உலகத் தரத்திற்குத் தமிழ்ச் சினிமாவை நகர்த்திச்செல்லும் ‘தசாவதாரம்’

அண்மைக் காலங்களில் வெளிவந்த படங்களிலேயே மிகவும் அதிக எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த படம்தான் தசாவதாரம். இதில் கமல் ஹாசன் பத்து வேடங்களில் நடித்திருக்கிறார். வந்து சில நாட்களுக்குள்ளேயே வசூலில் சாதனை படைத்துள்ள இந்தப்படம் கமல் நடித்த படங்களிலேயே அதிக வசூலைப் பெற்றபடமாகவும் கருதப்படுகிறது.

உலகிலே எந்தவொரு நிகழ்வும் தற்செயலானதல்ல, அவை ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தவை என்பதை விளக்க முற்படுகிறது கதை. உயிரியல் ஆயுதத்திற்கெதிராக அமெரிக்காவில் பணிபுரியும் விஞ்ஞானியான கோவிந் (கமல்) ஒரு பரிசோதனையில் ஈடுபட்டுவருகிறார். அந்த முயற்சியில் அவர் பரிசோதிக்கும் உயிரியல் ஆயுத மாதிரியை வெளியாட்களுக்கு விற்கும் முயற்சிகள் நடைபெறுகிறது. அதனையறிந்த கோவிந் அதனைத் தடுக்க முயலுகிறார். அதன்போது அந்த உயிரியல் ஆயுத மாதிரி இந்தியாவிற்கு வந்துசேர்ந்துவிடுகிறது. அதனைத் தொடர்ந்து கோவிந்தும் உயிரியல் மாதிரியைக்கொள்ள முயன்றுவரும் வில்லனும் இந்தியா வருகின்றனர். கோவிந் பின்னால் வில்லனும் இவர்களின் பின்னால் இந்திய உளவுபிரிவு மற்றும் காவல்துறையும் ஓடுகின்றனர். இறுதியில் எவ்வாறு அந்த உயிரியல் ஆயுத மாதிரியிலிருந்து மக்கள் காப்பாற்றப்படுகின்றனர் என்பதைப் படம் காட்டுகிறது.

கதையை மேலோட்டமாகப் பார்த்தால் வழமையான சினிமாக் கதை, தமிழுக்கே உரித்தான சண்டை, பாட்டு, கதாநாயகன், வில்லன் இப்படி தமிழ்ச் சினிமாத்தனங்களிற்குக் குறைவில்லை. இவ்வாறு இந்தப் படத்தைப் பொழுதுபோக்குக்காகவும் பார்க்கலாம். கமல் தனது வழமையான ஆஸ்திக நாஸ்திக கொள்கைளை சொல்லவருகின்றார் என்று கூடக் கருதிக்கொள்ளலாம்.

ஆனால், இது கமலின் படம். முக்கியமாக அவரின் கதை-திரைக்கதை-வசனம், பெரிய எதிர்பார்ப்புகளுடன் ஏறக்குறைய கடந்த 2 வருடங்களாக எடுக்கப்பட்ட படம், நீதி மன்று ஏறிய படம் என்ற அடிப்படையில் சற்றுக் கூர்ந்து பார்க்கையில் திரைக்கதையும் பாத்திரப் படைப்பும் சேர்ந்து எம்மைச் சற்று கதிரைகளில் நிமிர்ந்து உட்காரவைக்கிறது. ஏன் இத்தனை கமல் ஹாசன்கள்? உலகிலேயே கூடிய பாத்திரங்களில் நடிக்கவேண்டும் என்ற அவாவா? மேலோட்டமாகப் பார்த்தோமானால் பெரும்பாலான பாத்திரங்கள் முக்கியத்துவமே இல்லாத பாத்திரங்கள் ; குணச்சித்திரப் பாத்திரங்கள்.

ஒரு நேர்காணலில் கமல் சொல்லியிருந்த ஒரு கருத்து என்னவெனில், ‘தனது சில படங்களை மக்கள் புரிந்துகொள்வதற்கு சில காலம் ஆகலாம். உதாரணமாக குணா படத்தைப் புரிந்துகொள்வதற்கு மக்களுக்கு 20 வருடங்கள் ஆகியிருக்கிறது’; ‘காதல் கொண்டேன்’ என்ற பட வெற்றியை குறித்து அவர் வெளியிட்ட கருத்து அது. தசாவதாரத்தைப் பொறுத்தவரையிலும் கூட இது உண்மையாக இருக்கலாம். மக்கள் சரியாகப் புரிந்துகொள்ள சில காலம் தேவைப்படலாம். ஏனெனில் அதற்குள் பொதிந்திருக்கும் விஞ்ஞானம் அத்தகையது.

