*** உங்கள் வாழ்க்கை எங்கள் செய்தி. ***

அரசாங்கத்தின் நான்காவது தூணான ஊடகங்களைப் பற்றிய என்னுடைய ஆதங்கங்களும் கருத்துக்களுமே இந்த பதிவில். ஒரு ஊடகம் என்பது மக்களுக்கு முக்கியமான செய்திகளூடன் உண்மைச் செய்திகளையும் கொண்டு செல்லவேண்டும் ஆனால் இன்றோ பல ஊடகங்கள் பொய்யையும் மற்றவர்களின் அந்தரங்களையுமோ செய்தியாக்கி வருமானம் பார்க்கிறார்கள்.

இன்றையகாலத்தில் ஊடகங்களை எழுத்துஊடகங்கள் இலத்திரனியல் ஊடகங்கள் என இரண்டு பிரிவாக பிரிக்கலாம். இணையம் இலத்திரனியல் ஊடகங்களில் வருவது சாலப்பொருத்தமாகும்.

பெரும்பாலான பத்திரிகைகள் வார இதழ்கள் செய்திகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட இன்னொருவரின் தனிப்பட்ட விடய‌ங்களை பெரிதாக்கு அதில் குளிர்காய்கிறார்கள். சில பத்திரிகைகள் சொல்வதை வேதவாக்க எடுப்பவர்களும் இருக்கிறார்கள். இவர்களின் அரசியல்ரீதியான பாகுபாடுகளை விட்டுவிட்டு ஏனைய விடயங்களுக்கு வருவோம். இவர்கள் சினிமா நடிகர்களை வைத்துத்த்தான் சம்பாதிக்கிறார்கள். ரஜனியை அட்டைப்படத்தில் போட்டால் இவர்களின் விற்பனை அதிகரிக்கும் என்பதால் அவரை வைத்து வியாபாரம் செய்வார்கள். பின்னர் அதே ரஜனியை கிழிகிழி எனக் கிழிப்பார்கள் கேட்டால் பத்திரிகை தர்மமாம். ஐயா நடுநிலையாளர்களே சில நாட்களுக்கு நீங்கள் ரோபோ, மர்மயோகி பற்றிய செய்திகளை போடாது வளரும் கலைஞர்களான ஜெயம் ரவி, சிபிராஜ் போன்றவர்களுக்கு ஊக்கம் கொடுங்கள். இதனைவிட்டு விட்டு மூத்த நடிகர்களின் சூடான செய்திகளை போடுவீர்கள் அவர்கள் தவறு செய்திருந்தால் அவர்களை காய்ச்சி எடுப்பீர்கள். ஆனால் நடிகைகள் விடயத்தில் நீங்கள் எப்பவுமோ புத்திசாலிகள் தான் களத்தில் எந்த நடிகைக்கு மவுசோ அவரைப் பற்றித்தான் எழுதுவீர்கள். இந்தக் குற்றச்சாட்டுகள் பாரம்பரிய வார இதழான விகடனுக்கும் தான். விக‌டன் தான் நமீதாவை வைத்து "ஹாய் மச்சான்ஸ்" என ஒரு தொடர் கொடுத்தது. இதன் தாக்கம் இப்போ நமக்கு தெரியாது இன்னும் 25 வருடங்கள் கழித்து இந்தப் பத்திரிகைளைப் யாரும் ஒரு அந்தக்கால வாசகன் பார்த்தால் நமீதா ஒரு தமிழ்ப்பேராசிரியை என நினைப்பார்.

அடுத்தது இவர்கள் சினிமா தவிர்ந்த ஏனைய விடயங்களுக்கு பெரிதாக மதிப்பளிப்பதில்லை. யாருக்காவது குற்றாலீஸ்வரன் என்ற சாதனை நீச்சல் வீரனை இன்றைக்கு ஞாபகம் இருக்கா? சிறந்த வீரனாக வரவேண்டியவர் சில காரணங்களால் அதனை செய்துமுடிக்கமுடியவில்லை, எந்தப் பத்திரிகையும் அவரைக் கண்டுகொள்ளவே இல்லை. இப்படிப் பல உதாரணங்களைச் சொல்லலாம்.

