Showing posts with label இளையராஜா. Show all posts
Showing posts with label இளையராஜா. Show all posts

"பா" - திரை விமர்சனம்

தந்தை மகனாகவும் மகன் தந்தையாகவும் நடித்திருக்கும் இல்லை இல்லை வாழ்ந்திருக்கும் படம் தான் பா. அமிதாப், அபிஷேக் வித்யா பாலன் என ஒரு சில குறிப்பிட்ட பாத்திரங்களுடன் சிறந்த கதையினாலும் இசையினாலும் மனதைக் கொள்ளையடித்துவிட்டது.



கதை

ஆரோ(அமிதாப்) progeria என்ற நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன். அதாவது இந்த நோய் வந்தவர்கள் தங்கள் வயதை விட அதிகம் வயதுடைய தோற்றம் உடையவர்களாகக் காணப்படுவார்கள். ஆரோவின் பாடசாலைப் பரிசளிப்பு வைபத்துக்கு பிரதம விருந்தினராக வரும் அமோல்(அபிஷேக்)சிறுவன் ஆரோவின் வெள்ளையடிக்கப்பட்ட பூமிப் பந்தைப் பார்த்துக் கவர்ந்து அந்தச் சிறுவனுக்கு சிறந்த மாணவன் விருதை வழங்குகின்றார். அத்துடன் அந்தச் சிறுவனின் நிலையைப் பற்றி ஊடகங்களுக்கும் அறிவித்தும் விடுகின்றார். இதனால் ஆரோவைத் தேடி அவனது பாடசாலைக்கு ஊடகங்கள் முற்றுகை இட இதனால் ஆத்திரமடைந்த ஆரோ இதற்க்கு காரணமான அமோலுக்கு தன்னுடைய எதிர்ப்பை மின்னஞ்சல் செய்கின்றான். இதிலிருந்து ஆரோவுக்கும் அமோலுக்குமான உறவு ஆரம்பிக்கின்றது.

அமோல் யார் என்றால் ஆரோவின் தந்தை என்பதையும் அவருக்கும் வித்யாவிற்க்கு(வித்யா பாலன்)இடையிலான காதலில் கருத்தரித்தவன் தான் ஆரோ என்பதை ஒரு பாடலில் சொல்லிவிடுகின்றார் இயக்குனர். இந்த வேண்டாத கர்ப்பத்தால் வித்யா அமோலை விட்டுப் பிரிந்துவிடுகின்றார்.

ஆரோ தன் தந்தை அமோல் தான் என்பதை அறிந்தாரா? வித்யாவும் அமோலும் சேர்கின்றார்களா? என்பதை 2 மணித்தியாலம் 15 நிமிடங்களில் சொல்லும் கதை தான் ஹிந்தியில் வெளியான பா(Paa).

ஆரோ :



நெடிதுயர்ந்த கம்பீரமான குரலில் பார்த்துப் பழக்கப்பட்ட அமிதாப் பச்சனை வயது போன தோற்றத்தில் வித்தியாசமான குரலில் ( ஒரு பாடல் கூடப் பாடியிருக்கின்றார்)பார்ப்பது புதுமை. எந்தவொரு இடத்திலும் அமிதாப்பை தெரியவில்லை ஆரோ தான் தெரிந்தான்(ர்). தன்னுடை கண்களாலே சில இடங்களில் குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் நடித்திருப்பார். எத்தனையோ கான்கள் வந்தாலும் எப்படி அமிதாப்பால் இன்றைக்கும் ஹிந்தி சினிமாவில் நின்று நிலைக்க முடிகின்றது என்ற கேள்விக்கு தன் நடிப்பாலே பதில் சொல்லியிருக்கின்றார். தான் ஒரு நோயாளி என்பதைத் வெளிக்காட்டாமல் மற்றவர்களுடன் சேர்ந்து விளையாடுவதும் நக்கல் நையாண்டிகள் செய்வதும் ஆரோவின் வயது 12 தான் என்பதை உணர்த்துகின்றது. சில படங்களில் மாற்று ஆற்றல் உள்ளவர்களை ஏனைய நண்பர்கள் கிண்டலடிப்பார்கள், ஆனால் பாவில் கிளைமாக்ஸ் காட்சிக்கு உதவிய சிறுமியைத் தவிர ஒருவர் கூட ஆரோவின் இயலாமையை கிண்டல் செய்யவில்லை. அமிதாப்பின் குரலும் ஒப்பனையும் நேர்த்தி.

திரைக்கதை :

ஒரு சோகமான செண்டிமென்டான கதையை நகைச்சுவை, காதல், அரசியல் பழிவாங்கல்கள், பாசம் என்ற பல கலவைகளினூடாக கொண்டு சென்றிருக்கின்றார் இயக்குனர் பால்கி. ப்ப்ப்பா என ஜெயாப் பச்சான் திரைப்படத்தின் கலைஞர்கள் ஒவ்வொருவராக தன் குரலினூடக அறிமுகப்படுத்துவதுடன் அறிமுகம் அமிதாப் பச்சான் என்பதிலிருந்து ஆரம்பித்த திரைக்கதை, தொய்வில்லாமல் இடைவேளை வரை செல்கின்றது. இடைவேளையில் அதிர்ச்சியான ஒரு விடயத்தை எந்தவித ஆர்ப்பாடமும் இன்றிச் சொல்வதில் நிறுத்தி மீண்டும் அடுத்த பாதியில் சில இடங்களில் சுவாரசியத்தைக் குறைத்தாலும் குறையில்லாத திரைக்கதையாகவே இருக்கின்றது.

வசனம் :

படத்தின் பலமே வசனங்கள் தான்( ஹிந்தி தெரியாவிட்டாலும் ஆங்கில சப் டைட்டில் காப்பாத்திவிட்டது). அமோலும் ஆரோவும் பேசுமிடங்கள் அதிலும் அரசியல்வாதிகள் ஏன் வெள்ளை உடை அணிந்திருக்கின்றார்கள் என்பதற்க்கு ஆரோ கொடுக்கும் விளக்கத்தில் தியேட்டரே கலகலத்தது. வித்யா பாலனும் அவரது அம்மாவும் ஒரே வசனத்தில் கர்ப்பத்தை என்ன செய்வது எனப் பேசுவது எனப் பல இடங்களில் வசனங்கள் கூர்மையாக இருக்கின்றன.

