*** என் நன்றி கொன்றார்க்கும் ***


சில வாரங்களுக்கு முன்னர் எனக்கு தமிழ்மணம் நட்சத்திரப்பதிவு நிர்வாகியிடமிருந்து எதிர்வரும் செப்டம்பர் 29ந்திகதி தொடக்கம் அக்டோபர் 6 ந்திகதிவரை தமிழ்மணத்தின் நட்சத்திரமாக இருக்கமுடியுமா? என அழைப்பு வந்தது. சில நாட்களின் பின்னர் அந்த வாரமல்ல அதற்க்கு முதல்வாரமே உங்களை நட்சத்திரமாக்குகின்றோம் என அழைப்புவிடுத்தார்கள். என் வாழ்க்கையில் அவசரம் என்பது கூடவே வருவது அதனால் உடனடியாக ஒரு வாரம் முன்னர் இருப்பதாக ஒத்துக்கொண்டேன்.

என்னுடைய கஷ்டகாலம் என் நட்சத்திரவாரத்தில் தான் அலுவலகத்தில் நிறையவேலை புதிய புரஜெக்ட் ஒன்றுமே செய்யமுடியாத நிலை. அப்படியிருந்தும் கொடுத்த வாக்குறுதியைக் காப்பற்ற ஏதோ என்னால் முடிந்த சில பதிவுகளைக் கொடுத்திருந்தேன். வலைக்கு வருகை தந்த வாசகர்கள் எண்ணிக்கையும் அதிகரித்திருந்தது. ஆனால் நான் நினைத்ததுபோல் ஏனோ பின்னூட்டங்கள் அவ்வளவாக வரவில்லை. ஆனாலும் இலங்கைப் பதிவாளார்கள் சிலர் தங்கள் கருத்துக்களை மின் அஞ்சல் ஊடகச் சொல்லியிருந்தார்கள்.

பெயரிலி அவர்கள் ஒரு பதிவில் இலங்கையைப் பற்றி எழுதும்படி கேட்டிருந்தார். நட்சத்திரமாக இருந்துதான் எழுதவேண்டியதில்லை ஏற்கனவே எழுதிய சில இலங்கைப் பதிவுகளுக்கு பெரிதாக பின்னூட்டங்களும் கருத்துக்களும் வராதபடியால் வாசகர்களுக்குப் பிடிக்கவில்லை என்ற எண்ணத்தில் அதனைக் குறைத்துக்கொண்டேன். பெயரிலியின் வேண்டுகோளுக்காக ஒரு பதிவை மீள் பதிவாகக் மீண்டும் தந்திருக்கின்றேன்.

கடந்த வாரம் முழுவதும் எனது வலைக்கு வருகை தந்த நண்பர்களுக்கும், கருத்துக்களைத் தெரிவித்த நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த வாரத்தில் எனக்குத் தெரிவித்த ஆதரவுபோல் மீண்டும் எனக்கு உங்கள் ஆதரவுக்கரங்களைத் தருவீர்கள் என நம்புகின்றேன்.

இந்த இடத்தில் நன்றிக்குரியவர்களாக என்னை எப்பொழுதும் ஊக்கப்படுத்திக்கொண்டிருக்கின்ற நண்பர்களான இறக்குவானை நிர்ஷன், மாயா, தாசன்,வர்மா, வியாபகன்( ஏனோ சில நாட்களாக எழுதுகின்றார் இல்லை) லீனாரோய்,தூயா, கானாப் பிரபா போன்ற தாயக உறவுகளுக்கு நன்றிகள்.

தமிழ்மணத்திற்க்கும் அதன் நிர்வாகிகளுக்கும் மீண்டும் என் நன்றிகள். சுவையான நினைவுகளுடனும் நானும் ஒரு வலைப்பதிவன் என பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தன்னம்பிக்கையுடனும் நட்சத்திர வாரத்தில் இருந்து விடைபெறுகின்றேன்.

என்னுடைய உளறல்கள் தொடரும்......

12 கருத்துக் கூறியவர்கள்:

லக்கிலுக் சொல்வது:

//வலைக்கு வருகை தந்த வாசகர்கள் எண்ணிக்கையும் அதிகரித்திருந்தது. ஆனால் நான் நினைத்ததுபோல் ஏனோ பின்னூட்டங்கள் அவ்வளவாக வரவில்லை.//

தமிழ்ப்பதிவர்கள் என்ற பெரும் குடையின் கீழ் இணையாமல் ஈழத்துப் பதிவர்கள் தங்களை இலங்கைப் பதிவர்கள் என்று சொல்லிக்கொள்வதாலும் இருக்கலாம் :-)

இது கருத்து அல்ல விமர்சனம்!!!

