ரணிலின் கில்லி



ஜூலை 9ந்திகதி காலை எவராவது  நாட்டின் அடுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தான் என கூறி இருந்தால் ரணிலை தவிர அனைவரும் சிரித்திருப்போம். 

1977 ஆம் ஆண்டு பாராளமன்றத்துக்கு ஐதேகவின் உறுப்பினராக உள்ளே நுழைந்த ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஜே ஆர் ஜெயவர்த்தனவின் அமைச்சரவையில் இளைஞர் விவகார அமைச்சராகவும் பின்னர் கல்வி அமைச்சராகவும் கடமையாற்றியவர்.

ரணசிங்க பிரேமதாச அவர்களின் மறைவுக்கு பின்னர் நாட்டின் பிரதமராக 1993ல் முதன் முதலில் தேர்ந்தெடுக்கப்படுகிறார். 1994 ல் சந்திரிக்கா குமாரதுங்க அவர்கள் ஜனாதிபதி ஆனதும் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் எதிர்க்கட்சி தலைவராக தெரிவு செய்யப்படுகிறார்.

1999ல் சந்திரிக்கா குமாரதுங்க அவர்களிடம் முதன் முதலில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த ரணில் விக்கிரமசிங்க மீண்டும் எதிர்க்கட்சி தலைவரானார்.

2001ல் நடந்த பாராளமன்றத் தேர்தலில் சந்திரிக்காவின் பொதுஜன ஐக்கிய முன்னணியை வெற்றிகொண்டு மீண்டும் நாட்டின் பிரதமராக பதவி ஏற்ற ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அதன் பின்னர் விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளை நடாத்தி பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்தாலும் கருணாவை புலிகளிடம் இருந்து பிரித்த சாதனையை படைத்தார்(இது பின்னாளில் அவருக்கு வில்லனாக போகப்போகிறது).

தனது பதவிக்காலம் முடிவடையும் முன்னர் 2004 ல் மீண்டும் பொதுத் தேர்தலைச் சந்தித்து அதில் ரணில் விக்கரமசிங்க தலைமை தாங்கிய ஐக்கிய தேசிய முன்னணி தோல்வி அடைகிறது. 

சந்திரிக்காவின் ஆட்சிக் காலம் முடிவடைந்த பின்னர் 2005 ல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச அவர்களிடம் கிட்டத்தட்ட 180000 வாக்குகளால் தோல்வி அடைகிறார். வடமாகாணத்தில் விடுதலைப் புலிகள் வேண்டுகோளுக்கிணங்க மக்கள் தேர்தலை புறக்கணித்ததால் ரணிலுக்கு இந்த நிலை ஏற்பட்டது. இல்லையென்றால் நிச்சயம் அவர் 2005ல் ஜனாதிபதி ஆகி இருப்பார். மீண்டும் எதிர்க்கட்சித் தலைவரானார் ரணில்.

2010ல் யுத்த வெற்றிவீரனாக மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் இறங்குகின்றார். இவரை எதிர்த்து ரணில் விக்கிரமசிங்கவுக்கு பதிலாக இன்னொரு யுத்த வெற்றிவீரனான சரத் பொன்சேகா களம் இறங்கி தோல்வி அடைகிறார். இதனால் பாராளமன்றத்தில் மீண்டும் எதிர்க்கட்சித் தலைவரானர் ரணில்.

2015ல் மைத்திரி பால சிறிசேன அவர்கள் ஜனாதிபதி ஆகியதும் பாராளமன்றத் தேர்தலில் ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. மீண்டும் நாட்டின் பிரதமரானார் ரணில். இடையில் மைத்திரியின் எதிர்பாராத முடிவினால் பிரதமர் பதவியில் இருந்து தூக்கப்பட்டு மீண்டும் மஹிந்த ராஜபக்ச அவர்கள் பிரதமராகின்றார். இறுதியில் நீதிமன்ற தீர்ப்புக்கமைய மஹிந்தரின் பதவி செல்லாது என்பதால் ரணில் தன் பிரதமர் பதவியை மீண்டும் கைப்பற்றினார். 

2019ல் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் களம் காணும் போது ரணில் விக்கிரமசிங்க உட்கட்சி பூசல்களினால் சஜித் பிரேமதாச அவர்களை தேர்தலில் களமிறக்கிவிட்டு அத்தோடுதன் ஜனாதிபதி கனவையும் கைவிட்டுவிடுகிறார். 

