2009ல் ரசித்த பதிவுகள் - பகுதி 2

2009ல் ரசித்த பதிவுகள் - பகுதி1

முதலாம் பகுதியில் ரசித்த பதிவுகளின் தொடர்ச்சியே இந்தப் பதிவாகும். ஒரு நாளைக்கு பல நூறு பதிவுகளில் மனம் கவர்ந்த பதிவுகளை ஓரளவுக்கேனும் ஞாபகம் வைத்து அவற்றில் சிறந்தவையாக நான் கருதியவையை மட்டுமே இங்கே தந்துள்ளேன்.

நிர்ஷன்
ஊடகவியலாளர் சக கமேராக் கலைஞரான நிர்ஷனின் பதிவுகளில் ஒரு சமூக அக்கறை எப்போதும் இருக்கும். சில நாட்களாக தன்னுடைய வேலைப் பளுவின் காரணமாக எழுதுவதில்லை என நேரில் கண்டபோது கூறினார்.

இலங்கை ஊடகங்களில் செய்தித் தவறுகள்…!

நிலா
உறுபசி என்ற வலையில் காத்திரமான பல கவிதைகளை எழுதுபவர். இவரின் கவிதைகளுக்கும் கட்டுரைகளுக்கும் என்னைப் போன்ற சிறியவர்களுக்கு மூஞ்சிப்புத்தகத்தில் விளக்கம் தருகின்றவர். சமீபகாலமாக ஏனோ எழுதுவதில்லை. எழுத்து மட்டுமல்ல பேச்சும் இவருக்கு சரளமாக வருகின்றது.

புத்தம்....

நர்சிம்
கோப்பரேட் கம்பர் என செல்லமாக அழைக்கப்படும் நர்சிமின் தமிழ் நடை அசத்தலாக இருக்கும். அவரின் பதிவுகள் பல இவரின் உரை நடைக்காவே அனைவராலும் வியக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ராகுல் திராவிட்: நிராகரிப்பை நிராகரித்தவன்..

பரிசல்காரன்
கிருஷ்ணகுமார்(இந்தப் பெயர் உள்ளவர் கலக்கல் எழுத்தாளர்கள்)என்ற இயற்பெயரை உடைய பரிசல் இன்னொரு பல்சுவை கலக்கல் எழுத்தாளர். பரிசலின் சினிமா விமர்சனத்தைப் வாசித்துப் படம் பார்க்கும் ரசிகர்களில் நானும் ஒருவன்.

நடிகர் விஜய்க்கு...

பனையூரான்
இன்னுமொரு என்னுடைய பாடசாலை மாணவன். கவிதைகளுடன் தன்னுடைய சமூக அனுபவங்களையும் அழகாக எழுதுகின்ற இளைஞர். இலங்கையின் கற்பகதருவான பனையைப் பற்றி இவர் எழுதிய பதிவு பல கதைகளைச் சொல்கின்றது.

அழகான அந்தப் பனை மரம்

பால்குடி
உயரத்தில் மட்டுமல்ல உள்ளத்திலும் உயர்ந்த பால்குடியின் பதிவுகளில் வடமராட்சி மண் மணக்கும். இவரின் கணிதப் புதிர்களுக்கு சிலவேளைகளில் தலையைப் பிய்த்தாலும் எப்படியோ விடை கண்டுபிடித்துவிடுவேன்.

நினைத்துப் பார்க்கத்தான் முடிகிறது.

கே.ரவிஷங்கர்
சினிமா, இசை, கதைகள் எனப் பல்சுவையாக எழுதும் ரவிசங்கரின் இசைப் பதிவுகள் பல எனக்குப் பிடித்தமானவைக்கு காரணம் இளையராஜா தான். பெரும்பாலான இசைப் பதிவுகளை அனுபவித்து எழுதும் ரவிஷங்கரின் எழுத்தை வாசிக்கும் போது அதே சுகம் கிடைக்கும்.

இளையராஜாவின் வயலின் ரங்கோலி

சினேகிதி
காத்திரமான பதிவுகளை எழுதும் சினேகிதி அண்மைக் காலமாக எழுதுவதைக் குறைத்துள்ளார். புலம்பெயர் மக்களின் பிரச்சனைகளுடன் சில மனோதத்துவ விடயங்களையும் சினேகிதி எழுதியுள்ளார்.