-/பெயரிலி. சொல்வது:

/பெயரிலி அவர்கள் ஒரு பதிவில் இலங்கையைப் பற்றி எழுதும்படி கேட்டிருந்தார். நட்சத்திரமாக இருந்துதான் எழுதவேண்டியதில்லை ஏற்கனவே எழுதிய சில இலங்கைப் பதிவுகளுக்கு பெரிதாக பின்னூட்டங்களும் கருத்துக்களும் வராதபடியால் வாசகர்களுக்குப் பிடிக்கவில்லை என்ற எண்ணத்தில் அதனைக் குறைத்துக்கொண்டேன்./

வந்தியத்தேவன்,
உங்களுக்கு நன்றி.
பின்னூட்டங்களுக்குப் பார்த்துப் பதிவினை எழுதாதீர்கள். உங்களுக்குப் பிடித்திருந்தால், எழுதுங்கள். பின்னூட்டங்களுக்குப் பார்த்து எழுதவும் சூடாக எழுதவும் எல்லோருக்கும் நல்லவர்களாக இருக்கவும் பல அண்ணா, அக்கா, தோளர், தோளியர், தம்பிகள், தங்கைகள் இருக்கும்போது, அவர்களுடன் நீங்கள் போட்டியிடவேண்டிய அவசியமில்லையே?

பல சந்தர்ப்பங்களிலே எனது மொழி காரமாகவேயிருப்பதற்கு வருந்துகிறேன். ஆனால், நாம் மேடை நாடகர்கள். நர்த்தகிகள் அல்லவே? பதிவொன்றும் அழகுராணிப்போட்டியல்லவே.

வந்தியத்தேவன் சொல்வது:

லக்கிலுக் அவர்களுக்கு
நாம் இலங்கைப் பதிவர்களுக்கும் தமிழ்மணத்தில் இடம் கொடுங்கள் என்றுதான் கேட்டோமே ஒழிய அனைவரும் தமிழ்ப் பதிவாளர்கள் தான். ஒரு கேள்வி சென்னைப் பதிவாளர்கள் சந்திப்பு ஆமிரகப் பதிவாளர்கள் சந்திப்பு, பாண்டிச்சேரிப் பதிவாளர்கள் சந்திப்பு என சந்தித்தவர்களும் ஒரே குடைக்குள் வராதவர்களா?

நாம் தமிழ்மணத்திடம் தான் வேண்டுகோள் விடுத்தோமே தவிர எனையவர்களிடம் எம்மை ஆதரியுங்கள் எனவோ எமக்கு பின்னூட்டம் இடுங்கள் எனவோ கேட்கவில்லை. எம்மைக் கிண்டல் செய்து பெயரிலி வெளியிட்ட பின்னூட்டத்தையே வெளியிட்டிருந்தேன் ஏனென்றால் அந்த விமர்சனம் எமக்குத் தேவை.

Nimal சொல்வது:

@லக்கிலுக்:

இலங்கையில் இருந்து பதிபவர்கள் 'இலங்கைப் பதிவர்கள்' எண்டு தான் கேள்விப்பட்டிருக்கிறம். அவையள சிங்கை பதிவர் எண்டு செல்லேலாது தானே.... ;)

இது விமர்சனம் அல்ல, ஜோக்கு!!!

---

மற்றவரிடம் கேட்பதைவிட நாம் நமக்குள் இணைந்து செயற்பட்டால் பொருத்தமாக இருக்கும். இனிவரும் நாட்களில் இது தொடர்பில் சிந்திக்கலாம்.

நசரேயன் சொல்வது:

நீங்கள் எழுவது உங்களுக்கே பிடிக்காதவை நீங்கள் தாரளமாக எழுதலாம். நீங்களே உங்கள் எழுத்துக்கு ரசிகர் ஆகும் போது எதையும் பற்றி கவலை படமாட்டீர்கள், தொடர்ந்து எழுதுங்கள் வந்திய தேவன்

லக்கிலுக் சொல்வது:

//ஒரு கேள்வி சென்னைப் பதிவாளர்கள் சந்திப்பு ஆமிரகப் பதிவாளர்கள் சந்திப்பு, பாண்டிச்சேரிப் பதிவாளர்கள் சந்திப்பு என சந்தித்தவர்களும் ஒரே குடைக்குள் வராதவர்களா?//

சென்னை பதிவர் சந்திப்பு என்றால் சென்னையில் நடக்கும் சந்திப்பு என்று பொருள்.

இலங்கைப் பதிவர்கள்.. இலங்கைப் பதிவர்களுக்கு தனி திரட்டி போன்ற விஷயங்களே என்னை அதுபோல விமர்சிக்க வைத்தது.

இறக்குவானை நிர்ஷன் சொல்வது:

வாதம் வழிமாறிப் போகிறது என நினைக்கிறேன்.

லக்கி,
என்ன சொன்னாலும் நாங்கள் தமிழ்ப்பதிவர்கள் தானே? இதில் எந்த மாறுதல் இருக்கிறது?எப்படி மாற்ற முடியும்?

ஆரம்பத்தில் வலைப்பதிவு பற்றி அறியாதிருந்த போது பதிவுகள் எழுத ஆரம்பித்ததும் இலங்கையிலிருந்தும் எழுதுகிறார்கள் என்பது தெரியவந்தது. அதன்பிறகு அவர்களை தேடும் ஆவல் இருந்தது.
யுத்தத்தின் துரத்தல்களுக்கு மத்தியில் ஓடி ஒழிந்தும்கூட பதிவுலகத்துக்கு வரவேண்டுமே எனப் பதிவிடும் சிலரை இனங்காண்பதற்காகவும் ஏற்கனவே பதிவிடும் நண்பர்கள் மேற்கொண்ட முயற்சியில் தனியாக சுட்டிக்காட்ட வேண்டியிருந்தது.
அதன் அடிப்படையில் தான் இலங்கைப் பதிவர்கள் என்ற பதம் அமைந்ததே தவிர தனியே எம்மை பிரித்துக்காட்ட அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

தவறான பார்வையில் பார்க்காதீர்கள். உண்மையில் எல்லா வலைப்பதிவுகளுக்கும் சென்று அறிவுதேடும் பலருக்கு உங்கள் கருத்து வருத்தமளிக்கிறது.

பெயரிலி,
பல சந்தர்ப்பங்களில் உங்களுடைய வார்த்தைப் பிரயோகங்கள் காரமானவைதான். அதையும் தெரிந்து வைத்திருக்கிறீர்களே?

வந்தி,
நன்றி தெரிவித்திருந்தமைக்கு நன்றி.

-/பெயரிலி. சொல்வது:

/பெயரிலி,
பல சந்தர்ப்பங்களில் உங்களுடைய வார்த்தைப் பிரயோகங்கள் காரமானவைதான். அதையும் தெரிந்து வைத்திருக்கிறீர்களே?/

நிர்ஷன்
தெரிந்தே வைத்திருக்கின்றேன் ;-) அதையிட்டுப் பெரிதும் கவலையில்லை - இடையிலே வந்தியத்தேவன் போன்றோரும் அப்படியாக உணராதபட்சத்திலே. இப்பதிவுவட்டத்திலே என்னைப் பற்றிய எவரது அபிப்பிராயமும் எனக்குப் பெரிதில்லை. தேவைப்பட்டால், பதிவுலகிலே கொஞ்சம் பின்னோக்கிப் போய் வாசித்துப் பார்த்தீர்களானால், எங்கிருந்து/எதற்காக/ஏன் இக்காரம் வருகின்றதென்று புரியும்.

பாணிலே பட்டர் போட்டுப் பாடிப்பாடித் தீத்துவது கஷ்டமான காரியமில்லை; ஆனால், அதீதநீரழிவுக்காரனுக்கு நல்லதற்கா கெட்டதற்கா என்று பார்க்கவேண்டும்.

வந்தியத்தேவன்,
எனது கருத்து வருவதெல்லாம், ஒரே புள்ளியிருந்தே. இந்தியா குறித்தோ இங்கிலாந்து குறித்தோ பதிவிடுவது, அவரவர் விருப்பம். அதைப் புரிந்து கொண்டிருப்பதை ஏற்கனவே எழுதியிருக்கின்றேன். இலங்கைப்பதிவர்களென்று பெட்டிபோட்டுக் கூடி எழுதுவதும் சரியே. ஆனால், இலங்கைப்பதிவர்கள் என்ற விதத்திலே இணையத்திலே இட ஒதுக்கீடு கேட்பது நியாயமல்ல. எதற்காகவென்றால்,

1. பதிவுகள் திறந்த களமென்கிறபோது, எல்லோருக்கும் சமவுரிமை தேர்ந்தெடுக்கப்படவுண்டு

2. இடவொதுக்கீடு என்று கேட்கும்போது, யாரிடம் கேட்கிறீர்கள்? "பெரும்பான்மையிடம் பிச்சை கேட்பதுபோலவே, கேட்டுக்கேட்டுத்தான் இரவல் தாயகத்திலும் மற்றவர்கள் இரக்கத்திலும் வாழவேண்டியிருக்கின்றோம். பதிவுலகிலே, யார் யாருக்கு இடமளிப்பது? இலங்கைப்பதிவர்களுக்கு ஒரு வாரம் என்று கேட்கிறபோது, மிகுதி நாட்களைப் பெரும்பான்மைப்பதிவர்களுக்கே என்று தீர்ப்பளித்துவிடுகின்றீர்கள்.

