சித்தப்பூ என நண்பர்களால் செல்லமாக அழைக்கப்படுகின்ற ஹரிகரன் ஒரு கணணிப் பொறியியளாளர் அதுதாங்க சாப்ட்வேர் எஞ்ஜினியர் ஆவார். பேராதனை பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை முடிச்சு இப்போ கொழும்பிலை ஒரு மல்டி நசனல் கம்பனியிலை வேலைபார்க்கின்றார். ரொம்ப மென்மையான நல்ல மனிதர் இவர். நல்ல பக்திமானும் கூட எப்படியான பக்திமான் என்றால் தான் எழுதுகின்ற ஜாவா கோடிங்கில் கூட தொடக்கத்தை பிள்ளையார் சுழியோடை எழுதுகின்ற அளவுக்கு பக்திமான்.
தன்னை சன்மைக்ரோ சிஸ்டம் காரன் ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் கூப்பிட்டு பாராட்டாவிட்டால் நான் ஜாவாக்காரன் இல்லை என அடிக்கடி நண்பர்களிடம் சொல்லிக்குமளவுக்கு சித்தப்பூ ஜாவாவில் புலி இல்லை இல்லை சிங்கம். அப்லெட், சேர்வ்லெட், பைப்பிங் என ஜாவாவில் சித்தப்பூக்கு எல்லாம் அத்துப்படி சுருக்கமாச் சொன்னால் சித்தப்பூ ஈட் ஜாவா ட்ரிங் ஜாவா சிலீப் ஜாவா என வாழ்கின்றவர்.
அலுவலகத்தில் ஜாவாவுடன் வாழ்க்கை என்றால் ஏனைய நேரங்களில் பிள்ளையாருடன் பக்திமயமான காதல். வெள்ளிக்கிழமை பின்னேரங்களில் சித்தப்பூவை நீங்கள் பம்பலப்பிட்டி மாணிக்கப்பிள்ளையார் அப்படியே புதிய கதிரேசன் ஒரு சில மீட்டர் நடந்து சம்மாங்கோட்டுப் பிள்ளையார் என ஒரே தரிசனம் தான், ஆனாலும் சித்தப்பூவுக்கு வெளிநாட்டு ஆசையும் இருப்பதால் விசாப் பிள்ளையார் தான் அவரின் பேவரிட்.
வெள்ளிகளில் பிள்ளையார் கோயில் என்றால் செவ்வாய்கிழமைகளில் மயூரா அம்மனும் ஞாயிறுகளில் தெகிவளை விஷ்ணுவும் சித்தப்பூவின் வழிபடு தலங்கள். இடைக்கிடை லீவு கிடைத்தால் கொச்சிக்கடை சிவன், கொட்டாஞ்சேனை அம்மன் பிள்ளையார், முகத்துவாரம் விஷ்ணு என ஒரு ட்ரிப் அடிப்பார்.
பொறுங்கோ வாறன் இவ்வளவும் வாசிச்சவுடனை உங்களுக்கு சித்தப்பூவைப் பற்றி ஒரு விம்பம் வந்திருக்கும் எல்லோ ஆனால் அதை எல்லாம் உடைப்பது போல சித்தப்பூவிடம் இன்னொரு கெட்ட பழக்கமும் இருக்கு. ஹிஹிஹி வேறு ஒன்றுமில்லை சித்தப்பூ டெய்லி பியர் அடிப்பார். அதுவும் சின்னப்போத்தல்(படி) தான். நண்பர்கள் கேட்டால் சொல்லும் காரணம் அற்ககோலும் கொஞ்சம் உடம்பிலை இருக்கவேண்டும் என்பதுதான் ஆனால் அதைவிட ஜாவாவுடன் மல்லுக்கட்டிய களையைப் போக்கத்தான் பியர் அடிக்கின்றவர் என்ற உண்மை சித்தப்பூவுக்கு மட்டுமே தெரியும்.
சித்தப்பூ முதன்முறை பியர் அடிச்ச கதை நல்ல பம்பல். பேராதனையில் படிக்கின்ற காலத்திலை பொடியள் எல்லாம் கண்டிக்குப் போய் செட் ஆகினார்கள். நம்ம சித்தப்பூக்கும் பம்பல் பிடிக்கும் கோயில் குளம் என அலைந்தாலும் ஆள் முசுப்பாத்தியான ஆள். சிலர் விஷ்கி பிராண்டி என பெரிசிலை இறங்க நம்ம சித்தப்பூ பாத்தார், உதை எல்லாம் குடிச்சு சத்தியராஜ்(வாந்தி எடுப்பவர்களை செல்லமாக அழைக்கும் பெயர்) ஆகிறதை விட பியரிலை இறங்குவோம் என வலு கலாதியாக எனக்கொரு லயன் லாகர் என ஓடர்போட்டார்.
சித்தப்பூவின் நண்பன் ஜது "மச்சான் நீ இன்றைக்குத் தான் அடிக்கபோறீயோ? "
"அடச்சீ போடா உதெல்லாம் எனக்கு எப்பவோ பழக்கம் " என தன்னை விட்டுக்கொடுக்காமல் சித்தப்பூ ஒரு விடுவை விட்டுவிட்டார்.
சிங்கத்தை கொண்டுவந்து சித்தப்பூவின்ரை முன்னாள் வைச்சவுடன் ஆள் உடனே ஒரு கிளாசிலை அரைவாசிக்கு பியரை நிரப்பிவிட்டு மிச்ச அரைவாசிக்கு கோக்கை கலந்துவிட்டார்.
கூட்டாளிப் பொடியள் எல்லாம் கெக்கே பிக்கே எனச் சிரிக்க சித்தப்பூ "ஏன் நீங்களும் கோக் கலந்துதானே குடிக்கிறியள்? "
இதற்க்கு மேலை சித்தப்பூவின் தண்ணி அடிக்கும் பழக்கம் பற்றி விளக்கம் தேவையோ.
கொஞ்ச நாளைக்கு முன்னர் சித்தப்பூவிற்க்கு ஆப்பு அவரின் தாய் ரூபத்திலை வந்தது. சித்தப்பூவிற்கு ஒரு கலியாணத்தைக் கட்டிப்பார்க்க தாய் ஆசைப்பட்டார். கம்பசிலை படிச்ச பொடியன் அதாலை ஏதும் லவ்வு கிவ்வு இருக்கும் என்ற டவுட்டிலை
"தம்பி உனக்கு எதாவது காதல் கீதல் இருந்தால் சொல்லப்பூ இல்லையெண்டால் எங்கடை புரோக்கர் நல்ல சம்பந்தம் இருக்கிறதாகச் சொல்லுறார் அதைப்பார்ப்பம்?" என்று கேட்க சித்தப்பூவோ
"என்ன விசர்க் கதை கதைக்கின்றாய் என்ரை கூட்டாளிகள் எல்லாம் நீலம் பச்சை சிவப்பு என கலர்க் கலராக பெட்டையளுக்குப் பின்னாலை சுத்தின நேரம் நான் படிச்சுக்கொண்டுதானே இருந்தேன், நீ பார்க்கிறதைப் பார் எனக்குப் பிரச்சனை இல்லை" என நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு சொன்னார்.
சித்தப்பூவின் தாயும் ஒரு மாதிரி வங்கி ஒன்றில் வேலை செய்யும் பெண் ஒருத்தியைச் சித்தப்பூவிற்க்கு பார்த்துவிட்டார். சித்தப்பூவிற்க்கும் அவரைப் பிடிச்சுவிட்டது. என்ன பிரச்சனை என்றால் அந்தப் பிள்ளைக்கு வேலை பருத்தித்துறையில் , ஆனாலும் இப்போ அடிக்கடி சொகுசு பஸ் எல்லாம் ஓடுவதால் சித்தப்பூ வெள்ளிக்கிழமை இரவே வேலை முடிய யாழ்ப்பாண பஸ்சில் ஏறிவிடுவார். சிலவேளை கொழும்புக்கு ஏதும் அலுவலாக வந்த அந்தப் பிள்ளையும் சித்தப்பூவோடை தான் யாழுக்கு போறது.
ஒரு சுபயோக சுபதினத்திலை சித்தப்பூவும் அந்தப் பிள்ளைக்கு தாலி கட்டி தனக்கு மனைவியாக்கிவிட்டார். திருமணத்தின் பின்னர் சித்தப்பூ பியர் அடிப்பதை குறைச்சுக்கொண்டாலும் நிறுத்தவில்லை, இப்போ கோக் போத்தலுக்குள் பியரைவிட்டு கோக் குடிக்கின்றவர். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு கோக் குடிப்பதுபோலத் தெரியும்.
ஒருநாள் சித்தப்பூ பிரிட்ஜைத் திறந்து கோக் போத்தலுக்குள் இருக்கும் பியரை அடிக்கத் தொடங்க வெளீயே போயிருந்த அவரின் மனைவி வந்துவிட்டார், "உதென்னப்பா கையிலை கோக்கோ ஒருவாய் தாங்கோ களைக்குது" இப்படிச் சித்தி கேட்க சித்தப்பூவிற்கு அஞ்சும் கெட்டும் அறிவும் கெட்டுவிட்டது.
"இ இ இ இல்லை இதை நீ குடிக்ககூடாது" என சித்தப்பூவின் வாய் தடுமாறியது.
"தாருங்கோ" என்ரபடியே அவரின் கையில் இருந்த கோக் போத்தலைப் பறித்த அவரின் மனைவி குடிப்பதற்க்கு வாய்க்கு கிட்டே கொண்டு போனபின்னர் தான் வேறை ஏதோ மணம் அடிப்பதால் இதென்னப்பா இது பியர் மணம் அடிக்குது. நீங்கள் இன்னும் பியரிலை கோக் கலந்து அடிப்பதை நிப்பாட்டவில்லையோ எனக் கேட்டதுதான் சித்தப்பூ மயங்கிக்குப்போய் நிலத்திலை விழுந்துவிட்டார். சித்தப்பூவின் மனைவியின் உறவினன் ஜது சித்தப்பூ பற்றிய கதைகளை அவரின் மனைவிக்கு போட்டுக்கொடுத்த விடயம் சித்தப்பூவிற்க்கு இன்னமும் தெரியாது அதோடை இப்போ சித்தப்பூ பியரே குடிப்பதில்லை.
