உலகத் தரத்திற்குத் தமிழ்ச் சினிமாவை நகர்த்திச்செல்லும் ‘தசாவதாரம்’

அண்மைக் காலங்களில் வெளிவந்த படங்களிலேயே மிகவும் அதிக எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த படம்தான் தசாவதாரம். இதில் கமல் ஹாசன் பத்து வேடங்களில் நடித்திருக்கிறார். வந்து சில நாட்களுக்குள்ளேயே வசூலில் சாதனை படைத்துள்ள இந்தப்படம் கமல் நடித்த படங்களிலேயே அதிக வசூலைப் பெற்றபடமாகவும் கருதப்படுகிறது.

உலகிலே எந்தவொரு நிகழ்வும் தற்செயலானதல்ல, அவை ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தவை என்பதை விளக்க முற்படுகிறது கதை. உயிரியல் ஆயுதத்திற்கெதிராக அமெரிக்காவில் பணிபுரியும் விஞ்ஞானியான கோவிந் (கமல்) ஒரு பரிசோதனையில் ஈடுபட்டுவருகிறார். அந்த முயற்சியில் அவர் பரிசோதிக்கும் உயிரியல் ஆயுத மாதிரியை வெளியாட்களுக்கு விற்கும் முயற்சிகள் நடைபெறுகிறது. அதனையறிந்த கோவிந் அதனைத் தடுக்க முயலுகிறார். அதன்போது அந்த உயிரியல் ஆயுத மாதிரி இந்தியாவிற்கு வந்துசேர்ந்துவிடுகிறது. அதனைத் தொடர்ந்து கோவிந்தும் உயிரியல் மாதிரியைக்கொள்ள முயன்றுவரும் வில்லனும் இந்தியா வருகின்றனர். கோவிந் பின்னால் வில்லனும் இவர்களின் பின்னால் இந்திய உளவுபிரிவு மற்றும் காவல்துறையும் ஓடுகின்றனர். இறுதியில் எவ்வாறு அந்த உயிரியல் ஆயுத மாதிரியிலிருந்து மக்கள் காப்பாற்றப்படுகின்றனர் என்பதைப் படம் காட்டுகிறது.

கதையை மேலோட்டமாகப் பார்த்தால் வழமையான சினிமாக் கதை, தமிழுக்கே உரித்தான சண்டை, பாட்டு, கதாநாயகன், வில்லன் இப்படி தமிழ்ச் சினிமாத்தனங்களிற்குக் குறைவில்லை. இவ்வாறு இந்தப் படத்தைப் பொழுதுபோக்குக்காகவும் பார்க்கலாம். கமல் தனது வழமையான ஆஸ்திக நாஸ்திக கொள்கைளை சொல்லவருகின்றார் என்று கூடக் கருதிக்கொள்ளலாம்.

ஆனால், இது கமலின் படம். முக்கியமாக அவரின் கதை-திரைக்கதை-வசனம், பெரிய எதிர்பார்ப்புகளுடன் ஏறக்குறைய கடந்த 2 வருடங்களாக எடுக்கப்பட்ட படம், நீதி மன்று ஏறிய படம் என்ற அடிப்படையில் சற்றுக் கூர்ந்து பார்க்கையில் திரைக்கதையும் பாத்திரப் படைப்பும் சேர்ந்து எம்மைச் சற்று கதிரைகளில் நிமிர்ந்து உட்காரவைக்கிறது. ஏன் இத்தனை கமல் ஹாசன்கள்? உலகிலேயே கூடிய பாத்திரங்களில் நடிக்கவேண்டும் என்ற அவாவா? மேலோட்டமாகப் பார்த்தோமானால் பெரும்பாலான பாத்திரங்கள் முக்கியத்துவமே இல்லாத பாத்திரங்கள் ; குணச்சித்திரப் பாத்திரங்கள்.

ஒரு நேர்காணலில் கமல் சொல்லியிருந்த ஒரு கருத்து என்னவெனில், ‘தனது சில படங்களை மக்கள் புரிந்துகொள்வதற்கு சில காலம் ஆகலாம். உதாரணமாக குணா படத்தைப் புரிந்துகொள்வதற்கு மக்களுக்கு 20 வருடங்கள் ஆகியிருக்கிறது’; ‘காதல் கொண்டேன்’ என்ற பட வெற்றியை குறித்து அவர் வெளியிட்ட கருத்து அது. தசாவதாரத்தைப் பொறுத்தவரையிலும் கூட இது உண்மையாக இருக்கலாம். மக்கள் சரியாகப் புரிந்துகொள்ள சில காலம் தேவைப்படலாம். ஏனெனில் அதற்குள் பொதிந்திருக்கும் விஞ்ஞானம் அத்தகையது.

இந்நாட்களில், ஆங்கிலப் பட உலகிலும் சரி, பேசப்பட்டுவரும் விடயங்கள்தான் Chaos தத்துவம் மற்றும் அதன் பகுதியாகக் கருதக்கூடிய Butterfly effect தத்துவம். Chaos தத்துவமானது சிக்கலான, எழுந்தமானமான தொகுதிகளின் குணவியல்புகளை ஆராயவும் அவற்றை விளக்கவும் உதவும் ஒரு தத்துவம். அவ்வாறான தொகுதிகளை Chaotic தொகுதிகள் என்று சொல்வார்கள். இவற்றின் இயக்கங்கள் எதிர்வு கூற முடியாதவை. இப்போது இது நடக்கிறது, எனவே இனி இது நடக்கும் என்று குறிசொல்லமுடியாத தொகுதிகள். இவ்வகையான தொகுதிகளில் ஒரு கட்டத்தில் நடக்கும் ஒரு சிறிய மாற்றம், ஒரு சிறிய அசைவு கூட எதிர்காலத்தில் ஒரு பாரிய விளைவை ஏற்படுத்தும். இதன் அடிப்படையில் உருவாகியதே Butterfly effect தத்துவம். அதாவது ஒரு சிறிய மாற்றம் பெரிய விளைவை ஏற்படுத்தலாம் என்று கூறுகிறது அத்தத்துவம். அதாவது சொல்வார்கள், ஆபிரிக்காவில் ஒரு வண்ணாத்திப்பூச்சி சிறகடிப்பின் அதனால் ஏற்படும் சிறுகாற்று அமெரிக்காவில் ஒரு சுழல்காற்றை ஏற்படுத்தலாமாம். இயற்கையில் உள்ள ஏறக்குறைய எல்லாத்தொகுதிகளுமே Chaotic தொகுதிகளாம். உதாரணமாக, வானிலை, புவித் தட்டுகளின் நகர்வுகள் போன்றவற்றைச் சொல்லாம். நாம் எவ்வளவு நுட்பமாக ஆய்தறிந்தாலும் வானிலை பற்றிய மிகச்சரியான எதிர்வுகூறல்களை எப்போதுமே செய்யமுடிவதில்லை.