இயக்கம் :

ஏற்கனவே "சீனி கம்" என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிய பால்கியின் இரண்டாவது படம் இது. ஆரம்ப காட்சிகளில் இருந்து இறுதிக்காட்சிவரை நேர்த்தியான இயக்கம். அதிலும் ஒரு சோகமான கதையை சுவாரசியமாக கொண்டு சென்றது பாராட்டத்தக்கது. அத்துடன் ஒருவித்தியாசமான கதைக் களத்தில் ( சில வேளைகளில் கதையின் சாயல் அஞ்சலியை நினைவுபடுத்தினாலும் அது வேறை இது வேறை)ஒரு சில பாத்திரங்களை மட்டும் வைத்துக்கொண்டு திறம்பட இயக்கியிருக்கின்றார்.

இசை அல்லது இளையராஜா :

ஞானியின் இசைகளில் பாடல்கள் ஏற்கனவே கேட்ட மெட்டுகளாக இருந்தாலும் அந்த அந்த இடங்களுக்கு பொருந்துவது சிறப்பு. பின்னணி இசையிலும் படத்தின் தீம் இசையிலும் ராஜா சக்கரவர்த்தியாக நிற்கின்றார். ஆரம்ப காட்சிகளில் வரும் வயலினும் தன்னுடைய பாடல்களை தானே மெருகேற்றித் தருவதிலும் இசைஞானியாக இருக்கின்றார். இந்தப் படத்திற்க்கு ராஜாவின் இசைக்கு விருது வழங்காவிட்டால் அந்த விருதுகளுக்குத் தான் இனி அவமானம்.

ஒளிப்பதிவு :

இன்னொரு நம்மவர் பி.சி.ஸ்ரீராமின் ஒவ்வொரு காட்சிகளும் கண்ணில் நிற்கின்றன. சில கமேராக் கோணங்களும் குளோசப் காட்சிகளும் வர்ணிக்க வார்த்தைகள் அற்றவை. ஒரு காட்சியில் வித்யா பாலனினதும் அமிதாப்பினதும் முகம் மட்டும் திரையை இருவரின் கண்ணீருடன் நிறைக்கும் சிம்ப்ளி சூப்பர்.



அபிஷேக் :

அப்பாவுடன் போட்டி போட்டு நடிக்கவேண்டிய பாத்திரம், தன்னால் முடிந்ததைச் செய்திருக்கின்றார். சில இடங்களில் குருவில் பார்த்த நடிப்பு. குறைசொல்லமுடியாத அளவிற்க்கு நடித்திருக்கின்றார்.

வித்யா பாலன் :

ரேவதி, சுஹாசினி இருவருக்கும் பின்னர் சிறந்த நடிப்பை இந்தப் படத்தில் காட்டியுள்ளார். முகத்தினாலையே பல இடங்களில் அழுகின்றார், கேள்வி கேட்கின்றார் காதல் வயப்படுகின்றார். தமிழில் நல்ல படங்கள் கிடைத்தால் நடிக்கலாம்.

ஆரோவின் தந்தை, வித்யாவின் தாய், ஆரோவின் நண்பன் விஷ்ணுவாக வரும் அந்தச் சிறுவன், ஆரோவின் ந‌ண்பியாக வரும் அந்தச் சிறுமி( கோல்ட் வின்னர் விளம்பரச் சிறுமி)போன்ற பாத்திரங்களும் தங்கள் பங்கை திறம்படச் செய்திருக்கின்றார்கள்.

நேர்த்தியான கதை, திரைக்கதை, நடிப்பு, இயக்கதால் பா எல்லோர் மனதையும் நிச்சயம் கவரும். படம் பார்த்துவிட்டு வெளியே வரும் போது எழுந்த கேள்வி தமிழில் ஏன் எப்படி வித்தியாசமான கோணங்களில் கதைகள் வருவதில்லை?

"பா" ர்த்தேன் ரசித்தேன்

பின் குறிப்பு : தியேட்டரில் ஜேம்ஸ் கமரூனின் அவதார் படத்தின் ட்ரையிலர் போட்டார்கள், மிரட்டியிருக்கின்றார்கள். வேட்டைக்காரன் வெளியாகும் 18 ந்திகதி உலகமெங்கும் வெளியாகின்றது அவதார்.

ஹாட் அண்ட் சவர் சூப் 11-12-2009

யாழ்ப்பாணப் பயணம்

கடந்த சில நாட்களாக உறவினர்கள் சிலருக்காக யாழ்ப்பாணம் செல்வதற்கான பயணச் சீட்டுக்களைப் பெற கொழும்பு பிரதான பஸ் நிலையத்திற்குச் செல்லவேண்டி இருந்தது. தமிழன் என்றாலே வரிசையில் நிற்கவேண்டும் என்பதற்க்கிணங்க நீண்ட வரிசையில் அதிகாலையில் நின்றால் தான் அன்றைய இரவிற்க்கான பயணச் சீட்டுக் கிடைக்கும்.

கிட்டத்தட்ட 500க்கு மேற்பட்டவர்களுக்கு பயணச் சீட்டு வழங்க ஒருவர் மட்டுமே அந்த பஸ் நிலையத்தில் வேலைக்கமர்த்தப்பட்டிருக்கின்றார். 7 கருமபீடங்கள் இருந்தும் ஒன்றில் தான் யாழ் செல்வதற்கான பயணச் சீட்டு வழங்குகின்றார்கள். ஆகக்குறைந்தது ஒரு மூன்று அல்லது நாலு கருமபீடங்களில் சீட்டை வழங்கினார் மக்களுக்கு வசதியாக இருக்கும்.