கொஞ்சம் கற்பனை நிறைய உண்மை.
பின்குறிப்பு : கதைபோல எழுதாமல் இன்னொருவர் சொல்வது போல எழுதியிருக்கின்றேன். பிடிச்சிருந்தால் சொல்லுங்கள். சித்தப்பூ போல இன்னமும் சுவாரசியாமான நபர்கள் இருக்கின்றார்கள்.
சித்தியிடம் சிக்கிய சித்தப்பூ
எழுதியது வந்தியத்தேவன் at 19 கருத்துக் கூறியவர்கள்
நிழலைத் திருடும் மழலை
"என்னமோ ஏதோ " என ஆலாப்ராஜின் குரலில் மாறனின் ஐபோன் சிணுங்கியது, நம்பரைப் பார்த்தால் புதிசாக இருந்தது,
"ஹலோ"
"டேய் நாதாரி என்னடா செய்கின்றாய்" என மறுபக்கம் கேட்ட வசனத்தை வைத்தே அந்தப் பக்கம் கதைப்பது ஆருரன் என்பது புரிந்தது. அவன் தான் ஹலோவுக்குப் பதிலாக நாதாரி என அழைப்பது அவன் ஒருத்தன் தான்.
"மச்சான் நான் கொழும்பிலை தான் நிற்கின்றேன் பின்னேரம் வெள்ளவத்தை கோசிக்கு வா, இதுதான் என்ரை நம்பர் ஓகேடா"
இதுதான் இவன்டை கெட்டபழக்கம் தான் சொல்லவந்ததை சொல்லிவிட்டு போனைக் கட் பண்ணிவிடுவான்.
கிட்டத்தட்ட பத்து வருடத்துக்குப் பின்னர் அவனைச் சந்திக்கபோறேன்.
ஆரூரன் அமெரிக்காவில் நியூ ஜேர்சியில் பிரபலமான மருத்துவன். இலங்கையில் கொழும்புப் பல்கலைக் கழகத்தில் மருத்துவம் முடித்துவிட்டு அமெரிக்கா சென்று அங்கே இருதய மாற்றுச் சிகிச்சையில் மட்டும் செய்து இப்போ உலகம் பூராகவும் இளவயதில் பிரபலமானவன்.
மாறன் ஆருரன் இருவரும் ஐந்தாம் வகுப்பில் இருந்து ஒன்றாகவே படித்தவர்கள். இருவரும் உயர்தரத்தில் விஞ்ஞானம் படித்தவர்கள், ஆருரன் மருத்துவத்துக்கு முதல் தரத்திலேயே எடுபட்டுவிட்டான். மாறனோ இரண்டாம் தடவையுடன் இதற்க்கு மேல் முயன்றால் ஒன்றும் கிடைக்காது என அந்தமுறை கிடைத்த விஞ்ஞானபீடத்துக்கு போய்விட்டான். இடையில் எதாவது பார்ட்டிகளில் சந்தித்தால் உண்டு. மற்றும்படி இருவரும் வெவ்வேறு துறைகளில் என்றபடியால் சந்திக்கவாய்ப்புகள் கிடைப்பது அரிது. ஆருரன் மருத்துவக் கல்வியை நிறைவு செய்தபின்னர் மேல்படிப்புக்காக அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டான். ஆனாலும் ஏனோ தொடர்புகள் கால நேர மாற்றங்களினால் அறுந்துவிட்டன.
சரியாக 7 மணிக்கு ஆருரன் கோசிக்குள் நுழைய பின்னால் இருந்து ஒருதன் கட்டி அணைத்து மச்சான் எனக் கத்தினான்.
"டேய் நாதாரி நான் கே இல்லையடா கட்டிப்பிடிக்காதையடா " ஆருரன்
"இது உன்ரை அமெரிக்காஇல்லை இங்கே அன்பை எப்படியும் சொல்லலாம்."
ஓகேடா நல்ல டேபிளாக பார்த்து இருப்பம் என்றபடியே இருவரும் ஒதுக்குப்புறமாக இருந்த டேபிளில் உட்கார்ந்தார்கள்.
மெனு கார்ட்டைப் பார்த்தபடி முதலில் சூப்புடன் தொடங்கினார்கள்.
"சொல்லு மச்சான் எப்படி அமெரிக்க வாழ்க்கை?
"அடபோடா ஹாஸ்பிட்டல் வீடு என வாழ்க்கை போகின்றது,வீக் எண்டில் சிலவேளை பிரண்ட்ஸ், ரிலேட்டிவ் வீடுகளுக்கு விசிட் அடிக்கின்றது, சிலவேளை ஒன் கோல் என்றால் அதுவும் கட் தான்"
"ம்ம்ம் நாங்கள் கொடுத்துவைத்தவர்கள் 9 தொடக்கம் 5 வரை வேலை" பிறகு வெள்ளவத்தையில் ரோட்டு அளத்தல் நைட் ஏதாவது படம் பார்த்தபடி தூங்கிவிட வேண்டியதுதான், அது சரி மச்சான் நீ ஏன் இன்னும் கட்டவில்லை?"
"ம்ம்ம் கட்டத்தான் வேண்டும் அம்மா பெண் பார்க்கின்றார் ஆனால் நான் தான் வேண்டாம் என தள்ளிப்போடுகின்றேன், என்னால் அவளை மறக்கமுடியவில்லையடா?"
"என்னாது அவளா? யாரடா அவள்?" கதை கேட்கும் ஆவலில் மாறன் எதிர்க்கேள்வி கேட்டான்.
"அவள்தாண்டா எங்களுடன் படித்த இந்துமதி."
"யூமீன் டொக்டர் இந்து? எனக்கு இந்தக்காதல் கதை தெரியாதே?"
"சொறிடா மச்சான் இந்தக் கதை எனக்கு மட்டும் தான் தெரியும் இப்ப உனக்கு மட்டும் சொல்றேன்டா"
மெழுகுதிரி சுழன்றது.
ஆகஸ்ட்டில் பைனல் சோதனை என்பதால் தாவரவியல் வகுப்பில் மாணவர்கள் படுமும்முரமாக வருங்கால மருத்துவர்கள் ஆக தீவிரமாக படித்துக்கொண்டிருந்தார்கள். வகுப்புத் தொடங்கி சில நிமிடங்களில் ஆருரன் கிரிக்கெட் உடையுடன் களைச்சு விழுந்து வந்தான். அவனை ஏற இறங்கப் பார்த்த ஆசிரியர்
"நீ தேறமாட்டாய்? எக்சாமுக்கு இன்னும் 7 மாதம் தான் இருக்கு நீ இப்பவும் கிரிக்கெட் அடி பெரிய அசாருதீன் என நினைப்பு" என திட்டலுடன் நக்கலடிக்க வகுப்பே சிரித்தது.
ஆருரன் வந்த சில நிமிடங்களில் இந்துமதியும் "எக்ஸ்யூமி சேர்" என்றபடி உள்ளே நுழைந்தாள்.
"வாம்மா கவிதாயிணி உனக்கு என்ன கவியரங்கம், பட்டிமன்றமா? பிறகேன் வயோ படிக்க வந்தாய் போய் ஆர்ட்ஸ் படித்திருக்கலாம் தானே" மீண்டும் வகுப்பு சிரித்தது.
இந்துமதி அந்நியன் சதா போல இருப்பாள் சராசரியான உயரம், நீண்ட தலைமுடி, மின்னலடிக்கும் கண்கள், ஆனால் எந்த நேரமும் முகத்தில் ஒரு அமைதி குடிகொண்டிருக்கும், புத்தபெருமானின் மறு அவதாரம் என வகுப்பு ஆண்கள் நக்கலடிப்பது. சாதாரண தரத்தில் எட்டுப் பாடங்களில் அதிதிறமைச் சித்தி எடுத்து சாதனை படைத்தவள். வருங்காலத்தில் மருத்துவராக வேண்டும் என கடினமாகப் படிப்பவள் ஆனாலும் கவிதை, பட்டிமன்றம் என பலவிடயங்களில் ஆர்வம் திறமை இருப்பதால் அவற்றிலும் சில மணி நேரம் செலவளிப்பவள்.
ஆருரனுக்கு சில நாட்களாக இந்துமதியைக் கண்டால் மனதுக்கு ஏதோ இரசாயன பெளதிக வேதியல் மாற்றங்கள் நிகழத் தொடங்கியது. இதற்க்குப் பெயர் தான் காதல் என அவனின் மானசீக எழுத்தாளர் சுஜாதாவும் அனிதாவின் காதல்களில் எழுதியது ஞாபகத்துக்கு வர காதலர் தினம் அன்று எப்படியும் தன் காதலை இந்துமதிக்கு சொல்லிவிடவேண்டும் என்ற எண்ணத்தில் இன்டெர்மொட்டுக்குள் நுழைந்து அழகிய வெலன்டை கார்ட்டை அக்கம் பக்கம் யாரும் பாக்கின்றார்களோ என்ற பதற்றத்துடன் வாங்கிவிட்டான்.
இரவு பழைய விகடனில் இருந்த
"எனக்குள் இருக்கும் நீயும்
உனக்குள் இருக்கும் நானும்
நமக்குள் இருக்கும் எம்மைப்
பார்த்துக்கொள்ளட்டும்
காதலிப்போம் வா "
என்ற கவிதையைச் சுட்டு கார்ட்டில் எழுதி அடுத்தநாளுக்காக கனவுடன் தூங்கிவிட்டான்.
