Showing posts with label விஜய் டீவி. Show all posts
Showing posts with label விஜய் டீவி. Show all posts

காதல்... காதல்... காதல்...

நேற்றைய விஜய் தொலைக்காட்சி நீயா நானாவில் தற்போது காதலித்துக்கொண்டிருப்பவர்களும் காதலில் தோற்றவர்களும் விவாதித்தார்கள். சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் கரு.பழனியப்பனும், பாடகி கல்பனாவும் கலந்துகொண்டார்கள்.

நிகழ்ச்சியில் பலரும் பலதைப் பேசினாலும் ஹைலைட்டான விடயமே மூன்று பெண்களின் கருத்துக்கள் தான்.

முதலாமர் ஒரு பெண்மணி காதலிக்கும் வயசில் தனக்கு ஒரு மகன் இருப்பதாக கூறினார். இவர் தன் மாமனை விரும்பியதாகவும் மாமன் அதிகம் படிக்கவில்லை என்பதால் பெற்றோர்கள் சடுதியில் பணக்கார மாப்பிள்ளை ஒருவரை மணம்முடித்துக்கொடுத்ததாகவும், பெற்றோர்களின் விருப்பத்தை தட்டவிரும்பாதபடியால் தன் மனதுக்கு ஒவ்வாத அந்த திருமணத்தைச் செய்ததாகவும், தன் முதலிரவிலே தன் கணவனுக்கு மாமனுடனான காதலைச் சொல்ல அவர் தன்னை தன் மாமனுடன் சேர்த்துவைக்கிறேன் என்றாராம். பின்னர் தான் குடும்ப கெளரவம், கலாச்சாரம் போன்றவற்றைக் கருது அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் இன்றைக்கும் தன் மாமனை நெஞ்சில் சுமப்பதாகவும் கூறினார். இவரது மாமன் இன்னமும் திருமணம் செய்யவில்லையாம். இவர் தன் கணவரை விட்டுவிட்டு வந்தால் ஏற்றுக்கொள்வதாக 10 வருடங்களுக்கு முன்னர் கூறியதாகவும் சொன்னார்.

அவரது காதலை ஏற்றுக்கொள்ளும் அதே நேரம் ஒரு பெண் அதுவும் திருமணமான பெண் தன்னுடைய பழைய காதல் பற்றி பொது இடத்தில் தொலைக்காட்சியில் பேசியது துணிச்சலாக இருந்தாலும். அவரது பல கருத்துக்கள் முரண்பாடாகவே இருந்தன. காதலைனையும் விட மனமில்லை அதே நேரம் கணவனுடன் ஏனோ தானோ என வாழ்வதாகவும் கூறினார்.

இந்தப் பெண் செய்வது சரியா?

இன்னொருவர் இளைஞி4 நாட்களுக்கு முன்னர் தான் காதல் முறிந்ததாகவும் தன் வீட்டில் தன் காதலை ஏற்றுக்கொண்டார்கள் என்றும் ஆனாலும் காதலன் தன்னை விட்டு விட்டு இன்னொருவரைக் காதலிப்பதுடன் கூடாத பழக்கங்கள் பழகுவதாகவும் குறிப்பிட்டார். இன்றைக்கும் தன் காதலன் மனம் மாறினால் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருப்பதாகவும் தன் காதலனுக்கு தொலைக்காட்சியினூடாக தன் விருப்பத்தையும் அறிவித்தார். அவர் பேசும் போது உணர்ச்சிவசப்பட்டிருந்தார். அடுத்த எதிர்முகாமில் இவரது நண்பி ஒருவர் இருந்தார். அவர் பேசும் போது தன் நண்பி காதலனைப் பிரியும்போது கூட இவ்வளவு உணர்ச்சி வசப்படவில்லை என்றும் இன்றைக்கு அந்தப் பிரிவு அவரை வாட்டுவதாகவும் நண்பிக்கு ஆதரவு கொடுத்தார்.

