மரணத்தை வெல்வது எப்படி?

மரணம் என்றாவது அனைவரும் சந்திக்கப்போகும் ஒரு விடயம். ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்பார்கள். நேற்றுப் புல்லட்டின் வாழ்க்கையும் வெறுமையும் பதிவில் மரணத்தைப் பற்றியும் சில வரிகள் எழுதி, பின்னர் என்னைச் சிலவிடயங்களைக் கேட்டிருந்தார், அவருக்குரிய விளக்கம் பின்னூட்டமாக இல்லாமல் ஒரு பதிவாக.

எனக்கு ஒருகாலத்தில் மரணம் என்றால் பயமாகத் தான் இருந்தது. பக்கத்துவீட்டு ஆச்சி செத்தால் ஒரு கிழமைக்கு நான் வீட்டை விட்டு இரவில் வெளியே போகமாட்டன், பகலில் யாரும் ஆச்சியின் வீட்டைக் கடந்துபோவது என்றால் யாரும் உதவி செய்யவேண்டும். அவ்வளவு பயம் எனக்கு.

ஆனால் மரணங்கள் மலிந்த பூமியாக எங்கள் நாடு மாறிய பின்னர் மரணம் என்பது உதயன் பேப்பரில் வரும் ஒரு சாதாரண செய்தியாகவே மாறிவிட்டது. காரணம் மரணத்தைப் பார்த்து, கேட்டுச் சலித்துப்போனவர்கள் நாம்.

எங்கேயாவது தூரத்தில் ஷெல் விழுந்தாலோ, இல்லை குண்டுகள் வீசப்பட்டாலோ வீதியால் போகிற வருபவர்களை "எங்கேயாம்?" எனக் கேட்டால் அவர் "அது பருத்தித்துறையில் 12 ஆம்" என்பார். இங்கே 12 என்பது இழந்த உயிர்களின் எண்ணிக்கை, இன்னொருவர் கொஞ்சம் விளக்கமாக "அது நெல்லியடியில் 20 அதில் 5 குழந்தைகள் " என்பார், இப்படி கிரிக்கெட் ஸ்கோர் போல் எங்கள் வாழ்க்கையில் மரணிப்பவர்கள் எண்ணிக்கை இருந்தது.

கலியாண வீடுகள் மரண வீடுகளான நிகழ்வுகள் கூட எங்கள் மண்ணில் நிகழ்ந்தன. ஒரு முறை காலை ஒரு மரண வீட்டில் நின்றுவிட்டு பின்னேரம் கலியாண வீட்டில் நின்ற சந்தர்ப்பங்கள் உண்டு.

நேற்றிருந்தவர் இன்றிருக்க மாட்டார், இன்றிருப்பவர் நாளை இருக்கமாட்டார், இதுதான் விதி. ஒரு சின்ன சந்தேகம் இந்த விதி விதி என்கின்றோமே அது கடவுள் போன்றதா? இல்லை வேறு ஏதும் வடிவிலானதா?. மரணம் எந்த நேரமும் வரலாம், எப்படியும் வரலாம்.

சதா எந்த நேரமும் ஒருவன் மரணத்தைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்தான் என்றால் அவனின் வாழ்க்கை அவ்வளவுதான். அதே நேரம் மரணம் வருகின்ற நேரம் வரட்டும் அதுவரை நாம் நம்ம பாட்டிலை இருப்போம் என அதனைப் பற்றிச் சிந்திக்காமல் இருந்தால் அவன் சாதாரண மனிதன்.

இந்தவிதமான ஆசைகளையும் வைத்திருக்காமல், எதிலும் பற்று வைக்காமல் மரணத்தைக் கண்டு பயப்படாமல், எவன் மரணத்தை இலகுவாக ஏற்றுக்கொள்கின்றானோ அவன் ஞானி.

விவேகானந்தர், நபிகள் நாயகம், இயேசு நாதர், புத்த பிரான் என சமய வழிகாட்டிகள் மரணத்தை வென்றவர்கள். ஏனென்றால் அவர்கள் உலக லவ்கீக வாழ்க்கையில் இருந்து விலகி துறவறம் மூலம் மரணத்தை வென்று இன்றும் மக்கள் மனதில் நிறைந்திருக்கிறார்கள்.

