புதிய வாழ்க்கை.
கொஞ்சம் கொஞ்சமாக வெயில் வரத்தொடங்கிவிட்டது ஆனாலும் இன்னும் குளிர் குறையவில்லை சென்ற வாரத்தில் அதிகபட்சமாக 16 டிகிரி செல்சியசில் வெப்பம். நாலு ஐந்து உடைகள் என அணிந்தவர்கள் இப்போது ஒவ்வொன்றாக குறைக்கத்தொடங்கிவிட்டார்கள். சமர் தொடங்க அணியும் உடைகளின் அளவும் எண்ணிக்கையும் மாறிவிடும். பெயர் தான் வளர்ச்சியடைந்த நாடு ஆனாலும் களவுகளும் குப்பைகளும் ஆசிய நாடுகளுக்கு நிகரானவைதான், மாயா, கரவைக்குரல் இருவரும் தொடர்புகொண்டார்கள். சதீஸ் வந்தபின்னர் சிலவேளைகளில் நாலுபேர் கொண்ட பதிவர் சந்திப்பு நடைபெறலாம். நீருஜாவும் சந்திப்பு நடத்தவேண்டும் எனப் பதிவு இட்டிருந்தார். காலம் கனிந்தால் லண்டன் பிரிட்ஜில் சந்திக்கலாம்,
எனக்கு ஏனோ இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை. என் கல்வி முடிய மீண்டும் சொந்தநாட்டுக்கு வந்தாலும் வருவேன் (சிலவேளைகளில் நல்ல எதிர்காலம் கிடைத்தால்(வேலையைத் தான் சொல்கின்றேன்) இங்கே சிலகாலம் வசிக்கலாம் ). உங்கள் வாழ்க்கையில் இதுவரை அடிபடாமல் எந்தவிதமான போராட்டங்களையும் சந்திக்கவில்லையென்றால் நிச்சயம் நீங்கள் வெளிநாடு ஒன்றுக்குச் செல்லுங்கள் வாழ்க்கையின் இன்னும் சிலவிடயங்களை அனுபவிக்கலாம்.
நிலத்தின் கீழ்ச் செல்லும் புகையிரதம், இரட்டைத் தட்டு பேருந்து, அவசர கதியில் உண்ணும் உணவுகள், ஆங்கிலம், பிரெஞ்ச், டொட்ச், ஹிந்தி, தமிழ், மலையாளம், சைனீஸ் என்ற கதம்பமொழிகள் பல நிறமனிதர்கள் என பலவற்றை அனுபவிக்கலாம்.
ஐஸ்லாந்து எரிமலையின் சீற்றம் இங்கிலாந்தை நன்றாகவே பாதித்து விட்டது. வழக்கமாக தலைக்கு மேலால் இடைவெளி இல்லாமல் பறந்து செல்லும் விமானங்கள் கடந்த ஒரு வாரமாக செல்லாமல் வானமே அமைதியாக இருக்க்கின்றது. நேற்று வழக்கம் போல் சேவை மீண்டும் ஆரம்பித்தாலும் இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை என்பதை வானம் சொல்கின்றது.
எரிமலையால் நம்ம தமிழ்க் கடைகளுக்குத் தான் விற்பனை அதிகம் இலங்கை, இந்தியாபோன்ற நாடுகளில் இருந்து தமிழ் உணவுகள் சில நாட்களுக்கு வராது என்பதால் பலர் கொஞ்சம் அதிகமாகவே வாங்கி ஏற்கனவே நிறைந்துபோயுள்ள குளிரூட்டிகளை நிறைத்து வைத்துள்ளார்கள்.
கிரிக்கெட்
இம்முறை ஐபிஎல் ஒரு விருப்புடன் பார்க்கமுடியவில்லை. கல்வி வேலை என நேரம் போனபடியால் நெட்டில் இடைக்கிடை முடிவுகளை அறிந்துகொண்டேன், சிலவேளைகளில் கங்கோனின் ட்விட்டுகளில் என்ன நடக்கின்றது என்பது நன்றாகபுரிந்தது. மோடியும் சசிதரூரும் மாட்டிக்கொண்டுவிட்டார்கள். இந்தவார விகடனில் மோடி அமெரிக்கா சிறையில் 3 வருடங்கள் இருந்தவர் என்ற மேலதிக விபரம் இருக்கின்றது. எது எப்படியோ மோடி முடிவு செய்தபடி இம்முறை மும்பாய் இந்தியன் கோப்பையை வெல்லும். கிரிக்கெட் சூதாட்டம் போல் மாறிவிட்டது.
