் கால ஓட்டத்தில் அது தெலுங்கால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. சிலர் சொல்லுகிறார்கள் தமிழில் போதிய பாடல்கள் இல்லையென்று, ஐயா மேதாவிகளே நமது முண்டாசுக் கவிஞனின் பாடல்களே பல தலைமுறைக்கு போதும் அதனை விட நமது தேவாரதிருவாசகங்கள் பல நூறு தலைமுறைகளுக்கு போதும் பின் ஏன் நீங்கள் தமிழில் பாடாமல் தெரியாத மொழியில் பாடுகிறீர்கள்.

எனக்கு தெரிந்து ஒருமுறை கொழும்பில் சீர்காழி சிவசிதம்பரமும் பாரதியாரின் கொள்ளுப்பேரன் ராஜ்குமார் பாரதியும் மட்டும் முழுக்க முழுக்க தமிழில் பாடி சபையைமெய்மறக்கசெய்தார்கள்.கம்பன் விழா இசை வேள்வியில் திரு,ராஜ்குமார் பாரதி பாடினார்.

சீர்காழி சிவசிதம்பரம் வேறு ஒரு நிகழ்ச்சியில் பாடினார். இதுவரை கம்பன் கழகம்( கன்னித் தமிழ் வளர்ப்பவர்கள்) ஒரு இசை வேள்விக்கேணும் சீர்காழி சிவசிதம்பரத்தை அழைக்கவில்லை. ராஜ்குமார் பார‌தியும் ஒரே ஒரு தடவை மட்டும்தான்.

ஒரு முறை கம்பன் கழக இசைவேள்வியில் பிரபல பாடகி பம்பாய் ஜெயஸ்ரீ ஒரே இறுதியில் ஒரே ஒரு தமிழ்ப் பாடல் மட்டும் பாடி ஏனையவற்றை தெலுங்கில் பாடிச் சாதனை செய்தார்.

தமிழக இசைக் கலைஞர்கள் தான் தெலுங்கிற்க்கு மகுடம் சூட்டுகின்றார்கள் என்றால் நம்மவர்களும் தெலுங்கு மோகத்தில் மயங்கிவிட்டார்கள். அவர்களிடம் தமிழ்ப் பாடல் ஏன் பாடுவதில்லை எனக் கேட்டால் தமிழ்ப் பாடல்கள் பாடினால் தங்கள் திறமை தெரியவராதாம்!!

இசை நிகழ்ச்சிகளை நடத்தும் அமைப்புகளின் பெயர்கள் கூட தமிழில் காண்பது அரிது. இசைக்கு மொழி இல்லை தான் ஆனால் தமிழர்களிடம் தமிழ்ப் பாடல்கள் அதிலும் பல நூற்றாண்டு தொன்மையான செம்மொழித் தமிழில் எத்தனையோ பாடல்கள் இருக்கும்போது அந்நிய மொழியில் ஏன் பாடவேண்டும்?

எமது முத்தமிழை ஒழிக்க பலர் பல்வேறு வடிவங்களில் அலைகிறார்கள் என்னை பொறுத்தவரை இவர்களிடமும் இருந்து எம் மொழியை காக்கவேண்டிய அவசியம் தேவை. சும்மா சினிமா படங்களின் தலைப்பை மாத்தசொல்லி போராடும் தமிழ்குடிதாங்கிகள் இதைப்பற்றி கவலைப்பட்டதாய் தெரியவில்லை. சில வேளை இது மேல்தட்டு மேல்ஜாதி மக்களின் துறை என நினைத்து சும்மா இருக்கிறார்களா?

இது பற்றியும் சற்று சிந்திபோம்.