உங்களுக்கும் எனக்குமாய் சில குறிப்புகள் , கேள்விகள்

சர்வேசன்
அழிப்பவன் அல்ல அளப்பவன் எனச் சொல்லிக்கொண்டு பல கருத்துக் கணிப்புகளையும் சினிமா, இலக்கியம் என பல்சுவைகளிலும் எழுதும் சர்வேசனின் பொன்னியின் செல்வன் in a nut shell. பொன்னியின் செல்வன் ரசிகர்களினால் அதிகம் பாராட்டுப் பெற்றதுடன் சில விவாதங்களும் நடந்தன.

பொன்னியின் செல்வன் in a nut shell.

சதீஸ்
என்றும் ப்ரியமுடன் உங்கள் பிரியமானவனாக வலை எழுதும் ஒலிபரப்பாளரான சதீஸ் பெரும்பாலும் சினிமா, கிரிக்கெட் இடையிடையே ச்மூகம் சார்ந்த கருத்துக்களை எழுதுகின்றார். நயந்தாராவின் அந்தரங்கத்தை எட்டிப் பார்த்த சன் டிவியைச் சாடி எழுதியது இந்தப் பதிவு

நயன்தாராவை சங்கடப்படுத்திய சன் டி.வி

சந்ரு
பெரும்பாலும் தன்னுடைய கருத்துக்களை எந்தவிதமான பயமுமின்றி எழுதும் சந்ரு. அரசியல், சமூகம் இடையிடையே சினிமா, கவிதை, நகைச்சுவை என பலசுவைகளில் எழுதுகின்றவர். அண்மைக்காலத்தில் சர்ச்சைகளும் இவருடன் கூட வருகின்றன. எப்போதும் சீரியசாக எழுதும் சந்ருவின் இந்த நகைச்சுவைப் பதிவு தான் ஏனோ என்னைப் பெரிதும் கவர்ந்தது.

காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள்...

சுபாங்கன்
ஐந்தறைப் பெட்டியில் ஆரம்பத்தில் தொழில்நுட்ப சக சமூக அக்கறைப் பதிவுகளாக எழுதிய சுபாங்கன் தற்போது பெரும்பாலும் நகைச்சுவைப் பதிவுகளும் எழுதுகின்றார். அத்துடன் சுபாங்கனின் அனுபவப் பதிவுகள் மிகவும் சுவாரசியமானவை. அந்த வகையில் இந்தப் பதிவில் சுபாங்கன் பெண்களைப் பற்றி நல்லதொரு ஆராய்ச்சியே செய்திருக்கின்றார்.

பஸ்சில் பயணிக்கும் நாகரீக நங்கையர்

சுபானு
ஊஞ்சலாடும் சுபானு தொழில்நுட்பம் கவிதை விஞ்ஞானக் கதை என பல்சுவையாக எழுதுபவர். அவரின் 3A எடுத்துப்பார் கவிதை யதார்த்ததிற்க்கு அருகில் இருக்கின்றது.

3A எடுத்துப்பார்

தர்ஷன்
அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் சமூகம் சார்ந்த பதிவுகளை எழுதுகின்றார் தர்ஷன். சில காலமாக ஒன்றிரண்டு பதிவுகளே எழுதிய தர்ஷன் அண்மைக் காலமாக நிறையவே நிறைவாக எழுதுகின்றார்.

ஜனாதிபதித் தேர்தலில் என்ன செய்யலாம்

தூயா
என்னுடைய அன்புக்குரிய பங்கு. புலத்தில் தமிழ் படித்து அழகாக எழுதும் பெண். தூயாவின் சமையல்கட்டில் பல இளைஞர்களுக்குப் பயனுள்ள சமையல் குறிப்புகளை வழங்கி அவர்களின் வாழ்க்கையில் சுவையான உணவுகளை உண்ணவைத்தவர். தன்னுடைய இன்னொரு வலையில் அரசியல், சமூகம் சில மொக்கைகள் என எழுதியவர் துரதிஷ்டவசமாக அண்மையில் அந்த வலையை வைரஸ் தாக்கிவிட்டது. அந்த வலையில் அவர் எழுதிய பேஸ்புக் பதிவு மிகவும் கவர்ந்தது, அதன் சுட்டியைத் தரமுடியாமல் இருப்பதால் சமையல் குறிப்பில் ஒரு சுவையான சமையல்.