பலருக்கு இனிமையாகவும் சிலருக்கு கசப்பாகவும் வழக்கம்போல் அந்த 14.02 விடிந்தது. லில்லி அவனியூ மூலையில் இந்துமதிக்காக ஆருரன் காத்துக்கொண்டிந்தான். நெஞ்சோ தடக்படக் என அதிவேகமாக அடிக்கத் தொடங்கியது. லில்லி அவ்னியூவுக்குள் இந்துமதி நுழையக் கண்டவுன் கொஞ்சம் முகத்தில் புன்னகை காதலடுன் அவளை நோக்கி நடந்தான்.
"எக்ஸ்க்யூஸ் மீ இந்து"
"ம்ம்ம் என்ன " கொஞ்சம் இறுக்கமாகவே இந்து கேட்டாள்.
"இல்லை இந்த கார்ட் உங்களுக்காக பிளீஸ் அக்செப்ட் இட்"
"வெரி சொறி எனக்கு இந்த காதல் கத்தரிக்காய் எதிலும் நம்பிக்கை இல்லை" என்றபடி ஆருரன் நீட்டிய கார்ட்டை நாலாக எட்டாக கிழித்து ரோட்டில் வீசிப்போட்டு,
"இனிமேல் இப்படி நடந்து உங்கள் மேல் இருக்கும் மரியாதைக் குறைக்கவேண்டாம், ஒழுங்காக படித்து டொக்டராகவும், என் கனவும் அதுதான்" என்றபடி நடக்கத் தொடங்கினாள்.
ஒரு சிலநாட்கள் இந்தக் காதலின் வலி இருந்தாலும் தன் கனவுக்காக ஆருரன் நன்றாகப் படித்து மருத்துவனாகிவிட்டான். ஆனாலும் இன்னும் அவனால் அவளை மறக்கமுடியவில்லை.
"ம்ம்ம் இவ்வளவு விடயங்கள் நடந்திருக்கா? பரவாயில்லை விடடா உனக்கு என ஒரு தேவதை உந்த உலகத்தில் எங்கே ஒரு இடத்தில் காத்திருப்பாள் தேடு" மாறன்.
"அடே உனக்கு கலியாணம் முடிஞ்சுதா?" ஆருரன்
"ஓமோம் புரோபோசல் தான் நாளைக்கு நீ லஞ்சுக்கு வீட்டை வாடா"
அடுத்த நாள் மாறன் வீட்டு கோலிங் பெல்லை ஆருரன் அடித்தான்,
"வாங்கோ ஆருரன்" எனப் புன்னகைத்தபடி கதவைத் திறந்தாள் இந்துமதி,
(யாவும் கற்பனையல்ல.)
டிஸ்கி : இதை சிறுகதையாகவோ புனைவாகவோ அல்லது ஒரு கட்டுரையாகவோ எடுப்பது வாசகர்களிடமே விட்டுவிடுகின்றேன்.
எழுதியது வந்தியத்தேவன் at 17 கருத்துக் கூறியவர்கள்
கொலைக் காற்று - இறுதிப்பாகம்
நண்பர்களினால் தொடங்கப்பட்டு, அஞ்சலோட்ட பாணியில் எழுதப்படும் கதை இது.
இதற்கு முன்னைய பகுதிகளை,
தரங்கத்திலும்,
எரியாத சுவடிகளிலும்,
சதீஷ் இன் பார்வையிலும்,
நா இலும்,
லோஷனின் களத்திலும்,
என் பார்வையிலும்
கன்கோனிலும்
படித்திருந்தால் தொடர்ந்து வாசியுங்கள் இல்லையென்றால் அவற்றைப் படித்தபின்னர் வாசியுங்கள்.
"ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா" என சிஜடி அதிகாரி ராஜாவின் மொபைல் சிணுங்கியது.
"ஹலோ ராஜா ஹியர்"
மறுபக்கம் ஏதோ முக்கியமான செய்தி என்பதை ராஜாவின் முகம் அப்பட்டமாக காட்டியது "ஒன் மினிட்" என அழைப்பில் இருந்தபடியே மீண்டும் தன் லப்டாப்பில் சூரியபிரகாசின் ஜீமெயிலை சேர்ச்சினார்.
"யுரேகா" என பலமாக சத்தமிட்ட ராஜாவை சூரியபிரகாஷ் உட்பட அனைவரும் திரும்பிப் பார்த்தார்கள்.
"ஹரி அப் கைஸ் குற்றவாளி அரஸ்டாகிவிட்டான், நாம இப்போ குற்றத்தின் சூத்திரதாரியை அரஸ்ட் செய்யவேண்டும்" என்றபடியே தன்னுடைய மகேந்திராவில் ஏறினார் இல்லை பாய்ந்தார்.
ராஜாவின் ஜீப் மீண்டும் கெளதமின் அபார்ட்மெண்டில் நுழைந்தது. இம்முறை பாதுகாப்பு உத்தியோகத்தர் தானே கேட்டைத் திறந்ததுடன் ஐசி கேட்காமாலே அவர்களை பவ்வியமாக உள்ளே விட்டார்.
கெளதமின் வீட்டு அழைப்பு மணியை அழுத்த முன்னர் புன்முறுவலுடன் கதவைத் திறந்தான் கெளதம்.
"வர்ஷா எங்கே" என்றபடி உள்ளே நுழைந்தனர் ராஜாவும் அவரது சகாக்களும்.
"வாங்கோ மிஸ்டர் ராஜா குற்றவாளி பிடிபட்டுவிட்டானா?" என அவரைப் பார்த்து கேட்ட வர்ஷாவை
"ஆமாம் நான் அவளுடன் தான் பேசிக்கொண்டிருக்கின்றேன்" என பலத்த சிரிப்புடன் ராஜா.
முகத்தில் ஏகப்பட்ட அதிர்ச்சியுடன் வர்ஷா "வாட் நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை இது பொய்" எனக் கத்தினாள்.
"இதப்பாருங்க வர்ஷா நீங்களாக குற்றத்தை ஒப்புக்கொண்டால் தண்டனை குறையும் இல்லை என்றால் கஸ்டம் தான் உங்கள் கூட்டாளிகள் எல்லோரையும் அரஸ்ட் பண்ணியாச்சு இனியும் உண்மையை மறைச்சு வேலையில்லை ஸ்பிக் அவுட்" ராஜா.
கொஞ்சம் பதட்டத்துடன் வர்ஷா பிளாஷ் பேக்கைச் சொல்லத் தொடங்கினாள்.
"என்னை பார்க்கின்ற எல்லோருக்கும் நான் நல்ல அழகி அறிவானவள் சகஜமாகப் பழகுகின்றவள் எனத் தான் தெரியும், ஆனாலும் என் மனசுக்குள் ஒரு சாத்தான் சின்ன வயதில் இருந்தே குடி இருக்கின்றது. நான் பணக்காரவீட்டின் ஒரே செல்லப்பிள்ளை என்பதால் சிறுவயசில் இருந்தே நான் கேட்பது எல்லாம் கிடைக்கும், அதிலும் எனக்கு புதிசுதான் வேண்டும். இப்படியான ஒரு பொசசிவ் கரேக்டர்".
"எனக்கு பெரிதாக நண்பர்கள் வட்டமில்லை. விதுரன், சூர்யபிரகாஸ், இருவரும் என் நெருங்கிய நண்பர்கள், சூர்யபிரகாசுடனான நட்பு கொஞ்சம் கொஞ்சமாக காதலாக மாறியது. இந்நிலையில் தான் எனக்கும் கெளதமுக்கு திருமணம் செய்ய என் பெற்றோர்கள் முடிவு செய்தனர். எனக்கு இந்ததிருமணத்தில் விருப்பமில்லை."
இடையில் குறுக்கிட்ட கெளதம் "அடிப்பாவி இதை முதலிலையே சொல்லி இருந்தால் நானும் ஜெனியுடன் சந்தோஷமாக இருந்திருப்பேனே" என கோபப்பட்டான்.
"கெளதம் கூல் அவளைப் பேசவிடுங்கள்" ராஜா
கம்மிப்போன தொண்டையைச் செருமிக்கொண்டு மீண்டும் வர்ஷா.
"அப்போதுதான் என் பெற்றோருக்கு என் காதலைச் சொன்னேன் அவர்களோ ஒரு போலீஸ்காரனை உனக்கு கட்டித் தரமுடியாது கெளதத்தைக் கட்டினால் தான் உனக்கு சொத்துக் கிடைக்கும் என என்னை மிரட்டினார்கள். இதனால் நான் அவர்களின் இஸ்டத்துக்கு உடன்பட்டேன்."
"பின்னர் கெளதமும் சேகரும் என்னைப் பெண் பார்க்க வந்தார்கள். அடுத்தநாள் சேகர் என்னைத் தொடர்பு கொண்டு கெளதம் ஜெனி காதலைச் சொல்லி இந்த திருமணத்தில் இருந்து என்னை விலகச் சொன்னான். இந்த விஷயம் எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது, எல்லாவற்றிலும் புதுசு கேட்கும் எனக்கு கணவன் மட்டும் செகண்ட் ஹாண்டா என்ற அதிர்ச்சியும் இந்த விஷயம் என் நண்பர்கள் நண்பிகளுக்குத் தெரிந்தால் பெரிய அவமானமும் நேரும் என்ற குழப்பத்தில் விதுரன், சூர்யபிரகாஷ் இருவரையும் வெளியில் சந்திக்க விரும்பினேன். அடுத்த நாளே நான் சூர்யபிரகாஷ், விதுரன், இந்தக் கதையில் முதன்முதலாக அறிமுகமாகும் தாஸ் என்ற சூர்யபிரகாசின் நண்பர் நால்வரும் கொள்பிட்டியிலுள்ள ஒரு ரெஸ்டோரண்டில் சந்தித்தோம். அங்கே... "
"இதைப் பார் ஹனி நீ ஒண்டுக்கும் கவலைப் படாதே, நான் எல்லாத்தையும் பார்த்துகொள்கின்றேன்" சூர்யபிரகாஷ்.