நாம் இந்த Chaos தத்துவத்தை எடுத்துக்கொண்டால், இதனை இரண்டு விதமாகக் படமாக்கலாம். ஒன்று, நடக்கும் ஒரு சிறுமாற்றம் எவ்வாறு எதிர்காலத்தில் பாரிய மாற்றத்திற்குக் காரணமாகின்றன என்று காட்டுவதற்கு, ஆரம்பத்தில் நடக்கும் மாற்றங்களை மாற்றி மாற்றி, ஏற்படும் இறுதி விளைவுகளைக் காட்டலாம். இந்த அடிப்படையிலேயே Chaos தத்துவம் சம்பந்தமான ஆங்கிலப் படங்கள் பெரும்பாலும் தயாரிக்கப்படுகின்றன. உதாரணமாக The Butterfly Effect, The Sound of Thunder போன்ற படங்களைக் கூறலாம். இத்தத்துவத்தைக் காட்டக்கூடிய மற்றமுறை, ஒரு பாரிய விளைவு நடத்திருக்கிறது, அதற்கான சிறிய சிறிய காரணிகள் எவை என்று காட்டுவது. ஆனால் இம்முறையிலுள்ள சிக்கல் என்னவெனில், இதனை மக்களுக்குப் புரிய வைப்பது சற்றுச் சிக்கலான விடயம், சில வேளை மக்கள் இக்காரணிகளின் பெறுமதியை, அவற்றின் தாக்கத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளாது போய்விடலாம். ஆனால் கமல், வழமைபோன்று, ஆங்கிலப் படவுலகமே முயற்சிக்கச் சிந்திக்கும் இந்த இரண்டாவது முறைமையைக் கையெடுத்திருக்கிறார். அதாவது, ஒரு பெரிய நிகழ்வுக்கு அதற்கு முன்னான சிறிய நிகழ்வுகள் எவ்வாறு தாக்கத்தை ஏற்பட்டுத்துகின்றன என்பதை அவர் காட்ட முயன்றிருக்கிறார். இங்கேதான் அவருக்கு 10 வேடங்கள் கைகொடுக்கின்றன. எனவே பார்வையாளர்கள் குறைந்தது 10 வெவ்வேறு காரணிகள் இறுதி நிகழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்றாவது புரிந்துகொள்வார்கள். கமலின் இந்தப் பாரிய பரிசோதனை முயற்சியை முதலில் பாராட்டவேண்டும்.

இதன் அடிப்படையில் இப்படத்தினை பார்க்கையில், இந்தப் படத்தின் மைய நிகழ்வாக அல்லது அந்தப் பெரிய நிகழ்வாக நாம் பார்க்கக்கூடியது, எவ்வாறு உயிராயுதக் கிருமியில் இருந்து இந்தியா காப்பாற்றப்படுகிறது என்பதாகும். இந்த நிகழ்வில் எவ்வாறு உலகில் பல்வேறு திசைகளில், பல்வேறு மட்டங்களில் உள்ள காரணிகள் தாக்கங்களைச் செலுத்தியிருக்கின்றன என்று இந்தப் படம் காட்டுகிறது. அதற்கும் மேலாக, 12ம் நூற்றாண்டில் நடக்கும் ஒரு நிகழ்வுகூட 2004ம் ஆண்டில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் காட்டிநிற்கிறது இந்த தசாவாதரம்.

12ம் நூற்றாண்டுச் சோழர்காலத்தில், 2ம் குலோத்துங்க மன்னன் வைணவ எதிர்ப்பில் அனந்த நாராயண சிலையை கடலில் போடுகிறான். அந்த விக்கிரகத்துடன், முதலாவது கமலும் மூழ்கடிக்கப்படுகிறார். இதுவும் இறுதி நிகழ்விற்கு ஒரு காரணி என்று இதன் மூலம் அழுத்தங்கொடுக்கப்படுகிறது. அதாவது புவியோட்டில் இந்த சிலை வீழ்ந்ததால் ஏற்பட்ட சிறு அதிர்வுகூட சுனாமி ஏற்பட்டதற்கு ஒரு காரணியாக இருந்திருக்கலாம். நீங்கள் கேட்கலாம், என்ன இது... ஒரு சிலை புவியோட்டைப் பாதித்துவிடுமா என்று! பாதித்துவிடும் என்கிறது Butterfly effect தத்துவம்.

உயிரியல் ஆயுதம், அது எப்படி அமெரிக்காவிலிருந்து இந்தியக் கடற்கரைக்கு வந்தது என்பதனைக் காட்டுவதாகவே படத்தின் பெரும்பகுதி அமைகிறது. இங்கே மேலும் 9 கமல்ஹாசன்கள் வருகிறார்கள். அதாவது, கமல் 9 காரணிகளின் முக்கியத்துவத்தைக் காட்ட முயல்கிறார். இதில் வரும் ஒவ்வொரு கமலும் படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு இருந்திருக்காவிடின், அவ்வாறு செயற்பட்டிருக்காவிடின் நாம் பார்த்த முடிவு கிட்டியிருக்காது. இதில் நாம் பார்ப்போமானால், கோவிந் பாத்திரம் மற்றும் வெள்ளைக்காரப் Fletcher பாத்திரத்தைத் தவிர ஏனைய பாத்திரங்கள், ஆங்காங்கே வந்துபோகின்றன. இடையில் சம்பந்தமே இல்லாத ஒரு மணலேற்றும் கதை, அதுதொடர்பான சர்ச்சைகள், அதில் ஒரு தலித் கமல். ஜப்பானில் ஒரு கமல், அமெரிக்க ஜனாதிபதியாகவும் ஒரு கமல்... இவ்வாறு எல்லாமட்டங்களிலும் எல்லா இடங்களிலும் உள்ள சின்னச் சின்னப் பாத்திரங்கள் கூட கதையில் அதன் முடிவில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. உதாரணமாக, ஜப்பான் கமல் ஹாசன் கடைசி நேரத்தில் வராவிடின், அந்த உயிரியல் ஆயுதம் கைமாறி உலகிற்கு ஆபத்தாகியிருக்கும். அமெரிக்க ஜனாதிபதி புஷ் குறித்த விமானத்தை திருப்பிக்கொண்டுவர ஒத்துக்கொண்டிருப்பின் என்ன நடந்திருக்கும். அந்த தலித் வாதி இல்லாவிட்டால் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். இவ்வாறு படத்தில் வரும் எல்லா கமல் ஹாசன் பாத்திரங்களின் அசைவுகளும் இறுதிப் பெரு நிகழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியருக்கின்றன. இந்தப் பத்து கமல் ஹாசன்களும் கதையை விளக்குவதற்காக எடுக்கப்பட்ட மாதிரிகள் மாத்திரமே. அதேபோன்று படத்தில் வரும் எல்லா நிகழ்வுகளுமே இறுதி நிகழ்விற்குக் காரணம். இடையில் வரும் எந்தவொரு நிகழ்வும் இடம்மாறியிருப்பின், அது பார்த்த முடிவைத் தந்திருக்காது!

அடுத்துப் பார்த்தோமானால், 12ம் நூற்றாண்டு வைஷ்ணவ ஆழ்வாரும் 2004ம் ஆண்டின் கோவிந்தராஜனும் ஒரேமாதிரி நெற்றிப்பொட்டில் அடி வாங்குகிறார்கள், இதுவும் Chaos தத்துவத்தின் ஒரு இயல்பேயாம். ஒரு கட்டத்தில் நிகழும் நிகழ்வு, இன்னொரு கட்டத்தில் நிகழும் நிகழ்வுடன் மேற்பொருந்தலாம், அதே மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தலாம் என்கிறது அத்தத்துவம்.

இதில் கமல் ஹாசன் சொல்ல வந்த முக்கிய விடயமாக நாம் கருதக்கூடியது, இந்த உலக அழிவில் அதில் நடக்கும் மாற்றங்களுக்கு அன்றும் சரி இன்றும் சரி நாம் எல்லோருமே காரணிகளாக இருக்கிறோம். அடுத்து நாம் பார்த்தோமானால், 12ம் நூற்றாண்டில் வரும் ஆழ்வார் கமல் ஹாசன் சிலையைக் கடலில் போட்டு ஏற்படப்போகும் சுனாமியைத் தடுக்க நினைக்கிறார்... அவரும் இறந்துபோகிறோர். 2004ம் ஆண்டின் தலித் கமல் ஹாசன், மணல் அள்ளுவதை நிறுத்தி அழிவைத் தடுக்க முயல்கிறார். அவரும் இறந்துபோகிறார். எனவே தனிமனிதராக இந்நிகழ்வுகளைத் தடுக்க முடியாது, நாம் எல்லோருமே மாறவேண்டும் என்று காட்ட முயல்கிறாரோ?

தசாவதாரம் படம் எவ்வாறு விஞ்ஞானம் பகர்கிறது என்பதை மட்டுமல்ல அதன் அழகியல்சார் அம்சங்களையும் சொல்லாமல் இருக்கமுடியவில்லை.

இதில் கமல் ஹாசன் ரங்கராஜன் நம்பி, கோவிந்தராஜன், அவ்தார் சிங், பல்ராம் நாயுடு, Fletcher, கலிபுல்லாஹ் முக்தார், நரஹாசி, ஜோர்ஜ் புஷ், பூவராகவன், கிருஷ்ணவேணி போன்ற பாத்திரங்களை ஏற்றிருக்கின்றார். இதன் மூலம் உலகத்தில் முதன் முதலாக பத்துவேடங்களில் நடித்த சாதனையை அவர் படைத்திருக்கிறார். இச்சாதனை தமிழ் சினிமாவில் நிகழ்ந்திருப்பது நாமெல்லாம் பெருமைப்படவேண்டிய விடயம். முக்கியமாகக் குறிப்பிடவேண்டிய விடயமென்னவெனில், இவற்றில் எல்லாப் பாத்திரங்களிலிமே கமலின் திறமையான நடிப்புத் வெளிப்பட்டிருக்கிறது, நடிப்பை எவ்விடத்திலுமே குறைகூற முடியாது. பாத்திரங்களின் ஒப்பனைகளில் சில போதாமைகள் இருந்தாலும், Body Language – மற்றும் குரல் பேச்சு மூலம் கமல் ஹாசன் பாத்திரங்களை எம்கண்முன் நிறுத்துகிறார். குறிப்பாக, பல்ராம் நாயுடு, Fletcher, பூவராகவன், ஜோர்ஜ் புஷ் போன்ற பாத்திரங்களைக் குறிப்பிடலாம். அபூர்வ சகோதரர்கள் படத்தில் கட்டையாக வந்த கமல் இதில் கலிபுல்லாஹ் முக்தார் பாத்திரத்தில் நெட்டையாகியும் சாதனை படத்திருக்கிறார். ரங்கராஜன் நம்பியின் பாத்திரம் கமலின் சுயரூபம் என்றாலும் அதில் அவருடைய நடிப்பு, அந்த வெறி... அவருக்கு நிகர் அவரே. உலகநாயகன் என்பதில் எந்தத் தப்புமே இல்லை.

பட ஓட்டத்தில் இடையில் ஒருவரை ஒருவர் துரத்துமிடங்களில் படம் சற்றுத் தொய்ந்துவிடுகிறது. ஆனால் அந்தத் தொய்வுகளை, காட்சி அமைப்பு மற்றும் கமேரா கோணங்கள் சலிப்பில்லாமால் இழுத்துச் செல்கின்றன. இசையமைப்பு மற்றும் பாடல்களைப் பொறுத்தவரையில் ‘கல்லை மட்டும் கண்டால்’ எனும் பாடலில் இருக்கும் உணர்வும் ஹரிகரனின் குரலும் இசையும் படப்பிடிப்பும் மிகத் திறமையாக உள்ளது. ‘முகுந்தா முகுந்தா’ பாடல் இதயத்தை வருடிச் செல்கிறது. பின்னணி இசையையும் குறை சொல்வதற்கில்லை.

படத்தில் வரும் Graphics காட்சிகளைப் பற்றியும் சொல்லாமல் இருக்கமுடியவில்லை. குறிப்பாக இறுதியாக வரும் சுனாமி காட்சி. நிட்சயமாக ஆங்கிலத்தரத்தில் இவை இல்லை ஆனாலும் இம்முயற்சிகளைப் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை. சண்டைக் காட்சிகளும் பிரமிக்க வைக்கின்றன. தேவையான இடங்களில் படக்காட்சிகளை ஒரு வண்ணாத்திப் பூச்சி மூலம் தொடுத்து Butterfly effect தத்துவத்தைக் குறியீடாகக் காண்பிப்பது பாராட்டுக்குரியது .

திரைக்கதையில் கமல் தனது அரசியலையும் செய்யத் தவறவில்லை. பல இடங்களில் அவரது கருத்து வெளிப்பட்டிருக்கிறது. உதாரணமாக, ‘கடவுள் இல்லை என்று நான் சொல்லவில்லை, இருந்தால் நன்றாக இருக்கும் என்றே சொல்கிறேன்’, ‘மடம் என்றால் தப்பு நடக்காதா?’ போன்ற வசனங்களைக் குறிப்பிடலாம்.

பாத்திரப்படைப்பு, நடிப்பு, திரைக்கதை, படப்பிடிப்பு என எல்லாவற்றையும் சேர்த்து நோக்குமிடத்து கமல், தமிழ் திரையை உலக தரத்திற்கு நகர்த்திச் செல்கிறார் என்பதை ஐயமறத் தெரிந்துகொள்ளலாம். அதற்கான மற்றுமொரு படிக்கல்லாக தசாவதாரம் அமைந்துள்ளது என்பதில் எவ்வித ஐயமில்லை.


- நன்றி 'ஞானம்' கலை இலக்கியச் சஞ்சிகை. ஜூலை 2008

-கெ.சர்வேஸ்வரன், கணினி விஞ்ஞானம் மற்றும் இயந்திரவியற் துறை, மொரட்டுவைப் பல்கலைக்கழகம்.

இலங்கையில் இருந்து வெளிவரும் ஞானம் இலக்கிய சஞ்சிகையில் வந்த விமர்சனம். எனைய‌வ‌ர்க‌ள் பார்வைக்காக‌ இங்கே ப‌திவு செய்துள்ளேன், இங்கேயுள்ள‌ க‌ருத்துக்க‌ள் இதை எழுதிய‌ரையே சாரும்.

தசாவதாரம் அல்லது கமல் ஒரு நுண்ணரசியல் ‍ பகுதி 2

ஏற்கனவே கமலைப் பற்றி பார்த்துவிட்டோம். அதேபோல் தசாவதாரம் பற்றிய நுண்ணரசியலைப் பற்றிப் பார்க்க இருந்தேன் ஆனால் வலையுலகில் தசாவதாரம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் இன்னமும் ஓயவில்லை. பலரும் ரூம் போட்டு யோசித்து பல‌விதமாக எழுதுகிறார்கள். அதிலும் கிருஷ்ணரின் தசாவதாரத்தோடு கமலின் தசாவதாரத்தையும் ஒப்பிடுகிறார்கள். நேற்றைய ஜெயா ஹாசினி பேசும்படம் நிகழ்ச்சியிலும் சுஹாசினி(கமலின் அண்ணன் மகள்) இந்த ஒப்பீட்டை கூறியது பலதரப்பட்ட மக்கள் வலைகளை மேய்கின்றார்கள் என்ற எண்ணக்கருவை ஏற்படுத்தியது.

ஏற்கனவே எழுத்துலகிலும் வலையிலும் பிரபலமாக இருக்கும் ஜெயமோகன், எஸ்,இராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, மாலன் போன்றவர்கள் இந்தப்படத்தைப் பற்றி இதுவரை வாய் திறக்காதது ஏனோ?

த‌சாவ‌தார‌ம் ப‌ற்றிய‌ நுண்ண‌ர‌சிய‌லை எழுத‌ முய‌லும் போது இத‌னை இந்த‌ வ‌லைப்ப‌திவாள‌ர் கூறிவிட்டார், இத‌னை இவ‌ர் கூறிவிட்டார் என்ற‌ ஞாப‌க‌ம்க‌ள் வ‌ருவ‌தால் புதிதாக‌ என்ன‌ கூற‌முடியும். அத‌னால் த‌சாவ‌தார‌ம் வெற்றிக்கு என்ன‌ கார‌ண‌ம்? ?(ஆசிப் அண்ணாச்சி போல் இல்லாம‌ல் நிய‌மான‌ கார‌ண‌ங்க‌ள்).

