பொன்னியின் செல்வன் கல்கியின் காலத்தால் அழியாத வரலாற்று நவீனம். அருள்மொழிவர்மன், வந்தியத்தேவன், பழுவேட்டரையர்கள், கந்தன்மாறன், பார்த்திபேந்திரன், இலங்கை தண்டநாயக்கர்கள் என பலவீரர்களையும் நந்தினி, குந்தவை, வானதி, பூங்குழலி, மணிமேகலை போன்ற அழகிகளையும் அரசிலாற்றங்கரை, கடம்பூர், பழையாறை என வரலாற்றுப் புகழ்பெற்ற இடங்களையும் மறக்கமுடியுமா?
சங்க இலக்கியங்கள் பெண்களை பத்தினி, சித்தினி, சங்கினி, அத்தினி என நான்கு வகையாகப் பிரித்துள்ளது. அதேபோல் கல்கியும் தன்னுடைய கதைநாயகிகளையும் பெண்களின் குணங்களுக்கு ஏற்றதுபோல் பாத்திரப்படுத்தியுள்ளார். அதில் முக்கியமான நான்கு பெண்களைப் பற்றியதே இந்தப் பதிவு.
குந்தவை
"சரித்திரத்தில் ராஜராஜன் என்று புகழ் பெற்ற அருள்மொழிவர்மனின் சகோதரி. அரசிளங் குமரி என்றும் இளைய பிராட்டி என்றும் மக்களால் போற்றப்பட்ட மாதரசி. சோழ ராஜ்யத்தின் மகோன்னதத்திற்கு அடிகோலிய தமிழ்ப் பெரும் செல்வி. ராஜராஜனுடைய புதல்வன் ராஜேந்திரனை எடுத்து வளர்த்து வீராதி வீரனாயும் மன்னாதி மன்னனாயும் ஆக்கிய தீரப் பெண்மணி."
என குந்தவையை கல்கி அறிமுகம் செய்கின்றார் அவளின் அழகை
"ஏழுலகத்துக்கும் ராணி எனத் தகும் கம்பீரத் தோற்றமுடைய பெண்மணி. செந்தாமரை மலரின் கம்பீர சௌந்தரியம் உடையவள். பூரண சந்திரன்;ஆடும் மயில்; இந்திராணி; வேகவாஹினியான கங்காநதி;"
என வர்ணிக்கும் கல்கி இளையபிராட்டியின் அழகை வர்ணிப்பதைவிட அவரை ஒரு அரசியல் சாணக்கியம் மிகுந்தவராகவும், வீராங்கனையாகவுமே வாசகர்களிடம் உலாவவிடுகின்றார்.
இதனால் தான் என்னவோ வீராதிவீரனான வந்தியத்தேவனுக்கு ஆதித்த கரிகாலன் தன்னுடைய சகோதரியைப் பற்றி அவனுக்கு காஞ்சியில் கூறியபோதே ஒரு மெல்லிய மையல் ஏற்பட்டதும் அது பின்னர் அரிசிலாற்றங்கரையில் சந்தித்த முதல் சந்திப்பில் காதலாக மாறவும் காரணமாக இருந்திருக்கலாம். அதே நேரம் வந்தியத்தேவன் எப்போதும் கடமையே கண்ணானவன், குந்தவைக்கோ, தனது குடும்ப மற்றும் நாட்டு அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவே நேரம் போதவில்லை ஆகவே இவர்கள் இருவருக்கும் காதலிக்க நேரம் கிடைக்கவில்லை.
புத்திசாதுரியமான, தனது சகோதரனின் வெற்றிக்கு பாடுபட்ட , தலைமைத்துவத்துக்குரிய பெண்ணுக்கு சிறந்த உதாரணமாக குந்தவையை கூறலாம்.
வானதி
"கொடும்பாளூர் இளவரசியின் அழகை வர்ணிக்கும்படி கவிஞர்களைக் கேட்டால் அவர்கள் அந்த மங்கை நல்லாளின் அழகை அந்தி மாலையின் சௌந்தரியத்துக்கு ஒப்பிடுவார்கள் வீணைத் தந்திகளில் விரல்களை ஓட்டி இன்னிசை எழுப்பிய நங்கை, குமுத மலரின் இனிய அழகை உடையவள், காலைப் பிறை, பாடும் குயில், மன்மதனின் காதலி, குழைந்து நெளிந்து செல்லும் காவேரி."