அடுத்த இளைஞி பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே பேசினார். தன் காதலனை செருப்பால் கல்லூரியில் மாணவர்களுக்கு முன்னிலையில் அடித்ததாக ஆங்கிலத்தில் கூற கோபிநாத் அதனை தமிழிழும் ஒருக்கால் சொல்லுங்கள் என தமிழிழும் கூறினார். தான் அடித்தபின்னர் தன் காதலன் தன்னை திருப்பி அடிப்பார் என எதிர்ப்பார்த்ததாகவும் ஆனால் அவர் அப்படிச் செய்யாமல் தன் தவறை ஒத்துக்கொண்டதுபோல் சென்றுவிட்டார் என்றும் கூறினார். தன் காதலன் வேலையற்று இருக்கிறார் என்றும் அவரது செலவுகளை தானே செய்ததாகவும் நம்பமுடியாத ஒரு உண்மையையும் சொன்னார்.

இவரை மீண்டும் அதே காதலுடன் சேர்வீர்களா எனக்கேட்டபோது 50% சேரும் ஆசை இருப்பதாகவும் 50% அவரை கைவிடுவது சரியென்றும் சொன்னார். இரண்டும்கெட்டான் மனநிலையில் இருக்கின்றார்.

இந்த மூன்று பெண்களும் துணிச்சலாக தம் கருத்துக்களை வெளியிட்டார்கள், மூன்று பேரும் வெவ்வேறு மனநிலையிலும் இருக்கிறார்கள். பாவம் காதல் இவர்களைப் பாடாய்ப் படுத்துகிறது.

காதலில் தோற்ற அனைவரும் ஒட்டுமொத்தமாக இனி ஒரு காதல் தங்கள் வாழ்க்கையில் இல்லையென்றார்கள்.

காதலித்துக்கொண்டிருப்பவர்களின் பேச்சுக்கள் சுவாரசியமாக இருந்தபோதும் என்னைப்போன்ற இளைஞர்களுக்கு இப்படியொரு காதலி/காதலன் இல்லையே என பொறாமை ஏற்படுத்தியது.

இன்னொரு சுவாரசியமான தலைப்பில் கோபிநாத் நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு நடத்தினாலும் சிறப்பு விருந்தினர்களை அதிகம் பேசவிடவில்லை என்பது கண்டனத்துக்குரியது.

விஜய் விருதுகள் - அபத்தமான சில தெரிவுகள்

விரைவில் வெகுகோலாகலமாக விஜய் அவார்ட்ஸ் நடைபெறவிருக்கின்றது. இதற்கான முன்னோட்டங்கள் சில நாட்களாக விஜய் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் ஒளிபரப்பாகின்றது.



பல துறைகளில் கொடுக்கப்படும் இந்த விருதுகளில் மக்களால் தெர்ந்தேடுக்க 5 பிரிவுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவை சிறந்த நடிகர், நடிகை, படம், பாடல் மற்றும் இயக்குனர்.

2008க்கான விருதுப்பட்டியலில் ஒரு சில முன்மொழியப்பட்டவர்கள் (Nominees) மிகவும் அபத்தமான தெரிவுகளாக இருக்கின்றது. சிலவேளைகளில் இவர்களின் ரசிகர்களை வைத்து விஜய் தொலைக்காட்சி விளம்பரம் தேடும் முயற்சியோ தெரியவில்லை.

சிறந்த நடிகர்கள் :
கமலஹாசன் ‍- தசாவதாரம்
சூரியா - வாரணம் ஆயிரம்
விஜய் - குருவி
அஜித் - ஏகன்
ஜெய் - சுப்பிரமணியபுரம்



இந்தப்பட்டியலில் கமலும் சூரியாவும் ஏன் ஜெய்கூட ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தெரிவுகள். விஜயும் அஜித்தும் எப்படி இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டார்கள். காரணம் குருவியும் ஏகனும் இவர்கள் இருவரது ரசிகர்களாலும் மறக்கப்படவேண்டிய திரைப்படங்கள். ஆக விஜய் தொலைக்காட்சி அஜித் விஜயை வைத்து வியாபாரம் செய்கின்றது. அத்துடன் இவை மக்கள் தெரிவென்பதால் பெரும்பாலான இவர்கள் ரசிகர்கள் ஓட்டு இவர்களுக்கு கிடைத்து சிறந்த நடிகர் விஜய் படம் குருவி என விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை,

பூ படத்தில் நடித்த ஸ்ரீகாந்தையோ அல்லது பிரிவோம் சந்திப்போம் சேரனையோ இன்னொரு தெரிவாக சேர்த்திருக்கலாம்.

