பிரித்தானிய அருங்காட்சியகம் British Museum

உலாத்துறது ஊர் சுத்துகின்றது சிலருக்கு மிகமிகப் பிடித்தமான விடயம். பெரும்பாலானவர்கள் தம்மை ஒரு வாஸ்கொடகாமாவாகவோ அல்லது கொலம்பஸாகவோ நினைத்தபடி ஊர் சுத்துவார்கள். அப்படி ஊர் சுத்துறதை ஒரு சிலர் மற்றவர்களுக்கும் பயன்படும் படி எழுத்துவடிவிலோ(அந்தநாளில் இதயம் பேசுகிறது மணியன் இந்த நாளில் எங்கடை உலாத்தல் மன்னன் கானா பிரபா) ஒளிவடிவிலோ சிறப்பாக தருவார்கள்.

இவ்வாறு ஊர் சுத்தலின் விளைவாக தவ.சஜிதரனினதும் குழுவினரதும் ஒரு முயற்சி தான் யாதும் ஊரே என்ற பெயரில் வெளியாகி இருக்கும் ஒளியாவணத்தொகுப்புத்தான் பிரித்தானிய அருங்காட்சியகம்.

பிரித்தானிய அருங்காட்சியகமானது பிரித்தானியா சூரியன் அஸ்தமிக்காத இராட்சியமாக விளங்கிய காலத்தில் ஏனைய காலனித்துவ நாடுகளில் கைப்பற்றிய பல அரும்பொருட்களை தன்னகத்தே வைத்திருக்கின்றது. குறிப்பாக தென்னாசிய, தென்கிழக்காசிய நாடுகளின் கலை, கலாச்சார விழுமியங்கள் சம்பந்தப்பட்ட பல பொருட்கள் இங்கே உண்டு.

இந்தப் பிரித்தானிய அருங்காட்சியக ஒளியாவணத்தில் சஜிதரன் தன்னால் முடியுமானளவு பல விடயங்களை ஆவணப்படுத்தியிருக்கின்றார். பெரும்பாலும் ஆவணப்படங்கள் என்றாலே சலிப்புத் தட்டும் என்ற எண்ணத்தை சஜிதரன் தனது மொழியாலும் ஒளிப்பதிவாலும் மாற்றியிருக்கின்றார்.

சஜிதரன், விமலாதித்தன் இருவரும் தமது பிரித்தானிய அருங்காட்சியக ஆய்வுகளை சஜிதரன் அழகு தமிழில் கவித்துவமாக உரையாட ஹதீபன் வாமதேவன் அழகாக படம் பிடித்திருக்கின்றார். ஹதீபனின் ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் நேரில் பார்த்த அனுபவத்தை தருகின்றது. 

இவ் ஒளியாவணத்துக்கு ஆங்கில உபதலைப்புகளை  நந்தினி கார்க்கி மொழிபெயர்த்திருக்கின்றார்.

காட்சிகளுக்குக் கச்சிதமாகப் பொருந்தக் கூடிய இசைக்கோர்வைகளைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

பயணம் செய்வதை விரும்புவர்கள், புதிய இடங்களை அறிய ஆர்வமுள்ளவர்களுக்கு தமிழில் இப்படியான விடயங்கள் வெளிவருவது சந்தோசத்தைக் கொடுக்கும்.

அடுத்த பகுதி எப்போ வெளிவரும் என்ற ஆவல் இதனைப் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் ஏற்படும். அதற்காக காத்திருக்கின்றோம்.


பின்குறிப்பு: 
கிட்டத்தட்ட ஒரு வருடத்தின் பின்னர் வலைப்பதிவு. இனிமேல் நேரம் கிடைக்கும் போது எழுதவேண்டும். அதிலும் இப்போது அடிக்கடி பயணங்கள் மேற்கொள்வதால் பார்த்த பல விடயங்கள் எழுதலாம் என நினைக்கின்றேன். சோம்பல் என்னை விட்டு விலகினால் மீண்டும் சூப் கிடைக்கலாம்.