என வானதியைப் பற்றி வர்ணிக்கும் கல்கி இவரை ஒரு இளவரசி என்பதை விட சாதாரண பெண்ணாகவே பல இடங்களில் காட்டியிருக்கின்றார். எல்லாவற்றிற்கும் பயந்த, தானாகவே எந்த முடிவும் எடுக்கமுடியாத காதலில் விழுந்த ஒரு பேதையாகவே வானதி உலாவருகின்றாள். இப்போதைய நடிகைகளில் சிறுத்தை தமன்னா போல அல்லது லைலா போல் வானதி இருந்திருப்பாள்.
அதே நேரம் வாழ்ந்தாள் அருள்மொழிவர்மனுடன் தான் வாழுவேன் என காதல் பைத்தியம் பிடித்ததும் இவருக்குத் தான்.
அதே நேரம் சிற்றரசின் இளவரசி சோழப்பேரரசின் பட்டத்து ராஜாவை காதலித்து திருமணம் செய்ததன் மூலம் தகுதி, அந்தஸ்து போன்றவை அந்தக்காலத்தில் இல்லையோ என்ற ஐயமும் வாசிப்பவர்களுக்கு வரும். வந்தியத்தேவன் குந்தவை காதலும் இதேபோல் ஒரு சிற்றரசன் பேரரசி காதல் தான்.
நந்தினி
பொறாமை, கோபம், சுயநலம் என பல கெட்டகுணங்களை உடையவள், ஆனானப்பட்ட பழுவேட்டரையரையே கவிழ்த்ததுடன் ஆதித்தகரிகாலன், வந்தியதேவன், கந்தன்மாறன், பார்த்திபேந்திரன் போன்ற வீரர்களையும் ஒரு கணமேனும் தன் அழகில் மயக்கிய பெண் வடிவில் வந்த மாயப்பிசாசுதான் நந்தினி. நாகபாம்பின் நஞ்சும் பாயும் புலியும் ஆக்ரோசமும் பழுவூர் இளையராணியான நந்தினியிடம் இயல்பாகவே ஒட்டிக்கொண்ட குணங்கள்.
தன்னுடைய சுயநலத்திற்காக ஒரு இனத்தையே(சோழர்கள்) பழிவாங்க முயன்று தோற்ற இராட்சசி. (இந்தவரிகள் பிரபல அரசியல்வாதியை இனம் காட்டினால் அதற்க்கு நான் பொறுப்பல்ல).
நந்தினியின் அழகை வந்தியதேவன் வாயிலாக நம்பிக்கும் வாசகர்களுக்கும் கல்கி இவ்வாறு சொல்கின்றார்.
"அவ்வளவு ஸ்திரீகளிலும் பழுவேட்டரையரின் இளைய ராணி தான் பிரமாத அழகுடன் விளங்கினாள்! மற்ற கருநிறத்து மங்கையர்க்கு நடுவில் அந்த ராணியின் முகம் பூரண சந்திரனைப் போல் பொலிந்தது. அரம்பை, ஊர்வசி, திலோத்தமை, இந்திராணி, சந்திராணி எல்லோரும் அவளுக்கு அப்புறந்தான்!"
அதே நேரம் கல்கி நந்தினியின் அழகை வர்ணித்ததுபோல் குந்தவையையோ வானதியையோ வர்ணிக்கவில்லை.