வெண்டிக்காய் பால்கறி
வரோ
வான்மீகி என்ற பெயரில் எழுத ஆரம்பித்து இன்று வரோ என்ற பெயரில் தன்னுடைய பதிவுகளை எழுதுகின்றார். அரசியல், சினிமா, விளையாட்டு, சிறுகதைகள், ஒரு தொடர்கதை என தன்னுடைய பதிவுகளில் எழுதும் வரோ ஒரு ஊடகவியலாளரும் கூட.

குடாநாட்டு நடப்பு

உண்மைத்தமிழன்

எந்தவொரு விடயத்தையும் அழககாவும் சிறப்பாகவும் எழுதும் உண்மைத்தமிழன். அரசியல், சினிமா, பலசுவை என எழுதிக்குவிக்கும் இவரின் வலை அண்மையில் வைரசினால் பாதிக்கப்பட்டது. இவரின் இந்தப் பதிவில் ஒரு நிகழ்வை நேரடியாகப் பார்த்த அனுபவம் கிடைக்கும்.

கலைஞர் கருணாநிதிக்கு கலை உலகப் படைப்பாளி விருது - பாராட்டு விழா நிகழ்ச்சிகள்..!

யோகா
சமூகம், சினிமா, விளையாட்டு, நகைச்சுவை எனப் பல தடங்களில் பயணித்த யோகா சமீப காலமாக ஏனோ எழுதுவதைக் குறைத்துவிட்டார். ட்விட்டரில் கூட அவரைக் காண்பது அரிது. 2010ல் தன்னுடைய பழைய ஃபோர்முக்கு வருவார் என நினைக்கின்றேன்.

ஹர்பஜன் சிங் - சுய அறிக்கை

யுவகிருஷ்ணா
லக்கிலுக்காக அறியப்பட்டு இன்றைக்கு யுவகிருஷ்ணாவாக இருக்கும் நண்பர் லக்கியின் பதிவுகள் பலராலும் வியந்து பாராட்டப்படுபவை. ஒரு காலத்தில் தினமும் 3 அல்லது 4 பதிவுகளை இட்ட லக்கி இப்போது இடையிடையே எழுதினாலும் வீச்சு மட்டும் குறையவில்லை. அரசியல், சினிமா, கதை, பின்நவீனத்துவம் என பலதையும் கட்டி ஆளும் வல்லமை படைத்தவர். இவரது பதிவுகளில் காணப்படும் எள்ளல் சிறப்பாகும்.

வேட்டைக்காரன்

2009ல் ரசித்த பதிவுகள் - பகுதி 1

2009ல் உலகம் எப்படி இருந்தது நாட்டு நடப்புகள் எப்படியிருந்தது என ஒரு தொகுப்பு இடலாம் என நினைத்தேன் ஆனாலும் சில விடயங்களை விட்டுவிட்டும் போக முடியாது. சில விடயங்களை வெளிப்படையாக சொல்லவும் முடியாது. காரணம் உலகமே கண்ணை மூடிக்கொண்டிருந்த ஆண்டு இந்த ஆண்டு ஆகவே நானும் வழக்கம் போல் கண்ணை மூடிவிட்டேன். சொந்தச் செலவில் சூனியத்தை வைக்க விரும்பவில்லை. அதனால் இந்த ஆண்டில் என்னை அதிகம் கவர்ந்த சில பதிவுகளை பதிவர்களுடன் தருகின்றேன்.

திரட்டிகளூடாகவும் நான் பிந்தொடர்பவர்களினதும் பதிவுகளில் பலவற்றை ரசித்து வாசித்திருந்தாலும் அவற்றில் மனதில் நிற்பவற்றின் சுட்டிகள் மட்டும் தருகின்றேன்.

அச்சுதன்
பங்குச்சந்தை பற்றி தினமும் பதிவு எழுதுகின்றவர். தன்னுடைய துறையின் மேல் இவர் வைத்திருக்கும் ஈடுபாடு பாராட்டுக்குரியது. பங்குகளின் வீழ்ச்சி வளர்ச்சி என பலரும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் சிறப்பாக எழுதுகின்றார்.

