Showing posts with label வ‌ந்திய‌த்தேவ‌ன். Show all posts
Showing posts with label வ‌ந்திய‌த்தேவ‌ன். Show all posts

*** நட்சத்திர வணக்கம் ***

நானும் ஒரு பதிவர் என இனி நான் என் சட்டையை உயர்த்திக்கொள்ளமுடியும். தமிழ்மணத்தில் நட்சத்திரமாக ஆவதென்றால் உங்களின் எழுத்துகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துவிட்டது என பிரபல மூத்த பதிவாளர் ஒருவர் சொல்லியிருந்தார். என்னையும் ஒரு பதிவாளராக உருவாக்கிய தமிழ்மணத்திற்க்கு முதற்கண் நன்றிகள்.

2006 ஜூலை மாதமளவில் எனக்கு வலைப்பூக்களின் அறிமுகம் கிடைத்தது. சில நாட்களுக்கு நண்பர் லக்கிலுக்கின் வலைப்பக்கம் மேயக்கிடைத்தது. இதற்க்கு முன்னரே அவர் எனக்கு அறிமுகமாயிருந்தார் ஆகையால் அவரிடம் இதனைப் பற்றியும் இதன் தொழில்நுட்ப விடயங்கள் பற்றியும் ஜீடோக்கில் கதைத்து தபால் மூலம் படிப்பதுபோல் ஈமெயில் மூலம் வலைப் பதிவுகள் பற்றிக் கற்றுக்கொண்டேன்.

எத்த‌னையோ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்ன‌ர் பாட‌சாலை கையெழுத்துப்பிர‌திக‌ளிலும் சில‌ ப‌த்திரிகைக‌ளில் விளையாட்டு ச‌ம்ப‌ந்த‌மாக‌ எழுதிய‌வைதான் என் ஆக்க‌ங்க‌ள். இதுவ‌ரை வாழ்க்கையில் நான் எழுதிய‌ ஒரே ஒரு சிறுக‌தை என் க.பொ.த(சாதாரணதரம்)ஓ.எல் த‌மிழ் பாட‌த்தில் எழுதிய‌து ம‌ட்டும்தான். இந்த‌க் க‌தை எழுதிய‌ க‌தையை இன்னொரு ப‌திவில் த‌ருகின்றேன்.(ஒரு வார‌த்திற்க்கு என் தொல்லை இருக்கும்).

என்ன எழுதலாம் எப்படி எழுதலாம் என நினைத்த போது வலைஉலகம் என்பது ஒரு வித்தியாசமான உலகம் என்னத்தையும் எழுதலாம் எப்படியும் எழுதலாம் என உணர்த்தியது தமிழ்மணத்தில் வந்த பதிவுகள் தான். அரசியல், சினிமா, சமூகம், அனுபவம், சிறுகதை, மொக்கை(என் பல பதிவுகள் அதுதான்), கும்மி என பட்டியல் தொடர சரி நானும் ஜோதியில் கலக்கவேண்டியதுதான் என 2006 ஜூலை 8 ந்திகதி ஜோதியில் ஐக்கியமானேன்.
ஆர‌ம்ப‌த்தில் பெரிதாக‌ எழுதாவிட்டாலும் (வெறும் 6 ப‌திவுக‌ள்) முட்டை அவிப்ப‌து எப்ப‌டி என‌ லீனா அண்ணா ம‌ண்ட‌ப‌த்தில் எழுதித் த‌ந்த‌ ப‌திவும், விநாயகருக்கு நேர்ந்த கதி என்ற‌ ப‌திவும் ப‌லரால் அதிக‌ம் ப‌டிக்க‌ப்ப‌ட்டு பின்னூட்ட‌மும் இட‌ப்ப‌ட்ட‌ ப‌திவுக‌ள் ஆகும். இத‌ன் பின்ன‌ர் எழுதிய‌ ஓய்வெடுங்கள் சச்சின் சூடான‌ இடுகைக‌ளில் முத‌ல் இட‌த்தைக்கூட‌ சில‌ ம‌ணி நேர‌ம் பிடித்திருந்த‌து. இதுவ‌ரை என‌து ப‌திவுக‌ளில் அதிக‌ பின்னூட்ட‌ம் கிடைத்த‌ பதிவு இதுவாக‌த் தான் இருக்க‌முடியும்.
இப்ப‌டித்தான் நான் ஜோதியில் ஐக்கியமாகினேன். பெரும்பாலான‌ என் ப‌திவுக‌ள் ச‌ம்ப‌ந்த‌ ச‌ம்ப‌ந்த‌மில்லாம‌ல் இருப்ப‌தால் என் உள‌ற‌ல்க‌ள் என‌ப் பெய‌ரிட்டேன். பொன்னியின் செல்வ‌ன் வாசித்த‌திலிருந்து நான் வ‌ந்திய‌த்தேவ‌ன் பாத்திர‌ம் என்னை மிக‌வும் க‌வ‌ர்ந்த‌தால் அவ‌ரின் பெய‌ரை என‌க்கு புனை பெய‌ராக‌வும் சூட்டிக்கொண்டேன்.

இதுதான் முன்க‌தைச் சுருக்க‌ம். ந‌ட்ச‌த்திர‌வார‌த்தில் அதிக‌ம் மொக்கைப் ப‌திவுக‌ள் போடாது சில‌ ஆக்க‌பூர்வ‌மான‌ ப‌திவுக‌ளும் போட‌ உத்தேசித்துள்ளேன். என் அனுபவங்கள், சினிமா, இல‌க்கிய‌ம், விளையாட்டு என‌ ஒரு க‌த‌ம்ப‌மாக‌ ந‌ட்ச‌த்திர‌வார‌த்தை எழுத‌ எண்ணியுள்ளேன். உங்க‌ள் மேலான‌ க‌ருத்துக்க‌ளை எதிர்பார்க்கின்றேன். இதுவ‌ரை த‌வ‌ழ்ந்த‌ இந்த‌க் குழ‌ந்தை இன்றிலிருந்து எழுந்திருக்க‌ முய‌ற்சி செய்கின்றேன். விழும் வேளைக‌ளில் கைகொடுத்து உத‌வுங்க‌ள்.

த‌மிழ்ம‌ண‌த்திற்க்கும் அத‌ன் நிர்வாகிக‌ளுக்கும் மீண்டும் என‌து ந‌ன்றிக‌ளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.