*** வாசி வாசி நீ வாசி ***



வாசிப்பதால் மனிதன் பூரணமடைகின்றான் என்பது மிகவும் உண்மை. ஒரு மனிதனை நிலைத்திருக்க வைப்பது இரண்டு விடயங்கள் ஒன்று வாசிப்பு, இன்னொன்று அனுபவம்.

சாதாரணமாக ஒரு கிராமத்தில் இருக்கும் ஒருவரால் ஏனைய நாடுகள், கலாச்சாரம், புதிய தகவல்கள் என்பவற்றை வாசிப்பதால் அறியமுடிகின்றது. வாசிப்பு என்பது வெறுமனே தினசரிகள், வார மாத இதழ்கள் என்பதுடன் மட்டுப்படுத்தமுடியாது எவனொருவன் பரந்துபட்ட வாசிப்புக்கு தன்னைத் தானே உள்ளாக்குகின்றானோ அவனது அறிவு மென்மேலும் வளரும். அத்துடன் வாசிப்பை குறிப்பிட்ட பகுதிகளுடன் நிறுத்துவதும் தவறானது ஆகும். உதாரணமாக சிலர் பொதுவாக நாவல்கள், சிறுகதைகள் மட்டும்தான் வாசிப்பார்கள். இன்னொரு சாராரோ கட்டுரைகள் மற்றும் அறிவியல் சம்பந்தப்பட்ட விடயங்களை மட்டுமே வாசிப்பார்கள். வாசிப்பதில் சகலகலா வல்லவனாக இருந்தால் உங்கள் அறிவு நிச்சயம் வளரும். 

இன்றைக்கு பலரிடம் பெரிதாக பேசப்படும் ஒரு விடயம் வாசிப்புப் பழக்கம் மிகவும் குறைந்துவிட்டது என்பதாகும். இதற்கான முக்கியகாரணம் இலத்திரனியல் ஊடகங்களின் வருகையும் அதன் தாக்கங்களும். பெரும்பாலும் பாடசாலை மாணவர்கள் தங்கள் பாடப்புத்தகத்தை மட்டுமே வாசித்து அறிகிறார்களே ஒழிய ஏனைய பக்கம் கண் வைப்பதே இல்லை. பாடசாலைகளில் நூலகம் இருந்தாலும் நூலகத்தில் நேரம் கழிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. 

இணையத்தின் வரவு வாசிப்பில் சிறிதேனும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தின் வரவின் பின்னர் பலர் புத்தக வடிவிலான நூல்களை வாசிப்பது குறைவு இணையத்திலேயே மின் நூல்களாகவும் ஏனைய வடிவிலும் வலைகளிலும் வாசிக்கின்றார்கள். இது ஒருவகையில் நன்மையான விடயமாகும். இல்லையென்றால் ஆயிரக்கணக்கான வலைப்பதிவாளர்கள் இருக்கமாட்டார்கள்.

இன்னொரு சாரார் தமிழ்மொழியில் வாசிப்பதை பாவமாக கருதுகிறார்கள். குறிப்பாக மேல்தட்டு மக்களும், திரையுலகைச் சேர்ந்தவர்களும். ஒரு சில விதிவிலக்குகள் உண்டு. சிறந்த உதாரணமாக அண்மையில் தசாவதாரம் புகழ் ஒளிப்பதிவாளர் ஒரு பேட்டியில் தனக்கு பிடித்த எழுத்தாளர்களாக சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் என புகழ்பெற்ற பல தமிழ் எழுத்தாளர்களைக் குறிப்பிட்டார். அதே நேரம் புத்தகக் கண்காட்சிகளில் தமிழ் நூல்களை விட ஆங்கில நூல்களுக்கு அதிகம் பேர் முண்டியடித்து வாங்குகின்றார்கள் என்பதை வருத்தத்துடன் தெரிவித்தார். 

ஆனாலும் கடந்த 10 வருடங்களுடன் ஒப்பிடும்போது வாசிப்புப் பழக்கம் மிகமிக அரிதாக பலரிடம் காணப்படுகின்றது. 

இனி எனது வாசிப்பு அனுபவங்களைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம்.

சிறுவயதுமுதல் அம்புலிமாமா, கோகுலம் வாசகனாக இருந்தேன். 7 வயதில் உறவினர் ஒருவர் ஈழத்துப் பிரபல எழுத்தாளர் செங்கைஆழியானின் ஆச்சி பயணம் போகின்றாள் நகைச்சுவை நவீனத்தை என்னிடம் கொடுத்து வாசிக்கச் சொன்னார். அதுதான் நான் வாசித்த முதல் நாவல். 