பங்கு வர்த்தகம் சூதாட்டமா?

அசோக்பரன்
அதிகமாக அரசியல் பதிவுகளை எழுதுகின்றவர், இவரின் மொழி ஆளுமை பலரால் சிலாகித்துப் பேசப்படுவது. இலங்கை ஜனாதிபதித் தேர்தல் பற்றி ஒரு தொடர் எழுதுகின்றார்.

இலங்கையில் தமிழ் சினிமா இல்லாதது கவலைக்குரியது

ஆதிரை
காட்டிக் கொடுத்த 'விசா'ப்பிள்ளையார் என்ற இவரின் பதிவில் வெள்ளவத்தையில் பிரபலமான விசாப் பிள்ளையார் பற்றிய சிறிய குறிப்புகளை தனக்கே உரிய பாணியில் எழுதியிருந்தார். காத்திரமான பதிவுகளை எழுதும் இவர் இடையிடையே சீரியசான மொக்கைப் பதிவும் ரசிக்கும் படி எழுதுகின்றார்.

காட்டிக் கொடுத்த 'விசா'ப்பிள்ளையார்

ஆயில்யன்

"நண்பனுக்கும் சகோதரனுக்கும் இடைப்பட்ட ஒர் உறவுக்கு, பெயர் இருந்தால் அதை நான் கானா பிரபா என்றே அழைப்பேன்" என நட்புக்கு புது இலக்கணம் வகுத்த ஆயில்ஸின் அனுபவப்பகிர்வுகள் அனைத்தும் ரசிக்கும் படி இருக்கும்.

பாலிடெக்னிக் - வரைந்தும் வரையாமலும்..!

பாலவாசகன்
ஆறாவது அறிவைப் பற்றி இவர் எழுதிய தொழில்நுட்பப் பதிவு, அடிக்கடி கவிதை சினிமா விமர்சனம் சமூகம் பற்றிய பார்வைகள் என பல விடயங்களை யாழ்ப்பாணத்தில் இருந்து எழுதும் மருத்துவபீட மாணவன் இவர்.

ஆறாவது புலன்…தகவல் தொழில் நுட்ப உலகில் ஒரு புதிய புரட்சி…!

பவன்
நன்றாக மொக்கை போடும் இவரின் போட்டோ கொமெண்ட்ஸ் பதிவுகள் மிகவும் சுவாரசியமானவை. கிரிக்கெட் வீரர்களின் படம் கிடைத்தால் போதும் சிங்கம் கொமெண்ட் அடித்தே அவர்களைக் கிண்டல் அடிக்கும்.

என்ன பேசி இருப்பாங்க ???

புல்லட்
அதிரடியாக நகைச்சுவைப் பதிவுகளை எழுதுபவர். இவரின் பதிவுகள் பலவற்றை வாசிக்கும் போதே வாய்விட்டுச் சிரிக்கவைக்கும் வல்லமை இவருக்கு கை வந்த கலை. அண்மையில் ஒரு அரசியல்வாதி பற்றி தன்னுடைய ஒரு பதிவில் எழுதி அந்த விடயத்தை நினைத்து நினைத்து சிரிக்கவைத்தார். ஆனாலும் பாமன் கடை அனுபத்தினால் பல இளைஞர்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கின்றார் என்றால் அது மிகையாகாது.

பாமன்கடை பயணிகளுக்கு எச்சரிக்கை. ..

கேபிள்சங்கர்
இவரின் சினிமா விமர்சனங்களினால் எத்தனையோ பேர் மொக்கைப் படங்களைப் பார்க்காமல் தங்கள் பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்தியிருக்கின்றார்கள். இவரின் கொத்துப் பரோட்டாவில் வரும் ஜோக்கும் குறும்படமும் கலக்கலாக இருக்கும்.

இசையெனும் ”ராஜ” வெள்ளம்

சேரன் கிரிஷ்
எண்ணிக்கையில் குறைந்தளவு பதிவுகள் எழுதினாலும் அவை அனைத்தும் காத்திரமாக எழுதும் சேரன் தன்னுடைய அனுபவங்களை மிகவும் சுவை பட எழுதுபவர். இவரின் கேலாங் பற்றிய பதிவு, வெள்ளவத்தைக் காதலர்கள் மற்றும் அண்மையில் யாழ் பயணத்தின் ஒரு அவலம் என்பன முக்கியமானவை.