உடனே உங்களுக்கு மரணத்தை வெல்லவேண்டுமென்றால் துறவியாக வேண்டும் என்ற எண்ணம் ஏற்படலாம், நிச்சயமாக துறவியாகித்தான் நீங்கள் மரணத்தை வெல்லவேண்டும் என்றில்லை. உங்கள் நாளாந்த வாழ்க்கையிலையே மரணம் பற்றிய பிரக்ஞ்சை இன்றி அதுவரும்போது ஏற்றுக்கொள்ளுவோம் என என்றைக்கு எண்ணுகின்றீர்களோ அன்றைக்கு நீங்கள் மரணத்தை வென்றவர்கள்.

தனக்கு சில நிமிடங்களில் மரணம் வரும் எனத் தெரிந்தும், "நான் திரும்பி வரும்போது எனக்கு கொக்கா கோலா வாங்கி வையுங்கோடா" எனக் கூறிச் சென்ற என்னுடைய பாடசாலை மாணவனையும் இந்த இடத்தில் நினைவூட்டுகின்றேன்.

முன்னாள் யாழ் பல்கலைக் கழக துணை வேந்தர் பேராசிரியர். துரைராஜா அவர்களின் மரணம் தான் நான் பார்த்த மரண ஊர்வலங்களிலே, இதுதான் மக்கள் கூட்டம் அதிகமான ஊர்வலம் என நினைக்கின்றேன். வதிரி ஆலங்கட்டை மயானத்தில் அவரது உடலை நல்லடக்கம் செய்யதார்கள், அவரது சிதைக்கருகில் இன்னொரு சாமான்யனின் உடல் தீயில் சங்கமமாகிக் கொண்டிருந்தது. என்னருகில் நின்ற என் நண்பன் "பாரடா புரபெசருக்கும், யாரோ ஒரு இனம் தெரியாத சாமான்யனுக்கும் ஒரு இடம் தான், வாழ்க்கையில் நாம் கடைசியாக வரும் இடம் இதுதான்" என்றான். அப்போது தான் எனக்கு இதுதான் சுடலை ஞானம் என்பார்கள் என்ற எண்ணம் வந்திருச்சு. சிலருக்கு சுடலைக்குப் போகும் வரை இந்த சுடலை ஞானம் வராது, சிலருக்கு முன்னரே வந்துவிடும்.

என் நண்பன் இன்றைக்கும் மரணம், விதி, ஆசை என எதிலும் பற்றில்லாமல் இருக்கின்றான் ஆனால் அவன் துறவியல்ல.

இங்கே மரணத்தில் இருந்து மனிதர்களைப் பிரிப்பது, அவர்களின் ஆசையாகும். ஒருவனுக்கு ஆசை அதிகரிக்க அதிகரிக்க நீண்ட நாட்கள் வாழவேண்டும் என்ற எண்ணம் மனதில் வந்துகொண்டே இருக்கும்.

ஒருவன் குழந்தையாக இருக்கும் போது மரணம் பற்றிய எந்த பிரச்சனையும் இருக்காது, வாலிபனாக மாறிய பின்னர், எதிர்காலம் குறித்த கனவுகளுடன் வாழ்வதால் அந்த நேரத்தில் மரணத்தைச் சந்திக்க கலங்குவான். திருமணம் ஆனபின்னர் தன் குழந்தைகள் வாழ்க்கைக்காக மீண்டும் மரணத்தைச் சந்திக்க தயங்குவான், பின்னர் அந்தக் குழந்தைகள் வளர்ந்து அவர்கள் திருமணம் செய்து, தன் பேரப்பிள்ளைகளின் நன்மைகளைப் பார்க்கும் வரை தான் இறக்ககூடாது என எண்ணுவார், இப்படி எண்ணி எண்ணி அவர் தன் 90 வயதுகளில் இறக்கும் வரை அவரின் ஆசை அழியாமல் தான் இருந்தது.

