கிறிஸ்துமஸுக்கு இரு நாட்களுக்கு முன்னர் ட்விட்டரில் கங்கோனின் செய்தி " நான் யாழ்ப்பாணம் போகப்போகின்றேன்" இதன் பின்னர் அவர் தனது பயண விபரங்களை இடையிடையே அனுப்பிக்கொண்டிருந்தார். கங்கோனின் யாழ்ப்பாணத்திற்கான தீடிர் விஜயம் பற்றி ட்விட்டரில் பல வதந்திகள் வந்துகொண்டிருந்தன. ஒரு பிரபலத்திற்க்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய என ஒருவர், அது இல்லை கங்கோன் ட்விட்டர், புளொக், பேஸ்புக் போன்றவற்றில் 24 மணித்தியாலத்தில் 25 மணித்தியாலங்களைச் செலவிடுவதாகவும் இதனால் அவரது தாயர் சில நாட்கள் ஓய்வுக்காக யாழ்ப்பாணம் அனுப்பியதாகவும், இவை எதுவும் இல்லை கங்கோனின் ராசிக்கு இந்த வருடம் காதல் கைகூடும் என்பதால் அவர் தனது காதலியைத் தேடி யாழ் செல்வதாகவும் பரபரப்பான செய்திகள் அவரது நண்பர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்டன. 
கொழும்பு கோட்டையில் பஸ்சில் ஏறி கங்கோன் அனுப்பிய ட்விட்டர் செய்தியில் இருந்து கங்கோன் பெண் பார்க்கத் தான் போகின்றார் என்ற விடயம் புலனாகியது. அந்தச் செய்தி இதுதான் " பஸ்சினுள் ஏறிவிட்டேன் பஸ் மிகவும் வரட்சியாக இருக்கின்றது எப்படித்தான் பொழுது போகப்போகின்றதோ". சிறிது நேரத்தில் பஸ் புறப்பட்டுவிட்டதாகவும் பஸ் புறப்படும் தருவாயில் 2 அழகான பெண்கள் பஸ்சினுள் ஏறிவிட்டார்கள் எனவும் கங்கோனின் செய்தி ட்விட்டரில் வெளியானது.
சரியாக பின்னேரம் 4.15 அளவில் கோட்டையில் இருந்து கங்கோனின் பஸ் யாழ் நகர் நோக்கி பயணிக்கத் தொடங்கியது. அந்தப் பெண்களிடம் கங்கோன் கொஞ்சம் கதை கொடுத்தார். அவர்கள் இருவரும் வலைப்பூக்கள் வாசிப்பவர்கள் என்ற உண்மையை அறிந்த கங்கோன் தன்னை அறிமுகம் செய்ய ஒரு துடுக்கான பெண் அப்போ நீங்கள் தான் அந்த சமூக விலங்கோ என கங்கோனுக்கே அதிர்ச்சி அளித்தார். அவரைப் பழிவாங்க எண்ணிய கங்கோன் நிலவில் இருந்து பிரிண்ட் எடுத்து வந்த சில பின்நவீனத்துவ கட்டுரைகளை அவர்களீடம் வாசிக்க கொடுக்க, அந்தக் கட்டுரைகளின் தாக்கத்தில் அதனை வாசித்த அந்த இரு பெண்களைத் தவிர ஏனையவர்கள் நன்றாக நித்திரைகொண்டார்கள். பின்னர் வவுனியாவில் பஸ்சில் இருந்து அவர்கள் இறங்கும்போது கங்கோனைப் பார்த்த பார்வையில் மலையே சரிந்துவிழுந்துவிட்டது.
ஒருமாதிரி வவுனியாவில் கால் கடுக்க நீண்ட வரிசையில் காத்திருந்த கங்கோனிற்க்கு யாழ் செல்ல அனுமதி கிடைத்துவிட்டது. பொடியன் அந்த மகிழ்ச்சியான செய்தியையும் மொபைல் வெப் மூலம் ட்விட்டரில் அனைவருக்கும் அறிவிக்க விரும்பினால் அந்த இடத்தில் நெட்வேர்க் டவுணாகி இருந்தது. தன்னுடைய மொபைல்காரர்களைத் திட்டிக்கொண்டே கங்கோன் கண்டி வீதியுனூடாக தன்னுடைய பயணத்தை ஆரம்பித்தார்.