வெள்ளவத்தை கடற்கரையும் அவசரப்பட்ட காதலர்களும்

டொன் லீ
சிங்கையில் பதுங்கு குழியில் இருக்கும் டொன்லீ இப்போது பதிவுலகை விட ட்விட்டரில் குடித்தனம் நடத்தவே அதிகம் விரும்புகின்றார். தன்னுடைய ஐரோப்பிய விஜயத்தை சுவாரசியமாக எழுதியிருக்கின்றார்.

ஐரோப்பிய திக்விஜயம் I

டயனா
அறிந்ததும் அனுபவமும் என தன்னுடைய பதிவுகளை இடைக்கிடையே எழுதும் டயனா ஒரு ஒலிபரப்பாளரும் கூட. தன்னுடைய ஒலிபரப்பு அனுபவங்களை விட சினிமா ஏனைய விடயங்களை இடையிடையே எழுதுகின்றார்.

Titanic சாதனையை தகர்க்கவரும் சினிமாவின் புது அவதாரம் - AVATAR

கீர்த்தி
சிந்தனைச் சிறகில் சிறகடிக்கும் இந்த கவிதாயணி அண்மையில் ஒரு மொக்கைக் கவிதைகூட எழுதிப் பரபரப்பானர். அடிக்கடி கவிதையும் இடையிடயே ஏனைய விடயங்களையும் எழுதுகின்றார்.

பாரதி கண்ட பெண்கள்

ஜாக்கி சேகர்
உலக சினிமாவில் பல நல்ல படங்களைப் பற்றி விமர்சிக்கும் ஜாக்கியின் பதிவுகளில் அவரது சாண்ட்வெஜ் அன்டு நான்வெஜுல் விஷுவல் டேஸ்ட்டில் தன் கமேரா ரசனையும் ஏனைய விடயங்களையும் அழகாகவே எழுதுவார். தன்னுடைய மனைவி வெளிநாடு சென்றதை இட்டு தன்னுடைய தனிமையையும் அவரது சில நாள் பிரிவையும் அழகாக எழுதிய இந்தப் பதிவு பலருக்கும் பிடித்தது.

என் இல்லாளின் முதல் வெளிநாட்டு பயணம்

கனககோபி
கங்கோன் என செல்லமாக அழைக்கப்படும் கோபி மொக்கைப் பதிவுகளை விட சில நல்ல மொழிபெயர்ப்புப் பதிவுகளை சமூக நலன் சார்ந்த பதிவுகளையும் எழுதியிருக்கின்றார், அண்மைக்காலமாக இவர் பதிவு எழுதுவதை விட டிவிட்டரில் குடியிருப்பதையே விரும்புகின்றார்.

2009 இல் வாழ்வதை அறிவது எப்படி...

கரவைக்குரல்
அமீரகத்தில் இருந்து சில காலம் எழுதிய கரவைக்குரல் என்கின்ற தினேஷ் தற்போது இங்கிலாந்தில் இருப்பதால் அதிகமாக எழுதுவதில்லை. இவரது எழுத்துக்களில் ஈழத்து மண்வாசனை அதிகம் மணக்கும்.

வல்லிபுரத்தில் கடல் தீர்த்தம்

கானாபிரபா
தன்னுடைய அனுபவங்களையும் ரசனையையும் அழகாக எழுதும் பிரபா, ஒரு சினிமா கலைக்களஞ்சியம் கூட சினிமா சம்பந்தமான எந்த சந்தேகங்களையும் உடனடியாக தீர்க்கும் பிரபா அண்ணை உலாத்துவதிலும் மன்னன். இப்போது தன்னுடைய காதல் கதையை மன்னிக்கவும் நண்பர்களின் காதல் கதையை அழகாக ஆரம்பித்து வைத்திருக்கின்றார்.