அதே நேரம் நமக்கு வேண்டியவர்களின் மரணம் நம்மை கதிகலங்க வைக்கலாம். ஏனென்றால் அவர்கள் நம் மேல் காட்டிய அன்பு, பாசம் போன்றவற்றுடன் ஏனைய சின்னச் சின்ன காரணங்களும். உதாரணமாக ஒருவர் நன்றாக நண்டுக் கறி சமைப்பார் அவரது கறி அவரது உறவினர்களுக்குப் பிடிக்கும், அவர் இறந்தபின்னர் இனி யார் அந்த இடத்திற்க்கு வருவார்கள் என்ற எண்ணம் பலரின் மனதில் இருக்கும்.

சிலவேளைகளில் அவரது இடத்தை நிரப்ப இன்னொருவர் வருவார் அல்லது வரமாலும் இருக்கலாம். சில விடயங்கள் வாழ்க்கையில் வந்துபோகும் அவற்றை அடிக்கடி சிந்தித்துக் கொண்டிருந்தால் வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படாது, எந்த நேரமும் ஒரு விரக்தி நிலையே இருக்கும். இது மனநோயைக் கூட உண்டாக்கலாம்.

இப்படியான சிந்தனைகளில் இருந்து விடுபடத்தான் பொழுதுபோக்குகள் உருவாகின, ஒருவன் தன் மனதை தேவையற்ற விடயங்களில் அலைபாயவிட்டால் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும். வருவது வரட்டும் இன்றைய நாளை நாம் சிறப்பாக வாழ்வோம் என நினைத்தால் வாழ்க்கை என்றைக்கும் ஒளிவீசும்.

பின்குறிப்பு : மரணத்தைப் பற்றி என் எண்ணக்கருத்துக்கள் தான் இவை. புல்லட் அவசரமாக கேட்டபடியால், கொஞ்சம் சுருக்கமாக எழுதியுள்ளேன். உங்கள் கருத்துகளையும் சொன்னால் பலரின் சந்தேகங்கள் தீரலாம்.

17 கருத்துக் கூறியவர்கள்:

நிரூஜா சொல்வது:

//உதாரணமாக ஒருவர் நன்றாக நண்டுக் கறி சமைப்பார் அவரது கறி அவரது உறவினர்களுக்குப் பிடிக்கும், அவர் இறந்தபின்னர் இனி யார் அந்த இடத்திற்க்கு வருவார்கள் என்ற எண்ணம் பலரின் மனதில் இருக்கும்.

நளபாகம் இருக்கும்வரை நண்டுக்கறிக்கு பிரச்சனை இருக்காது. :P

யதார்த்தத்தின் வெளிப்பாடாக உள்ளது அண்ணா உங்கள்பதிவு. எனதுகருத்துக்களை சொல்ல இப்போது நேரம் இல்லை. பின்னர் பார்த்துக்கொள்வோம்.

பால்குடி சொல்வது:

அருமையான விளக்கம். நாளை என்ற ஒன்றை நம்பி ஆசைகளை வளர்ப்பதுவே மரணத்தை வெல்ல முடியாமைக்கான காரணம் என்பது எனது கருத்துமாகும்.

பேராசிரியர் துரைராஜாவின் மரணத்தின்போது அவரின் ஊரவர் ஒருவர் கருத்து சொன்னதாக நான் வாசித்தறிந்த விடயம்
‘எல்லாரும் இறந்தவர்களை சொர்க்கத்துக்குப் போக வேண்டும் என்றே விரும்புவார்கள். ஆனால் நான் இம் மாமனிதரை இம்மண்ணுக்கே மீண்டும் வர வேண்டும் என்றே விரும்புகிறேன்’

Unknown சொல்வது:

//இப்படி கிரிக்கெட் ஸ்கோர் போல் எங்கள் வாழ்க்கையில் மரணிப்பவர்கள் எண்ணிக்கை இருந்தது. //

யதர்த்தம்...

