சுஜாதா இன்றிருந்தால்....



எழுத்தாளர் சுஜாதா மறைந்து நாளையுடன் ஓராண்டு ஆகின்றது. காலம் எவ்வளவு வேகமாக ஓடுகின்றது. அவரது இழப்பு தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கு பேரிழுப்பு என்பதை யாரும் மறக்கமுடியாது. இறந்தபின்னரும் அவரது எழுத்துக்கள் இன்னமும் வெகுஜன இதழ்களில் வந்துகொண்டுதான் இருக்கின்றது. இனியும் வரும்..

இந்த ஓராண்டுடிற்க்குள் உலகில் எத்தனை மாற்றங்கள். என்னைப்போன்ற சோம்பேறி( தேடிப்பிடித்து வாசிப்பது என்பது சில காலமாக குறைந்துவிட்டது) வாசகர்களுக்கு கற்றதும் பெற்றதும் மூலமாக அந்த நாட்களில் உலகத்தில் என்ன நடைபெறுகின்றது என்பதை ஓரளவு சுருக்கமாக விளங்கப்படுத்தியவர் அமரர் சுஜாதா.

சுஜாதா இன்றிருந்தால் எவற்றைப் பற்றியெல்லாம் விகடன் கற்றதும் பெற்றதில் எழுதியிருப்பார்.

1. ஓபாமாவும் உலகப் பொருளாதாரமும்
தன் இயல்பான நடையில் பொருளாதார அடிப்படை அறிவில்லாதவனும் விளங்கக்கூடியவாறு உலக பொருளாதரத்தின் வீழ்ச்சியையும் ஓபாமாவின் எழுச்சியையும் அமெரிக்க கணணி வல்லுனர்களின் பிரச்சனைகளையும் எழுதியிருப்பார்.

2. சிலம்டோக் மில்லியனர்
அண்மையில் பரபரப்பான விடயமாக இருக்கின்ற இந்தப் படத்தைப் பற்றி இன்னொரு கோணத்தில் ஜோசித்திருப்பார்.

3. தசாவதாரம்
சுஜாதாவின் மறைவின் பின்னர் வெளியான கமலின் பிரமாண்ட தயாரிப்பு. கதைவிவாதத்தில் சுஜாதா பங்குபற்றினார் என்பது அனைவருக்கும் தெரியும், படத்தில் சில காட்சிகளில் கூட சுஜாதாவின் பாதிப்புகள் இருந்தன. வசனம் கமல் எழுதியதாக இருந்தாலும் சில இடங்கள் சுஜாதா டச்.

4. சுப்பிரமணியபுரம்
ஒவ்வொரு வருட இறுதியிலும் இவர் கற்றதும் பெற்றதிலும் கொடுக்கின்ற விருது பட்டியலில் சுப்பிரமணியபுரம் முதல் இடத்தைப் பிடித்திருக்கும்.

5. இந்தியக் கிரிக்கெட் அணியின் எழுச்சி
டோணியின் தலைமைத்துவத்தின் பின்னர் இந்திய கிரிக்கெட் அணி பெற்ற பெற்றுக்கொண்டிருக்கின்ற பெற்றிகள் பற்றியும் ஐபில் போட்டிகள் பற்றியும் நிறையவே எழுதியிருப்பார்.

6. ஆஸ்கார், ரகுமான்
ரகுமானின் இசை பற்றியும், ரகுமானுடன் தன் அனுபவங்கள் பற்றியும் சிலம்டோக் மில்லியனர் இசைக் குறிப்புகள் பற்றியும் குறிப்பிட்டிருந்திருப்பார்.

7. சந்திராயன்
இந்திய விண்வெளி விஞ்ஞானிகளினால் வெற்றிகரமாக ஏவப்பட்ட சந்திராயன் பற்றிய சுவையான தகவல்கள் வழங்கியிருப்பார்.

8. வலைப்பதிவாளர்கள்.
இன்றையகாலத்தில் வலைப்பதிவாளர்களும் இலக்கியத்தில் ஒரு அங்கம் வகிப்பதனாலும் விகடன் தன் வரவேற்பறையில் வாரம் ஒரு வலைப்பதிவை அறிமுகப்படுத்துவதனாலும் நிச்சயம் வலைப்பதிவாளர்கள் பற்றிய குறிப்புகள் இடையிடயே எழுதியிருப்பார். அத்துடன் தன் விருதுப்பட்டியலில் சிறந்த வலைப்பதிவு ஒன்றையும் குறிப்பிட்டிருப்பார்.

9. நான் கடவுள்
நான் கடவுள் படத்தையும் அகோரிகள் பற்றிய விவரங்களையும் தன் பாணியில் தந்திருப்பார். அகோரிகள் பற்றி கருடபுராணம் போல ஏதாவது ஒரு புராணத்தில் இருப்பதாகவும் எழுதியிருப்பார்.

10. எந்திரன்
எந்திரன் படத்தைப் பற்றியதோ அல்லது கதைபற்றியோ மூச்சுவிடாமல் ஐஸ்வர்யா ராய் பற்றியும் சூப்பர் ஸ்டார், சங்கர் பற்றியும் சுவையான தகவல்கள் கிடைத்திருக்கும்.

சுஜாதா பெரும்பாலும் அரசியல் பற்றி எழுதுவதில்லை என்பதால் உண்ணாவிரதங்கள், மனிதச் சங்கிலிகள், வக்கீல்கள் போராட்டம், போன்ற சமூக சார்ந்த விடயங்களை தவிர்த்திருந்திருப்பார்.

சுஜாதா இன்று நம்முள் இல்லாவிட்டாலும் அவரின் பாத்திரங்கள் என்றும் நமது மனதில் இடம் பிடித்தே இருக்கும். கணேஷ், வசந்தையும், அனிதாவின் காதலையும், கெட்டவார்த்தை பேசுகின்ற விக்ரத்தையும், ஜீனோ நாயையும், குருபிரசாத்தையும் தமிழ் வாசகர்கள் அவ்வளவு எழுதில் மறக்கமாட்டார்கள். குறிப்பாக அவரின் மெக்சிகன் சலவைக்காரி ஜோக் இன்னமும் பூர்த்தியாகவே இல்லை. வசந்த் இதுவரை அந்த ஜோக்கை சொல்லவேயில்லை.

அமரர் சுஜாதாவின் எழுத்துக்கள் உள்ளவரை அவரது புகழ் மங்காது.

மறுமொழி கருத்துக் கூறியவர்கள்:

கானா பிரபா சொல்வது:

good one

we miss him a lot :(