அடுத்து நடிகைகள் தேர்வு அவ்வளவு பிரச்சனை இல்லை.
பார்வதி - பூ.
சுவாதி - சுப்பிரமணியபுரம்
அசின் - தசாவதாரம்
ஜெனிலியா - சந்தோஷ் சுப்பிரமணியம்
திரிஷா - அபியும் நானும்



அடுத்தது உச்சக்கட்ட காமெடியாக இவர்கள் கொடுத்திருக்கும் சிறந்த திரைப்படங்களுக்கான பட்டியல்
தசாவதாரம்
வாரணம் ஆயிரம்
சுப்பிரமணியபுரம்
ஏகன்
குருவி

ஏனோ தெரியவில்லை குசேலனை இவர்கள் தங்கள் பட்டியலில் சேர்க்கவில்லை. மீண்டும் அஜித் விஜய் ரசிகர்களைத் திருப்திப்படுத்த இந்தப் பட்டியல்.

சிறந்த இயக்குனர்கள் பட்டியல்
கே எஸ் ரவிகுமார் தசாவதாரம்
சசி பூ
சசிகுமார் சுப்பிரமணியபுரம்
மிஷ்கின் அஞ்சாதே
தரணி குருவி

இந்தப்பட்டியலில் மீண்டும் குருவி இணைக்கப்பட்டிருக்கின்றது. குருவி படம் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு என்பதால் அவருக்கு விருதுகொடுக்க விஜய் தொலைக்காட்சி விரும்புகின்றதா?

சிறந்த பாடல்களாக வாரணம் ஆயிரத்தில் இருந்து மூன்று பாடல்களும் தசாவதாரத்தில் இருந்து ஒருபாடலும் இன்னொரு பாடல் சக்கரைக்கட்டியில் வந்த டாக்சி டாக்சி பாடலாகவும் முன்மொழிந்திருக்கின்றார்கள்.

பெரும்பாலான விருதுகள் கொடுக்கும் அமைப்பைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகின்றன. அவை மாநில விருதாக இருந்தால் என்ன? தேசிய விருதாக இருந்தால் என்ன? இல்லையென்றால் ஹிரித்திக் ரோஷன் எல்லாம் தேசிய விருதுக்கு முன்மொழியப்படுவாரா?

கடந்த இரண்டு முறையும் விஜய் விருதுகள் பெரும்பாலும் நடுநிலமையுடன் மக்களின் தீர்ப்பாகவே இருந்தன ஆனால் இம்முறை இவர்கள் சில விருதுகளுக்கு உரியவர்களை மக்களுக்குத் திணித்திருக்கின்றார்கள் என்றே கூறவேண்டும்.

அதேவேளை நடுவர்களின் விருதுகள் என சிறந்த நடிகர், நடிகை, இயக்குனர், படம் போன்றவைக்கு இன்னொரு விருதும் காத்திருக்கின்றது. சிலவேளைகளில் மக்களின் தீர்ப்பாக குருவி சிறந்தபடமாகவும் நடுவர்களின் தீர்ப்பாக சுப்பிரமணியபுரம் சிறந்தபடமாகவும் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்புகள் உண்டு.

எது எவ்வாறாயினும் இந்த முறை விஜய் தொலைக்காட்சி விருதுப்பட்டியல் அபத்தமானது என்பதில் எந்த ஐயமும் இல்லை. அதே நேரம் விருது வழங்கும் விழாவில் என்ன என்ன ஆச்சரியங்கள் காத்துக்கிடக்கின்றனவோ, பொறுமையாக விளம்பரங்கள் இடையே பார்ப்போம்.