ம்...
மரணத்தைப் பற்றி நினைத்து கவலைப்படும் வயது வராததால் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை. எதிர்காலத்திலும் கவலைப்படமாட்டேன்.
எவனொருவன் தன் மனச்சாட்சிக்கு ஏற்ப வாழ்கிறானோ அவனுக்கு மரணபயம் இருக்காது என்று எங்கேயோ படித்த ஞாபகம்.
அது சரி,
பதிவர்களுக்கெல்லாம் என்ன நடந்தது? இப்படி சிந்தனைப் பதிவுகளாகவே போடுறீங்களே?

ARV Loshan சொல்வது:

திடீரென எங்கள் பதிவர்கள் மத்தியில் மரணம்,வாழ்வு,நிலையாமை பற்றிய சிந்தனைகள்? ஏன் ஏன் ஏன்?

வந்தி திருமணத்தின் முன்னரே இப்படி ஆயிட்டீங்களே? ஏன் என் ஏன்??

நான் என் மரணம் பற்றி எப்போதும் பயந்தவன் கிடையாது.. அடிக்கடி கிட்டப் போய் வந்ததால் இருக்கலாம்.

ஆனால் உறவுகள்,பிடித்தவர்கள்,நண்பர்களின் மரணங்கள் என்னைப் பயமுறுத்தும்.கவலைப்பட வைக்கும். எனவே இது பற்றி ஆழமாக சிந்திப்பதில்லை.

இருக்கும் வரை சந்தோசமாக வாழ்வோம்..

//எவனொருவன் தன் மனச்சாட்சிக்கு ஏற்ப வாழ்கிறானோ அவனுக்கு மரணபயம் இருக்காது என்று எங்கேயோ படித்த ஞாபகம்.//

கனக கோபியின் கருத்தை ஆமோதிக்கிறேன்.. :)

வந்தி நல்ல பதிவு .. புல்லட் சிந்திக்கவும் வைக்கிறார் என்பது தெரிகிறது.

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

”சாகுற நேரம் தெரிஞ்சா வாழுற காலம் கஷ்டமா போயிடும்” எதோ படத்தில கேட்ட வசனம் உண்மை தான்..

எவ்வளவு தான் மரணத்தை பற்றி எண்ணியிருக்காமல் இருந்தாலும் எங்களை போன்ற சாமானியர்களுக்கு மரணம் கிட்ட வருகுது என்கிற போது ஒன்று இனம் புரியாத பயம் அல்லது வாழ்க்கையில் விரக்தி இவையிரண்டில் ஒன்று ஏற்படும். வாழ்க்கையில் எல்லா இடத்திலும் மீள்நிரப்பு (Replace) வரலாம். ஆனால் அது அந்த இடத்தை (Position) தான் மீள் நிரப்பும். அந்த ஆன்மா அந்த உயிரை அந்த உணர்வை அல்ல.

மரணம் நினைத்து பார்க்கையில் ரொம்பவே கொடியது. நான் மரணம் என்ற சொல்லுக்கு ரொம்பவே பயப்படுகிறேன்.

வந்தியத்தேவன் சொல்வது:

//நிரூஜா said...
நளபாகம் இருக்கும்வரை நண்டுக்கறிக்கு பிரச்சனை இருக்காது. :ப்//

அது சரி ஆனால் எத்தனை நாளைக்கு நளபாகம்.

//யதார்த்தத்தின் வெளிப்பாடாக உள்ளது அண்ணா உங்கள்பதிவு. எனதுகருத்துக்களை சொல்ல இப்போது நேரம் இல்லை. பின்னர் பார்த்துக்கொள்வோம்.//

நன்றிகள் உங்கள் வருகைக்கு சில பதிவுகளுக்கு உடனடியாகப் பதில் போடமுடியாது. காரணம் சிந்தித்து நல்ல பதிலாக போடவேண்டும். நேரம் கிடைக்கும் போது உங்கள் பதிலை இடுங்கள்.