"16 வருஷங்களுக்கு முந்திய காதல் கதை"

கிருத்திகன்
கீத் என செல்லமாக அழைக்கப்படும் கிருத்திகனின் மெய் சொல்லப் போறேனில் அவரின் துணிச்சலான பல கருத்துகளும் கிரிக்கெட் பதிவுகளும் மிகவும் பிடித்தாலும் அவரின் பாடசாலை நாட்கள் பற்றிய இந்தப் பதிவுதான் என்னை மிகவும் கவர்ந்தது.

துள்ளித் திரிந்த காலம்

கெளபாய் மது
பேசாப் பொருள்களை அதிகம் பேசும் மது, சில நாட்களாக கொஞ்சமாகவே எழுதுகின்றார். இறுதியாக இவர் எழுதிய ஒரு நகைச்சுவைப் பதிவு ஒன்று பலராலும் பாராட்டப்பட்டது காரணம் நகைச்சுவையிலும் மது பாவித்த வசனங்கள். இவரின் பாலியல் வல்லுறவும் ஆண்களும் பலரால் படிக்கப்பட்ட பதிவு என் நண்பர் ஒருவர் இந்தப் பதிவின் ரசிகர்.

ஒரு பெண் - நான் - ஒரு காலியான இருக்கை

லோஷன்
நாடறிந்த ஒலி/ஒளிபரப்பாளர் பல்சுவை எழுத்தாலும் பலரைக் கவர்ந்தவர். ஆனாலும் அதிகமாக கிரிக்கெட் பற்றி எழுதி கிரிக்கெட் பதிவர் என்ற முத்திரையையும் குத்திக்கொண்டார். இவரின் கிரிக்கெட் பதிவகளை ஏனைய பதிவுகளில் இருக்கும் எள்ளல் பலராலும் பாராட்டப்படுகின்றது.

விஜய் நடிச்சா தாங்க மாட்டோம்?????

மருதமூரான்
காத்திரமான பதிவுகளை எழுதுபவர். அத்துடன் சிறப்பாக சினிமா விமர்சனங்களையும் நடுநிலையாக எழுதுகின்றவர். கிருத்திகன் போல் இவருடைய எழுத்துகளும் என்னை பல சமயங்களில் பிரமிக்கவைத்தன. காரணம் இருவருடைய வயதும் தான். சிறிய வயதில் விஸ்தீரமான சிந்தனை உடையவர்கள் இவர்கள் இருவரும்.

‘கமல்ஹாசன்’ என்கிற திரைத்துறை ஆளுமை.

டொக்டர் முருகானந்தன்
நாடறிந்த எழுத்தாளர், மருத்துவர். இவரது சினிமா விமர்சனங்களைப் வாசித்து பல படங்களைப் பார்த்து ரசித்தவன் நான். இவரது மருத்துவக் கட்டுரைகளில் இருக்கும் நகைச்சுவையுடன் கூடிய விடயங்கள் வாசகர்களை கவர்வதில் வியப்பில்லை.

மணமுறிவுகள் ஏன்? எந்தப் பொருத்தம் முக்கியமானது?

மு.ம‌யூரன்
நீண்ட நாட்களாக வலையுலகில் கலக்கிக்கொண்டிருக்கும் மயூரனின் பதிவுகள் பெரும்பாலும் தொழில்நுட்பம் சமூக சிந்தனை உடையவைகளே. அண்மையில் இவர் எழுதிய இணையக் கனிமை பலராலும் பாராட்டுப் பெற்றது.

Cloud Computing: மழை பெய்யுதா பிழை செய்யுதா?

மயூரேசன்
இலகு தமிழில் பெரும்பாலும் தொழில்நுட்ப பதிவுகள் எழுதுபவர். சிலவேளைகளில் சினிமா விமர்சனத்துடன் தன்னுடைய சில அனுபவங்களையும் பதிவாக இட்டிருக்கின்றார். இவரின் கூகுல் வேவ் பதிவினால் அலையடிப்பவர்களில் நானும் ஒருவன்.

Google Wave ஒரு அறிமுகம்

முரளிகண்ணன்
பலதரப்பட்ட விடயங்களை எழுதும் முரளிகண்ணணும் ஒரு சினிமாக் கலைக் களஞ்சியம். சினிமா சம்பந்தப்பட்ட பல விடயங்களை தன்னுடைய வலையில் அழகாக தருபவர்.

திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை - மனதிற்க்கு தோன்றிய சில காரணங்கள்.