3. இப்படியான தீர்ப்பளிப்பே, இன்னமும் இந்தியாவினை, படத்துக்கும் ஆனந்தவிகடனுக்கும் சன் ரீவிக்கும் தங்கியிருக்கும் நிலைமையை ஏற்படுத்தியிருக்கின்றது. வடிவேலு, இந்திய-அவுஸ்ரேலிய விளையாட்டு, விஜயகாந்த் என்று பதிவுகளையிட இப்படியான தங்கியிருக்கும் நிலையே காரணமாகின்றது. எதற்காக, உங்களுக்கு வீரகேசரியின் கலாகேசரியிலே வருவதுபோன்ற இலங்கைவாழ் தமிழ்க்கலைஞர்களைச் செவ்வி எடுத்துப் போடமுடியவில்லை? அரசியலைப் பேசத் தேவையில்லையே? எத்தனை தமிழகக்கலைஞர்களுக்கு வெறும் இரண்டு சொற்களுக்கு மேலாக இலங்கைக்கலைஞர்களைப் பற்றித் தெரிகின்றது? கலாவதி சின்னச்சாமி, முத்தழகு, பரராஜசிங்கம், குலசீலநாதன், வைரமுத்து, வீரகேசரிப்பதிப்பம் இவர்கள், இவை இருந்தனர், இருந்தன எனத் தெரிகிறது?

இஃது எவ்வகையிலும் இந்தியாவினையோ இந்தியர்களையோ இந்தியப்பதிவர்களையோ இழிவுபடுத்துவதல்ல - எனது கருத்துகளைப் பெரும்பாலானோர் தெளிவாகப் புரிந்துகொள்ளாமலோ, முற்றிலும் தவறாக இந்திய எதிர்ப்பு என்று புரிந்துகொண்டோ இருந்தாலுங்கூட. "சபையிலே சரியாசனம் நாம் இருக்கவேண்டுமேயொழிய, மற்றவர்களின் இரக்கத்திலே அவர்கள் போடுவதை நுகர்ந்துகொண்டு, சிலாகித்துக்கொண்டல்ல." இதை நான் சொல்வது, இந்தியாவினை இழிவுபடுத்துவதாகவோ, உங்களை நக்கல் செய்வதாகவோ இருந்தால், எனது எழுத்துத்தெளிவின்மைக்கு மன்னிக்கவேண்டும்.

இப்படியான தங்கியிருத்தல், ஈழ ஆதரவாளர் & ஈழ எதிர்ப்பாளர் என்ற வேறுபாடின்றிப் பெரும்பான்மையான இந்தியப்பதிவர்களை, வரலாற்றிலே எவ்வகையிலே எம்மைப் பற்றிய ஒரு கருத்தாக்கத்தினைக் கொண்டிருக்கச் செய்கின்றதென்பதற்கு, எம் வலைப்பதிவுகளே சாட்சிகளாகும். "எவ்வகையிலும் இரக்கம் தேடுதலையும் இரந்திருத்தையும் தவிருங்கள்" என்று மட்டுமே கூற வருகிறேன். அண்மையிலே ஒரு பதிவர், இரங்கலுக்கான இரண்டு கிளிநொச்சிப்படங்களை, அய்யோ அய்யோ என்று போட்டுவிட்டு, "யாரோ ஒரு குழந்தையும் தாயும் என இருந்துவிட தமிழர்கள் எம்மால் முடியுமா?" என்று கேட்டிருந்தார். பின்னூட்டமாக, "முடியும் - அண்ணன்மார்களால். அதுக்கு என்ன இப்போ?" என்று போட்ட பின்னூட்டம் வரவேயில்லை. "அய்யோ அய்யய்யோ அய்யோஓ" என்று அலரும் சிங்சக் பின்னூட்டங்கள் மட்டும் விடப்படுகின்றது. நான் பின்னூட்டம் போடவேயில்லை என்று சொல்லிவிட்டால், போகிறது. ஆனால், பிரச்சனையதுவல்ல? யாரிடம் இப்படியான இரக்கத்தைக் கேட்கிறீர்கள்? தமிழக அரசியலின் நகர்வினைப் பொறுத்து, ஈழ அரசியலிலே பேசுவதா இல்லையா என்று தீர்மானிக்கும் எம் வலையுடன்பிறப்புகளிடமா? இதேபோலத்தான், ஒரு வாரம் இலங்கைப்பதிவர்களுக்கான வேண்டுகோளும் எனக்குத் தோன்றியது.


நான் சொல்ல வருவதைப் புரிந்துகொண்டால், புரிந்துகொள்ளுங்கள்; இல்லாவிட்டால், என் கூற்றிலுள்ள தெளிவின்மை என்று விட்டுவிடுங்கள்.

மேலே சொல்ல எதுவும் எனக்கு இருப்பதாகத் தெரியவில்லை. அவ்வளவுதான்.

வந்தியத்தேவன் சொல்வது:

பெயரிலி, நிர்ஷன், நிமல் உங்கள் அனைவரினதும் கருத்துக்களுக்கு நன்றிகள். வார இறுதியில் இதற்கான என்னுடைய பதிலை பெயரிலியின் நீண்ட பின்னூட்டம் போல் எழுதுகின்றேன். பின்னூட்டத்திற்க்கு பின்னூட்டமிடுவதின் பார்க்க நானே பூனைக்கு மணிக்கட்ட முயற்சி செய்கின்றேன். யார் வந்தால் என்ன விட்டால் என்ன என்னுடன் நானே பேசுவதுபோல் இலங்கை சம்பந்தமான பதிவுகள் எழுத முயற்சி செய்கின்றேன். நீங்கள் குறிப்பிட்ட கலைஞர்கள் சிலருடன் எனக்கு நேரடியாக பழகச் சந்தர்ப்பம் கிடைத்தது. ஆகவே அவர்களின் குண நலன்கள் பற்றியும் சாதனைகள் பற்றியும் எழுதுகின்றேன். கலைக்கேசரியில் இரண்டு பக்கம் தமிழக பத்திரிகை ஒன்றை அப்படியே போடுகின்றார்கள். இதனைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.

வலையுலகில் விவாதம் அவசியம் ஆரம்பியுங்கள். நிர்ஷன், நிமல் உங்கள் கருத்துக்களையும் பின்னூட்டமாகவோ அல்லது பதிவாகவோ எழுதலாம். ஏனையோரும் இது பற்றி என்ன நினைக்கின்றீர்கள் என்பதைத் தெரியத்தாருங்கள்.

Nimal சொல்வது:

பெயரிலி நீங்கள் சொல்வது சரிதான். என்னைப் போன்ற பலரும் இப்போது தான் பதிவுலகுக்கு வந்திருக்கிறோம். முடிந்தால் பழைய படிவுகளை படிக்க முயற்ச்சிக்கிறேன்.

எனது கருத்தும் நாம் மற்றவர்களிடம் சலுகைகள் கேட்க தேவையில்லை என்பதுதான்.

நாம் பதிவர்கள் ஒன்றாக சேர்வது பற்றி கதைத்தாலும் 'இலங்கைப் பதிவர்கள் என்று சொல்லுகிறீர்கள்' என்று சொல்லும் நிலையில் நாமே நமக்கானவற்றை உருவாக்குவதோ கண்டடைவதோ சரியானதாக இருக்கும்.

சிலர் தமக்காக செய்வது மட்டும் சரி. நாம் செய்ய முயன்றால் மட்டும் 'இலங்கைப் பதிவர்களுக்கு தனி திரட்டி போன்ற விஷயங்கள்' என்று சொல்லும் selective மனப்பான்மையுடன் இருப்பவர்களின் கருத்துக்களை அவ்வளவாக கணக்கிலெடுக்க தேவையில்லை என்பதே எனது கருத்து.

Anonymous சொல்வது:

Let's come together on http://www.tamiljunction.com to bring all the Tamil souls unite on one platform and find Tamil friends worldwide to share our thoughts and create a common bond.

Let's also show the Mightiness of Tamils by coming together on http://www.tamiljunction.com

கானா பிரபா சொல்வது:

வணக்கம் வந்தி

நட்சத்திர வாரத்தில் பதிவுகள் சிறப்பாக இருந்தன. குறிப்பாக செங்கை ஆழியான் குறித்த உங்கள் பார்வை, வல்லிபுரக்கோயில் போன்ற ஆக்கங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. தொடர்ந்தும் சோராது எழுதுங்கள்.

வாழ்த்துக்கள்