வந்தியத்தேவன் சொல்வது:

//பால்குடி said...
அருமையான விளக்கம். நாளை என்ற ஒன்றை நம்பி ஆசைகளை வளர்ப்பதுவே மரணத்தை வெல்ல முடியாமைக்கான காரணம் என்பது எனது கருத்துமாகும்.//

உங்களது மட்டுமல்ல பால்குடி பெரும்பாலும் மரணத்தை ஒரு பொருட்டாகப் பயன்படுத்தாமல் இருப்பவர்களின் கருத்து இதுதான். நீ வாற நேரம் வா நான் அதுவரை கவலைப்படமாட்டேன் என இருந்தால் மரண பயம் வராது.

//பேராசிரியர் துரைராஜாவின் மரணத்தின்போது அவரின் ஊரவர் ஒருவர் கருத்து சொன்னதாக நான் வாசித்தறிந்த விடயம்
‘எல்லாரும் இறந்தவர்களை சொர்க்கத்துக்குப் போக வேண்டும் என்றே விரும்புவார்கள். ஆனால் நான் இம் மாமனிதரை இம்மண்ணுக்கே மீண்டும் வர வேண்டும் என்றே விரும்புகிறேன்’//

உண்மையில் அவர் மாமனிதர் தான். நேரில் பழகக்கூட சில சந்தர்ப்பங்கள் கிடைத்தன. அவரின் பெயரால் எமது பாடசாலையில் இருக்கும் கட்டிடத்தைக் கட்டியதில் எங்கடை வகுப்பு மாணவர்களுக்கும் பங்குண்டு.

வந்தியத்தேவன் சொல்வது:

//கனககோபி said...
//இப்படி கிரிக்கெட் ஸ்கோர் போல் எங்கள் வாழ்க்கையில் மரணிப்பவர்கள் எண்ணிக்கை இருந்தது. //

யதர்த்தம்...//

இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொண்டதால் தான் இன்னும் நாம் மனநோயாளிகளாக இல்லாமல் உயிருடன் இருக்கின்றோம்.

//எவனொருவன் தன் மனச்சாட்சிக்கு ஏற்ப வாழ்கிறானோ அவனுக்கு மரணபயம் இருக்காது என்று எங்கேயோ படித்த ஞாபகம்.//
மிகவும் சரியான வார்த்தைகள், வயதில் சிறுவன் என உங்களை நீங்களே சொல்லிக்கொண்டாலும் உங்கள் கருத்தில் அப்படித் தெரியவில்லை.

//பதிவர்களுக்கெல்லாம் என்ன நடந்தது? இப்படி சிந்தனைப் பதிவுகளாகவே போடுறீங்களே?//

ஒன்றும் நடக்கவில்லை, மொக்கைப் பதிவுகள் போட்டாலும் சிந்தனை பலருக்கு வேறு விடயங்களில் தான்.

வந்தியத்தேவன் சொல்வது:

//LOSHAN said...
திடீரென எங்கள் பதிவர்கள் மத்தியில் மரணம்,வாழ்வு,நிலையாமை பற்றிய சிந்தனைகள்? ஏன் ஏன் ஏன்?//

ஏனென்றால் சில விடயங்கள் எம்மைச் சிந்திக்க வைத்தன.

//வந்தி திருமணத்தின் முன்னரே இப்படி ஆயிட்டீங்களே? ஏன் என் ஏன்??//

அப்படியானால் தான் திருமணம் சுமையாகத் தெரியாது. எதிர்பார்ப்புகளுடன் போய் அவை கிடைக்கவில்லையென்றால் சப்பென்றிருப்பதை விட எந்த வித எதிர்பார்ப்புகளும் இன்றி இருப்பதுதான் நல்லது.

//நான் என் மரணம் பற்றி எப்போதும் பயந்தவன் கிடையாது.. அடிக்கடி கிட்டப் போய் வந்ததால் இருக்கலாம்.//

இது சத்தியமான உண்மைகள். நானும் இரண்டு தரம் சொர்க்கத்தின் வாசல் படிகளை தட்டினேன். அங்கே என்னைத் தேவையில்லை என்று திருப்பி அனுப்பிவிட்டார்கள்.