கங்கோன் ஒரு சமூக அக்கறை உடையவர் என்பதால் அந்த வீதீயூடாக பயணிக்கும் போது கண்ட காட்சிகள் அவரது நெஞ்சையே கலங்கச் செய்தது. அந்தக் காட்சிகளைத் தன்னுடைய கமேராவில் சுட்ட கங்கோன் அதனை வைத்து ஒரு பதிவு போட எண்ணிக்கொண்டார். ஆடி அசைந்து கங்கோன் சென்ற பஸ் யாழை அடைந்தது.
யாழ் மண்ணில் நீண்ட நாட்களின் பின்னர் காலை வைக்கும் போது கங்கோன் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுவிட்டார். கொழும்பு நரக மன்னிக்கவும் நகர வாகனப் புகையும், குப்பையுமாக இருந்த வீதிகளுடன் ஒப்பிடும் போது யாழ் வீதிகள் அழகாகவும் சுத்தமாகவும் இருந்தன. அந்த உணர்ச்சிப் பெருக்கில் கங்கோன் "சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல வருமா?" என இசைஞானியின் குரலில் பாடத் தொடங்கிவிட்டார்.
பயண அலுப்பில் அன்றைக்கு தன்னுடைய பெண் பார்க்கும் படலத்தைத் தொடங்கமுடியாது அடுத்த நாள் வெள்ளிக்கிழமை நல்ல நாள் ஆகவே வெள்ளியே தன்னுடைய கடமையைச் செய்வோம் என எண்ணியபடி காதல் பாடல்களை கேட்டபடி கங்கோன் நித்திரைக்குச் சென்றுவிட்டார்.
வெள்ளி அதிகாலையில் வழக்கமாக நாலு சட்டி தண்ணியில் குளிக்கும் கங்கோன் கிணற்றில் 40 வாளி தண்ணியில் 2 லக்ஸ் சோப் போட்டுக் குளித்துவிட்டு, நல்லூர் கந்தனைத் தரிசிக்கச் சென்றார். நல்லூரில் அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
கச்சான் விற்கின்ற ஆச்சியிடம் தன்னுடைய சாதகக் குறிப்பைக் கங்கோன் கொடுக்கும் போது பாலவாசகன் கண்டுவிட்டார். கங்கோன் கையும் குறிப்புமாக அவரிடம் பிடிபட்ட பின்னர் என்ன செய்வது எனத் தெரியாமல் பாலவாசகனிடம் உண்மையை ஒத்துக்கொண்டுவிட்டார். ஆச்சி பல இடங்களுக்கும் வியாபாரம் செய்ய செல்பவர் ஆகவே அவருக்கு பலரின் தொடர்புகள் இருக்கும் அதுதான் அவரிடம் சாதகத்தைக் கொடுத்தேன் எனக்குத் தோதான ஒரு பெண்ணைப் பார்ப்பதாகச் சொன்னார். ஆனால் என்னுடைய உருவத்தைப் பார்த்துவிட்டு கொஞ்சம் பயப்படுகின்றார் போல் தெரிகின்றது என கங்கோன் உண்மையச் சொல்லிவிட்டார்.
ஒரு பதிவரின் கஸ்டம் இன்னொரு பதிவருக்குத் தான் தெரியும் என்பதுபோல் பாலாவும் இதெற்கெல்லாம் கவலைப் படாதே வா கோயிலுக்குள் சென்று முருகனிடம் ஒரு விண்ணப்பம் கொடுப்போம் என உள்ளே சென்றார்கள். உள்ளே போனால் பட்டுவேட்டியில் வெயில் இல்லாத மழை நாளில் கூலிங் கிளாசுடன் "ஏறுமயில் ஏறு விளையாடு " என கணீரெனப் பாடிக்கொண்டிருந்த ஒருவரைப் பார்த்து இருவரும் அதிர்ச்சியில் திகைத்துப்போனார்கள்.
பின்குறிப்பு : சில பல ஆணிகள் இருப்பதால் பகுதி 2 மதியம் அல்லது மாலையில் வெளியாகும்.
முக்கியமான பின்குறிப்பு : உண்மையான சம்பவங்களைத் தழுவியதே இந்தப் பதிவு யாவும் கற்பனை அல்ல.
