*** வல்லிபுர ஆழ்வாரும் வங்காளவிரிகுடாவும். ***

வடமராட்சியில் துன்னாலை என்னும் இடத்தில் இருக்கும் வல்லிபுர ஆழ்வார் என்ற விஷ்ணுகோவில் இலங்கை மக்கள் அனைவரிடமும் மிகவும் பிரபலம். சிவபூமியான இலங்கையில் மிகவும் குறைந்தளவான விஷ்ணு ஆலயங்களே இருக்கின்றன. வடபகுதியில் வல்லிபுர ஆழ்வாரும், பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோவிலும் மட்டும் விஷ்ணு ஆலயங்களாக விளங்குகின்றன. வல்லிபுர ஆழ்வார்கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் என பிரசித்தமானது. அதிலும் கடல்தீர்த்தம் யாழ்ப்பாணத்தின் கலாச்சாரங்களில் ஒன்றாகவே விளங்குகின்றது. புரட்டாதி பூரணைதினத்தில் வங்காளவிரிகுடாவில் சக்கரத்தாழ்வார், ஆஞ்சனேயர் சகிதம் தீர்த்தமாட மாலையில் பக்தர்கள் புடைசூழ‌ செல்வார். காலையிலிருந்தே வடமராட்சியின் பல பாகத்திலிருந்தும்,தென்மராட்சி, வலிகாமம் போன்ற எனைய யாழ்குடாநாட்டின் பகுதிகளிலிருந்தும் மக்கள் வெள்ளம் துன்னாலையை நோக்கி வந்துகொண்டே இருப்பார்கள். பல வீதிகளில் மக்களின் தாகம் தீர்க்க தண்ணீர்ப் பந்தல்கள் அமைத்திருப்பார்கள். எண்பதுகளில் மாட்டுவண்டில்களில் பலர் வருகைதருவார்கள். பின்னர் காலமாற்றத்தில் ஏனைய வாகனங்களிலும் சிலர் கால்நடையாகவும் வருவார்கள்.
வல்லிபுர ஆழ்வார் கோவில் இராஜகோபுரம் 2002ல் எனது புகைப்படக் கருவியில் சுட்டது. இராஜ கோபுரத்தில் மஹாத்மா காந்தியின் சிலை இருக்கின்றது.


கோவிலிருந்து ஏறக்குறைய 3 கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கும் கடலுக்கு தீர்த்தமாடச்செல்லவேண்டும். முன்னர் மூன்று மணற்குன்றுகளை கடந்து செல்லவேண்டும், தற்போது மணல் அகழ்வினால் ஒரே ஒரு குன்றுமாத்திரம் இருக்கின்றது. பருத்திதுறை துறைமுகம் வரை முருகைக்கல் பாறையினால் அமைந்த கடற்கரைப்பகுதி(ஆண்கடல் என்பார்கள்). பருத்தித்துறை முனைப்பகுதியில் இருந்து மணல்சார்ந்த நெய்தல் கடலாக அழகாகவும் மிகவும் ஆபத்தாகவும் காட்சிதருகின்றது.காங்கேசந்துறையிலிருந்து பருத்தித்துறை துறைமுகம் வரையான கடல் பாக்குநீரிணை ஆழம் குறைந்தகடல். அதன்பின்னர் ஆழம் கூடிய வங்காள விரிகுடா ஆரம்பமாகின்றது. இதனாலோ என்னவோ இலங்கையின் கிழக்குப்பகுதி கடற்கரை பெரும்பாலும் மணல் சார்ந்த கடலாகவே இருக்கின்றது. வருடத்திற்க்கு ஒருதடவைதான் கடலுக்கு தீர்த்தமாடச் செல்லும் பாதை பாவிக்கபடும். போகும் வழியில் கடற்தாவரங்களான இராவணன் மீசை போன்றவை கிடைக்கும். சிறியவயதில் சிப்பி, சோகியுடன் இராவணன் மீசையையும் பொறுக்கியது ஞாபகம் வருகின்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் சாரணர்கள், முதலுதவி அணியினர் எனப் பலரின் உதவிகளை ஆலய நிர்வாகம் ஏற்படுத்துகின்றது. பாடசாலை சாரணர் அணியில் இருந்தபடியால் சில தடவைகள் கடமையில் ஈடுபடும் சந்தர்ப்பம் கிடைத்தது. மாலைவேளையிலும் பூரணை நாளிலும் தீர்த்தம் என்பதால் அந்த நேரத்தில் கடல் மிகவும் கொந்தளிப்பாகவே இருக்கும் பெரிய அலைகள் உருவாகும். ஆனால் இதுவரை யாரும் அலையில் அடித்துச் சென்றதாக தெரியவரவில்லை. சிறுவர்கள் முதியவர்கள் எனப் பலரும் கடலில் குளிப்பார்கள். தீர்த்தம் ஆடமுன்னர் அந்தப் பகுதியில் குளிப்பது தடை செய்யப்பட்டிருக்கும். ஆஞ்சனேயரை கடலில் ஒரு தடவை போட்டு எடுத்ததன் பின்னர் குளிக்க அனுமதி அளிக்கப்படும். பின்னர் சந்திரன் உதயமாகும் போது மக்கள் கோவிலடிக்கு திரும்புவார்கள். தொண்ணூறுகளுக்கு முன்னர் கிழக்கிழங்கை, தென்னிலங்கை என இலங்கையின் பல பகுதியிலிருந்தும் மக்கள் வருவார்கள். தற்போது மிகவும் குறைந்துவிட்டதாக தகவல்.

நாங்கள் பதின்மவயதில்(டீன் ஏஜ்) இருந்த காலத்தில் தீர்த்தத்திற்க்கு போவதென்பது ஒரு சுற்றுலாபோல‌. வழியில் யூகேயில்(உபயகதிர்காமம்)சில நண்பர்களைச் சந்திப்போம் அங்கேயுள்ள தண்ணீர்ப் பந்தலில் மோர், சர்க்கரைத் தண்ணீர், பின்னாளில் ஜூஸ் என குடிப்பது வழக்கம். பின்னர் ஆனைவிழுந்தான் சந்தியிலும் தண்ணீர்ப் பந்தலில் பொழுதுபோக்கிவிட்டுத்தான் கோவிலுக்குச் செல்வது. ஆனைவிழுந்தானில் பேய் இருக்கின்றது என பரவலாக ஒரு கதை அடிபட்டதால் இரவு வேளைகளில் அந்தப் பாதையை பாவிப்பதில்லை. இந்த அனுபவம் பெரும்பாலான வடபகுதி மக்களுக்கு கிடைத்திருக்கும். வலையுலகிலும் சிலருக்கு கிடைத்திருக்கும் என நம்புகின்றேன் குறிப்பாக டொக்டர் முருகானந்தன், சந்திரவதனா அக்கா, தாசன்( நீண்ட நாட்களாக காணவில்லை) போன்றவர்கள் நிச்சயம் இந்த அனுபவம் உடையவர்களாக இருப்பார்கள். இதனை எழுதச் சொன்ன லீனா அண்ணன் அவர்களுக்கு நன்றிகள்.

16 கருத்துக் கூறியவர்கள்:

Unknown சொல்வது:

அது ஒரு கனாக்காலம்.
வல்லிபுரக் கோவில் கடல் தீர்த்தம் என்பதே வண்ணத்துப் பூச்சிகளின் சிற்கடிப்புப்போல எவ்வளவு அழகானது......

அழகு நிலாக்கள் அனைத்தும் ஒன்று கூடி கடற்கரையையே அலங்கரித்து.....

இனி அந்தக் காலம் மீண்டும் வருமா.....?