நிமல்
கமேராக் கலைஞரான நிமல் பல்சுவையாக எழுதுபவர். அதிக வேலைகாரணமாக சில நாட்கள் ஓய்வெடுக்கபோகின்றேன் என பதிவே இட்டவர். ஆனாலும் பதிவர் சந்திப்புகளில் பலகோணங்களில் படம் எடுப்பவர்.

நேர்முகத் தேர்வு - சில குறிப்புக்கள்


பின்குறிப்பு : எங்கே என்னுடைய பெயர் என இதில் பெயரில்லாத நண்பர்கள் தேடாதீர்கள். இது முதலாம் பகுதி தான் அனைவரின் பதிவுகளையும் எழுதினால் பதிவு நீண்டுவிடும் என்ற நல்ல எண்ணத்தில் இரண்டாம் பகுதியில் ஏனைய நண்பர்களின் ரசித்த பதிவுகள் வரும்.

கந்தகோட்டை - திரை விமர்சனம்

ஒருவர் ஊராரின் காதல்களைப் பிரிப்பவர் இன்னொருவரே ஊராரின் காதல்களை ஊட்டி வளர்ப்பவர் இவர்கள் இருவருக்கும் காதல் பத்தினால் என்னவாகும் என்பதை கலகலப்பாகவும் விறுவிறுப்பாகவும் சொன்ன படம் கந்தகோட்டை.

கதை :

நகுலன் ஊராரின் காதல்களை பிரிப்பவர் இதற்க்கு இவர் சொல்லும் காரணம் தனது பெற்றோர்கள் காதல் திருமணம் செய்தும் சின்னச் சின்ன விடயங்களுக்கு சண்டை பிடிக்கின்றார்கள் இதனால் இவருக்கு காதலின் மேல் வெறுப்பு. பூர்ணா ஊரார் காதல்களைச் சேர்த்து வைக்கும் ஷாஜகான் விஜயின் பாத்திரம் போன்றவர். நகுலனின் காலணியான கந்தகோட்டைக்கு ஒரு காதலைச் சேர்த்து வைக்க வரும் பூர்ணா அங்கே நகுலனைச் சந்திக்கின்றார். இன்னொரு காதலர்களின் காதலைப் பிரிக்க ஏற்படும் சந்தர்ப்பத்தில் அந்த காதல் உண்மையான காதல் என்பதை அறிந்த நகுலன் காதலையும் பூர்ணாவையும் ஒரே நேரத்தில் விரும்புகின்றார். இடைவேளையின் பின்னர் காதலுக்கு ஒரு புதிய வில்லன் அந்த வில்லனக்கு எப்படி நகுலன் திட்டமிட்டு ஆப்படிக்கின்றார் என்பதுதான் கதை.


திரைக்கதை :

முதல் பாதி சந்தானத்தினால் கலகலப்பாகவும் இரண்டாவது பாதி நகுலன் சம்பத் மோதல்களில் விறுப்பாகவும் போகும் திரைக்கதை. சில காட்சிகள் சில படங்களில் பார்த்த ஞாபகம் வந்தாலும் கொஞ்சம் விறுப்பான திரைக்கதை என்பதால் உடனே மறைந்துவிடுகின்றது. அத்துடன் அடுத்து என்ன நடக்கும் என்பதை பல இடங்களில் ஊகிக்க முடிகின்றது. அதிலும் இந்தக் காட்சி முடியப் பாடல் என்பதை திரையரங்கில் இருப்பவர்கள் சத்தம் போட்டே உணர்த்துகின்றார்கள். நல்ல காலம் கடைசிக் காட்சிக்கு முன்னால் பாடல் வைக்கவில்லை.

வசனம் :

முதல் பாதியில் சந்தானம் அடிக்கும் லூட்டிகளில் வசனங்கள் கலக்கல் நகைச்சுவை. காதலித்த பெற்றோர்கள் சின்னச் சின்ன விடயங்களுக்குச் சண்டை போடுவது குற்றமில்லை எனச் சொல்லும் இடங்களிலும் வசனங்களில் சக்திவேல் விளையாடியிருக்கின்றார்.