கங்கோனின் பெண் பார்த்த படலம் - பகுதி 1
எழுதியது வந்தியத்தேவன் at 14 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் நையாண்டி, பதிவர் வட்டம், பம்பல்
2010 புதுவருடம் சில அனுபவங்கள்
யாழ்ப்பாணத்தில் இருந்த காலத்தில் ஆங்கிலப் புதுவருடம் என்பது இன்னுமொரு சாதாரண நாள் தான் எமக்கு. அங்கே வாழ்கின்ற கிறிஸ்தவர்கள் புது ஆடை அணிந்து தேவாலாயம் சென்று வருவார்கள். கிறிஸ்தவ நண்பர்களின் வீட்டுக்கு எங்கள் வாழ்த்தைத் தெரிவிக்கச் செல்வது. பெரும்பாலு கிறிஸ்துமஸ், புதுவருடம் திருவெம்பாவைக் காலத்தில் வருவதால் சிலவேளைகளில் விருந்துபசாரத்தில் கேக் விடுபட்டுவிடும்.
பின்னர் கொழும்பிற்க்கு வாழ்க்கை மாறியபின்னர் ஆங்கிலப் புதுவருடம் கொஞ்சம் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. ஆனாலும் சில காலம் வெடி கொழுத்துதல், நண்பர்களுடன் வீதிகளில் திரிதல் போன்றவை நடைமுறைக்கு வரவில்லை. காரணம் அப்போதைய நாட்டின் சூழ்நிலை. 2002ல் முதல் முறையாக ஆங்கிலப் புத்தாண்டை 31ந்திகதி இரவே சக்தி நிறுவனத்தில் கொழும்பு மாநகர சபை முன்றலில் நடந்த இன்னிசையுடன் தொடங்கி, நடு இரவில் வெள்ளவத்தை கடற்கரையில் வெடி கொழுத்தி மகிழ்ந்தேன்(தோம்).
2003ல் நாட்டில் நிலவிய சமாதானத்தால் வெள்ளவத்தை கடற்கரையால் ரோந்து போன காவல்துறை வாகனத்தில் நாம் கொழுத்திப்போட்ட ஈர்க்கு வானம் பட்டும் அவர்கள் சிரித்தபடி புதுவருட வாழ்த்துச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள். இதன் பின்னர் புதுவருடக் கொண்டாட்டங்கள் அதிகம் களைகட்டவில்லை. காரணம் நண்பர்கள் ஒவ்வொருவராக தொழில், கல்வி நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்றமை.
கொழும்பைப் பொறுத்தவரை ஆங்கிலப் புதுவருடம் என்பது இன, மத பேதமின்றிக் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாக அண்மைக் காலங்களில் மாறிவிட்டது. முக்கியமாக இந்து ஆலயங்களில் சிலவற்றில் அதிகாலையில் விசேட பூஜைகள் செய்கின்றார்கள், இந்துக்கள் பட்டு உடுப்புகளில் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு போல் கோயில்களுக்கும் உறவினர்கள் வீடுகளுக்கும் செல்கின்றார்கள். அத்துடன் இலத்திரனியல் ஊடகங்களின் தாக்கத்தினால் ஆங்கிலப் புத்தாண்டு இன்னும் பிரபலமாகிவிட்டது. இது சரியோ தவறோ எனக்குத் தெரியாது.
நான் அறிந்தவரை 2000 ஆவது ஆண்டு பிறந்தது தான் உலகெங்கும் அதிக மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டதாகும். கொழும்பிலும் அந்த வருடத்தை கோலாகலமாக கொண்டாடினார்கள். ஆனால் அதனைவிட அதிகமான மகிழ்ச்சியுடன் இந்தவருடம் கொண்டாடப்பட்டதாக தெரிகின்றது. நான் வாழ்கின்ற இடத்தில் வழக்கம்போல் தான் எனக்குத் தெரிந்தது. ஆனால் யாழ்ப்பாணத்தில் நீண்ட நாட்களின் பின்னர் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள் என அங்கிருந்து வரும் செய்திகள் சொல்கின்றன.
இரவு நீண்ட நேரம் இணையத்தில் உலா வராததால் இணையத்தில் தமிழ்மணத்தைத் திறந்தால் மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக என்னுடைய இரண்டு பதிவுகளும் அடுத்த கட்ட வாக்கெடுப்புக்கு தெரிவாகியுள்ளன. எனக்கு ஓட்டுப்போட்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இதயம் திறந்த நன்றிகள். அத்துடன் நான் ஓட்டுப்போட்ட பலரின் பதிவுகள் அடுத்த கட்டத்திற்கு தெரிவாகி இருப்பதும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.