//ஆனால் உறவுகள்,பிடித்தவர்கள்,நண்பர்களின் மரணங்கள் என்னைப் பயமுறுத்தும்.கவலைப்பட வைக்கும். எனவே இது பற்றி ஆழமாக சிந்திப்பதில்லை.//

இதுவும் உண்மை ஆனால் நாலு நாட்களில் மீண்டும் சகஜ வாழ்க்கைக்கு வந்துவிடுவோம் அதுதான் மனித மனம்

//இருக்கும் வரை சந்தோசமாக வாழ்வோம்..//

ஆடும்வரை ஆட்டம்.

//வந்தி நல்ல பதிவு .. புல்லட் சிந்திக்கவும் வைக்கிறார் என்பது தெரிகிறது.//

நன்றிகள் லோஷன். புல்லட் சிறந்த சிந்தனாவாதி என்பது பலருக்குத் தெரியாது.

வந்தியத்தேவன் சொல்வது:

//யோ வாய்ஸ் (யோகா) said...
”சாகுற நேரம் தெரிஞ்சா வாழுற காலம் கஷ்டமா போயிடும்” எதோ படத்தில கேட்ட வசனம் உண்மை தான்..//

சிவாஜியில் ரஜனி சொல்வார்.

// வாழ்க்கையில் எல்லா இடத்திலும் மீள்நிரப்பு (Replace) வரலாம். ஆனால் அது அந்த இடத்தை (Position) தான் மீள் நிரப்பும். அந்த ஆன்மா அந்த உயிரை அந்த உணர்வை அல்ல.//

மிகவும் சரியான வரிகள். ஆழமான சிந்தனை. நிச்சயமாக இன்னொரு மாமா திரும்ப வரலாம் ஆனால் முதலாமவரின் உணர்வுகளை அவரால் மீள நிரப்பமுடியாது.

//மரணம் நினைத்து பார்க்கையில் ரொம்பவே கொடியது. நான் மரணம் என்ற சொல்லுக்கு ரொம்பவே பயப்படுகிறேன்.//

இதற்கான காரணம் சிலவேளைகளில் நீங்கள் மரணத்தை சீரியசாக எடுப்பதாக இருக்கலாம்

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொல்வது:

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

maruthamooran சொல்வது:

வந்தி தங்களின் இந்தப் பதிவை இன்னும் வாசிக்கவில்லை… முழுமையாக வாசித்த பின்னர் பின்னூட்டமிடுகிறேன். மரணம் குறித்த என்னுடைய பதிவு இணைப்பு இதோ…….

http://maruthamuraan.blogspot.com/2009/09/blog-post.html

HK Arun சொல்வது:

மரணத்தைப் பற்றிய உங்கள் தெளிபு, எழுத்து நடை சிறப்பாக உள்ளது.

//"பாரடா புரபெசருக்கும், யாரோ ஒரு இனம் தெரியாத சாமான்யனுக்கும் ஒரு இடம் தான், வாழ்க்கையில் நாம் கடைசியாக வரும் இடம் இதுதான்"//

அந்த இடம் எம்மவர் பல்லாயிரம் கணக்கானோருக்கும் ஒரே இடமாக முல்லைத்தீவு மாறிப்போனது ஏனோ!

என் மனதில் நான் உயர் நிலையில் வைத்திருந்த; உன்னதப் பிறவிகளும், அறிவு ஜீவிகளும், ஆற்றல் மிக்கவர்களும் கணப்பொழுதில் காணமல் போயினர். இதில் மிகச் சாதாரணான என் போன்றோர் எப்பொழுது இறந்தால் என்ன எனும் நினைப்பே மனதில் நிலையாய் நிலைத்துவிட்டது. மரணப் பயம் முற்றிலும் அற்றுப்போய் விட்டது.

நீங்கள் கூறுவதுப் போன்று "வருவது வரட்டும் இன்றைய நாளை நாம் சிறப்பாக வாழ்வோம்" என நினைத்துக் கொள்வோமாக.

