தமிழகச் சகோதரர்களுக்கு ஒரு மடல்

தமிழகச் சகோதரர்களுக்கு ஒரு மடல்

வணக்கம் சகோதரர்களே

நான் பிறந்ததிலிருந்து தமிழ்நாட்டு புத்தகங்கள் திரைப்படங்கள் எனப் பல வாசித்தும் பார்த்தும் இருக்கிறேன். கடந்த சில வருடங்களாக தமிழ் சீரியல்கள் எம் கலாச்சாரத்தை சீரழிப்பது போல் அல்லது கொச்சைப் படுத்துவதுபோல் வந்துகொண்டிருக்கின்றன. திரைப்படங்கள் எமது கலாச்சாரத்தை இவ்வளவு கேவலப்படுத்தவில்லை.

நான் சீரியல்கள் பார்ப்பதில்லை ஆனாலும் வீட்டில் ஏனையோர் பார்க்கும் போது வசனங்கள் கேட்கும். சில நேரங்களில் பார்க்கவேண்டிய சூழ்நிலை நண்பர்கள் வீட்டிற்கோ அல்லது உறவினர்கள் வீட்டிற்கோ போனவேளையில் அவர்கள் சீரியல் பார்ப்பார்கள் போனதற்காக நானும் பார்க்கவேண்டிய நிர்ப்பந்தம். ஆதலால் நானும் சீரியல் ஓரளவு பார்த்தவன் என்ற வகையில்,
சகோதரர்களே உங்களிடம் சில கேள்விகள்.
1. சகல நாடகங்களிலும் யாரோ ஒரு மாமியார் மருமகளை கொடுமைப் படுத்திக் கொன்டேயிருப்பார். இன்றும் தமிழகத்தில் இந்த கொடுமை நிகழ்கிறதா?

2. பொலிஸ்சுடன் ரவுடிகளும் சேர்ந்து நல்லவர்களை தேடிச் சென்று கொடுமைசெய்வார்கள். தமிழக காவல்துறையைப் பற்றிய அவிப்பிராயம் இதனால் மாசுபடுகின்றது. இப்படியா தமிழக காவல்துறை?

3. அனேக கதாநாயகன்கள் இரண்டு மனைவி அல்லது ஒருத்தியை மற்றவருக்கு தெரியாமல் வைதிருப்பார். இப்படியா நம் தமிழக ஆண்கள் அனைவரும்?(சகல சீரியல்களிலும் யாரோ ஒரு ஆண் இரண்டு பெண்களுடன் தொடர்பிலிருப்பார்).

4. பெண் இனத்தையே வில்லியாக காட்டுவது ஏன்?

5. மிக முக்கியமான விடயம் அரசியல்வாதியாக வருபவர் எப்போதும் ரவுடிகளுடன் திரிவார். தமிழக அரசியல்வாதிகளை ஏன் இவர்கள் இப்படி கேவலமாகக் காட்டுகிறார்கள் இதனை எந்த அரசியல்வாதியும் எதிர்க்கவில்லையா?

6. கொலை செய்வது ஒருவரை எப்படி பழிவாங்குவது என விலாவாரியாகக் காட்டுவதால் இதனைப் பார்க்கும் மக்கள் அதனை பார்த்து உளவியல் ரீதியாகப் பாதிக்கப் படுகிறார்கள். இதெல்லாம் வன்மூறைகளை ஊக்குவிப்பவை ஆகாதா?

இதனை விட பல விடயங்கள் யதார்தத்தை மீறுவன. இவைகளை ஏன் எந்த தணிக்கை குழுவோ அல்லது ஏதும் பொது அமைப்போ இதுவரை கண்டிக்கவில்லை?

நன்றிகள்
மீண்டும் சந்திப்போம்

அறிவு மணமும் ஐயப்பர் தலமும்.

அறிவு மணமும் ஐயப்பர் தலமும்.