"கொய்யாலே இவ்வளவு நாளும் நீ கிழிச்சாய் " விதுரன்
"உங்கடை சண்டையை நிப்பாட்டுங்கோ, நானே குழம்பிப்போய் இருக்கிறன், இப்ப என்ன செய்யலாம்" வர்ஷா.
"ஓகே எல்லோரும் கவனமாக கேளுங்கோ" எனச் சொல்லிய சூர்யபிரகாஷ் சுற்று முற்றும் பார்த்தபடி தன் கையில் இருந்த வொட்காவை ஒரு உறிஞ்சு உறிஞ்சுபோட்டு தன் திட்டத்தை சொல்லத் தொடங்கினான்.
"வர்ஷா நாம எல்லோரும் பக்கா பிளானாக இரண்டு கொலைகள் செய்யவேண்டும், அந்த கொலைகளை செய்தது கெளதம் என அவனை மாட்டிவிட்டால் போதும் உனக்கும் உன் திருமணத்தில் இருந்து விடுதலை, எனக்கும் நீ கிடைப்பாய் விளங்குதோ."
"ஓம் விளங்குது ஆனால் யார் அந்த கொலைகளைச் செய்வது? எப்படிச் செய்வது? " வர்ஷா
"என் நண்பன் தாஸ் தான் எல்லாவற்றையும் செய்யப்போகின்றான், இவன் ஒரு ஹைடெக் கிரிமினல் " சூர்யாபிரகாஸ்.
"அப்போ நான் எப்படியும் கெளதத்தை திருமணம் செய்யத்தான் வேண்டுமா?" தன் சந்தேகத்தை வர்ஷா கேட்டாள்.
"இந்தப் பிளானுக்கே அதுதான் முக்கியம் இல்லையென்றால் கெளதத்தை மாட்டிவிடமுடியாது அத்துடன் நீ விவாகரத்து பெறும் போது கெளதத்திடம் இருந்து ஒரு தொகைப் பணத்தை ஜீவனாம்சமாகப் பெறலாம் இல்லையா you know matrimony may not be good but alimony is good" சூர்யபிரகாஷ்.
"திருமணம் முடிந்தபின்னர் நீயும் கெளதமும் கண்டி, காலி என கொழும்புக்கு வெளியில் ஹனிமூன் போங்கோ, நாங்கள் இங்கே எல்லாவற்றையும் கச்சிதமாக முடிக்கின்றோம்" விதுரன்.
"ம்ம்ம் நீங்கள் சொல்கின்றபடியே நான் செய்கின்றேன், ஆனாலும் இன்னொருத்தியுடன் லிவிங் டுகெதரில் இருந்தவனுடன் சில நாட்களாவது வாழவேண்டும் என்பது எனக்குப் பிடிக்கவில்லை." வர்ஷா
"இன்னொரு முக்கிய விஷயம் ஹனி நீ கெளதமுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியும் அவனுடன் அன்னியோன்யமாகத் தான் இருக்கவேண்டும், கொஞ்சம் பிசகினாலும் அவனுக்கு சந்தேகம் வந்திடும். More Over அவனுக்கு நீயும் செகண்ட் ஹாண்ட் தானே " மெல்லிய நக்கலுடன் சூர்யபிரகாஷ்.
"எல்லாம் எங்கடை பிளானின் படி ஒழுங்காக நடந்தது. எங்கடை ஹனிமூன் நேரத்தில் வர்ஷாவை தாஸ் கொலை செய்துவிட்டான். அடுத்தநாளே சேகரையும் போட்டாச்சு, சேகர் ஜெனி இருவரையும் யாழ் சேவகன் என்றவன் தான் கொலை செய்தான் என்ற அலிபியை ஏற்படுத்தவே அந்த பேக் புரொபைலை அவன் உருவாக்கினான். ஆனாலும் அந்த முட்டாள் ஸ்கிறின் ஷொட் எடுக்கும் போது மாட்டிக்கிட்டான்".
"அப்போ விதுரனை ஏன் கொன்றீர்கள்?" சிஜடி ராஜா
"அது அவன் செய்த துரோகத்திற்க்கு பரிசு விதுரன் ஒருமுறை நான் ட்ரிப் போனபோது பாத்ரூமுக்குள் எடுத்த படங்கள் அவை அதை வைத்து என்னை மிரட்டத் தொடங்கினான், அதைவிட அவனுக்கு இந்தக் கொலைகளால் தனக்கும் ஆபத்து எனத் தெரிந்து எம்மைவிட்டு விலகவும் முயன்றான்"
"ஏன் அவனை உங்கடை காசாலை சமாளிக்கமுடியவில்லையோ" சிஜடிராஜா
"அவனுக்கு காசைவிட என் உடம்பைப் பார்த்தபின்னர் என் உடம்பின் மீதுதான் ஆசை, தன்ரை சபலத்தினால் தனக்கு தானே ஆப்படித்துவிட்டான்"
"இதுதான் சொந்த செலவில் சூனியம் "
ஜோக்கடித்த கெளதத்தை முறைத்துப் பார்த்த ராஜா வர்ஷாவை தன் கண்களாலேயே மேலே சொல்லவும் என்றார்.
"விதுரனை சூர்யபிரகாஷ் கொன்றுவிட்டார் அத்துடன் அவனின் லப்டாபில் என்னுடைய படங்களும் சூர்யபிரகாசின் படங்களும் இருந்தன அதனால் அவனுடைய லப்டாப்பையும் உடைக்கவேண்டி வந்தது. எல்லாம் சரியாக போய்க்கொண்டிருந்தபோது சூர்யபிரகாஷ் எப்படி அரெஸ்ட்டானான் என்பதுதான் எனக்கு புரியவில்லை" என முடித்தாள் வர்ஷா.
"இனி நான் சொல்கின்றேன்" என்ற ராஜாவை
"ஒரு நிமிடம் மிஸ்டர் ராஜா இப்போ மை டேர்ன்" என்றான் கெளதம்.
"வர்ஷா உன்னை உன் பணத்திற்காகவும் அதைவிட உன் அழகிற்காகவும் ஜெனியை கைவிட்டுவிட்டு கட்டியது என் தப்புத்தான். ஆனாலும் திருமணத்தின் பின் நான் உனக்கு விசுவாசமாகத்தான் இருந்தேன் ஹனிமூனிலும் ஓய்வு கிடைத்த சில நிமிடங்களுக்கு நீ உடனடியாக உன் லாப்டாப்பைத் திறப்பதும் பேஸ்புக்கையும் உன் மெயிலையும் செக் பண்ணுவது எனக்கு எரிச்சலைத் தந்தாலும் நான் சந்தேகப்படவில்லை"
"எஸ்க்யூஸ் மீ" என்றபடி பிரிட்ஜில் இருந்து ஜில்லென்று ஒரு கிளாஸ் தண்ணி குடித்தபின்னர் கெளதம் தொடர்ந்தான்.
"நாங்கள் கொழும்பு வந்தபின்னரும் வீட்டில் தங்காமல் ஹோட்டலின் இன்னும் கொஞ்ச நாள் என்ஜோய் பண்ணுவம் என்றபோது எனக்கு உன் மேல் மெல்லிய சந்தேகம் வந்தது, விதுரன் உன்னைச் சந்தித்த இரவில் நான் நித்திரைபோல் நடித்தேன், ஆனாலும் வெளியில் வந்து நீங்கள் கதைத்ததை கேட்கவில்லை. அதே நேரம் அடுத்த நாள் நீ உன் லாப்டாப்பில் பேஸ்புக்கில் ஆதவன் என்றவனுடைய வெற்றிமீது வெற்றி வந்து என்னைச் சேரும் என்ற பாடலின் லிங்குக்கு லைக் பண்ணுவதைப் பார்த்துவிட்டேன்,அத்துடன் ஆதவனின் காதல் பாடல்களுக்கு நீ அடித்த கொமெண்டுகளும் லைக்குகளும் எனக்கு கொஞ்சம் சந்தேகம் தந்தன. அதே நேரம் அந்தப் பெயரில் இருப்பர் யார் எனப் பார்த்தால் அவரின் புரொபைல் படம் நடிகர் கமலஹாசன் ஈமெயில் ஐடியும் athavansp@yahoo.com என இருந்தது இருவருக்கும் பொதுவான நண்பராக விதுரன். அடுத்தநாள் விதுரன் கொலை செய்யப்பட்டதை அறிந்த நான் இந்த விடயத்தை சிஜடி ராஜாவிடம் ரகசியமாகத் தெரிவித்தேன். "
"ஓக்கே கெளதம் இனி என் டேர்ன்" என சிஜடி ராஜா தொடங்கினார்.
"கெளதம் ஆதவன் பற்றிச் சொன்னதும் அவரின் புரொபைலை கொஞ்சம் நோண்டினேன் அதில் சூர்யபிரகாசும் யாழ் சேவகனும் ஆதவனின் நண்பன் என இருந்தது. அப்போதுதான் என் சந்தேகம் சூர்யபிரகாசின் மேல் வரத்தொடங்கியது. இடையில் யாழ் சேவகன் போலி என்பதும் தெரிய வந்தது, சூர்யபிரகாசின் மேல் சரியான ஆதாரம் கிடைக்காமல் அரெஸ்ட் செய்யமுடியாது என்பதால் ஆதாரம் கிடைக்கும் வரை காத்திருந்தேன். அந்த ஆதாரமும் உடனேயே கிடைத்தது விதுரனின் பேர்சில் கிடைத்த போட்டோவில் வர்ஷாவின் தோளின் மேல் சூர்யபிரகாஷ் கைபோட்டபடி அருகே விதுரன் நிற்கும் படம் தான் அது"
"வர்ஷா, விதுரன், சூர்யபிரகாஷ் என எல்லோரும் ஒரே நேர்கோட்டில் வந்ததும் உடனடியாகவே சூர்யபிரகாசை கைது செய்யும் படி ஆணையிட்டேன், ஆனாலும் அவன் எங்கள் எந்த ட்ரீட்மெண்டுக்கும் அசையவில்லை. சூர்யபிரகாஷ் தான் கொலையாளி என நிரூபிக்க எம்மிடம் எந்த ஆதாரமும் இல்லை என்பது அவனுக்குத் தெரியும் அவனின் போலி புரொபைல்கள் கோர்ட்டில் எடுபடாது. அதே நேரம் சூர்யபிரகாசின் வீட்டைச் சோதனைப் போட்ட எமக்கு வர்ஷா வைத்திருக்கும் துப்பாக்கி போன்ற இன்னொரு துப்பாக்கியும் சில தோட்டாக்கள் சுடப்பட்ட நிலையில் கிடைத்தது."
