54 மணித்தியாலங்கள்

 54 மணித்தியாலங்கள்

திங்கள் காலை 8 மணி ஒபிஸுக்கு போகும் வழியில் கண்டி வீதி , வீதி அபிவிருத்திச் சபை வாசல் வரை மட்டுமே லிங்கநகர் ஐஓசியில் எரிபொருள் நிரப்ப பைக்குகள் நின்றன.
காலை 9 மணி
மருமகன் போன் பண்ணி லிங்கநகர் ஷெட் லைனில் பைக் போடப்போகிறேன் உங்களுக்கு ஒரு இடம் பிடிக்கவா என கேட்டான், ஆம் நான் வேலையால் வந்து என் பைக்கை அங்கே விடுகிறேன். அவனது பைக், அவன் சித்தியின் பைக், இன்னொரு மாமாவின் பைக் என் பைக் என நான்கு பைக்குகள்.
மதியம் 12.30
என் பைக்கை அங்கே கொண்டு போக மருமகன் நிற்கும் லைன் உவர்மலை பழைய சீமெட் கிளினிக் அருகில் நிற்கிறது. என் பைக்கை அங்கே நின்ற இன்னொரு பைக்கு பதிலாக நிற்பாட்டி விட்டு இன்னும் பெற்றோல் வரவில்லை என்பதால் மருமகனை சாப்பிட அனுப்பிவிட்டு, அவன் திரும்பி வந்தபின்னர் நான் சாப்பிடப்போனேன்.
மதியம் 2.00 மணி
ஷெட்டுக்கு பெற்றோல் வந்துவிட்டதாகவும் அரசாங்க ஊழியர்களுக்கு இன்னொரு தனி வரிசையில் அடிக்கின்றார்கள் உடனே வரச் சொல்லி மருமகன் கோல். அரச ஊழியர்களின் தனி வரிசைக்கு போனால் அது முப்படையினருக்கும் போலிஸாருக்கும் ஆன லைன் என்றார்கள். இவ்வளவு படையினர் தங்களது சொந்த வாகனம் வைத்திருக்கின்றார்கள் என அப்போதான் தெரிந்தது. அவர்களது வரிசை தொடராக இல்லாமல் சமாந்தரமாக இருந்தது. அங்கே எமக்கு இடமில்லை என்பதால் மீண்டும் பழைய இடத்தில் காத்திருந்தோம்.
நேரம் மாலை 6 மணி
எங்கள் பக்க பைக்குகள் அசையவே இல்லை, பக்கத்து சுப்ரா பார்க்கில் காலாற நடந்துகொண்டிருந்தபோது மாணவன் ஒருவன் எமக்கு பின்னால் பல மீற்றர்கள் தள்ளி நின்றிருந்தான் அவனுடன் கதைத்துக்கொண்டிருந்த போது வாகனங்கள் அசைகின்றது என சொல்லவே என் இடத்துக்கு வர எங்கள் பைக்குகளுக்கு முன்னால் இருந்த இடைவெளிகளில் கிட்டத்தட்ட 30 பைக்குகள் உள்ளடக்கப்பட்டுவிட்டன.(இதற்க்கு தான் எப்பவும் ஒருதரை காவல் வைக்காமல் இடத்தை விட்டு அசையக்கூடாது என்பார்கள்) முன்னுக்கு நின்றவர்களை நான் நிற்கவேண்டிய இடம் இதுவல்ல முன்னுக்கு என்று சொல்லியும் பலர் இடம் தராத பட்சத்தில் அதே இடத்தில் நின்றோம்.(இந்த சம்பவம் கயோஸ் தியறியாக பின்னாலை ஒரு எபெக்ட் கொடுக்கும் என அப்போ தெரியவில்லை).
இரவு 8 மணி
எமக்கு முன்னால் சில இளைஞர்கள் தமது பைக்குக்காக கல்லுகள் துவிச்சக்கரவண்டிகளை அடையாளப்படுத்தி வைத்திருந்தார்கள், பின்னர் அந்த இடங்களை ரூபா 500 படி ஒரு சிலருக்கு விற்பனை செய்துவிட்டார்கள்.
