Showing posts with label திருவிழா. Show all posts
Showing posts with label திருவிழா. Show all posts

கோஷ்டி பார்த்த கதை

எங்கட ஊரிலை திருவிழா தொடங்கினால் கடவுளைக் கும்பிடுகிறமோ இல்லையோ ஐந்தாம் திருவிழாவுக்கு ஆற்றை கோஷ்டி, இந்தமுறையும் எட்டாம் திருவிழா எழும்புமோ? என்ற கேள்விகள் இளைஞர்கள் மத்தியில் எழும்.

கோஷ்டி என்றால் இசைக்குழு. இந்தப்பெயர் எப்படி வந்தது என்று தெரியாது. எங்கட காலத்திலை யாழில் பிரபலமான கோஷ்டிகள் ராஜன், சாந்தன், அருணா, யாழோசை கண்ணன், சப்தஸ்வரா போன்றவை. முன்னைய காலத்தில் கண்ணன் கோஷ்டி என்ற எழுச்சி இசையமைப்பாளர் கண்ணன் அவர்களின் குழு பிரபலம்.

பொதுவாக இந்த ஆடி மாதத்தில் எங்கட பக்கத்திலை மூன்று கோயில்களில் திருவிழா நடக்கும் அல்வாய் முத்துமாரி அம்மன், வதிரி பூவற்கரைப் பிள்ளையார், மற்றது கரணவாய் மூத்தவிநாயகர் கோயில். அதனாலை எங்கட பாடு ஒரே கொண்டாட்டம் தான்.

கோயில் திருவிழா தொடங்கினால் கோஷ்டி பிடிப்பது என்பது சில திருவிழாக்காரர்களுக்கு எழுதப்படாத சட்டம். இந்த இந்த திருவிழாக்களுக்கு கட்டாயம் கோஷ்டி நடக்கும் என அடித்துச் சொல்லலாம். பகலில் திருவிழா என்று இறைவனை வணங்கி களைத்தவர்களுக்கு ஒரு பொழுதுபோக்காக ஆரம்பித்த நிகழ்வாக இதனை நான் கருதுகின்றேன். சில ஏன் இந்த டாம்பீகச் செலவுகள் என்பார்கள். ஆனாலும் இதனால் இன்னொரு சாராருக்கு வருமானம் கிடைக்கின்றது என்ற உண்மையையும் மறுக்ககூடாது.

ஆனாலும் கோஷ்டியை மட்டும் தனித்து நடத்தமாட்டார்கள். இரவுத் திருவிழா முடிந்தபின்னர் ஒரு 8 மணியளவில் சமயச் சொற்பொழிவு நடைபெறும். கம்பன் கழக பேச்சாளர்கள் அவர்கள் இல்லையென்றால் ஊரில் உள்ள சமய அறிவு உள்ள பெரிசுகளை வைத்து இதனை நடத்துவார்கள். ஒரு சில குஞ்சுகுருமன்களும், பெரியவர்களும் பொறுமையாக இருந்து கேட்பார்கள். அதுமுடிய நாதஸ்வர தவில் கச்சேரி. பஞ்சாபிகேசன் குழுவினர், தவில் மேதை தட்சணாமூர்த்தியின் பிள்ளைகளான உதயசங்கர், ஞானசங்கர் குழுவினர், இணுவில் சின்னராசா குழுவினர் எனப் பலர் இதனை நிகழ்த்துவார்கள். சில இடங்களில் இரண்டு மூன்று கூட்டுச் சேர்ந்து வாசிப்பார்கள். ஒருமுறை மூத்த விநாயகர் கோவில் எட்டாம் திருவிழாவுக்கு பத்துக்கூட்டு மேளம், குழல். முன்னுக்கு இருந்து கேட்டவர்களுக்கு காது கிழிந்துருக்கும். எப்படியும் இவர்கள் ஒரு இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்கள் வாசிப்பார்கள்.