தமிழ்மணம் விருதுகள் 2009 - முதற்கட்ட வாக்கெடுப்பு முடிவுகள்
2010 புத்தாண்டானது மகிழ்ச்சியாகவே தொடங்கியிருக்கின்றது. 2009ல் என் வாழ்க்கையில் பல ஏமாற்றங்கள், பிரச்சனைகள், சோகங்கள் என மோசமாகவே சென்றவிட்டது ஆனால் 2010ல் முதல் நாளில் கிடைக்கும் செய்திகள் மகிழ்ச்சியாகவே இருக்கின்றன. ஏனைய நாட்கள் எப்படி இருக்கின்றன என பொறுத்திருந்து பார்ப்போம்.
வழக்கம் போல் சன் டிவியில் டாப் 10 படங்களில் அவர்கள் தயாரிப்பும், கலைஞரில் அவர்கள் வாங்கிய படங்களும் தெரிவாகின. விஜயில் நீயா? நானா? ஸ்பெசல் நிகழ்ச்சியில் கோபிநாத்துடன் சேர்ந்து சில ஜோதிடர்களும் மக்களை நிரம்பவே குழப்பினார்கள்.
எது எப்படியோ இந்த வருட ஆரம்பம் இன்று, ஆதலால் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பின்குறிப்பு : இது என்னுடைய 250 ஆவது பதிவு.
எழுதியது வந்தியத்தேவன் at 13 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் அனுபவம், தமிழ்மணம், புதுவருடம்
ஹாட் அண்ட் சவர் சூப் 30-12-2009
ஜனாதிபதித் தேர்தல்
நாளொரு குற்றச் சாட்டும் பொழுதொரு கட்சித் தாவலுமாக ஜனாதிபதித் தேர்தல் நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. கொழும்பு மாநகரை அலங்கரித்த கட் அவுட்டுகள் யாவையும் அகற்றப்பட்டுவிட்டன. சில நாட்களுக்கு முன்னர் கதாநாயகர்களாக இருந்தவர்கள் இன்றைக்கு வில்லனாகி மாறிவிட்டார்கள். நண்பர்களாக இருந்தவர்கள் எதிரிகளாக மாறிவிட்டார்கள். நாட்டுமக்களின் ஞாபக மறதி வாழ்க.
அரச தரப்பினால் பாரிய அளவில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகின்ற அதே வேளை எதிர்த் தரப்பு ஏனோ அடக்கிவாசிக்கின்றது. மதில் மேல் பூனையாக தமிழ்க் கூட்டமைப்பும் என்ன செய்வது என முடிவெடுக்க முடியாமல் திணறுகின்றது. புது வருடத்தின் பின்னர் தேர்தல் இன்னமும் சூடு பிடிக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.
தெலுங்கானா
தனி தெலுங்கானா மாநிலக் கோரிக்கை வலுவடைந்துள்ள நிலையில் ஒரு கிழமைக்கு முன்னர் இந்தப் பிரச்சனைக்கு இரு நாட்களில் தீர்வு காணப்படும் என மன்மோகன் சிங் அறிவித்திருந்தார் (ஆதாரம் : சன் செய்திகள்). ஆனாலும் இன்னமும் ஒன்றும் முடிந்தபாடில்லை. இதனால் மீண்டும் ஆந்திராவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தெலுங்கானா தனிமாநிலமாக அறிவிக்கப்பட்டால் மேற்குவங்கத்தைப் பிரித்து கூர்க்காலாந்து அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டுள்ள அதே நேரம் ஏனைய மாநிலங்கள் சிலவும் தனி மாநிலக் கோரிக்கைகளை விடுக்கின்றதாக செய்திகள் வருகின்றன.
2009ல் பதிவுலகம்
இன்னும் ஒரு நாளுடன் 2009க்கு விடைகொடுக்கவேண்டியதுதான், நாட்கள் மிகவும் வேகமாக ஓடுகின்றன. 2009ல் பதிவுலகத்திலும் பல நிகழ்ச்சிகள் நடந்தேறியுள்ளன. பல புதியவர்கள் புதுவிதமான கருத்துக்கள், எண்ணங்களுடன் தங்கள் வலைகளை விரித்திருக்கின்றார்கள்.