அதுமட்டுமல்லாமல் அதன் பின்னர் நடந்த பாராளமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் அதிகுறைந்தளவு வாக்குகளை எடுத்து பாராளமன்ற உறுப்பினராக முடியாமல் தோல்வி அடைகின்றார். பின்னர் தேசியப்பட்டியல் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரேயொரு எம்பியாக பாராளமன்றத்தில் நுழைகின்றார். இத்தோடு அவரது அரசியல் ஆட்டம் முடிந்துவிட்டது என பலரும் எண்ணிக்கொண்டிருந்தார்கள் ஆனால் அவரது சாணக்கியத்தனமும் அதிர்ஷ்டமும் கோத்தாபாய வடிவில் அவருக்கு வரும் என எவரும் நினைத்துப்பார்த்திருக்கமாட்டார்கள்.

2019ல் கோத்தபாய பதவி ஏற்றபோது இன்னும் 20 வருடங்களுக்கு ராஜபக்ச குடும்பத்தினர் தான் இந்த நாட்டை ஆளப்போகின்றார்கள் என பலர் சொல்லி இருந்தார்கள். தலைமைத்துவம் முகாமைத்துவ ஆற்றலும் இல்லாத ஒருவரிடம் வெறும் யுத்த வெற்றியை வைத்து நாட்டைக் கொடுத்தது எவ்வளவு பிழையென அவருக்கு வாக்களித்த 69 லட்சம் மக்கள் உட்பட பலர் வெகுவிரையில் உணரத் தொடங்கினார்கள். அதிலும் கட்சி அடிமட்ட உறுப்பினர்களால் 7 பேரின் மூளை கொண்டவர் என பசில் ராஜபக்ச என்று நிதியமைச்சரானாரோ அன்றே இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி அதலபாதாளத்தை நோக்கி போகத்தொடங்கியது. ஊழலும் தேவையற்ற கட்டுமானங்களும் மக்களை இன்னமும் எரிச்சலூட்டின இதன் விளைவாக அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் கடந்த மார்ச் மாதம் முதல் பெரும் எடுப்பில் ஆரம்பிக்கப்பட்டன. மே மாதம் 9 திகதி காலிமுகத்திடல் கலவரத்தின் பின்னர் பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ச ராஜினாமாச் செய்கிறார். யாராவது ஒருவர் அந்த இடத்திற்க்கு வாருங்கள் என ஜனாதிபதி அழைப்பு விடுத்தும் அந்தப் பதவியை ஏற்க எவரும் முன்வராத காரணத்தால் ரணில் விக்கிரமசிங்க தனது அனுபவத்தை கொண்டு இந்த சிக்கலை தீர்க்கலாம் என மீண்டும் பிரமராகின்றார்.

ஜூலை 9 போராட்டக்காரர்களினால் ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை, ஜனாதிபதி செயலகம் என்பன கைப்பற்றபட்ட நிலையில் மாளிகையை விட்டு ஓடிய கோத்தபாய மீண்டும் 13 திகதி நாட்டைவிட்டே ஓடுகின்றார். அந்த நேரத்தில் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நியமிக்கப்படுகின்றார். 

ஜூலை 20 ல் 134 பாராளமன்ற உறுப்பினர்களால் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவு செய்யப்படுகின்றார். 

இரண்டு தடவைகள் ஜனாதிபதி தேர்தலில் தோல்வி பிரதமர் பதவியை ஒருபோதும் முழுமையான காலம் வரை கடமையாற்றாதவர். இறுதிப் பாராளமன்ற தேர்தலில் படுதோல்வி என தோல்வியின் நாயகனாக எல்லோராலும் விமர்சிக்கப்பட்ட விக்கிரமசிங்க இறுதியாக விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என உதாரண புருஷனாக விளங்குகின்றார்.

கில்லி படத்தில் அரை இறுதியில் தோல்வி அடைந்த விஜயின் கில்லி அணியினர் எப்படி இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றார்களோ அதேபோல தான் ரணில் விக்கிரசிங்கவும் பல போட்டிகளில் தோல்வி அடைந்தும் தன் இறுதி இலக்கை எப்படியோ எட்டி வெற்றி பெற்றுவிட்டார். 



0 கருத்துக் கூறியவர்கள்: