ஹாட் அண்ட் சவர் சூப் 30-12-2009

ஜனாதிபதித் தேர்தல்

நாளொரு குற்றச் சாட்டும் பொழுதொரு கட்சித் தாவலுமாக ஜனாதிபதித் தேர்தல் நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. கொழும்பு மாநகரை அலங்கரித்த கட் அவுட்டுகள் யாவையும் அகற்றப்பட்டுவிட்டன. சில நாட்களுக்கு முன்னர் கதாநாயகர்களாக இருந்தவர்கள் இன்றைக்கு வில்லனாகி மாறிவிட்டார்கள். நண்பர்களாக இருந்தவர்கள் எதிரிகளாக மாறிவிட்டார்கள். நாட்டுமக்களின் ஞாபக மறதி வாழ்க.

அரச தரப்பினால் பாரிய அளவில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகின்ற அதே வேளை எதிர்த் தரப்பு ஏனோ அடக்கிவாசிக்கின்றது. மதில் மேல் பூனையாக தமிழ்க் கூட்டமைப்பும் என்ன செய்வது என முடிவெடுக்க முடியாமல் திணறுகின்றது. புது வருடத்தின் பின்னர் தேர்தல் இன்னமும் சூடு பிடிக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.

தெலுங்கானா

தனி தெலுங்கானா மாநிலக் கோரிக்கை வலுவடைந்துள்ள நிலையில் ஒரு கிழமைக்கு முன்னர் இந்தப் பிரச்சனைக்கு இரு நாட்களில் தீர்வு காணப்படும் என மன்மோகன் சிங் அறிவித்திருந்தார் (ஆதாரம் : சன் செய்திகள்). ஆனாலும் இன்னமும் ஒன்றும் முடிந்தபாடில்லை. இதனால் மீண்டும் ஆந்திராவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தெலுங்கானா தனிமாநிலமாக அறிவிக்கப்பட்டால் மேற்குவங்கத்தைப் பிரித்து கூர்க்காலாந்து அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டுள்ள அதே நேரம் ஏனைய மாநிலங்கள் சிலவும் தனி மாநிலக் கோரிக்கைகளை விடுக்கின்றதாக செய்திகள் வருகின்றன.

2009ல் பதிவுலகம்

இன்னும் ஒரு நாளுடன் 2009க்கு விடைகொடுக்கவேண்டியதுதான், நாட்கள் மிகவும் வேகமாக ஓடுகின்றன. 2009ல் பதிவுலகத்திலும் பல நிகழ்ச்சிகள் நடந்தேறியுள்ளன. பல புதியவர்கள் புதுவிதமான கருத்துக்கள், எண்ணங்களுடன் தங்கள் வலைகளை விரித்திருக்கின்றார்கள்.

அரசியலைப் பொறுத்தவரை வருட ஆரம்பத்தில் முத்துக்குமாரில் ஆரம்பித்து பின்னர் இந்திய நாடாளமன்றத் தேர்தல், ஒபாமா, உண்ணாவிரதங்கள், மனிதச் சங்கிலிகள், முள்ளிவாய்க்கால் என கொஞ்ச நாட்கள் சூடுபிடித்து பின்னர் கொடநாடு, இலங்கை ஜனாதிபதித் தேர்தல், தெலுங்கானா என வருட இறுதிவரை சூடு குறையாமல் எழுதியிருக்கின்றார்கள்.

வருடத்தின் ஆரம்பத்தில் வில்லு படத்தைக் காய்ச்சியவர்கள் இறுதியில் வேட்டைக்காரனைக் காய்ச்சுகின்றார்கள். இடையில் உன்னைப் போல் ஒருவன், கந்தசாமி, ஆதவன் என்பன பதிவர்களுக்கு செமையான தீனி போட்ட படங்கள் இவர்களின் சினிமாப் பதிவுகளுக்கு கரு கொடுத்தன. ஆஸ்கார் நாயகன் ரகுமான், இளையராஜா எனப் பதிவுகள் இன்னமும் நீள்கின்றன.

இலக்கிய ரசிகர்களுக்கு சாருவும், ஜெயமோகனும், ஞாநியும் பூச்செண்டு கொடுத்து மகிழ்ந்தார்கள். இவர்களின் சர்ச்சை என்றைக்கும் முடியாதது.

மூத்த ப‌திவர் சிந்தாநதியின் மறைவு பதிவுலகத்திற்க்கு பேரிழப்பாகும். அத்துடன் ஒரு சில வேண்டத்தகாத நிகழ்வுகளும் நடந்தாலும், இலங்கைப் பதிவர் சந்திப்புகள், சென்னைப் பதிவர் சந்திப்புகள், சிங்கைப் பதிவர்கள் சந்திப்புகள், ஈரோடு பதிவர் சந்திப்பு என பல சந்திப்புகள் நடந்தாலும் அமீரகப் பதிவர்களின் சந்திப்பும் சுற்றுலாவும் அதனைத் தொடர்ந்து "அண்ணாசி அழைக்கின்றார்" என அவர்கள் வெளியிட்ட நகைச்சுவைக் குறும்படமும் தான் இந்த வருட பதிவர்களின் மைல் கல் எனலாம்.

