Showing posts with label ஒன்றுகூடல். Show all posts
Showing posts with label ஒன்றுகூடல். Show all posts

நாம் சாதித்துவிட்டோம்

எம் நீண்ட நாள் கனவு இன்று நனவாகிவிட்டது. இலங்கை வலைப்பதிவர்களான நாம் இன்றைய ஒன்றுகூடலை வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்டோம்.



கிட்டத்தட்ட 80 வலைப்பதிவர்கள் இன்று காலை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் கூடி, ஒவ்வொருவரையொருவர் அறிமுகம் செய்து பல்வேறுபட்ட விடயங்களை விவாதித்து, மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம்.

இதனைப் பற்றிய நீண்ட பதிவினை பின்னர் எழுதுகின்றேன். ஒன்றுகூடலில் கலந்துகொண்டவர்கள் ஒவ்வொருவரும் எழுதுவார்கள். அதற்க்கு முன்னர் ஒரு சின்ன நுனிப்புல் மேய்தல்.



காலை சரியாக 9 மணி 15 நிமிடமளவில் புல்லட்டின் அறிமுகவுரையுடன் ஆரம்பமாகியது நிகழ்வு. புல்லட் ஏன் இந்த ஒன்றுகூடல், எப்படி நாம் இதனை தொடங்கினோம் என்ற விடயங்களை தனக்கே உரிய பாணியில் சபை கலகலக்க உரையாற்றினார்.





அடுத்து வலைப்பதிவும் சட்டமும் என்ற விடயத்தினை சுபானு விளக்கினார். காப்புரிமை, போன்ற விடயங்களையும் அத்துடன் இலங்கையில் வலைப்பதிவுகள் சம்பந்தமான சட்டம் இன்னும் இயற்றப்படவில்லை என்பதையும் கூறினார்.



இன்று வலைப்பதிவின் 10ஆவது ஆண்டு நிறைவு என்பதால் ஆதிரையினால் பிறந்த நாள் கேக் வெட்டுவது என்ற விடயம் நிகழ்த்தப்பட்டது. எழுந்தமானமாக 10 வலைப்பதிவர்களைக் கொண்டு 10 மெழுகுதிரிகள் ஏற்றப்பட்டு அந்த கேக்கினை எழுத்தாளார் திரு.அந்தனி ஜீவா, கவிஞர் திரு.மேமன் கவி, ஒளிபரப்பாளரும் இன்றைய சிறப்பு விருந்தினருமான திரு.எஸ்.எழில்வேந்தன் மற்றும் வலைப்பதிவர் டொக்டர் ஜீவராஜ் ஆகியோர்கள் அந்த கேக்கினை ஒன்றாக வெட்டினார்கள்.




அடுத்ததாக பதிவர்கள் ஓவ்வொருவராக தம்மை அறிமுகம் செய்துகொண்டார்கள். வந்திருந்த 80 பதிவர்களில் மிகச்சிலரே இன்னும் பதிவு எழுதாமல் இருப்பவர்கள். ஏனையவர்கள் பதிவர்கள்(யார் எவர் அவரின் வலைப்பூ பற்றிய‌ விபரம் அடுத்த பதிவில்).

இதனைத் தொடர்ந்து மருதமூரான் திரட்டிகள் பற்றிய தன் கருத்துகளையும் யாழ்தேவி திரட்டி மற்றும் யாழ்தேவி சஞ்சிகை பற்றிய அறிமுகத்தையும் செய்தார்.



அடுத்த நிகழ்வாக சிறப்புவிருந்தினராக வந்த முன்னாள் ஒளி/ஒலிபரப்பாளரும் ஈழத்தின் மூத்த கவிஞர்களில் ஒருவரான நீலாவணன் அவர்களின் மகனுமான‌ திரு.எஸ்.எழில்வேந்தன் சிறப்புரை ஆற்றினார். இவர் தன் உரையில் தானும் சிலகாலமாக வலைப்பதிவில் ஈடுபடுவதாகவும், பலரின் வலைப்பதிவுகளை வாசித்த அனுபவங்களையும் கூறினார்.



சிறப்புரையைத் தொடர்ந்து வலைப்பதிவும் தொழில்நுட்பமும் என்ற கருத்துரையை சேரன் கிரிஷ் அவர்கள் வழங்கினார். இவர் எப்படி ஹேக்கர்ஸ் இடமிருந்து உங்கள் வலையைப் பாதுகாப்பது, RSS ஓடைகள், போன்ற விடயங்களை மிகவும் சுருக்கமாகக் கூறினார்.



சேரன் கிருஷ்சைத் தொடர்ந்து லோஷனால் வலைப்பதிவில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை சுவாரசியாமக் கூறினார். லோஷனின் உரையினூடு வலைப்பதிவர்களின் கலந்துரையாடல் இடம் பெற்றது.