1. கமல் என்ற உலக நாயகன்.
ஒரு வேடத்தில் நடிக்கவே மிகவும் கஸ்டப்படும்போது(சிலரின் பெயர்களைக் குறிப்பிட்டால் அவர்களின் ரசிகர்கள் சண்டைக்கு வருவார்கள், நிச்சயமாக சூப்பர் ஸ்ரார் இந்தப்பட்டியலில் இல்லை) அசால்டாக 10 வேடங்கள் சில வேடங்கள் ஏற்கனவே கமலின் சில படங்களில் பார்த்திருந்தாலும், மாறுபட்ட குரல்களும் உடல் அசைவுகளும் பிரமிப்பையே ஏற்படுத்துகின்றன. ( டாக்டர் புருனேயின் பதிவில் லக்கி லுக் பிளட்சரின் ஸ்டைலை ரஜனியுடன் ஒப்பிடுகின்றார்). சிலவேடங்கள் மைதா மாவு மேக்கப் என்றாலும் கமல் தன் நியமுகத்துடன் மைக்கல் மதன காமராஜனில் செய்ததுபோல் கலிபுலாகானையும் தன் நிய முகத்துடன் உயரமாக காட்டியிருக்கலாம். ப்ளைட்சர், சீன நரஹி போன்றவை எப்படியோ முகம் மாற்றவேண்டியவை. ஆனாலும் படத்தின் மிகப்பெரிய சாதனை ஒன்றுக்கு மேற்பட்ட கேரக்டர்கள் ஒரே ப்ரேமில் வருவதுதான்.

2. திரைக்கதை
கேஎஸ்ரவிகுமார், மதன், மறைந்த சுஜாதா, கிரேசிமோகன் போன்ற பலர்திரைக்கதைவிவாதத்தில் ஈடுப்பட்டிருந்திருக்கிறார்கள்(தகவல் கேஎஸ்ரவிகுமார் ஜெயா டிவி ஹாசினி பேசும்படம்). ஆனாலும் கேஎஸ்ரவிகுமார் கூறியதுபோல் திரைக்கதைக்கு கமல் தான் முழுச் சொந்தக்காரர். காரணம் கமலின் திரைக்கதைக்கு தாங்கள் ஒரு சிற்பியைப்போல் தேவையற்ற சிலவற்றையும் தேவையான சிலவற்றையும் செதுக்கியதாகவும் கூறினார். ஏற்கனவே விருமாண்டியில் இருவரின் பார்வையில் திரைக்கதை அமைத்த கமல் இதில் ஒரே வேகத்தில் அமைத்த திரைக்கதை அமைத்தது பாராட்டுக்குரியது. அதிலும் 12 நூற்றாண்டுக்காட்சிகள் தவிர்த்து பின்னர் படம் அமெரிக்காவிலிருந்து சென்னை வரை ஒரே ஓட்டமாகத்தான் ஓடுகின்றது. கமல் தன்னுடைய முன்னைய படங்களில் ஒரு அறிஜீவித்தனத்துடன் திரைக்கதை அமைத்திருப்பார், இதனால் பலருக்கு விளங்கவில்லை அந்தக் குறை இந்தப்படத்தில் இல்லை.

3. வசனம்
கமலின் வசனங்கள் பல புரட்சிகரமான அல்லது முற்போக்குத்தனமான கருத்துக்களை கொண்டிருக்கின்றது. அதிலும் பலராம் நாயுடு அடிக்கும் பஞ்ச்கள் ஓஹோ ரகம். வசனங்களை எழுதிவாசகர்களை சலிப்படைய வைக்கவிரும்பவில்லை. படத்துடன் கூடிய சில வசனங்களில் கிரேசி மோகன்தனம் இருந்தாலும், இன்னொரு பதிவர் கூறியதுபோல் சிலவேளைகளில் கிரேசிமோகன் வசன எழுதிய படங்களில் கமலின் தலையீடு இருந்திருக்கலாம். ஆதலால் கமலின் வசனங்கள் கிரேசிமோகனின் வ்சனங்கள் ஆக மாறியிருக்கலாம். சில இடங்களில் சுஜாதா சாயல் அடிக்கின்ற அதே வேளை படத்தில் அடிக்கடி அசின் பெருமாளை கூவிகூவி அழைத்தது எங்கேயோ இடிக்கின்றது.

4. ஒளிப்பதிவு
ரவிவர்மனின் காமேரா பல இடங்களில் அசரவைக்கின்றது. அதிலும் ஆரம்ப காட்சிகளிலும் சென்னையை ஏரியல் வ்யூவில் எடுத்த காட்சிகள் புதுமை. அதேபோல் கல்லைக்கண்டால் பாடலிலும் ஒரு காட்சி கோவில் வாசலிலில் இருந்து கோபுரத்திற்க்கு மேலால் சென்று அடுத்த பக்கத்தில் நிற்கும் மக்களிடையே செல்லும் ஒரே ஷாட்டில் எடுத்த காட்சியும் மனதில் நிற்கிறது. இதில் கிராபிக்ஸ் வர இடமில்லை. அத்துடன் கிராபிக்சையும் இயற்கையான ஒளிப்பதிவையும் பல இடங்களில் கலந்து எது நியம் எது கிராபிக்ஸ் என கண்டுபிடிக்கமுடியாமல் செய்தது தொழில் நுட்பத்தின் உட்சக்கட்டம்(தமிழ் சினிமாவில்).

5. இயக்குனர் கே எஸ் ரவிகுமார்.
வரலாறு என்ற வெற்றிப்படத்தைக்கொடுத்த உடனேயே இந்தப்படத்தில் தொடர்ந்து உழைத்த உழைப்புக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. பஞ்சதந்திரம், அவ்வை சண்முகி, தெனாலி என ஏற்கனவே கமலுடன் இணைந்திருந்தாலும் இப்படத்தில் கேஎஸ்சின் ஸ்டைல் இல்லாமல் வித்தியாசமாக எடுத்திருக்கிறார். இறுதிக்காட்சியில் எப்படி மேக்கப் போடுகின்றார்கள் என்பதைக் காட்டியது மட்டும் இவரின் ஸ்பெசல்.