கிரிக்கெட்

இந்திய இலங்கை அணிகள் மோதிய தொடர் இறுதிப்போட்டி நடைபெறாமலே முடிந்துவிட்டது. டெல்லி மைதானம் வீரர்களுக்கு பாதகமாக அமைந்தபடியால் போட்டி இடை நிறுத்திவிட்டார்கள். இனிமேலும் இப்படியான மைதானங்களை இந்திய கிரிக்கெட் வாரியம் தயார் செய்யுமா? காரணம் இம்முறை உலகக் கிண்ணத்தை நடத்தும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

அவுஸ்திரேலியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியின் இறுதிநாள் இன்று எப்படியும் போட்டியில் ஒரு முடிவு கிடைக்கும் போல் தெரிகின்றது. அண்மைக் காலமாக சதமடிக்க தடுமாறிய வாட்சன் ஒருமாதிரி சதமடித்துவிட்டார். முகமட் யூசுப்பும் மத்திய தர வீரர்களும் பொறுப்பாக ஆடினால் பாகிஸ்தான் வெற்றி பெறலாம்.

தென்னாபிரிக்கா இங்கிலாந்து போட்டியில் இங்கிலாந்தின் ஆதிக்கம் அதிகமாக காணப்படுகின்றது. இங்கிலாந்தின் வெற்றிக்கு இன்னும் 4 விக்கெட்டுகளே தேவை. பெளச்சரும் மோர்னே மோர்கலும் பொறுப்பாகவும் நிதானமாகவும் விளையாடினால் இங்கிலாந்திடம் இருந்து வெற்றியைத் தட்டிப் பறிக்கலாம். விளையாடுவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம். இந்த 2 போட்டிகளுடனும் இந்த வருடத்திற்கான கிரிக்கெட் போட்டிகள் நிறைவு பெறுகின்றன. இந்த வருடம் ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்களை இந்திய அணித்தலைவர் மகேந்திர சிங் டோணியும் விக்கெட்டுகளை ஆஸியின் வேகப் பந்துவீச்சாளர் மிச்சல் ஜோன்சனும் எடுத்திருக்கின்றார்கள்.

சின்னத் திரை

விசாரணை

கலைஞர் தொலைக்காட்சியில் க்ரைம் கதை மன்னன் ராஜேஸ்குமாரின் கதைகளை திங்கள் தொடக்கம் வியாழன் வரை நான்கு நாட்களுக்கு ஒரு கதை என விசாரணை என்ற பெயரில் தொடராக்கி வெற்றியும் கண்டிருக்கின்றார்கள். மிகவும் வேகமாகச் செல்லும் கதை பார்ப்பவர்களை நிச்சயம் கவரும். க்ரைம் பிராஞ்ச் காவல்துறை அலுவலகர் விவேக்காக சாக்சி சிவா அருமையாக பொருந்தியிருக்கின்றார். அவரது உதவியாளர் விஷ்ணுவாக ஷ்யாம் நடிக்கின்றார். விஷ்ணு பாத்திரம் சுஜாதாவின் வசந்தை நினைவூட்டுகின்றது. ஆனாலும் இதுவரை விவேக்கின் மனைவி ரூபலா வரவேயில்லை. ஏற்கனவே சுஜாதாவின் கதைகள் சில க்ரைம் தொடராக வந்தாலும் இந்த தொடர் கவர்ந்தது போல் அது கவரவில்லை, ஆண்டுக் கணக்காக மெஹா இழுவையாக இழுக்கும் சீரியல்களுக்கு மத்தியில் விசாரணை பாராட்டத்தக்கது.

சித்ராவும் மதுமிதாவும்

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியரில் நேற்று முந்தினம் பாடகர்கள் பாடிய முதல் பாடல் சுற்று நடந்தது. அதில் பாடகி மதுமிதா கலந்துகொண்டார். அவரது பாடலைப் பாட வந்த குழந்தையிடம் தன்னுடைய பாடலைக் கெடுக்கவேண்டாம் என அறிவுறுத்தினார். அதே நேரம் சித்ரா அவர்களோ தன்னுடைய பாடலைப் பாட வந்த குழந்தையிடம் தன்னை விட அழகாகப் பாடும் படியும் கேட்டுக்கொண்டார். சில காலமாகப் பாடும் மதுமிதாவிற்க்கும் சித்ராவிற்க்கும் எவ்வளவு வித்தியாசம். இதைத்தான் நிறைகுடம் தளம்பாது என்பார்களோ.

சிட்டிபாபுக்கு கண்டனங்கள்.