ஆனாலும் நம்மவர்கள் இதிலும் தங்கள் கைவரிசையைக் காட்டிவிடுகின்றார்கள். உள்ளே பயணச்சீட்டுக் கொடுக்கும் நபர் தமக்குத் தெரிந்தவர் என்றால் பின்கதவு வழியாக பயணச்சீட்டைப் இலகுவாக பெற்றுக்கொள்கின்றார்கள். அத்துடன் அந்தக் கருமபீடத்தில் இருப்பவர்களுக்கு தமிழ் தெரியாததால் பலருக்கு மொழிப் பிரச்சனையால் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. இவற்றை சம்பந்தப்பட்டவர்கள் கருத்தில் கொள்வார்களா?

தமிழன் என்ற வரைவிலக்கணத்துடன் மறக்காமல் வரிசையையும் இணைக்கவேண்டும்.

ஐயப்பனும் சிறுவர்களும்

தற்போது சபரிமலைக்கு மாலை போட்டு விரதம் அனுஷ்டிக்கும் காலம். வீதிகளில் கறுத்த உடைகளுடன் பல ஐயப்பன் பக்தர்களை காணக்கிடைக்கின்றது. பெரியவர்களுடன் சில சிறுவர் சிறுமிகளும் மாலை போட்டிருப்பது ஏனோ மனதை நெருடுகின்றது. காரணம் ஒரு மனிதனின் தனித்துச் செயல்ப்படும் வயது 18 வயதின் மேல் தான் ஆரம்பமாகின்றது எனச் சொல்கின்றார்கள். அப்படியிருக்கையில் சிறுவர்களை பெற்றோர்களின் உந்துதலின் பெயரில் மாலை போட அனுமதிக்கலாமா? சிந்திக்க தெரியாத வயதில் சபரிமலை விரதம் என்பது கடினமானது. ஆன்மிகவாதிகள் கோபம் கொள்ளாது தங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள்.

சிறுவர்களாக இருக்கும் பெளத்த துறவிகளைப் பார்க்கும் போதும் இதே எண்ணம் எனக்கு ஏற்படுகின்றது. சிறுவர் துஷ்பிரயோகம், சிறுவர் போராளிகள் என பலதுக்கும் குரல் கொடுக்கும் அமைப்புகள் மதம் சம்பந்தப்பட்டதாலோ என்னவோ இதனைக் கண்டுகொள்வதில்லை.

இளையராஜா

கடந்த பல தசாப்தங்களாக தமிழ் சினிமாவை தன் இசைக்குள் வைத்திருந்த இசைஞானியைப் பற்றி இப்போ சில கற்பூரவாசனை தெரியாதவர்கள் விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்கள். ஒருவரின் இசை என்ன மொழியில் இருந்தாலும் கேட்பவரின் மனதைத் தொட்டால் அது சிறந்த இசைதான். ராஜாவின் இசைக்கோலங்கள் பல எத்தனை தடவை கேட்டாலும் இன்னமும் மறக்கமுடியாது.

ஒரு படத்தினை வைத்து இசைஞானியை எடைபோடும் கோமளிகளை என்னவென்று சொல்வது? தமிழர்களுக்கு எழுதுகின்ற இவர்கள் தங்கள் பெருமைகளை இன்னொரு மொழி பேசும் இடத்தில் கேளுங்கள் சொல்வார் என பீத்துவதும் சிறுபிள்ளைத் தனமானது. ராஜாவின் இசை தென்னிந்திய மொழிகளில் பிரபலம் என்பது அந்தப் பிரபலத்துக்குத் தெரியவில்லையோ. அண்மையில் உயிர்மையில் அவரின் இசை பற்றிய கட்டுரையில் இசைஞானியைத் தவிர ஏனைய இசையமைப்ப்பாளர்களின் இசைகள் நன்றாக இருப்பதாகவும் ஆனால் பாடல்வரிகள் மட்டும் ஆபாசமாக இருப்பதாகவும் எழுதித் இசைஞானியின் மேல் தனக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சியை அப்பட்டமாக காட்டியிருந்தார்.

இசைஞானி, கலைஞானி மேல் இவர்காட்டும் காழ்ப்புணர்ச்சி அறிந்ததுதான் ஆனாலும் இவர் அடிக்கடி தன் காழ்ப்புணர்ச்சியை இவர்கள் மேல் வைக்காமல் தன் புணர்ச்சியை எழுதட்டும் எவரும் தட்டிக் கேட்கமாட்டார்கள்.

ராஜாவின் இசைக்கு எப்படி மக்கள் மயங்குகின்றார்கள் என்பதற்க்கு இந்தக் காணொளியைப் பாருங்கள். ஒவ்வொருவரினதும் மனநிலையை தெளிவாகப் பார்க்கலாம், இளம் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத்தின் உற்சாகம், நடிகர் பிரசன்னாவின் முகத்தில் காணப்படும் பரவசம், வினுச்சக்கரவர்த்தியின் ஆனந்தக் கண்ணீர் என பலரை ராஜாவின் இந்த கானம் பரவசப்படுத்தியிருக்கின்றது.



நடிகைகள் படம்

என்னுடைய ஹாட் அண்ட் சவர் சூப்பில் ஒரு கவர்ச்சிக்காக நடிகைகளின் படம் போடுவது வழக்கம். இந்தப் படம் பலரையும் கவர்ந்திருக்கின்றது. அதே நேரம் சில நண்பர்கள் என்னிடம் இது தேவையா? எனவும் குறைப்பட்டார்கள். இப்படியான பல்சுவைகளை எழுதும் சிலர் வயது வந்தவர்களுக்கான ஜோக் என எழுதும் போது வெறுமனே படம் போடுவதில் எந்த தப்பும் இல்லை என்பது என் எண்ணம் ஆனாலும் சில நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க குறிப்பாக சுபானுவின் கடந்த முறை சூப்பின் பின்னூட்டத்திற்காக இதனை நிறுத்த இருந்தேன்.

ஆனால் ஏனைய நண்பர்களின் பலரின் அன்பு மிரட்டலால் மீண்டும் சூப்பில் படம் போடுவது என முடிவுக்கு வந்துள்ளேன். சுபானு போன்ற நண்பர்கள் பொறுத்தருள்க.