அரசியலைப் பொறுத்தவரை வருட ஆரம்பத்தில் முத்துக்குமாரில் ஆரம்பித்து பின்னர் இந்திய நாடாளமன்றத் தேர்தல், ஒபாமா, உண்ணாவிரதங்கள், மனிதச் சங்கிலிகள், முள்ளிவாய்க்கால் என கொஞ்ச நாட்கள் சூடுபிடித்து பின்னர் கொடநாடு, இலங்கை ஜனாதிபதித் தேர்தல், தெலுங்கானா என வருட இறுதிவரை சூடு குறையாமல் எழுதியிருக்கின்றார்கள்.
வருடத்தின் ஆரம்பத்தில் வில்லு படத்தைக் காய்ச்சியவர்கள் இறுதியில் வேட்டைக்காரனைக் காய்ச்சுகின்றார்கள். இடையில் உன்னைப் போல் ஒருவன், கந்தசாமி, ஆதவன் என்பன பதிவர்களுக்கு செமையான தீனி போட்ட படங்கள் இவர்களின் சினிமாப் பதிவுகளுக்கு கரு கொடுத்தன. ஆஸ்கார் நாயகன் ரகுமான், இளையராஜா எனப் பதிவுகள் இன்னமும் நீள்கின்றன.
இலக்கிய ரசிகர்களுக்கு சாருவும், ஜெயமோகனும், ஞாநியும் பூச்செண்டு கொடுத்து மகிழ்ந்தார்கள். இவர்களின் சர்ச்சை என்றைக்கும் முடியாதது.
மூத்த பதிவர் சிந்தாநதியின் மறைவு பதிவுலகத்திற்க்கு பேரிழப்பாகும். அத்துடன் ஒரு சில வேண்டத்தகாத நிகழ்வுகளும் நடந்தாலும், இலங்கைப் பதிவர் சந்திப்புகள், சென்னைப் பதிவர் சந்திப்புகள், சிங்கைப் பதிவர்கள் சந்திப்புகள், ஈரோடு பதிவர் சந்திப்பு என பல சந்திப்புகள் நடந்தாலும் அமீரகப் பதிவர்களின் சந்திப்பும் சுற்றுலாவும் அதனைத் தொடர்ந்து "அண்ணாசி அழைக்கின்றார்" என அவர்கள் வெளியிட்ட நகைச்சுவைக் குறும்படமும் தான் இந்த வருட பதிவர்களின் மைல் கல் எனலாம்.
கிரிக்கெட்
இந்திய இலங்கை அணிகள் மோதிய தொடர் இறுதிப்போட்டி நடைபெறாமலே முடிந்துவிட்டது. டெல்லி மைதானம் வீரர்களுக்கு பாதகமாக அமைந்தபடியால் போட்டி இடை நிறுத்திவிட்டார்கள். இனிமேலும் இப்படியான மைதானங்களை இந்திய கிரிக்கெட் வாரியம் தயார் செய்யுமா? காரணம் இம்முறை உலகக் கிண்ணத்தை நடத்தும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
அவுஸ்திரேலியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியின் இறுதிநாள் இன்று எப்படியும் போட்டியில் ஒரு முடிவு கிடைக்கும் போல் தெரிகின்றது. அண்மைக் காலமாக சதமடிக்க தடுமாறிய வாட்சன் ஒருமாதிரி சதமடித்துவிட்டார். முகமட் யூசுப்பும் மத்திய தர வீரர்களும் பொறுப்பாக ஆடினால் பாகிஸ்தான் வெற்றி பெறலாம்.
தென்னாபிரிக்கா இங்கிலாந்து போட்டியில் இங்கிலாந்தின் ஆதிக்கம் அதிகமாக காணப்படுகின்றது. இங்கிலாந்தின் வெற்றிக்கு இன்னும் 4 விக்கெட்டுகளே தேவை. பெளச்சரும் மோர்னே மோர்கலும் பொறுப்பாகவும் நிதானமாகவும் விளையாடினால் இங்கிலாந்திடம் இருந்து வெற்றியைத் தட்டிப் பறிக்கலாம். விளையாடுவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம். இந்த 2 போட்டிகளுடனும் இந்த வருடத்திற்கான கிரிக்கெட் போட்டிகள் நிறைவு பெறுகின்றன. இந்த வருடம் ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்களை இந்திய அணித்தலைவர் மகேந்திர சிங் டோணியும் விக்கெட்டுகளை ஆஸியின் வேகப் பந்துவீச்சாளர் மிச்சல் ஜோன்சனும் எடுத்திருக்கின்றார்கள்.