இந்து சமயத்தின் ஏற்றத்துக்கும் இந்துமதத்தின் பெருமைக்கும் உரியதாக விளங்குகிறது திருச்சி ஐயப்பர் சுவாமி கோவில். மத மூட நம்பிக்கைகளும் அர்த்தமற்ற சில கிரிகைகளும் இந்துக் கோயில்களை ஆட்டிப்படைக்கும் இந்த காலத்தில் அறிவு மணம் கமழ்கின்ற ஆலயமாக அது விளங்குகிறது.
ஆலயத்தின் முகப்பில் வலது பக்கத்தில் "எந்த நாட்டவரும் எம்மதத்தவரும் எந்த இனத்தினரும் எந்த சாதியினரும் உள்ளே வரலாம்" என்ற வசனம் தெளிவாகப் பொறிக்கப்பட்டிருக்கின்றது. இடது பக்கத்தில் "சாதி இரண்டொழிய வேறில்லை" என்று தொடங்கும் ஒளவையார் பாடல் காணப்படுகிறது.
ஆலயத்துள் செல்லும்போது இடப்பக்கத்தில் அலுவலகம் உள்ளது அதில் அறிவு நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அத்தோடு மக்களின் நல்வாழ்வுக்கு உபயோகமான அறிவுரைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் மிகக் குறைந்த விலையில் விற்பனைக்கு இருந்தன. உதாரணமாக பெற்றோரின் எதிர்பார்ப்புகளை பற்றி பிள்ளைகள் அறிந்திருக்கவேண்டியவை என்று ஒரு துண்டுப்பிரசுரமும் இன்னொன்று பிள்ளைகள் எதிர்பார்ப்புகள் பற்றி பெற்றோர்கள் அறிந்திருக்கவேண்டியவை என்றும் இரண்டு மொழிகளிலும் தனித்தனியாக துண்டுப்பிரசுரங்கள் உண்டு.
ஆலயத்தின் இரு மருங்கிலும் அழகிய பூந்தோட்டம் அதற்குள் காணப்படும் ஒரு அறிவித்தல் இப்படி இருந்தது. "அறுகம்புல் கூட அனுமதி பெற்றே பறிக்கலாம்' பூமரங்களுக்கு பக்கத்தில் இன்னொரு அறிவித்தல் 'அப்படியே விட்டுவிடுங்கள் சிரிக்கட்டும் செடியில் பூக்கள்' என்றிருந்தது. இன்னொரு இடத்தில் காணப்பட்ட அறிவித்தல் ' இருக்குமிடத்திலேயே இவைகளும் இருக்கட்டுமே'.
'செல்லிடத் தொலைபேசிகளைக் கொண்டு வராமலே இருப்பது உத்தமம் கொண்டு வந்து உபயோகப் படுத்தாதது மத்திமம் கொண்டு வந்து உபயோகப்படுத்துவது அதமம்' என்றும் ஓர் அறிவித்தல் காணப்பட்டது. பச்சைதமிழருக்கு சொந்தமான ஊடகங்களே கொச்சைத் தமிழ் பேசும் தமிழ் நாட்டில் என் இச்சைக்குரிய தமிழுக்கு இவ்வாறு இனிமை சேர்க்கும் அறிவித்தல் தமிழ்ப் பண்பாட்டைப் பறை சாற்றி நின்றன. வாசித்தபோது வாயெல்லாம் இனித்தது.
உட்பிரவேசிக்காதே, அதைத் தொடாதே இதைத் தொடாதே உத்தரவின்றி உள்ளே நுழையாதே என்றெல்லாம் எதிர்மறையாக அதிகார தோரணையுடன் நமது ஆலயங்களில் அறிவித்தல்களைப் பார்த்திருக்கும் நமக்கு ஐயப்ப சுவாமி ஆலயத்தில் இனிய தமிழில் கனிவான வகையில் காணப்பட்ட அறிவித்தல்கள் மிகவும் மகிழ்வைத் தந்தன.
1999 ல் கார்கில் போரில் வீரமரணம் அடந்த திருச்சியைச் சேர்ந்த மேஜர் சரவணனுக்கு செலுத்துவோம் என்ற நினைவுச் சின்னமும் காணப்படுகிறது. இன்னொரு சிறப்பு அம்சம் என்னவென்றால் 12 வயதுக்கு மேற்பட்ட சகோதரிகளுக்கு அனுமதிக்கப்பட்ட ஆடைகள் என்று சேலை தாவணி மற்றும் துப்பட்டாவுடன் கூடிய சுரிதார் மட்டுமே என்று இருந்தது.
ஆலய வளவினுள் நுழைகின்றபோது காணப்பட்ட அந்த அறிவித்தலில் ஒரு பெண்ணின் இரண்டு பெரிய வண்ணப்படங்கள் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு சுரிதார் அணிபவர்கள் எப்படி அணிய வேண்டும் என்று பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. துப்பட்டா முன்பக்கமாக மார்பை மறைக்கும் வகையில் அணியக்கூடிய இரண்டு முறைகள் காட்டப்பட்டிருந்தன.
ஓரிடத்தில் தாயை வணங்குவோம் என்ற அறிவித்தலோடு ஒரு ஆழி(சுவிச்) பொருத்தப்பட்டிருக்கிறது. அந்த ஆழியை அமத்தியதும் "அம்மாவென்றழைக்காத உயிரில்லையே" என்ற யேசுதாஸ் பாடல் மிக அமைதியாக ஒழித்தது.
அழகிய சிறிய கோவில் மக்கள் அமர்ந்திருந்து தியானம் செய்யக்கூடிய வகையில் வசதிகளோடு கூடிய தியான மண்டபம் சுற்றிவர வெண்மணல் நிறந்த வீதி இப்படி ஆலயம் என்கின்ற பெயருக்கேற்ற வகையில் அக்கோயில் அமைந்திருக்கின்றது.