இந்நாட்களில், ஆங்கிலப் பட உலகிலும் சரி, பேசப்பட்டுவரும் விடயங்கள்தான் Chaos தத்துவம் மற்றும் அதன் பகுதியாகக் கருதக்கூடிய Butterfly effect தத்துவம். Chaos தத்துவமானது சிக்கலான, எழுந்தமானமான தொகுதிகளின் குணவியல்புகளை ஆராயவும் அவற்றை விளக்கவும் உதவும் ஒரு தத்துவம். அவ்வாறான தொகுதிகளை Chaotic தொகுதிகள் என்று சொல்வார்கள். இவற்றின் இயக்கங்கள் எதிர்வு கூற முடியாதவை. இப்போது இது நடக்கிறது, எனவே இனி இது நடக்கும் என்று குறிசொல்லமுடியாத தொகுதிகள். இவ்வகையான தொகுதிகளில் ஒரு கட்டத்தில் நடக்கும் ஒரு சிறிய மாற்றம், ஒரு சிறிய அசைவு கூட எதிர்காலத்தில் ஒரு பாரிய விளைவை ஏற்படுத்தும். இதன் அடிப்படையில் உருவாகியதே Butterfly effect தத்துவம். அதாவது ஒரு சிறிய மாற்றம் பெரிய விளைவை ஏற்படுத்தலாம் என்று கூறுகிறது அத்தத்துவம். அதாவது சொல்வார்கள், ஆபிரிக்காவில் ஒரு வண்ணாத்திப்பூச்சி சிறகடிப்பின் அதனால் ஏற்படும் சிறுகாற்று அமெரிக்காவில் ஒரு சுழல்காற்றை ஏற்படுத்தலாமாம். இயற்கையில் உள்ள ஏறக்குறைய எல்லாத்தொகுதிகளுமே Chaotic தொகுதிகளாம். உதாரணமாக, வானிலை, புவித் தட்டுகளின் நகர்வுகள் போன்றவற்றைச் சொல்லாம். நாம் எவ்வளவு நுட்பமாக ஆய்தறிந்தாலும் வானிலை பற்றிய மிகச்சரியான எதிர்வுகூறல்களை எப்போதுமே செய்யமுடிவதில்லை.

நாம் இந்த Chaos தத்துவத்தை எடுத்துக்கொண்டால், இதனை இரண்டு விதமாகக் படமாக்கலாம். ஒன்று, நடக்கும் ஒரு சிறுமாற்றம் எவ்வாறு எதிர்காலத்தில் பாரிய மாற்றத்திற்குக் காரணமாகின்றன என்று காட்டுவதற்கு, ஆரம்பத்தில் நடக்கும் மாற்றங்களை மாற்றி மாற்றி, ஏற்படும் இறுதி விளைவுகளைக் காட்டலாம். இந்த அடிப்படையிலேயே Chaos தத்துவம் சம்பந்தமான ஆங்கிலப் படங்கள் பெரும்பாலும் தயாரிக்கப்படுகின்றன. உதாரணமாக The Butterfly Effect, The Sound of Thunder போன்ற படங்களைக் கூறலாம். இத்தத்துவத்தைக் காட்டக்கூடிய மற்றமுறை, ஒரு பாரிய விளைவு நடத்திருக்கிறது, அதற்கான சிறிய சிறிய காரணிகள் எவை என்று காட்டுவது. ஆனால் இம்முறையிலுள்ள சிக்கல் என்னவெனில், இதனை மக்களுக்குப் புரிய வைப்பது சற்றுச் சிக்கலான விடயம், சில வேளை மக்கள் இக்காரணிகளின் பெறுமதியை, அவற்றின் தாக்கத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளாது போய்விடலாம். ஆனால் கமல், வழமைபோன்று, ஆங்கிலப் படவுலகமே முயற்சிக்கச் சிந்திக்கும் இந்த இரண்டாவது முறைமையைக் கையெடுத்திருக்கிறார். அதாவது, ஒரு பெரிய நிகழ்வுக்கு அதற்கு முன்னான சிறிய நிகழ்வுகள் எவ்வாறு தாக்கத்தை ஏற்பட்டுத்துகின்றன என்பதை அவர் காட்ட முயன்றிருக்கிறார். இங்கேதான் அவருக்கு 10 வேடங்கள் கைகொடுக்கின்றன. எனவே பார்வையாளர்கள் குறைந்தது 10 வெவ்வேறு காரணிகள் இறுதி நிகழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்றாவது புரிந்துகொள்வார்கள். கமலின் இந்தப் பாரிய பரிசோதனை முயற்சியை முதலில் பாராட்டவேண்டும்.