சினிமா
சில நாட்களுக்கு முன்னர் என்னுடன் படிக்கும் பாகிஸ்தான் நண்பனுடன் பேசிக்கொண்டிருக்கும் போது இந்திய சினிமாக்கள் பற்றிய பேச்சும் வந்தது, அவர் ஹிந்தி சினிமாவுடன் தமிழில் எங்கள் உலகநாயகன் நடித்த படங்கள் மட்டும் பார்ப்பதாக கூறினார். தசாவதாரம், அவ்வை சண்முகி பல தடவை பார்த்ததாகச் சொல்லும் போது மொழி, தேசம் கடந்து உலகநாயகனின் புகழ் பரவியிருப்பது பெருமையாக இருந்தது.
அண்மையில் கலைஞர் டிவியின் புண்ணியத்தில் மதராசப் பட்டணம் படத்தில் பாடல் வெளியீடு பார்க்க கிடைத்தது. ஆரியாவின் தோற்றம் லகான் அமீர் கானை நினைவுபடுத்துகின்றது. நா.முத்துக்குமாரின் அழகிய தமிழ் வார்த்தைகளை உதித் நாராயணனைக் கொண்டு ஜிவிபிரகாஷ் ஏன் பாடிவித்தாரோ?
குறிப்பு : பல நாட்களுக்கு முன்னர் எழுதியவற்றில் சிலவற்றை நீக்கி சிலவற்றைச் சேர்ந்து பதிவிட்டிருக்கின்றேன். இன்றுதான் கோர்ஸ்வேர்க் முடிந்து கொஞ்சம் நேரம் கிடைத்துள்ளது. அடுத்த பதிவு எப்பவோ?
பீட்ஷா, பேர்கர், சிப்ஸ்
எழுதியது வந்தியத்தேவன் at 12 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் எரிமலை, கமல், கிரிக்கெட், சினிமா, லண்டன்
நலம் நலமறிய ஆவல்
எப்படி இருக்கின்றீர்கள் நண்பர்களே. என்னை ஞாபகம் இருக்கின்றதா? ம்ம்ம் நீண்ண்ண்ண்ட நாட்களாக வலையுலகம் எனக்கு அந்நியப்பட்டிருந்தது. சில பதிவுகள் மட்டும் வாசித்துவிட்டு போய்விடுவேன், திரட்டிகளைக் கூட மறந்து(கடவுச் சொற்களையும் தான்) போனேன். எல்லாம் காலம் செய்த கோலம்.
வாழ்க்கையில் சில விடயங்கள் தீடிரெனத் தான் நடக்கும் என்றைக்கோ எதிர்பார்த்த விடயம் சரிவராது என மனம் தளர்ந்து சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல வருமா என இருந்த விடயம் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் நடந்தேறிவிட்டது, கல்விக்காக லண்டன் செல்லவேண்டி இருந்தது. இடையில் ஏற்பட்ட சில சிக்கல்களினால் சில நண்பர்களுக்கு சொல்லமுடியாமல் விமான ஏறிவிட்டேன். இதனால் வலையுலகம், ட்விட்டர், பேஸ்புக் என அனைத்தும் சில நாட்கள் மறந்து போய்விட்டேன்.
அதே நேரம் சொந்தநாட்டில் தாராளமாக கிடைத்த நேரம் இங்கே கிடைப்பது அரிது. ஆகவே அந்நியனாக மாறிவிட்டேன். அத்துடன் வலையில் வீண் பொழுதைப் போக்கவேண்டாம் என சிலர் அதிரடியாக கண்டித்ததாலும் கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் விடுப்பு எடுத்துவிட்டேன்.
என்னதான் விடுப்பு எடுத்தாலும் தட்டிய கீபோர்ட்டும் கிளிக்கிய மெளசும் சும்மா இருக்கவிடவில்லை அதனால் இடையிடையே எனக்கு கிடைக்கும் நேரத்தில் ஏதாவது எழுதுவேன். என்ன இனி திரைவிமர்சனம் உடனடியாக எழுதமுடியாது. இங்கே படம் பார்க்கின்ற காசுக்கு ஊரிலை ஒரு பட்டாளமே படம் பார்க்கலாம்.
இங்கிலாந்துக்கு வந்தபின்னர் இங்கேயிருக்கும் பதிவர்கள் மாயாவும் கரவைக்குரலும் என்னுடன் தொடர்புகொண்டார்கள். கரவைக்குரல் பகிடியாக இங்கிலாந்தில் பதிவர் சந்திப்பு நடத்த இலங்கையில் இருந்து ஆட்களை அழைத்துவரவேண்டும் என்றார்.
சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல வருமா? என்பது இன்னொரு நாட்டில் வசிக்கும் போதுதான் தெரிகின்றது. ஒரு சில சுதந்திரங்கள் கிடைத்தாலும் இலங்கையில் வாழ்ந்ததுபோல் இல்லை. ஒரு சோர்ட்சும் ரீசேர்ட்டும் என இங்கே குளிரில் திரியமுடியாது. அப்படிக் குளிர் வாட்டுகின்றது. விரைவில் சமர் வரும் வெயில் கொடுமையாக இருந்தாலும் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும் என அனுபவஸ்தர்கள் சொல்கின்றார்கள்.
என் நாட்டையும் நண்பர்களையும் குறிப்பாக பதிவுலக ட்விட்டர் நண்பர்களையும் கும்மிகளையும் ரொம்பவே மிஸ் பண்ணுகின்றேன். ஒன்றை இழந்துதான் இன்னொன்று கிடைக்கும் என்பதாலும் இன்றைய நவீன தொலைத்தொடர்பு முறைகளாலும் கொஞ்சம் மனத்திருப்தி.
சச்சினின் இரட்டைச் சதம்,நித்தியானந்தா, ரஞ்சிதா, நயந்தாரா, ஜனாதிபதித் தேர்தல், ஆயிரத்தில் ஒருவன், அசல், கோவா என இழந்தவை பல. அதுவும் கிரிக்கெட்டின் தாயகமான நாட்டில் கிரிக்கெட் போட்டிகளுக்கு அவ்வளவு கிராக்கி இல்லை. கடும் குளிரிலும் மஞ்செஸ்டர் யுனைட்டடும் செல்சியும் ஒரு பந்துக்காக அடிபடுவதை பல்லாயிரக்கணக்கானோர் பார்வையிடுகின்றார்கள் பின்னர் அது பற்றித்தான் செல்லும் இடம் எல்லாம் விவாதிக்கின்றார்கள். ஒரு சிலருக்கு பிளின்டொப், பீட்டர்சன், கொலிங்வூட் யார் என்பதே தெரியாது.
இங்கேயும் அம்மா பகவான் கல்கி பகவான் பக்தர்களும் இந்தியாவில் இருந்து வருகை தரும் ஜோதிடசிகாமணிகளும் அதிகம், இவர்களின் விளம்பரம் தொலைக்காட்சிகளிலும் வருகின்றது. மானாட மயிலாடவிற்க்கும் சில மெஹா சீரியல்களுக்கும் இங்கிலாந்தில் வசிக்கும் தமிழ்ப் பெண்களும் கண்ணீர் வடிக்கின்றார்கள்.
இனிவரும் நாட்களில் இன்னும் பல்சுவையான அம்சங்களுடன் மீண்டும் சந்திக்கின்றேன்(இந்தப் பதிவு எழுதி முடிக்கவே 4 நாட்கள் எடுத்தன).
எழுதியது வந்தியத்தேவன் at 22 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் அனுபவம், இங்கிலாந்து, பதிவர் வட்டம்
தமிழ்மணம் விருதுகள் - நன்றிகள்
2009 ஆண்டுக்கான தமிழ்மணம் விருதுகளில் எனது பதிவான "பத்மஸ்ரீகளும் புவனேஸ்வரிகளும் நடுநிலை தவறும் ஊடகங்களும்" செய்திகள்/நிகழ்வுகளின் அலசல்கள் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்ற மகிழ்ச்சியான செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். இதே பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்றவர் அருமை அண்ணன் உண்மைத்தமிழன் அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். 
அத்துடன் பல நண்பர்களுக்கும் இந்த விருதுகள் கிடைத்திருக்கின்றன அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
எனது பதிவைத் தேர்ந்தெடுத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இதயம் கனிந்த நன்றிகள்.
தமிழ்மணம் வெற்றி பெற்றவர்கள்
பின் குறிப்பு :இந்தப் பதிவை தமிழ்மணத்தில் இணைக்க முடியாமல் உள்ளது
எழுதியது வந்தியத்தேவன் at 38 கருத்துக் கூறியவர்கள்