எழுதியவர் எஸ் ஸ்ரீஸ்கந்தராசா - கனடா
நன்றி வீரகேசரி.

காதல் உணர்வுபூர்வமானதா அறிவுபூர்வமானதா?

காதல் உணர்வுபூர்வமானதா அறிவுபூர்வமானதா?

எனது முதல் பதிவாக என்ன போடலாம் என்று தலையைச் பிச்சுக்கொண்டிருந்த வேளை நான் ஏன் காதல் பற்றி எனது முதல் பதிவு இருக்ககூடாது என யோசித்து அதையே கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணி எழுதுவம் என எண்ணி என் முதல் உளறலாக காதலை உளறுகிறேன் பார்த்தியலா காதல் என்றாலே உளறல்தான்.

ஆதாம் ஏவாள் காலத்திலிருந்து இந்த காதல் என்ற மூன்று எழுத்து சமாச்சாரம் மனித சமூகத்தை ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டது. அதிலும் இந்த ஹைடெக் காலத்தில் அது ஒரு பொழுது போக்கு அம்சமாகி மாறியதுதான் ரொம்பக் கொடுமை.

கண்டதும் காதல் இன்று நேற்று அல்ல இராமாயண காலத்திலேயே தொடங்கிவிட்டது. அதுதான் அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினான். தற்போது அண்ணனும் நோக்கியா அவளும் நோக்கியா என மாறிவிட்டது. 2000 வருடத்தில் நோக்கியா என்ற ஒரு மொபைல் போன் வரும் என அன்றே கம்பன் அறிந்துவிட்டான் போலும் (பல கவிஞர்கள் தீர்க்கதரிசிகள்).

காதலுக்கு விஞ்ஞானரீதியிலான விளக்கமாக இருவேறு பாலினர் ஏற்படும் ஒருவகையான ஹோமோன்களின் மாற்றமே காதல். வேறு சிலர் ஒரேமாதிரியான அலைவரிசை உடைய இருவரிடம் ஏற்படும் மாற்றம் காதல் என்கின்றனர். விஞ்ஞான ரீதியாக எடுத்துகொண்டால் காதல் உணர்வுபூர்வமானது அதாவது உணர்ச்சிவசப்படுவது அல்லது வசப்படுத்துவது.