இயக்கம் :

ஏற்கனவே அறிந்ததிரைக்கதையாக இருந்தாலும் இயக்குனர் சக்திவேல் இதனைச் சொன்னவிதம் ரசிக்கும் வண்ணம் இருக்கின்றது. இயக்குனர்கள் ராதாமோகன், ப்ரியா.வி போன்றவர்களிடம் உதவி இயக்குனராக இருந்த சக்திவேலுக்கு முதல் படம் எனச் சொல்லமுடியாதபடி நேர்த்தியான இயக்கம்.

சந்தானம் :

படத்தின் உண்மையான கதாநாயகன் சந்தானம் தான். சின்னக் கவுண்டர் அடிக்கும் லூட்டிகள் நிலை மறந்து ரசித்துச் சிரிக்கும் படி இருக்கின்றது. அதிலும் இவர் ஒவ்வொரு பெண்ணாக காதலிக்கும் போது "அசிலி பிசிலி", கண்கள் இரண்டால் என பின்னணியில் ஒலிக்கும் பாடல்களால் தியேட்டரே அதிர்கின்றது. இவரது கனவுக் காதலும் கலக்கல். வழக்கமாக இரட்டை அர்த்தம் மூன்று அர்த்தம் பேசுபவர் இந்தப் படத்தில் அவற்றை குறைத்தே இருக்கின்றார் அல்லது இல்லை.


நகுலன் :

நகுலன் இன்னமும் நடிக்கத் தொடங்கவில்லை என்றே சொல்லலாம். மாசிலாமணியில் நடித்த அதே நடிப்புத்தான். நடனக் காட்சிகளில் நன்றாக ஆடுகின்றார். சண்டைக்காட்சிகளில் ஆக்ரோசமாக அடித்தாலும் முகத்தில் புன்னகை இருப்பது போல் தெரிகின்றது. வில்லனுடன் மல்லுக் கட்டும் இடங்களில் ரசிக்கவைக்கின்றார்.

பூர்ணா :

முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டில் நடித்தவராம். மலிவு விலை ஸ்ரேயா போல் இடைக்கிடை தெரிந்தாலும் தன் பங்கு நடித்திருக்கின்றார். பாடல் காட்சிகளில் கூட கவர்ச்சி இல்லாமல் கொஞ்சம் குத்துவிளக்காகவே வந்து போயுள்ளார். இவரை விட சுனைனாவையே இந்தப் படத்திலும் கதாநாயகி ஆக்கியிருக்கலாம் என்பது என் கருத்து.

சம்பத் :

வில்லனாக வரும் சரோஜா புகழ் சம்பத் தன் மகனுக்காக வேதனைப் படும் காட்சிகளில் நன்றாகவே நடித்திருக்கின்றார். ஆனால் வயது போன தோற்றம் அவருக்குப் பொருத்தமாகவே இல்லை. பாலாசிங் கூட அதே அரசியல்வாதி பச்சைத் துண்டுடன் வந்துபோகின்றார். வில்லனை இன்னும் கொஞ்சம் வில்லத்தனமாக காட்டியிருக்கலாம்.

இசை :

நீண்ட நாட்களின் பின்னர் தினா. மனிசன் இன்னமும் மன்மதராசாவில் இருந்து விடுபடவில்லைப் போல் தெரிகின்றது. அதே பாணியில் அதே போன்ற ஆடைகளுடன் ஒரு பாடல். "காதல் பாம்பும்",எப்படி என்னுள் காதல் வந்ததுதும்" ரசிக்கவைக்கின்றது. ஆனால் ஏனைய பாடல்கள் இம்சை. பின்னணி இசை அதிலும் சண்டைக்காட்சிகளில் இரட்டிப்பு இம்சை. படத்தின் பெரிய பலவீனமே இசைதான்.

ஒளிப்பதிவு :

இ.கிருஷ்ணமூர்த்தியின் ஒளிப்பதிவு பாடல் காட்சிகளில் வெளிநாடுகளின் அழகை அழகாக படம் பிடித்திருக்கின்றது. ஆனால் சென்னை நாகர்கோவில் காட்சிகளில் ஏதோ ஒன்று குறைந்தது போல் தெரிகின்றது.

மொத்தததில் குடும்பத்துடன் சென்று மகிழ்ச்சியாகப் பார்க்ககூடிய படம்.

கந்தகோட்டை - காதல் அதிர‌டி