ராஜாவும் கார்த்திக்கும் - பகுதி 1

அலைகள் ஓய்வதில்லை படத்தில் ஆரம்பித்த நவரச நாயகன் கார்த்திக் இசைஞானி கூட்டணி நினைவெல்லாம் நித்யா, வருஷம் 16, அக்னி நட்சத்திரம், கோபுரவாசலிலே, கிழக்குவாசல், தெய்வவாக்கு என பல படங்களில் வெற்றிக்கொடி நாட்டியது.

1. பனிவிழும் மலர் வனம்
ராஜாவின் எவர்கிரீன் ஹிட்டுகளில் இந்தப்பாடலும் ஒன்று. மறைந்த இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் ராஜாவின் அனைத்துப்பாடல்களும் இனிமை. இந்தப்படம் ஒரு மியூசிக்கல் ஹிட் என்றே கூறலாம். ராஜாவின் ஆர்ப்பாட்டமில்லாத மெலடியும் வைரமுத்துவின் காதல் வரிகளும் பாடலை உச்சத்துக்கு கொண்டு சென்றது என்றால் மிகையாகது. அத்துடன் எஸ்.பி.பியின் குரலும் குறிப்பாக பனிவிழும் மலர் வனம் என்ற வரிகளை ஒவ்வொரு இடத்திலும் வித்தியாசமாக பாடுவார். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்களில் இந்தப்பாடலும் ஒன்று.



2. நான் தேடும் செவந்திப்பூவிது
இன்னொரு எவர்கிரீன் சூப்பர் டூப்பர் ஹிட் பாடல். ஆனால் படமாக்கியவிதம் சொதப்பல். பாடலுக்கு முன்னால் இசைஞானி பாடும் ஆலாவிற்கும் அதனைத் தொடர்ந்து வரும் கிட்டார் இசைக்கும் எத்தனையோ விருதுகள் கொடுக்கலாம். முதல் சரணத்தில் இடைஇசையாக வரும் புல்லாங்குழலும் கிட்டாரும் மயக்கம் தரும். கூடப்பாடும் எஸ்.ஜானகியின் தேன்குரலும் இந்தப்பாடலுக்கு பிளஸ். இந்தபாடலைக்கேட்டால் கட்டாயம் காதல் தேசத்திற்க்கு போகும் எண்ணம் எவருக்கும் வரும்.



3. காதல் கவிதைகள் படித்திடும்
"I love this idiot, I love this lovable idiot" என்ற சித்ராவின் குரலுடன் இனிமையான புல்லாங்குழலுடன் தொடங்கும் இந்தப்பாடலும் என்றைக்கும் கேட்கும் இனிமையான மெலடி. பாடுநிலா எஸ்.பி.பியும் சின்னகுயில் சித்ராவும் இணைந்து கலக்கிய பாடல். பல்லவியில் ஆண்குரல் பாடிக்கொண்டிருக்கும்போதே இதம் தரும் காதல் கவிதைகள் என் சித்ரா குரல் ஒலிக்கும் இடம் இசைஞானியின் ஸ்பெசல் டச். துறுதுறுப்பான கார்த்திக்கும் படமாக்கியவிதமும் பாடலுக்கு மேலும் மெருகூட்டுகிறது.



4. வா வா அன்பே அன்பே
அக்னி நட்சத்திரம் படத்தில் கிடைத்த இன்னொரு முத்து இந்தப்பாடல். அந்தப் படப்பாடல்கள் முழுவது சூப்பர் டூப்பர் ஹிட்ஸ். பத்மஸ்ரீ.கே,ஜே,ஜேசுதாசும் சின்னக்குயில் சித்ராவும் இணைந்துபாடிய டூயட்டுகளில் சிறந்த டூயட்டில் இதுவும் ஒன்று. பி.சி.ஸ்ரீராமின் கமிராவில் நிரோஷா மிகவும் அழகாகத் தெரிவார். படமாக்கப்பட்ட விதம் கவர்ச்சியாக இருந்தாலும் ஆபாசமாக இல்லை. இதயம் முழுதும் ராஜா வசம் தான்.



5. பழமுதிர்ச்சோலை எனக்காகதான்
வருஷம் 16 படத்தில் பத்மஸ்ரீ.கே.ஜே, ஜேசுதாசின் காந்தக்குரலில் இசைராஜாவின் இசையில் உருவான அழகான மெலடி.முதல் இடைஇசையில் வரும் புல்லாங்குழலும் தபேலாவும் கர்னாடக சங்கீதப்பாணியில் இருக்கும். சரணம் ஆரம்பிக்கும்போது ரம்சின் ரிதம் வெஸ்டேர் ஸ்டைலில் இருக்கும். இரண்டு பாணியையும் இணைத்து ராஜா கலக்கியிருப்பார். இரண்டாவது சரணம தூய கர்னாடக இசையாகவே இருக்கும். பாசிலின் இயக்கத்தில் வெளிவந்த அழகான படம். பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்ஸ்.

ராஜாவும் ரஜனியும் பகுதி - 2

சில தவிர்க்கமுடியாத காரணங்களினால் பகுதி 2 உடனடியாகத் தரமுடியவில்லை வருந்துகிறேன்,

6. மாசி மாசம் ஆளான பொண்ணு

பத்மஸ்ரீ கே.ஜே.ஜேசுதாஸின் காந்தக் குரலும் சுவர்ணலதாவின் குரலும் இணைந்து இசைஞானியுடன் கொடுத்த அருமையான மெலடி. தர்மதுரை படத்தில் இடம்பெற்ற பாடலின் காட்சிகள் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் பாடலைத் தனித்துக்கேட்கும்போது அருமையாக இருக்கும். ஆரம்ப ஆஆவும் அதன் பின்னர் வரும் ஹோரசும் ரிதமும் காட்சி எப்படியிருக்கும் என ஓரளவு ஊகிக்ககூடியதாக இருக்கும். ரஜனிக்கும் கெளதமிக்கும் இந்தப்பாடலில் நல்ல கெமிஸ்ரி இருக்கும்.