இதன் அடிப்படையில் இப்படத்தினை பார்க்கையில், இந்தப் படத்தின் மைய நிகழ்வாக அல்லது அந்தப் பெரிய நிகழ்வாக நாம் பார்க்கக்கூடியது, எவ்வாறு உயிராயுதக் கிருமியில் இருந்து இந்தியா காப்பாற்றப்படுகிறது என்பதாகும். இந்த நிகழ்வில் எவ்வாறு உலகில் பல்வேறு திசைகளில், பல்வேறு மட்டங்களில் உள்ள காரணிகள் தாக்கங்களைச் செலுத்தியிருக்கின்றன என்று இந்தப் படம் காட்டுகிறது. அதற்கும் மேலாக, 12ம் நூற்றாண்டில் நடக்கும் ஒரு நிகழ்வுகூட 2004ம் ஆண்டில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் காட்டிநிற்கிறது இந்த தசாவாதரம்.

12ம் நூற்றாண்டுச் சோழர்காலத்தில், 2ம் குலோத்துங்க மன்னன் வைணவ எதிர்ப்பில் அனந்த நாராயண சிலையை கடலில் போடுகிறான். அந்த விக்கிரகத்துடன், முதலாவது கமலும் மூழ்கடிக்கப்படுகிறார். இதுவும் இறுதி நிகழ்விற்கு ஒரு காரணி என்று இதன் மூலம் அழுத்தங்கொடுக்கப்படுகிறது. அதாவது புவியோட்டில் இந்த சிலை வீழ்ந்ததால் ஏற்பட்ட சிறு அதிர்வுகூட சுனாமி ஏற்பட்டதற்கு ஒரு காரணியாக இருந்திருக்கலாம். நீங்கள் கேட்கலாம், என்ன இது... ஒரு சிலை புவியோட்டைப் பாதித்துவிடுமா என்று! பாதித்துவிடும் என்கிறது Butterfly effect தத்துவம்.

உயிரியல் ஆயுதம், அது எப்படி அமெரிக்காவிலிருந்து இந்தியக் கடற்கரைக்கு வந்தது என்பதனைக் காட்டுவதாகவே படத்தின் பெரும்பகுதி அமைகிறது. இங்கே மேலும் 9 கமல்ஹாசன்கள் வருகிறார்கள். அதாவது, கமல் 9 காரணிகளின் முக்கியத்துவத்தைக் காட்ட முயல்கிறார். இதில் வரும் ஒவ்வொரு கமலும் படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு இருந்திருக்காவிடின், அவ்வாறு செயற்பட்டிருக்காவிடின் நாம் பார்த்த முடிவு கிட்டியிருக்காது. இதில் நாம் பார்ப்போமானால், கோவிந் பாத்திரம் மற்றும் வெள்ளைக்காரப் Fletcher பாத்திரத்தைத் தவிர ஏனைய பாத்திரங்கள், ஆங்காங்கே வந்துபோகின்றன. இடையில் சம்பந்தமே இல்லாத ஒரு மணலேற்றும் கதை, அதுதொடர்பான சர்ச்சைகள், அதில் ஒரு தலித் கமல். ஜப்பானில் ஒரு கமல், அமெரிக்க ஜனாதிபதியாகவும் ஒரு கமல்... இவ்வாறு எல்லாமட்டங்களிலும் எல்லா இடங்களிலும் உள்ள சின்னச் சின்னப் பாத்திரங்கள் கூட கதையில் அதன் முடிவில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. உதாரணமாக, ஜப்பான் கமல் ஹாசன் கடைசி நேரத்தில் வராவிடின், அந்த உயிரியல் ஆயுதம் கைமாறி உலகிற்கு ஆபத்தாகியிருக்கும். அமெரிக்க ஜனாதிபதி புஷ் குறித்த விமானத்தை திருப்பிக்கொண்டுவர ஒத்துக்கொண்டிருப்பின் என்ன நடந்திருக்கும். அந்த தலித் வாதி இல்லாவிட்டால் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். இவ்வாறு படத்தில் வரும் எல்லா கமல் ஹாசன் பாத்திரங்களின் அசைவுகளும் இறுதிப் பெரு நிகழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியருக்கின்றன. இந்தப் பத்து கமல் ஹாசன்களும் கதையை விளக்குவதற்காக எடுக்கப்பட்ட மாதிரிகள் மாத்திரமே. அதேபோன்று படத்தில் வரும் எல்லா நிகழ்வுகளுமே இறுதி நிகழ்விற்குக் காரணம். இடையில் வரும் எந்தவொரு நிகழ்வும் இடம்மாறியிருப்பின், அது பார்த்த முடிவைத் தந்திருக்காது!