அதற்க்குப் பிறகு சிலவேளை பட்டிமன்றம் அல்லது வில்லுப்பாட்டு நடக்கும். பட்டிமன்றம் கம்பன் கழகக் குழுக்கள், கம்பன் கழகத்துக்கு நேரமில்லையென்றால் உள்ளூர் பேச்சாளர்கள். உள்ளூர் பேச்சாளர்களில் நவம் மாஸ்டர், நடராசா மாஸ்டர் இருவரும் சரியான பேமஸ். என்னவொன்று இருவரும் எதிர் எதிர் அணியில் இருந்தால் சிலவேளை பெரிய சண்டைகளே வரும். நானும் ஒரு சில மேடைகள் ஏறினேன் ஆனால் பெரும்பாலும் இவர்களது தலைப்புகள் பாரதம், இராமாயணம் என இருப்பதால் மெல்லக்கழண்டுகொண்டுவிட்டேன்.

வில்லுப்பாட்டுக்கு நல்லூர் ஸ்ரீதேவியும், சின்னமணி குழுவினரும் மிகவும் பிரபலம், அதிலும் ஸ்ரீதேவி அவர்கள் சத்தியவான் சாவித்திரி வில்லுப்பாட்டில் நடத்தும் போது பெண் குரலில் எல்லாம் கதைத்துப் பாடி நல்ல கைதட்டுப் பெறுவார்.

இதெல்லாம் முடிய கோஷ்டி தொடங்கும். கோஷ்டிகாரர்கள் தங்களை ஆயத்தப்படுத்த எப்படியும் ஒரு மணித்தியாலம் தேவைப்படும் அந்த இடையிலை சிலவேளைகளில் நல்ல நித்திரை கொண்டு எழும்புகிறது வழக்கம். எப்படியும் நித்திரையாகி இருக்கிறவர்களை மணிக்குரல் ஷண் அவர்களின் கணீர் குரல் எழுப்பிவிடும். ராஜன் கோஷ்டிக்கு அவர் தான் அறிவிப்பாளர்.

ஒவ்வொரு வாத்தியமாக அறிமுகப்படுத்திவிட்டு கடைசியில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க உங்கள் மணிக்குரல் ஷண் என்பார் உடனே ராஜனின் பிரதான கீபோர்ட்டுடன் ஒரு ரம்ஸ் இசை வரும் அது அவர்களின் ரேட்மார்க் மியூசிக்.

எந்தக்கோயில் என்டாலும் முதலில் பிள்ளையார் பாட்டுத்தான் பெரும்பாலும் "பிள்ளையார் சுழிபோட்டு" என்ற பாடலுடனேயே ஆரம்ப்பிபார்கள். பிறகு முருகன் கோயில் என்றால் முருகன் பாடல், அம்மன் கோயில் என்றால் அம்மன் பாடல் என ஒரு சில பக்திப்பாடல்கள் பாடுவார்கள். பின்னர் தாயக எழுச்சிப்பாடல்கள் பாடப்படும். அதன் பின்னர் சினிமாப்பாடல்கள் பாடுவார்கள். ஸ்டெனிஸ் சிவானந்தன், பார்வதி சிவபாதம் போன்றவர்கள் பிரபல பாடகர்கள். பலரின் பெயர்கள் ஞாபகம் இல்லை.

எப்படியும் கோஷ்டி முடிய விடிஞ்சுபோம். பிறகு அவசரமாக குளிச்சிட்டு பள்ளிக்கு போய் நித்திரை கொள்ளவேண்டியதுதான். சிலவேளை அடுத்த நாள் இன்னொரு கோஷ்டி இருக்கும். எப்படியும் பத்து நாள் திருவிழாவில் ஒரு ஐந்து முறையாவது இசை நிகழ்ச்சிகள் நடக்கும்.

சில இடங்களில் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று கோஷ்டி நட‌க்கும். கோயில் வடக்கு வீதியில் ராஜன் கோஷ்டி, தெற்கு வீதியில் சாந்தன் கோஷ்டி. அங்காலை கொஞ்சம் தள்ளி ரோட்டிலை அருணா என விளாசித்தள்ளுவார்கள்.

திருவிழா பார்க்கபோய் கோயில் மண்ணிலையோ அல்லது ரோட்டிலையோ பாயை விரிச்சுப்போட்டு நித்திரை கொள்ளுகின்ற சுகம் எந்த பைவ் ஸ்டார் ஹோட்டலிலையும் கிடைக்காது.