இருக்கிறத்தில் நின்ற கதை

கடந்த திங்கட்கிழமை இருக்கிறம் சஞ்சிகை அச்சு ஊடக இலத்திரனியல் ஊடக மற்றும் வலைப்பதிவர்களைச் ஒன்றுகூட‌ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார்கள். அந்த ஒன்று கூடலும் அங்கே நடந்தவையும் நேற்று முதல் இலங்கைப் பதிவர்களிடையே ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நான் கடந்த வார எனது ஹாட் அண்ட் சவர் சூப்பில் மிகவும் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தேன் இது வலைப்பதிவர் சந்திப்பு அல்ல என. ஆனால் ஒரு சிலரைத் தவிர ஏனையோர் இதனை ஒரு வலைப்பதிவர் சந்திப்பாகவும் அதிலும் ஒரு படி மேல் சீசன் 2 எனவும் எடுத்து தவறாக விளங்கி சண்டைப்படுகின்றார்கள். சென்ற வாரம் நான் எழுதியது அப்படியே உங்கள் பார்வைக்காக மீண்டும்.


இருக்கிறம் ஒன்று கூடல்

இருக்கிறம் சஞ்சிகை எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கை வலைப்பதிவர்கள், அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் ஊடான ஒன்றுகூடல் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளமை தெரிந்ததே. சிலர் இந்த ஒன்றுகூடலை வலைப்பதிவர் சந்திப்பு என தவறாக புரிந்துகொண்டுள்ளனர். வலைப்பதிவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்தாலும் அவர்கள் தங்களுக்குள் கலந்துரையாடினாலும் பொதுவான விவாதங்களோ கலந்துரையாடல்களோ நடக்கும் சாத்தியங்கள் இல்லையென்றே இருக்கிறம் நிர்வாகம் தெரிவித்திருக்கின்றது.

இந்த ஒன்றுகூடலானது பாடசாலை, கல்லூரி நாட்கள் ஒன்றுகூடல் போல் சுவாரசியமாகவே இருக்கப்போகின்றது. சென்ற சந்திப்பில் பலர் எமக்குள் சந்தித்து பேசமுடியவில்லை எனக் குறைப்பட்டார்கள். ஆனால் இந்தச் சந்திப்பில் உங்கள் நண்பர்களை நீங்கள் சந்தித்து அளவளாவ முடியும். அத்துடன் சில ஆச்ச‌ரியங்களும் காத்திருக்கின்றன என இருக்கிறம் நிர்வாகிகள் அறிவித்திருக்கின்றார்கள்.

ஹாட் அண்ட் சவர் சூப் 28-10-09

வலைப்பதிவர்களின் இந்த தவறான எண்ணக்கருத்தால் ஏற்கனவே வலைப்பதிவர்களின் மேல் குறைபிடிக்க அலையும் கூட்டத்திற்க்கு பெரும் வாய்ப்பாக போய் சிலர் தங்கள் காழ்ப்புணர்சிகளை எம்மேல் காட்டத் தொடங்கியிருக்கின்றார்கள். என்ன கொடும சார் இது!!!!!! எய்தவர்கள் இருக்க ஏன் அம்புகளை நோகின்றீர்கள்...

இந்தக் காழ்ப்புணர்ச்சிகளின் விமர்சனத்தை பெரிதாக எடுக்காமல் அடுத்த சந்திப்பை மீண்டும் வெற்றிகரமாக நடத்தி முடிப்பது அடுத்த சந்திப்பின் பொறுப்பாளர்களிலையே தங்கியுள்ளது. முதல் சந்திப்பை ஒழுங்கமைத்த குழுவினர் சார்பில் உங்களுக்கு சகலவிதமான உதவிகளும் செய்யப்படும். அடுத்த சந்திப்பை ஆக்கபூர்வமாக ஏற்பாடு செய்வதற்க்கு முன் வந்துள்ள நண்பர்களான யோ வாய்ஸ் யோகா, சிந்தனைச் சிறகினிலே கீர்த்தி, சுபாங்கன், சந்ரு, கனக‌கோபி, மன்னார் அமுதன் போன்றவர்களுக்கு வாழ்த்துக்கள். உங்களுடன் கை கோர்க்க பலர் தயாராக இருக்கின்றார்கள்.

இந்த சந்திப்பு பற்றிய என் கருத்துகள் விரைவில்....