சின்னத் திரை
விசாரணை
கலைஞர் தொலைக்காட்சியில் க்ரைம் கதை மன்னன் ராஜேஸ்குமாரின் கதைகளை திங்கள் தொடக்கம் வியாழன் வரை நான்கு நாட்களுக்கு ஒரு கதை என விசாரணை என்ற பெயரில் தொடராக்கி வெற்றியும் கண்டிருக்கின்றார்கள். மிகவும் வேகமாகச் செல்லும் கதை பார்ப்பவர்களை நிச்சயம் கவரும். க்ரைம் பிராஞ்ச் காவல்துறை அலுவலகர் விவேக்காக சாக்சி சிவா அருமையாக பொருந்தியிருக்கின்றார். அவரது உதவியாளர் விஷ்ணுவாக ஷ்யாம் நடிக்கின்றார். விஷ்ணு பாத்திரம் சுஜாதாவின் வசந்தை நினைவூட்டுகின்றது. ஆனாலும் இதுவரை விவேக்கின் மனைவி ரூபலா வரவேயில்லை. ஏற்கனவே சுஜாதாவின் கதைகள் சில க்ரைம் தொடராக வந்தாலும் இந்த தொடர் கவர்ந்தது போல் அது கவரவில்லை, ஆண்டுக் கணக்காக மெஹா இழுவையாக இழுக்கும் சீரியல்களுக்கு மத்தியில் விசாரணை பாராட்டத்தக்கது.
சித்ராவும் மதுமிதாவும்
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியரில் நேற்று முந்தினம் பாடகர்கள் பாடிய முதல் பாடல் சுற்று நடந்தது. அதில் பாடகி மதுமிதா கலந்துகொண்டார். அவரது பாடலைப் பாட வந்த குழந்தையிடம் தன்னுடைய பாடலைக் கெடுக்கவேண்டாம் என அறிவுறுத்தினார். அதே நேரம் சித்ரா அவர்களோ தன்னுடைய பாடலைப் பாட வந்த குழந்தையிடம் தன்னை விட அழகாகப் பாடும் படியும் கேட்டுக்கொண்டார். சில காலமாகப் பாடும் மதுமிதாவிற்க்கும் சித்ராவிற்க்கும் எவ்வளவு வித்தியாசம். இதைத்தான் நிறைகுடம் தளம்பாது என்பார்களோ.
சிட்டிபாபுக்கு கண்டனங்கள்.
கிறிஸ்துமஸ் தினத்தில் சன்னில் நம்ம விஜய டி.ராஜேந்தரினை சிட்டிபாபுவும் அம்மும் பேட்டி கண்டார்கள். பல்துறைவித்தகர் ஒருவரை சிட்டிபாபு மிகவும் கேவலமாக நடத்தினார். ராஜேந்தரின் பொறுமை இடைக்கிடை குழம்பி சிட்டிபாபுவை கொஞ்சம் கண்டித்தார். யாரிடம் என்ன கேள்விகள் கேட்பது என்பது ஒரு காமெடி ஜாம்பவானுக்குத்( எத்தனை படங்களில் காமெடி செய்தார் மதுரை முத்துவைத் தான் கேட்கவேண்டும்)தெரியாதோ. சன் தொலைக்காட்சியினர் இன்னமும் ஏன் இப்படியான அரைகுறைகளை வைத்திருக்கின்றார்களோ. வரும் விருந்தினர்களுக்கு மரியாதை கொடுக்கத் தெரியாதவர்கள் எல்லாம் பேட்டி காண்கின்றார்கள், நடுவராக இருக்கின்றார்கள்.
இந்த ஆண்டின் கலக்கல் நாயகி தமன்னாவுடன் இந்த வருடத்தின் சூப் இனிதே நிறைவுறுகின்றது.
அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்.
எழுதியது வந்தியத்தேவன் at 13 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் அரசியல், கிரிக்கெட், சினிமா, சூப், பதிவர் வட்டம்