முதலில் விசைப்பலகை பற்றியும் பின்னர் யாழ் தேவி திரட்டிபற்றியும் காரசாரமான விவாதங்கள் நிகழ்ந்தன. அத்துடன் இன்னொரு பதிவர் தான் பதிவெழுதி பட்ட சிக்கல் ஒன்றையும் அத்துடன் புனைபெயர்களில் எழுதுபவர்கள் பற்றியும், தொழில்நுட்பம் தொடர்பான பதிவுகள் பற்றியும் அத்துடன் வட்டாரச் சொற்களைப் பயன்படுத்தாமல் எழுதுவது பற்றியும் ஒரு கருத்து கூறப்பட்டது.



இறுதியாக வந்தியத்தேவனின் பின்னூட்டத்துடன்( நன்றியுரை) நிகழ்வு இனிதே நிறைவுற்றது. (என் பின்னூட்டம் பின்னர் தனிப்பதிவாக.).நிகழ்வின் தொகுப்புரை சதீஷ் வழங்கினார். கலந்துகொண்ட அனைத்துப் பதிவர்களுக்கும் வடை, பற்றீஸ், கேக் மற்றும் நெஸ்கபே வழங்கப்பட்டது.



இந்த நிகழ்வை நேரடியாக ஒளிபரப்பிய கெளபாய் மதுவிற்கு மிக்க நன்றிகள். இந்த நேரடியொளிபரப்பை பலர் பார்த்ததோடு மட்டுமல்ல, தங்கள் கருத்துகளையும் தெரிவித்தார்கள். கானாபிரபா, சயந்தன், சினேகிதி, வசந்தன், தயாளன்,கிருத்திகன்(கீத்), மாயா, முகுந்த், ஜெயா, கேபிள் சங்கர், மம்போ, ப்ரிய்டமுடன் வசந்த், கோசலன்,டோன்டு, மாயவரத்தான், புதுவை சிவா, விமல், சேனன், டானி, எஸ்கர், தமிழன் ‍கறுப்பி போன்றவர்கள் என்னிடம் இருக்கும் பட்டியலில் உள்ள நண்பர்கள். (ஏனையவர்களின் பெயர் மறந்திருந்தால் மன்னிக்கவும்). அத்துடன் என்னில் தொலைபேசியில் கதைத்த வர்மா, சஜிதரன், தாசன், தங்கமுகுந்தன் ஆகியோருக்கும் நன்றிகள்.

மேலதிக படங்கள் ஆதிரையின் வலையில் உள்ளது. ஒன்றுகூடல் படங்கள்

பல சுவையான விடயங்களுடன் பதிவர்களிடமிருந்து பதிவுகள் வரும் காத்திருங்கள்.

நாம் தயார் நீங்கள் தயாரா?

நீண்ட நாள் கனவு நாளை நனவாக இருக்கின்றது. இதுவரை எழுத்துக்கள் மூலம் வாசித்து ரசித்த பலரை நாளை நேரில் சந்திக்கவிருக்கிறோம்.



சரியாக 9 மணிக்கு ஒன்றுகூடல் ஆரம்பமாகும் அதனால் எப்படியும் நேரகாலத்துடன் வாருங்கள்.

நிறைய சுவாரசியங்கள் காத்திருக்கின்றன. கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபம் தெரியாதவர்கள் ஆதிரையின் பதிவில் இருக்கின்ற வரைபடத்தைப் பாருங்கள்.

நிகழ்ச்சி நிரல்
  • அறிமுகவுரை
  • பதிவர்கள் அறிமுகம்
  • வலைப்பதிவு ஒரு முன்னோட்டம்
  • திரட்டிகள்
  • சிறப்பு அதிதி உரை
  • வலைப்பதிவு தொழில்நுட்பங்கள்
  • வலைப்பதிவும் சட்டமும்
  • பதிவுலக அனுபவங்கள்
  • எதிர்காலத் திட்டங்கள்
  • கலந்துரையாடல்
  • நன்றியுரை

இந்தக் குறுகிய காலத்தில் எமக்கு வாழ்த்து அனுப்பிய பல கருத்துரைகளைச் சொன்ன எம் உறவுகள் அனைவருக்கும் நன்றிகள்.

எம்முடைய நிகழ்வை விளம்பரப்படுத்திய திரட்டிகள், வலைப்பதிவுகள், வானொலிகள், பத்திரிகைகள் அனைத்துக்கும் எங்கள் முன்கூட்டிய நன்றிகள்.

உங்களை வரவேற்க நாம் தயார் வர நீங்கள் தயாரா?

ஒற்றுமையே பலம். அனைவரும் வாரீர்.

இங்ஙனம்
ஏற்பாட்டுக் குழுவினர்.