6. ஏனையவை:
முதலில் பாடல்களை இடைச்செருகாமல் படத்தின்போக்கோடு இணைத்தது அருமை. இல்லையென்றால் படத்தின் ஓட்டம் நிச்சயம் தடைப்பட்டிருக்கும் காரணம் பாடல்கள் கேட்கும் அளவுக்கு தரமில்லாதுதான். இப்படியான ஒரு படத்தில் பாடல்கள் மெஹா ஹிட்டாக இருக்கவேண்டும் ஆனால் இங்கே எதிர்மறை அதனால்தானோ முகுந்தா முகுந்தாபாடலும் ஒரு சரணத்துடன் முடிந்துவிட்டது. உலக நாயகனே பாடலையும் இடையில் செருகாமல் முடிவில் செருகியது நல்லதொரு ஐடியா.

காமெடி ட்ராக் பெரும்பாலான கமல் படங்களுக்கு காமெடியன்கள் தேவையில்லை. அவரே சச்சின்போல் தனித்துஆடுவார். இங்கேயும் சில இடங்களில் அசினின் பார்டனர்சிப்புடன் கமல் சிக்ஸ்சர் அடித்துள்ளார். வையாபுரி, சிட்டிபாபு போன்றோர் இருந்தாலும் ஸ்கோர் பண்ணியது என்னவோ எம் எஸ் பாஸ்கர் தான். இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாததும்(சிலர் இருக்கு என்கிறார்கள் எங்கே என்பதை நான் அறியேன்ஆனால் இரட்டை அரசியல் அர்த்த வசனங்கள் நிறைய உண்டு) விவேக் இல்லாதது மிகப் பலம். சில நாட்களாக விவேக்கின் காமெடி அசிங்கங்களீன் உச்சம். (சிவாஜியில் கூட விவேகின் இடத்திற்கு வடிவேல் இருந்திருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்கும்).

க‌வ‌ர்ச்சி குத்தாட்ட‌ம் இல்லாத‌து. ம‌ல்லிகாவின் ஆட்ட‌ம் குத்து வகைக்குள் அட‌ங்காத‌து. அசினை ஒரே ஒருதாவ‌ணியுட‌னே முழுப்ப‌ட‌த்திலும் (இறுதி உல‌க‌ நாய‌க‌னே ப‌ட‌ல் த‌விர‌)ப‌ய‌ன்ப‌டுத்திய‌தும் ஒரு வித்தியாசாமன முயற்சிதான். ஆனாலும் ஏனோ அசின் இன்னமும் எம் குமரன், க‌ஜ‌னி ப‌ட‌ங்க‌ள் பாதிப்பில் இருந்து விடுப‌ட‌வில்லைபோல் தெரிகின்ற‌து.இந்தப்படத்துடன் சிம்ர‌ன், ஜோதிகாவின் இட‌த்தை பிடிப்பார் என‌ எதிர்பார்த்தால் சோக‌ம் தான் மிச்ச‌ம்.

இறுதியாக உலகத்தரம் உலகத்தரம் என பலரும் கூக்குரலிடுகிறார்கள். உலகத்தரம் என்பது பார்க்கும் பார்வையில் தான் இருக்கின்றது. வெறுமனே தமிழ் சினிமாவை மட்டும் பார்த்தவனுக்கு இந்தப்படம் முற்றுமுழுதாக வித்தியாசாமாக இருக்கும். தமிழ்சினிமாவுடன் தென்னக சினிமா மற்றும் ஹிந்தி சினிமா பார்த்தவர்களுக்கு ஓரளவு வித்தியாசமாக இருக்கும். அதே நேரம் தாரே ஜமீன் பார், லகான் போல் இந்தப்படத்தை எதிர்பார்த்திருந்தால் தோல்வியே மிஞ்சும். காரணம் இது முற்றுமுழுதான ஒரு பொழுதுபோக்குப்படமே ஒழிய கலைப்படமல்ல. லகான், சக்தே இந்தியா போன்ற படங்களை கமல் எடுக்கவேண்டும் என வலியுறுத்துபவர்கள் ஏற்கனவே கமல் எடுத்த அன்பேசிவம், விருமாண்டி போன்ற நல்ல கருத்துச் சொல்லும் படங்களை மறந்தது ஏனோ. உலகத்தரத்தில் ஆங்கிலப்படங்கள் தொழில் நுட்ப ரீதியிலான போட்டியில் இருந்தாலும் இரான் படங்கள் போல் கலைப்படங்கள் தான் தரமானவை. இப்படியான படங்கள் பார்த்தவர்களால் இதனை உலகத்தரம் என ஒப்புக்கொள்ளமாட்டார்கள். வேண்டுமென்றால் இந்தியத் தரத்தில் சிறந்த தரம் இது என ஒப்புக்கொள்ளலாம்.

பொதுவாக பெரும்பாலான ஆங்கிலப்படங்கள் 1000கோடி பட்ஜெட்டில் எடுப்பவை. இவற்றுடன் 100கோடிகளுக்குள் அட்ங்கும் தமிழ்ப் படங்களை ஒப்பிடமுடியாது. யாராவது கமலுக்கு 1000கோடியும் ஷங்கர் போன்ற தொழில் நுட்பத்தில் வல்ல இயக்குனர் ஒருவரையும் கொடுங்கள் கமல் வாழ்நாள் சாதனையாக நல்லதொரு படம் கொடுப்பார். மருதநாயகம் அந்த கவலையைப்போக்கும் என நினைக்கின்றேன் எப்போது என்பதுதான் ????

தசாவதாரம் அல்லது கமல் ஒரு நுண்ணரசியல்

டிஸ்கி :கமல் மேல் காண்டு கொண்டுள்ளவர்களிடம் ஒரு கேள்வி?
கமலை ஒரு தமிழனாக நினைத்து ஏன் உங்களால் இந்த வெற்றியை ஜீரணிக்கமுடியவில்லை?
இது பற்றி லக்கி லுக்கின் பதிவு உங்கள் பார்வைக்கு

தசாவதாரம் விமர்சனங்கள் - செம காண்டு மச்சி!