அடுத்து இன்றைய நாளில் பல காதல்கள் வெறும் இனக்கவர்ச்சி என பலராலும் சிலாகிக்கப் படுகிறது. அதிலும் உண்மையில்லாமல் இல்லை வெறும் கவர்ச்சிக்காக அல்லது காதலிக்காமல் விட்டால் தமது ஸ்டேஸ்டட் ஏதோ குறைந்துவிடும் என எண்ணி தீர யோசிக்காமல் காதல் வலையில் ஆண்களும் பெண்களும் பலர் உள்ளனர். இத்தகைய சமயங்களில் காதல் அறிவுபூர்வமானது என்ற கருத்து அடிபட்டுப்போகிறது.

அறிவுபூர்மான காதல் என்றால் என்ன? நீங்கள் காதலிக்கும் பெண்ணோ ஆணோ உங்களுக்கு ஏற்றவரா? உங்கள் எதிர்காலம் இவரினால் மேம்படுமா? உங்களிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கின்றனவா? விட்டுகொடுப்புகளுக்கு இடமிருக்கா? என பல வேறுபட்ட கேள்விகளுக்கு நீங்கள் பதிலளித்து அவை உங்களால் முடியும் என நினைத்தால் காதலிக்கலாம் இல்லாவிட்டால் காதலுக்கும் உங்களுக்கும் வெகு தூரம்.

சிலர் நினைக்கலாம் இப்படியெல்லாம் நினைத்தால் அது எப்படிக் காதலாகும் என்று. அது தவறு காதலைப் பொறுத்தவரை உடனடித் தீர்மானத்தின் பார்க்க நீண்ட அல்லது நன்று யோசித்த ஒரு முடிவு எப்பவும் நன்மையாகும்.

காதல் இன மொழி மத சாதி வேறுபாடுகளை உடைக்கின்றது என்பது எவ்வளவுக்கு எவ்வளவு உண்மையோ அதே அளவு இரு வேறுபட்ட இன மொழி மத சாதியினரிடம் பகையையும் வளர்க்கின்றது. சிலவேளைகளில் உறவினர்களிடையே ஏற்படும் காதல் அவர்களிடையே பிளவை ஏற்படுத்தியுள்ளது.

எல்லோரும் ஏதோவொரு கட்டத்தில் இந்த காதலைக் கடந்துவந்திருப்பீர்கள். சிலருக்கு வெற்றியளித்திருக்கலாம் சிலருக்கு வெறுப்பளித்திருக்கலாம். தோல்வியளித்திருக்கலாம் என நான் கூறவில்லை. ஏனெனில் காதல் ஒருபோதும் தோற்றதில்லை. காதலர்கள் தான் தோற்றுள்ளனர். லைலா மஜ்னுவிலிருந்து தோற்ற காதலர்கள்தான் பெரிதாக பேசப்படுகிறார்களே ஒழிய வெற்றியடைந்த காதலர்கள் பற்றி ஒருவரும் கதைப்பதில்லை.

காதலைப் பற்றிய எனது கருத்து திருமணமுடிக்கும் மனைவியையோ அல்லது கணவனையோ காதலிப்பது சிறந்ததாகும்.

அறிமுகம்

என்னுடைய சில மனப் பதிவுகளை இங்கே பதிவு செய்ய உள்ளேன். வலைப்பூக்களில் நானே ராஜா நானே மந்திரி என்பதால் என் விருப்புக்கேற்ற வகையில் பதிவுசெய்யலாம். என் உளறல்கள் என பெயரிட்டிருப்பதன் காரணம் பலருக்கு எனது பதிவுகள் உளறலாகவே தோன்றும். ஆனாலும் சில உளறல்கள் உங்களைக் கவர்ந்தால் பின்னூட்டம் இடுங்கள்.அத்துடன் உங்கள் ஆலோசனைகள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த பதிவுகள் யாருடைய மனதையோ அல்லது எந்த மதத்தையோ இனத்தையோ பாதிக்காது எனபதுக்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன்.

ஊக்கம் அளித்த இனிய நண்பர்கள் லெ.பொன்னுசாமிக்கும் கிருஸ்ணாவுக்கும் நன்றிகள்.
எனக்கு பிடித்த விடயங்கள் இனிமேல்