வந்தியத்தேவன் சொல்வது:

leenaroy said...
அழகு நிலாக்கள் அனைத்தும் ஒன்று கூடி கடற்கரையையே அலங்கரித்து.....
//

நீங்கள் எந்த நிலாவை சொல்கிறீர்கள் அண்ணா?

சின்னக்குட்டி சொல்வது:

இந்த நீச்சலடிக்க வாறீங்களா என்ற எனது பதிவில் கடல் தீர்த்த போட்டோ இருக்கிறது பார்க்க இங்கே அழுத்தவும்

தமிழன்-கறுப்பி... சொல்வது:

மறக்க முடியுமா அண்ணன் அந்த திருவிழாக்களை...

போகும் பொழுது ஓட்டமும் நடையுமாக செல்வதும் வரும் பொழுது ஒவ்வொரு செட்டாக தங்களுக்கு பிடிச்ச ஆக்களை பகிடிடி பண்ணிக்கொண்டு அந்த உசார்லயே நடந்து வந்து விடுவதும்

மணல் மேட்டில் இருந்து அவையவையின்ர ஆக்களை தேடிக்கண்டு பிடிச்சு தொடர்வதும் என பல மறக்கமுடியாத நினைவுகள் அவை...

இது பற்றின பல விசயங்களை எழுதி வைத்திருக்கிறேன் ஆனால் பதிவாக்கியது இல்லை ...

எந்த திருவிழா 'மிஸ்' பண்ணினாலும் வல்லிபுரக்கோவில் திருவிழா 'மிஸ்' பண்றதே கிடையாது நாட்டில் இருக்கும் வரை...

மாயா சொல்வது:

// தாசன்( நீண்ட நாட்களாக காணவில்லை) // அவர் இப்போ தாயகத்திலில்லைஎ போலிருக்கிறது அத தான் பதிவுகளைக்காணவில்லை . .

இப்படித்தான் நானும் காணமல் போகப்போகிறேனோ தெரியவில்லை :(((

Anonymous சொல்வது:

மறுபடி அங்கு சென்று வந்தது போல் உள்ளது..நான் கடைசியாக 2005 இல் சென்றேன்...

ARV Loshan சொல்வது:

வாழ்த்துக்கள் நண்பரே.. உங்கள் முயற்சிகள் தொடரட்டும்..
சூப்பர் ஸ்டார்,அல்டிமேட் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார் போல்.. நீங்களும் இப்போ ஓர் ஸ்டார் ... ஹீ ஹீ..

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொல்வது:

இந்த வல்லிபுரக் கோவில் இரு தடவை சென்றுள்ளேன். மறக்க முடியாத அனுபவம்.
மேலும் யாழ் பெருமாள் கோவிலை மறந்துவிட்டீர்கள்.எங்களுக்கு விண்ணு கோவில் என்றால்
யாழ் பெருமாளே முதல்.
பொன்னாலை வரதராஜர், அல்பிரட் துரையப்பாவுக்கு பின்பே வெளியே பரவலாகத் தெரிந்தவர்.
மேலும் வல்லிபுரக் கோவில் புதிய கோபுரத்தில் நாதஸ்வர மேதை காரக்குருச்சி அருணாசலம் அவர்களுக்கும்
சிலை உண்டு.
இவர்கள் இருவருமே இக் கோவிலுக்கு வந்ததால் தான் இச் சிலைகள் என ஒரு பெரியவர்
கூறினார்.
படங்களுக்கு நன்றி!

கானா பிரபா சொல்வது:

வணக்கம் வந்தி

அருமையான பதிவு, வல்லிபுரக் கோயிலுக்கு என் நினைவு தெரிந்த நாளில் வரவில்லை, சின்னனில் வந்திருக்கலாம். இனிமேல் வரவேணும். ஈழத்தின் பெருமை மிகு ஆலயங்களில் ஒன்றல்லவா இது.