7. கண்மணியே காதல் என்பது

ஆறிலிருந்து அறுபது வரை என்ற அற்புதமான படத்தில் எஸ்.பி.பியும் எஸ்.ஜானகியும் இணைந்து கொடுத்த அருமையான பாடல். ஆரம்பத்தில் வரும் வீணையின் நாதம் இசைஞானியின் அக்மார்க் முத்திரை. இந்தப்பாடலின் சீறப்பு கண்மணியே காதல் என்பது எனத் தொடங்கும் பல்லவி முடியும் வரை ஒரே மூச்சில் இருவரும் பாடுவதுபோல் தெரியும். முதலாவது சரணத்தில் வரும் லாலலலால என்ற கோரஸ் சரணத்தில் ஒரே ட்ராக்கில் வரும்படி இசையமைத்திருப்பார். இதே லாலலாலால இரண்டாவது சரணத்தில் ஆரம்பத்திலும் பின்னர் இடையிலும் வரும் அழகு தனிதான்.



8. ராக்கம்மா கையைத் தட்டு

பிபிசியின் இருபதாம் நூற்றாண்டின் சிறந்த பாடல்கள் பட்டியலில் இடம் பெற்ற ஒரேயொரு தமிழ்சினிமாப்பாடல் இதுதான். பத்மஸ்ரீ பாடுநிலா எஸ்.பி.பியின் இனிமையான குரலும் சுவர்ணலதாவின் குரலும் இடையில் ஒலிக்கும் குனித்த்த புருவம் என்ற தேவாரமும் சோபனாவின் நடனமும் அழகுக்கு அழகு சேர்க்கின்றது. பாடலின் ஆரம்பத்தில் ரம்ஸ் உபயோகித்திருக்கும் ஞானி குனித்தபுருவத்திற்க்கு மிருதங்கத்தை உபயோகித்து அந்த இடத்தில் கர்னாடகபாணி இசை அமைத்திருப்பார். பின்னர் ஒரு ம்ம்ம் என்ற ஹம்மிங்குடன் ராக்கம்மா அதே ராகத்தில் அமைந்திருக்கும். இளையராஜா, மணிரத்னம், ரஜனிகாந்த், சந்தோஷ்சிவன் என தமிழ்சினிமாவின் பல நட்சத்திரங்கள் இணைந்தபடம். இனி இப்படியொரு படம் வராது. இந்தப்படத்தில் இடம்பெற்ற புத்தம்புது பூப்பூத்ததோ நல்லதொரு பாடல் படத்தின் நீளம் கருதி வெட்டிவிட்டார்கள். நெட்டில் கிடைத்தால் லிங்க் கொடுக்கவும்.



9. மலைக்கோயில் வாசலில்
இளையராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட இன்னொரு திறமைசாலி பாடகர் மனோ ராஜாவின் இசையில் பல பாடல்கள் பாடியவர். வீரா படத்தில் சுவர்ணலதாவுடன் சேர்ந்து இவர் பாடியிலுள்ள இந்தப்பாடலும் நல்லதொரு மெலடி. பாடலுடன் சேர்ந்து இசைக்கும் ரம்ஸ் கலக்கல். மீனாவின் அழகும் ரஜனியின் ஸ்டைலும் பாடலுக்கு பிளஸ்.



10. செனோரிட்டா ஐ லவ் யூ
ஜானி தமிழ்சினிமாவில் தவிர்க்கமுடியாத மகேந்திரனின் படம். பாடுநிலா எஸ்.பி.பியின் மகுடத்தில் இன்னொரு வைரம் இந்தப்பாடல். பாடலின் ஆரம்பத்தில் வரும் கிட்டாரின் அந்த இசையும் ரம்சின் ரிதமும் கலக்கல்.



இன்னும் எத்தனையோ பாடல்கள் மனதைக் கவர்ந்தாலும் ரஜனி ராஜா என்றால் உடனே நினைவுக்கு வருபவை இவையே. அடுத்து ராஜாவும் கார்த்திக்கும் இணைந்த படங்களின் பாடல்கள்.

ராஜாவும் ரஜனியும் - பகுதி 1

இசைஞானி இளையராஜாவின் ஆயிரக்கணக்கான பாடல்கள் இன்றும் எம் மனதில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றது. அதிலும் ராஜா 80களில் இசையமைத்த ஒவ்வொரு பாடல்களும் ராஜாவின் முத்துக்கள் என்றால் மிகையில்லை.

என் உயிருடன் கலந்துவிட்ட ராஜாவின் பாடல்களை ஒரு பதிவில் எழுதிவிடமுடியாது. ஆகவே சில நடிகர்களுக்கு ராஜா இசையமைத்த அந்த முத்துக்களில் இருந்து முதல் பத்துபாடல்களைப் பற்றிய என் கருத்துகளையும் யூடூயூப் உதவியுடன் பாடல்களின் காணொளியையும் தரவிருக்கின்றேன்.

முதலில் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்தின் படங்களுக்கு ராஜா இசையமைத்த படங்களில் இருந்து 10 பாடல்கள். இந்தப் பத்துப்பாடல்களைவிட சிறந்த எத்தனையோ 100 பாடல்கள் இருந்தாலும் இவை என் மனதுடன் ஐக்கியமான பாடல்கள். சிலவேளைகளில் பாடகர் பாடகி பற்றிய விபரங்கள் தவறாக அமைந்திருந்தால் பின்னூட்டமூடாக அதனைத் திருத்துங்கள். இனி ராஜா ரஜனி கூட்டணியில் வெளிவந்த சில பாடல்களை ரசிப்போம்.

1. ஏ பாடல் ஒன்று

ப்ரியா படத்தில் ரஜனி ஸ்ரீதேவி ஜோடியாக ஆடும் பாடல். பத்மஸ்ரீ கே.ஜே.ஜேசுதாஸின் காந்தக்குரலும் உமா ரமணனின் தேன்குரலும் இணைந்த கலவையான பாடல். முதல் முறை ஸ்டிரீயோ மூலம் ஒளிப்பதிவான பாடல். எத்தனை தடவையும் கேட்கலாம்.

ரஜனியின் இளமையும் ராஜா உடுப்பும் அவரது கம்பீரத்தைக் கூட்டுகின்ற பாடல். ஸ்ரீதேவி பற்றிச் சொல்லத்தேவையில்லை. இளவரசியாகவே பாடலில் தெரிகின்றார்.