"இவ் யூ டோண்ட் மைன்ட்" என்ற படி ஒரு கோல்ட் லீவை பத்த வைத்தபடி தொடர்ந்தார் ராஜா.
"விதுரனை தன்னுடைய இன்னொரு துப்பாக்கியால் கொன்றுவிட்டு வர்ஷாவின் துப்பாக்கி போன்ற துப்பாக்கியால் அவனின் உடமைகளைச் சேதப்படுத்தினான் சூர்யபிரகாஷ், இதுவும் கெளதமை மாட்டவைக்கும் சதிதான். இங்கே தான் சூர்யபிரகாசுக்கு எதிராக விதி விளையாடியது கெளதம் வடிவில். கெளதம் என்னுடன் கதைத்திருக்காவிட்டால் நாங்களும் கேஸ் முடியவேண்டும் என்ற எரிச்சலில் கெளதத்தை கைது செய்து கேசை மூடியிருப்போம்."
"எல்லாம் சரி மிஸ்டர் ராஜா நேற்று இங்கே எம்மைச் சுட்டவர்கள் யார்?" கெளதம்.
"அதுவும் வர்ஷா அண்ட் கோவின் நாடகம் தான் தாஸும் அவனது கூட்டாளிகள் சிலரும் தான், வர்ஷாவிற்க்கு மெல்லிய காயத்தை ஏற்படுத்துகின்றது போல் சுடுவதுடன் முடிந்தால் என்னை போடுவதும் அவர்களின் திட்டம். சகல மாஸ்டர் பிளானும் சூர்யபிரகாசின் மெயிலில் இருக்கின்றது. குற்றவாளிகள் எவ்வளவு பெரிய மூளைசாலிகள் என்றாலும் ஒரு இடத்தில் எப்படியோ தடுமாறுவார்கள். சூர்யபிரகாசும் அப்படித் தடுமாறிய இடம் தான் அந்த ஈமெயில். தாஸ் குழுவின் போலீசிடம் அகப்பட்டால் கெளதம் தான் இதன் மாஸ்டர் மைன்ட் எனச் சொல்லி மாட்டிவிடுவது என சகல திட்டமும் அதில் இருந்தது, அவர்களின் திட்டத்திற்க்கு அப்பால் பட்ட கொலைதான் விதுரனின் கொலை ஆனாலும் அந்தக் கொலையால் தான் குற்றவாளிகள் அகப்பட்டும் கொண்டார்கள்." என தன்னுடைய பேச்சை முடித்துக்கொள்ள இருந்த ராஜா
"ஓஓ மறந்துபோனேன் அந்த ஈமெயிலை மடையன் சூர்யபிரகாஷ், விதுரன், தாஸ், வர்ஷா என அனைவரிடைய பெயரையும் போட்டிருந்தது தான் எல்லோரையும் சிக்கவைத்தது" என்றபடி அந்த ஈமெயிலின் பிரிண்டை கெளதத்துக்கு காட்டினார்.
"Subject KK எனப்போட்டிருக்கே KK என்றால் என்ன?" கெளதம்.
"கொலைக்காற்று" வர்ஷா
"மிஸ்டர் ராஜா கிரேட் இன்வெஸ்டிகேசன்" என்ற கெளதம் கண்கலங்கியபடி ஆனாலும் என் லைவ்தான் இப்படிப்போய்விட்டது என விம்மினான்.
"டோண்ட் வொறி கெளதம் திருமணம் மட்டும் தான் வாழ்க்கை இல்லை, இந்த பிரச்சனைகளை மறந்துவிட்டு சில நாட்களில் நீங்கள் விரும்பினால் இன்னொரு வாழ்க்கையை தேடுங்கள், அதுவும் கிடைக்கவில்லை என்றால் மீண்டும் பேச்சிலார் லைவ்வை என்ஜோய் பண்ணுங்கள், எனிவே கேஸ் முடியும் வரை என்னுடன் தொடர்பில் இருங்கள்"
"வர்ஷா லெட்ஸ் கோ" என்றபடி அருகே இருந்த பெண் கான்ஸ்டபிளிடம் வர்ஷாவை அழைத்துவரும் படி கண்காட்டினார் ராஜா.
தன்னுடைய வரட்டுக்கெளரவத்தாலும் பிடிவாதத்தாலும் வாழ்க்கையை ஜெயிலில் கழிக்க முகத்தை தொங்கபோட்டுக்கொண்டு போகும் வர்ஷாவை அந்த அப்பார்மெண்ட் மக்கள் பரிதாபம் கோபம் அனுதாபம் கலந்த பார்வை பார்த்தார்கள்.
சில நாட்களில் நீதிமன்றமும் நேரடிக்குற்றவாளிகளான சூர்யபிரகாஷ், தாஸ் இருவருக்கும் தூக்குத் தண்டனையும் குற்றத்துக்கு உடந்தையான வர்ஷாவுக்கு பத்தாண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்ததுடன், சிறப்பாக துப்புத் துலக்கிய சிஜடி ராஜாவுக்கு பாராட்டையும் அள்ளிவழங்கியது.
நீதிமன்றத்தைவிட்டு மகிழ்ச்சியுடன் வெளியில் வந்த ராஜாவின் மொபைலில் மும்மொழிகளிலும் பாராட்டுச் செய்தி இருந்தது அனுப்பியவரின் பெயரைப் பார்த்த ராஜாவிற்க்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.
முற்றும்.
பின்குறிப்பு : ஒரு கதையின் முடிவை அதுவும் ஏற்கனவே பலரால் எழுதப்பட்ட பகுதிகளின் முடிவை எழுதுவது எவ்வளவு கஸ்டம். முன்னைய பதிவுகளை பல தடவை படித்துப்பார்த்து முடிச்சுகளை ஒருமாதிரி அவிழ்த்துவிட்டேன். இனிமேல் தொடர்கதை எழுதினால் கடைசியாக எழுத எவனாவது என்னைத் தெரிவு செய்தால் அவர்களுக்கு KK தான்.
எழுதியது வந்தியத்தேவன் at 26 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் கதை, தொடர்பதிவு, பதிவர் வட்டம், மர்மம். திகில்
ஐ மிஸ் யூடா!
வணக்கம் என் பெயர் கிரீஷ். என்னை உங்கள் பலருக்குத் தெரிந்திருக்கும். பல்கலைக் கழகம் ஒன்றில் பொறியியல் படிக்கும் ஒரு சாமனியன். பின்னேரங்களில் வெள்ளவத்தைச் சந்தியிலும், இராமகிருஷ்ண வீதி கடற்கரையிலும் நண்பர்களுடன் அரட்டை அடிப்பவன். இரவில் வலைகளில் மேய்வதும் ட்விட்டரில் ட்விட்டுவதும் பேஸ்புக்கில் உலாவுவதும் எனக்கு பிடித்தவை.
என் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் போல் இருக்கின்றது அதுதான் என் சின்ன பிளாஷ்பேக்கை உங்களுக்குச் சொல்லபோகின்றேன். இந்தக் கதை நடந்து சில மாதங்களாகிவிட்டன ஆனாலும் இப்போதுதான் சொல்ல நேரம் வந்தது இல்லை இல்லை இப்போதுதான் என் பழைய பரணில் இருந்து தட்டி எடுத்தேன். முன்னுரை போதும் கதைக்கு வருகின்றேன்.
"ஹாய் ஆர் யூ இன் கொழும்பு?"
பேஸ்புக்கில் என் தேவதையிடம் இருந்து எனக்கு மெசேஜ் நடுநிசியில் வந்திருந்தது ஏனோ அந்த நேரம் என்னால் பதிலளிக்கமுடியாமல் "யா" என அடுத்த நாள் காலையில் பதிலளித்தேன்.
காலையில் அம்மாவின் சுப்ரபாதத்திற்க்கு முன்னம் என் போன் "நான் தேடும் செவ்வந்திப்பூ" ரிங்ரோனியது. புது நம்பர் இந்த நேரத்தில் யாராக இருக்கும் என நினைத்தபடி "ஹலோ" என்றால். "அடேய் இராட்சதன் எப்படி இருக்கின்றாய்" என அதே ஸ்வீட் குரல்.
"ஏய் நீ எப்படி லோக்கல் நம்பரில்" ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியுடன் நான்.
"ஹாஹா" என தன் ரேட்மார்க் சிரிப்புடன் தான் உறவினர் ஒருவரின் திருமணத்திற்க்கு கொழும்பு வந்திருப்பதாகவும் ஒரு சில நாட்கள் நாட்டில் நிற்பேன் எனவும் கூறினாள். பின்னேரம் நேரமிருந்தால் தான் தங்கியிருக்கும் உறவினர் வீட்டில் என்னைச் சந்திக்கச் சொல்லி விலாசத்தையும் சொல்லி பாய் சொல்லிவிட்டாள்.
கிட்டத்தட்ட 5 வருடங்களின் பின்னர் அவளைச் சந்திக்கும் ஆவலில் நான் நேரத்திற்க்கே பஸ் ஏறிவிட்டேன். பஸ்சினுள் அவளைச் சந்தித்த நாட்களை மீண்டும் நினைத்தேன். 