தசாவதாரம் அல்லது கமல் ஒரு நுண்ணரசியல்

விடயத்துக்கு வருமுன்னர் ஒரு சின்ன டிஸ்கி: நான் ஒரு கமல் ரசிகன். படத்தை முதல் நாள் முதல் ஷோவே ஹவுஸ்புல் திரையரங்கில் பார்த்துவிட்டேன். பார்த்தபின்னர் உடனடியாக விமர்சனம் எழுதமுடியவில்லை. காரணம் முதன் முறை பார்த்தபோது எங்கும் நிறைந்த அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகனாக சாட்சாத் கமலே மனதில் நிறைந்திருந்தார். அதனால் விமர்சனம் எழுதவில்லை. இன்றைக்கு எழுதலாம் எனப் நினைத்திருந்தேன் தமிழ்மண விமர்சனங்களையும் கத்துக்குட்டிகளுக்கு காவடி எடுக்கும் தமிழ்சினிமா மற்றும் சில பீட்டர் இணையங்களின் விமர்சனங்களையும் படித்தபின்னர் விமர்சனம் எழுதும் முடிவைக் கைவிட்டுவிட்டேன். அத‌னால் க‌ம‌ல் ப‌ற்றிய‌ ஒரு நுண்ண‌ர‌சிய‌லை நுனிப்புல் மேய‌லாம் என‌ நினைக்கின்றேன்.

"உரக்கப் பேசும், உரக்க நடிக்கும் தமிழ் சினிமாவில் சற்று மென்மையாக, கற்பனையுடன், நம்பும் படி நடக்கும் கமல்ஹாசனிடம் தமிழில் நவசினிமாவில் உதயத்தை எதிர்பாக்கின்றேன்".
(சுஜாதாவின் கணையாழியின் கடைசிப்பக்கங்கள் அக்டோபர் 1976, இகாரஸ் பிரகாஸின் வலையில் மீள இட்டிருந்தார்). ந‌ன்றி கானாப்பிர‌பா,

1976 லேயே சுஜாதாவால் க‌ண்டுகொள்ள‌ப்ப‌ட்ட‌ ப‌ல‌வித‌ ப‌ரிணாம க‌ம‌ல் என்ற‌ ஒப்ப‌ற்ற‌ க‌லைஞ‌ர்(ன்) க‌லைஞானி, ப‌த்ம‌ஸ்ரீ, டாக்ட‌ர், உல‌க‌ நாய‌க‌ன் க‌ம‌லை இன்ன‌மும் ந‌ம்ம‌வ‌ர்க‌ள் க‌ண்டுகொள்ள‌வே இல்லை என்ற‌ ஆத‌ங்க‌ம் என‌க்கு ப‌ல‌ நாட்க‌ளாக‌ உண்டு. (சுஜாதா என்ன‌ பெரிய‌ ஆளா? என‌ச் சில‌ர் கேட்க‌லாம் நான் இங்கே சுஜாதாவை மேற்கோள் காட்டிய‌து அவ‌ரின் வ‌ரிக‌ளுக்கும் 1976 ஆம் ஆண்டுக்கும் ம‌ட்டுமே). இத‌ற்கான‌ கார‌ண‌ம் அல்ல‌து அரசிய‌ல் என்ன‌?

முதன்மைக் காரணம்:
கமல் ஒரு பகுத்தறிவுவாதியாக இருப்பதுதான். தமிழ் நாட்டின் சாபக்கேடு பெரும்பாலான மீடியாக்கள் ஏகாதிபத்தியவாதிகளிடம் அல்லது ஆன்மீகவாதிகளிடம் இருப்பது. (இத்தனைக்கும் மத்தியில் திராவிடக் கட்சி(கள்) ஆட்சி அமைப்பது தலைவர்களின் தலைமைத்துவமே ஒழிய வேறில்லை). இவர்கள் கமலைப் பார்க்கும் பார்வைகளும் கோணங்களும் மாறுபடும். சிலவேளை கமல் இடையிடையே இமயமலைக்குப் போய் வந்திருந்தால் பார்வை மாறியிருக்குமோ என்னவோ தெரியவில்லை. இதனால் கமலுக்கு அதிகம் பப்ளிசிட்டி கிடைப்பதில்லை. அண்மைக்கால சிறந்த உதாரணம் சிவாஜி பற்றி தினமும் செய்திபோட்ட ஊடகங்கள் தசாவதாரம் பற்றி அடக்கியே வாசித்தன. இதனால் சில குறிப்பிட்ட பிரிவினர் அல்லது சமூகத்தவர்களுக்கு கமலைப் பிடிப்பதில்லை. எப்படிப் பெரியாரை வெறுத்தார்களோ அதேபோல் கமலையும் வெறுக்கின்றார்கள்.(கடந்த சில வருட வலை மற்றும் இணைய அனுபவம்). அதனைப் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தும் காட்சி ஒன்று தசாவதாரத்தில் உண்டு. அசின் கமலின் தகப்பனாரின் பெயர் கேட்க அதற்க்கு கமல் ராமசாமி என பதில் அளிக்க உடனே அசின் " சீ அவனா? என்பார். படத்தில் அந்தக்காட்சி தெளிவாக விளங்காவிட்டாலும் ஆங்கில உபதலைப்பில் (that Atheist?) என அப்பட்டமாக போட்டுவிடுகிறார்கள்.

2.
கமலுக்கு எந்த ஒரு கட்சியின் சாயமும் அல்லது அரசியல் அறிவும் இல்லாதது. கலைஞரின் விழாவிலும் இருப்பார், ஜெயின் விழாவிலும் இருப்பார். எங்கேயும் இதுவரை அரசியல்பேசியதுமில்லை. இது அவருக்கு பலமாக இருந்தாலும் சிலவேளைகளில் பலவீனமுமாக இருக்கின்றது. இதற்க்கு சிறந்த உதாரணம் சூப்பர் ஸ்ரார் இவரின் பாபா படம் ஓடாததற்கான காரணங்களில் ஒன்றாக இவர் சில அரசியல்வாதிகளுடன் நடத்திய பனிப்போர்.