"குந்தவை யானையிலிருந்தும் நந்தினி பல்லக்கிலிருந்தும் இறங்கினார்கள். நந்தினி விரைந்து முன்னால் சென்று குந்தவைக்கு முகமன் கூறி வரவேற்றாள். அந்த வரவேற்பைக் குந்தவை புன்னகை புரிந்து அங்கீகரித்தாள். சோழநாட்டின் அந்த இரு பேரழகிகளையும் அங்கு ஒருங்கே கண்ட ஜனத்திரளின் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. நந்தினி பொன் வர்ணமேனியாள்; குந்தவை செந்தாமரை நிறத்தினாள். நந்தினியின் பொன்முகம் பூரணசந்திரனைப்போல் வட்ட வடிவமாயிருந்தது; குந்தவையின் திருமுகம் கைதேர்ந்த சிற்பிகள் வார்த்த சிலை வடிவத்தைப் போல் சிறிது நீள வாட்டமாயிருந்தது. நந்தினியின் செவ்வரியோடிய கருநிறக் கண்கள் இறகு விரித்த தேன் வண்டுகளைப்போல் அகன்று இருந்தன; குந்தவையின் கருநீல வர்ணக் கண்கள் நீலோத் பலத்தின் இதழைப்போல் காதளவு நீண்டு பொலிந்தன. நந்தினியின் மூக்கு தட்டையாக வழுவழுவென்று தந்தத்தினால் செய்ததுபோல் திகழ்ந்தது. குந்தவையின் மூக்கு சிறிது நீண்டு பன்னீர்ப்பூவின் மொட்டைப்போல் இருந்தது. நந்தினியின் சிறிது தடித்த இதழ்கள் அமுதம் ததும்பும் பவழச் செப்பைப் போல் தோன்றியது. குந்தவையின் மெல்லிய இதழ்களோ தேன் பிலிற்றும் மாதுளை மொட்டெனத் திகழ்ந்தது. நந்தினி தன் கூந்தலைக் கொண்டை போட்டு மலர்ச்செண்டுகளைப் போல் அலங்கரித்து இருந்தாள். குந்தவையின் கூந்தலோ "இவள் அழகின் அரசி" என்பதற்கு அடையாளமாகச் சூட்டிய மணி மகுடத்தைப்போல் அமைந்திருந்தது."
"இப்படியெல்லாம் அந்த இருவனிதா மணிகளின் அழகையும் அலங்காரத்தையும் தனித்தனியே பிரித்து ஒப்பிட்டுப் பார்த்து எல்லோரும் மகிழ்ந்தார்கள் என்று சொல்ல முடியாது தான். ஆயினும் பொதுப்படையாக இருவரும் நிகரில்லாச் சௌந்தரியவதிகள் என்பதையும், அங்க அமைப்பிலும் அலங்காரத்திலும் மாறுபட்டவர்கள் என்பதையும் அனைவருமே எளிதில் உணர்ந்தார்கள்."
ஒருவரின் பொறாமை கோபம் பழிவாங்கும் உணர்ச்சி அவருக்கு எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்க்கு சிறந்த உதாரணம் நந்தினி. குந்தவையிடம் அரசியல் சாணக்கியம் இருந்தது என்றால் நந்தினியிடம் அரசியல் சூழ்ச்சி இருந்தது.
பூங்குழலி
அருள்மொழிவர்மனையும் வந்தியத்தேவனையும் சமுத்திரராஜனிடம் இருந்து காப்பாற்றிய ஓடக்காரி. சேந்தன் அமுதனின் மைத்துணி. அருள்மொழிவர்மனுடன் தான் பட்டத்துராணியாக இருப்பதுபோல் கனவு கண்ட ஒருதலைக்காதல்காரி. பொன்னியின் செல்வனில் இன்னொரு சராசரிப் பெண். ஓடக்காரியாக இருந்தபடியாலோ என்னவோ இவளின் காதல் நிறைவேறவேயில்லை.
இவளின் அழகை சேந்தன் அமுதன் வந்தியதேவனுக்கு கூறும்போது "மானும் மயிலும் அவளிடம் அழகுக்குப் பிச்சை கேட்க வேண்டும். ரதியும் இந்திராணியும் அவளைப் போல் அழகியாவதற்குப் பல ஜன்மங்கள் தவம் செய்ய வேண்டும்." என்கின்றான்.
ஒருதலைக் காதலுக்கு சிறந்த உதாரணம் என்றால் பூங்குழலி அருள்மொழிவர்மன் மேல் வைத்திருந்த காதலையும் சேந்தன் அமுதன் பூங்குழலி மேல் வைத்திருந்த காதலையும் கூறலாம்.
இந்த நான்கு பெண்கள் மூலம் கல்கி பெண்களின் குணாதிசயங்களை பெரிதும் எடுத்தியம்பியிருக்கின்றார்.
எனக்கு குந்தவையை விட வானதியைத் தான் அதிகம் பிடித்திருக்கின்றது. குந்தவை பேரழகியாக இருந்தாலும் வானதியைப்போல் அடக்கம், அமைதி, விட்டுக்கொடுத்தல் போன்ற சில குணங்கள் அவரிடம் இல்லை. உங்களுக்கு பிடித்த அழகி யார்? பின்னூட்டத்தில் சொல்லிவிட்டுபோங்கள்.