பின்னர் பாடசாலையில்( 5 ஆம் வகுப்பு தொடக்கும் 8 ஆம் வகுப்பு வரை) பாடப்புத்தகத்தில் மறைத்து ராணி கொமிக்ஸ் வாசிப்பது எங்கள் வகுப்பு மாணவர்களின் மிகமுக்கிய கடமை. பாடசாலையில் காமிக்ஸ் புத்தகங்களுக்கு தடை. அதனால் சில துணிந்த மாணவர்கள் ஏதோ ஒருவழியில் புத்தகங்களை வகுப்பறைக்கு கொண்டுவந்துவிடுவார்கள். பின்னர் ஒரு பாடவேளைக்கு 50 சதம் என ஏனைய மாணவர்களிடம் அதற்கான கட்டணம் வசூலித்துவிடுவார்கள். ஆசிரியர்களிடம் பிடிபட்டால் புத்தகத்தின் உரிமையாளரைக் காட்டிக்கொடுக்ககூடாது. அப்படிக் காட்டிக்கொடுத்தால் அந்த மாணவனுக்கு பின்னர் வாசிப்பதற்க்கு யாரும் புத்தகம் கொடுக்கமாட்டார்கள். 

சிலவேளைகளில் இருவர் ஒன்றாகச் சேர்ந்து ஒரு புத்தகத்தை சேர்ந்துவாசித்து கட்டணத்தை பங்குபோடுவதும் உண்டு. என் வகுப்பில் நூற்றுக்கு எண்பதுவீதமானவர்களுக்கு இந்தப் பழக்கம் உண்டு, எங்கள் கைச் செலவுக்கு உள்ள பணம் பெரும்பாலும் இதற்க்கே செலவிடப்பட்டது. என்றும் மறக்கமுடியாத சுவாரசியமான மலரும் நினைவுகள். இந்த நாட்களில் விகடன், குமுதம் வாசகராகிவிட்டேன். முக்கியமாக கமல், ரஜனி புகைப்படம் வெளியாகிய குமுதம் விகடனுக்கு கிராக்கி அதிகம்.  மல்லிகை சிரித்திரன் போன்ற இதழ்கள் பாடசாலையில் அனுமதிக்கட்டன. ஒரு சிறிய அளவுமாணவர்களே இவற்றைப் படித்தோம். 

9 வகுப்புக்கு பின்னர் தேடல்கள் கொஞ்சம் மாறியது. பாடசாலை நூலகத்தில் ஊரிலிருக்கும் பொது நூலகத்திலும் பெரும்பாலான நேரங்கள் கழிந்தன. சுஜாதா, ராஜேந்திரகுமார், புஷ்பா தங்கத்துரை அறிமுகமாகினார்கள். ஏற்கனவே சில ஈழத்து எழுத்தாளர்களின் சிறுகதைகள் நாவல் படித்தகாலமது. பெரும்பாலும் அவர்களது அந்தக்கால எழுத்துக்கள் சமூகப் பிரச்சனைகளை மட்டும் மையப்படுத்தியதாலும் செங்கைஆழியான் போன்ற சிலர் மட்டும் வேறு வேறு களங்களில் எழுதியதால், இந்திய எழுத்தாளர்களின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. பாடசாலையில் மேலே குறிப்பிட்ட இந்திய எழுத்தாளர்களின் புத்தகத்துக்கு அனுமதிகள் இல்லை.( குறிப்பாக நாவல்களுக்கு). பொது நூலகத்தில் அவர்களை வாசிப்பது இரவலாக வீட்டுக்கு கொண்ட செல்லமுடியாது அங்கேயும் இப்போ கூடி இவர்களை வாசிக்காதே என செல்ல மிரட்டல். அதனால் இவர்களின் எழுத்தில் ஏதோ விடயம் இருக்கு என களவாக வாசிக்க பழகினேன். சுஜாதாவின் ஆங்கிலச் சொற்கள் வசந்தின் ஜோக்குகள் அப்போ புரியவில்லை. 

ஓஎல்(கபொத‌சாதரண தரம்) படிக்கும்போது அப்பா சாண்டில்ய‌னை அறிமுகப்படித்தினார் கடற்புறா முதல் முதல் வாசித்த சரித்திர நாவல், பின்னர் ஜவனராணி, கடல்ராணி என சாண்டில்யன் எனக்கு பொழுதுபோக்க உதவியுதடன் அந்தக்கால தமிழ் அரசர்களது வீரத்தையும் வெற்றிகளையும் அறியத்தந்தார். பலராலும் பொன்னியின் செல்வனும், சிவகாமியின் சபதமும் சிலாகிக்கப்பட்டாலும் எனக்கு அந்த வேளைகளில் வாசிக்க கிடைக்கவில்லை. நூலகத்தில் யாராவது ஒருவர் எடுத்துக்கொண்டு சென்றிருப்பார். 

ஏஎல் (கபொத‌உயர்தரம்) சோதனை எடுத்து பெறுபேற்றிற்காக காத்திருந்த போது பொன்னியின் செல்வன் வாசிக்க கிடைத்தது. முதல் பாகத்தை இரவிரவாக விழித்திருந்து வாசித்தேன். அடுத்த நாள் இரண்டாம் பாகம் என இப்படியே மூன்றோ நாலு நாட்களில் முழுவதுமாக வாசித்துமுடிந்துவிட்டேன். வந்தியத்தேவனும், பழுவேட்டரையர்களும்(தசாவதாரம் நெப்போலியனின் ஒப்பனை பழுவேட்டரையர் போல் தெரிகின்றார்), பொன்னியின் செல்வன் அருள்மொழிவர்மனும், குந்தவை, பூங்குழலி, வானதி சேந்தன் அமுதன் என அனைத்துப்பாத்திரங்களும் கனவில் கூட வந்தார்கள். பல தடவைகள் வாசித்தும் இன்னும் அலுப்புத்தட்டாத ஒரே ஒரு சரித்திர நாவல் இதுவாகத்தான் இருக்கமுடியும். 