3
சில பகுத்தறிவுவாதிகள்: கமலின் ஜாதியை வைத்து அரசியல் நடாத்தும் சில பகுத்தறிவுவாதிகள்(லக்கி லுக் போன்றவர்கள் விதிவிலக்கு). இவர்கள் எப்போதும் கமலை ஜாதிக் கண் கொண்டுபார்ப்பதால் இது கமலுக்கு எதிர்வினையாகவே அமைகின்றது. சிலவேளைகளில் கமலும் இதற்க்கு சார்பானவர் போல் நடந்துகொள்கின்றார். சமீபத்திய உதாரணம் தசாவதாரம் இராமணுய நம்பியும் சில பாத்திரங்களில் தொனிக்கும் வைஷ்ணவப்பெயர்களும் (கோவிந்த், பல்ராம், பூவராகவன்). சுஜாதா இருந்தகாலத்தில் ஆரம்பமான படம் ஆகவே சிலசமயம் சுஜாதா இந்தப் பெயர்களைத் தெரிவிசெய்திருக்கலாம். கமல் தன்னைப் பூணூல் இல்லாத மாமிசம் உண்கின்ற பிராமணராக காட்டிக்கொண்டாலும், கமலை சந்தேகக் கண்ணோடு பார்ப்பவர்கள் தான் அதிகம். கமல் கலைஞரின் செல்லப்பிள்ளை என்பதை ஏனோ பலர் மறந்துவிடுகிறார்கள். திலீபன் என்ற வலைப்பதிவரின் ஒரு பதிப்பை இணைக்கின்றேன் படித்துப்பாருங்கள்.
கசக்கும் உண்மை

4.
வேண்டுமென்று எதிர்ப்பவர்கள்:
இந்த வகைக்குள் இராமகோபாலன் போன்றவர்கள் அடங்குவார்கள். விருமாண்டி படத்தின் தலைப்பை மாற்றச் சொன்னவர்கள் படம் எங்கும் கத்தியும் இரத்தமும் என கூவியவர்கள். அதன்பின்னர்வந்த எத்தனையோ படங்களுக்கு (அண்மையில் வெளிவந்த படங்களில் அதிக வன்முறைப்படம் போக்கிரி) எனோ கத்துவதுமில்லை கூவுவதுமில்லை. இதேபோல் தான் சமயப்பற்றாளர்கள். தசாவதாரம் படம் பெருமாளை இழிவுபடுத்துகின்றது என வழக்குப்போட்டவர்கள் படத்தைப்பார்த்தல் அங்கே இழிவாக எதுவும் இல்லை. பெருமாளே பெருமாளே என அசின் கூப்பிட்ட குரலுக்கு வெங்கடேசப்பெருமான் நிச்சயம் அசினுக்கு வைகுண்டப் பதவி கொடுக்கவேண்டும். இப்படியான சில கமலை மட்டுமே எதிர்த்து வழக்குப்போடும் மனநோயாளிகளுக்கு எதிராக யாரும் வழக்குப்போடுவதில்லை. எத்தனை மெஹா சீரியல்களிலும், படங்களிலும் மதவிடயங்களை இழிவுபடுத்துகிறார்கள், மலினப்படுத்துகிறார்கள் ஆனால் எவரும் அவற்றைச் சீண்டுவதில்லை.

5.
இறுதியாக கமல் ரசிகர்மன்றங்களை கலைத்து நற்பணி மன்றங்களாக்கி இரத்த தானம் , கண்தானம், உடல் தானம் போன்ற நற்பணிகளைச் செய்துவருகின்றார். பெரும்பாலான கமல் ரசிகர்கள்மன்றங்கள்போல் இல்லாமல் இவை வித்தியாசமாக நடந்துகொள்கின்றன. ரஜனி ரசிகர்மன்றங்களும் சில அரசியல்கட்சிகளும் போதினவோ அப்படி மோதும் ஆற்றல் கமல் மன்றங்களுக்கு இல்லை. அப்படியிருந்திருந்தால் பொய் வழக்குக்ப்போடுபவர்கள் கொஞ்சமாவது அமைதியாக இருப்பார்கள். கமல் அன்பேசிவம் நல்லசிவத்தைப்போல் இல்லாமல் வேட்டையாடு விளையாடு ராகவனைப்போல் மாறவேண்டும். இல்லையென்றால் கமலுக்கு அதிக வ்ழக்குகள் சந்தித்த நடிகன் என்ற இன்னொரு சாதனையும் சேர்ந்துவிடும்.

இப்படியான காரணங்களால் தான் கமலின் புகழ் இன்னமும் அவருக்கு கிடைக்கவேண்டியளவு கிடைக்கவில்லை. கமல் வேறு ஒரு மாநிலத்திலையோ அல்லது இன்னொரு நாட்டிலையோ பிறந்திருந்தால் இன்றைக்கு அவர் போற்றிபுகழப்பட்டிருப்பார். இதே நிலை நடிகர் திலத்துக்கும் ஏற்பட்டது. ஆனாலும் இறுதிக்காலத்தில் அவருக்கு கிடைக்கவேண்டிய மரியாதைகள் கிடைத்தன. இன்னும் கிடைக்காமல் இருக்கும் இருவர் மெல்லிசை மன்னரும், இசைஞானியும்.

கமலைப் பற்றிய நுண்ணரசியல் என நான் நினைப்பவற்றை எழுதுவிட்டேன் தசாவதாரம் பற்றிய நுண்ணரசியல் எனக்கு கிடைக்கும் பின்னூட்டங்களில் இருந்து தொடரும் சிலவேளைகளில் எதிர்மறையான பின்னூட்டங்கள் கிடைத்தால் தொடராமலும் போகலாம்.