பின்குறிப்பு :
தலைப்பைப் பார்த்து எனது வழக்கமான சொசெசூ கதை என நினைத்து வந்திருந்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல. இந்த நான்கு பெண்களில் வானதியைத் தவிர்த்து ஏனைய மூவர் மேலும் வந்தியதேவனுக்கு ஈர்ப்பு வந்தது மட்டும் உண்மை.
வந்தியத்தேவனும் நான்கு அழகிகளும்
எழுதியது வந்தியத்தேவன் at 24 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் கல்கி, பொன்னியின் செல்வன், வந்தியத்தேவன், விமர்சனம்
பொன்னியின் செல்வன் - வரலாற்றுத் தவறு
பெரும்பாலான வலைமனை வாசிகள் எப்படியும் ஒருதடவையேனும் பொன்னியின் செல்வனை ரசித்து ருசித்துப்படித்திருப்பீர்கள். வந்தியத்தேவனுடன் கடம்பூர், பழையாறை, அரசிலாற்றங்கரை, ஈழம், தஞ்சை என வலம் வந்திருப்பீர்கள். எத்தனையோ வரலாற்று நாவல்கள் வந்தாலும் பொன்னியின் செல்வன் படிப்பதுபோல் ஒரு உற்சாகம் ஏனைய நாவல்களில் குறைவாகவே இருக்கும்.
ஒரு வலையில் சுந்தரச்சோழரின் இறுதிக்காலத்தில் என்ன நடந்தது பற்றி அலசி ஆராய்ந்திருந்தார்கள்(அதன் சுட்டியை மறந்துபோனேன்) மதுராந்தகருக்கு என்ன நடந்தது? நந்தினி என்ன ஆனாள்? போன்றவற்றைப் பற்றிப் பலர் தங்கள் கருத்துகளைக் கூறியிருந்தார்கள்.
பொன்னியின் செல்வனில் அருள்மொழிவர்மன் ஒரு காரியத்தை மறுக்காமல் ஏற்றுக்கொண்டிருந்தால் சிலவேளை ஈழத்தில் தற்போது நடந்துகொண்டிருக்கும் கொடுமைகள் நடந்திருக்காது. ஈழப்போர்கள் வெடித்திருக்காது. யார் கண்டது ஈழமும் இந்தியாவின் ஒரு மாநிலமாகியிருக்கலாம். அருள்மொழிவர்மன் விட்ட தவறு என்ன? கல்கியின் பொன்னியின் செல்வனில் பாகம் இரண்டாகிய சுழற்காற்றில் இலங்கைச் சிங்காதனம் என்ற அத்தியாயத்திற்க்குள் நுழைவோம்.
அருள்மொழிவர்மனைத் தேடி ஈழத்திற்க்கு வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் பூங்குழலி உதவியுடன் வருகின்றான். அருள்மொழிவர்மனை வந்தியத்தேவனுடன் ஆழ்வார்க்கடியானும் சந்திக்கிறார்கள். அப்போது ஒரு பிஷு இவர்கள் மூவரையும் அழைத்துக்கொண்டு தங்கள் சபா மண்டபத்திற்க்கு கொண்டு செல்கிறார். அங்கே புத்த பிக்குகள் பலர் கூடியிருந்தார்கள் அவர்கள் மட்டுமல்ல நவரத்தினம் பதித்த தங்கச் சிங்காதனம் காணப்பட்டது. அதன் அருகில் பீடத்தில் மணிமகுடமும் உடைவாளும் செங்கோலும் காணப்பட்டன. அத்துடன் மகா தேரோ குருவும் நடுநாயகமாக வீற்றிருந்தார்.
மகா தேரர் ஆதிகாலத்திலிருந்து சோழர்களாலும் பாண்டியர்களாலும் கலிங்கத்தவர்களாலும் புத்த தர்மம் உள்ள ஈழநாட்டில் பல அட்டூழியங்கள் நடந்தனவென்றும் ஆனால் அருள்மொழிவர்மரின் காலத்தில் சிதைந்த விகாரைகளை பழுதுபார்க்க அரசர் கட்டளையிட்டார் என்றும் எந்த மன்னர்களினது காலத்திலும் இத்தகைய செயல் நடைபெறவில்லையென்றும் கூறி, அசோகர் எப்படி புத்தமதத்தை உலகெல்லாம் பரப்பினாரோ அப்படி நீங்கள் இந்த மஹா சாம்ராஜ்யத்துக்கு அதிபதியாகவேண்டும் என மஹா சபையினர் விரும்புவதாக கூறினார்.