சிலர் சொல்வார்கள் வாசிக்கும்போது ஊண் உறக்கம் மறக்கின்றேன் என உண்மைதான். நானே இரு தடவைகள் சுய நினைவற்று வாசித்துக்கொண்டிருந்த வேளையில் நூலகத்தில் வைத்துப்பூட்டப்பட்டேன். பின்னர் நூலகர் திரும்ப வந்து என்னை திறந்துவெளியே விட்டார். 

இன்னும் எழுதலாம் ஆனால் எனக்கும் சலிப்புத் தட்டும் வாசிக்கும் உங்களுக்கும் சலிப்புத் தட்டும் ஆகவே இத்துடன் இந்த கதை நிறுத்தப்படுகின்றது. உங்கள் அனுபவங்களை பின்னூட்டமாகவோ அல்லது தனிப்பதவிவாகவோ இடுவீர்கள் என நினைக்கின்றேன்.

9 கருத்துக் கூறியவர்கள்:

Anonymous சொல்வது:

Readers Club ஆரம்பித்தால் சொல்லவும்.. :)

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) சொல்வது:

VERY NICE ARTICLE. YES, INTHA ANUPAVAM ENAKKUM UNDU...

I REMEMBER MY SCHOOL DAYS....

THANKS....

www.nallasudar.blogspot.com

Unknown சொல்வது:

வாசிப்பது என்பது ஒரு தவம்.
ஒரு புத்தகத்தைக் கையிலெடுக்கும் ஒவ்வொருவனும் ஒரு தவத்திற்கு காட்டிற்குப் போகிறான்.
அதை அனுபவித்தவர்கள் மட்டுமே உணர முடியும்.

நாமக்கல் சிபி சொல்வது:

//வாசிப்பது என்பது ஒரு தவம்.
ஒரு புத்தகத்தைக் கையிலெடுக்கும் ஒவ்வொருவனும் ஒரு தவத்திற்கு காட்டிற்குப் போகிறான்.
அதை அனுபவித்தவர்கள் மட்டுமே உணர முடியும்.
//

முற்றிலும் உண்மை!

வந்தியத்தேவன் சொல்வது:

// thooya said...
Readers Club ஆரம்பித்தால் சொல்லவும்.. :)//

ஏற்கனவே ஊரிலும் பாடசாலையிலும் சுற்றுவாசிப்பு என்ற முறை நடைமுறையில் இருந்தது. ஒரு புத்தகத்தை வாசித்துவிட்டு பின்னர் அதன் சாராம்சத்தை அல்லது விளக்கத்தைச் சொல்லவேண்டும். வலையும் ஒரு சுற்றுவாசிப்புப்போல்தான்.

வந்தியத்தேவன் சொல்வது:

//சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
VERY NICE ARTICLE. YES, INTHA ANUPAVAM ENAKKUM UNDU... //

ஆமாம் ரொம்ப நல்லவரே வலையில் இருக்கும் அனைவரும் நிறைய வாசிப்பு பழக்கம் உடையவர்கள் இல்லையென்றால் அவர்களால் இவ்வளவு அழகாகவும் ஆழமாகவும் எழுதமுடியாது.

வந்தியத்தேவன் சொல்வது:

//leenaroy said...
வாசிப்பது என்பது ஒரு தவம்.
ஒரு புத்தகத்தைக் கையிலெடுக்கும் ஒவ்வொருவனும் ஒரு தவத்திற்கு காட்டிற்குப் போகிறான்.
அதை அனுபவித்தவர்கள் மட்டுமே உணர முடியும்.//

ஆமாம் அண்ணா நிச்சயம் தவம் தான் இல்லையென்றால் எத்தனை தடவை ஆறிப்போன தேநீர் குடித்திருப்பேன். பஸ்சில் பயணம் செய்யும்போது இறங்குகின்ற இடத்தை தவறவிட்டிருப்பேன்.

anujanya சொல்வது:

வல்லவரையா,

மிக எளிய நடையில், அதனால் உண்டாகும் ஒரு உண்மைத்தன்மையில் இந்த பதிவு உள்ளது. நட்சத்திர வாரத்திற்குப்பின் ஒரு தொடராக உங்கள் வாசிப்பு அனுபவங்களை எழுதலாம். வாழ்த்துக்கள்.

அனுஜன்யா

வந்தியத்தேவன் சொல்வது:

அனுஜன்யா நிச்சயமாக வாசிப்பு அனுபவம் என்பது ஒரு பெரிய சுவாரசியமான சரித்திரம் எனக்கு மட்டுமல்ல அனைவருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும். காலக்கிரமத்தில் சிலவற்றை எழுதலாம்.