கிறிஸ்துமஸ் தினத்தில் சன்னில் நம்ம விஜய டி.ராஜேந்தரினை சிட்டிபாபுவும் அம்மும் பேட்டி கண்டார்கள். பல்துறைவித்தகர் ஒருவரை சிட்டிபாபு மிகவும் கேவலமாக நடத்தினார். ராஜேந்தரின் பொறுமை இடைக்கிடை குழம்பி சிட்டிபாபுவை கொஞ்சம் கண்டித்தார். யாரிடம் என்ன கேள்விகள் கேட்பது என்பது ஒரு காமெடி ஜாம்பவானுக்குத்( எத்தனை படங்களில் காமெடி செய்தார் மதுரை முத்துவைத் தான் கேட்கவேண்டும்)தெரியாதோ. சன் தொலைக்காட்சியினர் இன்னமும் ஏன் இப்படியான அரைகுறைகளை வைத்திருக்கின்றார்களோ. வரும் விருந்தினர்களுக்கு மரியாதை கொடுக்கத் தெரியாதவர்கள் எல்லாம் பேட்டி காண்கின்றார்கள், நடுவராக இருக்கின்றார்கள்.

இந்த ஆண்டின் கலக்கல் நாயகி தமன்னாவுடன் இந்த வருடத்தின் சூப் இனிதே நிறைவுறுகின்றது.



அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்.

13 கருத்துக் கூறியவர்கள்:

Unknown சொல்வது:

pls watch my blog jskpondy.blogspot.com

சி தயாளன் சொல்வது:

:-) வெள்ளைக்கரப்பான் சூப்பர்..

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

nice soup, hope to see these kind of blogs next year also.

Wishing u a happy 2010.

KALIMUTHU.V சொல்வது:

thanks for your hot news...

Bavan சொல்வது:

சூப்பர் சூப் அண்ணா...:)

இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்...:)

தர்ஷன் சொல்வது:

ம்ம் நல்ல அலசல்
எனக்கு 12, 13 வயது இருக்கும் போது ராஜேஷ்குமார் விரும்பி படிக்கும் ஒரு எழுத்தாளர். 2010 இன்னும் சுவாரசியமாய் இருக்கும் என நினைக்கிறேன்.
தமன்னா ம்ஹ்ம் பெரிய விசேடமில்லை

balavasakan சொல்வது:

தமன்னா சூப்பர் அண்ணா... என் கணினி யின் திரையை அலங்கரிக்குமளவுக்கு மனதை கொள்ளைகொண்டு விட்டார் உந்த படம் மிக..மிக..மிக....இதுக்கு மேல வேண்டாம் .......புது வருட வாழ்த்துக்கள்

மாதேவி சொல்வது:

"2009ல் பதிவுலகம்" மீண்டும் ஞாபகப்படுத்த நல்ல தகவல்கள்.

இனிய புதுவருட வாழ்த்துக்கள்.

ARV Loshan சொல்வது:

வருட இறுதி சூப், காத்திரமாகவும் பல விஷயங்களை உள்ளடக்கிய சுவையானதாகவும் இருந்தது..

பதிவுலகத் தகவல்கள் அருமை..

நானும் விசாரணை பார்க்கிறேன்..

சித்ரா ஒரு தங்கம்.. இப்போ வருவதெல்லாம் தகரங்கள்..

எங்கள் புதிய தலைவியை வெள்ளைக் கரப்பான் என்ற சிங்கை சித்தேறும்பைக் கண்டிக்கிறேன்..

ARV Loshan சொல்வது:

இனிய புதுவருட வாழ்த்துக்கள்:)

Admin சொல்வது:

அனைத்து நண்பர்களுக்கும் இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்...

Unknown சொல்வது:

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - 2010
என்றும் நட்புடன்...
http://eniniyaillam.blogspot.com/

Unknown சொல்வது:

நல்ல பதிவு அண்ணா....

ஜனாதிபதித் தேர்தல் சுவாரசியமாகத் தான் இருக்கிறது...
பார்ப்போம்....

2009 பதிவுலகத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக இரண்டாவுத பதிவர் சந்திப்பு இருக்கிறது என்றும், அதில் நானும் கலந்து கொண்டேன் என்பதிலும் எனக்கு மிக்க மகிழ்ச்சி....

சித்ரா... அவர்களெல்லாம் மேதைகள் அண்ணா....
அவர்களை யாரோடும் ஒப்பிட முடியாது....
பெரியவர்கள் பெரியவர்கள் தான்....

சிட்டிபாபு என்ன செய்தார்?
எனக்கு விளக்கமாக சொல்ல முடியுமா?
ராஜேந்தர் தனது திறமையை சரியாகப் பயன்படுது்தவில்லை என்ற கோபம் இருந்தாலும் ராஜேந்தர் என்ற கலைஞனின் திறமைகளை எப்போதும் மதிக்கிறேன்...
அருமையான கலைஞன்....


யாரது தமன்னா? :P