வல்லிபுரக்கடல் வாழும் என்ற ஈழத்துப் பாடல் ஒன்று இருக்கிறது. திருச்சி லோகனாதன் மகன் பாடியது.

anujanya சொல்வது:

அமைதியான, அழகான ஈழத்தைப்பற்றி பொன்னியின் செல்வனில் அறிந்தது. பிறகு கேள்விப்படுவதெல்லாம் மானுடம் பொய்த்ததன் வரலாறு மட்டுமே. எனக்கே மனம் கனக்கும்போது, உங்களுக்கு...

அழகாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.

அனுஜன்யா

வி. ஜெ. சந்திரன் சொல்வது:

http://viriyumsirakukal.blogspot.com/2007/02/blog-post_7587.html

வந்தியத்தேவன் சொல்வது:

சின்னக்குட்டி அண்ணை வருகைக்கும் உங்கள் பதிவிற்க்கும் நன்றிகள்.

தமிழன் நீங்களும் நன்றாக அனுபவித்திருக்கிறீர்கள். ஆமாம் நிச்சய‌மாக யாராலும் அதனை மறக்கமுடியாது. மீண்டும் அந்த சந்தர்ப்பம் எப்போ வருமோதெரியவில்லை. வருகின்ற 27ந்திகதி வல்லிபுர ஆழ்வார் கொடியேற்றம்.


மாயா என்ன இதெல்லாம் இடைக்கிடை தொழில்நுட்பம் பற்றியாவது ஒரு வரி போடுங்கள்.

தூயா இன்னும் சுவராசியமாக எழுதியிருக்கலாம் ஆனால் பதிவு நீண்டதாகிவிடும் என்ற எண்ணத்தில் குறைத்துவிட்டேன்.


லோஷன் வருகைக்கு நன்றிகள். வெற்றியின் விடியலுக்கு நீங்கள் தான் முக்கிய காரணி எனக் கதை அடிபடுகின்றது. கன்சிபாயைக் கேட்டதாகச் சொல்லவும். சூப்பர் ஸ்டாரா ஆளைவிடுங்க,

யோகன் அண்ணை நான் நினைத்தேன் யாழ்ப்பாணம் பெருமாள் கோவில்தான் பொன்னாலைக் கோவில் என்று இரண்டு வேறு வேறு என்பது தெரியாது. தகவலுக்கு நன்றி. காரக்குறிச்சி சிலை, பாரதியார் சிலைகூட இராஜகோபுரத்தில் இருக்கின்றது.

கானா அந்தப்பாடலை ரேடியோஸ்பதியில் ஒருதடவை தாருங்கள்.

அனுஜன்யா மானுடம் பொய்த்ததனால் தான் பலவற்றை திறந்தமனதுடன் எழுதமுடியவில்லை. இல்லையென்றால் இன்னும் எத்தனையோ அனுபவங்கள் எழுதமுடியும்.

வி.ஜே. சந்திரன் உங்கள் ஆக்கம் பார்த்தேன்.

சிவா சின்னப்பொடி சொல்வது:

http://sivasinnapodi1955.blogspot.com/2006/12/1_09.html

King... சொல்வது:

பல நினைவுகளை கிளறி விட்டிருக்கிறீர்கள்...

மறக்க முடியாத திருவிழாக்கள் அவை...

-/பெயரிலி. சொல்வது:

இலங்கை பற்றிய தகவலுடனான பதிவுக்கு நன்றி.

-/பெயரிலி.

சி தயாளன் சொல்வது:

நானும் பலதடவை போயிருக்கிறன். 1995 இடம்பெயர்வு நேரம் கூட மந்துவிலில் இருந்து போனனான். கடைசியாக 2004 ல் போனனான்.. இனி..?

மறக்க முடியாத காலம்...

தாங்கள் நட்சத்திர பதிவுகளுக்கு என் வாழ்த்துகள்