திரைப்படத்துக்கு விமர்சனம் செய்கின்றேன் என இவர்கள் செய்யும் அலும்புகள் தாங்கமுடியாது. ஒடாத படத்தை நல்ல படம் என்பார்கள். ஓடிய படத்தை தோல்விப் படம் என்பார்கள். நல்ல படத்தை போரடிக்கின்றது என கூச்சமின்றி எழுதுவார்கள். சமீபகாலமாக இவர்களின் விமர்சனங்களை பெரிதாக யாரும் எடுப்பதில்லை. வலைப்பதிவாளர்கள் பெரும்பாலானோர் நடுநிலையாகவே விமர்சிக்கிறார்கள். தங்களுக்கு வேண்டப்பட்டவர்களின் படத்துக்கு நல்ல புள்ளிகள் கொடுப்பார்கள் ஏனையவை மட்டம் என்பார்கள். பொதுவாக இவர்களிடம் இருக்கும் ஒரு நல்ல குணம் பெரும்பாலான வார இதழ்களின் விமர்சனங்கள் ஒரே மாதிரியே இருக்கும், வாசிக்கும் வாசகன் குழப்பம் அடையத்தேவையில்லை. ஆனால் தொலைக்காட்சி படவரிசை பத்துகளில் சன்னில் சத்யம் முதலாவது, கலைஞரில் உளியின் ஓசையும் தசாவதாரமும் முதலாவது, ஜெயாவில் இன்னொரு படம் முதலாவது என மக்களைத் தெளிவாக குழப்புவார்கள். அதே நேரம் இவர்கள் வசூல் ரீதியாகவா அல்லது தரரீதியாகவா தரப்படுத்துகின்றார்கள் என்பது புரியவில்லை. புரிந்தவர்கள் தெளிவுபடுத்துங்கள். நல்ல படம் எனப் பெயரெடுத்த படங்களுக்கு தரவரிசையில் இடமிருக்காது அதே நேரம் ஓடவில்லை என பலரும் சொன்ன படம் முதலாவது சமீபத்திய உதாரணம் சத்யம்.

இலத்திரனியல் ஊடகங்களில் இன்னொரு பெரிய பிரச்சனை ஏனைய வானொலி தொலைகாட்சிகளை கிண்டல் செய்வதும் அவருர்களுடன் மல்லுக்கட்டுவதும். எங்களூரில் சில வானொலிகள் முதல்தரம் நம்பர் ஒன் என தம்மைத் தாமே சொல்லிக்கொள்வார்கள். எனக்கு ஒரு சந்தேகம் முதல் தரம் என்றால் அது ஒன்றாகத் தானே இருக்கவேண்டும் ஆனால் இங்கே இரண்டு வானொலிகள் முதல் தரத்தில் இருக்கின்றன என்ன கணிப்போ? நல்ல காலம் சமீபத்தில் ஆரம்பித்த வானொலி இன்னும் அந்தச் சண்டையில் இறங்கவில்லை. இறங்காது என நினைக்கின்றேன். அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் சூரிய சக்தி தென்றலாக வீசி வெற்றியைத் தரும்.

இதேபோல் சண்டை சன் தொலைகாட்சியின் அசத்தப்போவது யாரில் அடிக்கடி நடக்கும் மதுரைமுத்து என்பவர் சன்னைப் புகழோ புகழ் என்று புகழ்வார். தங்களை ஏத்திவிட்ட விஜய தொலைக்காட்சியை ஏனோ மறந்துவிட்டார்.முன்னைய தொலைகாட்சிகளுடன் பிரச்சனை இருக்கலாம் அதற்காக அவர்களை நக்கலடிப்பது நல்லதல்ல. சன்னுக்கு கலைஞர் தொலைக்காட்சியை நக்கலடிக்கமுடியாத சூழ்நிலையில் ஜெயாவை அடிக்கடி செய்திகளில் காட்டி தங்கள் தாத்தாமீதான பாசத்தைக் காட்டுகிறார்கள்.

பொதுவாக ஊடகம் என்பது மக்களுக்கு நல்ல விடயங்களைத் தான் போதிக்கவேண்டும் ஆனால் இப்போ எதிர்மாறாகத் தான் நடக்கின்றது, சிறந்த உதாரணமாக மெஹா சீரியல்களைச் சொல்லமுடியும். இரண்டு கணவன், இரண்டு மனைவி, கள்ள உறவு இல்லாத சீரியல் எது? இதுவா நம்ம கலாச்சாரம்? தொலைக்காட்சித் தொடர்களுக்கும் தணிக்கை தேவை.