அவள் பெயர் ஜெசி. எங்கள் பாடசாலை மாணவர் ஒன்றுகூடலில் பக்கத்து பாடசாலையிலிருந்து வந்த தேவதை. அவளுக்கு அருகில் அமர்வதற்க்கு எங்கள் மாணவர்களிடையே பலத்த போட்டி. அதிர்ஷ்டம் எனக்கு ஏனோ அன்றைக்கு அடித்துவிட்டது. கோவில் திருவிழா காலத்தில் ஒன்றுகூடல் நடந்தபடியால் நான் விரதம் அதனால் மாமிசம் சாப்பிடாமல் சைவ உணவுப் பக்கம் சென்றுவிட்டேன். அங்கே அவளும் சைவ உணவு. அன்றைக்கு அவள் என்னருகில் சாப்பிடும்போது இளையராஜாவின் வயலின் ஆயிரம் தாமரை மொட்டுகளை பின்னணி இசைத்தது.
"ஹாய் நான் ஜெசி நீங்கள்"?
"நான் கிரிஷ் சுருக்கமாக கிரிதரன்"
அப்புறம் நான் எங்கே சாப்பிட்டது அவளின் பேச்சும் சிரிப்பும் என்னைச் சாப்பிடவிடவில்லை.
இப்படி ஆரம்பமான எங்கள் சந்திப்பு உறவினர் ஒருவரின் திருமண வைபத்தில் கொஞ்சம் கொஞ்சம் என்னுள் காதலாக மலர்ந்தது. ஏஎல் நேரம் காதல் கத்தரிக்காய் என விழுந்தால் படிப்புக்கு ஆபத்து என நினைத்து நான் என் காதலைச் சொல்லவில்லை.
என் படிப்பு பாழாகிவிடக்கூடாது என்ற சுயநலத்தில் நான் அன்றைக்கு என் காதலைச் சொல்லவில்லை. சில நாட்களின் அவளும் உயர்கல்விக்காக கனடாவிற்க்குச் சென்றுவிட்டாள் இடையில் சிலகாலம் ஈமெயில்கள் மூலம் எங்கள் தொடர்பு இருந்தாலும் பின்னர் காலமும் நேரமும் அவளை தற்காலிகமாக மறக்கச் செய்துவிட்டன. சில மாதங்களில் அவளின் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்தபோது பேஸ்புக்கில் அவளைக் கண்டுபிடித்து பிரண்டாக்கினாலும் காதல் கத்தரிக்காயைப் பற்றிக் கதைக்க என் ஈகோ விடவில்லை.
இம்முறை எப்படியும் அவளிடம் என் காதலைச் சொல்லவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தேன் இறங்கவேண்டிய இடம் பழைய நினைவுகளை உதறவிட்டு அவளின் உறவினர் வீட்டுக்குச் சென்றேன்.
அழைப்பு மணியை அடிக்க திறந்தது என் தேவதை தான். முன்னர் பார்த்ததை விட அழகாக கொஞ்சம் குண்டாக அதே சிரிப்புடன் "வாங்கோ" என்ற படி கதவைத் திறந்தவள் உள்ளே அமரும் படி சொல்லிவிட்டு தன்னுடைய மடிக் கணணியில் ஏதோ பிரச்சனை சரி செய்யச் சொன்னாள்.
கணணியைச் சரி செய்தபடி சுற்றும் முற்றும் பார்த்தால் வீட்டில் ஏனையவர்களைக் காணவில்லை. எங்கே எனக்கேட்டாள் அனைவரும் சொப்பிங் சென்றுவிட்டார்கள் எனக் கூறினாள்,
டேய் கிரிஷ் இதுதான்டா நல்ல தருணம் உன் காதலைச் சொல்லிவிடு என என் மனம் சொன்னாலும் மூளையோ இப்போ வேண்டாம் எனத் தடுத்து வெற்றியும் அடைந்தது.
தனிமை முன்னாள் இருப்பதோ என் தேவதை ஆனாலும் என் காதலை கட்டுப்படுத்திக்கொண்டு நான் அவளைப் பார்க்க அவளோ நிலம் நோக்கி நான் நோக்காக் கால் என்னை நோக்கி நகுந்தாள்.
"நாளைக்கு நீங்கள் ப்ரியோ?"
அடிப்பாவி மவளே நீ கேட்டால் நான் எப்பவும் ப்ரீ என நினைத்துக்கொண்டே " இல்லை நாளைக்கு எனக்கு லெக்சர்ஸ் இருக்கு ஆனால் கட் பண்ணலாம்"
"அப்போ தன்னை எம்சிக்கும் ஹவுஸ் ஓவ் பாஷனுக்கும் கூட்டிக்கொண்டூ போவியளோ"
"சரி"
அடுத்தநாள் ஷொப்பிங் என அவளுடன் நான் அலைந்ததில் நாள் போனதே தெரியவில்லை. சில நேரம் தெரிந்தோ தெரியாமலோ என் கையைப் பிடித்தவள் எனக்கு பிடித்த ஐஸ்கிறீம் ஃபிளேவர் தான் தனக்கு பிடிக்கும் என என் ஐஸ்கிறீமை வாங்கிச் சுவைத்தாள்.
"படிப்பு முடிய என்ன பிளான் ஜெசி"
"வேறை என்ன நல்ல வேலை எடுக்கவேண்டும்"
"அதற்க்குப் பிறகு என்ன?" விடக்கண்டனாக நான்.
"ம்ம்ம் என்ன ஒன்றுமில்லையே" மெல்லிய நக்கல் சிரிப்புடன் "அக்கா அண்ணா சொல்கின்றவருக்கு கழுத்தை நீட்டவேண்டும்"
"ஏன் உனக்கென ஒரு விருப்பமும் இல்லையோ"
"ஹாஹா நான் நல்ல பிள்ளை எனக்கு எந்த விருப்பமும் இல்லை, நீங்கள் என்ன கேட்க வாறியள் என்பது புரிகிறது ஆனால் இப்ப என்னால் ஒன்றும் சொல்லமுடியாது, சரி சரி நேரம் போய்விட்டது இனிப்போவமோ" என நழுவிட்டாள்.
இதன் பின்னர் அவள் மீண்டும் கனடாவிற்க்கு திரும்பச் செல்லும் வரை அவளுடன் சுற்றித் திரிந்தாலும் நான் வாயே திறக்கவில்லை.
கனடா சென்றபின்னர் அவளிடம் இருந்து எனக்கு வந்த எஸ் எம் எஸ்
" ஐ மிஸ் யூ டா".
பின்குறிப்பு : யாவும் கற்பனை பெயர்களும் இடமும் எவரையும் சுட்டுவன அல்ல.
எழுதியது வந்தியத்தேவன் at 31 கருத்துக் கூறியவர்கள்
ஹாட் அண்ட் சவர் சூப் 23-09-09
நமீதாவும் மீனாவும்
தமிழச்சியான மீனாவும் குஜராத்திக்காரியான நமீதாவும் தமிழ்த் திரையுலகத்திற்க்கு நன்கு தெரிந்தவர்கள். இருவரும் தற்போது இருவேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவர்களாக இருக்கின்றார்கள்.
மீனா விஜய் தொலைக்காட்சியின் Boys Vs Girls நிகழ்ச்சியிலும் நமீதா கலைஞரில் மானாட மயிலாடவிலும் நடுவர்கள். நமீதா கஸ்டப்பட்டு பெரும்பாலும் தன் நடனம் பற்றிய கருத்துக்களை தமிழிழையே சொல்கின்றார். இந்தத் தமிழை மச்சான்ஸ் தமிழ் என்கின்றார்கள். ஆனால் பச்சைத் தமிழச்சியான மீனாவோ மறந்தும் தமிழில் பேசாமல் ஏதோ பிரித்தானியாவில் பிறந்துவளர்ந்தவர் போல் பீட்டர் விடுகின்றார். அதிலும் அவருக்கு நடனத்தைப் பற்றி கொஞ்சம் தெரியும் போல் இருக்கிறது. அதனால் ஒரு குறிப்பிட்ட சொற்களை வைத்து ஜல்லி அடிக்கின்றார். இன்னொரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட நமீதாவிற்க்கு தமிழ் மேல் இருக்கும் ஆர்வம் ஏன் மீனாவிற்க்கு இல்லை.
Boys Vs Girls என்ற நிகழ்ச்சியில் பெண்கள் போடும் கத்தல்கள் மிகவும் கேவலமாக இருக்கின்றது. தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அவர்களிடம் வரவில்லை. சீசன் 1 ல் இருந்த பிரியதர்ஷினி, பிருந்தா தாஸ் போன்றவர்களுக்கு இருந்த அடக்கம், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை எதுவும் இல்லாத அடங்காப்பிடாரிகளாக இருக்கின்றார்கள் அந்தப் பெண்கள். ஒரு சிலர் திருமணமானவர்கள்(அவர்களின் கணவர்கள் மிகவும் பாவப்பட்ட ஜென்மங்கள்).
விஜய் தொலைக்காட்சியினருக்கு நல்ல இளமையான நடிகை கிடைக்கவில்லையா? எதற்காக கிழவி மீனாவை நடுவராக்கினார்களோ?
உன்னைப் போல் ஒருவனும் சில பதிவர்களும்
வழக்கம் போல் கமல் படம் சிலரிடம் சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது. உன்னைப்போல் ஒருவனில் கமல் முஸ்லீம்களைத் தூற்றுகின்றார் என ஒரு குறூப் கமல் மேல் காண்டுடன் திரிகிறது.
ஐயா அறிவுஜீவிகளே உன்னைப் போல் ஒருவனின் கதை A Wednesday படத்தில் நீராஜ் பாண்டே எழுதிய கதை. ஹிந்தியில் முஸ்லீம்களை தீவிரவாதியாக்கியபோது உங்கள் கீபோர்ட்டுகள் எங்கே போனது? (இப்போ பேனையால் எழுதுபவர்களை விட கீபோர்ட்டில் தட்டுபவர்கள் தான் அதிகம்). ஹிந்தியை பக்கம் பக்கமாக உங்களால் கிழிக்கமுடியாமல் ஹிந்திப் படத்தை ஆஹோ ஓஹோ எனப் புகழ்கின்றீர்கள், ஆனால் ஒரு தமிழன் அந்தப் படத்தை அப்படியே தந்தால்( ஹிந்தி பார்த்த பலரின் விமர்சனம்) உடனே அவரை பார்ப்பன் என இகழ்கின்றீர்கள்.
என்னுடைய சிற்றறிவுக்கு சல்மான் கான், ஷாருக் கான், அமீர்கான் போன்ற ஹிந்தி நடிகர்கள் முஸ்லீம் என நினைவுக்கு வருகின்றது. அந்தக் கான்களே ஹிந்திப் படத்தில் முஸ்லீம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டியபோது அமைதியாக இருக்கின்றார்கள். இந்தியப் படங்களில் காட்டப்படும் முஸ்லீம் தீவிரவாதிகள் பெரும்பாலும் பாகிஸ்தானிகளாகத் தான் இருக்கின்றார்கள். அண்மையில் வெளிவந்த நியூயோர்க் உட்பட பல படங்களில் அப்படித்தான் காட்டுகின்றார்கள் ஆனால் நீங்கள் மட்டும் கமல் காட்டியவுடன் துடித்துப் போவீர்கள்.
நஷ்ருதீன் ஷாவிற்க்கு ஒரு நியாயம் கமலுக்கு ஒரு நியாயமா? முட்டையில் மயிர் பிடுங்காமல் படத்தைப் பார்த்தால் பிடித்துதா? இல்லையா என எழுதுவதை விட்டுவிட்டு கமலைப் பார்ப்பன் எனத் திட்டுவதையும் கமலின் ரசிகர்களை பூணூல் போடாத பார்ப்பனியவாதிகள் எனத் திட்டுவதையும் விட்டுவிடுங்கள். சினிமாவை சினிமாவாக மட்டும் பாருங்கள்.
தேசிய அவமானங்கள்
நேற்று இலங்கை எதிர் தென்னாபிரிக்கா கிரிக்கெட் போட்டி ஆரம்பிக்க முன்னர் இரு நாட்டுத் தேசிய கீதங்களையும் இசைத்தார்கள். வழக்கம் போல் மக்கள் தேசியகீதத்திற்க்கு எழுந்து நின்று மரியாதை கொடுத்தார்கள். சிலரை கமெரா காட்டியபோது அதிர்ச்சியடைந்தேன், காரணம் அவர்கள் கைகளில் பியருடன், சிலர் குடித்தபடி தேசியகீதத்திற்க்கு மரியாதை கொடுக்கின்றார்கள்.
இந்த பியர் விடயம் ஏற்கனவே ஐசிசியின் இங்கிலாந்தில் நடந்த இருபதுக்கு 20 போட்டிகளிலும் இடம் பெற்றது. விளையாட்டுப் போட்டிகளில் ஒரு நாட்டின் தேசியக் கொடிக்கு கொடுக்கும் மரியாதை அற்றுப்போன நிலையில் (சில விளையாட்டுப் போட்டிகளில் குத்தக்கூடாத இடங்களில் பெண்கள் தேசியக் கொடியைக் குத்தியிருப்பார்கள்) தேசியகீதத்திற்க்கும் இப்போது அவமானம் ஏற்படத்தொடங்கிவிட்டது.
போட்டிகளில் விளையாடும் நாடுகள் ஒட்டுமொத்தமாக குரல் கொடுத்தால் இந்த அவமானங்கள் குறையலாம் இல்லையென்றால் நீடிக்கும் அபாயமே இருக்கின்றது.
பின்குறிப்பு : தேசியக்கொடியைக் குத்தக்கூடாது இடத்தில் குத்திய பெண்ணின் படம் சென்சார்ப் பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் தணிக்கை.
ஒரு குட்டிக் கதை
ஒரு காட்டிலை பெரிய சிங்கம் ஒன்று ராஜாவாக வாழ்ந்து வந்தது. அந்த சிங்கத்தின் காலத்தில் புலியும் மானும் ஒன்றாக ஆற்றில் தண்ணீர் குடிக்கும். யானையும் கரடியும் ஓடிப்பிடிச்சு விளையாடும் என சகல மிருகங்களும் ஒற்றுமையாக இருந்தன. சில வருடங்களுக்கு முன்னர் அந்தச் சிங்கம் இறந்துபோனது. அந்தக் காடு மட்டுமல்ல பக்கத்துக் காடுகள் கூட செய்தி அறிந்து சோகமாக இருந்தன.
அந்த சிங்கத்தின் இறப்பின் பின்னர் சிங்கத்துடன் நல்ல உறவாக இருந்த கழுதை ஒன்றை அனைவரும் ஏகமனதாக ராஜாவாக்கினார்கள். கழுதையும் சில காலம் நல்லாத்தான் காட்டை ஆட்சி செய்தது. நாளாக நாளாக கழுதைக்கு தான் என்ற அகங்காரம் வந்து தன்ரை காட்டைவிட சகல காட்டில் இருக்கும் மிருகங்களுக்கு தான் ராஜா என தானே அறிவித்துக்கொண்டது. ஏனைய மிருகங்களும் சிங்கத்துக்கு வேண்டப்பட்டவர் கழுதை என்றபடியால் பொறுத்துக்கொண்டனர்.
ஒருநாள் அந்த சிங்கத்தின் நினைவுநாள் அந்தக் காட்டில் பிரம்மாண்டமாக நடந்தது. சகல காடுகளில் இருந்தும் மான், குரங்கு, நரி என சகல விலங்குகளும் வந்தன. ஆனால் அவை அனைத்தும் சிங்கத்தை மறந்துவிட்டு கழுதையைப் பற்றியே பேசின, பாடின, ஆடின.
இதைப் பார்த்த அந்த சிங்கத்தின் தம்பி முறையான சிங்கம் ஒன்று சொன்னதாம் "நம்ம அண்ணாச்சி சிங்கம் கழுதையை வைக்க வேண்டிய இடத்தில் வைக்கவில்லை".
சதீஸ் ஜோக்:
எழுதியது வந்தியத்தேவன் at 11 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் கதை, கமல், சினிமா, சின்னத் திரை, சூப், விளையாட்டு
சற்றடே நைட் பார்ட்டிக்கு போலாம் வர்றியா? - 18+
அண்மைக்காலங்களாக வெள்ளி, சனி இரவுகளில் பெரும்பாலான நகரங்களில் இரவு களியாட்ட விடுதிகளில் நடக்கும் கூத்துகள் பிரபலமடைந்திருக்கின்றன. சில இடங்களில் அரசியல்புள்ளிகளின் பிள்ளைகள் அடித்த கூத்துகள் கொலை வரை வந்திருக்கின்றன.
ஒருமுறை என் நண்பர்கள் இருவர் இந்த அனுபவத்தைப் பெற்றிருந்தார்கள், அவர்களின் அனுமதியுடன்(பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன)அவர்கள் எனக்குச் சொன்ன கதை உங்களுக்காக. ஒரு முன்னெச்சரிக்கைப் பதிவு இது.
ஹரியும் சுதாவும் பிரபல மென்பொருள் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள். அத்துடன் இருவரும் கூட்டாகவும் சில மென்பொருட்களை வடிவமைத்து சில சிறிய தனியார் நிறுவனங்களுக்கும், கடைகளுக்கும் விநியோகிப்பார்கள். இருவரும் வார இறுதியில் மட்டும் சந்திப்பார்கள், மற்றும்படி, நெட்டும் மொபைலும் தான் அவர்களுக்கு துணை.
பெரும்பாலும் இவர்கள் இருவரையும் பம்பலப்பிட்டியுள்ள ஒரு பிரபல பாரிலும், வெள்ளவத்தையிலுள்ள பிரபல ஹோட்டலிலும் சனிக்கிழமைகளில் சந்தித்து ஒன்று அல்லது இரண்டு பியர் மட்டும் குடிக்கும் மன்னிக்கவும் அடிக்கும் சிறிய குடிகாரர்கள்.
ஒருமுறை இருவரும் சேர்ந்து வடிவமைத்த புரொஜட்டிற்க்கு ஒரு தொகை பணம் கிடைக்கவே நீண்ட நாள் ஆசையான ஹரோக்கி பாரில் சென்று பார்க்கமுனைந்தார்கள்.

சனிக்கிழமை மாலையே ஹரி பரபரப்பாக இருந்தான், முதல்முறை ஹரோக்கி பாருக்குப் போவதால் கொஞ்சம் படபடப்பும் இருந்தது. சுதா ஒரு 7 மணியளவில் பிக்கப் பண்ண காரில் வருவதாகச் சொன்னபடியால் அவன் வரும் வரை நெட்டில் சிங்கையிலுள்ள நண்பனிடம் அவனின் அனுபவங்களைக் கேட்டு தன்னை கொஞ்சம் தயாரிக்கொண்டான். அத்துடன் எப்படியும் ஒரு ஐந்தாயிரத்திற்குள் சகல செலவுகளும் முடிந்துவிடும் என நினைத்து 5 பச்சை நோட்டுகளை பேர்சிற்க்குள் வைத்திவிட்டு முகத்தைக் மீண்டும் ஒரு தடவை குளித்துவிட்டு தலைக்கு ஜெல் எல்லாம் இட்டு ஏதோ பொம்பிளை பார்க்கபோற நினைப்புடன் காத்திருக்க,வீட்டு வாசலில் சுதாவின் கார்க் ஹோர்ன் கேட்டது.
இருவரும் காரில் ஏறி கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரபல ஹரோக்கி பாரினுள் நுழைய வாசலிலையே காவலாளி எட்டு மணிக்குத் தான் திறப்போம் என்று விட்டு, செருப்பு அணிந்திருந்த சுதாவைப் பார்த்து "செருப்புடன் உள்ளே விடமாட்டோம், சப்பாத்து மாத்திக்கொண்டு வாருங்கள்" என்றார்.
"என்ன மச்சான் உனக்கு இது தெரியாதா?" என ஹரி நக்கலடித்தான்.
"ஓமாடா நான் டெய்லி வாறவன் தானே, சும்மா பகிடிபண்ணாமல் வா வீட்டைபோய் மாத்திக்கொண்டு வருவோம்" என்ற படி சுதா காரை வீடு நோக்கித் திருப்பினான்.
மீண்டும் அந்த பாருக்கு ஒரு 8 மணியளவில் வந்தார்கள். வாசலில் நுழைவு அனுமதி என ஆளுக்கு ஆயிரம் ரூபா பிடிங்கினார்கள்.
"என்ன மச்சான் இங்கே உள்ளே போறதற்கே காசு பிடுங்குகிறான்" ஹரி.
"டேய் அப்படித்தான்டா சும்மா வாயை மூடிக்கொண்டுவா" சுதா.
இருவரும் அரக்கப் பரக்க உள்ளே போனால் ஒருதரையும் காணோம் மேசைகள் அனைத்தும் காலியாகவே இருந்தன.
"மச்சான் என்னடா இது ஒருதரையும் கணோ " என ம் மை ஹரி முடிக்கமுன்னர்
"ஹாய் வெல்கம் ரு அவர் ஹெவன்" என்ற படி ஒரு கறுப்புடைத் தேவதை சினேகா புன்னகையுடன் வந்தது.
ஹரியின் காதில் "டேய் வரவேற்பே பலமாக இருக்கு" என்றான் சுதா.
இருவரையும் அந்த சினேகா சிரிப்புக்காரி ஒரு மூலையிலுள்ள மேசையில் அமரும்படி சொல்லிவிட்டு அவள் சென்றுவிட்டாள்.
அவள் சென்ற சில செக்கன்களில் இரண்டு அதே கறுப்பு உடைத் தேவைதைகள் வந்து இருவருக்கும் இடையில் அமர்ந்தார்கள்.
" ஹாய் கைய்ஸ் ஐயாம் கயனி" என்றாள் ஸ்லிவ்லெஸ் பனியனுடன் இருந்த கயனி.
"ஹாய் ஐயாம் சமந்தி" என்ற இன்னொரு பனியன்காரி கையுடன் கொண்டந்த மெனு கார்ட்டை ஹரியிடம் நீட்டினாள்.
" ம்ம் எமக்கு இரண்டு போத்தல் பியர், ஹாட் பட்டர் கட்டில் பிஸ் ஒரு போர்ஷன், சிப்ஸ் ஒரு போர்ஷன்" ஹரி
இவர்கள் பியர் ஓடர் பண்ணியதைப் பார்த்து கஜனி சமந்தியைப் பார்த்து மெல்லிதாக சிரித்தாள்.
"ஓ ஐ நீட் வன் பாக்கெட் கோல்ட்லீவ்" சுதா. அவன் கம்பஸில் கற்றுக்கொண்ட நல்லபழக்கத்தில் புகைபிடித்தலும் ஒன்று. ஹரி புகைக்கு எதிரி.
கஜனி ஹரியின் அருகில் இருக்க, சமந்தி அந்த ஓடரை எடுத்துவரச் சென்றாள்.
" ஏன் நீங்கள் நேரத்திற்க்கு வந்தீர்கள், இங்கே கஸ்டமர்ஸ் ஒரு பத்து மணியளவில் தான் வருவார்கள், அதிகாலை 3 மணிவரை டான்ஸ் எல்லாம் ஆடுவார்கள்" கஜனி.
"அடியே உனக்கு எங்கே தெரியும் நாங்கள் பிந்தி வீட்டைபோனால் வழியில் எத்தனை டொக்கியூமெண்ட்ஸ் காட்டவேண்டும் என்று" என மனதில் நினைத்த ஹரி
" நோ நோ நாளைக்கு எங்களுக்கு கொஞ்சம் வேலை இருக்கு அதுதான் கொஞ்சம் ஏர்லியாக வந்து ஏர்லியாக கிளம்பப்போகின்றோம்" என்றான்.
அவர்கள் பேசிக்கொண்டிருக்கவே அவர்களின் ஐட்டங்கள் வந்துசேர்ந்தன.
சமந்தியே கிளாஸ்களில் விட்டு இருவரிடம் கொடுத்துவிட்டு, ஒன் மினிட் வெயிட் பண்ணுங்கள் என்று விட்டு இன்னும் இரண்டு கிளாஸ்களில் கொண்டுவந்த திரவத்தில் ஒன்றை கஜனியிடம் கொடுத்துவிட்டு இன்னொன்றை தான் வைத்திருந்தாள். 
நால்வரும் சியர்ஸ் சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக அருந்தத் தொடங்கினார்கள்.
"மச்சான் உவளள் என்னடா குடிக்கிறாளாள்" என மெல்ல சுதாவின் காதைக் கடித்தான் ஹரி.
"பொறடா கேட்பம்"
"நீங்கள் குடிப்பது கோக் தானே" என ஹரி அசட்டுத்தனமாக கேட்க, இருவரும் விழுந்துவிழுந்து சிரித்தார்கள்.
"யூ ஆர் சோ பனி மேன், இது கோக் அல்ல, கஜனி குடிப்பது வொட்கா, நான் குடிப்பது விஸ்கி" சமந்தி.
அப்போதுதான் தாம் பியர் ஓடர் பண்ணும் போது அவளள் மெல்லிதாக சிரித்ததன் அர்த்தம் இருவருக்கும் புரிந்தது.
அடுத்த பெக் குடிக்கமுன்னரே சுதாவின் பாக்கெட்டிலிருந்த சிகரட்டை எடுத்து கஜனி பத்தவைத்தாள். அந்த சிகரட்டிலேயே சமந்தியும் இன்னொன்றை பத்தவைத்தாள்.
"அடப்பாவியள் இவளள் படு மொடேர்ன் பெண்களாக இருக்கிறாளளே" என மனதி ஹரி நினைத்தான்.
ஒரு சில நிமிடங்கள் கழிந்ததும்
"டின்னர் என்ன ஓடர் செய்யப்போகின்றீர்கள்" சமந்தி.
"டின்னரா? நோ எமக்கு டின்னர் வேண்டாம், நாங்கள் வீட்டில் சாப்பிட்டுக்கொள்கின்றோம்" ஹரி.
"இட்ஸ் ஓக்கே எனிவே, நாங்க டின்னர் சாப்பிடப்போகின்றோம்" என்ற சமந்தி தனக்கும் கஜனிக்கும் சிக்கன், மட்டன், பிஸ், புரியாணி என பல ஐட்டங்கள் ஓடர் செய்தாள்.
சிறிது நேரத்திலையே ஓடர் செய்த டின்னரை இவர்களுடன் இருந்து சாப்பிட்டுவிட்டார்கள்.
சாப்பிட்டுமுடிந்ததும் சமந்தி "லெட்ஸ் டான்ஸ்" என ஹரியை இழுத்தாள்.
ஹரி வெட்கப்பட்டுக்கொண்டே " நோ நோ ஐ கான்ட் டான்ஸ் சோ சொறி" என்றான்.
"ஓ மை கோட் தீஸ் டமில்ஸ் நெவர் டான்ஸ்" என கஜனி இனத்தையே சாடினாள்.
பின்னர் அவர்கள் இருவரும் சாப்பிட்டது சமிப்பதற்க்காக அங்கே ஏற்கனவே ஆடிக்கொண்டிருந்தவர்களுடன் இணைந்து கெட்ட ஆட்டம் போட்டார்கள்.
ஒரு பதினொரு மணியளவில் ஹரி சுதாவிடம்
"மச்சான் இனி நாங்க கிளம்புவம்" என்றான்
"ஓமடா இனி இங்கே இருந்தால் எங்கடை டவுசரை உருவிப்போட்டுத்தான் உவளள் விடுவளள்" சுதா.
சுதா கஜனியைக் கூப்பிட்டு பில்லைத் தரவும் என்றான்.
ஒரு நிமிடம் என்றபடி சென்ற கஜனி, சமந்தியுடன் கூட பில்லுடன் வந்தாள்.
பில்லை ஹரியிடம் நீட்டினாள், பில்லைப் பார்த்த ஹரிக்கு அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுவிட்டது. ஹரியின் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை அவதானித்த சுதா பில்லை வாங்கிப் பார்த்தால் ரூபாய் பன்னிரண்டாயிரம்.
கஜனி, சமந்தி சாப்பிட்ட குடித்த ஐயிட்டங்களுக்கும் இவர்கள் தலையில் பில் வந்த உண்மை அப்போதுதான் இருவருக்கும் உறைத்தது.
இருவரிடம் இருப்பதோ எட்டாயிரம் மட்டும் ஏற்கனவே இரண்டாயிரம் வாசலில் பிடிங்கிப்போட்டார்கள்.
உடனே சுதா கஜனியிடம் "நீங்கள் கார்ட் எடுப்பீர்களா" என்றான்
" ஓ யெஸ்"
நல்ல காலம் கார்ட்டிருந்தபடியால் தப்பிவிட்டோம் என நினைத்து கார்ட்டில் பணத்தைச் செலுத்திவிட்டு இருவரும் தப்பினோம் பிழைத்தோம் என வீட்டுக்குச் சென்றார்கள்.
ஒரு 18+ கதையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு நல்ல வகையில் எழுதியிருக்கின்றேன்.
எழுதியது வந்தியத்தேவன் at 30 கருத்துக் கூறியவர்கள்