திருவிழாப்பார்க்கும் போது கச்சான்(மணிலாக் கொட்டை), சோளம், மஞ்சள் கடலை, கெளபி கரம் சுண்டல் சாப்பிட்டுக்கொண்டு பார்க்கிறதும், லிங்கம் ஐஸ்கிறீம் வானில் சாமத்திலை அல்லது விடியப்புறத்திலை கோன் வாங்கிச் சாப்பிடுகிறதும் ஒரு சுகானுபவங்கள், மீண்டும் கிடைக்குமா என்பது சந்தேகம்.

கடைசியாக நான் 2003ல் கோஷ்டி பார்த்தது இன்னும் இல்லை.

பின்குறிப்பு : ஆடி பிறந்தாளே ஊர்களில் திருவிழா தொடங்கிவிடும். திருவிழாவுக்கு போகமுடியாமல் இருப்பவர்களுக்கு பழைய நினைவுகளைக் கிளறவே ஈழத்துமுற்றத்தில் எழுதிய இந்தப் பதிவை மீண்டும் தந்திருக்கின்றேன்,

*** வல்லிபுர ஆழ்வாரும் வங்காளவிரிகுடாவும். ***

வடமராட்சியில் துன்னாலை என்னும் இடத்தில் இருக்கும் வல்லிபுர ஆழ்வார் என்ற விஷ்ணுகோவில் இலங்கை மக்கள் அனைவரிடமும் மிகவும் பிரபலம். சிவபூமியான இலங்கையில் மிகவும் குறைந்தளவான விஷ்ணு ஆலயங்களே இருக்கின்றன. வடபகுதியில் வல்லிபுர ஆழ்வாரும், பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோவிலும் மட்டும் விஷ்ணு ஆலயங்களாக விளங்குகின்றன. வல்லிபுர ஆழ்வார்கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் என பிரசித்தமானது. அதிலும் கடல்தீர்த்தம் யாழ்ப்பாணத்தின் கலாச்சாரங்களில் ஒன்றாகவே விளங்குகின்றது. புரட்டாதி பூரணைதினத்தில் வங்காளவிரிகுடாவில் சக்கரத்தாழ்வார், ஆஞ்சனேயர் சகிதம் தீர்த்தமாட மாலையில் பக்தர்கள் புடைசூழ‌ செல்வார். காலையிலிருந்தே வடமராட்சியின் பல பாகத்திலிருந்தும்,தென்மராட்சி, வலிகாமம் போன்ற எனைய யாழ்குடாநாட்டின் பகுதிகளிலிருந்தும் மக்கள் வெள்ளம் துன்னாலையை நோக்கி வந்துகொண்டே இருப்பார்கள். பல வீதிகளில் மக்களின் தாகம் தீர்க்க தண்ணீர்ப் பந்தல்கள் அமைத்திருப்பார்கள். எண்பதுகளில் மாட்டுவண்டில்களில் பலர் வருகைதருவார்கள். பின்னர் காலமாற்றத்தில் ஏனைய வாகனங்களிலும் சிலர் கால்நடையாகவும் வருவார்கள்.
வல்லிபுர ஆழ்வார் கோவில் இராஜகோபுரம் 2002ல் எனது புகைப்படக் கருவியில் சுட்டது. இராஜ கோபுரத்தில் மஹாத்மா காந்தியின் சிலை இருக்கின்றது.


கோவிலிருந்து ஏறக்குறைய 3 கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கும் கடலுக்கு தீர்த்தமாடச்செல்லவேண்டும். முன்னர் மூன்று மணற்குன்றுகளை கடந்து செல்லவேண்டும், தற்போது மணல் அகழ்வினால் ஒரே ஒரு குன்றுமாத்திரம் இருக்கின்றது. பருத்திதுறை துறைமுகம் வரை முருகைக்கல் பாறையினால் அமைந்த கடற்கரைப்பகுதி(ஆண்கடல் என்பார்கள்). பருத்தித்துறை முனைப்பகுதியில் இருந்து மணல்சார்ந்த நெய்தல் கடலாக அழகாகவும் மிகவும் ஆபத்தாகவும் காட்சிதருகின்றது.காங்கேசந்துறையிலிருந்து பருத்தித்துறை துறைமுகம் வரையான கடல் பாக்குநீரிணை ஆழம் குறைந்தகடல். அதன்பின்னர் ஆழம் கூடிய வங்காள விரிகுடா ஆரம்பமாகின்றது. இதனாலோ என்னவோ இலங்கையின் கிழக்குப்பகுதி கடற்கரை பெரும்பாலும் மணல் சார்ந்த கடலாகவே இருக்கின்றது. வருடத்திற்க்கு ஒருதடவைதான் கடலுக்கு தீர்த்தமாடச் செல்லும் பாதை பாவிக்கபடும். போகும் வழியில் கடற்தாவரங்களான இராவணன் மீசை போன்றவை கிடைக்கும். சிறியவயதில் சிப்பி, சோகியுடன் இராவணன் மீசையையும் பொறுக்கியது ஞாபகம் வருகின்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் சாரணர்கள், முதலுதவி அணியினர் எனப் பலரின் உதவிகளை ஆலய நிர்வாகம் ஏற்படுத்துகின்றது. பாடசாலை சாரணர் அணியில் இருந்தபடியால் சில தடவைகள் கடமையில் ஈடுபடும் சந்தர்ப்பம் கிடைத்தது. மாலைவேளையிலும் பூரணை நாளிலும் தீர்த்தம் என்பதால் அந்த நேரத்தில் கடல் மிகவும் கொந்தளிப்பாகவே இருக்கும் பெரிய அலைகள் உருவாகும். ஆனால் இதுவரை யாரும் அலையில் அடித்துச் சென்றதாக தெரியவரவில்லை. சிறுவர்கள் முதியவர்கள் எனப் பலரும் கடலில் குளிப்பார்கள். தீர்த்தம் ஆடமுன்னர் அந்தப் பகுதியில் குளிப்பது தடை செய்யப்பட்டிருக்கும். ஆஞ்சனேயரை கடலில் ஒரு தடவை போட்டு எடுத்ததன் பின்னர் குளிக்க அனுமதி அளிக்கப்படும். பின்னர் சந்திரன் உதயமாகும் போது மக்கள் கோவிலடிக்கு திரும்புவார்கள். தொண்ணூறுகளுக்கு முன்னர் கிழக்கிழங்கை, தென்னிலங்கை என இலங்கையின் பல பகுதியிலிருந்தும் மக்கள் வருவார்கள். தற்போது மிகவும் குறைந்துவிட்டதாக தகவல்.

நாங்கள் பதின்மவயதில்(டீன் ஏஜ்) இருந்த காலத்தில் தீர்த்தத்திற்க்கு போவதென்பது ஒரு சுற்றுலாபோல‌. வழியில் யூகேயில்(உபயகதிர்காமம்)சில நண்பர்களைச் சந்திப்போம் அங்கேயுள்ள தண்ணீர்ப் பந்தலில் மோர், சர்க்கரைத் தண்ணீர், பின்னாளில் ஜூஸ் என குடிப்பது வழக்கம். பின்னர் ஆனைவிழுந்தான் சந்தியிலும் தண்ணீர்ப் பந்தலில் பொழுதுபோக்கிவிட்டுத்தான் கோவிலுக்குச் செல்வது. ஆனைவிழுந்தானில் பேய் இருக்கின்றது என பரவலாக ஒரு கதை அடிபட்டதால் இரவு வேளைகளில் அந்தப் பாதையை பாவிப்பதில்லை. இந்த அனுபவம் பெரும்பாலான வடபகுதி மக்களுக்கு கிடைத்திருக்கும். வலையுலகிலும் சிலருக்கு கிடைத்திருக்கும் என நம்புகின்றேன் குறிப்பாக டொக்டர் முருகானந்தன், சந்திரவதனா அக்கா, தாசன்( நீண்ட நாட்களாக காணவில்லை) போன்றவர்கள் நிச்சயம் இந்த அனுபவம் உடையவர்களாக இருப்பார்கள். இதனை எழுதச் சொன்ன லீனா அண்ணன் அவர்களுக்கு நன்றிகள்.