இங்கே தொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும் தமிழ் மொழியைக் கடித்து துப்பவர்களைப் பற்றிச் சொல்ல அவசியமில்லை. அதனை யாரும் முளையிலே கிள்ளவில்லை. மக்கள் தொலைக்காட்சி மட்டும் விதிவிலக்கு,

இதனைவிட சகல வானொலிகளிலும் தொலைக்காட்சிகளும் ஏனோ இங்கிலாந்து ராணியின் வாரிசுகள் போல் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். இதில் விஜய் தொலைகாட்சி முதலிடம் பெறும். இந்த தொற்றுநோய் இப்போ நம்ம நாட்டிலும் தொற்றியிருக்கின்றது என்பதுதான் கவலைக்குரிய விடயம். ஒரு முறை இந்த ஆங்கிலமோகத்தைப் பற்றி நண்பர் லக்கிலுக்கிடம் பேசியபோது தமிழகத்தின் நகரத்தில் தான் இந்த மோகம் என்று கிராமங்களில் இன்னமும் பரவவில்லை என்றும் சொல்லியிருந்தார்.

ஒருமுறை நடிகர் கமலஹாசன் குறிப்பிட்ட ஒரு விடயம் ஞாபகத்திற்க்கு வருகின்றது. "பத்திரிகையாளர்களே என் படுக்கையறைக்குள் எட்டிப்பார்க்காதீர்கள்" என்றார். டயானா முதல் இன்றைய நயந்தாரா சிம்பு காதல் வரை பெரிதுபடுத்தியவர்கள் சில பத்திரிகையாளர்கள்தான்.

சில இணையத்தளங்களும் செய்திகொடுக்கின்றேன் என மிகவும்தப்புத்தப்பான தகவல்களைக் கொடுக்கிறார்கள். அண்மையில் இலங்கையில் உள்ள பிரபல தொலைக்காட்சி ஒரு சம்பவத்திற்க்கு இன்னொரு சம்பவத்தின் ஒளிவடிவத்தை ஒளிபரப்பி பரபரப்பை ஏற்படுத்தினார்கள். பின்னர் இரண்டு நாட்கள் கழித்து வருத்தம் தெரிவித்தார்கள்.

ஒருகுடம் பாலுக்கு ஒரு துளி விஷம் என்பதுபோல் சில பத்திரிகை, தொலைகாட்சி,வானொலிகளால் அனைத்து ஊடக‌ங்களுக்கும் கெட்டபெயர். தற்போது வலையிலும் நிறைய ஊடகவியளாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கவேண்டும்.

பின்குறிப்பு : உங்கள் வாழ்க்கை எங்கள் செய்தி என்ற தலைப்பு ஏன் எனக்கேட்கிறீர்களா? நம்ம ஊரில் உள்ள தொலைக்காட்சி ஒன்று தங்கள் செய்திக்கு அவர்கள் செய்தி எனத் தமிழில் சொல்வதில்லை கொடுக்கும் விளம்பரம். இவர்களை இதுவரை யாரும் எங்கள் வாழ்க்கையை எப்படி நீங்கள் செய்தி ஆக்குவீர்கள் எனக் கேட்டதே இல்லை.

4 கருத்துக் கூறியவர்கள்:

-/பெயரிலி. சொல்வது:

பதிவுக்கு நன்றி.

-/ இலங்காத்தமிழ்ப்பதிவன்.

தமிழன்-கறுப்பி... சொல்வது:

எங்கடை ஊர் வானொலி கேட்டு எவ்வளவு நாளாச்சு..

Nimal சொல்வது:

//பின்குறிப்பு : உங்கள் வாழ்க்கை எங்கள் செய்தி என்ற தலைப்பு ஏன் எனக்கேட்கிறீர்களா? நம்ம ஊரில் உள்ள தொலைக்காட்சி ஒன்று தங்கள் செய்திக்கு அவர்கள் செய்தி எனத் தமிழில் சொல்வதில்லை கொடுக்கும் விளம்பரம். இவர்களை இதுவரை யாரும் எங்கள் வாழ்க்கையை எப்படி நீங்கள் செய்தி ஆக்குவீர்கள் எனக் கேட்டதே இல்லை.//

நீங்கள் சக்தியையே சொல்லுறீங்கள்...?

நசரேயன் சொல்வது:

/*தொலைக்காட்சிகளும் ஏனோ இங்கிலாந்து ராணியின் வாரிசுகள் போல் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். இதில் விஜய் தொலைகாட்சி முதலிடம் பெறும். இந்த தொற்றுநோய் இப்போ நம்ம நாட்டிலும் தொற்றியிருக்கின்றது என்பதுதான் கவலைக்குரிய விடயம்*/
இது முக்கியமாக கவனிக்க படவேண்டிய விசயம்