அடுத்துப் பார்த்தோமானால், 12ம் நூற்றாண்டு வைஷ்ணவ ஆழ்வாரும் 2004ம் ஆண்டின் கோவிந்தராஜனும் ஒரேமாதிரி நெற்றிப்பொட்டில் அடி வாங்குகிறார்கள், இதுவும் Chaos தத்துவத்தின் ஒரு இயல்பேயாம். ஒரு கட்டத்தில் நிகழும் நிகழ்வு, இன்னொரு கட்டத்தில் நிகழும் நிகழ்வுடன் மேற்பொருந்தலாம், அதே மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தலாம் என்கிறது அத்தத்துவம்.

இதில் கமல் ஹாசன் சொல்ல வந்த முக்கிய விடயமாக நாம் கருதக்கூடியது, இந்த உலக அழிவில் அதில் நடக்கும் மாற்றங்களுக்கு அன்றும் சரி இன்றும் சரி நாம் எல்லோருமே காரணிகளாக இருக்கிறோம். அடுத்து நாம் பார்த்தோமானால், 12ம் நூற்றாண்டில் வரும் ஆழ்வார் கமல் ஹாசன் சிலையைக் கடலில் போட்டு ஏற்படப்போகும் சுனாமியைத் தடுக்க நினைக்கிறார்... அவரும் இறந்துபோகிறோர். 2004ம் ஆண்டின் தலித் கமல் ஹாசன், மணல் அள்ளுவதை நிறுத்தி அழிவைத் தடுக்க முயல்கிறார். அவரும் இறந்துபோகிறார். எனவே தனிமனிதராக இந்நிகழ்வுகளைத் தடுக்க முடியாது, நாம் எல்லோருமே மாறவேண்டும் என்று காட்ட முயல்கிறாரோ?

தசாவதாரம் படம் எவ்வாறு விஞ்ஞானம் பகர்கிறது என்பதை மட்டுமல்ல அதன் அழகியல்சார் அம்சங்களையும் சொல்லாமல் இருக்கமுடியவில்லை.

இதில் கமல் ஹாசன் ரங்கராஜன் நம்பி, கோவிந்தராஜன், அவ்தார் சிங், பல்ராம் நாயுடு, Fletcher, கலிபுல்லாஹ் முக்தார், நரஹாசி, ஜோர்ஜ் புஷ், பூவராகவன், கிருஷ்ணவேணி போன்ற பாத்திரங்களை ஏற்றிருக்கின்றார். இதன் மூலம் உலகத்தில் முதன் முதலாக பத்துவேடங்களில் நடித்த சாதனையை அவர் படைத்திருக்கிறார். இச்சாதனை தமிழ் சினிமாவில் நிகழ்ந்திருப்பது நாமெல்லாம் பெருமைப்படவேண்டிய விடயம். முக்கியமாகக் குறிப்பிடவேண்டிய விடயமென்னவெனில், இவற்றில் எல்லாப் பாத்திரங்களிலிமே கமலின் திறமையான நடிப்புத் வெளிப்பட்டிருக்கிறது, நடிப்பை எவ்விடத்திலுமே குறைகூற முடியாது. பாத்திரங்களின் ஒப்பனைகளில் சில போதாமைகள் இருந்தாலும், Body Language – மற்றும் குரல் பேச்சு மூலம் கமல் ஹாசன் பாத்திரங்களை எம்கண்முன் நிறுத்துகிறார். குறிப்பாக, பல்ராம் நாயுடு, Fletcher, பூவராகவன், ஜோர்ஜ் புஷ் போன்ற பாத்திரங்களைக் குறிப்பிடலாம். அபூர்வ சகோதரர்கள் படத்தில் கட்டையாக வந்த கமல் இதில் கலிபுல்லாஹ் முக்தார் பாத்திரத்தில் நெட்டையாகியும் சாதனை படத்திருக்கிறார். ரங்கராஜன் நம்பியின் பாத்திரம் கமலின் சுயரூபம் என்றாலும் அதில் அவருடைய நடிப்பு, அந்த வெறி... அவருக்கு நிகர் அவரே. உலகநாயகன் என்பதில் எந்தத் தப்புமே இல்லை.

பட ஓட்டத்தில் இடையில் ஒருவரை ஒருவர் துரத்துமிடங்களில் படம் சற்றுத் தொய்ந்துவிடுகிறது. ஆனால் அந்தத் தொய்வுகளை, காட்சி அமைப்பு மற்றும் கமேரா கோணங்கள் சலிப்பில்லாமால் இழுத்துச் செல்கின்றன. இசையமைப்பு மற்றும் பாடல்களைப் பொறுத்தவரையில் ‘கல்லை மட்டும் கண்டால்’ எனும் பாடலில் இருக்கும் உணர்வும் ஹரிகரனின் குரலும் இசையும் படப்பிடிப்பும் மிகத் திறமையாக உள்ளது. ‘முகுந்தா முகுந்தா’ பாடல் இதயத்தை வருடிச் செல்கிறது. பின்னணி இசையையும் குறை சொல்வதற்கில்லை.

படத்தில் வரும் Graphics காட்சிகளைப் பற்றியும் சொல்லாமல் இருக்கமுடியவில்லை. குறிப்பாக இறுதியாக வரும் சுனாமி காட்சி. நிட்சயமாக ஆங்கிலத்தரத்தில் இவை இல்லை ஆனாலும் இம்முயற்சிகளைப் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை. சண்டைக் காட்சிகளும் பிரமிக்க வைக்கின்றன. தேவையான இடங்களில் படக்காட்சிகளை ஒரு வண்ணாத்திப் பூச்சி மூலம் தொடுத்து Butterfly effect தத்துவத்தைக் குறியீடாகக் காண்பிப்பது பாராட்டுக்குரியது .

திரைக்கதையில் கமல் தனது அரசியலையும் செய்யத் தவறவில்லை. பல இடங்களில் அவரது கருத்து வெளிப்பட்டிருக்கிறது. உதாரணமாக, ‘கடவுள் இல்லை என்று நான் சொல்லவில்லை, இருந்தால் நன்றாக இருக்கும் என்றே சொல்கிறேன்’, ‘மடம் என்றால் தப்பு நடக்காதா?’ போன்ற வசனங்களைக் குறிப்பிடலாம்.

பாத்திரப்படைப்பு, நடிப்பு, திரைக்கதை, படப்பிடிப்பு என எல்லாவற்றையும் சேர்த்து நோக்குமிடத்து கமல், தமிழ் திரையை உலக தரத்திற்கு நகர்த்திச் செல்கிறார் என்பதை ஐயமறத் தெரிந்துகொள்ளலாம். அதற்கான மற்றுமொரு படிக்கல்லாக தசாவதாரம் அமைந்துள்ளது என்பதில் எவ்வித ஐயமில்லை.


- நன்றி 'ஞானம்' கலை இலக்கியச் சஞ்சிகை. ஜூலை 2008

-கெ.சர்வேஸ்வரன், கணினி விஞ்ஞானம் மற்றும் இயந்திரவியற் துறை, மொரட்டுவைப் பல்கலைக்கழகம்.

இலங்கையில் இருந்து வெளிவரும் ஞானம் இலக்கிய சஞ்சிகையில் வந்த விமர்சனம். எனைய‌வ‌ர்க‌ள் பார்வைக்காக‌ இங்கே ப‌திவு செய்துள்ளேன், இங்கேயுள்ள‌ க‌ருத்துக்க‌ள் இதை எழுதிய‌ரையே சாரும்.

5 கருத்துக் கூறியவர்கள்:

மாயா சொல்வது:

அருமையான ஆழ்ந்த விமர்சனம்

நன்றிகள் :)

முரளிகண்ணன் சொல்வது:

நன்றி

வந்தியத்தேவன் சொல்வது:

வருகைக்கு நன்றிகள் மாயா, முரளிகண்ணன்
இதனை நான் சகலகலாவல்லவனில் தான் முதலில் பதிவு செய்ய இருந்தேன். பின்னர் அந்த வலையில் விமர்சனம் வேண்டாமே என்றுதான் எனது வலையில் பதிவு செய்தேன். நன்றிகளையும் பாராட்டுகளையும் இதனை எழுதிய சர்வேஸ்வரனுக்கு கூறுங்கள்.

ஆ.ஞானசேகரன் சொல்வது:

மிகவும் நல்ல பதிவு,... தசாவதாரம் படம் புரிந்துகொள்ள நிச்சயம் காலமாகும்.. ஆனால் தமிழ் படம் தரம் உயர்வதிற்க்கு இந்தப்படம் ஒரு படிக்கல்லாகும்..

ஆ.ஞானசேகரன் சொல்வது:

மிகவும் நல்ல பதிவு,... தசாவதாரம் படம் புரிந்துகொள்ள நிச்சயம் காலமாகும்.. ஆனால் தமிழ் படம் தரம் உயர்வதிற்க்கு இந்தப்படம் ஒரு படிக்கல்லாகும்..