வாகன வரிசை அசையாது என்ற அசாத்திய நம்பிக்கையில் நாம் ஒவ்வொருதராக வீடுகளுக்கு சென்று இரவு உணவுகளை சாப்பிட்டுவிட்டு மீண்டும் அதே இடத்தில். சும்மா நிற்பது விசரடிக்கும் என்பதால் இடைக்கிடை ஷெட் வரை போய் அங்கே நடக்கும் ஒழுங்கின்மை ஒழுக்கமின்மைகளை பார்த்து ரசித்துவிட்டு விட்டு வாறது.
நள்ளிரவு 12 மணி
ஏற்கனவே வீட்டில் இருந்துகொண்டு வந்த பாயை 22 ஆம் படையணி சந்தியில் போட்டு வீட்டு ஒரு குட்டித் தூக்கம் போட்டோம்.
செவ்வாய் அதிகாலை 2 மணி
ஷெட்டில் பெற்றோல் முடிந்துவிட்டதாகவும் இனி நாளைக்கு வந்தால் வரிசையில் நின்ற ஏனையோருக்கு விநியோகிப்பார்கள் என்ற எதிர்பார்த்த செய்தி வந்தது. நிமிர்ந்து நின்ற எங்கள் பைக்குகளை மீண்டும் சரிந்த பாட்டில் அடுக்கும் போது எங்கள் பைக்குகள் 22 ஆம் படையணி சந்தியில் இருந்து வோட்டர் போர்ட்டுக்கு முன்னால் வந்துவிட்டன. நாளைக்கு எப்படியும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் அதிகாலை 4.30 மணிக்கு வீடு திரும்பினோம்.
செவ்வாய் மதியம் 1 மணி
ஷெட்டுக்கு பெற்றோல் வந்துவிட்டதாக தகவல் கிடைத்தவுடன் சுமார் 2 மணியளவில் அங்கே சென்றோம். நாங்கள் நின்ற இடத்தில் இருந்து பைக் நகர எப்படியும் மாலை 6 மணி ஆகும் என்ற கணிப்பில் காத்திருந்தோம்.
இரவு 8 மணி
எமக்கு முன்னால் சிறிது தூரத்தில் நின்ற பைக்குகள் நகர ஆரம்பித்ததால் இரவு வீட்டுக்கு சாப்பிடச் செல்வது ரிஸ்க் என்பதால் சாப்பாட்டை கொண்டுவருமாறு வீடுகளுக்கு தகவல் அனுப்பினோம். மனைவி எனக்கு புட்டு என முதலிலையே கோல் பண்ணி இருந்தார்.
இரவு 9 மணி
எமக்கு சாப்பாடு பார்சலில் வரவும் எங்கள் பைக்குகள் நகரவும் சரியாக இருந்தது. பைக்கினை உருட்டுவதற்க்கு ஒருவர் வேண்டும் என்பதால் மூவரும் ஒன்றாக சாப்பிடாமல் ஒவ்வொருவராக சாப்பிடத்தொடங்கினோம். கடைசி ஆளாக நான் சாப்பாட்டு பார்சலை அவிழ்க்க அங்கே புட்டுக்கு பதிலாக இட்லி இருந்தது.
சாப்பிட்டபின்னர் மனைவிக்கு கோல் எடுத்து இட்லி நல்லா இருந்தது என சொல்ல அவரோ இட்லியா நான் உங்களுக்கு புட்டொல்லோ கட்டி அனுப்பினான் என்றார். மருமகன் என் சாப்பாட்டை மாறிச் சாப்பிட்டது அப்போதான் தெரிந்தது.
நத்தையை விட கொஞ்சம் வேகம் குறைவாக வாகனங்கள் நகரத்தொடங்கின எமக்கும் பெற்றோல் ஷெட்டுக்கும் இடையில் 50 மீற்றர் வித்தியாசம் இருந்தது. ஷெட்டை கண்டதும் எப்படிம் இன்றிரவு நமக்கு கட்டாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை மெல்ல துளிர் விடத் தொடங்கியது.
நள்ளிரவு 1 மணி
கொஞ்சம் நஞ்சம் இருந்த நம்பிக்கையை பொய்யாக்குவது போல பெற்றோல் முடிந்துவிட்டது என்ற செய்தி வந்தது. பிறகு என்ன திரும்ப பைக்குகளை சரிந்தவாக்கில் அடிக்கிவிட்டு பைக் எத்தனையாவதாக நிற்கிறது என எண்ணிப்பார்த்தால் 27ஆவது பைக் என்னுடையது.(முதல்நாள் காலாற நடக்காமல் விட்டிருந்தால் இன்று கிடைச்சிருக்கும் விதி வலியது). இரவு 1.30 மணிக்கு வீடு திரும்பினோம்.