கல்கியின் வரிகளில் இந்தக் காட்சி:
"இளவரசே, இதோ உங்கள் முன்னால் உள்ள சிங்காதனத்தைப் பாருங்கள். மணிமகுடத்தைப் பாருங்கள்.செங்கோலையும் பாருங்கள். இலங்கை இராஜ வம்சத்தைச் சேர்ந்த மன்னர்கள் அனைவரும் இந்தச் சிங்காதனத்தில் அம்ர்ந்து, இந்த மணிமகுடத்தைத் அணிந்து, இந்தச் செங்கோலைக் கையில் தரித்த பிறகே, புத்த சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசர்களானார்கள். துஷ்டகெமுனு சக்ரவர்த்தியும், தேவனம்பிய திஸ்சரும் மகாசேனரும் அமர்ந்து முடிசூடிய சிங்காதனம் இது. அவர்கள் சிரசில் தரித்த கிரீடம் இது. அவர்கள் கரத்தில் ஏந்திய செங்கோல் இது. இப்படிப்பட்ட புராதன சிங்காதனம் ஆயிரம் ஆண்டுகளாக அரசர்களைச் சிருஷ்டித்த சிங்காதனம் இதோ தங்களுக்காக காந்திருக்கின்றது. இதில் அமரவும் இந்த மணிமகுடமும் செங்கோலும் தரிக்கவும் தங்களுக்குச் சம்மதமா? எனக் கேட்கின்றார்.
ஆனால் இதனை மறுத்துவிடுகிறார் அருள்மொழிவர்மர். அன்றைக்கு மறுத்து ஒரு மிகப்பெரிய வரலாற்றுத் தவறை பொன்னியின் செல்வன் என்றழைக்கப்படும் அருள்மொழிவர்மன் விடுகிறார்.
அன்றைக்கு அவர் ஈழத்து அரியணையில் ஏறியிருந்தால் சிலவேளைகளில் ஈழத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்பட்டிருக்காது. ஈழ இராட்சியம் முழுவதும் சோழர்களின் புலிக்கொடி பறந்திருக்கும். அருள்மொழிவர்மருக்கு தான் அரியணையில் அமராமல் தன் சார்பில் வேறு சில நடவடிக்கைகள் எடுத்திருக்கலாம் அவை:
1. ஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவன் மூலம் சோழப்பேரரசில் அந்த காலத்தில் நிலவிய மதுராந்தகர், ஆதித்தகரிகாலருக்கிடையிலான இராட்சியப்போட்டியை மதுராந்தகரையோ அல்லது ஆதித்த கரிகாலரையோ ஈழத்து அரியணையில் ஏற்றி ஈழ இராட்சியத்தையும் சோழ இராட்சியமாக்கியிருக்கலாம். இதனால் தஞ்சையில் ஏற்பட்ட உள்நாட்டுச் சிக்கல் நீக்கியிருக்கும். (இதனை தற்போதைய சாணக்கியர் கலைஞர் மிக அழகாக கையாண்டுள்ளார்)
2.இரண்டாவது வந்தியத்தேவனுக்கு பட்டம் கட்டினால் இளையபிராட்டியார் குந்தவை ஒரு நாட்டின் அரசனை திருமணம் செய்யும் சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கும், ஆனால் அருள்மொழிவர்மர் அதனையும் செய்யவில்லை. இதற்கான காரணம் எனக்குத் தெரியும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றேன்.
ஆக அருள்மொழிவர்மர் செய்த தவற்றிற்கான தண்டனைகளை நாங்கள் பல காலமாக அனுபவிக்கவேண்டியுள்ளது. சிலர் இதனைக் கல்கியின் கற்பனை என்றும் சொல்லலாம் ஆனால் கற்பனை என்றாலும் 12பி படம் போல் யோசனை செய்ததில் தவறில்லை என்றே நினைக்கின்றேன். உங்கள் எண்ணக் குதிரையையும் பின்னூட்டங்கள் மூலம் தட்டுங்கள் .
எழுதியது வந்தியத்தேவன் at 23 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் ஈழம், கல்கி, பொன்னியின் செல்வன், வந்தியத்தேவன்