இடை இசையில் வரும் வீணையில் ராஜா கம்பீரமாக கொலுவீற்றிருக்கிறார்.



2. ஆகாய கங்கை பூந்தேன் மலர்

தினமும் இரவில் யூடூயுப்பில் கேட்கும் இன்னொரு சூப்பர் டூப்பர் ஹிட் பாடல். மலேசியா வாசுதேவனின் கணீர்க்குரலும் எஸ்.ஜானகியின் இளமைக்குரலும் கொஞ்சிவிளையாடும் பாடல். பாடல் ஆரம்பமாகும் போது வரும் ஹம்மிங்கே கேட்பவர்களை மயக்கும். அதன் பின்னர் முதல் சரணத்தில் வரும் ஜானகியின் ஹேஹே ஹம்மிங்கும் அடுத்த சரணத்தில் வரும் மலேசியா வாசுதேவன் அவர்களின் ஹேஹே ஹம்மிங்கும் இந்தப்பாடலின் உயிர் நாடி என்றால் மிகை இல்லை.

தர்மயுத்தம் படத்தில் மீண்டும் ரஜனி ஸ்ரீதேவி கூட்டணி. இந்தப்பாடலில் ரஜனியின் பெரிய கண்ணாடியும் அதனை அவர் சுழ‌ட்டுவதும் அவரது ஸ்டைலை இன்னமும் கூட்டுகின்றது. ஸ்ரீதேவி இந்தப்பாடல் படப்பிடிப்பின்போது காலில் காயம் காரணமாக நடனமாடாமல் தரையில் இருந்தபடியும் நடந்தபடியும் நடித்திருப்பார்.

ஒருமுறை ஒரு பேட்டியில் மலேசியா வாசுதேவன் அவர்களே தனக்கு மிகவும் விருப்பமான பாடலாக இந்தப்பாடலைத்தான் குறிப்பிட்டார். அவரின் குரல் ரஜனிக்கு மிகவும் பொருத்தமாகவும் இருந்தது.



3. ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்

மீண்டும் கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்,ஜானகி கூட்டணியில் அருமையான மெலடி. நெற்றிக்கண் படத்தில் ஒரு ரஜனி சபலிஸ்டாக இருக்க மகன் ரஜனி ராமனாக இருப்பார். மகன் ரஜனிக்கும் அவரது காதலியாக நடித்த மேனகா என்ற நடிகைக்கும் இடையேயான டூயட். இந்தப்பாடலில் இருவரும் ஒருவரையொருவர் தொடாமல் நடித்திருப்பார்கள்.

இராமாயணம் பாராயணம் காதல் மங்கள‌ம் போல் இந்தபபாடலும் தெய்வீகப்பாடல் தான்.



4. ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணும்

தங்கமகன்களான ரஜனி, ராஜா பத்மஸ்ரீ எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.ஜானகி கூட்டணியில் உருவான சூப்பர் டூப்பர் ஹிட் பாடல் இதுவாகும்.
எஸ்.பி.பியின் தேன்குரலும் எஸ்.ஜானகியின் இளமையான் வசீகரக்குரலும் இந்தபாடலின் வெற்றிக்கு முக்கியகாரணம்.

ரஜனியின் ஸ்டைலும் பூர்ணிமா பாக்யராஜின் விதவிதமான பாரம்பரிய நடன‌ உடைகளும் பாடலை மீண்டும் மீண்டும் கேட்க மட்டுமல்ல் பார்க்கவும் வைக்கும்.

பகலும் உறங்கிடும் ராத்திரியில் கேட்பதற்க்கு உகந்தபாடல்களில் இந்தப்பாடலும் ஒன்றாகும்.



5. சுந்தரி கண்ணால் ஒரு சேதி
இளையராஜா மணிரத்னம் கூட்டணி கொடுநாட்டிய காலத்தில் வெளிவந்த தளபதி படப்பாடல். இளையராஜாவின் இசை மகுடத்தில் முத்தான ஒரு பாடல். எஸ்.பி.பியின் காந்தக்குரலும் எஸ்.ஜானகியின் வசீகரக்குரலும் வாலியின் வாலிப வரிகளும் பாடலை தூக்கிப்பிடிக்கின்றன.

இடைஇசையில் வரும் அணிநடை இசையும் யுத்தக்காட்சிகளும் போர் நடுவிலும் தமிழர்கள் காதல் செய்தார்கள் என்பதைக் காட்டுகின்றது. இந்தப்பாடலைப் பற்றிப்பேசுவதைவிட பாடலைக் கேட்பதே சிறந்தது.



முதல் ஐந்துபாடல்கள் கேட்டீர்களா? நாளைவரை பொறுத்திருங்கள் அடுத்த ஐந்துபாடல்களுக்கும். எதேச்சையாக இந்த 5 பாடல்களும் டூயட்டாக இருக்கிறது.

இந்தப் பதிவை வீடியோஸ்பதி, ரேடியோஸ்பதி மூலம் பல பாடல்களைத் தந்து எம்மை மகிழ்வித்த அண்ணன் கானாப் பிரபாவிற்க்கு சமர்ப்பணம் செய்கிறேன்.

இளையராஜா ஒரு சகாப்தம்

இளையராஜா அவ்வளவுதானா? என கேள்வி கேட்கும் விதமாக இந்தப் பதிவுக்கு தலைப்பிட நினைத்தேன். ஆனால் என்னால் அப்படி இடமுடியவில்லை காரணம் நான் கடைந்தெடுத்த இசைஞானி ரசிகன்.



கடந்த சில காலமாக ராஜாவைப்பற்றி பல கருத்துகள் வலைகளிலும் சரி சில களங்களிலும் குழுமங்களிலும் ஏன் நேரில் கூட விவாதித்துக்கொள்ளப்படுகின்றது. 70களின் முடிவிலும் 80களில் முழுவதும் 90களின் ஆரம்பத்திலும் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக இசையுலகை தன் ஆர்மோனியப்பெட்டியில் வைத்திருந்தவர் இளையராஜா என்றால் மிகையாகாது.

இந்தப்பதிவிற்க்கு மூலகாரணம் அண்மையில் வால்மீகி படத்தைப்பார்த்துவிட்டு பலர் ராஜாவின் இசை சரியில்லைஎனக் கூறுகின்றார்கள். படம் இன்னும் பார்க்கவில்லை, பாடல்கள் கேட்கவில்லை அதனால் இந்தப்படத்தினைப் பற்றி என்னால் எதுவும் கூறமுடியாது.

ஒருமுறை ஹாய் மதனில் ஒருவர் கேள்வி ஒன்று கேட்டிருந்தார் "சிவாஜிகணேசன், அசாரூதீன், இளையராஜா மூவரும் இனி ஓய்வெடுக்கலாமா?" என. அதற்க்கு மதன் "இவர்கள் மூவரும் சாதனையாளர்கள் இவர்களின் சாதனைகளை இன்னொருவர் முறியடித்தாலும் இவர்கள் தான் முன்னோடிகள்" என பதில் அளித்திருந்தார்.

ஆக இளையராஜா அண்மைக்காலங்களில் அவ்வளவாக சேபிக்காவிட்டாலும் முன்னைய காலங்களில் அவர் தந்த பாடல்களை மிஞ்ச இன்னொருவர் இல்லை என்றே சொல்லலாம். அதுமட்டுமல்ல இன்றைக்கும் அவர் தான் பின்னணி இசையில் நம்பர் ஒன்.

ஒரு கலைஞனுக்கு தன் நாட்டை விட ஊரைவிட இன்னொரு ஊரில் தான் மரியாதை அதிகம். அதனால் தான் என்னவோ இளையராஜாவை மலையாளத் திரையுலகம் தத்தெடுத்துவிட்டது இசைப்புயலை மும்பை தத்தெடுத்துவிட்டது.

80களின் இசைபற்றி ஆராயவே தேவையில்லை. ராஜா கொடிகட்டிப்பறந்த காலமது.இளையராஜாவுக்காகவே ராமராஜன் ராஜ்கிரண் படம் எல்லாம் பார்த்து தொலைத்தகாலமது

90களின் தொடக்கத்தில் ரகுமானின் வரவால் இளையராஜாவின் படங்களின் எண்ணிக்கை குறைந்ததே அல்லாமல் தரம் குறையவில்லை. அந்தகாலத்தில் வெளிவந்த காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு போன்ற படங்களில் மீண்டும் தன் இருப்பை மற்றவர்களுக்கு காட்டினார்.

பின்னர் ஹேராம், விருமாண்டியில் உச்சத்திற்க்கு வந்த இசைராஜா மும்பை எக்ஸ்பிரசை கமலுடன் சேர்ந்து மிஸ் பண்ணிவிட்டார். இடையில் பாலாவின் ஆஸ்தான இசையமைப்பாளராகி சேதுவில் எங்கே செல்லும் இந்தப்பாதை தேடி பிதாமகனில் இளங்காற்று வீசி நான் கடவுளில் ஓம் சிவோஹம் என உருத்திர தாணடவமே ஆடினார். ரமணாவில் இரண்டே இரண்டு பாடல்களிலும் பின்னணியிலும் கேப்டனுக்கு முருகதாசுடன் மறுவாழ்வு கொடுத்தார்.

இடையில் சில படங்களுக்கு இவர் இசையமைத்திருந்தாலும் நல்ல கதை அமைப்பு இல்லாதபடியால் பாடல்களும் எடுபடவில்லை. அதே நேரம் அந்தக்காலத்தில் கதையே இல்லாத பல படங்கள் இவரின் பாடல்களுக்காகவே ஓடின.

ராஜாவின் இன்றைய பின்னடைவிற்க்கு என்னால் கூறக்கூடியவை காரணங்கள் :

1. புதிய தலைமுறைக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளாமை முக்கிய காரணமாகும். மகன் யுவன் சங்கர் ராஜா புதிய தலைமுறைக்கேட்ப இசையமைக்கும்போது இவரால் அதனைச் செயல்படுத்தமுடியவில்லை. இதற்க்கு தலைமுறை இடைவெளியும் இன்னொரு காரணமாக இருக்கலாம்.

2. எவ் எம் ரேடியோக்கள் மியூசிக் சேனல்களின் வருகை. இவை இரண்டும் பெரும்பாலும் இளசுகளை டார்கட் பண்ணியே நடைமுறைப்படுத்தப்படுவதால் ராஜாவைவிட ரகுமான், ஹாரிஸ், யுவன் போன்றோரே இவர்களின் தெரிவாக இருக்கின்றது. ஆஹா எவ் எம்மில் பவதாரணி நடத்திய ராஜாங்கமும் இலங்கையில் சக்தி எவ் எம்மில் ஒளிபரப்புகின்ற ராஜாங்கமும் மட்டும் விதிவிலக்காக இருக்கின்றன.

3. ராஜாவின் கெடுபிடிகளை நினைத்து இளம் இயக்குனர்கள் பயத்தினால் இவரை நாடுவது குறைவு, அண்மையில் கூட மிஷ்கினின் நந்தலாலாவில் சர்ச்சை ஏற்பட்டது. அதாவது இளையராஜா யூசர் பிரண்ட்லி இல்லையென செய்தி அடிபடுகின்றது.

சிலர் சொல்வதுபோல் அவரிடம் சரக்கில்லை என்பது கடைந்தெடுத்த பொய். சரக்கிருக்கு அதனை இந்தக்காலத்திற்க்கு ஏற்ப கொடுக்க தவறிவிட்டார் அல்லது இந்தக்காலத்தின் சில வடிவங்களை அன்றே தந்துவிட்டார் எனலாம். உதாரணமாக விக்ரம் படத்தின் வனிதாமணி வனம்மோகினி பாடலின் முன்னால் வரும் "கண்ணே கட்டிக்கவா ஒட்டிக்கவா" தமிழில் முதல் வந்த ராப் என இசைவல்லுனர்கள் சொல்கிறார்கள்.

வால்மீகி படத்தின் இசைக்கு அதன் தயாரிப்பாளர்களான விகடனும் ஒரு காரணமாக இருக்கலாம். காரணம் ஆரம்ப நாட்களில் விகடனால் இளையராஜா கண்டுகொள்ளப்படவில்லை. இதனை தற்போது அவர்கள் வெளியிடும் விகடன் பொக்கிசத்தில் இருந்து தெரிந்துகொள்ளலாம். ராஜா கோலோச்சிய பல படங்களின் விமர்சனங்களில் அவரைப்பற்றி ஒரு வார்த்தைகூட விகடன் எழுதவில்லை. இதனைப் பலர் விகடன் இணையப்பதிப்பில் பின்னூட்டங்களில் கூடச் கூறியிருந்தார்கள். ஆகவே அதற்க்குப் பழிவாங்கும் வகையில் இசையை சொதப்பினரா? இல்லை இந்தப் படத்திற்க்கு இவ்வளவு போதும் என நினைத்தாரா? (விகடனுக்கு மட்டுமா சிண்டு முடியத்தெரியும்).

இசையில் பல சாதனைகள் செய்த மனிதரை மத்திய மாநில அரசுகள் தான் கண்டுகொள்ளவில்லை என்றால் பதிவுலகத்திலும் எத்தனை எத்தனை எதிர்க்கருத்துக்கள்.

ஒருமுறை விவேக் சொன்னதுபோல் இளையராஜா வெளிநாடு ஒன்றில் பிறந்திருந்தால் அவரை அங்கே கொண்டாடியிருப்பார்கள். தவறிப்போய் அவர் தமிழ்நாட்டில் பண்ணைபுரத்தில் பிறந்தது அவரது துரதிஷ்டம்தான்.

ராஜா, ரகுமான்,ஆஸ்கார்


இன்றைக்கு உலகத் திரைப்படவரலாற்றில் ஒரு மகத்தான நாள். ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டன. எதிர்பார்க்கப்பட்டதுபோல் இசைப்புயல் ஏஆர் ரஹுமான் தன் இரண்டு விருதுகளையும் பெற்று தமிழர்களுக்கு கெளரவம் கொடுத்துள்ளார். இன்னொரு தமிழச்சியான மாதங்கி அருள் பிரகாசமும் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டர்களில் ஒருவர். ஏனோ விருதுகிடைக்கவில்லை.

1992ல் ரோஜா திரைப்படம் மூலமாக அறிமுகமான ரகுமானைப் பற்றி பலர் பல இடங்களி எழுதியிருப்பதால் அதனைத் தொடாமல் இன்னொரு விடயத்தை ஆராயலாம் என நினைக்கின்றேன்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ரகுமானுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தபோது பலர் புருவத்தை உயர்த்தினார்கள், காரணம் மெல்லிசை மன்னர், இசைஞானி என்ற இரண்டு இசை மேதைகளை விட்டுவிட்டு தற்போது வந்த இளைஞனுக்கு விருதா? என்ற கேள்வி அவர்களின் புருவ உயர்த்தலில் தொக்கி நின்றது.

இங்கே இன்னொரு விடயத்தையும் குறிப்பிடவேண்டும் ரகுமான் அவர்கள் நிச்சயம் அந்த விருதுக்கு தகுதிவாய்ந்தவர் இதனை எவரும் மறுக்கமாட்டார்கள். ஆனால் மூத்தோர்கள் இருக்க இளையவருக்கு கொடுத்த காரணம் என்ன? இதற்க்கு வைரமுத்துவின் உள்குத்து அரசியல் தான் காரணம் என்கிறார்கள் பலர்.

இந்த பதிவில் நான் இசைஞானியையோ அல்லது இசைப்புயலையோ இல்லை மெல்லிசை மன்னரையோ ஒப்பிடவரவில்லை. அவர் அவர் தங்கள் இசையில் உச்சம் தொட்டவர்கள்.

ஆனாலும் சிம்பொனி இசை, திருவாசகத்துக்கு இன்னொரு வடிவம், கெளவ் டூ நேம் இட் என ஆல்பம் என் சாதனை படைத்த பண்ணைபுரத் தமிழனை ஏன் இதுவரை இந்திய அரசு கெளரவிக்கவில்லை?

இன்னொரு சாராரின் வாதம் இசைஞானி இசையில் உச்சத்தை அடைந்தாலும் ரகுமான் அளவுக்கு அடக்கம் இல்லாதவர் கர்வம் பிடித்தவர். இதனைப் பல சந்தர்ப்பங்களில் பலராலும் அவதானிக்ககூடியதாக இருந்தது. அண்மையில் கூட இசைப்புயலுக்கு கோல்டன் குலோப் விருது கிடைத்த போது இசைஞானி அவரைப் பாராட்டவில்லை என சில இணையத்தளங்களில் சிண்டு முடிந்தார்கள்.

அத்துடன் கோல்டன் குலோப் விருது கிடைத்த ரகுமானுக்கு தமிழக அரசின் சார்பில் எந்தப் பாராட்டு விழாவோ அல்லது கோடம்பாக்கத்தின் பாராட்டுவிழாவோ இதுவரை எடுக்கப்படவில்லை. ஆஸ்கார் வாங்கியபின்னர் சேர்த்து எடுக்கலாம் என்ற எண்ணமோ தெரியாது.

இளையராஜாவுக்கும் எம் எஸ் விஸ்வநாதனுக்கும் ஏன் உரிய கெளரவம் கொடுக்கப்படவில்லை என்பதனை யாராவது விளக்கினால் நன்றாக இருக்கும்.

குட்டிக்குட்டி விழாக்களில் எல்லாம் தமிழ்மொழியில் பேச அகெளரவம் என நினைக்கும் நடிகர் நடிகைகள் மத்தியில் ஆஸ்கார் என்ற உயரிய விழாவில் தமிழிலும் ஒருவார்த்தை பேசி தலை நிமிர வைத்த தமிழன் அல்லா ரக்கா ரகுமானுக்கு மீண்டும் வாழ்த்துக்கள்.

டிஸ்கி : இந்த நேரத்தில் ஏன் இந்தப் பதிவு எனக்கேட்பவர்கள் குசும்பனின் பதிவை ஒரு முறை சென்று பார்க்கவும்.