புதன் மதியம் 12.30 மணி
அலுவலக தேவை நிமித்தம் கிண்ணியாவில் நிற்கும் போது மருமகன் ஷெட்டுக்கு பெற்றோல் வருகிறது உடனே வாங்கோ என்றான். நண்பகல் 1 மணிக்கு பெற்றோல் வந்துவிட்டதாக தகவல் வர வேலையில் இருந்து திரும்பும் போது லிங்கநகரில் நான் பஸ்சில் இருந்து இறங்கிவிட்டேன்.
மதியம் 2 மணி
பெற்றோல் அடிக்க ஷெட்டில் உள்ளவர்கள் ஆயத்தம் செய்யும் போது விமானப்படை சிப்பாய் ஒருவர் வந்து முன்னால் காத்திருந்த எம்மிடம் அரசாங்க அதிபரின் சிபாரிசில் 140 அரச ஊழியர்கள் இன்னொரு வரிசையில் நிற்கின்றார்கள் அவர்களுக்கு முதல் விநியோகம் செய்துவிட்டு உங்களுக்கு தொடர்ச்சியாக அடிக்கிறோம் என்றார்கள். அங்கிருந்த எல்லோரும் கோபத்துடன் நாம் 2 இரவுகள் உட்பட மூன்று நாட்களாக நிற்கிறோம் அவர்கள் இப்போ வந்துவிட்டு எப்படி உடனே அடிக்கமுடியும் என எங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துரைத்தோம். முதல்நாள் இரவு இடையிடையே நடந்த சண்டைகளை முறைப்பாடு செய்தபோது எமக்கு ஷெட்டை பாதுகாக்க தான் உத்தரவு மக்களை பாதுகாக்க அல்ல என உரைத்த படையினர் இன்று அரசாங்க அதிபரின் உத்தரவு தங்கள் கடமையை மீறுகின்றார்கள் இதனை அவர்களுக்கு எடுத்துரைக்க வடிவேல் பாணியில் அது நேற்றைய உத்தரவு இது இன்றைய உத்தரவு என்றார்கள்.
இந்த விவாதாங்களை பார்த்துக்கொண்டு இருந்த சிபாரிசு கடிதத்துடன் வந்த எந்தவொரு ஊழியரும் எமக்காக கதைக்கவில்லை என்பது கவலைக்குரிய விடயம். இத்தனைக்கும் பல அரச ஊழியர்கள் எம்முடைய வரிசையில் நின்றார்கள். மகாபாரதத்தில் கிருஷ்ணன் பாண்டவர்களுக்காக ஒரு ஊர் ஓரு மனை என பேரம் பேசியது போல நாம் அவர்களில் 10 பேர் எங்களில் 5 பேர் என மாறி மாறி விநியோகியுங்கள் என சிப்பாயுடன் பேரம் பேசினோம். ஆனால் அவர்கள் அதற்க்கு இணங்கவில்லை பின்னர் ஒரு காவல்துறை அதிகாரி அவர்களில் இருவர் உங்களில் ஒருவர் என உள்ளே எடுக்கிறோம் என்றார்(அதைத்தானே நாங்களும் சொன்னோம் இவர்களின் கணித அறிவில் தீ வைக்க). இந்த சமரசத்தின் பின்னர் சுமார் 2.15 அளவில் பெற்றோல் விநியோகிக்கத்தொடங்கினார்கள்.
பிற்பகல் 3 மணி
எங்கள் பைக்குகள் உள்ளே சென்று 5.5 டொலருக்கு (ரூபாய் 2000 4 லீற்றர் சுப்பர் பெற்றோல்) பெற்றோல் அடித்துவிட்டு 3.15 மணியளவில் வீடு திரும்பினோம்.
பின்குறிப்பு : இடையில் பார்த்த பல சுவாரசியமான சம்பங்கள் காதல்கள், சண்டைகள், ஊழல்கள் மாபியாக்களின் இடையூறுகள் பதிவின் நீளம் காரணமாக தணிக்கை செய்யப்பட்டுவிட்டது.

0 கருத்துக் கூறியவர்கள்: