
சில வாரங்களுக்கு முன்னர் எனக்கு தமிழ்மணம் நட்சத்திரப்பதிவு நிர்வாகியிடமிருந்து எதிர்வரும் செப்டம்பர் 29ந்திகதி தொடக்கம் அக்டோபர் 6 ந்திகதிவரை தமிழ்மணத்தின் நட்சத்திரமாக இருக்கமுடியுமா? என அழைப்பு வந்தது. சில நாட்களின் பின்னர் அந்த வாரமல்ல அதற்க்கு முதல்வாரமே உங்களை நட்சத்திரமாக்குகின்றோம் என அழைப்புவிடுத்தார்கள். என் வாழ்க்கையில் அவசரம் என்பது கூடவே வருவது அதனால் உடனடியாக ஒரு வாரம் முன்னர் இருப்பதாக ஒத்துக்கொண்டேன்.
என்னுடைய கஷ்டகாலம் என் நட்சத்திரவாரத்தில் தான் அலுவலகத்தில் நிறையவேலை புதிய புரஜெக்ட் ஒன்றுமே செய்யமுடியாத நிலை. அப்படியிருந்தும் கொடுத்த வாக்குறுதியைக் காப்பற்ற ஏதோ என்னால் முடிந்த சில பதிவுகளைக் கொடுத்திருந்தேன். வலைக்கு வருகை தந்த வாசகர்கள் எண்ணிக்கையும் அதிகரித்திருந்தது. ஆனால் நான் நினைத்ததுபோல் ஏனோ பின்னூட்டங்கள் அவ்வளவாக வரவில்லை. ஆனாலும் இலங்கைப் பதிவாளார்கள் சிலர் தங்கள் கருத்துக்களை மின் அஞ்சல் ஊடகச் சொல்லியிருந்தார்கள்.
பெயரிலி அவர்கள் ஒரு பதிவில் இலங்கையைப் பற்றி எழுதும்படி கேட்டிருந்தார். நட்சத்திரமாக இருந்துதான் எழுதவேண்டியதில்லை ஏற்கனவே எழுதிய சில இலங்கைப் பதிவுகளுக்கு பெரிதாக பின்னூட்டங்களும் கருத்துக்களும் வராதபடியால் வாசகர்களுக்குப் பிடிக்கவில்லை என்ற எண்ணத்தில் அதனைக் குறைத்துக்கொண்டேன். பெயரிலியின் வேண்டுகோளுக்காக ஒரு பதிவை மீள் பதிவாகக் மீண்டும் தந்திருக்கின்றேன்.
கடந்த வாரம் முழுவதும் எனது வலைக்கு வருகை தந்த நண்பர்களுக்கும், கருத்துக்களைத் தெரிவித்த நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த வாரத்தில் எனக்குத் தெரிவித்த ஆதரவுபோல் மீண்டும் எனக்கு உங்கள் ஆதரவுக்கரங்களைத் தருவீர்கள் என நம்புகின்றேன்.
இந்த இடத்தில் நன்றிக்குரியவர்களாக என்னை எப்பொழுதும் ஊக்கப்படுத்திக்கொண்டிருக்கின்ற நண்பர்களான இறக்குவானை நிர்ஷன், மாயா, தாசன்,வர்மா, வியாபகன்( ஏனோ சில நாட்களாக எழுதுகின்றார் இல்லை) லீனாரோய்,தூயா, கானாப் பிரபா போன்ற தாயக உறவுகளுக்கு நன்றிகள்.
தமிழ்மணத்திற்க்கும் அதன் நிர்வாகிகளுக்கும் மீண்டும் என் நன்றிகள். சுவையான நினைவுகளுடனும் நானும் ஒரு வலைப்பதிவன் என பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தன்னம்பிக்கையுடனும் நட்சத்திர வாரத்தில் இருந்து விடைபெறுகின்றேன்.
என்னுடைய உளறல்கள் தொடரும்......
*** என் நன்றி கொன்றார்க்கும் ***
எழுதியது வந்தியத்தேவன் at 11 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் தமிழ்மணம், நட்சத்திரம், வந்தியத்தேவன்
மழைக்கால நினைவுகள்
என் நினைவுகளை 15 வருடங்களுக்கு பின்னால் பின்னோக்கிப்பார்க்கிறேன் கார்த்திகை மார்கழி மாதம் என்றாலே எங்களுக்கு கொண்டாட்டம் தான் அதற்கு இரண்டு காரணம் ஒன்று பாடசாலை விடுமுறை மார்கழியில் வரும் மற்றது மாரிமழை.
எப்படியும் எங்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வுகள் நடைபெறும்போதே மழையும் ஆரம்பித்துவிடும் அதிலும் எமது பாடசாலை அலைவந்து தாலாட்டும் கடலுக்கு அருகில் இருப்பதால் மழை நாட்களில் கடல் ஒரு பெண்னைப்போல் தோற்றமளிக்கு அதுதான் அழகான ஆபத்து. நீலக்கடல் கருமையாக இருப்பதுடன் வங்காள விரிகுடாவும் பாக்கு நீரிணையும் இணையும் கடல் எமது கடல் ஆகையாலும் கொஞ்சம் பயங்கரமாகத் தான் இருக்கும் ஆனாலும் நாங்கள் அந்த நாட்களில் தான் நீந்தப்போவது.
பரீட்சை நாள் என்றால் பாடசாலை பரீட்சை முடிந்ததும் விட்டுவிடுவார்கள் சிலவேளை காலை 8 மணிக்கு பரீட்சை என்றால் எப்படியும் 10 மணி 11 மணிக்கு விட்டுவிடும் நாம் உடனே வீடு செல்வதில்லை யாரும் படிக்கும் மாணவர்கள் வீடு சென்று அடுத்த நாள் பரிட்சைக்கு தம்மை தயார்ப் படுத்துவார்கள் நாமே கடலில் சென்று குளித்து கும்மாளவிடுவது தான் எம் தலையாய கடமை அடுத்த நாளைப் பற்றி அன்றே நாம் சிந்திப்பதில்லை. 2 மணிமட்டும் கடலில் கும்மாளமிட்டுவிட்டு ஈரகாற்சட்டைகளுடன் அப்படியே வீடு செல்வது வழியில் அந்தக் காற்சட்டை உலர்ந்துவிடும்.
ஒரு முறை யாரோ ஒரு எட்டப்பன் வீட்டில் காட்டிக்கொடுத்துவிட்டான் நான் எவ்வளவு மறுத்தும் அம்மா நம்பவில்லை இறுதியாக அவர் என் கையை நக்கிப்பார்த்தார் உப்புக்கரித்தது வேர்வை உப்பல்ல கடல் உப்பு அப்புறம் என்ன செம திருவிழா தான் . நண்பர்களுக்கு இந்த விடயத்தை சொன்னதபின் தான் அவர்கள் ஒரு ஐடியா கொடுத்தார்கள் வீட்டுக்குபோகுமுன் ஏதாவது நல்ல தண்ணி உள்ள கிணற்றில் குளித்துவிட்டு செல்லும்படி அதன் பின் வரும் வழியில் உள்ள அம்மன் கோவில் கிணற்றில் நீராடிவிட்டுத்தான் வீடு செல்வது.
கடலில் தினமும் குளித்தால் உடம்பு கறுக்கும் என்று யாரோ ஒரு புண்ணியவான் சொன்னதின் பின்னர் என்னை மாதிரி சிவலைப் பொடியள் கடலில் குளிக்க செல்வது குறைவு . கடலில்ற்குப் பதில் கோயில் கேனிகள் (தெப்பக்குளம்).
யாழ்ப்பாணத்தில் மூலைக்கு மூலை கோயில்கள் இருப்பது அந்த நாளில் எமக்கு கடவுளை வணங்கப் பயன்பட்டதோ இல்லையோ சைட் அடிக்கவும் கேணிகளில் குளித்து கும்மாளமிடவும் நன்றாகப் பயன்பட்டது. மழை நாட்களில் கோயில் குளங்கள் நிரம்பி வழியும் எப்படியும் ஒரு 15 அல்லது 20 அடிகளுக்கு தண்ணிர் நிரம்பியிருக்கும். அங்கே டைவ் அடிப்பது முதல் நீரின் அடியில் சுழியோடி மண் எடுப்பது என பல வித்தைகள் செய்வோம். சில்வேளை மதிய உணவு உண்ண வீடு செல்வது கூட இல்லை பக்கத்து காணிகளில் உள்ள மாமரங்கள் தென்னமரங்கள் எல்லாம் எம் கட்டுப்பாட்டில் மாங்காய் தேங்காய் தான் எம் உணவு. சில பெரிய பொடியள் மட்டும் கொஞ்சம் கள்ளும் சிகரெட்டும் குடிப்பார்கள் (அவர்கள் வேறை கேங்). நாம் அவர்கள் சுருள் சுருளாக புகைவிடுவதை வேடிக்கை பார்ப்போம்.
எமது பாடசாலைக்கு அருகில் உள்ள அம்மன் கோவில் கேணி, இன்னொரு வீரபத்திரர் கோவில் கேணி சிலவேளை மூன்று நான்கு மைல்களுக்கு அப்பால் உள்ள வல்லிபுர ஆழ்வார் கோயில் குளமும் கேணியும் எங்கள் மழைக்கால வாசஸ்தலங்கள். மழை நாட்களில் எந்த விளையாட்டும் விளையாடமுடியாது ஆதாலம் எமக்கு தெரிந்த ஒரே பொழுதுபோக்கு இதுதான். சில தடவைகள் வீட்டில் எச்சரித்தார்கள் பின்னர் அவர்களே தண்ணி தெளித்து போனால் போகட்டும் போடா என்று விட்டுவிட்டார்கள் .
இன்றும் இந்த நினைவுகள் மனதைவிட்டு அகலாதவை. இனி எப்ப வரும் அந்த வசந்தகாலம்
எழுதியது வந்தியத்தேவன் at 6 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் நீச்சல், மழைக்காலம்
*** இவர்களைத் தெரியுமா? ***
சில காலங்களுக்கு முன்னர் மிகவும் பிரபலமாக இருந்த சிலர் இப்போ எங்கிருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. அவர்களைப் பற்றிய சில சிறுகுறிப்புகள்.
தயாரிப்பாளர்கள்:
எத்தனையோ தயாரிப்பாளர்கள் சில இயக்குனர்களாலும், பொருத்தமில்லாத கதைகளாலும் பிரமாண்ட விளமபரங்களாலும் போண்டியாகி இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் ஞாபகம் வைத்த்திருப்பது கடினம் அதில் ஒருவரை மட்டும் உங்களுக்குத் தெரிகின்றதா?
ஜென்டில்மேன் குஞ்சுமோன்:
பிரமாண்ட இயக்குனர் ஷங்கருக்கு வாழ்வளித்த வள்ளல். பின்னர் மகனை( மகனின் பெயர் எபி என ஞாபாகம்) வைத்து கோடிஸ்வரன் என்ற பெயரில் பத்து வருடங்களுக்கு முன்னர் படம் எடுத்தார். இன்னமும் படமும் வெளிவரவில்லை இவரும் படம் எடுப்பதில்லை. அந்த படத்தின் ஒரு பாடல் மிகவும் பிரபலமாக இருந்தது. நம்ம ஊர் எவ் எம் வானொலிகள் ஆரம்பித்த காலத்தில் வெளிவந்த பாடல் அடிக்கடி ஒலிபரப்பினார்கள். பாடல் ஞாபகம் இல்லை. இந்தப் பாடலை கானாபிரபா கண்டுபிடித்துக்கொடுப்பார் என நினைக்கின்றேன். ஷங்கர் தன் எஸ் பிக்சர்ஸ் சார்பில் இவருக்கு ஏன் நிதி உதவி செய்யக்கூடாது?
இயக்குனர்கள் :
ஆர்.வி.உதயகுமார்:
கமல், ரஜனியை வைத்து வெற்றிப்படங்கள் கொடுத்தவர். பலகாலமாக படம் எதையும் இயக்கவில்லை.
பாண்டியராஜன் :
கதாநாயகனாக நடிப்பதை சில காலமாக நிறுத்தியிருந்தார். துணை நடிகராக பல படங்களில் தலைகாட்டுபவர் சில காலமாக படங்களை இயக்குவதை ஏனோ நிறுத்திவிட்டார். ஆண்பாவத்தை யாராலும் அவ்வளவு சீக்கிரம மற்றக்முடியாது.
எஸ்பி.முத்துராமன்:
ரஜனி, கமலை வைத்து ஏவிஎம் நிறுவனத்துக்கு பல படங்களை இயக்கிவெற்றிகொடுத்தவர். இவர்களை இருவரையும் வசூல் நாயகன்களாக்கிய பெருமை இவரையே சாரும். இவர் ஏனைய நடிகர்களை வைத்து படம் இயக்கிய படங்கள் மிகச் சிலவாகும்.
மணிவண்ணன் :
நூறாவது நாள், அமைதிப்படை என பல சிறந்தபடங்களைக் கொடுத்தவர். பின்னர் இவர் இயக்கிய படங்கள் பெரிதாக சோபிக்காவிட்டாலும் படங்களீல் வில்லனாகவும் கொமடியனாகவும் வந்துபோனார். நண்பர் முரளிகண்ணன் இவர் பற்றிய சிறப்பான பதிவு ஒன்றைப்போட்டிருக்கின்றார்.
சசி :
ரோஜாக்கூட்டம், சொல்லாமலே என சிறந்த காதல் படங்களைக் கொடுத்தவர். தற்போது என்ன செய்கின்றார் எனத் தெரியவில்லை.
இசையமைப்பாளர்கள் :
கார்த்திக்ராஜா:
டும்டும்டும், உனக்காக எல்லாம் உனக்காக, உள்ளம் கொள்ளைபோகுமே, அல்பம்( செல்லமே செல்லம் ஸ்ரேயா கோஷலின் முதல் தமிழ்ப் பாடல்) என பலபாடல்களில் உள்ளத்தை கொள்ளைகொண்ட இசைராஜாவின் முதல்வாரிசு, தம்பி யுவன் இசை உலகில் கொடிகட்டிப்பறந்துகொண்டிருக்கிறார். ஏனோ வாரிசுகளில் இரண்டாமவருக்குத் தான் செல்வாக்கு அதிகம் என நினைக்கின்றேன். தற்போது புதிதாக ஒரு படத்திற்க்கு இசையமைப்பதாக அறியக்கிடைத்தது.
தேவா:
காப்பி ராக மன்னர் தேவா, பாடல்கள் பல ஒரே மாதிரியும் எங்கேயோ கேட்டதுபோல் இருந்தாலும், கானாப்பாடல்களில் கொடிகட்டிப்பறந்தவர். ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்தவர். வாலி, குஷி, நேருக்கே நேர், கண்ணெதிரே தோன்றினாள் என பல படங்களில் ஹிட் பாடல்களைக் கொடுத்தவர், ஸ்ரீகாந்த் தேவாவின் வரவின் பின்னர் ஒதுங்கிவிட்டாரோ தெரியவில்லை.
எஸ்ஏ ராஜ்குமார் :
லாலலா புகழ் இசையமைப்பாளர் அனேகமாக இவரது பாடல்கள் மெல்லிசையாகவே இருக்கும். இயக்குனர் விக்ரமனி ஆஸ்தான இசையமைப்பாளர். சில காலமாகக் காணாமல் போய்விட்டார்.
நடிகர்கள் :
கார்த்திக் :
80களின் காதல் மன்னன், இளவரசன் எனப் பல பட்டங்களைக் கூறலாம். இளஞிகளைக் கட்டிப்போட்ட நடிகர். எத்தனையோ ஹிட் கொடுத்தவர். அரசியல்வாதியாகி 2011 ஆம் ஆண்டில் முதல்வராகும் கனவில் இருப்பதாலோ என்னவோ படங்களில் அதிகம் காணவில்லை.
முரளி :
மைக் மோகனிற்க்கு பின்னர் அதிகம் மைக் பிடித்த நடிகர். காதலைச் சொல்லாமல் வைத்திருப்பதிலும் பலகாலம் கல்லூரிக்கு போனதிலும் இவரது சாதனையை வருங்கால கதாநாயகர்கள் உடைப்பது என்பது மிகவும் கஸ்டம். இறுதியாக இவரின் நல்ல படம் என்றால் சுந்தரா ராவல்ஸ் தான்.
பிரபு :
என்ன கொடுமை சரவணன் என்ற வசனத்தை மிகப் பிரபலமாக்கியவர். சமீபகாலமாக துணை நடிகராகத் தான் வருகின்றாரே ஒழிய கதாநாயகனாக வருவதில்லை.
நடிகைகள் :
நடிகைகளைப் பொறுத்தவரை அவர்கள் காலத்திற்கேற்ப அடிக்கடி மாறுவதால் பட்டியல் இடமுடியாது. ஆனாலும் திவ்யா உன்னி, மீரா ஜாஸ்மின் போன்ற சில கேரளத்து கிளிகள் காணாமல் போனது கவலை அளிக்கின்றது. அல்லது நடிகைகள் தங்கள் காலம் முடிய சின்னத் திரையில் கிளிசரினுடன் அவதாரம் எடுக்கிறார்கள்.
இன்னும் யார் யாரை நீங்கள் தேடுகின்றீர்கள் என அறியத்தாருங்கள்.
எழுதியது வந்தியத்தேவன் at 9 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் கார்த்திக், கார்த்திக் ராஜா, சினிமா, மணிவண்ணன்