Admin சொல்வது:

நான் ஒருபோதும் மரணத்துக்கு பயந்தவனல்ல. ஆனால் சிலரின் மரணங்களால் அதிகம் பாதிப்படைந்து இருக்கின்றேன். என் சிறு வயதிலே (பத்து வயதிலே) தந்தை இறந்து விட்டார் அதனால் குடும்பச் சுமை என்னிடம் வந்தது. தந்தையின் மரணம் என் வாழ்க்கையை தலைகீழாய் மாற்றியது, பட்ட கஷ்டங்கள் வேதனைகள் ஏராளம். தந்தையின் மரணத்தின் பின் கடவுளை முற்றாக வெறுத்தேன்.

இன்று மரணம் தமிழர்களுக்கு சாதாரணமாகிவிட்டது. எல்லோருக்கும் மரணம் என்று ஒன்று உண்டு என்பதனை உணர்ந்து கொள்கின்றேன். கடவுள் மீது நம்பிக்கை கொள்ள ஆரம்பித்தேன்.

ஒன்றைப்பற்றி அளவுக்கு அதிகம் சிந்திப்பதை தவிர்ப்பதனால் மரண பயம், தனிமை என்ற சிந்தனைகளில் இருந்து மீண்டு கொள்ளலாம்.

நல்ல இடுகை. நன்றிகள்

புல்லட் சொல்வது:

இப்போது வெளியே போய்காற்றாட நின்ற வேளை தற்செயலாக நிலாவைப்பார்த்தேன்.. நாளைக்கும் நிலவு வரும் நாமிருக்க மாட்டோம் என்ற பாட்டு நினைவுக்கு வந்து தொலைத்தது.. உண்மைதானே .. எம் அப்பப்பா கொள்ளுத்தத்தா, என் நியண்டதால் மூதாதை எல்லாம் அந்த நிலவைப்பார்த்து இருப்பார்கள்.. அதே நிலவை நானும் இப்போது பார்க்கிறேன்.. ஆனால் அவர்கள் இப்போது இல்லை.. உலகின் சூடு்சுமத்தை அறிந்து கொள்ளாமலயெ மறைந்து விட்டார்கள்.. நானும் ஒரு நாள் மறைந்து விடுவேன்.. மனசு கனக்கிறது..

Unknown சொல்வது:

//புல்லட் said...
இப்போது வெளியே போய்காற்றாட நின்ற வேளை தற்செயலாக நிலாவைப்பார்த்தேன்.. நாளைக்கும் நிலவு வரும் நாமிருக்க மாட்டோம் என்ற பாட்டு நினைவுக்கு வந்து தொலைத்தது.. உண்மைதானே .. எம் அப்பப்பா கொள்ளுத்தத்தா, என் நியண்டதால் மூதாதை எல்லாம் அந்த நிலவைப்பார்த்து இருப்பார்கள்.. அதே நிலவை நானும் இப்போது பார்க்கிறேன்.. ஆனால் அவர்கள் இப்போது இல்லை.. உலகின் சூடு்சுமத்தை அறிந்து கொள்ளாமலயெ மறைந்து விட்டார்கள்.. நானும் ஒரு நாள் மறைந்து விடுவேன்.. மனசு கனக்கிறது..//
அண்ணா... சார்லி சப்ளின் போன்ற வாழ்வு வேண்டாம். நீங்களும் மகிழ்ச்சியாக இருந்து மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பது தான் சிறந்தது.
தேவையற்ற குழப்பங்களை விடுத்து உங்கள் நாளாந்த மகிழ்ச்சியான வழமையான டத்துங்கள்.
என்றோ ஒருநாள் வரும் மரணத்திற்காக மகிழ்ச்சியான இந்தப் பொழுதை வீணாக்காதீர்கள்.

param சொல்வது:

நம்புங்கள். நீங்கள் இன்னும் குறைந்தது 80 வருடங்கள் வாழ்வீர்கள் என்று. அப்பொழுதுதான் வாழும் தற்கால வாழ்க்கையை நிம்மதியாக தொடரலாம் நன்பரே.